துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

10.10.20

நேர்காணல்- புதிய புத்தகம் பேசுது- அக் 2020

https://www.magzter.com/IN/Bharathi_Puthagalayam/Pudhagam_Pesuthu/Education/

      


நேர்காணல்- 
நன்றி:
புதிய புத்தகம் பேசுது- அக் 2020

தமிழில், பரவலாக ஓர் இலக்கிய ஆளுமையாக அறியப்பட்டுள்ள உங்களுக்கு ’புதிய புத்தகம் பேசுது’ வாசகர்கள் சார்பாக வணக்கம், முதலில் உங்கள் குழந்தைப் பருவ அனுபவங்களை, இளம் வயது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். 

 அப்போதைய இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த காரைக்குடிதான் நான் பிறந்த ஊர். செட்டிநாட்டு ஊர்களின் தலைநகரமாக இருந்தாலும் ’50களில் அதிகம் வளர்ச்சியடையாத சின்னஞ்சிறு நகரமாக இருந்த அங்கேதான் தொடக்கப்பள்ளி நிலையிலிருந்து முதுகலைப்படிப்பு வரை வீட்டுக்கு ஒரே குழந்தையான என் இளமைப்பருவம் கழிந்தது. தந்தை காவல்துறை உயர் அதிகாரி. அம்மா உள்ளூர்ப்பெண்கள் உயர்நிலை பள்ளியில் தலைமை ஆசிரியை. எளிமையான மக்கள். இன்றிருக்கும் அவசரங்கள் பதட்டங்கள் ஏதும் இன்றி சக மனிதர்களோடு நட்போடு உறவாடியபடி ஆட்டோ. பேருந்து என எதையுமே நாடாமல் சுற்றுப்புறத்தை உள்வாங்கி ரசித்தபடி மெள்ள நடந்து சென்ற காலகட்டங்கள். அந்தச் சிறிய ஊரில் பள்ளித் தலைமை ஆசிரியையான அம்மாவைத் தெரியாதவர் எவருமில்லை என்பதால் அவரோடு நடந்து போனால் வழியெங்கும் அறிமுகமான மனிதர்கள் கூறும் அன்பான முகமன்களை நூறடிக்கு ஒரு முறை எதிர்ப்படாமல் தொடர்ந்து நடந்து சென்று விட முடியாது. நகராட்சி தொடக்கப்பள்ளியின் கூரைவேய்ந்த வகுப்பறைகள்தான் என் பாலியக் கல்வியைத் தொடங்கி வைத்தவை. எந்த உள் கட்டமைப்பு வசதியும் இல்லாதவை என்ற குறை கொஞ்சமும் தெரியாமல் ஒவ்வொரு மாணவரிடமும் தனிப்பட்ட அக்கறையும் கரிசனமும் காட்டும் அன்பான ஆசிரியர்கள். தலையில் குட்டிக்குட்டி அவர்கள் அன்றாடம் போட வைத்த மனக்கணக்குத்தான் எந்த ’கேல்குலே’ட்’டரையும் தேட வேண்டாதபடி கணிதமே பிடிக்காத நான் அடிப்படைக் கணக்கை ஒழுங்காய்ப்போட இன்று வரை கை கொடுத்துக்கொண்டிருக்கிறது. சக்தி கிருஷ்ணஸ்வாமியின் வசனத்தைப் பேசிப் பள்ளி விழாவின் ஓரங்க நாடகத்தில் வீரபாண்டிய கட்டபொம்மனாக நடித்த என் நடிப்பை அதே 1959 ஆம் ஆண்டில் வெளியாகி ஓடிக்கொண்டிருந்த திரைப்படக் கட்டபொம்மன் சிவாஜிகணேசனை விடச் சிறப்பாகத் தூக்கி வைத்துப்பாராட்டிய ஆசிரியர்களே இன்றுவரை என் தன்னம்பிக்கையின் அடித்தளமாக இருந்து கொண்டிருக்கிறார்கள். தொடர்ந்து அம்மா பணியாற்றிய அதே பள்ளியில் எஸ் எஸ் எல் சி வரை உயர்நிலைக்கல்வி. அங்கே குழந்தை முதல் அறிமுகம் என்பதால் எல்லா ஆசிரியைகளுக்கும் நான் செல்லம். வகுப்பு நேரம் போகப் பள்ளியின் சிறிய நூலகத்தில் புதிதாக வரும் புத்தகங்கள் நான் படித்த பின்பே பதிவேட்டில் குறிக்கப்பட்டு சுற்றுக்குப்போகும். புதுப்புத்தகத்தின் வாசனையை உள்ளிழுத்தபடி கல்கி அகிலனில் தொடங்கி ஒரே மூச்சில் வாசிக்க ஆரம்பித்த பழக்கம் அம்மாவோடு துணிக்கடை நகைக்கடை என்று போனாலும் கையில் புத்தகம் இல்லாமல் போக முடியாதபடி தொற்றிக்கொண்டது. பள்ளி நூலகம் போதாதென்று வீட்டில் வாங்கும் கல்கண்டு-அதில் வரும் தமிழ்வாணன் கதைகள், கண்ணன்,அம்புலிமாமா, இன்னும் அப்போது இலவசப்பிரதிகளாகவே வரும் அமெரிக்கன் ரிப்போர்ட்டர், சோவியத் நாடு. காரைக்குடியிலேயே அமைந்திருந்த நவயுகப் பிரசுராலயம், அதன் வெளியீடுகள். கதைகளை வாசித்து ரசிப்பதோடு நிறுத்திக்கொள்ளாமல் நானும் எழுத வேண்டும் என்ற ஆர்வம் எட்டு வயதிலேயே எப்படியோ என்னைத் தொற்றிக்கொள்ள, ஒரு தாளும் பென்சிலுமாய்த் தனியொரு மூலையைத் தேடிப்போய்க் கதை எழுதப்போவதாய்ச் சொல்லி எதையாவது கிறுக்கிக்கொண்டிருப்பேன். என்றாவது ஒரு நாள் நானும் எழுத்தாளராவேன் என்ற சிறு கனலை என்னுள் பொதிந்து வைத்த பருவம் அது. ஒற்றைக்குழந்தையாய் வீட்டில் வளைய வந்த எனக்குப் புத்தகங்களோடு கூடவே மற்றொரு துணையாக அமைந்தது, இலங்கை வானொலி. அதில் பாடல்களை ஒலிபரப்பியபடி இடையிடையே பேசிக்கொண்டிருக்கும் மயில்வாகனனின் இனிய குரல்வளம் என் மனதுக்கு அணுக்கமானது. பள்ளிப்பருவத்தில் இலங்கை வானொலியின் ‘இசையும் கதையும்’ நிகழ்ச்சிக்குக் கதை எழுதி அனுப்பி [திரைப்பாடல்கள் இயைந்து வர] அது ஒலிபரப்பானபோது பிள்ளைப்பருவத்துக்கே உரிய பூரிப்பில் நான் திளைத்ததுண்டு. 10 பைசா தபால் அட்டையே இலங்கைக்கும் உரியதாக இருந்த அந்தக்காலகட்டத்தில் வானொலியின் எந்தப்போட்டியையும் தவற விடாமல் எழுதிப்போட்டுப் பல பரிசுகளையும் கூட வென்றிருக்கிறேன். தமிழும்,சைவமும் தழைத்திருக்கும் செழித்திருக்கும் செட்டிநாட்டுப் பகுதியில் வளர நேரிட்டதாலோ என்னவோ அம்மா கணித ஆசிரியையாக இருந்தாலும் என் நாட்டமெல்லாம் இலக்கியத்தின் மீதே குவிந்திருந்தது. கம்பனடிப்பொடி திரு சா கணேசன் அவர்கள் ஆண்டுதோறும் நடத்தி வந்த கம்பன் விழா நான் படித்த பள்ளி வளாகத்திலேதான் அப்போது நிகழ்ந்து கொண்டிருந்ததால் தமிழிலக்கியத்தை நல்ல மேடைத் தமிழ் வழி கேட்டு வளரும் வாய்ப்பு, இளம் பருத்திலிருந்தே வாய்த்தது நான் பெற்ற பேறென்றே கூற வேண்டும்.’60களில் நிகழ்ந்த காரைக்குடி கம்பன் விழாச் சொற்பொழிவுகள் நுட்பமான பல ஆய்வுகளுக்கு நிகராக மதிப்பிடக் கூடிய செறிவும், உள்ளடக்கமும் கொண்டவை. தமிழ்க்கடல் இராய சொக்கலிங்கனார், ம பொ சிவஞானம், கம்யூனிஸ்ட் தலைவர் திரு ப ஜீவானந்தம்,புலவர் கீரன், நீதியரசர் மு மு இஸுமாயில், தவத்திரு குன்றக்குடி அடிகளார், அறிஞர் அ.ச. ஞானசம்பந்தன், பாஸ்கரத் தொண்டைமான், இடதுசாரிச் சிந்தனை கொண்ட பேராசிரியர் எஸ்.ஆர்.கே [எஸ்.ராமகிருஷ்ணன் - கம்பனும், மில்டனும் நூலாசிரியர்], திருச்சிப் பேராசிரியர் ராதாகிருஷ்ணன், போன்ற மிகப்பெரும் ஆளுமைகளின் செறிவான தமிழ்ப் பேச்சுக்கள், நீர்த்துப்போகாத சொற்பொழிவுகள் இவையெல்லாம் தமிழ் இலக்கியத்தை முறைப்படி கற்க வேண்டும் என்னும் வேட்கையை என்னுள் விதைத்தன. பள்ளிப் பருவத்தில் எனக்கு வாய்த்த மொழியாசிரியர்களும் பின்னாளில் இளம் வேதியலைப் பட்டப்படிப்பாகக்கொண்டிருந்த கல்லூரிக் காலத்தில் எனக்கு வாய்த்த தமிழ் ஆங்கிலப் பேராசிரியர்களும் என் ஆழ்மன விருப்பமான இலக்கியப் பொறியையே என்னுள் மேன்மேலும் தூண்டி விட்டுக்கொண்டிருந்தார்கள். பல்வேறு பாடப்பிரிவுகளுக்குரிய பொது வகுப்பாக இருந்தாலும் இலக்கிய வரலாற்றை என் தமிழ்ப்பேராசிரியை ஈடுபாட்டோடும் ரசனையோடும் மிக விரிவாகக்கற்பித்த முறை அபாரமானது. தமிழிலக்கியத்தை முழுமையாகக் கற்றே தீர வேணடும் என்ற முடிவான தீர்மானம் உதித்தது அப்போதுதான். காரைக்குடி அழகப்பா கல்லூரியில் முதுகலை தமிழ் முடித்த உடனேயே மதுரை பாத்திமாக்கல்லூரித் தமிழ்த் துறையில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. 1970 முதல் 2006 வரை 36 ஆண்டுகள்- வகுப்பறை என் நேசத்துக்குரிய இடமாயிற்று.கற்பித்தலோடு சேர்ந்து நானும் கற்றேன் என்றே கூற வேண்டும். எனது முனைவர் பட்டத்துக்கான ஆராய்ச்சி கல்லூரி வேலைக்கிடையே செய்ததுதான். என் பதின்பருவத்தில் தொடங்கிய படைப்பிலக்கிய ஆர்வத்தைப் பேராசிரியப்பணியில் சேர்ந்த பிறகும் கூடத் தொடர்ந்து கொண்டுதான் இருந்தேன். தொடக்க நிலையில் அது சற்று சவாலாகவே இருந்தாலும் கூட ஆசிரியப்பணி மற்றும் வேறு பலவகையான வாழ்க்கைச்சூழல்களிலும் அந்த ஆர்வம் அணைந்து விடாமல் அதைத் தொடர்ந்து தக்க வைத்துக்கொண்டு வருவதையே என் உள்ளுணர்வு வழிப்படுத்த வாழ்வில் நான் செய்திருக்கும் மிகச் சரியான செயலாக எண்ணுகிறேன். 


 இளங்கலை அறிவியல் பிரிவில் பயின்றதற்கும், முதுகலை இலக்கியம்கற்றதற்கும் இடையே ஏற்பட்ட தேர்வுத் தடுமாற்றத்தை எப்போதாவதுஉணர்ந்திருக்கிறீர்களா? அல்லது அதுவே பின்னாளில் மொழிபெயர்ப்புக்கு உதவியுள்ளதாக எண்ணியிருக்கிறீர்களா? 

 தேர்வுத் தடுமாற்றம் என்பது, நிச்சயமாக இல்லை. சொல்லப்போனால், இலக்கியத்தை - குறிப்பாக இலக்கிய ஆய்வுகளை அறிவியல் கண்ணோட்டத்தோடு அணுகும் தன்மையைப் பட்டப்படிப்பு வரை என்னுடன் வந்த அறிவியல் கல்வியே சாத்தியமாக்கியது என்பதை நான் நன்றியோடு நினைத்துக்கொள் வதுண்டு. எங்கள் தலைமுறை சார்ந்த பலரும்-என்னோடு பணிபுரிந்த பல பேராசிரியர்கள் உட்பட- தமிழிலக்கியத்தின் மீதிருந்த அளப்பரிய ஆர்வத்தால் வேறு துறைப்பட்டப்படிப்பிலிருந்து தமிழ்த்துறைக்கு வந்தவர்களே. நான் வசித்த சிறிதான நகரச்சூழல் சார்ந்த பகுதியை ஒட்டி - அப்போதுதான்தொடங்கப்பட்டிருந்த பெண்கள் கல்லூரியில் இருந்த ஒரு சிலதுறைகளுக்குள் வேதியல் இளம் அறிவியல் படிப்பை வேறுவழியின்றி நான்தேர்ந்து கொள்ள நேர்ந்ததேயன்றி அது என் விருப்பத்தேர்வல்ல. பட்டப்படிப்பின்போதும் கூட வேதியலை விடவும் தமிழ் ஆங்கிலஇலக்கியங்களிலேயே என் மனம்,லயித்துக்கிடந்தது. நானாய்விரும்பித் தேர்ந்த தமிழ் இலக்கியம் என்பதாலும், வ சுப மாணிக்கனார் போன்றதமிழ்ப்பேரறிஞர்கள் கற்பித்த காரைக்குடி அழகப்பா கல்லூரியின் தமிழ்த்துறை அப்போது அண்ணாமலைப்பல்கலைக்கழகத்துக்கு நிகராகஇருந்ததாலும் துறை மாற்றத்தையோ,தேர்வுத்தடுமாற்றத்தையோ நான்ஒருபோதும் உணர்ந்ததில்லை. ஆனாலும் இளங்கலையில் தமிழ் படிக்காமல்நேரே முதுகலைக்கு வந்து விட்டதால் ஏற்பட்ட இடைவெளிகளைநிரப்பிக்கொள்ள,குறிப்பாக இலக்கண நூல்களில் என்னைவலுப்படுத்திக்கொள்ள நான் கூடுதல் உழைப்பைச் செலுத்த வேண்டியிருந்தது. உள்ளார்ந்து தேர்ந்த துறை என்பதால் நான் அதைச்சுமையாகக் கருதவில்லை. கல்லூரிப் புகுமுக வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை ஆங்கில மொழி வழியாகப்படித்து வந்ததாலும், ஆங்கில இலக்கியங்களைப் படிக்கும் ஆர்வம் இளமை முதல் இருந்து வந்ததாலும் நீங்கள் குறிப்பிட்டது போலப் பினாளில் செய்த என் மொழியாக்கங்களுக்கு என் இளங்கலைக்கல்வியும் உதவியிருக்கலாம். நிறைய வாசிப்பு அனுபவம் உங்களுக்கு உண்டு, சோர்வு ஏற்படாத வாசிப்புப் பழக்கத்தை எவ்வாறு வளர்த்துக்கொண்டீர்கள்? நிச்சயமாக வாசிக்கும்போதுஒரு கட்டத்தில் சோர்வு ஏற்படும், அப்படிப்பட்ட நேரங்களில், அந்த மனநிலையைத் தவிர்க்க நீங்கள் மேற்கொண்ட உபாயங்கள் என்ன? இன்றையஇளைஞர்களுக்கு வாசிப்புப் பழக்கம் போதுமானதாக இல்லை, அதனால்கேட்கிறேன். வாசிப்பு என்னும் பரவசமான அனுபவத்தை நம்மைக் கீழிறக்கும் எதிர்மறை உணர்வுகளில் ஒன்றான சோர்வு என்பதோடு என்றுமே நான் இணைத்துப் பார்த்ததில்லை; இன்று வரை வாழ்வின் எந்தக்கட்டத்திலும் அவ்வாறு யோசித்துப்பார்க்கும் சந்தர்ப்பமும் எனக்கு நேர்ந்ததில்லை. சோர்வான பிற தருணங்களிலும் கூட அந்தச்சோர்வுக்கு மாற்றாகத்தான் வாசிப்பு எனக்கு இருந்திருக்கிறது. ரயில்வே கியூ போன்ற நீண்ட வரிசைகளில் நிற்கும்போதோ, ரேஷன் கடை அல்லது மருத்துவமனைக் காத்திருப்புக்களிலோ, நெருங்கிய உறவினரின் நெடுநாள் மருத்துவமனை வாசத்தின்போது உடனிருக்க நேர்ந்த சந்தர்ப்பங்களிலோ, இந்த எல்லாத் தருணங்களிலும் நேரும் அலுப்பையும், வெறுமையையும், பதட்டத்தையும் போக்க வாசிப்பு மட்டுமே எனக்குத் துணைவந்திருக்கிறது. அப்போது படித்த புத்தகங்கள் இப்போதும் கூட என் நினைவிலிருந்து நீங்கி விடவில்லை. புத்தகங்களுக்கு இடையேதான் நான் பாதுகாப்பாக உணர்கிறேன் என்று சொன்னால் கூட அதில் எந்த மிகையும் இல்லை. தலைமை ஆசிரியையாக இருந்த என் தாயின் அலுவலக அறையே ஒருபுறம் தடுக்கப்பட்டுப் பள்ளியின் நூலகமாகவும், அம்மா ஓய்வெடுக்கும் அறையாகவும் இருந்ததால் என் வகுப்பு நேரம்போக அவரது அலுவல் முடிவதற்காகக்காத்திருக்கும் பொழுதுகளில் தொடங்கியது நூல்களூடான என் ஊடாட்டம். ‘50 காலகட்டங்களில் புத்தகத்தேர்வுகள் அந்தந்தப்பள்ளி சார்ந்தவையாக இருந்ததால் பதிப்பகங்களிலிருந்து வரும் மாதிரிப் புத்தகங்கள் ( specimen copies ) எங்கள் வீட்டின் முன்னறையை எப்போதும்அடைத்துக்கொண்டிருக்கும். துணைப்பாடப்புத்தகங்களாகத் (non detailed)தேர்வு செய்யப்படுவதற்காக - மிகப்பெரும் ஆளுமைகளின் எழுத்துக்களெல்லாம் சுருங்கியவடிவில்(abridged edition ) எளிய நடையில் தரப்பட்டிருக்கும் அந்தச்சின்னஞ்சிறியபுத்தகங்களைத் தொடர்ந்து வாசித்தபடி என் இளமைப்பருவம் நூல்களோடுதொடர்ந்தது. பின்னாளில் எனக்கு வாய்த்த பேராசிரியப்பணியும் புத்தக வாசிப்புக்குத் தொடர்ந்து வலுச்சேர்ப்பதாக அமைந்து போனது என் நல்லூழ். பாடத்திட்டத்திலிருக்கும் நேரடி நூல்களில் மட்டுமே கருத்துச் செலுத்தாமல்மற்ற நூல்களின் கருத்துக்களையும் ஒருசேர இணைத்தபடி கற்பிப்பதிலும், பாடத்தோடு தொடர்பு கொண்ட பிற நூல்களை மாணவர்களுக்குஅறிமுகப்படுத்துவதிலும் ஆர்வம் கொண்டிருந்த எனக்கு நான் பணி புரிந்தமதுரை பாத்திமாக்கல்லூரியின் நூலகமான ‘ரோஸா மிஸ்டிகா’ ஒரு புத்தகக் கருவூலமாகவே அமைந்து போயிற்று. வகுப்பு நேரங்கள் போக பெரும்பாலானநேரத்தை அரிய நூல் சேமிப்புக்கள் நிறைந்த அந்த இடத்திலேயே கழித்தபடி நான் தொடர்ந்து படிக்கவும் எழுதவும்செய்திருக்கிறேன். என் பணிக்காலத்தில் அவ்வப்போது புதிதாய் வரும் சமகாலநூல்களை வாங்கி அந்த நூலகத்தின் சேமிப்புக்களை மேம்படுத்துவதிலும், ஏற்கனவே இருக்கும் நூல்களை வகைப்படுத்தி ஒழுங்குபடுத்துவதிலும் ஆர்வத்தோடு என் பங்களிப்பைச் செய்திருப்பதான நிறைவும் எனக்கிருக்கிறது. பணி ஓய்வுபெறும்நிலையில் நான் மிகவும் நேசித்த பணியைப்பிரிய வேண்டியிருக்கும் சோகத்தைவிடவும் பாத்திமா நூலகத்தைப்பிரியும் வருத்தமே என்னைப்பெரிதும்ஆட்கொண்டிருந்தது. அந்தப்பிரிவை எதிர்கொள்வதற்காகவே ஓய்வு பெறும் சில ஆண்டுகளுக்கு முன்பிருந்தே என் வீட்டு நூலகத்தை ஓரளவு விரிவாக்கமும் செய்துகொண்டேன். பணி நிறைவுக்குப் பின் தில்லியிலும் கோவையிலும் கழிக்கநேர்ந்த காலகட்டங்களிலும் தில்லி தமிழ்ச்சங்க நூலகம்,கோவை மாவட்ட மத்திய நூலகம் போன்றவை எனக்குத் துணை வந்திருக்கின்றன. நூல் வாசிப்பில் சோர்வு தட்டுவதற்கான காரணங்கள் இளமை முதல்வாசிப்புப்பழக்கம் இன்மையும், நம் அலைவரிசைக்கேற்ற- நம் ரசனைக்கேற்ற , நமக்கு ஈடுபாடு உள்ள சரியான நூல்களைத் தேர்ந்து கொள்ளாமல் போவதுமேஎன்றே நான் எண்ணுகிறேன். வாசிப்பைத் தொடங்க வேண்டும் என்றமெய்யான ஆர்வம் கொண்டவர்கள் எடுத்த எடுப்பிலேயே மிகப்பெரியசெவ்வியல் நூல்களுக்குள் நுழைந்து விடாமல் எளிதாக முடித்து விடக்கூடிய சிறிய நூல்களில் தொடங்கிப் படிப்படியாக முன்னேறிச்செல்லலாம். வாசிக்கும்ஆர்வம் என்ற பொறி மட்டும் மனதில் பற்றிக்கொண்டால் போதும், எத்தனை பக்கங்களானாலும் , அளவில் எத்தனை பெரிய நூலானாலும் சோர்வு நம்மைஅண்டாது. தொடக்க கட்டத்தில் தொலைக்காட்சியின் வருகையும், அண்மைக்காலமாக சமூக ஊடகங்களின் பெருக்கமும் வாசிப்பதை ஒரு சிரமமான, தேவையற்றவேலையாக உணர வைத்தபடி வாசிப்பு என்னும் மூளைப்பழக்கத்தை மழுங்கடித்து வருவதைப்பார்க்கும்போது வருத்தம் ஏற்பட்டாலும் இளைய தலைமுறையிலிருந்து எழுந்து வரும் வாசகர்கள் பலரும் – எண்ணிக்கையில் குறைவென்றாலும் கூட - நம்பிக்கையூட்டுகிறார்கள். ‘ வேலையிலேஇருந்துதான் ரிடையர் ஆயிட்டீங்களே ..இன்னும் என்ன அப்படி(அல்லது ‘எதுக்கு அப்படி’)வாசிச்சுக்கிட்டேஇருக்கீங்க’ என்று கேட்கும் பலரை அன்றாடம் ஒரு புன்னகையோடுகடந்தபடிதான் நான் என் வாசிப்பைத் தொடர்ந்து கொண்டிருக்கிறேன். ஆர்வம் என்பது மட்டும் அடித்தளமாக அமைந்து விட்டால் எந்தத்துறையிலுமே சோர்வு தட்ட வழியில்லை, வாசிப்பும் அதற்கு விலக்கானது இல்லைதானே? 

  ஏறக்குறைய மூன்று தலைமுறையினருடன் கல்லூரியில் ஆசிரியப் பணி புரிந்த அனுபவத்தில் அனைத்துத் தரப்பு மாணாக்கர்களையும் பார்த்திருப்பீர்கள், பழகியிருப்பீர்கள், உங்கள் வாழ்வுடன் இன்னும் எத்தனை மாணவர்கள் பயணிக்கிறார்கள்? இவர்களிடம் கிடைத்த மிகவும் மனம் தொட்ட அனுபவம் ஒன்றை பகிர்ந்து கொள்ளுங்கள்.

 ஓர்ஆசிரியையாகஎன்வாழ்க்கைப்பணிஅமையநேர்ந்ததில்நான்பெருமிதமும்பூரிப்பும்கொண்டதருணங்கள்மிகப்பலஉண்டு.நீங்கள் குறிப்பிட்டபடியே மூன்று தலைமுறைப் பெண்களோடு என் வாழ்வின் செம்பாதிக்காலத்தைக் கல்லூரி வளாகத்தில்கழித்திருக்கிறேன். எனக்கு மாணவியாய் இருந்து பின்பு சக ஆசிரியையாய் ஆகி நானே கருத்துக்கேட்கும் அளவுக்கு மிகச் சிறந்த திறனாய்வாளராய், எழுத்தாளராய்த் தன்னை வளர்த்துக்கொண்ட பேராசிரியை அனுராதா, தமிழகத்தின் மிகச்சிறந்த பட்டிமன்றப்பேச்சாளரான பேராசிரியை விசாலாட்சி, எங்கள் மூவருக்கும் மாணவிகளாக இருந்து இன்று மதுரையில் இரு பெரும் பெண்கள் கல்லூரிகளில் தமிழ்த்துறைத் தலைமை வகிக்கும் என் மாணவிகள் என்று கணக்கற்ற மாணவிகள் பலரோடு நான் இன்னும் தொடர்பில் இருந்துகொண்டுதான் இருக்கிறேன்.எத்தனையோ தலைமுறை இடைவெளிகள் இருந்தாலும் அந்தந்த வகுப்புக்கும் வயதுக்கும் ஏற்ற அலைவரிசையில் என் அணுகுமுறைகளையும் வகுப்பறை விரிவுரைகளையும் நான் தகவமைத்துக்கொண்டதால்- பணி ஓய்வு பெறும் வரை வகுப்பறையில் எந்தத் தலைமுறை இடைவெளியும் எனக்குச் சிக்கலை ஏற்படுத்தியதில்லை. முதலாண்டு பட்ட வகுப்புக்குப் பாடமெடுத்தால் அந்த வயதுப்பெண்ணாகவும்,முனைவர் பட்ட ஆய்வு மாணவியாக இருந்தால் அந்த வயதினளாகவும் மாறி மாறி உணரச்செய்தபடி யயாதி கேட்ட இளமைவரத்தை வற்றாமல் எனக்குத் தந்து கொண்டிருந்தவை என் வகுப்பறைகள். பணி நிறைவு பெற்றுப் பதினான்கு ஆண்டுகள் கழிந்த பின்னும் கைபேசி,முகநூல் வழியாக மட்டுமன்றி நேரடித் தொடர்பிலும் பல மாணவிகள் என்னோடான பிணைப்பை இன்னும் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறார்கள். குக்கிராமத்தின்கோடியாக இருந்தாலும்,உலகின்எந்தமூலைக்கேபோனாலும் 'அம்மா' என்றஅளப்பரியபாசத்தோடுநேரில்அடையாளம்கண்டுஓடிவரும்அருமைமாணவியர்பலரைஇன்றளவும்நான்எதிர்ப்பட்டுவருகிறேன். என்னோடுஉரையாடவும், பழையநினைவுகளைப் பகிரவும்துடிக்கும்அந்த மாணவியர்எப்போதும் எனக்குமகிழ்வூட்டுகிறார்கள்.என் நெடிய பெண்கள் கல்லூரிப்பணிக் காலகட்டத்தை, மாணவியரோடும் சக பேராசிரியைகளோடும் நான் பெற்ற விதம் விதமான அனுபவங்களைப் பின்புலமாக்கி நான் எழுதியிருக்கும் புது நாவலே அண்மையில் வெளியாகியிருக்கும் ’தடங்கள்’. ஆயிரக்கணக்கில் – ஏன் கிட்டத்தட்ட இலட்சத்தைக்கூட எட்டும் என் மாணவிகள் எனக்கு அளித்திருக்கும் நெகிழ்ச்சியூட்டும் நினைவுகள் பலப்பல உண்டெனினும் ’புத்தகம் பேசுது’ வாசகர்களோடு குறிப்பாக ஒரு சிலவற்றை மட்டும் பகிர எண்ணுகிறேன். 10 ஆண்டுகளுக்குமுன்புநான் புதுதில்லியில் வசித்து வந்தபோது சற்றும்எதிர்பாராதஒருதொலைபேசிஅழைப்பு! “அம்மா…என்னைநினைவிருக்கிறதா? நான்தான்தேனம்மை…”என்றதுஅந்தக்குரல்.ஏதோஅந்நியதேசத்தில்இருப்பதுபோன்றஉணர்வுடன் அப்போது தில்லியில் இருந்துகொண்டிருந்த என்னைத் தமிழ்நாட்டிலிருந்துவரும் முகம்தெரியாதஅழைப்புக்களும்கூடஆனந்தப்படுத்தும். அப்படியிருக்கையில் இருபது ஆண்டுகளுக்குமுன்புஎன்னிடம்படித்தஒருமாணவி–அதுவும் கல்லூரியைவிட்டுப் போனபிறகுதொடர்பேஇல்லாமல்இருந்துவிட்டுஇப்போதுஎதிர்பாராதஒருநேரத்தில்அழைத்தது, என்னை உண்மையாகவே பரவசப்படுத்தியது. ஆசிரியப்பணியில் தொடர்ந்து பலஆண்டுகள் இருந்தாலும் பெயர்களையும், முகங்களையும் நினைவில் தக்கவைத்துக் கொள்ளும்கலையில் மட்டும்எப்போதுமே நான்சற்று சுமார்தான். ஆனால்தேனம்மைவிஷயத்தில்அப்படிநேரவில்லை; நேரவும் வாய்பில்லை. காரணம்மாணவப்பருவத்திலேயேதேனம்மைஎன்மீதுகொண்டிருந்த கள்ளமற்றபாசம், பிடிப்பு. அதற்கெல்லாம் மேலாகத்தான் ஒருவேதியியல் மாணவியாக இருந்தபோதும் தமிழ்வகுப்புக்களில்காட்டியஅதீதஆர்வம்,கல்லூரிநூலகம் போதாதென்று என்னிடம் பல சமகாலப்படைப்புக்களைவாங்கிப்படிக்கும்ஆர்வம். இவை அனைத்தும் தேனம்மையை ஒரு விசேடமான மாணவியாக்கி என்நெஞ்சில் நிறுத்திவைத்திருந்ததால் நினைவுகளுக்குள் துழாவிக்கண்டுபிடிக்கவேண்டியதேவைஇல்லாமல்போயிற்று.“தேனம்மையா! எப்படி இருக்கிறாய், எங்கேஇருக்கிறாய், என்தொலைபேசி எண்ணை எப்படிக் கண்டுபிடித்தாய்?” என்றுகேள்விகளாய்அடுக்கிக்கொண்டுபோனேன்.மதுரையில்அப்போது வசித்துவந்ததேனம்மை, புத்தகக் கடையில் இருந்த ’குற்றமும்தண்டனையும்’ மொழியாக்கநூலில்என்பெயரைப் பார்த்துவிட்டு,உடனே பதிப்பாளரிடம்என் கைபேசிஎண்ணை வாங்கி என்னைத் தொடர்புகொண்டது அப்போதுதான் தெரிந்தது. கதை,அதோடுமுடிந்துவிடவில்லை. அந்தநூலைவாங்கிமுழுவதும்படித்துவிட்டுப்பெரியதொருவிமரிசனக்கடிதத்தையும்எழுதி எனக்குத்தபாலில்அனுப்புமளவுக்குத்தேனம்மையின்ஆர்வம்இருந்தது. அவையெல்லாம்கடந்தகாலங்கள்! அதன் பிறகு கடந்த ஒரு சில ஆண்டுகளுக்குள் தன் தணியாத ஆர்வத்தால் இணையத்துக்குள் நுழைந்த என்மாணவி ’தேனம்மைலெட்சுமணன்’ வலையுலகில் ஒரு சிறந்த பதிவராய்த் தனிமுத்திரைபதித்ததோடு நிறுத்திக்கொள்ளாமல் கவிஞர், சிறுகதை எழுத்தாளர், நாவலாசிரியர், பத்திரிகைக்காரர் எனப்பல தளங்களில் தொடர்ந்து வெற்றிகளைக் குவித்துவருகிறார். அதையெல்லாம் விடக்கூடுதலாக என்னை அவர் மனம் கசியச்செய்த நிகழ்ச்சி ஒன்று உண்டு மாணவியாகஇருந்தபருவத்திலேயேதமிழில்அளவுகடந்தஆர்வத்தோடு கவிதைஎழுதும் துடிப்பும் தாகமும் கொண்டிருந்த அவர் சின்னச்சின்னத் தாள்களிலும் கையேடுகளிலும் கவிதைகளை எழுதிஎழுதிஎன்னிடம்தந்தபடிஎன்ஒப்புதலை, விமரிசனத்தைப் பெறுவதற்காக சிறுபிள்ளைபோலக் காத்திருப்பார். அந்தக்காலகட்டத்தில் அவ்வப்போது அவரை ஊக்கப்படுத்தும் வகையில் துண்டு துணுக்காக அவரது படைப்புக்களைப்பற்றி சில கருத்துக்கள் எழுதித்தருவது என்வழக்கம். அந்தக்கையெழுத்துக்கடிதங்களை எத்தனையோ காலம்கடந்தும், இட,சூழல்மாற்றங்களுக்குப்பிறகும்சேமித்துப்பாதுகாத்துமிக அண்மையில் தன்வலைத்தளத்திலும்வெளியிட்ட அவர் அதன் இணைப்பை எனக்கும் அனுப்பி வைத்திருந்தார்.(பிறகு என் வலைத்தளம்,முகநூல் ஆகியவற்றிலும் அவற்றை நான் வெளியிட்டேன்) இயல்பாகவே அவரிடம் குடிகொண்டிருந்த சிறுதழலை இலேசாக ஊதிவிடும் பணியைமட்டுமே நான்செய்திருக்கிறேன்; ஆனால்,இன்றையவளர்ச்சியிலும் - கிட்டத்தட்ட 35 நெடியஆண்டுகள் நீண்டுபோன இடைவெளியிலும் கூட அவர் மனம் என்னை நினைவு கூர்ந்ததைக் கண்டபோது ,ஆசிரியப்பணி எனக்கு வாய்த்ததை எண்ணி நான் உண்மையிலேயே சிலிர்த்துப்போனேன் என்றே சொல்ல வேண்டும். தேனம்மை லட்சுமணனின் ’அன்னப்பட்சி’ கவிதைத் தொகுப்பு மட்டுமல்லாமல் தற்போது நவீன படைப்புலகில் சிறந்த முத்திரைகளைப்பதித்து வரும் என் அன்பு மாணவி உமாமஹேஸ்வரியும் தன் ’யாரும் யாருடனும் இல்லை’ என்ற தன் முதல் நாவலை எனக்கு சமர்ப்பித்திருக்கிறார், மாணவியரோடான மனம் தொட்ட பல அனுபவங்களில் என்னை உணர்ச்சி வசப்படச்செய்த இன்னொரு சம்பவத்தையும் குறிப்பிடுகிறேன். மனிதனுக்கும், கடவுளுக்கும்இடையிலுள்ளஉறவைநோயாளிக்கும், மருத்துவனுக்கும்இடையிலுள்ளஉறவாக ’’வாளால்அறுத்துச்சுடினும்மருத்துவன்பால் மாளாதகாதல்நோயாளன்போல ..’’ என்று எடுத்துரைக்கும்குலசேகரஆழ்வாரின் பாடலைமுதலாம்ஆண்டுஎம்.ஏ.தமிழ்மாணவியருக்குக்கற்பித்துக்கொண்டிருந்தபோது, இந்தப்பாடல்சார்ந்தசுவாரசியமான-சற்றுத்துன்பமானநிகழ்வுஒன்றை எதிர்ப்படநேர்ந்தது. எப்போதும் முதல்வரிசையில் அமர்ந்து பாடத்தை/பாடல்களை ரசித்துக் கேட்கும் மாணவி ஒருத்தி, சில நாட்களாய்க் கல்லூரிக்கு வரவில்லை. சர்க்கரைநோயால் பாதிக்கப்பட்டிருந்த தன்தந்தையை மருத்துவமனையில்சேர்த்துவிட்டு அவரோடு கூடஇருந்தாள் அவள் என்றுநான் கேள்விப்பட்டேன். திடீரென்று இரண்டு நாட்கள் சென்றபின் அவளிடமிருந்து எனக்கொருதொலைபேசிஅழைப்பு.(அதுசெல்பேசிஇல்லாதபொற்காலம்) “அம்மா!அந்த‘வாளால்அறுத்துச்சுடினும்’பாட்டைக்கொஞ்சம்சொல்லுங்கம்மாஎழுதிக்கிறேன்”என்றாள் அவள். “அதிருக்கட்டும். அப்பாஎப்படி இருக்கிறார்?”- இதுநான். “அதுதாம்மா.சக்கரை ஜாஸ்தியானதாலே காலிலே சீழ்வச்சுப்புண்ணா இருக்கு. டாக்டர்‘ஆபரேஷன்’செய்யணும்கிறார். அப்பத்தான் நான் டாக்டர்கிட்டே இந்தப்பாட்டைப்பத்திச்சொன்னேன். அவருக்குப் பாட்டை முழுசாத்தெரிஞ்சிக்கணுமாம். சொல்லுங்கம்மா”என்று தன்கோரிக்கையைத்தொடர்ந்தாள் அவள். தந்தைக்குநேர்ந்திருக்கும்தீவிரமான சிக்கல், மருத்துவமனைச் சூழல் என எல்லாவற்றையும்கடந்து–ஆனாலும் அதற்குள்தான்கற்ற இலக்கியத்தையும் முடிச்சுப்போட்டு மருத்துவரிடமும் அதைப்பகிரத்துடிக்கும்அந்தப்பெண்ணின்ஆர்வம் என்னை ஆச்சரியப்படுத்தியது.. இத்தனைநாள் ஆசிரியத்தொழில் செய்ததற்கு அர்த்தம் இருக்கத்தான் செய்கிறது என்பதையும், பாடல்களுக்கு வெறுமே பதவுரை பொழிப்புரை சொல்லிமதிப்பெண்வாங்கவைப்பதை விடஇதுவே மிகமேலான பலன் என்பதையும் பொட்டில்அடித்தாற்போல எனக்கு அந்தச்சம்பவம் விளங்கவைத்தது. “துன்பம்நேர்கையில்…..தமிழில்பாடிநீஇன்பம்சேர்க்கமாட்டாயா”என்ற பாரதிதாசனின் வரிகள்புதியஅர்த்தச்செறிவோடுமனதுக்குள்சிம்மாசனம்இட்டுஅமர்ந்தஅரியநாள்அது. 

 ஒரு மொழி ஆசிரியராக மாணவர்களிடம் நீங்கள் சந்தித்த சவால்கள்என்னென்ன? 

 மொழிக்கல்வி என்பது பிறதுறைப்படிப்புக்களிலிருந்து மாறுபட்டது என்பது, நமக்குத் தெரிந்ததுதான். பிறதுறைகளுக்கு மொழி ஒரு ஊடகம் மட்டுமே; இங்கோ மொழி தன் பிசிறில்லாத வடிவில் இலக்கணப்பிழைகள் இல்லாமல் தேர்ந்த சொற்களோடும், சரளத்தோடும் நல்ல நடையில் வெளிப்பட்டாகவேண்டும். வழக்கமான தேர்வு மதிப்பீட்டின் அளவுகோல்கள் என்பதைத் தாண்டிமொழி மீது ஆளுமை செலுத்தும் அளவுக்கு, மொழியைத் தன் வசமாக்கும் அளவுக்குத் தேர்ச்சி பெறுதல் என்பதே மொழிக்கல்வியின் நோக்கமாக இருக்க வேண்டும் என்பதே என் அவா. ஒரு வேளை அது எட்டாத இலக்கானஇலட்சியவாதமாக இருந்தாலும் கூட ! அதை நடைமுறை சாத்தியமாக்குவதுஎங்களைப்போன்ற தமிழாசிரியர்களுக்கு எப்போதுமே பெரும் சவாலாகத்தான்இருந்து வந்திருக்கிறது. பட்ட வகுப்பில் தமிழ் இளங்கலையை விரும்பித் தேர்வு செய்பவர்கள் குறைவு என்பதால் பிற துறைகளுக்குத் தேர்வாகாமல் குறைந்த மதிப்பெண் எடுக்கும் மாணவர்களே பெரும்பாலும் தமிழ்த்துறைக்கு அனுப்பப்படுவதுண்டு. தொடக்கநிலையில் மொழியின் பால் அவர்களுக்கு ஈர்ப்பையும் ஆர்வத்தையும்ஊட்டுவதே ஒரு சவாலான செயல்தான். காலப்போக்கில் பிடிப்பைஏற்படுத்திக்கொள்ளும் மாணவர்கள் , ஆசிரியப்பணியோடு, இதழியல் துறைக்கோ பிற அரசுப்பணிகளுக்கோ சென்று பணியாற்ற உதவும் வகையில் அவர்களுக்குத் தன்னம்பிக்கை ஊட்டி ஆற்றுப்படுத்துவதும் கூட ஒருமொழியாசிரியரின் கடமை தான். நானும் அதையே செய்திருக்கிறேன். தமிழையே சிறப்புப்பாடமாக எடுத்தவர்களை விட, பிற துறைகளைத் தேர்ந்து கொண்டு பொதுத்தமிழ் வகுப்புக்களில் மட்டுமே தமிழ் கேட்கும் மாணவிகளிடம் தமிழ் மீதான கூடுதல் ஆர்வம் இருப்பதையும் அதிகமாகப்பார்த்திருக்கிறேன். சிறப்புப் பாடமாய்த் தமிழ் படித்தவர்களை விட இந்தப்பிரிவில் வரும்மாணவிகளே பின்னாளில் அதிக அளவில் எழுத்துத்துறையில்ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள். தமிழாசிரியர் என்ற அடிப்படையில் எதிர்கொள்ளும் வேறுசிக்கல்கள் என்று எடுத்துக்கொண்டால்- உச்சரிப்பு,எழுத்துப்பிழை,சந்திப்பிழைகளைச் செம்மைசெய்து சீராக்குவதை முனைவர் பட்ட மாணவியர் வரை தொடர்ந்து செய்தாகவேண்டியிருக்கிறது. தொடர்ச்சியாக எழுதும் பழக்கம் மிக மிக அரிதாகி விட்டஇன்றைய முகநூல் கால கட்டத்தில் பணி புரியும் ஆசிரியர்களுக்கு இதுஇன்னும் கூடக் கடும் சிரமம் அளிப்பதாகவே இருக்கக்கூடும். மொழிக்கல்வியில் மாணவர்கள் கசப்பாய் உணரும் இலக்கணத்தைக்கூடியவரை நடைமுறைச்சான்றுகள் வழி எளிதாக்கிக்கொடுப்பதும்மொழியாசிரியரின் கடமை. இலக்கிய வகுப்புக்களில் மாணவர்கள் காட்டும்அதே ஆர்வத்தை இலக்கண வகுப்புக்களிலும் காட்ட வைப்பது எங்கள் முன்இருக்கும் பெரும்பிரச்சினை. செந்தமிழும் நாப்பழக்கம் என்ற தொடர் ஒரு தேய்வழக்கல்ல. இன்றுவரையிலும் கூட மொழி சார்ந்த ஒரு மந்திர வாக்காகவே அது இருந்துவருவதை நான் பார்க்கிறேன். இரண்டு நாட்கள் வாசிக்காமல் எதையும்எழுதாமல் இருந்தாலும் கூட மொழியுடனான தொடர்புக்கண்ணிஅறுபட்டுப்போய் மொழியின் புதுமையும் செழுமையும் தேய்ந்து விடுகிறது. மொழி என்பது கவனமாய்க் கையாள வேண்டியதும் கூட. மொழியைக் கற்பிக்கும் ஆசிரியர் வழியாகவே நம் கலாச்சாரமும்,வாழ்க்கை குறித்த புரிதல்களும் கூட இளம் உள்ளங்களைச் சென்றடைகின்றன என்பதால் அடுத்த தலைமுறைக்கு மொழி சார்ந்து நான் கூறும் ஒரே அறிவுரை, பிறரைக் காயப்படுத்தவோ இழிவுபடுத்தவோ மொழியை ஒருபோதும் பயன்படுத்த வேண்டாம் என்பதே. வீசிச்சென்ற வார்த்தைகளைத் திரும்பப்பெற முடியாது; அவை விட்டுச்சென்ற தடங்களும் அழியா. 


 மொழிபெயர்ப்புத் துறையில் நாட்டம் வந்தது எவ்வாறு? ரஷ்ய இலக்கியங்களை ,குறிப்பாக – தஸ்தயெவ்ஸ்கியைப்பெயர்ப்பதற்குக் காரணங்கள்? 

எந்த வகையான தயாரிப்புக்களோ முன் ஆயத்தங்களோ இல்லாமல்தான் என் முதல் மொழியாக்கப்பணியில் இறங்கினேன் என்பதே மிகையற்ற உண்மை.சிறுகதைப்படைப்புக்களையும் கட்டுரைகளையும் மட்டுமே அவ்வப்போது முயன்று பார்த்திருந்த நான் மொழியாக்க முயற்சியில் முனைந்தது, ஒரு தற்செயல். அதிலும், ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கியின் ‘குற்றமும் தண்டனையும்’,‘அசடன்’ என்ற இரண்டு உலகப்பேரிலக்கியங்களை அடுத்தடுத்து மொழி பெயர்க்க நேர்ந்தது,’வாராது போல் வந்த மாமணியாய்’ வாய்த்த அடுத்ததொரு தற்செயல். வாசிப்பின் சுவையை நுகரத் தொடங்கிய பாலிய நாட்களில்- ‘60-களுக்கு முற்பட்ட எங்கள் தலைமுறைக்கு எளிதாகக் கிடைத்தவை மலிவு விலையில் கண்கவர் படங்களோடு கிட்டிய சோவியத் பிரசுரங்களும் குட்டிக்கதைகளும்தான். அப்போது 'சோவியத் லேண்ட்’ என்னும் நாளிதழும் பள்ளி நூலகத்துக்கு வந்து கொண்டிருந்தது. வழுவழுப்பான அட்டையுடன் வண்ணப்படங்கள் தாங்கியபடி சோவியத் நாட்டின் கலை, கலாச்சாரத் தேடல்களை, விண்வெளிப் பயணத்துக்கான ஆயத்த முயற்சிகளை சித்தரிக்கும் அந்த இதழும், மேற்சொன்ன கதைகளும் ''ஆகா என்றெழுந்தது பார் யுகப்புரட்சி’’ என ஜார் மன்னனின் வீழ்ச்சியை சொல்லும் பாரதியின் கவிதையும் சோவியத் ரஷ்யா குறித்த கனவை என்னுள் ஆழமாக வேரூன்ற வைத்திருந்தன.வயதும், வாசிப்பு அனுபவமும் முதிர்ந்து டால்ஸ்டாய், கார்க்கி, கார்ல் மார்க்ஸ், ஏங்கல்ஸ் என என் எல்லைகள் விரிந்துகொண்டே போன தருணத்திலேதான் ரஷ்ய நாவல் பேராசானும், உலக இலக்கியத்தின் பிதாமகர்களில் குறிப்பிடத்தக்க முத்திரை பதித்தவருமான ஃபியதோர் தஸ்தயெவ்ஸ்கியின் ‘குற்றமும் தண்டனையும்’ நாவலைத் தமிழாக்கும் வாய்ப்பு என்னைத் தேடி வந்தது. பேராசிரியப் பணியிலிருந்து ஓய்வு பெற்றுக் குடும்பத்தோடு தில்லி கிளம்ப ஆயத்தமாகிக்கொண்டிருந்த வேளையில் மதுரை பாரதி புக் ஹவுஸ் பதிப்பாளர் துரைப்பாண்டி அவர்கள் ’குற்றமும் தண்டனையும்’ நாவலைத் தமிழாக்க வேண்டும் என்னும் வேண்டுகோளோடு என்னை நாடி வந்தார். சொந்த மொழி ,பழகிய சூழல், நட்புக்கள் என எல்லாவற்றிலிருந்தும் அந்நியப்பட்டிருந்த ஒரு மண்ணில் -சொந்தப்படைப்புக்களை உருவாக்கும் அளவுக்கு அமைதியான ஒரு சூழலையோ மனநிலையையோ உருவாக்கிக்கொள்ள முடியாத ஒரு காலகட்டத்தில், எழுத்தார்வத்தைத் தக்க வைத்துக் கொள்ளவும், எழுத்துடனும், இலக்கியத்துடனும் ஊடாடி மொழியைக் கூர் தீட்டிக் கொள்ளவும் மட்டுமே கைக்கொள்ளப்பட்ட இரு பெரும் மொழியாக்க முயற்சிகள்,என்வாழ்வில் மறக்க முடியாத சுவடுகளைப் பதிக்கப்போகும் குறிப்பிடத்தக்க இருபெரும் பயணங்களாக அமையவிருக்கின்றன என்பதை அப்போது நான்சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை. மொழியாக்கமும், படைப்பிலக்கியம் சார்ந்த ஒரு கலைதான் என்றாலும், ஓரளவு எஞ்சியிருக்கும் சொந்தப் படைப்புத் திறனையும் கூட மொழிபெயர்ப்பு மழுங்கடித்துவிடுமோ என்ற அச்சத்தோடும், மனத்தடையோடும் மட்டுமே ’குற்றமும் தண்டனையும்’ நாவலை நான் படிக்கத் தொடங்கினேன். ஒரு சில பக்கங்களைத் தாண்டுவதற்கு முன்பே தஸ்தயெவ்ஸ்கி எனக்கு மிகவும் நெருக்கமானவராகத் தோன்ற ஆரம்பித்து விட்டார். ரஸ்கோல்நிகோவுக்கு அவரது அன்னை கடிதம் எழுதும் கட்டத்தை நெருங்கியபோது, நான் எந்த முயற்சியுமே செய்யாமல், எவரோ dictation போடுவது போல அதன் தமிழ் வரிகள் என்னுள் ஓடத் தொடங்கியிருந்தன. தானும் கூடக் கற்றுக் கொள்வதற்கான உளவியல் செய்திகள் தஸ்தயெவ்ஸ்கியின் படைப்புக்களில் மட்டுமே இருப்பதாக நீட்ஷே ஒருமுறை குறிப்பிட்டது போல.மனித மனங்களின் இருள் படர்ந்த மூலைகளில் எல்லாம் பயணம் செய்து,அதன் இண்டு இடுக்குகளைத் துழாவி, அங்கே மண்டிக்கிடக்கும் சபலங்களை,சலனங்களை,அழுக்குகளை, ஆசாபாசங்களை, அன்பை, அளவற்ற மனித நேயத்தை வெளிச்சத்திற்கு இட்டு வந்து விடும் அவரது எழுத்தை வாசிக்க வாசிக்க அவர் எனக்கு இன்னும் நெருக்கமாகிப்போனார். அந்த மாமேதையின் வார்த்தைகளுக்குள் - உருகி, உட்கலந்து,கசிந்து.கண்ணீர் மல்கி நான் என்னையே தொலைத்து விட, கூடு விட்டுக்கூடு பாய்வது போல தஸ்தயெவ்ஸ்கியே என்னுள் புகுந்து கொண்டு-தமிழில் தன்னைத்தானே எழுதிக்கொண்டு போவது போகிறாரோ என்ற மனமயக்கம் கூட ஒரு கட்டத்தில் என்னுள் ஏற்பட்டிருக்கிறது. அவர் சொல்ல விரும்பிய கதையை, உணர்வுகளைத் தமிழில் முன் வைக்க நானும், என் எழுத்தும் கருவிகள் மட்டுமே என்ற உண்மையை அப்போது நான் விளங்கிக்கொண்டேன். எட்டு மாதங்களுக்குள்ளாகவே அதன் முதல் வரைவை முடிக்கும் அளவுக்கு அத்தனை விரைவாக என்னை ஆட்கொண்டு இயக்கியது அவரது எழுத்து மட்டுமே. ’குற்றமும் தண்டனையும்’ மொழிபெயர்ப்பு வெளியானபோது, இலக்கிய வட்டத்தில் அது பெற்ற வரவேற்பும் அங்கீகாரமும் எனக்கு மேலும் ஊக்கமளிப்பதாக அமைந்து விட, தொடர்ந்து தஸ்தயேவ்ஸ்கியின் ‘இடியட்’ நாவலை ’அசட’னாக மொழி மாற்றும் பணியை ஏற்றுக் கொண்டேன். நான்கு பாகங்களைக் கொண்டிருக்கும் பிரம்மாண்டமான படைப்பாகிய ’அசட’னில் படைப்பாளியின் அபாரமான விவரிப்பிற்கு முன் நான் கையற்று நின்று மலைத்த தருணங்கள் உண்டு. மனக் கிளர்ச்சியும்,பரவசமும் அடைந்து சிலிர்த்த கணங்களும் உண்டு.எவருக்குமே கேடு எண்ணாத- எவர் தனக்குச் செய்யும் கேட்டையும் பொருட்படுத்திப் பாராட்டாத அற்புதமான தூய ஆத்மாவாக மிஷ்கின் உருவாகியிருப்பது கண்டு தன்னையறியாது கண்ணில் நீர்வழிய அது என் எழுத்துக்களை அவ்வப்போது நனைத்து ஈரப்படுத்தியதும் உண்டு. அந்தப்படைப்பை மொழியாக்கம் செய்யாமல்,வெறுமே வாசித்து விட்டு மட்டும் போயிருந்தால் இத்தனை அணுக்கமான ஒரு ஆழ்ந்த பயணத்தை என்னால் மேற்கொண்டிருக்க முடியுமா என்பதும் இப்படிப்பட்ட பேரனுபவம் ஒன்று எனக்கு வாய்த்திருக்குமா என்பதும் ஐயம்தான். தஸ்தயெவ்ஸ்கியின் உலகப் பேரிலக்கியங்கள் இரண்டை மொழியாக்கி முடித்த பிறகு அவரது படைப்புலகம் எனக்கு மிகவும் பழகிப்போனது போல உணரத் தொடங்கியிருந்தேன். அயல் மொழி நாவலொன்றை வெறுமே படித்துவிட்டுப் போவது போலல்லாமல் வார்த்தை வார்த்தையாக மொழிபெயர்ப்புச் செய்து கொண்டு போகும்போது மூலநூலாசிரியனுக்கு மிகப் பக்கத்தில் சென்றுவிடும் அனுபூதி நிலை - ஒரு மகத்தான தரிசனம் - காட்சியாவதை நான் உணர நேரிட்டது. வாழ்க்கை குறித்தும் மனிதர்கள் குறித்தும் அவர் கொண்டிருந்த பார்வையும்,அவரது படைப்புக்கள் வழி நான் பெற முடிந்த அனுபவங்களும் என் எல்லைகளை மேன்மேலும் விரிவுபடுத்திக்கொண்டே சென்றன. அந்த அனுபவத்தைத் தக்க வைத்துக்கொள்வதற்காகவே அவரது படைப்புக்களை இயன்ற வரை மொழிபெயர்ப்பது என்று முடிவு செய்தேன். ’தஸ்தயெவ்ஸ்கியின் குறுங்கதைகள்’,’ ’நிலவறைக்குறிப்புக்கள் [NOTES FROM THE UNDERGROUND], ’இரட்டையர் ’[THE DOUBLE] என்று தஸ்தயெவ்ஸ்கியின் மொழியாக்கங்களிலேயே தொடர்ந்து என்னை மிகுதியாக ஈடுபடுத்திக்கொள்ளத் தொடங்கினேன். ’நிலவறைக்குறிப்புக்கள்’ நாவலில் தனது பெரிய நாவல்கள் பலவற்றைப்போல எண்ணிக்கையற்ற கதைமாந்தர்களையோ,விறுவிறுப்பான கதைப் பின்னலையோ,மூலக்கதையோடு பிணைந்து வரும் சிறு சிறு கிளைக்கதைகளையோ கொண்டு வராமல் எதிரும் புதிருமான தர்க்கங்களில் சஞ்சரித்தபடி- தன்னைத்தானே முரணிக்கொண்டும்,பழித்துக்கொண்டும்,சுய பலங்கள்-பலவீனங்கள் சார்ந்த உள்ளுணர்வைத் தட்டி எழுப்பியபடியும் ஓயாமல் உள்ளுலைந்து கொண்டிருக்கும் மனிதமன விசித்திரங்களை ஒரு தனிமனிதமனச்சான்றின் குரலாக்கி வாசகப் பார்வைக்கு அப்பட்டமாக முன்னிறுத்தியிருக்கிறார் தஸ்தயெவ்ஸ்கி. புனைவுகளின் சாத்தியங்களையெல்லாம் தன் படைப்புக்களில் எட்ட முடிந்த ஒரு இலக்கிய மேதை, இருப்பியல் வாதம் என்னும் இலக்கிய அணுகுமுறைக்கு அளித்திருக்கும் புனைவு வடிவமே நிலவறைக்குறிப்புக்கள். ’இரட்டையர்’குறித்த கதைகளும் கருத்தாக்கங்களும் மனிதகுலம் தோன்றிய நாள் தொட்டுத் தொடர்ந்து நிலவி வருபவை என்றபோதும் நவீன இலக்கியக்களத்தில் அதை அடிப்படையாகக்கொண்டு புனைவிலக்கியம் படைத்த முன்னோடிகளில் ஒருவரான தஸ்தயெவ்ஸ்கியின் ’இரட்டையர்’ என்னும் சிறிய நாவலும் பல சவால்களை என் முன் வைத்தது. ’’துயரத்துடன் தனித்திருக்கும் மனித ஆத்மா, தனிமைப்பட்டிருக்கும் அகப்பிரக்ஞை, நிலவறைக்குள் தப்பித்து முடங்குதல் ஆகிய சிக்கல்களையே இரட்டையர் நாவலிலும் எதிர்ப்படுகிறோம்’’ என்கிறார் ஃபியதோர் தஸ்தயெவ்ஸ்கியின் வாழ்வையும் படைப்புக்களையும் விரிவாக ஆராய்ந்து நூலெழுதிப் புகழ்பெற்றிருப்பவரான கான்ஸ்டாண்டின் மோசுல்ஸ்கி.[ Konstantin Mochulsky] இரட்டை மனிதன் உட்பட நாவலில் நடந்து கொண்டிருக்கும் சம்பவங்களில் உண்மை எது,கற்பிதம் எது என்று எதையுமே தெளிவுபட வரையறுத்துச் சொல்லாமல் வாசகர்களுக்கு மயக்கம் ஏற்படும் வகையில் உள்ளடங்கியதொனியில் மட்டுமே இந்தக் குறுநாவலின் தொனியை அமைத்துக் கொண்டிருக்கிறார் தஸ்தயெவ்ஸ்கி. அந்த முடிவுகளை வாசகர்களின் ஊகத்துக்கும் முடிவுக்கும் விடுவதற்கென்றே நுணுக்கமான மறை பொருளாக அவற்றை சொல்லியும்சொல்லாமலும் விட்டிருக்கிறார். இரட்டையர் நாவல், நம் முன் வைக்கும் சவால் அது என்பதோடு அதுவே இந்நாவலின் வெற்றியும் ஆகிறது. மனித மனங்களின் ஆழங்காண முடியாத இருட்டு மூலைகளை, அவற்றுள் பொதிந்திருக்கும் மகத்துவங்களைத் தேடிக்கண்டடைந்து மனித நேய ஒளிக்கற்றைகளைப் பாய்ச்சிய பெரும்படைப்பாளியான ஃபியதோர் தஸ்தயெவ்ஸ்கியின் பல படைப்புக்களை நுண்மையாய் வாசித்துத் தமிழில் பெயர்த்த கணங்கள் என் வாழ்விற்குப் பொருள் சேர்த்த மறக்க முடியாத தருணங்கள். அந்த வேளைகளில் அவரது எழுத்துக்குள் அணுக்கமாகச் செல்லமுடிந்ததும், அவர் பெற்ற அகக்காட்சிகளை, அவர் உணர்த்த விரும்பிய செய்திகளை அவரது அலைவரிசைக்குள்ளேயே சென்று இனம் காணமுடிந்ததும் நான் பெற்ற அரிய அனுபவங்கள். என் அக மனத்தைத் துலக்கவும் அதில் புத்தொளி பாய்ச்சவும் ஃபியதோர் தஸ்தயெவ்ஸ்கியின் மொழியாக்கப்பணியில் நான் கழித்த பொழுதுகள் துணை வந்திருக்கின்றன. திரும்பத் திரும்ப அவரது வெவ்வேறு ஆக்கங்களைத் தமிழில் தரும் முயற்சியில் நான் என்னை ஈடுபடுத்திக்கொள்வதற்கான காரணம் 
அதுவே. 

 மொழிபெயர்ப்பில் நீங்கள் கைக்கொள்ளும் உத்திகள், எதிர்ப்படும் சிக்கல்கள் என்னென்ன?

 மொழிபெயர்ப்புக்கோட்பாடுகளையோ நெறிமுறைகளையோ முறையாகக் கற்றுக்கொண்டு நான் இந்தத் துறையில் கால் பதிக்கவில்லை. அதற்கு அப்படிப்பட்ட அவசியமும் இல்லை என்பதையே என் அனுபவமும், எனக்குக் கிடைத்துக்கொண்டிருக்கும் எதிர்வினைகளும் திரும்பத் திரும்ப எனக்கு உறுதிப்படுத்திக்கொண்டிருக்கின்றன. ’இலக்கு மொழி’ [ target language ] யின் ஆளுமை மட்டும் நம் வசப்பட்டு விட்டால்- மொழிபெயர்ப்புக்காகப் பிறகு எந்தத் தனிப்பயிற்சி வகுப்பும் இலக்கண நெறிகளும் வழிகாட்டுதல்களும் தேவையில்லை. தொடந்த இலக்கிய வாசிப்பும், தொடர்ந்து ஏதேனும் ஒன்றை எழுதிப்பார்த்தபடி ஏதோ ஒரு வகையில் நம் மொழியைக் கூர் தீட்டிக்கொண்டபடி அது துருப்பிடித்துப்போகாத வகையில் பாதுகாத்துக்கொள்ளும் முயற்சிகளும் மட்டுமே நம் மொழி ஆளுமையை உயிர்ப்போடு வைப்பவை. படைப்பாக்கங்களுக்கு மட்டுமல்லாமல் மொழிபெயர்ப்புக்கும் துணை வருபவை அவை என்பதே என் மொழியாக்கப்பணிகள் எனக்களித்த தெளிவு. செவ்விலக்கிய வாசிப்புக்களோடு நிறுத்திவிடாமல் சமகாலப் புனைவுகளையும் தொடர்ந்து கொண்டிருப்பதே இன்றைய மொழியின் நீரோட்டத்துக்குள் நம்மை இட்டுச்செல்லக்கூடியது; பொருள் புரியாத பண்டித நடையாக ஆகி விடாமல் நம் மொழிநடையை இலகுவாக்குவதும், வழக்கிறந்ததாக ஆகி விடாமல் இன்றைய போக்கை ஒட்டியதாக நம் மொழியைப் புதுப்பித்தபடி செழுமை சேர்க்கக்கூடியதும் அதுவே. இன்றைய சமகால இளம் வாசகர்களாலும் கூட இந்த மொழியாக்கங்களின் மொழி நடையோடும் சொற் தேர்வோடும் இணைய முடிகிறதென்றால் அதற்கான காரணம் சமகால இலக்கிய வாசிப்போடும் புனைவோடும் நான் தொடர்ந்து கொண்டிருக்கும் ஊடாட்டமே. இவற்றையெல்லாம் விட முதன்மையான வேறொன்றும் உண்டு. அதுவே மொழியாக்கும் படைப்பின் மீது நாம் கொள்ளும் எல்லை கடந்த நேசம், பற்று. அதுவும் நாமும் வேறில்லை என்று ஒன்றிக்கலக்கும் ஓர் அபேத நிலை, ஒரு நல்ல மொழிபெயர்ப்பில் கை கூடியேயாகவேண்டும். நம்மைக்கட்டிப்போட்டு பிரமிக்க வைத்து நம்மை நேசிக்க வைக்கும் ஒரு பிரதி சார்ந்த மொழிபெயர்ப்பில் முனையும்போது மட்டுமே குறிப்பிட்ட அந்த எழுத்துக்குள் அணுக்கமாகச் செல்லமுடிவதும், மூலப்படைப்பாளி உணர்த்த விரும்பிய செய்திகளை- அவரது அலைவரிசைக்குள்ளேயே சென்று இனம் காணமுடிவதும் சாத்தியமாகும். என் முதல் மொழிபெயர்ப்பான ’குற்றமும் தண்டனையும்’ நாவலை மொழியாக்கம் செய்யத் தொடங்கி ஒரு சில அத்தியாயங்கள் முன்னேறியதுமே, அது, தானாகவே என்னை இழுத்துக் கொள்ளத் தொடங்கி விட்டது; அந்த வேளையில் பொய்யான பல பிரமைகள் என்னிலிருந்து விடுபடத் தொடங்கின. மொழி மாற்றம் – அதிலும் குறிப்பாகப் புனைகதை சார்ந்த மொழிமாற்றம் - சுயமான படைப்பாக்கத்தையே அடித்தளமாகக் கொண்டிருக்கிறது என்பதையும் படைப்பாக்கத்துக்கான பொறி நம்முள் இருந்து - நம்மைச் செலுத்திக்கொண்டிருந்தால் மட்டுமே - நாம் ஒரு நல்ல மொழிபெயர்ப்பாளராகச் சிறக்க முடியும் என்பதையும் அனுபவ பூர்வமாக நான் கண்டுகொண்ட கணங்கள் அவை. 

 உங்களது ஒவ்வொரு மொழிபெயர்ப்பும் ஒவ்வொரு வகையான அனுபவத்தை உங்களுக்கு அளித்திருக்கும். அவற்றை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியுமா? 

உலகச் செவ்வியல் நாவல்களின் தர வரிசைப்பட்டியல் எந்த மொழியில் எவரால் தயாரிக்கப்பட்டிருந்தாலும் அதன் முதல் பத்து இடங்களுக்குள் தவறாமல் இடம் பெற்றிருப்பது ஃபியதோர் தஸ்தயெவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையும் என்னும் பேரிலக்கியம். ஒரு குற்றத்தைச் செய்யப் போய் இரண்டு கொலைகளைச் செய்து விட்டுத் தன்னை விடாமல் தொடர்ந்தபடி இருக்கும் மனச்சாட்சியின் உறுத்தலுக்கு ஆளாகி இறுதியில் சரணடையத் துணியும் ஒரு மனிதனின் கதை என்ற ஒரு வரிக்குள்ளோ அந்த ஒற்றைப் பரிமாணத்துக்குள்ளோ இந்த நாவலை அடக்க முயல்வது இந்தப் பேராக்கத்துக்கு இழைக்கப்படும் மாபெரும் அநீதியாக மட்டுமே இருக்க முடியும். குற்றம் / தண்டனை ஆகிய இருமைகளைக் குறித்து விரிவான சமூகவியல் உளவியல் பின்னணிகளோடு கூடிய தர்க்கபூர்வமான இரு தரப்பு வாதங்களையும் முன் வைத்து - கதைக்கட்டுக்கோப்பு சற்றும் குலையாத வண்ணம் - இந்நாவலில் மிக விரிவான ஆழமான ஆராய்ச்சி ஒன்றையே நிகழ்த்தியிருக்கிறார் தஸ்தயெவ்ஸ்கி. ஒரு செயல் எப்போது குற்றமாகிறது, அப்படி அது குற்றம் என்று கருதப்படுமானால் அதற்கான தண்டனை வர வேண்டியது எங்கிருந்து என்பது போன்ற சிந்தனைகளின் பாதிப்புக்களால் இந்நாவலின் மெய்யான வாசகர்கள் அலைக்கழிக்கப்படுவதே இந்த நாவலின் வெற்றி. எந்தக் குறிப்பான இலக்குகளும் இன்றித் ‘தேடிச்சோறு நிதம் தின்று…சின்னஞ்சிறுகதைகள் பேசி கொடுங்கூற்றுக்கிரையென மாயும்’ மனிதர்கள் ஒரு சாரார்; மற்றொரு சாரார் சற்று அசாதாரணமானவர்கள்; எந்த வரையறைக்குள்ளும் தங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ள விரும்பாதவர்கள். தங்களது கோட்பாடுகளை நிலைநாட்டுவதற்காகவும், மனித இனத்தின் மேன்மை கருதியும் சட்டங்களை மீறவும், தேவை ஏற்பட்டால் ஒருவனைக் கொலை செய்வதற்கும் கூடத் தங்களுக்கு உரிமை இருக்கிறது என எண்ணுபவர்கள்; தான் வரித்துக்கொண்டிருக்கும் இந்தக்கருத்தை ஒரு கட்டுரையாக வடிக்கிறான் இந்நாவலின் கதைத்தலைவன் ரஸ்கோல்நிகாஃப். நாவல் நெடுகிலும் அவனை ஆட்டி வைத்து வதைப்பது இந்த இருமுனை அறப்போராட்டமே. நெப்போலியனைப்போல எதையோ சாதிக்கப்பிறந்தவனாகத் தன்னை எண்ணியபடி அசாதாரணமான ஒரு உணர்வின் தூண்டுதலால் பேனை நசுக்குவதைப்போல மிக எளிதாக வட்டிக்கடைக்கிழவியைக்கொன்று விட்டபோதும் அவனிடம் இயல்பாகக் குடிகொண்டிருக்கும் கருணையும் இரக்கமும் அவனைத் துரத்த அவன் நோய்வாய்ப்படுகிறான். திரும்பத் திரும்பக் கொலை நடந்த அந்த வீட்டுக்குச்சென்று பார்க்கிறான். அறிவுஜீவியைப்போல நீதிபதியிடம் வாதம் செய்தாலும் வேறொருவன் மீது விழுந்து விட்ட கொலைப்பழி அவனுக்கு உறுத்தலைத் தருகிறது. இறுதியில் மிக எளியவளும் பாலியல் தொழிலுக்குத் தள்ளப்பட்டவளுமான சோனியா வழியாகவே ஒரு மீட்சி அவனை நாடி வருகிறது. ’’இந்தக் கணமே செல்லுங்கள்.. முச்சந்தியில் போய் மண்டியிட்டு நீங்கள் மாசுபடுத்திவிட்ட இந்த மண்ணை முத்தமிடுங்கள்…பிறகு இந்த உலகம் முழுவதையும்- பூமியின் நான்கு திசைகளையும் பார்த்துப்பணிந்து மண்டியிட்டு வணக்கம் செலுத்துங்கள்…பிறகு இந்த உலகிலுள்ள எல்லோரும்கேட்கும்படியாக நான் ஒரு கொலைகாரன் என்று உரக்கச் சொல்லுங்கள்…அதன் பிறகு கடவுள் உங்களுக்கு மறுவாழ்வு தருவார்’’ என்ற தன் கூற்றால் அவனது மனச்சான்றை மீட்டெடுக்க முயல்கிறாள் அவள். அவனது செயல் மனித குலத்துக்கே எதிரானது என்று உறுதியாகக்கூறி அவனது மனப்போராட்டத்தை முடித்தும் வைக்கிறாள். அவனும் அவள் கூற்றை ஏற்றுக்கொண்டபடி, எந்த ஆதாரத்தாலும் , எவராலும் நிரூபிக்கவே முடியாமல் போன தன் குற்றத்தை ஒப்புக்கொண்டு தண்டனைக்கு ஆட்படுகிறான். ஆனால் நாவல் முடிந்தபிறகு- பின்கதையாக தஸ்தயெவ்ஸ்கி விவரிக்கும் பகுதியிலும் கூடத் தான் செய்த கொலை நியாயமானது என்றும், ஏதோ ஒரு பலவீனமான கணத்தியே தான் உண்மையை ஒத்துக்கொண்டு தண்டனையை வரவழைத்துக் கொண்டதாகவும் எண்ணுகிறான். இந்த மனப்போக்கு அவனுக்குள் இறுதிக்கட்டம் வரை தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. கதையின் மையமாகச் சுழித்துச்சுழித்துச்செல்லும் இந்தப்போராட்டத்தோடு விளிம்பு நிலையில் வாழும் மர்மலோதோவின் பரிதாபகரமான குடும்பச்சூழல், கீழ் மத்தியதர வாழ்வின் துயரங்களுக்கு ஆளாகும் ரஸ்கோல்நிகாஃபின் தாயும், தங்கை துனியாவும் படும் துயரங்கள் ஆகிய சித்தரிப்புக்கள் மனித வாழ்வின் இருண்ட பகுதிகளை வெளிப்படுத்துபவை. கண்டிப்பை மட்டுமே காட்ட வேண்டிய நிலையில் இருக்கும் நீதிபதி போர்ஃபிரி பெத்ரோவிச், காமுகனான சுவிட்ரிகைலோவ் ஆகியோரிடம் கூட வற்றாமல் சுரக்கும் மானுடக் கருணையின் தெறிப்புக்களையும் தன் படைப்பில் மிக இயல்பாகச் சித்திரித்திருக்கிறார் தஸ்தயெவ்ஸ்கி ஒரு மனநிலைச்சித்திரிப்பு,உடனேயே அதற்கு நேர் எதிரான மற்றொரு மனநிலைச் சித்திரிப்பு, மிக எளிமையாகத் துவங்கி அப்படியே தத்துவார்த்த தளத்திற்கு உயர்ந்துவிடும் உரையாடல்கள் என்று தீவிரமான மொழிநடையோடும் செறிவான கதைப்பின்னலோடும் உருவாகியிருக்கும் இந்தப்படைப்பை – இது வரை இருபத்தாறு உலக மொழிகளில் பெயர்க்கப்பட்டிருக்கும் இந்த நாவலை முதன் முதலாகத் தமிழில் மொழிபெயர்க்க வாய்த்தது நான் செய்த நற்பேறு. குற்றமும் தண்டனையும் நாவலைப் போல ஒருமுகத் தன்மை கொண்டதல்ல இடியட்/அசடன். பல்வேறு முடிச்சுக்களும் பலரின் உணர்வுப் போராட்டங்களும் இணைந்த ஒரு கலவையே அந்நாவல். பல இடங்களில் திணறவும் தடுமாறவும் வைத்தாலும் அதிலுள்ள பிரெஞ்சுத் தொடர்களுக்காகவும் சொல்லாட்சிகளுக்காகவும் ஜே என் யூ பிரெஞ்சுத் துறைக்கு ஒரு மாணவ நிலையில் பல நாள் அலைந்து திரிந்தாலும் மனித மனங்களின் ஆழங்காண முடியாத புள்ளிகளைத் தஸ்தயெவ்ஸ்கியின் எழுத்தின் வழி எட்டவும்,தரிசிக்கவும் முடிந்தபோது எனக்கு ஏற்பட்ட பரவசச் சிலிர்ப்பு வார்த்தையில் விவரிக்க ஒண்ணாதது. '' 'ஒரு கலாசாரச் சூழலில் இருந்து மற்றொரு கலாசாரச் சூழலுக்கு ஒரு படைப்பைப் பரிவுடன் விரல் பற்றி இட்டுச்செல்வதுதான் மொழிபெயர்ப்பின் தலையாய சவால்’ என்கிறார் ஜெயகாந்தனின் படைப்புகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியன். ஒருசில கலாசார வேறுபாடுகளை மட்டும் சற்று கவனத்தோடு உள்வாங்கிக்கொண்டு நாவலின் முதல் 50 பக்கங்களைக் கடந்துவிட்டால் உணர்ச்சிமயமானதும் நமக்கு நன்கு பரிச்சயமானதுமான ஓர் உலகம்தான் அங்கேயும் காத்திருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளலாம். ஒரு குற்றத்தைப் புரிந்துவிட்டு அதையே தண்டனையாய்க் கொண்டு அவதிப்படும் 'குற்றமும் தண்டனையும்’ ரஸ்கோல்நிகோவ் போன்றவர்கள் நாடு, இனம், மொழி என்ற பேதமின்றி நம்மைச் சுற்றி நிறைந்திருப்பதைப் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். 'அசடன்’ நாவலில் பணக்கார மனிதன் ஒருவனின் பாதுகாப்பில் வளர்ந்து, அவனுக்குச் சில காலம் ஆசை நாயகியாகவும் வாழ நேரிட்டதை நினைத்து நினைத்தே தன்னிரக்கம் கொண்டவளாகிறாள் ஒருத்தி. முறையான திருமண வாழ்வுக்கான தாபமும் ஏக்கமும் கொண்டிருந்தபோதும் அதற்குத் தகுதியற்றவளாகத் தன்னைக் ,கருதியபடி, ஒவ்வொரு முறையும் மண மேடை வரை வந்துவிட்டு ஓடிப்போகும் நஸ்டாஸியா ஃபிலிப்போவ்னா என்னும் அந்தப்பெண், ஜெயகாந்தனின் கங்காவை (சில நேரங்களில் சில மனிதர்கள்) நமக்கு நினைவுபடுத்துகிறாள். மிகப் பிரம்மாண்டமான படைப்புக்களை மொழிபெயர்த்ததை விடக் கடுமையான சவால்களை என் முன் வைத்த சிறிய ஆக்கம் நிலவறைக்குறிப்புக்கள். உள்ளச் சுழல்களின் கொந்தளிப்பும்,இருட்டும் நிரம்பிய பக்கங்களை வெளிச்சத்துக்குக் கொண்டுவர முயலும் படைப்பாளியின் தடத்தைப் பிறழ்வின்றிப் பின் தொடர்ந்த வண்ணம் - வெளிப்படையாகச் சொல்லப்படாத பூடகமான அகச்சுழிப்புக்களோடு கூடிய இந்தப்பிரதிக்குள் பயணம் செய்து அதை என் மொழியில் வைக்க நான் எடுத்துக்கொண்ட கால அவகாசம், அளவில் கூடுதலான முன்னவற்றை விட மிகவும் அதிகமானது என்பதே இதன் செறிவையும் அடர்த்தியையும் இருண்மையையும் சொல்லி விடக்கூடும். கிட்டத்தட்ட 1000 பக்கங்கள் அச்சில் வந்திருக்கும் குற்றமும் தண்டனையும் மொழிபெயர்ப்பை விடவும், 200 பக்கங்களேயான இந்தப்பிரதியை மொழிபெயர்க்க நான் எடுத்துக்கொண்ட கால அவகாசம் மிகவும் கூடுதலானது என்பதே இதன் செறிவையும் அடர்த்தியையும் இருண்மையையும் சொல்லி விடக்கூடும். ’இரட்டையர்’ நாவல், தனக்கென எந்தத் தனி அடையாளமும் அற்ற சராசரிகளில் ஒருவராய் மிகச்சாதாரண மட்டத்தில் ஓர் அரசு அலுவலக குமாஸ்தாவாகப் பணி புரியும் யாகோவ் பெத்ரோவிச் கோலியாட்கினைக் கதைத் தலைவராகக்கொண்டிருப்பது. தன்நிழலை ஒத்த இரட்டை மனிதன் ஒருவனை அவர் எதிர்ப்படுவதும் அதைத்தொடர்ந்த சம்பவங்களுமே ’இரட்டையர்’ குறுநாவலின் உள்ளடக்கம். குழப்பமான மனப்பிரமைகளுக்கு ஆட்பட்ட ஒரு மனிதரின் கதை இது என்பதே இந்த நாவல் குறித்த பரவலான கருத்து. எனினும், இந்த நாவலை சரியானபடி உள்வாங்கும் முயற்சி ரஷ்ய இலக்கியவாதிகளிடமும் கூட கடந்த நூற்றைம்பது ஆண்டுகளுக்கு மேலாக - இன்னும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. கதையின்பின்புலமாக வரும் காலகட்டத்தில் ரஷ்யாவில் நிலவிய கெடுபிடிகள் மிகுந்த இறுக்கமான சமூக அமைப்பும்,அதன் அதிகாரப்படிநிலைகளும் பலநெருக்கடிகளை உருவாக்கியிருந்தன; அவற்றுக்குள் சிக்கிச் சிதறுண்டு போன மனிதர்களின் ஒரு ‘மாதிரி’[sample]யாகவே கோலியாட்கினின் பாத்திர உருவாக்கம் முன்வைக்கப்படுகிறது.நாவலின் தொடக்கத்தில் மனச்சிதறல் நோய் கொண்டவரென மருத்துவரால் சந்தேகிக்கப்படும் கோலியாட்கின்,இறுதியில் தன் சுயக்கட்டுப்பாட்டைமுற்றிலும் இழந்த நிலையில் மனநோய் விடுதிக்கே இட்டுச்செல்லப்படுவதோடு நாவல் நிறைவு பெறுகிறது. இடையிலுள்ள அத்தியாயங்களில் அவர்எதிர்ப்பட நேரும் அந்த நிழல் மனிதன், இரத்தமும் சதையும் கொண்ட உண்மையான ஒரு நபர்தானா அல்லது அது அவரது மனமயக்கமா என்பதும், ஒருக்கால்அவன் உண்மையான நபராக இருந்தாலுமே கூட உருவத்தில் அவன் அவரது இரட்டை போலத்தான் இருக்கிறானா அல்லது அது அவரது கற்பிதமா என்பதும்இலைமறை காயாக மட்டுமே இருப்பதே இந்த நாவலின் தனித்துவம். 


 தஸ்தயெவ்ஸ்கி படைப்புக்களைத் தவிர வேறு மொழிபெயர்ப்பு செய்துள்ள அனுபவங்கள்?

 'சொல்வனம்’ ’கனலி’ முதலிய இணைய இதழ்களுக்காகவும் 'நம் நற்றிணை' இலக்கிய இதழுக்காகவும், ஞான பீட பரிசு பெற்ற மஹாஸ்வேதாதேவி,ஆஷா பூர்ணாதேவி ஆகியோரின் சிறுகதைகள், கன்னட மொழி எழுத்தாளர் விவேக் ஷன்பேக், அஸ்ஸாமிய எழுத்தாளர் பிபுல் கடானியர் முதலியோரின் இந்திய மொழிக்கதைகள் டால்ஸ்டாய்,ஆண்டன் செக்காவ் ஆகியோரின் குறுங்கதைகள் எனப் பல சிறுகதைகளையும் நான் மொழிபெயர்த்திருக்கிறேன். அவற்றுள் ஒரு சில தொகுக்கப்பட்டு ‘கவிஞனின் மனைவி’ என்னும் நூலாக வெளிவந்திருக்கிறது. விரிந்த பரப்புடன் தாங்கள் உருவாக்கியிருக்கும் மிகப் பெரிய நாவல்களுக்குச் சற்றும் சளைக்காத சிறப்புக்கொண்டிருப்பவை டால்ஸ்டாயின் சிறு கதைகளும், மஹாஸ்வேதாதேவி,ஆஷா பூர்ணாதேவி ஆகியோரின் சிறுகதைகளும். வங்க எழுத்தாளர்களான மஹாஸ்வேதா தேவி, ஆஷாபூர்ணா தேவி ஆகியோர் பற்றிக் குறிப்பிடும் வெங்கட் சுவாமிநாதன், ’’19-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்தே, சமூக எதிர்ப்புகளையும், வறுமையையும், குடும்பச் சுமைகளையும், படிப்பறிவில்லா நிலைகளையும் மீறி எழுத்தை ஒரு போராட்டமாகவே கொண்டு வாழ்ந்து மறைந்த பெண் எழுத்தாளர்களின் ஒரு நூற்றாண்டு நீண்ட மரபு , ஆஷாபூர்ணா தேவியின் தடைகளற்ற எழுத்து வாழ்வுக்கு ஆதரவான பாதை ஒன்றை அமைத்துக் கொடுத்திருந்தது. அம்மரபு ஆஷாபூர்ணா தேவியைத் தொடர்ந்து இன்னும் வேகத்தோடு மஹாஸ்வேதா தேவியிடம் காணப்படுகிறது’’ என்கிறார். தன் சொந்த வாழ்க்கையில் தான் கேட்ட குரலையும், தான் வாழ்ந்த காலத்தில்- தன்னைச் சுற்றியிருந்த சமூகத்தில் தான் உணர்ந்த அன்றாட வாழ்வனுபவங்களையும் தன் ’பிரதம பிரதிசுருதி’- [முதல் சபதம்] என்னும் மிகப்பெரும் புனைவிலும். தன் சிறுகதைகளிலும் நுட்பமான பதிவுகளாக்குபவர் ஆஷா பூர்ணாதேவி.வங்காளக்கூட்டுக் குடும்பங்களில் பெண்ணின் நிலை குறித்துப் பேசும் அவரது ’கசாப்புக்காரர்’ சிறுகதை நான் மனம் ஒன்றிய ஈடுபாட்டோடு செய்த ஒன்று. ஆதிவாசிகள் குறித்தும்,மனித உரிமைகள் பற்றியும் மிகுதியாக எழுதியும் பேசியும் வந்ததோடு தீவிரக் களச்செயல்பாட்டாளராகவும் விளங்கிய சமூகப்போராளி,எழுத்தாளர் மஹாஸ்வேதாதேவி. அரச வாழ்வின் சுயநலங்களுக்குக் களபலியாகும் எத்தனையோ அப்பாவி மக்களின் சார்பாக நின்று மகாபாரதம் தழுவிய மறு ஆக்கமாக ’குந்தியும் நிஷாதப் பெண்ணும்’ என்னும் சிறுகதையை -அறச் சீற்றத்தோடு - கலைநயமும் கெடாமல் அவர் செய்திருக்கிறார். அதுவும் நான் ரசித்துச்செய்த மொழியாக்கங்களில் ஒன்றே. மிக அண்மையில்- சென்ற ஆண்டு- புதுதில்லியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற இந்தியக் கடற்படை லெஃப்டினண்ட் கமாண்டர் ஹரீந்தர் சிக்கா. என்னும் பஞ்சாபி எழுத்தாளர் ஆங்கிலத்தில் எழுதிய ’CALLING SEHMATH’ என்னும் நாவலை ’செஹ்மத் அழைக்கிறாள்’ என்ற தலைப்பில் நேரடி மொழியாக்கம் செய்தேன். 1971-ஆம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் மிகுந்த ஒரு கால கட்டத்தில் உயிரைப் பணயம் வைத்து நாட்டைப் புரட்டிப் போடும் தகவல்களை மிக துணிச்சலாக கடத்தி வருகிறாள் இந்திய உளவாளி செஹ்மத். அது உளவு வேலையில் ஈடுபடும் ஒரு பெண் குறித்த துப்பறியும் நாவல் மட்டுமல்ல, பாகிஸ்தானிய ராணுவ வீரருக்கு மணமுடித்து அனுப்பப்பட்ட நிலையில்,அவரது மனைவியாக இருந்தபடியே நாட்டுப்பற்றோடு உளவுப்பணியில் தன்னை அர்ப்பணித்துக்கொள்ளும் அந்தப்பெண்ணின் வாழ்க்கையை இந்திய- பாகிஸ்தான் போரில் முகம் தெரியாமல் போன ஒரு கதாநாயகியின் வீர வரலாறு என்றே கூறலாம். மனித உணர்ச்சிப்போராட்டங்களையே அதுவரை மிகுதியாக மொழிபெயர்த்து வந்த எனக்குப் பரபரப்பும் விறுவிறுப்புமான திருப்புமுனைச்சம்பவங்களோடு கூடிய இந்த நாவலை மொழிபெயர்த்தது வேறுபட்ட ஓர் அனுபவத்தைத் தந்தது. கடற்போர், அது சார்ந்த கலைச்சொற்கள் ஆகியவை மொழிபெயர்ப்பு சார்ந்த சில சிக்கல்களைத் தந்தாலும் நாவலின் ஓட்டம் அவற்றை எளிதாகக் கடக்க வைத்து விட்டது. வாசகர்களின் பரவலான கவனத்தையும் வரவேற்பையும் பெற்றதாகவும் அந்த மொழிபெயர்ப்பு அமைந்து விட்டதில் எனக்கு மகிழ்ச்சியே. தொடக்கத்தில் மதுரை பாரதி புக் ஹவுஸ் வெளியீடுகளாக வந்த குற்றமும் தண்டனையும், அசடன் ஆகிய மொழியாக்கங்களைப் பின்பு மிக நேர்த்தியான செம்பதிப்புக்களாக ஆக்கி வெளியிட்டதோடு, தொடர்ந்து நான் செய்த ’நிலவறைக்குறிப்புகள்’ ’இரட்டையர்’ ’தஸ்தயெவ்ஸ்கி கதைகள்’. ’கவிஞனின் மனைவி’, ’செஹ்மத் அழைக்கிறாள்’ ஆகிய பல மொழியாக்கங்களையும் சென்னை, நற்றிணைப்பதிப்பகத்தாரே நூல்களாக வெளியிட்டிருக்கிறார்கள். தஸ்தவெவ்ஸ்கி நூல்களை மொழிபெயர்ப்பதில் நான் கொண்டிருக்கும் ஆர்வத்தோடு,அவற்றைச் சிறப்பாகப் பதிப்பிப்பதில் என் பதிப்பகத்தாருக்கு - குறிப்பாக பதிப்பக உரிமையாளர் நண்பர் யுகனுக்கு இருக்கும் அர்ப்பணிப்பும் ஆர்வமும் கூட என் இயக்கத்தை முடங்க விடாமல் தொடர வைத்துக்கொண்டிருக்கிறது. மொழியாக்கம் ஒருவகையில் மறுபடைப்பு என்றுதான் சொல்லவேண்டும்; அந்த வகையில் உங்கள் தாய் மொழியைப் போல லாவகமாக கையாள முடிந்தபிற மொழிகள் என்னென்ன? சுந்தரராமசாமி, பிரம்மராஜன் போன்றோரின்மொழிபெயர்ப்புகளில் கூட சில சறுக்கல்களை இலக்கிய வெளியில்வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளனர்; ஏனென்றால் ஒவ்வொரு மொழியுமே ஒருபண்பாட்டு அடைவைத் தன்னகத்தே கொண்டுள்ளது, அயல் மொழிப்பண்பாட்டை தனக்குள் கொண்டிருந்தாலொழிய மறுமொழி படைப்பாக்கம்சிரமம்தான். இதை நீங்கள் எவ்வாறு உள்வாங்கிக் கொண்டுள்ளீர்கள்? எனக்கு லாவகமாகக்கையாள முடிவதும், எனக்கு வசப்பட்டிருப்பதுமான ஒரேமொழியாகத் தமிழை மட்டுமே என்னால் சொல்லிக்கொள்ள முடியும். சரளமாக எழுதுமளவுக்கு வசப்பட்டிருக்கிறது என்று ஆங்கிலத்தைச்சொல்ல முடியாதென்றாலும் ஆங்கிலப்பயிற்சியும், வாசிப்பும் இருப்பதால் ஆங்கிலச் சொற்கள் மற்றும் தொடர்களை -சொல்லுக்குச்சொல் வார்த்தைக்கு வார்த்தை என்றுவறட்டுத்தனமாக இயந்திர கதியில் மொழிபெயர்த்துக்கொண்டு போகாமல்அவை இடம் பெறும் சூழலை உள்வாங்கிக்கொண்டு எழுத மிகுந்த சிரத்தையையும் உழைப்பையும் செலவிடுகிறேன்.அவ்வாறு மொழியாக்கம் செய்யும்போது பண்பாட்டுக் கூறுகளைப்புரிந்து கொள்வதும் அவசியத் தேவையென்பதால் மூலத்துக்கு விசுவாசமான மொழிமாற்றம் இயல்பாகவே கைகூடி விடுகிறது. அது ரஷ்ய நாவலோ வங்கச்சிறுகதையோ - எதுவானாலும் மொழி மட்டும்தான் தமிழில்மாறியிருக்கிறதே தவிர அதன் பண்பாட்டுப்பின்புலம் அப்படியே தக்கவைக்கப்பட வேண்டும் என்ற பிரக்ஞையுடனேயே ஒவ்வொருமொழியாக்கத்திலும் இயங்கியும் வருகிறேன் தமிழிலிருந்து பிறமொழிகளுக்கு நான் எதையும் பெயர்ப்பதில்லை; மற்றமொழிப்படைப்புக்களையே தமிழில் மொழியாக்கம் செய்கிறேன்; அதுவே என் இலக்கு மொழி( target language ). இந்திய ஆங்கிலப்படைப்புக்களை நேரடியாகப்பெயர்க்கிறேன். தஸ்தயெவ்ஸ்கி , டால்ஸ்டாய் போன்றரஷ்யப்படைப்பாளிகளையும் மஹாஸ்வேதாதேவி,ஆஷா பூர்ணாதேவி முதலியவங்கப்படைப்பாளிகளையும் நேரடியாக மூல மொழியிலிருந்து பெயர்க்காமல்ஆங்கிலத்தை இடைமொழியாகக்கொண்டே பெயர்த்தாக வேண்டியிருக்கிறது. நான்மொழியாக்கம் செய்யும் நிலப்பரப்பின் பண்பாடுகளை உள்வாங்கிக்கொள்ளஒரே மூலப்படைப்பின் இரண்டு மூன்று வேறுபட்ட ஆங்கிலமொழிபெயர்ப்புக்களை வைத்துக்கொள்வதோடு குறிப்பிட்ட தகவல் சார்ந்து இணையத்தில் கிடைக்கும்தரவுகளையும் ஆதாரமாகக் கொள்கிறேன். இதுவரை எனக்கு அதில் எனக்கு எந்தச் சிக்கலும் இல்லை. அயல் மாநிலம்- அயல் நாடு என எதுவானாலும் அங்கிருந்து வரும் இலக்கியங்கள் கலாசார அடிப்படையில் நம்மிடம் இருந்து விலகி இருப்பவைதான். அதிலும் குறிப்பாக டால்ஸ்டாய் ,தஸ்தயெவ்ஸ்கி போல சில நூற்றாண்டுகளுக்கு முன் எழுதிய பெரும்படைப்பாளிகளின் படைப்புலகும் சூழலும் நம்மிடமிருந்து முற்றிலும் அந்நியப்பட்டவையாகவே இருக்கும். ஆனால் மொழி இனம்,நாடு என்று பலஎல்லைக்கோடுகளைவகுத்துக்கொண்டாலும், மனிதர்களின் உணர்வுப்போராட்டங்கள், அவற்றோடு பின்னிப்பிணைந்திருக்கும் உறவுச்சிக்கல்கள் ,மனிதச்சிறுமைகள்,மகத்துவங்கள் ஆகியவை உலகின் எந்த இடத்திலும்,எந்தக்காலகட்டத்திலும் சாஸ்வதமாகக்காணக்கூடியவையே. அவற்றை மூலப்படைப்பிலிருந்து பிறழாமல் தரிசனப்படுத்துவதிலேயே மொழிபெயர்ப்பாளனின் வெற்றி அடங்கியிருக்கிறது. அயல்நாட்டு இலக்கியங்களைப் படிக்கும்போதும்/மொழிபெயர்க்கும்போதும் அவற்றில் இடம் பெறும் பெயர்கள் - குடும்பத் துணைப் பெயர்கள்களாகவும்-[surname]- சுருக்கமாகக் குறிப்பிடும் செல்லப் பெயர்களாகவும் ஒவ்வொரு இடத்தில் ஒவ்வொரு வகையாகப் பரவலாக நாவல் முழுவதும் வந்து கொண்டே இருக்கும். பலவகையான இந்த மாற்றுப்பெயர்களும், காலம்,தட்ப வெப்ப சூழல் பற்றிய குறிப்புக்களும்,உணவு வகைகள்,இடப் பெயர்கள் ஆகிய பலவும் நம்மை அந்த நாவலுக்குள் செல்ல விடாமல் தடுப்பது போன்ற ஒரு தயக்கத்தையும்,மலைப்பையும் ஏற்படுத்துவது இயல்பானதே. ஆனால், ’’விசித்திர விபரீத உடையுடன், பாஷையுடன் காணப்பட்டாலும் அதற்கும் அப்புறத்திலிருந்து துடிக்கும் மனித இயற்கையைக் காண்பிக்கவே’’ மொழியாக்கம் முயல்கிறது’’ என்று புதுமைப்பித்தன் குறிப்பிட்டிருப்பதைப்போல, அந்தக் கட்டத்தை மட்டும் தாண்டிச்சென்றுவிட்டால், பிரபஞ்சமெங்கும் வியாபித்துக் கிடக்கும் மனிதஇயற்கையும்,மானுட உணர்வுகளுமே பிறமொழி நாவல்களிலும் உயிர்த் துடிப்போடு நம் கண்முன் விரிந்து கிடப்பதை விளங்கிக்கொண்டு விடலாம். துணைத்தகவல்களும் முக்கியம்தான் என்றபோதும் மொழியாக்கம் செய்யும் படைப்போடுஒன்றிப்போய் அதன் ஜீவனை நம்மால் பிடித்து விட முடிகிறபோது பண்பாட்டு மாற்றம் காரணமாக எந்தச்சிக்கலையும் எதிர்விமரிசனத்தையும் இதுவரை என் எந்த மொழியாக்கமும் எதிர்கொண்டதில்லை. 

 உங்கள் மொழியாக்கங்கள் மூல மொழியிலிருந்து செய்யப்படாமல் இடை மொழியான ஆங்கிலம் வழி செய்யப்பட்டிருப்பதான விமரிசனங்களை நீங்கள் எவ்வாறு எதிர்கொள்கிறீர்கள்?

 ’’சென்றிடுவீர் எட்டுத் திக்கும்..கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்’’ என்றும், ‘’பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியிற் பெயர்த்தல் வேண்டும்’’ என்றும் பாரதி குறிப்பிட்டபோது அத்தகைய மொழியாக்கங்கள் மூலமொழியின் வழியாக மட்டுமே செய்யப்பட வேண்டுமென உறுதியாக எண்ணியிருக்க மாட்டான். நடைமுறை சாத்தியமற்ற அத்தகைய வெற்றுக் கோஷங்களால் எந்தப் பயனும் விளையாது என்பதை அந்தத் தொலைநோக்கு மனம் தெளிவாக உணர்ந்திருக்கும். உலகத்தொடர்பு இல்லாத பழமையான நம் மொழிச்சூழல் ஆங்கிலத்தின் வழியாகவே உலகத்துடன் தொடர்பு கொண்டது. நமக்கான உலகப் பலகணி ஆங்கிலமே என்ற தெளிவு இருந்ததாலேயே பாரதி, மாதவையா , புதுமைப்பித்தன் ஆகிய பல முன்னோடிகளும் ஆங்கிலம் வழியாக மொழியாக்கங்கள் செய்தபடி நமக்கு நவீன இலக்கியங்களையும் சிந்தனைகளையும் அறிமுகம் செய்திருக்கிறார்கள். உலகின் தலை சிறந்த (நோபல் பரிசு பெற்ற நாவல்கள் உட்பட)படைப்புக்கள் பலவற்றையும் பல்வேறு மொழிகளிலிருந்து தமிழுக்குக் கொணர்ந்து தமிழ் வாசிப்பையும்,எழுத்தையும் கிணற்றுத் தவளை நிலையிலிருந்து மீட்டெடுத்த - தமிழின் தலை சிறந்த விமரிசகரும்,படைப்பாளியும்,மொழிபெயர்ப்பாளருமான க.நா.சுப்பிரமணியம் (க நா சு)அவர்கள் ஆங்கிலத்தையே அதற்குரிய வாயிலாகக் கொண்டார். பன்முகத் தன்மை கொண்ட இந்தியாவில் வழங்கும் அஸ்ஸாமிய,ஒரிய,மணிப்புரிக் கதைகளைத் தமிழில் மொழியாக்கம் செய்ய இந்தியே இடை மொழியாக நின்று உதவியிருக்கிறது. சா.தேவதாஸின் இந்தியச் சிறுகதைகளை இதற்குச் சான்றாகக் கூறலாம். பேரா.தர்மராஜனுக்கும் கூட ஓரளவு ரஷிய மொழிப் பரிச்சயமிருந்தபோதும் ஆங்கில வழியில்தான் அன்னாகரீனாவை அவர் மொழிபெயர்த்தார் என்பதை அறிந்திருக்கிறேன். மூல மொழியிலிருந்தே நேரடியாகச் செய்யப்படும் மொழியாக்கங்கள் பாராட்டுக்குரியவைதான்.ஆனால் வெவ்வேறு மூலமொழிகளில் பரிச்சயம் கொண்டவர்களாய் அவற்றை இலக்கு மொழிக்கும் கடத்தும் திறன் பெற்றவர்களின் எண்ணிக்கை மிகக்குறைவாகவே இருந்து வருகையில் . உலக இலக்கியத் தளத்தில் நிகழும் முயற்சிகள் எதையுமே தெரிந்து கொள்ள வழியின்றி முடங்கிப் போய் இருப்பதை விட மூலத்துக்குப் பக்கமான ஒரு மொழிபெயர்ப்பை இன்னொரு மொழி வழி முயற்சிப்பதில் என்ன பிழை இருக்க முடியும்? இதில் மற்றொரு கோணமும் உண்டு.குறிப்பிட்ட மொழியறிவு வாய்த்திருப்பதனாலேயே படைப்பின் ஜீவனைக் கொண்டு வந்துவிட முடியும் என்ற எண்ணமும் பிழையானதே. மொழியைத் தெரிந்து வைத்திருப்பதால் மட்டுமே கருத்துக்களைச் சரிவர உள் வாங்கிக்கொண்டு கதையைக் கோவையாகத் தந்து விட முடிவதில்லை. நமக்குக் கிடைக்கும் சமகால மொழியாக்கங்களிலும் கூட இதற்கான பல நிரூபணங்களும் உண்டு. பிறமொழிப் படைப்புக்குப் பல ஆங்கில மொழிபெயர்ப்புக்கள் இருப்பது மிக இயல்பான ஒன்றாகவே ஏற்கப்பட்டிருக்கிறது. தஸ்தயேவ்ஸ்கியின் ஆங்கில மொழிபெயர்ப்புக்களைப்பொறுத்தவரை கார்னஸ் கார்னெட்டின் மொழியாக்கமே நம்பகத்தன்மை வாய்ந்ததென்று பலராலும் பரிந்துரைக்கப்படுவதால் என் தமிழ் மொழியாக்கங்கள் எல்லாவற்றுக்கும் அவருடையதையே அடிப்படையாக வைத்துக்கொண்டேன்.கூடுதல் தெளிவு தேவைப்படும் இடங்களில் ஒப்புநோக்கிச் செம்மைப்படுத்த ஒரே படைப்பின் வேறு பல முன்னணி ஆங்கில மொழியாக்கங்களும் எனக்குப் பயன்பட்டிருக்கின்றன. என் ஒவ்வொரு மொழிபெயர்ப்புக்கும் கிட்டத்தட்ட மூன்று நான்கு ஆங்கில மொழியாக்கங்களை ஒப்புநோக்கித் தெளிவு பெற்ற பின்பே அவற்றுக்கு இறுதி வடிவம் கொடுத்திருக்கிறேன். 


 உங்களுக்குக் கிடைத்துள்ள மொழிபெயர்ப்புக்கான விருதுகள் மற்றும் அங்கீகாரங்களைப்பற்றிக் கொஞ்சம் சொல்லுங்களேன்

 ’அசடன்’ மொழியாக்கத்துக்கு கீழ்க்காணும் மூன்று விருதுகள் 2013 இல் கிடைத்தன. 1.கனடா இலக்கியத் தோட்ட விருது- கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2012ஆம் ஆண்டுக்கான பரிசு 15.6.13 அன்று கனடாவின் டொரண்டோ நகரில் நடைபெற்ற இயல்விருது விழாவில் - மொழிபெயர்ப்புப் பிரிவில், என் மொழிபெயர்ப்பான ’அசடன்’ நாவலுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. ‘அசடன்’நாவலுக்கு கனடா இலக்கியத் தோட்ட விருதை வழங்கியதன் வழி அதற்கு முதல் மரியாதையும் அங்கீகாரமும் அளித்ததோடு மொழிபெயர்ப்பு முயற்சிகள் பரவலாக முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டும் என்பதிலும் உள்ளார்ந்த ஆர்வம் காட்டி அதையும் என்னோடு பகிர்ந்து கொண்டவர் எழுத்தாளர் திரு அ முத்துலிங்கம் அவர்கள். 2.நல்லி-திசை எட்டும் விருது மொழிபெயர்ப்பு ஆக்கங்களை ஊக்குவிப்பதற்காகவே இயங்கி வரும் ’’திசைஎட்டும்’’ மொழியாக்கக் காலாண்டிழ் 2013-ஆம் ஆண்டுக்கான நல்லி--திசைஎட்டும் மொழியாக்க இலக்கிய விருது வழங்கும் விழாவில் பரிசுத் தொகையும் பாராட்டிதழும் விருதுச் சின்னமும் அளித்துச் சிறப்பித்திருக்கிறது. 3. ஜி யூ போப் விருது – எஸ் ஆர் எம் பல்கலைக்கழகத் தமிழ்ப்பேராயம் வழங்கும் மொழியாக்கத்துக்கான ஜி யூ போப் விருது 2013இல் அசடனுக்காக வழங்கப்பட்டது. ’’தஸ்தயெவ்ஸ்கியின் தமிழ்க்குரல்’’ ரஷ்ய அறிவியல் கலாச்சார மையமும், விஷ்ணுபுர வட்டமும் இணைந்து தஸ்தயேவ்ஸ்கியின் தமிழ்மொழியாக்கங்களுக்காக 2018 ஆம் ஆண்டில் எனக்கு நடத்திய பாராட்டு விழாவில் ’’தஸ்தயெவ்ஸ்கியின் தமிழ்க்குரல்’’என்னும் சிறப்புத் தகுதி அளித்துக் கௌரவித்திருக்கிறார்கள். மேற்குறித்த விருதுகள் எனக்கு ஊக்கமளித்தாலும் முன்பின் தெரியாத எத்தனையோ வாசகர்களிடமிருந்து தொடர்ந்து இன்றுவரை அவ்வப்போது வந்துகொண்டிருக்கும் பலவகையான- வித்தியாசமான எதிர்வினைகளே மனதுக்கு நிறைவான ஒரு பணியை - என்றென்றும் நிலைத்திருக்கும் சில செயல்களைச் செய்திருக்கிறோம் என்ற அளவற்ற ஆத்ம திருப்தியைத் தந்தபடி என்னை நெகிழ வைத்துக்கொண்டிருக்கிறன,. 2011 ஆம் ஆண்டு, அசடன் வெளி வந்த நேரம்; அப்போது தில்லியில் வசித்துக்கொண்டிருந்த எனக்கு மதுரை அனுப்பானடிப்பகுதியிலுள்ள அறிமுகமில்லாத தையல் கலைஞர் ஒருவரிடமிருந்து கைபேசி அழைப்பு வந்தது. 600 ரூபாய் என்பது அன்றைய நிலையில் அவரைப்பொறுத்த வரை மிகப்பெரும் தொகை; அத்தனை விலை தந்து அசடனை வாங்கிப்படித்து விட்டு,என் கைபேசி எண்ணையும் முயன்று கண்டு பிடித்து ‘’ஆங்கிலம் அறியாத என்னிடம் அசடனைக் கொண்டு வந்து சேர்த்து விட்டீர்கள்’’என்று அவர் நெகிழ்ந்து சொன்ன அந்தக்கணம் என் நெஞ்சில் எப்போதும் உறைந்து கிடக்கிறது. மெட்ரோ குடிநீர் வாகன ஓட்டுநரில் தொடங்கி புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள், வேத பாடசாலை மாணாக்கர்கள் என வாழ்வின் பலதரப்பட்ட நிலையில் வாழும் மனிதர்களும் தமிழ் தவிரப் பிற மொழியறியாத தங்களிடம் தஸ்தயெவ்ஸ்கியைக்கொண்டு வந்து சேர்த்ததற்காக மனமுருகி நன்றி பாராட்டிக்கொண்டே இருக்கிறார்கள். வேறெந்த விருதுகளையும் விட மேலான - ஆத்மார்த்தமான அந்தச் சொற்களே தொடர்ந்து இந்தத் தளத்தில் இயங்குவதற்கான எரிபொருளை எனக்கு அளிக்கிறது. ஒரு பேரிலக்கியம் மெய்யான வாசகர்களை எப்படியெல்லாம் ஆட்டிப்படைக்கிறது என்பதை அறிந்து கொள்ளும் சந்தர்ப்பத்தையும் மொழியாக்க அனுபவம் எனக்குப் பெற்றுத் தந்திருக்கிறது. என் வளரிளமைக்காலத்தில் சிவகாமியின் சபதம் படித்து விட்டு மாமல்லபுரத்தின் குறிப்பிட்ட இடங்களில் அந்தக் கனவோடு திரிந்தது போல், பொன்னியின் செல்வன் படித்து விட்டு சோழ மண்ணில் அதன் சுவடு தேடி அலைந்தது போல் என் வாசகர் ஒருவர் குற்றமும் தண்டனையும் நாவலில் சொல்லப்பட்ட இடங்களைத் தேடிச்சென்று படத் தொகுப்பாக்கி இருக்கிறார். குற்றமும் தண்டனையும் நாவலில் இடம்பெறும் சம்பவங்கள் நடந்ததாகச் சொல்லப்படும் இடங்களையெல்லாம் பீட்டர்ஸ்பர்கில் போய்ப்பார்த்து விட்டு வந்து அதைப்படத் தொகுப்பாக்கித் தன் வலைத் தளத்தில் போட்டிருக்கிறார் அவர். அதற்கு என் ரஷ்யப்பயணக்கட்டுரை உதவியதென்றும் சொல்லியிருக்கிறார். இவை எல்லாவற்றுக்கும் சிகரம் வைப்பது போல் என் தமிழ் மொழிபெயர்ப்புக்களின் வழி மட்டுமே தஸ்தயெவ்ஸ்கியை அறிந்து கொண்ட வாசகர் ஒருவர், தன் மகனுக்கு வைத்திருக்கும் மகிழ்நன் என்று தூய தமிழ்ப்பெயருக்கு ஃபியதோரை முன்னொட்டாக்கியிருக்கிறார். படைப்புத் தளத்தில் மொழிபெயர்ப்பு எனக்கு ஈட்டித்தந்த மறக்க முடியாத பரிசுகள் இவையே.

 நாடகத்துறைக்கு பெரும்பங்களித்த அகஸ்தோ போவால் நூல்கள் எந்த அளவிற்கு உங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தின? அவருடைய கட்டுரைகளை மொழியாக்கம் செய்துள்ளீர்களா? 

ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக ஒலித்த பிரேஸில் நாட்டு நாடகவியலார் அகஸ்தா போவால் மட்டுமன்றி அதே தளத்தில் இயங்கிய கிரேக்க,ரோமானிய,ரஷ்ய,பிரித்தானிய, பின் காலனீய,ஆப்பிரிக்க கறுப்பின நாடக ஆசிரியர்களின் பங்களிப்புக்களும் கூட நாம் புறந்தள்ளிவிட முடியாதவையே. எனினும் நாடகத்தோடான என் அனுபவங்கள் அத்தகைய நாடக ஆசிரியர்களின் வாசிப்பு சார்ந்தவையோ, மொழிபெயர்ப்பு சார்ந்தவையோ அல்ல. பாத்திமாக் கல்லூரியில் பணி புரிந்து கொண்டிருந்தபோது- 1978ஆம் ஆண்டு, கேரளத்திலுள்ள திருச்சூர் நாடகப்பள்ளி ஏற்பாடு செய்திருந்த நாடகப்பயிற்சி முகாமில் மிகச்சிறந்த நாடக ஆசிரியரும் இயக்குநருமான திரு ஜி.சங்கரப்பிள்ளையிடமும், திரு சே ராமானுஜம் அவர்களிடமும் நிகழ்த்துகலை நுணுக்கங்களை 28 நாட்கள் பாடம் கேட்கும் அரிய வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அதுவரை பள்ளி கல்லூரி நாடகங்களில் நடித்துக்கொண்டும், பணியாற்றும் கல்லூரியில் தி.ஜானகிராமன், சி.சு செல்லப்பா, பி.எஸ் ராமையா, சோ, சுஜாதா ஆகியோரின் நாடகங்களை மாணவியரைக்கொண்டு நடிக்க வைத்து இயக்கிக்கொண்டும் மட்டுமே இருந்தேன்; ஒரு சில நாடகங்களை நானே எழுதி இயக்கியதும் உண்டு. குறிப்பிடத்தக்க நாவல்களையும் சிறுகதைகளையும் நாடகமாக்கியதும் உண்டு ஆனாலும் சங்கரப்பிள்ளையின் நாடக முகாம், நாடகம் பற்றிய வேறொரு பரிமாணத்தை என் முன் விரித்துக்காட்டியது. தமிழ் முதுகலையில் சிறப்புப்பாடமாக இருந்த நாடகத்தாளை வகுப்பறையில் கற்பிக்க மட்டுமன்றி கல்லூரி நாடகங்களை இயக்குவதிலும் வேறுபாடான ஒரு புதிய நோக்கு ஏற்பட அது வழியமைத்துத் தந்தது. எனக்கு மட்டும் என்றில்லாமல் சங்கரப்பிள்ளை - ராமானுஜம் ஆகியோரின் நாடகப் பயிற்சி முகாம், தமிழ் நாட்டு நாடகங்களின் போக்கிலேயே புதிய மாற்றங்களைக் கொணர்ந்தபடி ஆங்காங்கே நவீன நாடக இயக்கங்கள் எழுச்சி பெறுவதற்கும் உத்வேகமளித்துக்கொண்டிருந்தது. அதை ஒட்டி மதுரையில் அரும்பு விடத் தொடங்கியிருந்த திரு மு.இராமசுவாமியின் நிஜநாடக இயக்கமும், அவரது மனைவியும், என்னோடு அதே துறையில் பணியாற்றியவருமான பேரா.செண்பகம் ராமசுவாமியின் நட்பும் என் நாடக ஆர்வத்தைத் தக்கவைக்கத் துணை புரிந்தன. மு.இராமசுவாமியின் இயக்கத்தில் உருவானதும் – மகாபாரதத்தைத்தழுவியதுமான ‘இருள்யுகம்’ [அந்தாயுக்] என்னும் நாடகம் மதுரை இறையியல் கல்லூரியில் அரங்கேற்றப்பட்டபோது [1994] நானும் காந்தாரியாக அதில் வேடம் தரித்தேன்; அதே நாடகம் தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் நிகழ்த்தப்பட்டபோது அதிலும் நான் பங்கேற்றேன். கல்லூரி நாடகங்களை வேறு பாணியில் இயக்கவும், நவீன நாடகக்கோட்பாடுகளை வகுப்பறைக்குக்கொண்டு சென்று மாணவர்களிடம் சேர்க்கவும் அந்தப்பயிற்சிகளும் தொடர்புகளும் எனக்கு உதவின. நாடகம் சார்ந்த என் செயல்பாடுகள் அந்தக்கட்டத்தோடு நின்றுபோனாலும் கூட, நாடகத் துறையில் கொண்ட ஆர்வம் புனைவுகளில் ஈடுபடும்போது எனக்குத் துணை வந்ததை நான் உணர்ந்திருக்கிறேன். சிறுகதை, நாவல் என்று எந்த வகைப் புனைவை எடுத்துக்கொண்டாலும் அவற்றில் சம்பவங்களை நேர்கோட்டிலோ, அ - நேர்கோட்டிலோ அடுக்குவதும்,காட்சிப் படுத்துவதும், காட்சிப் பகுப்புக்களை வகுத்துக்கொள்வதும் அடிப்படையான தேவைகள். நாடகம் திரைப்படம் ஆகியவை உரையாடல் வழியாகவும் காட்சிப்படுத்தல் மூலமும் பார்வையாளனைச்சென்றடைகின்றன. சிறுகதை போன்ற புனைவுகளில் உரையாடலோடு கூடவே கதாசிரியனின் வருணனை மற்றும் படிமக்காட்சிகளும் விரிகின்றன; வாசிப்பின் வழி வாசகன் அதைக்கண்டடைகிறான். மனக்கண்ணில் சிறுகதையைக் காட்சிப்படுத்திக் கற்பனை செய்யும்போது அது நமக்குள்ளே நாடகமாகத்தானே விரிகிறது? அந்த வரிசையை, வைப்பு முறையை மேம்படுத்திக்கொள்ள புனைவின் treatment க்கு நாடகத் தோய்வு எனக்கு உதவியிருக்கிறது. 

 படைப்பிலக்கியவாதியாகத்தான் உங்கள் எழுத்துப்பயணம் முதலில் தொடங்கியிருக்கிறது. அந்த அனுபவங்களைப் பற்றிச் சொல்லுங்கள்

 உள்ளடக்கத்தைச் சுருங்கச் சொல்லிக் குறிப்பாக உணர்த்திச் செல்லும் குறுகத் தரித்த குறளான சிறுகதை வடிவத்தின் மீதும்,அதன் கட்டமைப்பு ஒருமைப்பாட்டின் மீதும் எனக்கு எப்போதுமே தீராத ஆர்வம் உண்டு. காணும் எதிலும், எதிர்ப்படும் எவரிலும் ஏதோஒருமாயக்கதைமறைந்துதானிருக்கிறது. என் கதைகளை எனக்கு இனம்காட்டிக்கொடுத்துக் கொண்டிருப்பது இந்தவாழ்க்கைதான். என் பாத்திரங்கள் இந்தமண்ணில் காலூன்றி இதன் அழகுகளோடும் அழுக்குகளோடும் மேன்மைகளோடும் சிறுமைகளோடும் வாழ்ந்துகொண்டிருப்பவர்களே. காண்பது கேட்பது பலவும் கதைப்பொருளான போதும்வாழ்க்கை பற்றிய என் உள்வாங்கலுக்கும் புரிதலுக்கும் ஏற்றபடி சம்பவங்களையும் மனிதர்களையும் கலைத்துப்போட்டு கற்பனைவழி புதிய உருத்தரதொடர்ந்து முயன்றுகொண்டிருக்கிறேன். ஒரு சிறுகதை வெற்றுசம்பவமாகவோ சுவாரசியமானநிகழ்வாகவோமட்டும்அமைந்துவிடாமல்தனிமனிதஅல்லதுசமூகமனசாட்சியைக் கொஞ்சமாவது அசைத்துப்பார்ப்பதாக அமையவேண்டும் என்பதில் மட்டும் சற்று அக்கறைஎடுத்துக்கொள்கிறேன். பெரியபுராணம் சிலப்பதிகாரம் கம்பராமாயணம் ஆகியகாப்பியங்களை வகுப்பறையில் கற்பித்தபோது இன்றைய சூழலுக்கேற்ப அவற்றை மறுவாசிப்புசெய்யும்தூண்டுதல்எழுந்தது. நான்மீட்டுருவாக்கம்செய்திருக்கும்’தேவந்தி’போன்றசிறுகதைகள்அவ்வாறுபிறந்தவையே; மரபு இலக்கியப்பயிற்சியால் அத்தகைய மீட்டுருவாக்கக்கதைகள் எனக்குஎளிதாகவும் இருக்கின்றன.பள்ளிப்பருவத்திலேயே கதை எழுதத்தொடங்கி விட்டாலும் 1970க்குப் பிறகே பல்வேறு இதழ்களுக்கு தொடர்ந்து அவற்றை அனுப்பி வந்தேன். 1979 ஆம் ஆண்டு கல்கி இதழ் நடத்திய அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப்போட்டியில் ‘ஓர் உயிர் விலை போகிறது’ என்னும் என் முதல் சிறுகதைக்குக் கிடைத்த முதல் பரிசே ஓர் சிறுகதை எழுத்தாளர், ஓர்,எழுத்தாளர் என்னும் அங்கீகாரத்தை எனக்கு முதன்முதலாகப் பெற்றுத் தந்தது. அந்தக்கதைக்குக் கிடைத்த வரவேற்பும் நூற்றுக்கும் மேலான வாசகர் கடிதங்களும் தொடர்ந்து பல சிறுகதைகளை எழுதத் தூண்டுகோலாய் அமைந்தன. என் படைப்புக்கள் வெவ்வேறு கால இடைவெளியில் கல்கி, கலைமகள், ஆனந்த விகடன், தினமணிகதிர், செம்மலர், அமுத சுரபி, மங்கையர் மலர், அவள்விகடன், புதிய பார்வை, வடக்கு வாசல், கணையாழி, உயிரெழுத்து ஆகிய பல இதழ்களிலும் வெளி வந்துள்ளன; ‘ஓர் உயிர் விலை போகிறது’ என்னும் முதல் சிறுகதை கன்னடத்திலும், ‘இம்மை மாறி..’என்னும் ஆக்கம் மலையாளத்திலும் வேறு சில கதைகள் ஆங்கிலம், இந்தி, வங்கம், ஃப்ரஞ்ச் ஆகிய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. "கண் திறந்திட வேண்டும்"என்னும் சிறுகதை, பாலுமகேந்திராவின் 'கதை நேரம்'தொலைக்காட்சித்தொடர் வழி,’நான் படிக்கணும்’என்ற தலைப்பில் ஒளி வடிவம் பெற்றுள்ளது. சிறந்த தமிழ்ச் சிறுகதை எழுத்தாளருக்கான ‘அமரர் சுஜாதா விருது, எனக்கு, ஏப்.6-2013இல் தில்லி தமிழ்ச்சங்கத்தால் அளிக்கப்பட்டது. 'பருவங்கள்மாறும்'(1985), நர்மதா வெளியீடு, 'புதிய பிரவேசங்கள்'(1994),தழல் வெளியீடு 'தடை ஓட்டங்கள்'(2001).மீனாட்சி புத்தக நிலையம் , தேவந்தி (2011),வடக்கு வாசல் பதிப்பகம்,புதுதில்லி என்னும் நான்கு சிறுகதைத் தொகுதிகள் இதுவரை வெளியாகியிருக்கின்றன. ‘தேவந்தி’ தொகுப்பு தில்லி தமிழ்ச்சங்கத்தில் ‘வடக்கு வாசல்’ இலக்கிய இதழ் நடத்திய வெளியீட்டு விழாவில் அப்போதைய குடியரசுத் தலைவர் மேதகு அப்துல் கலாம் அவர்களால் வெளியிடப்பட்டது. நாவல்படைப்பிலும்ஈடுபடவேண்டும்என்றஆர்வம்தொடக்கம்முதல்இருந்தாலும்தொடர் சிந்தனைக்கானமனநிலையும்தொடர்ந்தசெயல்பாட்டுக்கானநேரமும்கூடிவரவேண்டும்என்றுஅதைப்பலஆண்டுகள்ஒத்திப்போட்டுக்கொண்டேவந்தேன்.குறிப்பாகஎன்தாயின்வாழ்வை நாவலாகப்பதிவுசெய்யவேண்டியதுஎன்மகத்தானகடமைஎன்றுஅவ்வப்போதுஒருகுரல்என்னுள்தொடர்ந்துஒலித்துக்கொண்டேஇருந்தது. சென்றநூற்றாண்டுப்பெண்கள்அனுபவிக்கநேர்ந்தஎல்லாக்கொடுமைகளையும்எதிர்ப்பட்டு –அவற்றால் ஒருகட்டத்திலும்கூடமலைத்தோ,களைத்தோபோய்விடாமல்அனைத்தையும் அனாயாசமாய்க்கடந்துவந்த அவரதுவாழ்வை வரலாறாகக் கூறாமல்புனைவுத்தன்மைபொருந்தியநாவலாக்கிச்சொல்லவேண்டும்என்றுஆண்டுக்கணக்காகஎன்னுள்மூண்டுதிரண்டிருந்த பெருங்கனவின் செயல் வடிவம் ’யாதுமாகி…’என்னும்நாவலாக 2014இல்வம்சி பதிப்பக வெளியீடாக உருப்பெற்றது. என்முதல்நாவல்முயற்சிஅதுவே.அண்மையில் என் தோழியும் சென்னை எதிராஜ் கல்லூரியின் ஓய்வு பெற்ற ஆங்கிலப்பேராசிரியருமான காதம்பரி அவர்கள் அந்நாவலை DEVI THE BOUNDLESS என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து சென்னை எமரால்ட் பதிப்பகத்தின் வழி வெளியிட்டிருக்கிறார். அடுத்தபுதிய நாவல்என் பணிக்கால அனுபவம் சார்ந்தது. 35 ஆண்டுகளுக்கும்மேலாகப் பெண்கள்கல்லூரிஒன்றில்தொடர்ந்துபணியாற்றிவந்ததால்பெண்கள்சார்ந்துசொல்லப்படாதஏராளமானகதைகளை ஒரேசரட்டில்ஒருங்கிணைத்து’தடங்கள்’என்ற தலைப்பில் நாவலாக்கியிருக்கிறேன். மதுரை மீனாட்சி புத்தக நிலையத்தாரின் பொன் விழா வெளியீடாக அது வெளிவந்திருக்கிறது. 

உங்களுடைய படைப்புகள் பெரும்பாலும் முற்போக்கானவை, பெண் விடுதலை பேசுபவை மேலும் தமிழ்ச் செவ்விலக்கியங்களை மறுவாசிப்பு செய்பவை. ஒரு சிறந்த படைப்பிலக்கிய வாதியை ஒரு மொழிபெயர்ப்பாளராக இலக்கிய உலகம் பார்த்துக்கொண்டிருக்கிறது. இதுகுறித்து என்ன நினைக்கிறீர்கள்? 

படைப்பிலக்கிய வாதியாக அறியப்பட்ட காலகட்டத்தில் அதற்குரிய சரியான அங்கீகாரங்களையும் எதிர்வினைகளையும் பல தருணங்களில் நான் பெற்று வந்திருக்கிறேன். ஆனால் மொழிபெயர்ப்புப்பணியை மேற்கொள்ளத் தொடங்கிய பிறகு- படைப்பிலக்கியத்துக்கான அங்கீகாரங்கள் என்னைக் கடந்து போகும்போது அவ்வாறு எண்ணுவதற்கான சாத்தியங்கள் இல்லையென்றும் சொல்லி விட முடியாது. நான் முன்னரே குறிப்பிட்டபடி ஆங்கிலம் அறியாத வாசகர்களுக்கு அயல்மொழி இலக்கியங்களை த் தமிழ் வழியே கொண்டு சேர்க்கும் ஒரு மகத்தான கடப்பாடாக – சமூகச் செயல்பாடாகவே மொழியாக்கப்பணியை நான் எண்ணுவதால் அது குறித்து எனக்கு மிகுதியான வருத்தம் இல்லை. படைப்பிலக்கியத்தை விட மொழியாக்கம் இரண்டாந்தரமானது என்பதும் மேம்போக்கான ஒரு மதிப்பீடு மட்டுமே. நல்ல மொழியாக்கம் என்பது, படைப்பிலக்கியத்துக்கு நிகராக- அதையும் விட மேலானதாகவே பார்க்கப்படுகிறது. படைப்பிலக்கியத்துக்கு இருப்பது போன்ற விரிவான வாசகப்பரப்பையும் கூட மொழியாக்கங்கள் இன்று சாத்தியமாக்கி இருக்கின்றன. பணி நிறைவுக்குப்பிறகு காலம் எனக்குத் தந்திருக்கும் மொழிபெயர்ப்புப் பணியை நிறைவோடும் மகிழ்வோடும் படைப்பிலக்கியத்துக்குத் தரும் அதே கவனத்தோடும் செய்து கொண்டிருக்கிறேன். நான் செய்யும் மொழியாங்களின் கதை ஓட்டத்தை உயிர்ப்போடு தந்திருக்கிறேன் என்று என்னால் சொல்லிக்கொள்ள முடிந்தால்- எனக்கு வரும் விமரிசனங்களும் திறனாய்வுகளும் அதை உறுதிப்படுத்தினால் - அதற்கு அடித்தளமிட்டவை , என் படைப்பாக்க முயற்சிகளே என்றே இப்போதும் எண்ணுகிறேன்.மொழியாக்கப்பணிகளுக்கு இடையிடையே சிறுகதைகளும் இரண்டு நாவல்களும் எழுதியிருக்கிறேன். மொழியாக்கம் என்று தோன்றாத வண்ணம் - சரளமான கதைப்போக்குடன் நான் அவற்றைத் தந்திருந்தால் நான் அடிப்படையில் ஒரு படைப்பிலக்கியவாதி என்பதே அதற்கான காரணமாக இருக்கலாம். படைப்பாக்கத்தால் மொழியாக்கமோ மொழியாக்கத்தால் படைப்புத் திறனோ எந்த வகையிலும் பாதிப்புறுவதில்லை என்பதே நான் கண்டடைந்த முடிபு. அண்மையில் மொழியாக்க நூல்கள் மிகுந்த அளவில் பதிப்பிக்கப்படுவதும், அவற்றை வாசிப்பவர்களின் எண்ணிக்கை கூடியிருப்பதும், அந்தத் துறைக்குத் தனிப்பட்ட அங்கீகாரங்கள் தரப்படுவதும் – எல்லாவற்றுக்கும் மேலாக நான் மொழிபெயர்க்கும் தஸ்தயெவ்ஸ்கியும் கூட - மொழிபெயர்ப்பாளராக நான் பெரிதும் கவனப்படுத்தப்பட்டதற்கு முதன்மைக்காரணமாக இருக்கலாம். ஆனாலும் கூடத் தொடர்ந்த சொந்தப்படைப்புக்களை அவ்வப்போது செய்து கொண்டேதான் இருக்கிறேன்.

 உங்களுடைய உரைநடை மொழி கவித்துவமானது. உங்களிடமிருந்து புதிய படைப்புக்களை வாசகர்கள் எதிர்பார்க்கலாமா? 

உங்கள் பாராட்டுக்கு நன்றி. செவிக்குள் ஒலிக்கும் சொற்களின் லயமேதொடராக, வாக்கியமாக மாறியபடி புனைவுச்சூழலுக்கேற்ற என் நடையை முடிவுசெய்கிறது . சிறுகதை ,நாவல் என்று அவ்வப்போது புதிய சொந்தப்படைப்புக்களையும் எழுதிக்கொண்டுதான் இருக்கிறேன். மதுரை மீனாட்சி புத்தக நிலைய வெளியீடாக இப்போது கூட என் புதிய நாவல் ’தடங்கள்’ வெளிவந்திருக்கிறது. குறிப்பிட்ட சம்பவமோ, மனிதர்களோ , உணர்வு நிலையோ என்னைப் பாதித்து – என் அக எழுச்சியைத் தூண்டியபடி - அதை எழுத்தில் இறக்கியே ஆக வேண்டும் என்ற தீராத உந்துதலை அளித்துக் கொண்டிருக்கும் வரை தொடர்ந்து புதிய படைப்பு முயற்சிகளில் முனைந்து கொண்டிருப்பேன் என்றே நினைக்கிறேன். 

கவிதைகள் எழுத முயற்சித்திருக்கிறீர்களா? உங்களுக்குப் பிடித்தபெண்ணியக் கவிதைகள் சட்டென நினைவிற்கு வருவதை பகிர்ந்துகொள்ளமுடியுமா? 

இலக்கிய ஆர்வம் கொண்டிருப்பவர்களில் கவிதை எழுதமுயற்சிக்காதவர்களும் உண்டா என்ன? மிக இளம் வயதிலிருந்தே ஒரு கதைசொல்லியாவதில்தான் என் நாட்டம் நிலைப்பட்டிருந்ததென்றாலும் ‘60 களின்சூழலில் கவியரங்க வாசிப்புக்கேற்ற மரபுக்கவிதைகளை எழுதி வாசித்திருக்கிறேன்; பின்பு சில நவீன கவிதைகள் எழுதி ‘70 காலகட்ட கணையாழி இதழில் அவை வெளிவந்ததும் உண்டு. கவிதைகளை வாசிப்பது தொடர்ந்தாலும் அவற்றை எழுதுமளவு ஈடுபாடு எழுந்ததில்லை. அதற்கு என் மன அமைப்பு இடம் தரவில்லையென்றே எண்ணுகிறேன். ’80 களுக்குப் பிறகு முகம் தெரிந்த , தெரியாத பெண்கள் எழுதும் பல பெண்ணியக் கவிதைகளும் என்னை ஈர்த்திருந்தாலும் சில கவிதைகள் அடிக்கடி நினைவில் எழுவதுண்டு. ‘’பேனாவிற்குப் பதிலாய்க் கரண்டி பிடித்திருந்த காலைப் பொழுதின் கையறு நிலையில் அது தோன்றியது ‘அம்மா பால்’காரனில் துவங்கி ‘இன்னொரு கப்’பெரியவரின் ஆசையை நிறைவேற்றிப் பேனாவைத் தொட்டபோது...எங்கே அது? கருவுற்ற நொடியிலேயே கலைந்து போனதா? கண்ணாமூச்சி ஆசை கொண்டு ஒளிந்து கொண்டதா? என் மனக் கிடங்கிலா...இடுக்கிலா.. ஆழத்தின் அடியிலா...எங்கே தேடுவேன்..?’’ பரவலாக அதிகம் அறியப்படாத நீலா என்பவர் எழுதி..எப்படியோ என் கண்ணில் பட்ட இந்தக் கவிதையை ஏதோ ஒரு இதழில் பார்த்துக் குறித்து வைத்திருந்தேன்.ஆனால் அதை எழுதிய படைப்பாளியை...கவிஞரை அப்புறம் எழுத்துவழி எதிர்ப்படவே இல்லை.தொலைத்து விட்ட தன் கற்பனைக் கருவைத் தேடும் அவரது கவிதையைப் போல, நான் தொலைந்துவிட்ட அவரை இன்னமும் தேடிக் கொண்டிருக்கிறேன். எங்கள் கல்லூரி மாணவியாய் இருந்தவரும், சமகாலப் பெண் கவிஞர்களில் குறிப்பிடத்தக்கவருமான உமாமஹேஸ்வரியின் ’பூத்தல்’ கவிதை, ’’சிறுமியில் ஆரம்பித்தபோது அதற்குள்ளேயா என அம்மாவின் பதற்றம் அடுத்தடுத்த மாதங்களில் ‘இன்னும் வரவில்லையா’ ..மாமியாரின் ஆதங்கமோ ‘இன்னும் வருதா’என காட்டுத்தீ மரமோ பருவங்களைக் கவனியாது பூத்துத் தள்ளுகிறது அதன் போக்கில்’’ புலம் பெயர் படைப்பாளியான வசந்தி ராஜாவின் கீழ்வரும் கவிதை ‘’காசு கொடுத்து ஆம்பிளை வாங்கி அதற்குப் பணிவிடை செய்யும் அவலங்கள் நான் சொல்ல விழி விரித்துக்கேட்கிறாள் மகள் ராஜா ராணிகதை கேட்கும் பாவனையில் போர் தருகின்ற சோகங்களுக்குள்ளாலேயும் ரகசியமாய் சிலிர்த்துக்கொள்கிறேன் புலம் பெயர்ந்தமை தங்கத்தட்டில் தந்த சுதந்திரம் என் மகள்களுக்கும் நம் பெண்களுக்கும்’’ என்று எத்தனையோ கவிதைகளைச் சொல்லிக்கொண்டே போகலாம். 

 பெண்ணியம் பேசும்போது, உடல்மொழி, உடலரசியல் போன்ற சொல்லாடல்கள், நைந்துபோகுமளவிற்கு பயன்படுத்தப்பட்டுள்ளன. இவ்வகையான சொல்லாடல்களுடன் உங்களுக்கு உடன்பாடு உண்டா?

 பெண்ணை உடல் சார்ந்து மட்டுமே பார்க்கும் பார்வை, ஓர் உடலாக மட்டுமே அவளைப் பார்க்கும் பார்வை, உடலை வைத்தே அவளை மதிப்பீடு செய்யும் பார்வை இவையெல்லாம் அறிவுத் தெளிவும் சிந்தனை உரமும் பெற்றுவிட்ட ஒரு கட்டத்தில் பெண்ணுக்கு அலுப்பூட்டுவதாக - மனக் கொதிப்பை ஏற்படுத்துவதாக - அவளால் பொறுத்துக் கொள்ள இயலாததாகப் போனதன் விளைவே பின் நவீன காலத்தின் எதிர் வினையாகப் பீறிட்டெழுந்த உடல்மொழி என்னும் .பெண்மொழி. அது, ஆணாதிக்க சிந்தனைகளுக்கு எதிரான ஒரு மாற்று அரசியல். தான்அனுபவித்துள்ள துன்பங்களைச் சொல்லத் தன் மொழியைத் தானே தேர்ந்தெடுக்கும் தலித் படைப்புக்களைப் போலப் பெண்ணும் தன் தளைகளை, வேதனைகளை, அவலங்களை, ஆற்றாமைகளைச் சொல்ல ஒரு தனிப்பட்ட மொழியை உருவாக்க வேண்டும் என்ற அடிப்படையில் உடல்மொழி, உடலரசியல் போன்ற இத்தகைய சொல்லாடல்கள் ஒருவகையில் கலகக் குரல்களாகக் கொள்ளப்பட்டாலும் ‘’பெண் பாலுறுப்பைக் குறிக்கும் வார்த்தைகளைப் பயன்படுத்தினால் மட்டும் பெண்மொழி உருவாகி விடாது’’என்ற கவிஞர் மாலதி மைத்ரியின் கூற்றின் அடிப்படையிலும் சிந்தித்தாக வேண்டும். வெறும் உடல் மொழியாகக் கட்டமைப்பது மட்டுமே பெண்மொழி இல்லை. படைப்பின் தேவைக்கும்,சமூகத்தின் தேவைக்கும் அப்பாற்பட்ட வகையில் தேவையற்ற பாலியல் வெளிப்பாடுகள் பெண் எழுத்துக்களில் மிகுதியாகக் கையாளப்படுகையில் பெண்ணியக் கோட்பாட்டின் அடிப்படையான நோக்கம் நீர்த்துப் போவதுடன் கவிதைகளில் இடம் பெறும் பிற செய்திகள் மட்டுமே மலிவான இரசனையுடன் - கொச்சையாக உள்வாங்கிக் கொள்ளப்படக் கூடிய அபாயமும் இருக்கிறது; பெண்ணிய எழுத்தில் பாலியல் கூறுகள் எதற்காகப் பதிவாகின்றன என்பதைப் பற்றி அக்கறை கொள்ளாமல்,அவை ஏதோ ஒரு வகையில் தமக்கு உகப்பாக இருப்பதாலேயே அவற்றுக்கு முந்திக் கொண்டு முதன்மை தரச் சிலர் முற்படுகிறார்கள். இதை இன்னும் சற்று வெளிப்படையாகவே கூறுவதானால், இத்தனை நாளும் தான் வருணித்துக் கொண்டிருந்த பெண்ணுடலை இப்போது அவளே வருணிக்கத் தொடங்கியிருப்பது ஆணுக்கு ஒரு வகையான புதுமையை அளித்திருக்கிறது; சமூகச் சிக்கல்கள் சார்ந்த பெண் எழுத்துக்களை நாட்குறிப்புக்கள் என்றும் வெற்றுப் புலம்பல்கள் என்றும் ஒதுக்கித் தள்ளிய ஆண் அறிவு ஜீவிகள் உடல் சார் பெண்மொழி எழுத்துக்களை உயர்த்திப் பிடிப்பதன் சூட்சுமம்,சூழ்ச்சி இதன் அடிப்படையிலேதான். இதைக் கருத்தில் கொண்டு - அதிர்ச்சி மதிப்பிற்காகவும்,வெற்று பிரமிப்பை விளைவிப்பதற்காகவும் மட்டுமே கையாளப்படும் பாலியல் படிமங்களைத் தவிர்க்க முயல்வதே பெண்ணியம் பற்றிய சரியான புரிதலையும்,சமூக மாற்றத்தையும் ஏற்படுத்த உதவி செய்வதாக இருக்க முடியும்;அதைச் செய்யத் தவறும்போதுதான் பெண்ணியம் என்ற பதமே பிறழ விளங்கிக் கொள்ளப்பட்டுக் கேவலமான விமரிசனங்களுக்கு உள்ளாகும் நிலையும் நேரிட்டு விடுகிறது. இன்னும் ஒன்று: உடல் மொழி உடல் அரசியல் ஆகியவற்றையெல்லாம் பின்னுக்குத் தள்ளி விட்டு மனிதம் என்னும் ஒற்றை இலக்கை நோக்கி நாம் எப்பொழுதோ பயணப்படத் தொடங்கி விட்ட நிலையில் இன்றைய சூழலில் அவற்றைக் காலாவதியானவையாகவே கொள்ள முடியும். அடிப்படை உரிமைகள் கூட மீட்கப்படாமல் தனித்தும்,குழுவாகவும்(gang rape) பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாகும் பெண்கள் பற்றியும்,குடும்ப வன்முறைகளுக்கு ஆட்படும் பெண்கள் பற்றியுமான தகவல்கள் அன்றாடச் செய்தித் தாள்களின் பக்கங்களை மிகுதியாக நிரப்பிக் கொண்டிருக்கும் இன்றைய சூழலில், பெண் குறித்த மரபு வழி சமூகக் கருத்து ஆக்கங்களுக்கு எதிரான சமூகக் கட்டமைப்பை நோக்கியே பெண் மொழி நகர வேண்டும்; மனித சமத்துவம் மலினப்படாத ,பால் பேதமற்ற சமூகத்தை உருவாக்க முயல்வதற்கான செயல்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதற்கான நகர்வுகளுக்கு அது பயன்பட்டாக வேண்டும். எந்தக் கருத்துருவாக்கமும் அடிமட்டம் வரை ஊடுருவிச் சென்று உதவவில்லையென்றால்,அது வெறும் போலியான வெளிப்பகட்டு மட்டுமே.. குடும்ப வன்முறையும்,பாலியல் வன்முறையும்,இரண்டாம் பாலினமாகப் பெண்ணைக்கருதும் போக்கும் இன்னும் கூட நிலவிக்கொண்டிருக்கும் இந்தச்சமூகத்தை மாற்றக்கூடிய ஆக்க பூர்வமான பெண்ணிய நிலைப்பாட்டுக்குத் துணை வரக்கூடியவையாக இந்தச் சொல்லாடல்கள் எனக்குத் தோன்றவில்லை. ஆணும் பெண்ணும் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் எதிரி மனோபாவத்தில் பார்த்துக் கொண்டிருப்பதை விடுத்து,பெண்ணியம் என்ற சொல்லைப் பகடி செய்து ஏளனம் புரிவதை ஆணும்,ஆணைப் பகைவனாகமட்டுமே கருதும் எண்ணத்தைப் பெண்ணும் கைவிட்டு, நிறுவனமாக்கப்பட்டு நிலைத்தும்போன சமூக அமைப்புக்களுக்கெதிரான குரலை ஒருமித்து முன் வைத்து- சமத்துவம் குன்றாத மானுடச் சமூகம் மலர வேண்டுமென்ற நோக்கில் செயல்படுவது மட்டுமே என்றென்றைக்கும் பயனளிக்கும் நிலையான பெண்ணியக் கோட்பாடாக இருக்கமுடியும் என்பதும்,பிற அனைத்தும் ஆடிக் காற்றில் அடித்துச் செல்லப்படும் துரும்புகளாக மட்டுமே இருக்க முடியும் என்பதுமே களத்தில் இறங்கியும்,எழுத்தில் முனைந்தும் செயலாற்றியிருக்கும் என் அனுபவத்தில் தெளிந்த திடமான முடிவு.

 நீங்கள்நிறையநாடுகளுக்குப்பயணம்மேற்கொண்டிருக்கிறீர்கள், ஏதேனும்பயணக்குறிப்பு நூல்கள் எழுதியிருக்கிறீர்களா? உங்கள்பயணங்கள், துறைசார்ந்ததா அல்லது தனிப்பட்டபயணங்களா? 

 இந்தியாவின் பல பகுதிகளையும் உலக நாடுகள் பலவற்றையும் காண வேண்டும் என்னும் இலக்கும், ஆவலும் இளம் வயது முதலே எனக்கிருந்தது.வேலையிலிருந்து ஓய்வு பெற்ற பின் அதற்கான தருணங்களை நானே உண்டாக்கிக்கொண்டேன். எந்தத் துறை சார்ந்தும் செல்லாமல் தனிப்பட்ட முறையில் -என் தனிப்பட்ட ஆர்வத்தால் மட்டுமே ஐரோப்பிய நாடுகள் பலவற்றுக்கும்[,ஃபிரான்ஸ்,இத்தாலி, வாடிகன்,ஜெர்மனி,ஆஸ்திரியா,சுவிட்சர்லாந்து,இங்கிலாந்து,நெதர்லாந்த்,பெல்ஜியம்]அமெரிக்க ஐக்கிய நாடு, கனடா ,சிங்கப்பூர்,மலேசியா,இலங்கை ஆகிய நாடுகள் பலவற்றுக்கும் - சில சுற்றுலாக்குழுக்களுடன் சேர்ந்து - சென்று வந்திருக்கிறேன். தஸ்தயெவ்ஸ்கியின் எழுத்துக்களைமொழிபெயர்க்கத்தொடங்கிய பிறகு, அவரும்அவரதுநாவல்பாத்திரங்களும்சஞ்சரித்தசெயிண்ட்பீட்டர்ஸ்பர்கை - அங்குள்ளநேவாஆற்றை, நெவ்ஸ்கிபிராஸ்பெக்டை, குற்றமும்தண்டனையில்வரும்வைக்கோல்சந்தையை, தஸ்தயெவ்ஸ்கியின் நினைவில்லத்தை, அவர் வாழ்ந்த குடியிருப்பை ஒருமுறையாவதுபார்த்தேஆகவேண்டும்என்னும்என்ஆர்வம்மேலும்வலுப்பெற்றது. 2016ஆம்ஆண்டில்சுற்றுலாக்குழு ஒன்றோடு இணைந்து ரஷ்யா செல்லும் வாய்ப்பைஎற்படுத்திக்கொண்டுஅந்தஆவலைநிறைவுசெய்துகொண்டேன். ’தஸ்தயெவ்ஸ்கியின் மண்ணில்’ என்ற தலைப்பில் நான் எழுதிய ரஷ்யப்பயணக்கட்டுரைகள்தினமணி டாட் காமில் தொடராக வெளி வந்தன புது தில்லியில் மகள் குடும்பத்தாரோடு வசிக்கையில் வட இந்தியாவில் பல அரிதான இடங்களுக்கு அவர்களோடு சென்று வந்திருக்கிறேன். தில்லி முதல் கோவை வரை சாலை மார்க்கமாகவே இந்திய தரிசனம் செய்து கொண்டு வந்த அனுபவமும் உண்டு. வாய்ப்பு நேரும்போதெல்லாம் தோழியரோடு சேர்ந்து தமிழ்நாட்டின் பல பகுதிகளுக்கும் , காசி,கயா,அலகாபாத்,உஜ்ஜயினி,பூரி,பத்ரிநாத்,கேதார்நாத் போன்ற வட நாட்டின் புனிதத் திருத்தலங்களுக்கும் சென்றதுண்டு. வடநாட்டில் இமையத்தின் எழில் கொஞ்சும் பல சுற்றுலாத் தலங்களுக்கும் வனப்பகுதிகளுக்கும் சென்றது குறித்தும் பத்ரிநாத் பயணம் பற்றியும் என் வலைத்தளத்தில் அவப்போது உடனுக்குடன் கட்டுரைகள் எழுதியிருக்கிறேன். பயணத்தின்போதும் பிற தருணங்களிலும் நான் எடுத்த புகைப்படங்களை அரிய சேமிப்பாகப் பாதுகாத்தும் வருகிறேன் மாறிக்கொண்டே செல்லும் நிலவியல்,வெவ்வேறு ஆறுகள், சமுத்திரங்கள், மடிப்புக்களோடு கூடிய மலை அடுக்குகள்,மலைத் தொடர்கள்,அருவிகள், நகரக்கட்டமைப்புகள், அந்தந்த இடங்களின் கலாச்சார அடையாளங்கள், வேறு வேறான மனித முகங்களின் வித்தியாசமான பாவனைகள், புறத்தோற்றங்கள் என்று காணும் எல்லாமே என்னை சுவாரசியப்படுத்தியபடி,என்னை விசாலப்படுத்தியபடி இன்னும் இன்னும் என்று அடுத்தடுத்த பயணங்களுக்கு என்னைத் தொடர்ந்து ஆயத்தப்பட வைத்துக்கொண்டே இருக்கின்றன. எழுத்தோடு கூடவே என்னை உயிர்த்துடிப்போடு இயங்க வைக்கும் இன்னொரு மாமருந்தாகவே நான் மேற்கொண்ட,மேற்கொள்ளும் பயணங்களைக் கருதுகிறேன். பயணங்கள் வழியாகவே நான் என்னைப் புதுப்பித்துக்கொள்கிறேன்.புத்துயிர்ப்பு பெறுகிறேன்.உயிர்ச்செல்களில் புது ரத்தம் பாயச்செய்யும் பயணங்கள் ஒருபோதும் என்னைக் களைப்பாக்குவதில்லை. 


உங்கள் பயண அனுபவங்களில் தஸ்தயேவ்ஸ்கி என்ற நாவலாசிரியர் மீது கொண்ட ஈர்ப்பின் காரணமாகவே ரஷ்யப்பயணம் மேற்கொண்டதாகக் குறிப்பிட்டிருந்தீர்கள். அவரும் அவரது கதை மாந்தரும் நடந்துசென்ற வீதிகளை நீங்கள் நேரில் பார்த்த அனுபவம் எப்படி இருந்தது?

 பொதுவாகசுற்றுலாக்குழுக்களின்இடத் தேர்வுகள் நம் உள்ளார்ந்த பிற விருப்பங்களைநிறைவு செய்யக்கூடியவையாக இருப்பதில்லை; எனினும்எங்களுக்கு வழிகாட்டியாக அமைந்த ரஷ்யப்பெண்கள்,தங்கள் நாட்டு நாவலாசிரியர் ஒருவர் மீது நான் காட்டும் ஆர்வத்தைப்புரிந்து கொண்டு தஸ்தயெவ்ஸ்கி தொடர்பான இடங்களைக் காண்பதற்கு எனக்கு வழியமைத்துத் தந்தனர். இப்போதுநினைவில்லமாகமாற்றப்பட்டிருக்கும் தஸ்தயெவ்ஸ்கி வாழ்ந்த வீடு, அவரது திருமணம் நிகழ்ந்த தேவாலயம், அடுக்கு மாடிக்கட்டிடக் குடியிருப்பு ஒன்றில் மிகக்குறுகிய காலம் தஸ்தயெவ்ஸ்கி வாழ்ந்ததைக் குறிப்பிடும்வகையில்அங்கிருந்த கல்வெட்டு ஆகியவற்றை அங்கே காண நேர்ந்ததுஅம்மண்ணில் நான் பெற்ற பெரும் பேறு. எங்கள் ரஷ்யப்பயணத்தின்போது, ஒரு நாள்…பீட்டர்ஸ்பர்க் நகரத்தின் அகன்ற சாலை ஒன்றின் மிகப்பெரிய அடுக்குமாடிக் கட்டிடத்தின் கீழ்த்தளத்தில் சிக்கனமான எளிமையுடன் இருந்த அந்த இந்திய உணவு விடுதியில் மதிய உணவருந்திக்கொண்டிருந்தோம். அப்போது, அதன் அருகே, அதை ஒட்டியிருக்கும் ஒரு இடத்திலேதான் நாவலாசிரியர் தஸ்தயெவ்ஸ்கி மிகக்குறுகிய காலம் வாழ்ந்தார் என்றும்,அதைக் காட்டும் நினைவுச் சின்னம் ஒன்று அங்கிருக்கிறது என்றும் மெல்ல என் காதுக்குள் ஓதினார் வழிகாட்டி காதரீனா. அடுத்த கணமே பசிக்களைப்பும், ஊர் சுற்றிய களைப்பும் எங்கோ ஓடிப்போய்விட உடனே அதைப் பார்த்தாக வேண்டும் என்ற உற்சாகம் என்னைத் தொற்றிக் கொண்டது. உடன் வந்திருந்த பிற சுற்றுலாப் பயணிகளுக்கு அதில் ஆர்வம் இருக்க வாய்ப்பில்லை என்பதால் ஐந்தே நிமிடத்தில் மிகச்சுருக்கமாக… விரைவாக உணவை முடித்துக் கொண்டேன். எங்கள் குழுவின் தலைவரிடமும், வழிகாட்டியிடமும் அந்தத் தெருமுனை வரை தனியே சென்று வர அனுமதி பெற்று வெளியே வந்தேன். அதே தெருவின் திருப்பத்தை ஒட்டிய பகுதியில்தான் அந்த நினைவுச்சின்னம் இருப்பதாக காதரீனா கூறியிருந்ததால் எங்கள் உணவு விடுதி இருந்த இடத்தை மட்டும் நன்றாக மனதில் பதியவைத்துக் கொண்டு நடைபாதை வழியே வேகநடை போட்டுத் திருப்பத்தை நெருங்கினேன். நான்கு அகலமான சாலைகள் சந்திக்கும் அந்த இடத்தில் எவரிடம் எப்படிக் கேட்டுக் குறிப்பிட்ட நினைவுச் சின்னத்தைத் தேட முடியும் என்பதறியாமல் சற்றுத் திகைக்க வேண்டியநிலை! மொழியும், வழியும் தெரியாத ஓர் இடத்தில் அதற்கு மேல் தொடர்ந்து செல்லவும் மனமின்றி எதிர்ப்பட்ட ஒரு சிலரிடம் விசாரிக்க முனைந்தால் மொழிச்சிக்கல்! பெரும்பாலான ரஷ்ய மக்களும் தங்கள் மொழியையன்றி ஆங்கிலம் அறியாதவர்களாகவே இருப்பதால் நான் விசாரிக்க முனைந்த விஷயம் எவருக்கும் விளங்கவில்லை.அந்தக் கணத்தில் எங்கிருந்தோ என்னிடம் பாய்ந்து வந்தார் ஒரு பருமனான பெண்மணி.தஸ்தயெவ்ஸ்கி என்ற பெயர் மட்டுமே அவர் காதில் அரைகுறையாக விழுந்திருக்கவேண்டும், அதை மட்டுமே பற்றிக் கொண்டு என்னருகே வந்தவர், என் தேடல் குறித்து நல்ல ஆங்கிலத்தில் என்னிடம் வினவினார். நான் அதை விளக்கி முடித்ததும், அவரே என் கரத்தைப் பற்றிக்கொண்டு எங்கள் உணவு விடுதி இருந்த கட்டிடத்தின் அதே திசையில் என்னை நடத்திச் சென்றார். எனக்குள் ஒரே குழப்பம்! நான் கூறியதை அவர் சரியாகத்தான் உள்வாங்கிக் கொண்டாரா என்பதிலேயே எனக்கு சந்தேகம் தோன்றிவிட்டிருந்தது. எங்கள் உணவு விடுதிக்குக் கொஞ்சம் முன்பாக – அதே கட்டிடத்தில் சற்றுத் தள்ளியிருந்த ஒரு பகுதிக்கு முன்பு என்னை நிறுத்திய அந்தப் பெண்மணி, சற்று உயரத்திலிருந்த ஒரு தளத்தின் மீது தொங்கிக் கொண்டிருந்த ஒரு கற்பலகையை எனக்குச் சுட்டிக்காட்டினார். ‘நாவலாசிரியர் தஸ்தயெவ்ஸ்கி 1847ஆம் ஆண்டு முதல் 1849ஆம் ஆண்டு வரை வாழ்ந்த இடம்.’ என ரஷ்ய மொழியல் பொறிக்கப்பட்டிருந்த அந்தஎழுத்துக்களை எனக்கு ஆங்கிலத்தில் எடுத்துச் சொல்லிய அவருக்கு நன்றி கூற வார்த்தை தேடி நான் தவித்தேன்; அவரோ தனது நாட்டின் இலக்கிய மேதை ஒருவரின் சுவடு தேடி இந்தியப் பெண்ணான நான் அலையும்போது எனக்கு உதவ முடிந்ததில் தனக்குப் பெருமகிழ்ச்சி என்று கூறியபடி விடைபெற்றுச் சென்றார். தஸ்தயெவ்ஸ்கி குறித்த அந்தக் கற்சின்னத்தை மகிழ்வோடு புகைப்படமெடுத்துக் கொண்டு மனநிறைவோடு உணவு விடுதிக்குத் திரும்பி எங்கள் குழுவினரோடு உரிய நேரத்திற்குள் இணைந்து கொண்டேன். காதரீனாவுடன் என் அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டபோது செயிண்ட் பீட்டர்ஸ்பர்கின் மற்றொரு பகுதியில் தஸ்தயெவ்ஸ்கி சற்று நீண்ட காலம் வாழ்ந்த இடம், தற்போது அவரது நினைவில்லமாகவே மாற்றப்பட்டிருப்பதாகவும், உரிய நேரம் வாய்த்தால் என்னை அங்கே அழைத்துச் செல்வதாகவும் உறுதி அளித்தார். செயிண்ட் பீட்டர்ஸ்பர்கின் மையமாகக் கருதப்படும் நெவ்ஸ்கி ப்ராஸ்பெக்ட் என்னும் மிகப் பெரிய விசாலமான வீதி,தேவலாயங்கள் உள்ளிட்ட எழிலார்ந்த பல கட்டிட அமைப்புக்களைக் கொண்டிருப்பது. அங்காடிகள், அருங்காட்சியகங்கள், நூலகங்கள் ஆகிய பலவற்றோடு அமைந்திருக்கும் இந்தத்தெரு. ’இரவு வாழ்க்கை’க்கும் பெயர் பெற்றிருப்பது..நெவ்ஸ்கி ப்ராஸ்பெக்டின் ஜுர வேகமான வாழ்க்கை ஓட்டத்தை, அந்தத் தலைப்பிலேயே புனைகதையாக்கித் தந்திருக்கிறார் , ரஷ்ய எழுத்தாளர் நிகோலாய் கோகோல். ஃபியதோர் தஸ்தயெவ்ஸ்கியின் புகழ் பெற்ற நாவலான ‘குற்றமும்தண்டனையும்’. மற்றும் 'பீட்டர்ஸ்பர்க் கவிதை' [ST PEETARSBARG POEM] என்ற மாற்றுப் பெயர் கொண்ட அவரது ‘இரட்டையர்’ [THE DOUBLE] நாவல் ஆகியவை பெரும்பாலும் நெவ்ஸ்கி ப்ராஸ்பெக்டை நிலைக்களனாக வைத்து நிகழும் சம்பங்களையே மிகுதியாகக் கொண்டிருக்கின்றன அந்த இலக்கிய ஆசானுக்காக மட்டுமே ரஷ்யப்பயணத்தை மேற்கொண்டிருந்த நான் அந்த இடங்களைக் கடந்து செல்லுகையில் மெய்சிலிர்த்துப் போயிருந்தேன். ரஷ்யப்பயணத்தின் இறுதிநாள் காலைச் சிற்றுண்டிக்காக நாங்கள் ஆயத்தமாகி வரும் முன்பே ஸ்கேண்டினேவியா செல்லும் எங்கள் பயணக்குழுவினர் ஒரு சிற்றுந்தில் கிளம்பி விட்டிருந்தனர். பயணத்திட்டத்தின்படி எல்லோரும் எல்லாம் பார்த்து முடித்து விட்டதால் இரவு விமானத்துக்குக் கிளம்பும் வரை எஞ்சியிருந்த நேரத்தில் தஸ்தயெவ்ஸ்கி நினைவில்லத்தைக் காண வேண்டும் என்னும் என் ஆவலை நிறைவேற்றி வைத்தார் எங்கள் வழிகாட்டிப்பெண். முதலில் எங்கள் அனைவரையுமே ட்ரினிடி தேவாலயத்துக்கு அழைத்துச் சென்றார் அவர். செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் இதுவரை நாங்கள் பார்த்திருந்த பிரம்மாண்டமான தேவாலயங்களைப்போல இல்லாவிட்டாலும் எளிமையான அழகோடு பொலிந்த ட்ரினிடி தேவாலயத்தில் அப்போது பூசையும் கூட நடந்து கொண்டிருந்தது. ஒரு வகையில் அந்த ஆலயம் நாவலாசிரியர் தஸ்தயெவ்ஸ்கியோடு தொடர்புடையதும் கூட என்று கூறிய படி, அவரது திருமணம் அங்குதான் நிகழ்ந்தது என்பதை என்னிடம் பகிர்ந்து கொண்டார். உடன் என் மனம் தியாகத்தில் தோய்ந்த தஸ்தயெவ்ஸ்கியின் மனைவி அன்னாவிடம் தாவிச்சென்றது… கணவரின் எழுத்துப்பணிக்கு உறுதுணையாக இருந்ததோடு சூதாடியாகப் பணத்தையெல்லாம் அவர் தொலைத்த காலத்திலும் அவருக்குக் கை கொடுத்து நின்று கடனிலிருந்தும் மீட்டவரான அன்னா, இலக்கிய மேதையான தன் கணவர் பற்றிய நினைவுக் குறிப்புக்களையும் பதிவு செய்திருக்கிறார். ட்ரினிடி தேவாலயத்தைப்பார்த்து முடித்தததும் குழுவிலிருந்த மற்றவர்களை வேறு இரண்டு தேவாலயங்களுக்கு அருகே விட்டு விட்டு என்னை மட்டும் தஸ்தயெவ்ஸ்கி நினைவில்லத்தின் முகப்பு வரை கொண்டு போய் விட்டு விட்டு இருபதே நிமிடங்களில் குழுவினரோடு நான் வந்து சேர்ந்தாகவேண்டும் என்ற நிபந்தனையோடு விடைபெற்றார் வழிகாட்டி. மிகப்பெரிய அடுக்கு மாடிக்கட்டிடத்தின் ஓரத்தில் சிறியதொரு கீழ்த்தளமும் மேல்தளமும் கொண்ட எளிமையான குடியிருப்பு ஒன்றில் அமைந்திருந்தது அந்த நினைவில்லம். கீழ்த்தளத்தில் இறங்கிச் சென்று அங்கிருந்த வரவேற்பகத்தில் இருநூறு ரூபிள் கட்டணம் செலுத்தி நுழைவுச் சீட்டைப் பெற்றுக்கொண்டு மேல்தளம் நோக்கிச்சென்றபோது என் உள்ளம் கலவையான பல உணர்வுகளின் ஆக்கிரமிப்பால் நெகிழ்ந்து கிடந்தது. இலக்கிய முன்னோடிகள் வாழ்ந்த இல்லங்களில் கால் பதிக்கும் வேளையில் இயல்பாகவே ஏற்படும் புல்லரிப்பும் பூரிப்புமான பரவசநிலை அது ! மிகவும் எளிமையான அந்த இல்லம் அவரைப் பற்றிய செய்திகளையெல்லாம் நினைவுபடுத்திக்கொண்டிருக்க நான் அங்குள்ள ஒவ்வொரு அறையாகச் சென்று கொண்டிருந்தேன். ஒரு கூடம் முழுவதும் எழுத்தாளர் பயன்படுத்திய பலவகையான பொருட்கள் [வயோலின், திசைகாட்டும் கருவி, அவர் படித்தநூல்கள்] கண்ணாடிப் பெட்டிகளுக்குள் நிறைந்திருந்தன. இராணுவத்தில் இருந்தபோதும் சைபீரியச்சிறையில் சில காலம் அவர் இருக்க நேர்ந்தபோதும் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், அவரது கையெழுத்துப்பிரதிகள், அவரது நூலின் முதல் பிரதிகள், குடும்பப் புகைப்படங்கள் ஆகியவையும் அங்கே பாதுகாக்கப்பட்டுப் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. அந்தக்காட்சிக் கூடத்தை அடுத்து அவர் வாழ்ந்த இல்லத்தில் அவர் அமர்ந்து எழுதும் அறை (உலகப்புகழ்பெற்ற நாவலான ‘கரமசோவ் சகோதரர்க’ளை அங்கேதான் அவர் உருவாக்கியிருக்கிறார் என்ற குறிப்பை அந்த இடத்தில் கண்டதும் என் மகிழ்ச்சிக்கு அளவில்லை) படிக்கும் அறை… வரவேற்பறை ஆகிய அனைத்துமே அது ஒரு படிப்பாளியின், எழுத்தாளனின் இடம் என்பதை எடுத்துக்காட்டும் முறையில் மிகையும் பகட்டும் இல்லாத எளிய அழகுடன் பொலிந்து கொண்டிருந்தன அந்த மாமேதை வாழ்ந்து ஒரு சில பேராக்கங்களையும் உருவாக்கிய அந்த இடத்தில் சிறிது நேரம் உலவி வர முடிந்ததை என் வாழ்வின் அரிதான வாய்ப்புக்களில் ஒன்றாகவும் அந்தக் குறிப்பிட்ட நேரத்தை என் வாழ்வின் ஆகச் சிறந்த கணங்களில் ஒன்றாகவும் கொண்ட மனச்சிலிர்ப்புடன் இருந்தேன் நான். 

 நான் இதுவரையிலும் பயணித்துக்கொண்டிருக்கிற பாதை சரியானதிசைவழியில்தான் போய்க்கொண்டிருக்கிறதா என எப்போதேனும்தோன்றியதுண்டா?

 "நீர்வழிப் படூஉம் புணை போல ஆருயிர் முறைவழிப் படூஉம்'' என்ற புறநானூற்று வரிகள் வாழ்வின் சித்தாந்தத்தை எனக்கு அழுத்தமாக உணர்த்தியிருக்கின்றன.நாம் பயணிக்கும் பாதைகளுக்கான திசைகளை நம்மால் மட்டுமே எப்போதும்நிர்ணயித்துவிட முடிவதில்லை. பாதையில் அவ்வப்போது நமக்குத் தட்டுப்படும் மைல்கல் போன்ற அரிதான சில தடயங்களே நாம் வழிப்படுத்தப்பட்ட திசைகள் சரியானவை என்பதை நமக்குஉணர்த்திக் கொண்டிருக்கின்றன. இந்தப் பொது நியதி எனக்கும் பொருத்தமானதே. அந்த அடிப்படையில்- கூடியவரை தனிப்பட்ட வாழ்க்கை, ஆசிரியப்பணி, எழுத்துலகம் என்ற மூன்று பாதைகளிலுமே சரியான திசையில் என் வாழ்க்கைசெலுத்தப்பட்டிருப்பதாகவே நினைக்கிறேன். 

 பொதுவாக மனிதர்களுக்கு, அதிலும் குறிப்பாக எழுத்தாளர்களுக்கு, உள்ளான ஒரு தேடல் இருந்துகொண்டே இருக்கும்; அது போன்ற தேடல்கள்? 

தேடல் மனித வாழ்வை சுவாரசியமாய் ஆக்குகிறது.அலுப்புகளை அகற்றி அர்த்தமுள்ளதாக்குகிறது. உலகின் கடைசி ஜீவன் இருக்கும் வரை உயிர்கள் நிகழ்த்தும் தேடல் முயற்சிகள் – ஏதோ ஒரு வடிவில்- சிலையாகவோ,சித்திரமாகவோ,கதையாகவோ,கவிதையாகவோ பதிவாகிக்கொண்டுதான் இருக்கும். வாழ்க்கை குறித்த தீராத தேடல்களே என் எழுத்துக்கள் என்றாலும் இவை முடிந்த முடிபுகளோ வாழ்க்கை பற்றிய வரையறுக்கப்பட்ட கணிப்புக்களோ அல்ல. மனிதம் என்பதே மாற்றத்துக்கு உட்பட்டதுதான்,நேற்றுத் துலங்கிய மனிதப்பண்புகளில் இன்று தூசுகள் போர்த்தியிருக்கலாம். இன்று தொய்ந்து போன மானுடம் நாளையே வீறு கொண்டும் எழலாம். முரண்களுடன் கூடிய வாழ்க்கையை நேரிலும், நூல்கள் வழியாகவும் அவதானிப்பதும், அசைபோடுவதும், முடியும்போது எழுத்து வழி இறக்கி வைப்பதுமே தேடல் என்னைக் கொண்டு செல்லும் பாதை. முடிவற்ற பயணத்தின் இடை ஆற்றில் மிதந்தபடி என் முன்னும் பின்னும் கடந்து போன கடந்து போகும் சக மனிதர்களும் சம்பவங்களும் என்னுள் நிகழ்த்துகிற சலனங்களையும், அதிர்வுகளையும் என் பார்வைக்கும் உள் வாங்கலுக்கும் ஏற்றபடி எழுத்துக்களாய்க் காட்சிப்படுத்த நான் முயன்று கொண்டிருக்கிறேன். இம்முயற்சியில் எழுத்து என் வசப்படுகிறதோ இல்லையோ, நான் எழுத்தின் வசப்படுகிறேன் என்பதே எனக்கு மகிழ்வூட்டும் அனுபவமாகிறது. கடவுள் தேடல் முடிவற்றது.படைப்புத் தேடலும் அப்படிப்பட்டதுதான். ’’எழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்’’ இல்லையா? வாழ்க்கையில், இதைச் செய்துமுடித்துவிட்டால், எனது அனைத்து கடமைகளும் முடிந்துவிடும் என்று, இலக்கியப் பணி ஏதேனும் ஒன்றை மனதில் நினைத்து வைத்திருக்கிறீர்களா? குறிப்பான அப்படிப்பட்ட எந்தத் திட்டமும் இல்லை. முந்தைய கேள்வியில் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் தேடல் கங்குகள் என்னுள் உயிர்ப்போடு இருக்கும் வரை, எனக்குப் பிடித்தமான எழுத்துக்களை வாசிப்பதிலும், என் உள்ளுணர்வின் எழுச்சி தூண்டப்படுகையில் சிறுகதை, நாவல் எனச் சொந்தப் படைப்பில் ஈடுபடுவதிலும், எனக்கு ஆர்வமூட்டும் படைப்புக்களை மொழிபெயர்ப்பதிலும், பயணங்கள் செய்வதிலுமாய் எஞ்சியிருக்கும் காலமும் தொடர்ந்து கழிய வேண்டும் என்பதே என் அவா. மனம் வேண்டியபடி செல்லும் உடல் வாய்த்திருக்கும் வரை வாழ்வைப் பயனும், பொருளும் மிகுந்ததாக ஆக்கிக் கொள்ள வேண்டும் என்பதும், வாழ்வின் எந்தக் கட்டத்திலும் தேடலை நிறுத்தி விடாமல், தேக்கத்தை அனுமதித்து விடாமல் தொடர்ந்து உற்சாகமாக, சுறுசுறுப்பாக ஏதோ ஒரு வகையில் இயங்கிக் கொண்டே இருக்க வேண்டுமென்பதுமே என் விருப்பம்.

கருத்துகள் இல்லை :

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....