துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

23.6.16

உயிர் உருகும் ஓலம்....

பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட ஓர் இளம் பெண்ணின் உயிர் உருகும் ஓலம்…!!

வாஷிங்டன் போஸ்டில் வெளியான 
வன்முறைக்கு ஆளான அந்தப்பெண்ணின் கடிதத்தை  , [‘You took away my worth’இடையிடையே தன் கருத்துக்களோடு சேர்த்து இன்றைய தினமணியில் கட்டுரையாக்கித் தந்திருக்கிறார் ஓய்வு பெற்ற நீதியரசி திரு பிரபாஸ்ரீதேவன். மனச்சாட்சி எஞ்சியுள்ளோர் தப்பவிடக்கூடாத கட்டுரை இது,


இது கடிதம் அல்ல; இதயம்

கணவனே ஆயினும் மனைவி.விரும்பாத தருணத்தில் அவளை உறவுக்கு அழைப்பது தார்மீகப்பாலியல் வன்முறை போன்றதே என, அண்மையில் ஒரு சர்ச்சை படித்தேன்...
பொதுமகளாக்கப்பட்டோருக்கும் கூட இது பொருந்தக்கூடியதே.
அந்தப்பிஞ்சுப்பெண் எப்படிப்பரிதவித்திருப்பாள் அவள் வாழ்வே
​ அவளுக்கு ஓர் இருள் கனவாக கொடூர மிரட்டலாக அல்லவா இருக்கும்...அந்தநிலையில் அவனை மன்னிக்கும் உள்ளம்  எப்படி வாய்த்தது...விளங்காத புதிரேவாழ்க்கையும் அவரவர் உள்ளமும்.


//இந்தப் பெண் அந்த நேரத்தில் தங்கையுடன் பார்ட்டி செல்கிறார், மதுவும் அருந்துகிறார். உடனே அதான்... என்று சொல்லக்கூடாது. மது அருந்துவது பலருக்கு வழக்கம் இங்கேயே... குடி குடியைக் கெடுக்கும் என்று நாம் கரடியாக கத்தினாலும். அமெரிக்காவில் அது மிக சகஜம். ஒரு பெண் மது அருந்தினால் அவரை எல்லோரும் அணுகலாம் என்று பொருளல்ல. இதை கருத்தில் வைத்து மேலே படிக்கவும்.//

என்ற அந்த முன்னுரைக்காகவே கட்டுரையாளருக்கு  ஒரு மலர்க்கொத்தை அளிக்கத் தோன்றுகிறது.

காரணம் உடனே கலாசாரக்காவலர்கள்..அவள் ஏன்  அங்குபோக வேண்டும்..ஏன் மது அருந்த வேண்டும் ,​ ....எல்லாம் இந்தப்பெண்கள் இப்படிச்செய்வதால்தான் என்ற உளறலைத் தொடங்கி விடுவார்கள்

 [ பெண்கள் ஜீன்ஸ் அணியக்கூடாது என்ற ஜேசுதாஸ் போல,- செலிப்ரிடி என்றால் எதுவும் பேசலாம் போலிருக்கிறது- 

தில்லியின் முனீர்க்காவில் ஓடும்  பஸ்ஸில் மானபங்கம் செய்யப்பட்ட நிர்பயாவை , இரவில் , அவள் ஏன் அப்படிப் போகவேண்டும் என்று கேட்டதுபோல..]


ட்டுரையில் என்னை உறைய வைத்த வரிகள்...

//அவன் நினைத்தானாம் எனக்கு விருப்பமாக இருந்தது என்று. எனக்குப் பிடித்ததாம். இன்றும் அந்த உணர்வை விவரிக்க என் வசம் வார்த்தைகள் இல்லை...என்னைப் புரட்டிப் போட்டு என் ஆடைகளை கழற்றி, இலை முட்களையும் விரல்களையும் என்னுள் நுழைத்து ... நான் எப்படி நிரூபிக்கவேண்டும்? எனக்கு அது பிடிக்கவில்லை என்று.//

/அவர் தந்தை கூறுகிறார்: இருபது நிமிட ஆக்ஷனுக்கு இத்தனை பெரிய தண்டனையா?//என்று....
பாவம் மகனின் ஒலிம்பிக்ஸ் தவறிய சோகம் அவருக்கு...

அவளின் வாழ்க்கையே திசை தடுமாறியதற்கு யார் விடை சொல்வது?

இன்னும் கூட அந்த   மனநிலையிலிருந்து விடுபட முடியாத தத்தளிப்புடன் இருக்கிறேன்..



மூலம்;



21.6.16

’’எதனில் தொலைந்தால்...’’

பல மாதங்களாக நான் என்னையே தொலைத்தபடி அமிழ்ந்து கரைந்து கொண்டிருக்கும் அற்புதமான  பாடல்.இது...!
.



இரவின் அமைதிக்குள் கரைந்தபடி இதில் மட்டுமே தோய்ந்து,கரைய முடிந்தால்  அமிர்தம் .என்ன அதற்கு மேலானதும் கூட வாய்க்கும்
.[அமிர்தம் என்னும்  அந்தச்சொல்லுக்கு சித்ரா தரும் மிக இலேசான அழுத்தமே  காதில் தேன் பாய வைக்கிறதே.]

காதலுக்கு மட்டுமே பொருத்தமானதில்லை என்பதே இப்பாடலின் தனித்துவம். உண்மையானநேசம் எதன் மீது எவர் மீது இருந்தாலும்-
அது,பக்தி பாவனையாகவே இருந்தாலும் ,கூட முற்றிலும் இயைந்து வரும் இந்தப்பாடலை  மனம் தோய்ந்து ஒரு தவம் போலப்பாடியிருக்கிறார் சித்ரா....
[அதிலும் ‘’எதை நான் கேட்பின் ‘’என உச்ச ஸ்தாயியில் எடுத்து விட்டு.- அதே வேளையில்  அந்தத் தருணத்துக்கான நெகிழ்வையும் ,குழைவையும் பரவசச் சிலிர்ப்போடு  வெளிக்காட்டியிருக்கும்,சித்ராவின் ஒட்டு மொத்த அர்ப்பணிப்பு. ஒரு  SUBLIMITY!!  உன்னதக்கணத்தின் உச்சம் தீண்டுவது. ...]

இருளிலிருந்து ஒளியை நோக்கியும்
பொய்மைகளிலிருந்து வாய்மை நோக்கியும்
மரணத்திலிருந்து நித்தியத்துவம் நோக்கியும்
நம்மை நகர்த்தும் அஸதோமா ஸத்கமய மட்டுமல்ல....

தாகூரின் கீழ்க்காணும் வரிகளையும் இந்தப்பாடல் நினைவுபடுத்தத் தவறவில்லை..

“I thought that my voyage had come to its end at the last limit of my power, that the path before me was closed, that provisions were exhausted, and the time come to take shelter in a silent obscurity, but I find that thy will knows no end in me, and when old words die out on the tongue, new melodies break forth from the heart, and where the old tracks are lost, new country is revealed with its wonders.

என் சக்தியின் கடைசி எல்லையில் 
என் பயணம் 
முடிவுக்கு வந்து விட்டது
என் முன்னிருந்த பாதை மூடி விட்டது
சரக்கெல்லாம் தீர்ந்து 
மௌனமான மறைவில் ஒதுங்கவேண்டுமென்று நினைத்தேன்..
ஆனால்...
உன் எண்ணம் வேறு என்பது...
இப்போது புரிகிறது..
பழைய வார்த்தைகள் நாவில் மடிகையில்...
புதிய ராகங்கள் இதயத்திலிருந்து வெடிக்கின்றன..
பழைய பாதைகள் மறந்து போகையில் 
புதிய தேசம் புலனாகிறது...
[கீதாஞ்சலி மொழியாக்க வரிகள்;
எழுத்தாளர் வாஸந்தியின் 
                                                மனிதர்கள் பாதிநேரம் தூங்குகிறார்கள் நாவலிலிருந்து].

 வரிகள் எளியவைதான்...ஆனால் அதை
மறக்க முடியாத ஒரு ஆன்மிக அனுபவமாக்கிய சித்ராவின் குரலுக்கு நன்றி...

இன்றைய சந்தைக்கூச்சல்  மந்தை இரைச்சல் பாடல்களுக்கு இடையில்  வாராது வாய்த்த மாமணியாய் இதைத் திரையில்  ,இடம் பெற வைத்த மணிரத்னத்துக்கும் ரஹ்மானுக்கும் கூட....

இந்தப்பாடல் பாடியது  குறித்தசித்ராவின் அனுபவம்...
https://youtu.be/r_5Wk16jakA



LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....