துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

6.2.09

காசு



அந்த அதிவேக எக்ஸ்பிரஸ் ரயில் மீரட்டை நெருங்கிக் கொண்டிருந்தபோது, அம்மா பதட்டத்தோடு கத்தினாள்.
''ஐயையோ....! அந்த உண்டியலை எடுத்துக்க மறந்து போச்சே...? ''
ஒரு கணம், மொத்தக் குடும்பமும் திடுக்கிட்டுப் போய்விட.... என் மனதின் ஆழத்தில் மட்டும் கபடமான ஒரு திருப்தி!

எல்லோருமாக ஹரித்துவார் போக வேண்டுமென்று முடிவு செய்து, அதற்கான நாளை இறுதி செய்வதற்கு முன்பிருந்தே அம்மாவின் சில்லறைச் சேமிப்பு தொடங்கி விட்டது. எல்லாச் சாலைகளும் ரோமாபுரியை நோக்கியே செல்வதைப் போல், யார் எதற்காகச் சில்லறை மாற்றி வந்தாலும், அதைக் கபளீகரம் செய்வது அம்மாவின் உண்டியல் தான் என்பது, எங்கள் வீட்டில் எழுதப்படாத ஒரு விதியாகவே மாறிப் போயிருந்தது. அதிலும் அம்மா பிரத்தியேக கவனம் எடுத்துக் கொள்வது, சின்னஞ்சிறு வடிவத்தில், கைக்கு அடக்கமாகக் கொஞ்சம் கனமாகவும் இருக்கும் ஐந்து ரூபாய்க் காசின் மீதுதான்! ஒரு ரூபாய், இரண்டு ரூபாய்க் காசுகளின் மேலெல்லாம் அவள் பார்வை, கொஞ்சம் இரண்டாம் பட்சமாகத்தான் படியும்! ஏதோ போனல் போகிறது என்பதைப் போன்ற அலட்சியத்துடன் இரண்டு ரூபாய்க் காசுகளை மட்டும் எடுத்து உண்டியலில் போட்டுக் கொள்வாள். நாளாக ஆகக் காசுகளின் கனம் கூடிக் கொண்டே வந்ததால், அந்தத் தகரப் பெட்டியை எவராலும் அத்தனை லகுவாகத் தூக்கிவிட முடியாது என்று கூடத் தோன்ற ஆரம்பித்து விட்டது.

''ரயில்லே போகும் போது இதுவே ஒரு தனி லக்கேஜ் ஆயிடும் போல இருக்கே? இதுக்குத் தனியா ஒரு போர்ட்டரைத் தான் போட்டாகணும்!'' என்று அப்பா கிண்டலடிப்பார்.

'' நாட்டிலே சில்லறைத் தட்டுப்பாடு வருதுன்னா.. ,அதுக்கு உன்னை மாதிரி ஆட்கள்தாம்மா காரணம்! நான் நம்ம நிதியமைச்சருக்கே கூட இதைப்பத்தி ஒரு லெட்டர் எழுதிப் போடலாம்னு இருக்கேன்! காசுங்கிறது.... வத்தாம ஓடிக்கிட்டிருக்கிற ஜீவநதி மாதிரி, ஓயாமே புழக்கத்திலேயே இருக்கணும்மா! அப்பத்தான் அதுக்கு மதிப்பு! இப்படி உண்டியல் பெட்டியிலே போட்டுப் பூட்டி வச்சா...''. என்று என் பங்குக்கு நான் ஆரம்பிப்பதற்குள்... ,பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்து வைக்கும் என்று தனக்குத் தெரிந்த தமிழ்ப்பாட்டை அடங்கிய தொனியில் அரைகுறையாக முணுமுணுக்கத் தொடங்கி விடுவான் தம்பி.

''ஏண்டா...? நீங்க எல்லாருமாச் சேர்ந்து என்னை ஒரு கஞ்சப் பிசாசாவே ஆக்கிடுவீங்க போலிருக்கே...? நான் என்ன.... எனக்காகவா இதைச் சேர்த்து வைக்கிறேன்? நாம எல்லாருமாக் குடும்பத்தோட ஹரித்துவார் போகும்போது, அங்கே பொங்கிப் பெருக்கெடுத்து வர்ற கங்கைத் தாயோட மடியிலே காணிக்கையாப் போடணும்னுதானே இப்படிப் பார்த்துப் பார்த்துச் சில்லறைக் காசாச் சேர்த்து உண்டியல்லே போட்டுக் கிட்டிருக்கேன்...''

'' அம்மா...! காசைக் கரியாக்கறதைப் பத்திக் கேள்விப்பட்டிருக்கேன்! அதைத் தண்ணியிலே வீசி வீணாக்கறதும் கூட அந்த மாதிரிதானே...? ''

''இதோ பாருடா...! ஏதோ என்னோட நம்பிக்கை எனக்கு! தேவையில்லாமே அதைப் பழிச்சுப் பேசாதே! அவ்வளவுதான்! ''என்று, அத்துடன் அந்தப் பேச்சுக்கு அழுத்தமான ஒரு முற்றுப் புள்ளியை வைத்து விட்டு எழுந்து போய் விடுவாள் அம்மா.

அப்படிப் பார்த்துப் பார்த்து அவள் சேமித்து வைத்த காசு..., அவள் பருமனக்கி வளர்த்து விட்டிருந்த அந்த உண்டியல் _ அது எப்போதும் கொலுவிருக்கும் கூடத்து அலமாரியின் மேல் தட்டில்... வீட்டிலேயே தங்கிவிட _ இதோ.... நாங்கள் மட்டும் இப்போது ஹரித்துவாரை நெருங்கிக் கொண்டிருக்கிறோம்! என்னதான் பயணப் பதட்டம், அவசர நெருக்கடி என்றாலும் கூட... அம்மாவால் அதை எப்படி மறந்து போக முடிந்தது? ஒரு பக்கம் என் மனது சந்தோஷக் கும்மாளமிட்டது. இனிமேல் ஊருக்குத் திரும்பிப் போய் அந்த உண்டியலை எடுத்துக் கொண்டு வருவது சாத்தியமில்லை! ஊர் போய்ச் சேர்ந்ததும் ஏதாவது ஒரு கோயில் உண்டியலுக்குள்ளே தான் அது அடைக்கலமாகப் போகிறது! அது கூடப் பரவாயில்லை! ஓடுகிற தண்ணீரில் எறிவதை விட... எப்படியோ ஒரு வகையில் அது பயன்படவாவது செய்யுமே...?

அம்மாவின் முகம் இருண்டு போயிருந்தது. கங்கையாற்றின் குறுக்கும், நெடுக்குமாக வலுவான இரும்பு கர்டர்களுடன் கட்டப்பட்டிருந்த மிகப்பெரிய பாலங்கள், வண்டியின் இருபுறங்களிலும் தென்பட ஆரம்பித்திருந்தன. நாங்கள்.... ஹரித்து வாருக்குள் நுழைந்து கொண்டிருந்தோம். புறக்காட்சி எதிலுமே மனம் லயிக்காதவளாக உறைந்துபோய்க் கிடந்தாள் அம்மா.

விடுதி அறைக்குப் போய்ச் சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்ட பிறகு, அப்பா மெள்ளப் பேச்சுக் கொடுத்தார்.

''இதோ பாரு ராஜி! நடந்துபோன அசட்டுத் தனத்தையே நினைச்சு மறுகிக்கிட்டிருக்காமே இனிமே நடக்க வேண்டியது என்னன்னு பார்ப்போம்! அந்த உண்டியல்லே உத்தேசமா எவ்வளவு தொகை இருந்திருக்கும்னு கொஞ்சம் யோசிச்சுச் சொல்லு! என் கிட்டே உள்ள ரூபா நோட்டை இங்கே உள்ள கோயில் உண்டியலிலே செலுத்திடுவோம்! ''

_அம்மா, அவர் பேச்சை அவசரமாக இடை மறித்தாள்.

'' ஏங்க... அப்படிச் செய்யறதுக்காகவா நான் அத்தனை நாள் கஷ்டப்பட்டுச் சில்லறைக் காசாச் சேர்த்தேன்....? கோயிலிலே காணிக்கை போடறது என்னோட வேண்டுதல் இல்லீங்க! ஓடற கங்கையிலே காசைப் போடணுங்கிறது தான் என்னோட ஆசை! ''

''இப்ப இப்படிச் சட்டம் பேசறவ...., டூர் கிளம்பும் போது முதல் காரியமா அந்த உண்டியலைத்தானே எடுத்து வச்சிருக்கணும்... ''என்று கடிந்து கொள்ள ஆரம்பித்த அப்பா, அம்மாவின் முகம் போன போக்கைப் பார்த்ததும் குரலைக் கொஞ்சம் மென்மையாக்கிக் கொண்டார்.

''சரி...! உன்னோட ஆசை எல்லாம் எனக்குப் புரியாம இல்லை! ஆன... இப்ப என்ன பண்றது சொல்லு! நம்ம கிட்ட இருக்கிற எல்லாச் சில்லறைக் காசையும் திரட்டிப் பார்க்கலாம்! ஆனா நிச்சயம் அது போதாதுன்னுதான் நீ நினைப்பே! பாஷை கூடச் சரியாத் தெரியாத இந்த ஊரிலே... நான் யார்கிட்டே எங்கே போய்ச் சில்லறை மாத்தறது... சொல்லு! ''

''அப்பா! என் ஃப்ரண்ட் ஒருத்தனோட நெருங்கின சொந்தக்காரங்க இந்த ஊரிலேதான் இருக்காங்க! அவங்க ஹிந்தி பேசறவங்கதான்! நாம இங்கேயிருந்து கிளம்பறதுக்கு முன்னலே அவங்க மூலமா அம்மாவுக்குக் கொஞ்சம் சில்லறைமாத்தித் தர முடியுமான்னு முயற்சி பண்ணிப் பார்க்கறேன்'' என்று அபயக்கரம் நீட்ட முன் வந்தான் தம்பி.

''அப்புறம்என்னம்மா...? முடிஞ்ச வரைக்கும் பார்ப்போம்! கிடைச்ச காசை இப்பப்போடு! கடவுள் சித்தம் இருந்து, இன்னொரு தடவை இங்கே வரமுடிஞ்சா... அப்ப நீ சேர்த்து வச்சிருக்கிற உண்டியல் காசை எடுத்துக்கிட்டு வா! நம்ம ஊரிலேயிருந்து வேற யாராவது தெரிஞ்சவங்க இங்கே டூர் வந்தாக் கொடுத்து விடுவோம்... அவ்வளவு தானே...'' என்று முத்தாய்ப்பு வைத்தபடி அந்தச் சிக்கலை அப்போதைக்குச் சுமுகமாக முடித்து வைத்தார் அப்பா


இயற்கையின் மடியில் இளைப்பாற வந்த நேரத்திலும் கூடக் கருமம் தீராத காசுப் பிரச்சினை பிடித்து ஆட்டி வைத்ததில் மனம் சலித்துப் போயிருந்த நான்..., கங்கையின் தரிசனம் நாடிக் காலார நடக்கத் தொடங்கினேன்.

உயரே இருந்த மலைத்தொடர்களில் மழை பெய்து கொண்டிருந்ததால் ஆற்றில் புது வெள்ளம் புரண்டோடிக் கொண்டிருந்தது. இமயத்திலிருந்து கீழிறங்கும் கங்கை, சமவெளிக்குள் பிரவேசிக்கும் முதல் இடம் ஹரித்துவார். மனித அரவமே இல்லாத பனிமலைச் சிகரங்களுக்குள் அமைதியாகப் புகுந்து புறப்பட்டு வரும் கங்கைக்குத் தான் சமதரைக்குள் கால்பதித்ததும் _ தாய்வீட்டைக் காணவந்த பெண்ணைப் போல எத்தனை குதூகலம்? அவளைக் காணும் மனித மனங்களிலும் அது தொற்றிக் கொண்டு விட...., அலையின் தெறிப்புக்களோடு கூடவே எங்கெங்கும் தென்படும் சந்தோஷத் தெறிப்புக்கள்...! ஆனந்த ஆரவாரங்கள்...! ஒரு காலத்தில் பொய்யாக் குலக்கொடியாக இருந்தாலும்.... இப்போது வற்றி வறண்டு போயிருக்கும் வைகை நதி தீரத்திலிருந்து வந்திருந்த நான், நுங்கும், நுரையுமாய்ச் சுழித்துக் கொண்டு இருகரை தொட்டு ஓடிக் கொண்டிருந்த அந்த நதியை..., ஏதோ உலக அதிசயத்தைப் பார்ப்பதுபோல வாய் பிளந்து பார்த்துக் கொண்டிருந்தேன். புதுமழை பெய்து, புரண்டு வந்த அந்த வெள்ளத்தில் மண்வாசனை சற்றுத் தூக்கலாகவே அடித்தது.

கரை ஓரமாகச் சிறியதும், பெரியதுமாய்ச் சிதறிக் கிடக்கும் கோயில்கள்... மடாலயங்கள்! சுருட்டுப் பிடித்தபடியும், நிஷ்டையில் ஆழ்ந்தபடியும்... போலியும், நிஜமுமாய்ப் பல பண்டாரங்கள்... பைராகிகள்! ஆனந்தமாய்க் குளியல் போட ஆசை இருந்த போதும், அலை நாவைச் சுழற்றி வரும் ஆற்றின் வீச்சைக் கண்டு அஞ்சியவர்களாய்க் கரையில் நின்றபடியே காலை மட்டும் நனைத்துக் காக்காய் குளியல் போட்டு விட்டு அவரவர் வந்த டூரிஸ்ட் பஸ்ஸை நோக்கி ஓட்டம் பிடிக்கும் அவசர யாத்ரிகர்கள்!

சிவனின் முடியில் ஒயிலாய்க் கொலுவிருந்த கங்கையைத் தவமாய்த் தவமிருந்து மண்ணுக்குக் கொண்டு வந்தான் பகீரதன் என்றபுராணப் போற்றுதல்களால்.... ஆற்றங்கரை ஓரமாக அழிக்கும் கடவுளின் பிரம்மாண்டமான உருவச்சிலை ஒரு புறம்! ஹரித்துவாருக்குக் கொஞ்சம் மேல்மட்டத்தில் இருக்கும் பத்ரிநாத விஷ்ணுவின் பாதம் இங்குள்ள கங்கைக் கரையில் படிந்திருப்பதான நம்பிக்கையில் ஹர்க்கி பைரி என்ற பெயரோடு வைணவ வழிபாடு மற்றொருபுறம்! ஆனல்.... எனக்கென்னவோ அரியையும் சிவனையும் விட அங்கிருந்தவர்களின் உள்ளம் கவர்ந்தவள் கங்கையாறு மட்டும்தான் என்றே தோன்றியது. அதிலும் மாலை மங்கி, இரவு வரும்முன், பிரம்மகுண்டக் கரையில் நாள்தோறும் நிகழும் ஒளிமயமான ஆரத்தியை அன்று அந்தி நேரத்தில் பார்த்து முடித்தபிறகு, அந்த எண்ணம் இன்னும் கூட வலுப்பட்டது.

கதிரவன் மறையப் போகிற அந்த விநாடியை எதிர் நோக்கியபடி கரையைச் சுற்றியுள்ள படித் துறைகளிலும், படிக் கட்டுகளிலும் கட்டுப்பாட்டோடு காத்து நிற்கும் மக்கள் வெள்ளம். சூரியன் அஸ்தமித்த அடுத்த கணம், கரையைச் சுற்றியுள்ள அத்தனை கோயில்களிலும் மங்கல மணிகள் ஒலிக்க நிகழும் தீபாராதனை! அதே நொடியில்.... சாமானிய மக்களும் கூட இலைத் தொன்னைகளில் மலர் நிறைத்து, அகல்விளக்கேற்றி நீர்ப்பரப்பில் மித்தக விடும் அற்புதக் காட்சி! அத்தனை தீப ஆரத்திகளும், வேறு எந்த தெய்வ ஆராதனைக்காகவும் அல்லாமல்.... பெருகி ஓடும் கங்கையை நோக்கி மட்டுமே அர்ப்பணமாகிற அந்தக் கணத்தில் மெய்சிலிர்த்து, மயிர்க்கூச்சலிட்டபடி அங்கே கூடியுள்ள கூட்டம் எழுப்பும் கங்கா மாதா கீ ஜெய் என்ற அந்த கோஷம்! இரவு கவிந்துவரும் அந்த வேளையில்,ஒளிக்கீற்றுகளாக ஜொலிக்கும் ஆரத்தி தீபங்கள் அந்தச் சூழலையே அமானுஷ்யமாக.... அசாதாரணமாக ஆக்கி விடும்போது, உள்ளுக்குள் ஓடும் பரவசச் சிலிர்ப்பு! இறந்துபோன மூத்தவர்களுக்காக நீர்க்கடன் கழிக்கவும், பிறவேண்டுதல்களை நிறைவேற்றுவதற்குமாய் அங்கே வந்திருந்தவர்களும் கூடத் தாங்கள் வந்த நோக்கத்தை மறந்து விட்டு, அந்த இயற்கை வழிபாட்டில் உருகி நெகிழ்ந்து போகும் மாயம்! இயற்கையின் பிரம்மாண்டம்...., அதன் விசுவரூப தரிசனம், சாதாரண மானுடத் தேவைகளையெல்லாம் ஒன்றுமில்லாததாக ஆக்கிப் போடுகிற அற்புதமல்லவா அங்கே அரங்கேறிக் கொண்டிருந்தது...? இயற்கையைத் தெய்வமாகவே எண்ணி ஆராதித்து வந்த ஆதிமரபின் எச்சம் தானோ இந்த நீர்வழிபாடு....? அதன் சம்பிரதாய வெளிப்பாடு தானோ இந்த ஆரத்தி போன்றவை எல்லாம்....?
* * * *
அன்று ஊருக்குக் கிளம்பியாக வேண்டும்! தம்பியின் துணையோடு ஏதோ கொஞ்சம் சில்லறைக் காசுகளைக் கூடுலாகத் திரட்டி விட முடிந்ததால், தன் விருப்பத்தை ஓரளவுக்கு நிறைவேற்றிக் கொண்டு விட்ட நிறைவும், நிம்மதியும் அம்மாவின் முகத்தில் தெரிந்தன.

''கிளம்பறதுக்கு முன்னலே கடைசியா ஒரு தடவை ஆற்றங்கரையோரமா நடந்து போயிட்டு, அப்படியே குளிச்சிட்டும் வந்திடறேன்'' என்று அறிவித்து விட்டுப் புறப்பட்டேன்.

''இதோ பாருடா...! நீ பாட்டுக்குக் குருட்டுத் தனமாக் கற்பனையை ஓடவிட்டுக்கிட்டு மிதப்பிலேயே இருந்திடாதே! நாலரை மணிக்கு வண்டி! இரண்டு, இரண்டரைக்கெல்லாம் மூட்டை முடிச்சோட ஸ்டேஷனுக்குப் புறப்பட்டாகணும்...''

_முதுகுக்குப் பின்புறம் அப்பாவின் குரல், தேய்ந்து மறைந்தது.

கங்கையின் மடியில் முழுசாக மூன்று நாட்கள்...! அவளையே பேசி...., அவளையே நுகர்ந்து...., அவளையே பருகியபடி மூன்று நாட்கள்! ஒலிப் பேழைகளும், குறுந்தகடுகளும் விற்கும் கடைகளிலிருந்து மிதந்து வந்த பாடல்களில் மட்டுமன்றி, அந்த ஊரின் காற்றலைகள் முழுவதிலுமே கங்கையே ஆராதிக்கும் ஒலி அலைகளே நீக்கமற வியாபித்திருந்ததை உணர்வுபூர்வமாக உள்வாங்கிக் கொண்ட நான், அவற்றை ஆசைதீர என் சுவாசம் முழுவதிலும் நிரப்பிக் கொண்டபடி, கரையின் விளிம்பில் நடந்து கொண்டிருந்தேன். அப்போதுதான்... அது, என் கண்களில் பட்டது.

கடந்த இரண்டு நாட்களாகவே கரையோரமாக நடந்து போகும் போதெல்லாம் அந்தக் காட்சி, அவ்வப்போது என் கண்ணில் பட்டுக் கொண்டுதான் இருந்ததென்ற போதும் மனதிற்குள் பதிவாகி இருக்கவில்லை. படித்துறைகளில் பிரமிப்போடு நின்றபடி, ஓடும் நதியின் பிரவாகத்தில் மட்டுமே மனதை லயிக்க விட்டிருந்ததால், பிறகாட்சிகளில் மனதை செலுத்தி அவற்றை உள்வாங்கிக் கொள்ளும் நிலையில் என் மூளை அப்போது இல்லை. இப்போது.... இந்தக் கணத்தில் பார்த்தபோது, அந்தக் காட்சியில் வித்தியாசமான ஏதோ ஒன்று இருப்பது புலனகியது.

வாலிபப் பருவத்தை எட்டிக் கொண்டிருந்த விடலைப் பருவத்துச் சிறுவர்கள் சில பேர், கரையோரமாக நின்றபடி நீளமான நைலான் கயிறுகளை ஆற்றுக்குள் வீசி எறிந்து துளைவதும், பிறகு அவற்றைமேலே இழுப்பதுமாக ஊக்கத்தோடு எதையோ செய்து கொண்டிருந்தார்கள். கயிறு மேலே வரும்போது சிலசமயம் எரிச்சலோடு உதட்டைப் பிதுக்கி விட்டு அதை அவர்கள் வீசி எறிவதையும், சில சமயம் ஏதோ காணாதது கண்டது போல் ஆனந்தக் கூச்சல் போடுவதையும் என்னால் பார்க்க முடிந்தது.

கயிறு மேலே வரும்போது ஒருவரை ஒருவர் முட்டித் தள்ளிக் கொண்டு சண்டை போடுவதும், ஒருவன் கையிலிருந்து அடுத்தவன் எதையோ பிடுங்கப் பார்ப்பதும், செல்லமாய்த் துரத்துவதுமாகச் சின்னச் சின்ன ரகளைகளும் கூட அங்கே அரங்கேறிக் கொண்டிருந்தன.
ஒருவேளை மீன் பிடிக்கிறார்களோ என்று எனக்குள் தோன்றிய எண்ணம், அவர்கள் கையில் வைத்திருந்த வித்தியாசமான கருவியைப் பார்த்தவுடன் சட்டென்று மறைந்து போயிற்று. அவர்களிடம் நெருங்கிச் சென்று அருகில் இருந்தபடி சிறிது நேரம் அமைதியாகக் கவனித்துக் கொண்டிருந்த நான், அங்கிருந்த ஒரு பையனிடம் அரைகுறை இந்தியில் பேச்சுக் கொடுத்தபடி, அவர்கள் கையிலிருந்த உபகரணத்தைப் பார்க்க வேண்டுமென்ற என் விருப்பத்தைத் தெரிவித்தேன். உடனே எவ்விதத் தயக்கமும் இன்றிக் கைவசம் வைத்திருந்த தூண்டிலை அவன் உயர்த்திக் காட்ட..., என் மனம் ஒரு கணம் அதிர்ந்து போயிற்று.
நீண்ட நைலான் கயிற்றின் முனையில் ஒரு தகரக் கம்பி! அதில் வரிசையாகக் கோர்க்கப்பட்டு முடுக்கப்பட்டிருந்த நான்கு காந்த வளையங்கள்! அந்த வளையங்களின் மேலும், கீழும் பக்கவாட்டிலும் ஒட்டிக் கொண்டிருக்கும் ஆணிகள்..., ஊசிகள்..., மேலும் அங்கே நீராடும் பெண்களின் தலையிலிருந்து உதிர்ந்து விட்டிருக்கும் கொண்டை ஊசிகள்...! இவற்றோடு ஆங்காங்கே இடைச் செருகல்களாகத் தலைகாட்டும் ஒரு ரூபாய்..., இரண்டு ரூபாய்..., ஐந்து ரூபாய்ச் சில்லறைக் காசுகள்!
நன்றி:வடக்குவாசல்,ஜனவரி 2009இதழ்.http://www.vadakkuvaasal.com/
வாசக எதிர்வினைகள் :
எம்.ஏ.சுசீலாவின் 'காசு'கதை,ஒரு குடும்பத்தில் உள்ள மனிதர்களின் மன ஓட்டங்களை,அழகாகவும்,இயல்பாகவும் வெளிப்படுத்திய பாங்கு சிறப்பு.கங்கை நதியின் பாய்ச்சலை,அதன் அழகு தீரத்தினை சித்தரிக்கையில் மனக்கண்முன்பு அக்காட்சிகளை நிறுத்துகின்றார்.பாராட்டுக்கள்.கே.ரவிச்சந்திரன்,ஈரோடு.
ஜனவரி இதழில்,ய.சு.ராஜன் அவர்களுடைய 'சிந்தனைச்சிதறல்'களும்,எம்.ஏ.சுசீலா அவர்களின் 'காசு' சிறுகதையும்,தீரன் அவர்களின் நூல் மதிப்புரையும் இதழுக்கு அணி சேர்த்தன.க.இந்திரசித்து,கோவை.
நன்றி:வடக்குவாசல்,பிப்.09

கருத்துகள் இல்லை :

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....