துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

21.8.13

விகடனில்....

இன்றைய ஆனந்தவிகடன் இதழில் [28.8.2013]வெளியாகியிருக்கும் நேர்காணல்...

தமிழ்மகன்,
 படம்: தி.விஜய்
ஃப்யோதர் தஸ்தயெவ்ஸ்கி எழுதிய 'இடியட்’ என்ற ஆயிரம் பக்க நாவலை 'அசடன்’ என மொழிபெயர்த்திருக்கிறார் பேராசிரியை எம்.ஏ.சுசீலா. இதற்காக இந்த ஆண்டின் கனடா 'தமிழ் இலக்கியத் தோட்டம்’ வழங்கும் மொழிபெயர்ப்புக்கான இயல் விருது, 'திசை எட்டும்’ மொழியாக்க இலக்கிய விருது என அங்கீகாரங்கள் வரிசை கட்டுகிறது! இதற்கு முன்னர் தஸ்தயெவ்ஸ்கியின் 'க்ரைம் அண்ட் பனிஷ்மென்ட்’ நாவலை 'குற்றமும் தண்டனையும்’ என மொழிபெயர்த்திருந்தார் சுசீலா. இரண்டு நாவல்களுமே மனித உணர்வின் ரத்தமும் சதையுமான சித்திரங்கள்.
தமிழிலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்ற சுசீலா, மதுரை ஃபாத்திமா கல்லூரியில் தமிழ்த் துறைப் பேராசிரியையாக 36 ஆண்டுகள் பணிபுரிந்து பணிநிறைவு பெற்றபின் புரிந்த சாதனைகள் இவை. வார்த்தை வார்த்தையாகக் கோத்து மென்மையாகப் பேசத் தொடங்கினார் சுசீலா.
'' 'குற்றமும் தண்டனையும்’, 'அசடன்’... இந்த இரண்டு நாவல்களுமே சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு படைக்கப்பட்டவை. மொழி, கலாசாரங்களில் நம்மிடம் இருந்து மிகவும் விலகி இருப்பவை. காலம், கலாசாரம், மொழி எல்லாமே முற்றிலும் அந்நியப்பட்டவை. மொழிபெயர்க்கும்போது இதனால் ஏற்பட்ட சவால்கள் எப்படிப்பட்டவை?''
'' 'ஒரு கலாசாரச் சூழலில் இருந்து மற்றொரு கலாசாரச் சூழலுக்கு ஒரு படைப்பைப் பரிவுடன் விரல் பற்றி இட்டுச்செல்வதுதான் மொழிபெயர்ப்பின் தலையாய சவால்’ என்கிறார் ஜெயகாந்தனின் படைப்புகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியன். 'அசடன்’ படிக்கும்போது அதை நீங்கள் உணர முடியும். அயல்நாட்டு இலக்கியங்களில் இடம்பெறும் பெயர்கள், குடும்பத் துணைப் பெயர்கள் மற்றும் சுருக்கமாகக் குறிப்பிடும் செல்லப் பெயர்கள், பல ஊர்ப் பெயர்கள், தட்பவெப்ப சூழல்கள், உணவு வகைகள் இவை நம்மை அந்த நாவலுக்குள் செல்லவிடாமல் தடுப்பது போன்ற ஒரு நிலை ஏற்படுத்துவது இயல்புதான். 'விசித்திர விபரீத உடையுடன், பாஷையுடன் காணப்பட்டாலும் அதற்கும் அப்புறத்திலிருந்து துடிக்கும் மனித இயற்கையைக் காண்பிக்கவே மொழியாக்கம் முயற்சி செய்கிறது’ என்கிறார் புதுமைப்பித்தன். ஆக, அந்தக் கட்டத்தை மட்டும் தாண்டிச்சென்றுவிட்டால், எங்கும் வியாபித்துக் கிடக்கும் மனித இயற்கையும் உணர்வுகளுமே பிறமொழி நாவல்களிலும் உயிர்த் துடிப்போடு விரிந்துகிடப்பதை தரிசிக்க முடியும்!''
''அந்த நாவல்களின் உணர்வுச் சித்திரிப்புகளை இங்கே பொருத்திப் பார்க்க முடியுமா?''
''ஒரு குற்றத்தைப் புரிந்துவிட்டு அதையே தண்டனையாய்க் கொண்டு அவதிப்படும் 'குற்றமும் தண்டனையும்’ ரஸ்கோல்நிகோவ் போன்றவர்கள் நாடு, இனம், மொழி என்ற பேதமின்றி நம்மைச் சுற்றி நிறைந்திருப்பதைப் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். 'அசடன்’ நாவலில் பணக்கார மனிதன் ஒருவனின் பாதுகாப்பில் வளர்ந்து, அவனுக்குச் சில காலம் ஆசை நாயகியாகவும் வாழ நேரிட்டதை நினைத்து நினைத்தே தன்னிரக்கம் கொண்டவளாகிறாள் ஒருத்தி. முறையான திருமண வாழ்வுக்கான தாபமும் ஏக்கமும் கொண்டிருந்தபோதும் அதற்கு தகுதியற்றவளாக தன்னைக் கருதி, ஒவ்வொரு முறையும் மண மேடை வரை வந்துவிட்டு ஓடிப்போகும் நஸ்டாஸியா ஃபிலிப்போவ்னா, ஜெயகாந்தனின் கங்காவை (சில நேரங்களில் சில மனிதர்கள்) நமக்கு நினைவுபடுத்துகிறாள்.
ஒருசில கலாசார வேறுபாடுகளை மட்டும் சற்று கவனத்தோடு உள்வாங்கிக்கொண்டு நாவலின் முதல் 50 பக்கங்களைக் கடந்துவிட்டால் உணர்ச்சிமயமானதும் நமக்கு நன்கு பரிச்சயமானதுமான ஓர் உலகம் அங்கே காத்திருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளலாம்!''
''உங்களின் அடுத்த முயற்சிகள் என்ன?''
''வாழ்க்கை வரலாற்றுப் பாணியிலான புனைவு ஒன்றை எழுதி முடித்து அதைச் செம்மைப்படுத்தும் பணியில் இருக்கிறேன். அதை அச்சுக்கு அனுப்பியதும் தமிழில் இதுவரை பெயர்க்கப்படாத இன்னும் சில உலகப்பேரிலக்கியங்களை மொழியாக்க விருப்பம். குறிப்பாக, தஸ்தயெவ்ஸ்கியின் 'கீழுலகின் குறிப்புக்க’ளை மொழிபெயர்க்கத் திட்டமிட்டிருக்கிறேன்!''
''பெண் எழுத்தாளர்களுக்கான படைப்புச் சுதந்திரம் எப்படி உள்ளது?''
''படைப்புச் சுதந்திரம் என்பது தனிப்பட்ட படைப்பாளிகளின் நிலைப்பாட்டைப் பொறுத்தது மட்டுமே. அதில் ஆண், பெண் என்ற பாலினப் பாகுபாடுகளுக்கு  இடமில்லை. அவரவர் முன்வைக்க விரும்பும் கருத்தைச் சொல்லும் உரிமையும் சுதந்திரமும் அனைவருக்கும் உண்டு!''
''நீங்கள் போற்றும் பெண் எழுத்தாளர்கள்?''
''ஆர்.சூடாமணி, ராஜம் கிருஷ்ணன், காவேரி லட்சுமிகண்ணன், அம்பை, கிருத்திகா, வாஸந்தி, பாமா, சிவகாமி ஆகியோர் என் மதிப்புக்கும் அன்புக்கும் உரிய பெண் படைப்பாளிகள். சமகாலப் பெண் படைப்பாளிகளில் கவிஞர்கள் மிகுந்திருக்கும் அளவுக்குப் புனைகதை எழுத்தாளர்கள் அதிகமில்லை என்பது சற்றே வருத்தமும் சோர்வும் அளிக்கிறது.''
''அரசாங்கம், சினிமாவுக்கும் மதுவுக்கும் கொடுக்கும் முக்கியத்துவத்தை கலைக்கும் இலக்கியத்துக்கு கொடுப்பதில்லையே?''
''சினிமாவும் மதுவும் அளிக்கும் வருவாயைக் கலைகளும் இலக்கியங்களும் அளிப்பதில்லை அல்லவா? வருங்காலத் தலைமுறையை அறிவார்ந்த சமூகமாக உருவாக்க வேண்டும் என்ற மெய்யான ஆர்வமும், தரமான கலை இலக்கியங்கள் வழியாகத்தான் அவற்றை சாதிக்க முடியும் என்ற விழிப்போடுகூடிய முனைப்பும் அரசியல்வாதிகளுக்கும் ஆட்சியாளர்களுக்கும் ஏற்படும் வரையில் எந்த மாற்றமும் வந்துவிடப்போவதில்லை.  ஒவ்வோர் ஆண்டும் வெளியாகும் தரமான படைப்புகளை அரசு நூலகங்களுக்கு வாங்கினால்கூட அது எழுத்தாளர்களுக்கும் பதிப்பகங்களுக்கும் உற்சாகமளிப்பதாக இருக்கும்.''

11 கருத்துகள் :

தருமி சொன்னது…

விகடனில் பார்த்தேன்.
மகிழ்ச்சி

வாழ்த்துகள்

NARAYAN சொன்னது…

மிக்க மகிழ்ச்சி அம்மா

வாழ்த்துகள்

எம்.ஏ.சுசீலா சொன்னது…

நன்றி தருமி,நாராயணன்...நலம்தானே...

குட்டன்ஜி சொன்னது…

//''வாழ்க்கை வரலாற்றுப் பாணியிலான புனைவு ஒன்றை எழுதி முடித்து அதைச் செம்மைப்படுத்தும் பணியில் இருக்கிறேன். அதை அச்சுக்கு அனுப்பியதும் தமிழில் இதுவரை பெயர்க்கப்படாத இன்னும் சில உலகப்பேரிலக்கியங்களை மொழியாக்க விருப்பம். குறிப்பாக, தஸ்தயெவ்ஸ்கியின் 'கீழுலகின் குறிப்புக்க’ளை மொழிபெயர்க்கத் திட்டமிட்டிருக்கிறேன்!''//

எதிகாலத் திட்டங்கள் அனைத்தும் சிறப்பாக நிறைவேற வாழ்த்துகள்

காமக்கிழத்தன் சொன்னது…

பாராட்டுகள்.

‘சாதனைகள்’ தொடர வாழ்த்துகள்.

இ.பு.ஞானப்பிரகாசன் சொன்னது…

வணக்கம் அம்மணி!

ஆனந்த விகடனில் தங்களுடைய இந்த நேர்காணல் கண்டேன். ஆனால், நீங்கள் வலைப்பதிவும் எழுதுவீர்கள் என்று எதிர்பார்க்கவில்லை. இப்படி, இணையவழியில் உங்களைச் சந்திக்க முடிவதில் மகிழ்ச்சி!

தங்கள் நேர்காணல் நன்றாக இருந்தது. ஆனால், நான் ஒன்று கேட்கலாமா?... அணு முதல் அண்டம் வரை ஊடுருவி நிற்கும் அரசியல் திருந்தாமல் எதுவும் இங்கு மாறிவிட முடியாது என்பது உண்மைதான்; தாங்கள் கூறுவது சரிதான். ஆனால், அரசியலாளர்களை அந்த மாற்றத்தை நோக்கி அழைத்தோ, இழுத்தோ செல்ல வேண்டிய பொறுப்பு படைப்பாளிகளுக்கும் கலைஞர்களுக்கும் இருக்கிறது இல்லையா? ஆனால், நம் சமூகத்தில் எழுத்தாளர்கள் எழுதுவதோடு நின்று விடுகிறார்களே! அந்த எழுத்தின் பிறப்பிடமான மொழி, அது சார்ந்த சமூகம் ஆகியவை சீரழியும்பொழுது அதைத் தடுக்கவோ, அரசியலாளர்கள் மூலம் அதைச் சரி செய்யவோ எழுத்தாளர்கள் முனைவதில்லையே! 'தன் கடன் பணி செய்து கிடப்பதே' என்று படைப்புத்தொழிலோடு நிறுத்திக் கொள்கிறார்களே! இது சரியா?

எழுத்தாளர்களைக் குற்றம் சொல்வதாக நினைக்க வேண்டா! என்னை விட அகவையிலும், பட்டறிவிலும், படிப்பிலும், மொழியறிவிலும் இன்னும் எல்லா வகைகளிலும் பன்மடங்கு உயரத்திலிருக்கும் தங்களிடம் வளரும் எழுத்தாளன் தன் வருங்காலச் செயல்பாடுகள் எப்படி இருக்க வேண்டும் என ஐயம் கேட்பதாக இதை எடுத்துக் கொள்ள வேண்டுகிறேன்!

எம்.ஏ.சுசீலா சொன்னது…

திரு ஞானப்பிரகாசன்,
தங்கள் அக்கறை மிக நியாயமானதே; எழுத்து என்பது. சமூகச் செயல்பாட்டின் ஓர் அங்கம்தான்.எழுத்தாளன் படைப்புத்தொழிலை மட்டும் செய்தபோதும் அதன் வழியாகவே,அரசியலாளர்க்கும்,சமூகத்துக்குமான தன் செய்தியை வைக்கிறான்.இது சங்க காலம் முதல் நடைபெற்று வருவதுதான்;’செவியறிவுறூஉ’’என மன்னனுக்கு இடித்துரைத்த புலவர்கள் பலர் அன்றும் உண்டு;இன்றைய பத்திரிகையாளர்,படைப்பாளிகளிலும் உண்டு.சிலர் வெளிப்படையாகச் சொல்கிறார்கள்;சிலர் பூடகமாகத் தங்கள் கருத்தை முன்னிறுத்துகிறார்கள்.கலை கலைக்காக மட்டுமே என்ற கோட்பாட்டோடு இயங்கும் எழுத்தாளனிடமும் கூட சமூகத்துக்கான ஒரு செய்தி இருக்கத்தான் செய்யும்.எதை எப்படிச் சொல்வது என்பது அந்தந்தப் படைப்பாளியின் நிலைப்பாட்டைப்பொறுத்தது;அவனது சுதந்திரம் சார்ந்தது;இதைத்தான் எழுத வேண்டும்,இந்த முறையில்தான் சொல்ல வேண்டும் என எவரது படைப்புச் சுதந்திரத்திலும் தலையிடல் தவறு.பாரதி பற்ற வைத்த கனலும்,குறள் சொல்லும் நீதிகளும்,இளங்கோவின் வாசகங்களும் இன்றைய சமூக வாழ்வுக்கும் பாடங்கள் அல்லவா?உருவத்திலும் உள்ளடக்கங்களிலும் வெகுவாக மாறி வரும் இன்றைய இலக்கியம் குறிப்பு மொழியில்தான் அதைச்சொல்ல முடியும்;ஈசாப் கதையாக ஆகி விட முடியாதல்லவா?

குலசேகரன் சொன்னது…

தரமான கலை இலக்கியங்கள் வழியாகத்தான் அவற்றை சாதிக்க முடியும் என்ற விழிப்போடுகூடிய முனைப்பும் அரசியல்வாதிகளுக்கும் ஆட்சியாளர்களுக்கும் ஏற்படும் வரையில் எந்த மாற்றமும் வந்துவிடப்போவதில்லை. ஒவ்வோர் ஆண்டும் வெளியாகும் தரமான படைப்புகளை அரசு நூலகங்களுக்கு வாங்கினால்கூட அது எழுத்தாளர்களுக்கும் பதிப்பகங்களுக்கும் உற்சாகமளிப்பதாக இருக்கும்.''//

Literature has narrow limits. It lives somewhere and the writers are like drunkards if they become famous. I make a general statement because there may be exceptions. Literature is not read by all. Only a specific sections of society, that too, when their other cares and wants are fulfilled. Reading fiction won't help one gather practical wisdom. I studied literature in college but when I came out, I understood I had wasted my years. All that I got is from books of non-literature only. It is arrogance to rate writers and their work too high. Whichever message a writer gives to society, the same message when it comes from non-fiction only, will reach the correct quarters and become useful to society. But I agree with you that government should help you as a writer by buying your books; otherwise, what is the use of writing books at all? Your money will be wasted. Capital should bring returns. For writers to survive, Government should spend people's money. This is the fact.

Congrats on getting awards after awards in a genre where there are not many people. Keep going, Madam.

இ.பு.ஞானப்பிரகாசன் சொன்னது…

சிறியேனின் கருத்தையும் மதித்துப் பதிலளித்தமைக்கு நன்றி!

எம்.ஏ.சுசீலா சொன்னது…

திரு குலசேகரன்,
எழுத்தின் மீதும் படைப்பாளிகள் மீதும் நீங்கள் தூக்கி வீசும் சேறு ஏதோ ஒரு காழ்ப்புணர்வின் அடிப்படையிலானதேயன்றி அதில் சற்றும் நடுநிலைப்பார்வையில்லை என்பதை உங்கள் உள்மனமே அறியும்.படிப்பறிவே இல்லாத சாமானிய மனிதர்கள் கூட செவி வழி நாட்டுப்பாடல்களிலும் கதைகளிலுமே இளைப்பாற்றல் கொள்கிறார்கள்;மிகப்பெரும் விஞ்ஞானியான நியூட்டன்,மில்டனின் ‘பேரடைஸ் லாஸ்ட்’ஐ தலை கீழ்ப்பாடம் செய்து வைத்திருந்தார்.எழுதுகோல் வாள் முனையை விடக்கூர்மையாக சமுதாய மாற்றத்துக்கு உதவுவதைஃப்ரெஞ்சுப்புரட்சி தொடங்கி நம் விடுதலைப்போராட்டம் -மற்றும் இன்றைய சமகாலச்சூழலிலும் நாம் பார்த்துக்கொண்டுதான் வருகிறோம். //For writers to survive, Government should spend people's money//என்று எழுதியது உங்களுக்கே சற்று அதிகமாகத் தோன்றவில்லையா?லஞ்சத்துக்கும் சுரண்டலுக்கும் ஆடம்பரப்பகட்டுகளுக்கும் வீணாகும் அரசாங்கப்பணம் அறிவுக்கொள்முதலுக்குச் செலவாவது குற்றம் என்று நீங்கள் ஒருவர் சொல்லித்தான் கேள்விப்படுகிறேன்.இந்தியாவைப்பொறுத்தவரை எழுத்தை மட்டுமே தொழிலாகக்கொண்டிருப்பவர்கள் வறுமையை மட்டுமே சந்தித்துக்கொண்டிருக்கிறார்கள்.நூலகங்களுக்குப்புத்தகம் வாங்குவது அரசின் கடமை;அறிவை அடுத்தடுத்த தலைமுறைகளுக்குக்கடத்துவது அரசின் பணி;அதனால் எழுத்தாளனுக்குப்பெருஞ்செல்வம் சேர்ந்து விடும் என நினைப்பது அறியாமை.

இ.பு.ஞானப்பிரகாசன் சொன்னது…

குலசேகரன் அவர்களே! இப்படி எழுத்தாளர்களையும், எழுத்தையும் மதிக்கத் தெரியாமல் வெறும் உருவெளித் தோற்றங்களான திரைப்படக் கலைஞர்களைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடியதால் தமிழர்களாகிய நாம் அடைந்திருக்கும் வீழ்ச்சியையும், எழுத்தாளர்களையும், எழுத்தையும் மதிக்கத் தெரிந்த மலையாளிகள் அடைந்திருக்கும் உயர்வையும் கண்ணெதிரே கண்டும் அறிவு பிறக்காவிட்டால் வேறென்ன செய்ய முடியும்?

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....