துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

26.1.09

''பத்ம பூஷண்''ஜே.கே.



தனது அன்பு வாசகர்களால் ஜே.கே. என்று பாசத்தோடும்,மரியாதைகலந்த பிரமிப்பு உணர்வோடும்,(சற்று பயத்தோடும் கூடத்தான்) அழைக்கப்படும் நவீன இலக்கியத்தின் நிராகரிக்கப்பட முடியாத ஆளுமைகளில் ஒருவர் திரு ஜெயகாந்தன்.
இந்திய நாட்டின் 60ஆம் ஆண்டுக்குடியரசு தினமான இன்று --26.01.09--அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ள ''பத்ம பூஷண்''விருது,ஜே.கேயை விடவும், அவரை நேசிக்கும் ஆயிரக்கணக்கான வாசகர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்திருக்கும் என்பது நிச்சயம். காரணம்,ஜே.கே.,என்றுமே விருதுக்காக எழுதியது இல்லை; அவற்றைப் பொருட்படுத்தியதும் இல்லை; அவை மட்டுமே அங்கீகாரம் என்று கருதியதும் இல்லை; அதே நேரத்தில் அவை தன்னை நாடி வருகையில் முரட்டுப்பிடிவாதம் காட்டி அவற்றை ஒதுக்கி விடவும் இல்லை. ''மெய்த்திருப்பதம் மேவென்ற போதினும் இத்திருத்துறந்து ஏகென்றபோதினும் சித்திரத்தின் அலர்ந்த செந்தாமரை.....''போல இராமனின் முகம் இருந்ததாகக்காட்டும் கம்பரின் வாக்கைப்போன்ற மன நிலை வாய்க்கப்பெற்று விட்ட இலக்கிய ஞானி அவர்.

தான் உணர்ந்து தெளிந்தவற்றை...,தான் கொட்ட நினைத்ததைக்கொட்டிவிட்டு ஒரு கட்டத்திற்குப்பிறகு எழுதுவதை நிறுத்தியும்,குறைத்தும் கொண்டவர் அவர்.சுய தூண்டுதலும் ,உண்மையான அக எழுச்சியும் இல்லாத எழுத்துக்களை வாசகர்களின் வற்புறுத்தலுக்காகவோ,பிற எந்தப்புறக்காரணத்துக்காகவோ, படைப்புக்களின் எண்ணிக்கையைக்கூட்டுவதற்காகவோ என்றுமே அவர் கைக்கொண்டதில்லை; எந்தச்சீண்டல்களுக்கும் பணிந்து போய் விடாமல், அகத்தின் கட்டளைக்கு மட்டுமே செவிகொடுக்கும் அரியதொரு படைப்பாளியான ஜே.கேயைப்போன்ற எழுத்தாளரை அபூர்வமாகத்தான் இந்த மண்ணும்,மனிதர்களும் எதிர்ப்படுகிறார்கள்.அவர் காலத்தில் வாழ நேர்ந்ததில் நாம்தான் பெருமை கொள்ள வேண்டும்.

இன்றைய பின் நவீனத்துவ இஸங்களின் அளவுகோல்களால் ஜே.கேயை அளக்க முற்படுவதைப்போன்ற பேதமை வேறெதுவுமில்லை. 'என் எழுத்துக்களை வைத்துத் தங்கள் அளவுகோல்களை அமைத்துக்கொள்ளுங்கள்'என்று விமரிசகர்களிடம் துணிச்சலாகக்குறிப்பிட்ட புதுமைப்பித்தனைப்போல-சுயம்புவாக- எந்த இலக்கண வரையறைக்கும் கட்டுப்படாத காட்டாற்று வெள்ளமாகப்பொங்கிப்பெருகியவை ஜே.கேயின் எழுத்துக்கள்.ஆனால்- சிறுகதை பற்றியும், குறு நாவல் பற்றியும் ஆயிரம் இலக்கணங்களைப்படித்தாலும் தெரிந்து கொண்டுவிட முடியாத சூட்சுமங்களை,அவரது படைப்புக்கள் புதிய எழுத்தாளர்களுக்குப் படிப்பித்துக்கொடுத்தன. 60 களுக்குப்பிறகு எழுதுகோல் பிடித்த எவருமே--குறைவாகவோ,கூடுதலாகவோ ஜே.கேயின் பாதிப்பை- தாக்கத்தைப்பெற்றிருப்பவர்களே. அதன்பிறகு ஏற்பட்ட புதிய தரிசனங்களும்,அக ஒளிகளும் ,அவர்களுக்கு அறிமுகமான நவீன,பின் நவீன இலக்கியக்கோட்பாடுகளும் அவர்களை வேறு,வேறு பாதைகளுக்கு இட்டுச்சென்றாலும்-- ஜே.கேயின் எழுத்துக்கள் 'உரக்க'ப்பேசுவதாக அவர்கள் விமரிசனம் செய்யும் சூழலும் கூட ஒரு கட்டத்தில் நேர்ந்த போதும்- தங்கள் ஆரம்ப ஆசான் ஜே.கே என்பது,அவர்களது மனங்களின் இடுக்குகளில் நிச்சயம் எங்காவது ஒட்டிக்கொண்டுதான் இருக்கும்.





பிரகடனம் செய்வதுபோலவே இருந்தாலும் கூட-ஜே.கேயின் எழுத்துக்கள், சக மனித நேயத்தை..,மானுட அன்பை...,அறச்சீற்றத்தையே சத்தமாக முழங்கின. அழுக்கும்,அசிங்கமுமான களங்களைத்தேர்ந்து கொண்டாலும் அவற்றுக்குள் உறைந்து,உட்பொதிந்து கிடக்கும் உன்னதச்செய்தியை உலகுக்குப்பறை சாற்றின.நாசகாரி ஏவுகணைகளைப்போன்ற நச்சு இலக்கியங்களை-படிக்கக்கூசும் விரசங்களை,சமூகக்கட்டமைவுக்கு இன்றியமையாத அடிப்படைகளைமீறுவதை நியாயப்படுத்தும் நிலைப்பாடுகளை அவை ஒருபோதும் கொண்டிருந்ததில்லை.எதற்காகவும் எவற்றோடும் சமரசம் செய்துகொள்ள முயலாத ஜே.கேயைப்போன்றவையே அவரது எழுத்துக்கள்.

''நான், எவ்வளவு கேவலமான விஷயங்களை மிகப்பரந்த அளவுக்குள் சித்தரிக்க முயன்றாலும்,அதில்பொதிந்துள்ள சிறப்பானதும்,உயர்வானதும்,வாழ்க்கைக்கு அர்த்தம் கொடுப்பதுமான ஒரு மகத்தான மனிதப்பண்புக்கு வலுமிக்க அழுத்தம் கொடுத்து வாழ்க்கையின் புகழையே பாடுகிறேன்......ஆழ்ந்து ஆழ்ந்து பார்க்கின்ற ஒரு பக்குவம்வந்து விட்டால் எல்லாவற்றுக்குள்ளும் ஒரு மகத்துவம் துயில்வதை தரிசிக்க முடியும்''என்று தனது நூல் முன்னுரை ஒன்றில் குறிப்பிடுவார் ஜே.கே.
மகத்துவங்களை மட்டுமே தரிசித்துப்பழகி, அவற்றை மட்டுமே தன் வாசகர்களும் காணுமாறு பழக்கிய ஜே.கே அவர்களுக்கு இந்திய நாட்டின் மகத்துவமான விருது ,அவரது கழுத்தில் விழுந்த மாலையாக-பத்ம பூஷணாக அவரைத்தேடி வந்திருக்கிறது.தன்னைத்துரத்திக்கொண்டு வராதவனை செல்வம் தானே துரத்திக்கொண்டு வரும் என்பார் குலசேகர ஆழ்வார். ''தன்னையே தான் வேண்டி நீள் செல்வம் வேண்டாதான் தன்னையே தான் வேண்டும் செல்வம் போல் '''இவ்விருதும் அது பற்றிக்கொஞ்சமும் கவலை கொள்ளாத-அலட்டிக்கொள்ளாத அவரை நாடி வந்திருக்கிறது.ஜே.கேயை வந்து அடைவதால் விருதுகளுக்குத்தான் பெருமை என்பது சம்பிரதாயமான வாசகமாயினும் இந்த மாமனிதருக்கு மிகப்பொருத்தமானது.
காலம் தாழ்த்தாமல் பரிசளித்த சாகித்திய அகாதமியைப்போலவும், ஞான பீடத்தைப்போலவும் இந்திய அரசு அளிக்கும் இந்த விருதும் உரிய தருணத்தில் ஜே.கேயை வந்தடைவது தமிழ் இலக்கிய ஆர்வலர்களுக்கு மகிழ்வளிக்கிறது.உச்சங்களை என்றோ எட்டிவிட்ட ஜே.கே அவர்களுக்கு இது உச்சமல்ல; இது தமிழ் மொழியின் உச்சம்,தமிழ் இலக்கியத்தின் உச்சம் என்றே கொண்டாடத்தோன்றுகிறது.


1 கருத்து :

Jeyapandian Karuppan சொன்னது…

People we who are living at the time of JK are lucky as told. But elders who lived at the time of 60s when JK was firing through pen was really lucky. Because you could fully enjoy the stories like 'agnipravesam', 'suyatharisanam' than us.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....