துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

31.1.09

ஒருசாமானியனுக்கு அஞ்சலி......


இந்தியாவின் முதல் குடிமகனாக விளங்கிய காலம் சென்ற ஆர்.வி.அவர்களுக்கு அஞ்சலி செலுத்திக்கொண்டிருக்கும் இந்த வேளையில்.....தமிழகத்தின் சாமானிய இளைஞர் ஒருவருக்கும் அஞ்சலி செலுத்தியாக வேண்டிய கடப்பாட்டில் நாம் இருக்கிறோம். 26வயதே நிரம்பிய அந்த வாலிபரின் சாவைக்காட்டிலும் தன் இறப்புக்கு முன் அவர் எழுதி வைத்துள்ள துண்டுப்பிரசுரமே நம் சிந்தையைக்கிளர்த்துவதாக அமைந்திருக்கிறது. தமிழக-தேசீய- சர்வ தேசப்பிரச்சினைகள் பற்றிய தெளிந்த நோக்கும் கூர்த்த அறிவும் வாய்ந்த அந்த வாலிபரைப்போன்ற அறிவுசால் இளைஞர்களை இழப்பது -அதிலும் இத்தனை கொடூரமாக இழப்பதென்பது நம் நாட்டுக்கு ஏற்படும் ஈடு செய்ய முடியாத இழப்பு. தனிவாழ்வாயினும் பொது வாழ்வாயினும் தற்கொலை என்பதும்-தனக்குத்தானே இழைத்துக்கொள்ளும் வன்முறையான தீக்குளிப்பு என்பதும் சிறிதும் ஏற்றுக்கொள்ளவே முடியாதவை என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை;தனது இறப்பால் மட்டுமே பிரச்சினைக்கு முழுமையான தீர்வு ஏற்படப்போவதில்லை என்பதை அவர் ஒருகணம்- ஒரே ஒரு கணம் நினைத்துப்பார்த்திருந்தால் துர்ப்பாக்கியமான இந்த சோகம் சம்பவித்திருக்காது. எனினும் அவரை அந்த முடிவை நோக்கி உந்தித்தள்ளிய அரசியல், மற்றும் சமூகச்சூழல்களை அவர் விட்டுவிட்டுப்போயிருக்கும் பிரசுரத்தின் வழி அறிகையில் ஒருகணம் நெஞ்சு துணுக்குறத்தான் செய்கிறது. அந்த இளைஞரின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறுவதிலும்,ஈட்டுப்பணம் வழங்குவதிலும் முன்நிற்கும் அரசியல்..அதிகார சக்திகள் இந்தக்கொடூர இழப்பில் தங்கள் பங்களிப்பையும் எண்ணிப்பார்த்துத்தங்களை சற்றே மாற்றிக்கொள்ளமுற்படுவார்களென்றால் (அப்படி ஒன்று நடப்பது கற்பனைக்கெட்டாத அபூர்வம்தானென்றாலும்) வருங்காலத்திலாவது புத்திசாலியான முத்துக்குமார்களை பாரதம் இழக்காமலிருக்கும்.ஈழத்தமிழர்களைக் காக்கவே உயிர்விடுகிறேன்: (தீக்குளிக்கப் போவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு தமிழ்மக்களுக்கு முத்துக்குமரன் அளித்த இறுதி மடல்)விதியே விதியே என்செய் நினைத்திட்டாய் என் தமிழ் சாதியை...
அன்பார்ந்த உழைக்கும் தமிழ்மக்களே...
வணக்கம். வேலைக்குப் போகும் அவசரத்திலிருக்கும் உங்களை இப்படி சந்திக்க நேர்ந்ததற்கு நான் வருந்துகிறேன். ஆனால் வேறு வழியில்லை. என் பெயர் முத்துக்குமார். பத்திரிகையாளர் மற்றும் உதவி இயக்குநர். தற்சமயம் சென்னையில் உள்ள பத்திரிகை ஒன்றில் வேலை செய்து வருகிறேன். உங்களைப்போல் தான் நானும். தினமும் செய்தித்தாளையும், இணையத்தையும் பார்த்து பார்த்து, தினம் தினம் கொல்லப்பட்டு வரும் எம் சக தமிழர்களைக் கண்டு சாப்பிட முடியாமல், தூங்க முடியாமல், யோசிக்க முடியாமல் தவிக்கும் எத்தனையோ பேரில் ஒரு சாமானியன்..........................என்று தொடங்கும் முத்துக்குமாரின் கடிதம் கீழ்க்காணும் வாசகங்களுடன் நிறைவு பெறுகிறது.அநீதிகளுக்கெதிரான உங்கள் சகோதரன்,கு.முத்துக்குமார், கொளத்தூர், சென்னை-99
அருமைத்தமிழ் மக்களே, அநீதிகளுக்கெதிரான போராட்டத்தில் நம் சகோதர்களும், பிள்ளைகளும் அறிவாயுதம் ஏந்தியிருக்கிறார்கள். நான் உயிராயுதம் ஏந்தியிருக்கிறேன். நீங்கள் நகலாயுதம் ஏந்துங்கள். ஆம், உங்கள் கையில் கிடைத்திருக்கும் இந்தத் துண்டறிக்கையை நகலெடுத்து, உங்கள் நண்பர்கள், உறவினர்கள், மாணவர்கள் வசம் கொடுத்து, போராட்டத்திற்கான ஆதரவைப் பெருகப் பண்ணுங்கள் நன்றி.


பின்குறிப்பு;முத்துக்குமாரின் முழுமையான கடிதத்தைக்கீழ்க்காணும் இணைப்பில் காண்க. உங்கள் கருத்துரைகளைப்பதிவு செய்க.http://www.pandiidurai.wordpress.com/

1 கருத்து :

Jeyapandian Karuppan சொன்னது…

http://www.pandiidurai.wordpress.com/ இணைப்பில் முத்துகுமாரின் முழுகடிதம் கிடைக்கவில்லை. தங்களிடம் பிரதி இருந்தால் தரவும்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....