துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

14.11.20

'தடங்கள்' ஒரு பார்வை-தேனம்மை லெக்‌ஷ்மணன்

’தடங்கள்’ மதுரை மீனாட்சி புத்தக நிலைய வெளியீடாக வந்திருக்கும் என் இரண்டாவது நாவல். கடந்த ஐம்பதாண்டுக் காலமாக என் வாழ்வோடு கலந்துவிட்ட மதுரை மண்ணுக்குள்ளும், முப்பத்தாறு நெடிய ஆண்டுகள் என் உயிரோடு பிணைந்து எனக்குப் பரிச்சமாகியிருந்த கல்லூரிப் பணிச்சூழலுக்குள்ளும் கால்பதித்து நின்றபடி- பழகிய களத்தில் எனக்குத் தெரிந்த கதையைச் சொல்ல முயன்றிருக்கிறேன்.மானுட வாழ்க்கை,கதைகளுக்கான கச்சாப்பொருட்களால் நிரம்பித் ததும்பிக்கொண்டிருந்தாலும், படைப்பு மனம் ஏதோ ஓர் அகத் தூண்டுதலால் ஒரு சிலவற்றை மட்டுமே குறிப்பாகத் தேர்வு செய்து கொள்கிறது.‘60களின் இறுதியிலிருந்து 2000த்தின் தொடக்கம் வரை நான் எதிர்ப்பட நேர்ந்த பலதரப்பட்ட வகைப்பாடுகளைச் சேர்ந்த மனிதர்களும், எனக்குள் அதிர்வுகளைத் தோற்றுவித்த பல சம்பவங்களும் என்னுள் பதித்திருக்கும் ’தடங்க’ளே இந்த ஆக்கத்தின் அடித்தளங்கள். நிஜமும் நிழலும் என்னுள் நிகழ்த்திய கண்ணாமூச்சி ஆட்டத்தைத் தொடர்ந்து சென்றபடி ஆட்டத்துக்கான காய்களையும் சூழல்களையும் கலந்தும் மாற்றியும் போட்டபடி இந்தப் புனைவை உருவாக்க முயன்றிருக்கிறேன்.
என் முதல் நாவல் ’யாதுமாகி’யின் இன்னொரு பக்கமாக இதை நான் திட்டமிடவில்லையென்றாலும் இப்போது இதைத் திரும்ப வாசித்துப் பார்க்கும்போது ஒரு தலைகீழ்ப்பரிணாமம் நிகழ்ந்திருப்பதைப்பார்க்க முடிகிறது.’யாதுமாகி’யின் தேவி, அவளது காலகட்டத்தின் நெருக்குதலின் நடுவிலும் தன் முடிவுகளைத் தானே எடுக்கும் தீர்க்கமான பார்வையைக்கொண்டிருந்தாள். அடுத்தடுத்த தலைமுறைகளின் புதுயுகப்பெண்களோ, முடிவெடுக்கப் பிறரைச் சார்ந்திருக்கிறார்கள்;அல்லது என்ன முடிவெடுப்பது என்றறியாதவர்களாய்த் தடுமாறிக்கொண்டிருக்கிறார்கள்.

’தடங்க’ளின் இந்த மையத்தைத் தொட்டுத் தன் வலைத்தளத்தில் எழுதியிருக்கும் என் அன்பு மகள்/மாணவி/கவிதாயினி/கதாசிரியை தேனம்மை லெக்‌ஷ்மணனின் அருமையான அறிமுகக்கட்டுரையை இங்கே பகிர்ந்து கொள்வதில் மகிழ்கிறேன்.இந்த நாவலுக்கு அணிந்துரை எழுதியிருக்கும் மதிப்பிற்குரிய பேராசிரியர் திரு நாச்சிமுத்து அவர்கள் குறிப்பிடுவதைப்போல ஒரு கல்விச்சாலைப்புதினமான [கேம்பஸ் நாவல்]இதனை,’கேம்ப’ஸில் என்னோடு ஊடாடிய என் மாணவியே ரசனையோடும்,ஆழமாகவும் அணுகியிருப்பது என்னை நெகிழ்விக்கிறது.


                             தடங்கள் – ஒரு பார்வை

தேனம்மை லெக்‌ஷ்மணன்

நம்மை நாமே திரும்பிப் பார்த்துக் கொள்ளச் செய்கிறது தடங்கள். சுசீலாம்மாவின் கல்லூரிப் பருவ, பேராசிரியக் காலங்களில் நிகழ்ந்த பல்வேறு நிகழ்வுகள் அழகான மொழியில் எழுத்தாக்கம் பெற்றுள்ளன.

பெண்களுக்குத்தான் எவ்வளவு பிரச்சனைகள் சில இடங்களில் பெண்களே பிரச்சனைகள். நந்தா, சிந்து என்ற இருவரின் கடித உரையாடலாகத் தொடர்கிறது புதினம். அநேகம் சிந்து நந்தாவுக்கு எழுதும் அறிவுசார் மின்னஞ்சல்கள். இது புதினத்தில் புதுவகை உத்தி.

சமூக அக்கறையுடன் சக பெண்களின் மீதான பரிவு, மாணவிகளின் மேலான பாசம், அநீதியை எதிர்க்க இயலாமல் மேலும் தன்னைத்தானே வெல்ல இயலாமல் மடங்கிப் போகும் அவர்களைப் பார்த்து ஆவேசம், சிலரை மாற்ற இயலாத இழிவரல், சிலரின் வாழ்வைப் பார்த்து எள்ளல், சிலருக்கு இழைக்கப்படும் அநீதி கண்டு பொங்குதல் எனப் பல்வேறு உணர்வுகளைப் படைத்துச் செல்கிறார் ஆசிரியர்.

தனித்தனி மனுஷிகளின் கதையை ஒரு விழிப்புணர்வுப் புதினமாக்கி இருக்கும் முறையும் வித்யாசம். ஆனால் எல்லாவற்றிலும் பெண்களின் உணர்வுகளும் உறவுகளும் கலந்த இணைப்புதான் மையப்புள்ளி. சமயத்தில் இவை புனைவா நம் அக்கம் பக்கம் இருப்போரின் வாழ்வியலா என்று எண்ணமிடவைக்கும் வண்ணம் இருக்கிறது இக்கதைகளின் யதார்த்தமும் உண்மைத்தன்மையும்.

திருமணத்தோடு பெண் வாழ்வு முடிந்துவிடுகிறதா? திருமணத்துக்குப் பின்பும் அவள் மேலெழுகிறாளா என்றும் சிந்திக்க வைத்தது. சமூகத்தை விட்டோ, திருமண உறவை விட்டோ, குடும்ப அமைப்பை விட்டோ பெண்ணை அத்யாவசியம் ஏற்பட்டால் ஒழிய, தாங்கொணாத் துயரம் ஏற்பட்டால் ஒழிய வெளியேறச் சொல்லவில்லை ஆசிரியர்.

எவ்வளவுதான் மற்றவர்கள் உதவினாலும் மரபுசார் அடிமையா, அறிவுசார் வாழ்க்கையா என்பதைத் தீர்மானிக்க வேண்டியது பெண்ணே. தன் இக்கட்டுகளைக் களைந்து முளைத்தெழுவது அவள் கையில் மட்டுமே உள்ளது என்பதும் ஆசிரியர் காட்டும் வழி.

குடும்ப வன்முறை, பாலியல் வன்முறை, கருத்தியல் ரீதியான வன்முறை என அனைத்தையும் அலசுகிறது இந்த நாவல். மீனாக்ஷி கல்யாணத்தில் ஆரம்பிக்கும் நாவல் தங்கையின் திருமணத்துக்காக வரும் கள்ளழகர் ஆற்றில் இறங்குவதோடு முடிந்திருக்கிறது. திருமணம்தான் முடிவு என்று எண்ண வைக்கப்படும் பெண் மனமும் அதன்பின் அது நல்லதாகவோ கெட்டதாகவோ முடிந்தாலும் உதவ முடியாத பிறந்த குடும்பத்தின் நிலையும் இதன்மூலம் குறியீடாகக் காண்பிக்கப்படுகிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது.

கல்லூரியில் வருடாந்திரம் மாணவிகள் வைக்கும் பொங்கல், ஹாஸ்டலில் இருக்கும் மாணவிகளைப் பார்ப்பதற்கான நடைமுறை, கல்லூரி வாழ்க்கை, காதல் வாழ்க்கை, இளவயதின் ஏக்கங்கள், துக்கங்கள், முடிவெடுப்பதில் அவர்களின் குழப்பம், திருமண பந்தத்தின் நன்மை தீமைகள், நடுநடுவே இலக்கியப் பந்தி, கூட வேலை செய்யும் பெண்களின் மனோபாவங்கள், பேச்சுகள், நடவடிக்கைகள், பல்கலைக் கழக மானியக் குழு ஊதியத்துக்கான ஆசிரியர் போராட்டம், அதோடு நித்யகன்னி, கன்யாகுமரிக்கான அழகான விளக்கங்கள் என்று அசரவைக்கிறார் ஆசிரியர்.

கணவனே கண் கண்ட தெய்வம் என்று வீட்டு வேலை செய்யும் லட்சுமி, கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் என்று வாழும் சோலையம்மா, சந்தேகக் கணவனோடு பல்லாண்டுகள் வாழும் சித்ரா, ஒவ்வாக் காதலில் மாட்டி உயிரை மாய்த்துக் கொள்ளும் வாணி, இன்ஃபாக்சுவேஷனின் சிக்கித்தவித்த மாலா, வாழ்க்கைச் சிக்கலுக்குத் தீர்வு தேடி வந்த ஆராய்ச்சி மாணவி முத்தரசி தனபாலன், குடும்ப வன்முறையில் உயிரை இழக்கும் ரமணி, அமிலம் ஊற்றப்பட்டு இறந்த புதுமைச் செல்வி, பாலியல் கொடுமையில் இருந்து தப்பித்துத் தன்னை உயர்த்திக் கொண்ட ஹேமா , ஆசைக்கணவனைத் தனித்திருக்க விட்டு மதபோதகரான ஸ்டெல்லா, எப்போதும் தன்னை இறுக்கமாக வைத்துக் கொள்ளும் கலா என இருண்மையான பக்கங்களை மட்டுமல்ல தன் வாழ்க்கையைத் தான் நினைத்தபடி சீராக நடத்தும் கனகா, அதேபோல் சில ஆண்டுகளே திருமண வாழ்க்கை நீடித்தாலும் இனிமையாக வாழ்ந்த ஜமீலா, தனக்கு விதிக்கப்பட்ட வாழ்க்கையை இயல்பாக அழகாக எடுத்துக்கொண்ட தாழை, கோலம் மாறினாலும் காதல் மாறாது என்பதற்கு எடுத்துக்காட்டாய் வாழும் மல்லிகா தினகரன், தன்மேல் சுமத்தப்பட்ட துறவைத் தைரியமாகத் துறந்து வெளிவந்த லீமா, கர்மயோகியான பத்மா, தனித்து வாழ்ந்து எல்லோரையும் கவரும் கல்யாணி, உழைக்கும் பெண்களுக்காக உழைக்கும் நந்தா, ஆதரவற்றோருக்கு இல்லம் அமைக்க முயலும் நிருபமா, அனைவரது வாழ்க்கையையும் சீர்தூக்கிச் செதுக்கும் சிந்து என எத்தனை விதமான பெண்கள் நம்மைச் சுற்றிலும் என வியக்கவைக்கிறார் ஆசிரியர்.

உன்னதம், உதாசீனம், பொறுமை, பெருமை, இருண்மை, தெளிவு எனப் பெண்களின் மனோபாவங்களை சுசீலாம்மா படைத்துச் செல்லும்விதம் அற்புதம். 

அதேபோல் சந்தேகப்படும் மனநிலை உள்ள  வளர்தலும் தேய்தலுமான கலைகள் உள்ள) சந்திரன், வன்கொடுமை செய்யும் ரமணியின் கணவன், மகன் மேல் உள்ள பிரியத்தைத் தவறாகப் புரிந்து கொண்டு மனைவியை வெட்டும் சோலையம்மாளின் கணவன், பெண்களைப் பயன்படுத்திக் கொள்ளும் கட்டியங்காரன் தனபாலன் ஆகிய நெகட்டிவ் கேரக்டர்கள் மட்டுமல்ல ,மனைவிக்காக விட்டுக்கொடுத்துப் போகும் ஃப்ரான்ஸிஸ், விரும்பிய பெண்ணைத் துணையாக அடைய தியாக மனப்பான்மையுடன் வரும் தினகரன், மகள்களின் மனநிலையைப் புரிந்துகொண்டு அவர்கள் விருப்பம்போல வாழ அனுமதிக்கும் நந்தா, நிருபமாவின் தந்தைகள் என ஆண்களின் அக புற உலகத்தையும் படைத்து நம்மை அதில் உலவச் செய்திருக்கிறார் ஆசிரியர். 

ஆணால் கவரப்படும்போதே ஆணைக் கவரவிரும்புகிறாளா பெண், திருமணத்தை நோக்கி மட்டுமே பெண் வாழ்க்கை செல்கிறதா, பெண்ணின் உயர்வும் வெற்றியும் சமையல் அது தொடர்பான வேலைகளையும், குடும்ப வாழ்க்கையையும் குழந்தைப் பேறையும் ஒப்புநோக்கியே சீர் தூக்கப்படுகிறதா, வெளி உலகம் காணாத பெண் என்பவள் உயர்வானவளா எனப் பல்வேறு அலைகளை எழுப்பியபடி இருக்கிறது வெகு அடர்த்தியான இந்நாவல்.  

கல்வியும் உத்யோகமும் தற்சார்பும் உயர்வாழ்க்கைத்தரமும் பெற்றபின்பும் பெண் என்பவள் வெற்றியடைந்திருக்கிறாளா இல்லையா என்று யோசிக்க வைப்பதே இந்தப் புதினத்தின் வெற்றி.

நூல் ;- தடங்கள்
ஆசிரியர் :- திருமதி எம். ஏ. சுசீலா அவர்கள்
பதிப்பகம் :- மீனாட்சி புத்தக நிலையம். 
விலை :- ரூ 225/-

கருத்துகள் இல்லை :

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....