துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

14.6.11

கம்பனில் கடவுள்...


கடவுளுக்கு இது வரை எங்காவது துல்லியமான definition கிடைத்திருக்கிறதா?
.
சுந்தர காண்டத்தில் அனுமன்,இராவணனை நோக்கி இராமன் யார் என்பதைத் தெளிவு படுத்த முயலும் கட்டத்தில்- பிணி வீட்டு படலத்தில் வரும் இப் பாடலில் கம்பன் அதைச் செய்திருக்கிறான்..



’’மூலமும் நடுவும் ஈறுவும் இல்லதோர் மும்மைத்தாய
  காலமும் கணக்கும் நீத்த காரணன் - கைவில் ஏந்தி
  சூலமும்,திகிரி,சங்கும் கரகமும் துறந்து தொல்லை
  ஆலமும் மலரும் வெள்ளிப்பொருப்பும் விட்டு அயோத்தி வந்தான்’’


ஆதி அந்தம் நடு அற்ற- 
ஆனால்...அம் மூன்றுமான- ,
காலத்தாலும் மனிதக் கணக்குகளாலும் கட்டுப்படுத்த முடியாத- 
ஆனால்...அவை அனைத்தையும் கட்டுக்குள் வைத்திருந்து 
அவற்றுக்குக் காரணமாவதே இறைநிலை 
என

 ‘’மூலமும் நடுவும் ஈறுவும் இல்லதோர் மும்மைத்தாய
  காலமும் கணக்கும் நீத்த காரணன் ’’-
என்று கடவுள் தத்துவத்துக்கு அற்புதமும் செறிவும் கூடிய துல்லியமான தெளிவான வரையறையைச் சொல்கிறான் கம்பன்.


இராமன் மானுடன் அல்லன்.
கரகத்தைக் கையில் ஏந்தித் தாமரை மலரில் அமர்ந்திருக்கும் பிரம்மன்,
திகிரி எனும் சக்கரப்படையும்,சங்கும் கையில் கொண்டு ஆலிலையில் கண் வளரும் திருமால்,
சூலம் ஏந்திக் கைலாயமென்னும் வெள்ளிப் பனி மலையில் வீற்றிருக்கும் சிவன்
என்று இம்மூன்று இறைத் தத்துவங்களும் அவரவர் இடத்தையும்,பொருளையும் விட்டு ஒன்று கூடி ஒருங்கே வந்த வடிவே இராமன் என அனுமன் இராமனின் பெருமையை விளக்கிக் கொண்டு போகும் இப் பாடலில் அவற்றை விடவும் சிறப்பிடம் பெறுவது 
சுருக்கமாகக் கச்சிதமாகக் கடவுளின் definition ஐ அவன் தந்திருக்கும் சொற்செட்டும்,அதன் பொருட்செறிவுமே.






3 கருத்துகள் :

பெயரில்லா சொன்னது…

//காலத்தாலும் மனிதக் கணக்குகளாலும் கட்டுப்படுத்த முடியாத-
ஆனால்...அவை அனைத்தையும் கட்டுக்குள் வைத்திருந்து
அவற்றுக்குக் காரணமாவதே இறைநிலை//
மிகவும் அருமை! அனைத்திற்கும் அப்பாற்பட்டவன் இறைவன் என்று சொன்னாலும் இந்த விளக்கம் நீங்கள் எழுதி இருப்பது போல் மிகவும் தெளிவான, துல்லியமான விளக்கம்.

அப்பாதுரை சொன்னது…

உண்டா இல்லையா என்று தெரியாத ஒன்றை define செய்வது மிகவும் கடினம் தான். 'காலமும் கணக்கும் நீத்த காரணன்' பொருத்தமான படிமத்தை உருவாக்கும் வரிகளே. நன்றி.

பெயரில்லா சொன்னது…

கம்ப ராமாயணம் எனக்கு மிகவும் பிடிக்கும்... காரணம் அதன் அழகியலும், மொழிப் பாவித்தல் திறனியலும் தான். மற்றப்படி ராமனை கடவுளாகவே கம்பர் சித்தரித்தது அவரின் தனிப்பட்ட விருப்பம் .... பாபா படத்தில் ரஜினியே கடவுள் போல் வருவது போலத் தான் ..

எனக்கு அதில் உடன்பாடு இல்லை ... !!! ஏனெனில் ராமன் என்று ஒருவன் இருந்திருந்தால் நிச்சயம் அவனும் மனிதன் தான். கடவுளைப் போல் ஆக்கிவிட்டார்கள் அவ்வளவே !

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....