துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

18.2.15

அமைதியான நதியினிலே....

ஆலப்புழை-கோட்டயம் நீர்வழிப்பாதை உலகப்புகழ் பெற்றது.
வீதிகளுக்குள் புகுந்து செல்லும் வெனிஸ் நகரத்துப்படகுகளைப்போல இந்தப்பாதையும் பல சின்னஞ்சிறு கிராமங்களை ஊடறுத்துச் செல்வதால் ‘இந்தியாவின் வெனிஸ்’என்ற பெருமையும் இதற்கு உண்டு.
வெனிஸ் போலவே கிராம வீடுகளின் முன்புறக்காயலில் நிறுத்தப்பட்டிருக்கும் சிறு நாட்டுப்படகுகளையும் அவற்றை லாவகமாக ஓட்டிச்செல்லும் மக்களையும் இங்கேயும் மிகவும் சாதாரணமாகக்காண முடியும்.

வேம்பநாட்டுக்காயல் என்று அழைக்கப்படும் இந்த உப்பங்கழிகளில் கேரள அரசால் நடத்தப்படும் பொதுப்போக்குவரத்துப்படகுகள் ஆலப்புழை-கோட்டயம் இடையே உள்ள சிற்றூர் மக்களின் அன்றாட வாழ்வோடு பின்னிப்பிணைந்து விட்ட ஒரு பெரும் வரம்.
பாதையின் நடுவிலுள்ள சிற்றூர்களில் சிறுபடகுத் துறைகளில் காத்திருக்கும் மக்கள்
[படகு ஸ்டாண்ட்!]

எளிய கட்டண வசதியோடு கூடிய இந்தப்பொதுப்படகுகளைத் தவிர காயலில் உல்லாசப்பயணம் செல்வதற்காகவே இஞ்சின் பொருத்தப்பட்ட அதிவேகப்படகுகள், காயலிலேயே தங்கியிருந்து அதன்  சுற்றுப்புறக்காட்சிகளை ஓரிரு நாட்கள் காணும் வகையில் - அழகழகான தோற்றங்களில் வடிவமைக்கப்பட்டு வீட்டில் வசிப்பது போன்ற அனைத்து வசதிகளையும் அளிக்கும் ‘வீட்டுப்படகுகள்’ ஆகிய பலவும் காயலில் உண்டு. வீட்டுப்படகுகளில் சிறியதைத் தேர்ந்தெடுத்துத் தங்கள்  புதுமண வாழ்வைக்கொண்டாடும் மண மக்களையும் காண முடியும்.


வித விதமானபடகு வீடுகளின்
அணிவகுப்பு


ஆலப்புழை படகுத் துறையிலிருந்து கோட்டயம் சென்றடைய பொதுப்போக்குவரத்துப்படகு  எடுத்துக்கொள்ளும் நேரம் 2 முதல் இரண்டரை மணி நேரம்.






முதலில் குறுகலாகத் தொடங்கும் நீர்ப்பாதை , பயணம் ஆரம்பித்த அடுத்த கால்மணிநேரத்திலேயே அகன்ற பெருவெள்ளமாய் விரிந்து இருமருங்கும் வாழையும் தென்னையும் செறிந்திருக்கும் கேரளஎழிலைக் கண்ணுக்கு விருந்தாக்குகிறது.



பயணத்தின் கடைசிக்கட்டமான....இறுதி அரை மணிநேரம் போக்குவரத்துப்பொதுப்படகுகளைத் தவிர வேறு எதையும் காண முடியாது;காரணம்,நீரில் படர்ந்து விரவிக்கிடக்கும் ஆகாயத் தாமரைகள்....!அவற்றினூடே இந்தப்படகுகளும் ஒரு சில நாட்டுப்படகுகளும் மட்டுமே ஊர்ந்து செல்கின்றன.

நீர்ப்பரப்பு மறைந்து படர்தாமரைப்பாதை
விரிகிறது...


தாமரைக்கடியில் மறைந்து கிடக்கும் தண்ணீர்
[’’மணிப்பூ ஆடை போர்த்தி’’..-சிலம்பு]

ஆகாயத் தாமரை வீதியில் அனாயாசமாகச்செல்லும் படகு



பிரவாகமான நீர்ப்பெருக்கைக்கடந்து படர்தாமரைக்குவியலில் நீந்துவது போல் ஊர்ந்து செல்கையில் கண்ணில் படும் பலவகைப்பட்ட் பறவையினங்கள் காட்சிப்புலனுக்கு மேலும் விருந்தளிக்கும்....


உறுமீன் வருமளவும் வாடியிருக்கும் நாரை




அண்மையில் குறிப்பிட்ட இந்த நீர்வழிப்பாதையில் ஆலப்புழையிலிருந்து கோட்டயம் வரை பொதுப்போக்குவரத்துப்படகு ஒன்றில் பயணம் செய்தபோது

 நான் எடுத்த புகைப்படங்கள் இவை.....

காயலின் நடுவே ஒரு சிறு காடு

படகிலிருந்து இறங்கியபின் செல்லும் கரை ஓரப்பாதை

3.2.15

சிக்கிமை நோக்கி...-1


 

சாகித்திய அகாதமியின் அழைப்பின் பேரில் 
சிக்கிம் மாநிலத்திலுள்ள காங்டாக் நகரில் நிகழும் 
அனைத்திந்திய சிறுகதைத் திருவிழாவில்[பிப் 7,8] பங்கேற்று என் சிறுகதை ஒன்றை
[ஓர் உயிர் விலை போகிறது] 
இந்தியில் வாசித்தளிப்பதற்காக செல்கிறேன்.
விமானப்பயணம் தங்குமிடம் அனைத்தும் அவர்களின் ஏற்பாடு.

இந்தி பஞ்சாபி குஜராத்தி மலையாளம் தமிழ் தெலுங்கு உருது வங்காளம் கன்னடம் கொங்கணி எனப்பல இந்திய மொழிக்கதைகளும் 4 அமர்வுகளில் ஆங்கிலம் அல்லது இந்தியில் வாசிக்கப்படவிருக்கின்றன. 

இலக்கியத்தின் பல முகங்கள்...
நாட்டின் பலதரப்பட்ட எழுத்தாள அறிமுகங்கள்...


எல்லாவற்றையும் விட 
எனக்கு அறிமுகமில்லாத நம் தாய்நாட்டின் வடகிழக்கு வானம்,,,,,,
எனக்குப் புத்தம் புதியதான அந்த பூமி அன்போடு இலக்கியத்தோடு அழைக்கிறது... தன் கண்கொள்ளா இயற்கை வனப்புக்களோடும்தான்....

பூடான்,நேபாளம்,சீனா ,பங்களா தேஷ் எனப் பல  அண்டை நாடுகள் சூழ அமைந்திருக்கும் அழகிய சிறிய மாநிலம் சிக்கிம்.இந்தியக்குடியரசுடன் கோவா இணையும் வரை நாட்டின் மிகச்சிறிய மாநிலம் அதுதான். 

தலைநகரம் காங்டாக்  செல்ல கொல்கத்தா சென்று அங்குள்ள பாக்தோக்ரா அல்லது சிலிகுரியிலிருந்து சாலை வழி வாடகைக்காரிலோ பேருந்திலோ செல்ல வேண்டும். பனி பொழியும் இமயக்காட்சி.....அருகில் டார்ஜிலிங் கஞ்சன் ஜங்கா எந்தக்காட்சிகள் காத்திருக்கிறதோ....எவற்றைக்காண வாய்ப்புக்கிட்டுகிறதோ பார்ப்போம்....

கோவையிலிருந்து பிப். 5 கிளம்பி கொல்கத்தா
6 கொல்கத்தாவிலிருந்து போக்தோக்ரா-அங்கிருந்து காங்டாக்
7,8 நிகழ்வுகளும் ஊர் சுற்றலும்
9,10 திரும்பும் பயணங்கள்...

நல்ல பயண அனுபவத்தையும் படங்களையும்  விரைவில் பதிவேன் என எண்ணுகிறேன்...








LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....