வள்ளியம்மாள்
ஓய்வு பெற்ற பேராசிரியை
இயல்பாகவே அறிவும் தேடலும் துடிப்பும் சமுதாய அக்கறையும் உள்ள பெண் கணவனால் புறக்கணிக்கப்பட்டு, மகளால் காயப்பட்ட வலியையும் தாங்கி தனது இலக்கைத் தொடர்தலே இந்நாவல். மருத்துவப் பின்னணியில் எழுதப்பட்டிருந்தாலும் வாசகர்களால் கதையின் மையப்புள்ளியில், இணையமுடிவது படைப்பின் தனிச்சிறப்பு.
‘அஞ்சு திங்களில் முஞ்சுதல் பிழைத்தும்’ என்ற இலக்கியவரிகளும் அதற்கான சித்திரமும் குழந்தைப் பேறு, குழந்தை இன்மை பற்றிப் பேசப் போகிறதோ என்ற எண்ணத்தை ஊட்டினாலும் தொடக்கமே அதை மாற்றிவிடுகிறது.
‘‘எப்பவுமே ஒரு விஷயத்தை அனுபவிக்கிறவளா மட்டுமில்லாம அதை உருவாக்கிறவளா இருக்கணும்கிற ஆசை’’ என தொடக்கமே ஆர்வத்தைத் தூண்டுகிறது. அந்த ஆசைக்கான வித்து, நிறைவேற ஏற்படும் நெருக்கடிகள், காயங்கள் என விவரிக்கும் வேளையில் மானுடப் பிறப்பின் மேன்மையை உணர்த்துவதுடன் ஊடே சரடாக தனித்து வாழ்வைச் சந்திக்கும் தாயின் வலியும் இணையாக, இழையாகத் தொடர்கிறது. வாழ்வின் பல தருணங்களில் ஆதிக்கத்தில் சிக்கித் தன்னைத் தொலைப்பவர்களால், தன் உழைப்பு, பாசம், அக்கறை அங்கீகரிக்கப் படாததால் ஏங்கும் பெண்களால், சாதிக்கத் திறமையும் வாய்ப்பும் இருந்தும் முடங்கும் முடக்கப்படும் பெண்களால் எளிதில் கரையமுடிகிறது. இந்தப் பிறவியை மேன்மையுறும்படி வாழ்ந்தோமா என்ற கேள்வியையும் எழுப்புகிறது.
மருத்துவர் காயத்ரி, மீண்டும் ஒரு மருத்துவர் காயத்ரி, மீரா என அறிமுகம் நிகழும் போது வாசிப்பில் வரும் தடை சவாரஸ்யம் தருகிறது. மீராவின் குரல், சுமதியின் குரல், காயத்ரியின் குரல், தினகர் குரல், வித்யாவின் குரல், முத்தாய்ப்பாய் பாட்டியின் குரல்.
‘‘என்னையும் அறியாம எங்கம்மா சொன்ன சிலவார்த்தைகள் அவங்களோட குரலிலேயே காதுக்குள்ளேயும் மனசுக்குள்ளேயும் கேட்கும். உடனே spring மாதிரி நிமிர்ந்திடுவேன்.’’
‘‘பிறந்ததிலேருந்து உன் மனசிலே சதா சர்வகாலமும் விடாம கேட்கிற உட்குரல்’’ என படைப்பாளரின் குரல் என்று பல குரல்கள் Multiple Voices.
தேடலை முழுமை நோக்கித் தொடரும் மருத்துவர் காயத்ரி, தேடலுடன் கனவுகளுடன் துள்ளலாய் சேவையைத் தொடங்கும் இளைய காயத்ரி, என்ற இரு காயத்ரிகள், நிறுத்தி நிறுத்தி சிந்திக்க வைத்துத் தொடரும் தடைகள், மெலிதான ஒரு இருண்மை, கத்தரித்தது போல அமைந்த episodes, அதில் ஒரே ஒரு உரையாடல், நீண்ட சிந்தனை என அமையும் பத்திகள், விளக்கமற்ற சின்னஞ் சிறு உரையாடல்கள் விவாதங்கள், சட்சட் எனத் தாவும் காட்சிகளின் வேகம், அடுக்கி கலைத்து கதை சொல்லப்பட்டாலும் சோர்வு தராத நடை, சம்பிரதாயமற்ற கதை சொல்லல், முடிக்காமலே தொடரும் அடுத்த episode, வலுவான dialogues, புதிரை அவிழ்க்கத் தொடரும் கதையில் மறைக்கப்படும் சிறு பகுதி, அதைப் பூடகமாய் பின்னால் வெளிப்படுத்தும் உத்தி,
‘‘உன் வாழ்நாளிலே ஒரு நாள் கூட வருத்தப்படக்கூடாது. ஒவ்வொரு சிருஷ்டியும் ஏதோ ஒரு நோக்கத்தோட தான் இந்த மண்ணுக்கு வந்து சேருது. ஆனா அதை சரியா அடையாளம் கண்டுக்காம திசைமாறி தடுமாறி இந்தப் பிறவியையே வீணாக்கிடறவங்கதான் ஜாஸ்தி. உன்னோடது எதுங்கிறதை நீ சரியா கண்டுபிடிச்சிருக்கே, உண்மையாகவும் இருந்திருக்கே’’ என அஞ்சு திங்களில் முஞ்சுதல் பிழைத்த பிறவியின் பயனைச் சுட்டும்போது முடிவு தொடக்கத்தைத் தொடுவது புதிய உத்தி. நல்ல message.
மொத்தத்தில் very crisp & cute. ஒரு மணி நேரத்தில் வாசிக்க முடிகிறது. தொட்டால் வைக்க முடியாதபடி சின்ன chapters, சிறு சிறு பத்திகள், நிகழ்வுகள் ஆங்காங்கே முடிவுறும் விவாதங்கள் என அலுப்போ சோர்வோ தட்டுவதில்லை என்பது படைப்பின் வெற்றி.
“Retirementங்கிறது நமக்கு நாமே ஏற்படுத்திக்கிறதுதான். ஒரு சில விஷயங்களிலே இருந்து selectiveஆ விலக்கிக்கிட்டு எனக்கு நானே ஒரு கடிவாளம் போட்டுக்கிட்டேன். தொழில்லேருந்து மட்டும்தான். ஒரேயடியா துறையிலே இருந்தே இல்லை”
”நான் எல்லாத்தையுமே முழுசா உதறி இருப்பேன். என்னோட துறப்புக்களில் ரொம்ப selectiveஆ இருந்தேன்.”
“அந்த ஆகாயம் எனக்குப் பிடிச்ச ஆகாயம். என்னை ஒரு நாளும் கைவிடாத ஆகாயம். ஒரு கட்டத்துல அதுக்கும் பூமியோட யதார்த்தத்துக்கும் ரொம்பதூரம்னு தெரிஞ்சபோது யதார்த்தமே வேண்டாம்னு அதை விலக்கிட்டுப் போயிட்டேன்” என மனம் தொட்ட இடங்கள் பல.
”ஓட்டிலிருந்து தானா கழண்டு விழற புளியம்பழம் மாதிரி” என கதை முழுக்கத் துறக்கத் துடிக்கும் உணர்வும் இழையோடுகிறது. பிறப்பு, துறப்பு என ஒரு முரண். பல்வேறு தடைகளைத் தாண்டி வாழ்வில் புகும் மனிதப் பிறவி பத்து மாதம் தாங்கிய தாய் உடலை புளியம்பழ ஓடு போல துறக்கிறது. இடர் கடந்து தான் கண்ட கனவு வாழ்வு கைவசப்படும் போது அதைத் துறந்து உறுதியுடன் பயணிக்கும் பெண்ணின் தனித்துவம்.
மனதைத் தொட்டதால், உணர்வுகளை எழுப்பியதால், நிதானித்து சிந்திக்க வைத்ததால், உள்ளிருக்கும் உண்மை உறைத்ததால் பல கேள்விகளுக்குப் பதில் கிடைத்ததால் சிறுகதையாய் விமர்சிக்கவோ, எழுதவோ தோன்றவில்லை. ஒன்றிவிட்டேன்.
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக