துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

11.11.20

கனலி ஜப்பானிய சிறப்பிதழில் -'லிஃப்டுக்குள்…'

 கனலி ஜப்பானிய சிறப்பிதழில் என் மொழியாக்கச் சிறுகதை

http://kanali.in/liftukkul/?fbclid=IwAR3ywVuHwLf3biOA5osAkPrqYLgj2Mxv47Yt6XMXSaLOJUh1g5UATyzT2zw



              லிஃப்டுக்குள்


[ஜப்பானிய மூலம்:கூனோ டீகோ

ஆங்கில வழி தமிழ்: எம் ஏ சுசீலா] 


ன்று வெளியே கிளம்பியபோது, இப்படிப்பட்ட விரும்பத்தகாத நிகழ்வொன்றை  எதிர்கொள்ளப்போகிறேன் என்று நான் கொஞ்சமும் எதிர்பார்த்திருக்கவில்லை. 

குறிப்பாகச் சொல்லப்போனால்  அன்று நான் களைப்பாகக் கூட இல்லை;  உண்மையிலேயே நல்ல மனநிலையோடுதான் நான் திரும்பி  வந்துகொண்டிருந்தேன். லிஃப்டுக்குள் நுழைந்து கதவை மூடும் பொத்தானை அழுத்தி விட்டு, மூன்றாம் தளத்துக்குச் செல்லும் பொத்தானையும் அழுத்தினேன். சரியாக அதேநேரம் பார்த்து,  மூடிக்கொண்டிருக்கும் லிஃப்டை நோக்கி இன்னொரு பெண்மணி விரைந்து வந்து கொண்டிருப்பதைப் பார்த்ததும் கதவைத் திறப்பதற்கான பொத்தானை அழுத்தினேன்.


தாளால் பொதியப்பட்டிருந்த பெரிய பார்சல் ஒன்றை நெஞ்சோடுஅணைத்துப்பிடித்துக்கொண்டிருந்த அவள், மறுபடி திறந்துகொண்ட லிஃப்ட் கதவுக்குள் நுழைந்து உள்ளே வந்தாள்; அவள் எனக்கு நன்றி எதுவும் சொல்லவில்லை.. ஆனாலும் கூடக் கதவைத் திரும்பமூடுவதற்கான பொத்தானை அழுத்தியதுமே- கை நிறைய சுமையோடு இருந்த அவள் செல்ல வேண்டிய தளம் எது என்பதைக் கேட்டு அதையும் நான் அழுத்தியிருப்பேன். ஆனால் நான் அதைச் சொல்வதற்கு முன்பு அவளே “தயவு செய்து ஒன்பதாவது தளத்தை அழுத்துங்கள்” என்று கேட்டாள்.  நானும் பதில் பேசாமல்  ஒன்பதை அழுத்திவிட்டாலும் அவள் சொன்னதை அலட்சியப்படுத்தாமல் விட்டது,எனக்கு வருத்தமாகவே இருந்தது. கை கொள்ளாமல் அத்தனைபெரிய பார்சலை வைத்துக்கொண்டிருப்பதால் அவளால் பொத்தானை அழுத்தமுடியவில்லையென்றால்  அது..,அவளுடைய  பிரச்சினை!அதை மற்றவர்கள் மீது அவள் சுமத்தக்கூடாது.


எங்கள் இருவரையும் சுமந்தபடி மூன்றாம் தளத்தை நோக்கி லிஃப்ட்,உயரத்தொடங்கிய ஒரு சில விநாடிகளிலேயே 

அந்தப் பெண்ணின்நாகரிகமற்ற போக்கை எண்ணி நான் குமுறத்தொடங்கியிருந்தேன். லிஃப்ட் நின்று அதன் கதவும் திறந்து கொண்டதும் ஏதோ ஒரு திடீர் மனஎழுச்சியால் நான்காவது பொத்தானிலிருந்து நாசமாய்ப்போன அவளதுஒன்பதாம் பொத்தான் வரை உள்ள எல்லாப்பொத்தான்களின் மீதுமே,கையை வைத்து வேகமாக அழுத்தினேன் நான். ஒன்பதாம் பொத்தானின்விளக்கு ஏற்கனவே ஒளிர்ந்து கொண்டிருந்தது.

‘’உனக்கு இதுதான் சரிப்பட்டு வரும், எல்லாத்தையுமே அழுத்திட்டேன் உனக்காக”

இந்தச்சொற்களோடும், எல்லாப்பொத்தான்களிலும் ஒளிர்ந்துகொண்டிருக்கும் விளக்குகளோடும் அவளை விட்டுவிட்டுலிஃப்டிலிருந்து வெளியேறினேன் நான்.

“இருந்திருந்து இப்படி ...” என்று எனக்குப்பின்னால் அவள்ஏதோ சொல்வது காதில் விழுந்தது. நான் திரும்பிப்பார்த்தபோது கையில் வைத்திருந்த பெரிய பார்சல் நழுவி விடாமல்  இறுகப்பற்றியபடி,தன் கைப்பையிலிருந்த சாவியை எடுக்க அவள்போராடிக்கொண்டிருந்தது தெரிந்தது. 


பொதுவாக நான் மூன்றாம் தளத்தில் இறங்கும்போது லிஃப்டில் எவரேனும் இருந்தால் - நான் வெளியேறும் சமயம், கதவைமூடுவதற்கான பொத்தானை அழுத்தி விட்டுப் போவது என் வழக்கம். இரண்டாம்தளத்தில் இறங்குபவர்களும் கூட என் பொருட்டு இரங்கி அதே போன்றசெயலைச்செய்வார்கள். அடுத்தாற்போலத் தானாகவே கதவுஅடைத்துக்கொண்டு விடும் என்றாலும் அதற்கு வெகுநேரம் பிடிக்கும். சில நேரங்களில் கதவே உடைந்து விட்டதோ என்று கூடஆச்சரியப்படத் தோன்றும். மாறாகக் கதவை மூடுவதற்கானபொத்தானை நாம் அழுத்தி விட்டால் அது உடனடியாகஅடைத்துக்கொண்டு விடும்.


கதவு தானாகவே அடைத்துக்கொள்ளும் வரை காத்திருக்கும் பொறுமை , லிஃப்டின் உள்ளே இருப்பவர்களில் எவருக்கும் இருக்காது என்பதால்,லிஃப்டிலிருந்து வெளியேறுபவர்கள் வெறுமே போய்விடாமல்கதவடைக்கும் பொத்தானை அழுத்திவிட்டுப் போவதென்பது ஒருநாகரிகமான செயலாக இருந்தது. 

உங்களுக்கு நன்றி 

’  நன்றி

‘நல்ல காரியம் செய்தீர்கள்’ 

என்பது போன்ற வார்த்தைகள்அப்போது இயல்பாகவே பரிமாறிக் கொள்ளப்படுவதுண்டு.


எல்லாப் பொத்தான்களையும் ஒளிரவிட்டபடி அந்தப்பெண்மணியைப் பழிதீர்த்துக்கொண்டிருந்த நான் வேண்டுமென்றே கதவை அடைக்கும்பொத்தானை மட்டும் அழுத்தாமல் விட்டு விட்டு விரைந்தேன்.கதவுவிரியத் திறந்து கிடந்ததால் அவளை  முழுமையாய்ப்பார்க்க முடிந்தது.  இப்போது கையிலிருந்த பார்சல் சுமையோடு , சாவியை எடுப்பதற்கும் அவள் போராடிக்  கொண்டிருந்ததால் கதவை அடைப்பதற்கானபொத்தானை அழுத்துவதற்கு அவள் நிச்சயம் கஷ்டப்பட வேண்டியிருக்கும். இல்லாவிட்டால் அவள் அடுத்த தளத்தை அடையும்வரையிலும் கூட அந்தக்கதவு மூடிக்கொள்ளுமா என்பதுசந்தேகம்தான். அந்த இடத்தில் நான் இல்லாமல் வேறு யாராவது ஒருவர்இருந்து, கதவை மூடிவிட்டுப்போகும் அந்தக் கனிவான செயலைசெய்யத் தவறியிருந்தால்-அப்போதும் கூட அவளுக்கு இதே மாதிரி சிக்கல் ஏற்பட்டிருக்கும்தான்;ஆனால் இப்போதோ நான்கு,ஐந்து,ஆறு,ஏழு என்று லிஃப்ட் நிற்கும் எல்லாத்தளங்களிலுமே அவள் அந்தச்சிக்கலை எதிர்கொள்ளவேண்டியிருக்கும்.  ஒவ்வொரு தளத்திலுமே லிஃப்ட் நின்றுபோய் விடும். தேவையே இல்லாமல் கதவும் திறந்து கொள்ளும். அதிலும் அந்த லிஃப்ட் இயங்கும் முறையைப்பார்த்தால் - கதவை மூடும்பொத்தானை அழுத்தியிருந்தாலும் கூட அத்தனை பொத்தான்கள் ஒருசேர அழுத்தப்பட்டிருக்கும் நிலையில் அத்தனை எளிதாக அதுஒவ்வொரு தளத்தையும் கடந்துவிட முடியாதென்றே தோன்றியது. அவள் தனக்குரிய தளத்தை- தன்னுடைய அந்த இலக்கை எட்டுவதற்கு முன்  திறந்த கதவை மூடுவதற்கு ஒவ்வொரு தளத்திலும் திரும்பத்திரும்ப அவள் போராடவேண்டியிருக்கும். அல்லது கதவு தானாக மூடிக்கொள்ளும் வரைஒவ்வொரு தளத்திலும் அவள் காத்திருக்க வேண்டியிருக்கும்.

‘’உனக்கு இதுதான் சரிப்பட்டு வரும், எல்லாத்தையுமே அழுத்திட்டேன் உனக்காக”

எத்தனை அற்புதமான வாக்கியம் அது?

                          ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

                                                 தன்பிறகு லிஃப்டில் ஏறிப் பொத்தான்களை அழுத்தும் சந்தர்ப்பங்களிலெல்லாம் அடிக்கடி அந்த நாளின் ஞாபகம் எனக்குவந்து போகும். குறிப்பான நேர நியதிப்படி செல்லாமலோ அல்லது சிலநாட்கள் லிஃப்டையே பயன்படுத்தாமலோ நான் இருந்ததால் திரும்பவும்அந்தப்பெண்மணியோடு நான் அதில் செல்லவே இல்லை.  சம்பவம் நடந்த குறிப்பிட்ட அந்த  நாளுக்கு முன்பு வரை – அவளை இதுவரை  சந்தித்திருந்ததாகவே எனக்கு நினைவில்லை.  ஆனால் அத்தனை பெரிய பார்சலைக் கையில்வைத்துக்கொண்டு அவள் சாவியைத் தேடிக்கொண்டிருந்ததைப் பார்க்கும்போது அவளும் இந்தக்கட்டிடத்தில்தான் குடியிருக்க  வேண்டும் என்பது உறுதியாகத்தெரிந்தது.


நாங்கள் இருவருமே அங்குதான் குடியிருந்திருக்கிறோம்; ஆனால், ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொள்ளாமலேதான் இதுவரை இருந்திருக்கிறோம். அந்தப்பெண்மணியைப்பற்றிய நினைவுகள் அவ்வப்போது தோன்றுவதால் லிஃப்டில் சகமனிதர்கள் ஏறும்போது , முன்பை விடவும் கூடுதலான பரிவுஎன்னிடம் ஏற்பட்டிருந்தது. அன்று அவளை அளவுக்கு மீறிப் பழி வாங்கிவிட்டதாக எண்ணி, என்னை நினைத்து எனக்கே கூச்சமாகவும் இருந்தது. ஒருக்கால் அப்படிப்பட்ட இயல்பு எனக்கு ஒருபோதும் இருந்ததில்லை என்று என் மீது நானே நம்பிக்கை கொள்ளவும் விரும்பியிருக்கலாம். அன்று நான்அப்படிச்செய்ததற்கான காரணம், அவள் மோசமான வகையில் நடந்துகொண்டது மட்டுமே! லிஃப்டின் உள்ளே ஏறிவரும் மனிதர்கள்எனக்கு நன்றி சொல்லும்போது அவர்கள் எதையும் சுமந்துகொண்டிருக்கவில்லையென்றாலும் கூட ‘நீங்கள் எந்தத் தளத்துக்குப்போக வேண்டும்’ என்ற கேள்வியைக் கேட்க நான் பெரும்பாலும் தவறியதில்லை. அன்றைக்கும் அப்படித்தான் வேறேதோ சிந்தனையில் இருந்தபடிஎந்தத் தளம் ‘என்று கேட்டேன்.

‘தயவு செய்து ஒன்பதை அழுத்துங்கள்’

நானும் தன்னிச்சையாக ஒன்பதை அழுத்தினேன். 

ஆனால் அந்த நபர் –அந்தப் பெண்மணி, அப்படிப்பட்ட ஒருதருணத்துக்காகவே காத்துக்கொண்டிருந்திருந்தது போலத் தொடர்ந்து இப்படிச்சொன்னார். ‘ஏன்..நீங்கள் இஷ்டப்பட்டால் எல்லாப் பொத்தான்களையுமே கூட அழுத்துங்களேன்’


அன்றும் சரி,இப்போதும் சரி…,அந்தப்பெண்மணியின் முகத்தை நான்சரியாகப்பார்க்கத் தவறியிருந்தேன் என்பதை  உணர்ந்து கொண்டேன். ஆனாலும்என்னுடைய பரிவான செயலை சாதகமாக்கிக்கொண்டு அன்று நடந்துபோன சம்பவத்துக்காக அவள் என்னைப் பழி வாங்கும்படி மட்டும்  விட்டுவிடமாட்டேன் என்று நினைத்துக்கொண்டேன். அவளது சவாலை ஏற்று நான்கிலிருந்து எட்டு வரையுள்ள பொத்தான்களை நான் அழுத்தினாலும் அல்லது அப்படி  எந்த அசம்பாவிதமும் நடக்காமல் அவள் ஒன்பதாவது தளத்துக்கு போய்ச்சேர முடிந்தாலும்- எப்படிப்பார்த்தாலும், அந்த இரண்டுவகைகளிலுமே தோல்வியைத் தழுவுவது நானாகத்தான் இருக்கும்என்றுதான் அவள் கணக்குப்போட்டிருக்க வேண்டும். 


‘நல்லது அப்படியே செய்கிறேன்’

என்று சொன்னபடியே பொத்தான்கள் இருந்த பலகை மீது என் கையைவேகமாய் ஓட விட்டேன்.

சரியாக அதே நேரத்தில் லிஃப்ட் நின்று போயிற்று. அவசர வழி ‘ என்று வெள்ளை நிறத்தில் பொறிக்கப்பட்டிருந்த சிவப்புப்பொத்தானை நான் உற்றுப்பார்த்தேன். கதவு திறந்து கொண்டால் கதவைஅடைப்பதற்கான பொத்தானை அழுத்தி விட்டு ‘ இதையும் கூட உனக்காகஅழுத்துகிறேன் பார்’ என்று அறிவித்தபடி சிவப்புப்பொத்தானையும் ஒரு தட்டுதட்டிவிட்டு மூடிக்கொண்டிருக்கும் கதவின் வழியே வெளியேறி விடவேண்டுமென்று நான் எண்ணியிருந்தேன். ஆனால் கதவு ஏனோ  திறந்துகொள்ளவே இல்லை.


‘நாம் இன்னும் மூன்றாம் தளத்துக்குப் போய்ச்சேரவே இல்லை’என்று எனக்குப் பின்னால் இருந்தபடி சொன்னாள் அவள்.  விளக்கு இன்னும் எரிந்து கொண்டுதான் இருந்தது. ஆம்..அவள் சொன்னதுசரிதான்.


‘’ஆனால்...’’என்றபடி தொடர்ந்து பேசினாள் அவள்.

’ லிஃப்ட் என்னவோநிச்சயமாக நின்று போய் விட்டது. சரிதானே? உடைந்துபோயிருக்கலாம்’’


 ஒருவேளை நான் முரட்டுத்தனமாக எல்லாப் பொத்தான்களையும்அழுத்தியபோது ஏதாவது தாறுமாறாகிக் குளறுபடியாகி இருக்கலாம். 


‘‘ உங்களுக்கு அவசரமாகப்போக வேண்டுமென்றால் நீங்கள் எப்போதுவேண்டுமானாலும் இதைப்பயன்படுத்தலாம்’என்று அவளிடம் அந்த அவசர வழிக்கான பொத்தானை சுட்டிக் காட்டியபடி அதை அவள் பார்க்க வசதியாகப் பலகையிலிருந்து விலகி நின்று கொண்டேன்..


’’இல்லை,இல்லை..எனக்கு அப்படி எந்த அவசரமும் இல்லை’’

 என்று கையசைத்து அதை மறுத்து விட்டு லிஃப்ட் சுவர் மீது வசதியாகச்சாய்ந்து நின்று கொண்டாள் அவள். நானும் அவளுக்குப் பக்கவாட்டில் அவ்வாறே சாய்ந்து நின்றுகொண்டேன்.

              ****,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,****




கருத்துகள் இல்லை :

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....