துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

8.6.09

கழுகும் மனுஷியும்

ஈழப் புலம்பெயர் குறும்படங்களில் பெண் இருப்புக் குறித்து இந்திரா காந்தி திறந்த வெளிப் பல்கலக்கழகத்தில் ஆய்வு மேற்கொண்டிருக்கும் ஒரு மாணவி,அது குறித்த சில விவாதங்களுக்காக என்னை நாடி வந்தபோது , அத்தகைய குறும்படங்கள் சிலவற்றைக் காணும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.அவற்றுள் ஒன்று கவிஞர் சுமதிரூபன் நடித்து அவரது கணவர் ரூபன் இயக்கிய 'ஒரு மனுஷி' என்ற ஏழு நிமிடக் குறும்படம்.

தங்கள் வாழ்வில் பல பெண்கள் அன்றாடம் எதிர்ப்படும் நடப்பியல் சிக்கலை வசனம் ,பின்னணி இசை ஆகிய எதுவுமின்றி - யதார்த்தமாகக் கண் முன் கொணர்கிறது இக் குறும்படம்.புலம் பெயர்ந்து வாழும் வெளிநாடு ஒன்றில் ஒரு பெண்ணின் மாலை நேரம் சித்தரிப்பிற்குரிய பொருளாகியிருக்கிறது.

எங்கோ சென்று உழைத்துக்களைத்து மாலையில் வீடு திரும்புகிறாள் ஒரு பெண்.வழியிலேயே வீட்டுச் சமையலுக்கான காய்கறி , மற்றும் பிற பொருட்களை வாங்கித் தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு கொண்டு வீட்டுக்குள் நுழைகிறாள்.தொலைக்காட்சியில் உச்ச ஸ்தாயியில், ஏதோ ஒரு திரைப்படப் பாடல் ஓடிக் கொண்டிருக்க, சற்றே திரும்பிப் பார்க்கிறாள். அவள் கணவன் ஹாலில் , ஒரு கட்டிலில் சாய்வாக...சௌகரியமாகப் படுத்துக் கொண்டு உள்ளங்காலை நெருடியபடி பாடலை ரசித்துக் கொண்டு அதில் ஆழ்ந்து போய்க் கிடக்கிறான். அவள் உள்ளே நுழைந்ததோ சாமான்களை மிகவும் சிரமத்துடன் சுமந்து கொண்டு வந்ததோ அவனிடம் எந்த அசைவையும் ஏற்படுத்தவில்லை.அவளை அவன் ஏறெடுத்துக் கூடப் பார்க்கவில்லை.

உள்ளே சென்று நைட்டிக்கு மாறி வந்து சமையலறையில் வேலை தொடங்குகிறாள் அவள். அவளும் கூட அவனிடம் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லையென்றபோதும் வேலைக்கு இடையிடையே அவனைப் பார்க்கும் அவளது பார்வையில்தான் எத்தனை வன்மம்? வந்த காலோடு வேலை செய்யும் அலுப்பு ஒருபுறம் இருக்க , அதை விடவும்... தன் இருப்பை அவன் கொஞ்சம் கூட லட்சியம் செய்யாத மனக் குமுறலும் அதை நேரடியாக எதிர்க்கத் துணிவில்லையே என்ற ஆதங்கமும் - தனது கைலாகாத்தனத்தால் தன் மீதே விளைந்த கோபமும் மற்றொரு புறம்...! காய்கறியோ மாமிசமோ வெட்டும்போது மட்டும் அதை ஓங்கி அடித்துச் சத்தம் எழுப்பும் அவளது செயலில் மிகச் சிறியதானதொரு எதிர்ப்பை அவள் பதிவு செய்கிறாள் என்று விளங்கிக் கொள்ள முடிகிறது.சமைத்து முடித்து , சமையல் மேடை ,மற்றுமுள்ள பிற இடங்களைப் பெருக்கிக்கழுவித் தூய்மை செய்கிறாள் அவள்.அப்போதும் அவனிடம் எந்த எதிர் வினையுமில்லை. தன் வசதிக்காகச் சற்றே புரண்டு படுத்துக்கொண்டு மீண்டும் தொலைக் காட்சியில் லயித்துப் போகிறான் அவன்.

தட்டில் உணவைப் போட்டு அவன் இருக்குமிடத்திற்கே எடுத்து வருகிறாள் அவள்.அவளை நிமிர்ந்து கூடப் பார்க்காமல், தொலைக் காட்சியில் பதித்த கண்களைக் கொஞ்சமும் மீட்டுக் கொள்ளாமல் இயந்திரமாகத் தட்டை வாங்கிச் சாப்பிடுகிறான் அவன். அவள் , தனக்கான உணவைத் தானே பரிமாறிக் கொண்டு உணவு மேசையில் தனியே உட்கார்ந்து சாப்பிடுகிறாள். நடுவில் அவன் இருக்கும் திசையில் அவள் கண்தான் பதிகிறதேயன்றி , அவள் அங்கே இருப்பது அவனுக்கு ஒரு பொருட்டாகவே படவில்லை.சாப்பிட்டு முடித்த தட்டை மட்டும் - சற்றுக் கருணை கூர்ந்து ( அல்லது அடுத்த காட்சியின் தடங்கலின்மைக்காகவோ) கழுவும் தொட்டியில் போட்டுவிட்டுத் தன் பழைய வேலையை -தொலக் காட்சி பார்த்தபடி காலைச் சுவாரசியமாகச் சுரண்டும்வேலையைத் தடங்கலின்றித் தொடர்கிறான் அவன்.
.
காட்சி மாறுகிறது. எல்லா வேலைகளையும் முடித்துவிட்டுப் படுக்கை அறைக்குள் அலுத்துச் சலித்து நுழையும் அவளை ஆவலுடன் எதிர்கொள்ள அவளுக்கு முன்பாகவே கட்டிலில் கழுகு போலக் காத்திருக்கிறான் அவன். அதைக் காணும் அவளது முக மாற்றத்தை , மெல்லிய முகச் சுளிப்பைக் காட்டியபடி படம் முற்றுப் பெற்று விடுகிறது.

பெண்ணை - அதிலும் வாழ்க்கைத் துணையாக ஏற்ற மனைவியை, ஒரு மனுஷியாக - சக ஜீவனாகக் கூடப் பார்க்காமல் புறக்கணிப்பிற்கு ஆளாக்கிவிட்டுத் தன் சுய தேவைக்காக மட்டுமே அவளை இரையாக்கும் ஆணாதிக்க மனோபாவத்தை மிகையின்றி முன் வைக்கிறது இக் குறும்படம்.

நேர்த்தியான மிகையற்ற நடிப்பும் ,பொருள் மற்றும் பாத்திரங்களின் சலனங்களைத் தவிர வேறு எதையும் காட்டாத காட்சியமைப்பும் இப் படத்தின் உள்ளடக்கம் அழுத்தமாய்ப் போய்ச் சேரப் பெரிதும் துணை புரிந்திருக்கின்றன. சுமதிரூபன் அவர்களால் எழுதப்பட்ட கீழ்க் காணும் கவிதையின் காட்சிச் சித்திரமாகவே இக் குறும் படம் உருவாக்கப் பட்டிருக்கிறது. அந்தக் கவிதைக்குத் திரை வடிவம் என்பது இதைத் தவிர வேறு எவ்வாறும் இருக்க இயலாது.

கழுகு

அவள் காலச் சக்கரங்கள்
ஓய்வின்றிச் சுழல்கிறது
சூரியப் புலவின் முன் இங்கேயும்
பெண்ணின் பெருமைக்காய் எழுதல்
நிகழத்தான் செய்கிறது
குளிரோ வெயிலோ
காலத்தோடு புணர்தல்
கடமைக்காய் பம்பரமாதல்
புலம் பெயர்ந்தபோதும் மாறுபடாத ஒன்று


உழைப்பு பெருக்கப்பட்டு
உடல் வகுக்கப்பட்டாலும்
பத்தினி பட்டத்திற்காய்ப் புன்னகைத்து
பாடாய்ப் படுவது
முதுகில் ஏற்றப்பட்ட புதிய பளு
அவன் புருஷ லட்சணத்திற்காய்
எட்டு மணி நேர உழைப்பு போக


சோபாவில் கால் நீட்டி
வாய் பிளந்து தூங்குதல்
காப்புக்கை சாப்பாடு சுவையென்று
புருவம் தூக்கிச் சப்புக் கொட்டி உண்ணுதல்
காலித் தட்டைக் கழுவிப் போட்டுச்
தொலைக் காட்சி செய்தி பார்த்தல்

முடிவில்
கழுகு போல
கட்டிலில் காத்திருப்பான்
அவள்வரவுக்காய்.


(நன்றி: பறத்தல் அதன் சுதந்திரம்)

(இதற்கு முன் 'கால்களின் ஆல்பம்' என்ற மனுஷ்ய புத்திரனின் கவிதையும் கூட - சற்றும் மாறாமல் குறும்படமாக ஆகியிருக்கிறது. சிறுகதைகளோடு கூடவே கவிதைகளையும் நல்ல குறும்படங்களாக்க முடியும் என்பதற்கு இவ்வாறான முயற்சிகள் தகுந்த உதாரணங்கள்).

புலம் பெயர்ந்தும் மாறாத மரபுகளை இக் கவிதையும் , குறும் படமும் சுட்டுகின்றன. அதே வேளையில் புலம் பெயர்ந்து வேற்றுப் பண்பாட்டு மரபுடன் இணைந்து விடுவதனாலேயே காலத்துக்கொவ்வாத மரபுகளிலிருந்து மீட்சியும், விடுதலையும் கிடைத்துவிடும் நன்மையும்கூடச் சில நேரங்களில் சாத்தியமாவதுண்டு.பெண் பார்க்கும் சடங்கு, வரதட்சிணை வழக்கம் ஆகிய தீமைகளிலிருந்து புலம் பெயர்ந்த பெண் , விடுதலையாகிவிட வாய்ப்புண்டென்பதை வசந்தி ராஜா (இவர் சுமதி ரூபனின் சகோதரி எனத் திரு ஜெயமோகன் வழி அறிந்து கொண்டேன்) எழுதிய
'கூரை எரிந்ததில் நிலவை ரசிக்கும் நான் 'என்ற கவிதை பின்வருமாறு எடுத்துக் காட்டுகிறது.

''காசு கொடுத்து ஆம்பிளை வாங்கி
அதற்குப் பணிவிடை செய்யும் அவலங்கள்
நான் சொல்ல
விழி விரித்துக் கேட்கிறாள் மகள்
ராஜா ராணி கதை கேட்கும் பாவனையில்
போர் தருகின்ற சோகங்களுக்குள்ளாலேயும்
ரகசியமாய் சிலிர்த்துக் கொள்கிறேன்
புலம் பெயர்ந்தமை
தங்கத் தட்டில் தந்த சுதந்திரம்
என் மகள்களுக்கும் நம் பெண்களுக்கும்''


( நன்றி; பறத்தல் அதன் சுதந்திரம்)

2 கருத்துகள் :

முனைவர் கல்பனாசேக்கிழார் சொன்னது…

ஒரு மனுஷி என்னும் குறும் படத்தின் தாக்கம் இன்னம் இருந்து கொண்டுதான் இருக்கிறது.பெண்ணின் இருப்பை உணராத ஆண்கள் சிலர் சுயநலமாக தங்களின் விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்ளுவதிலேயே குறியாக உள்ளனர்.

பெயரில்லா சொன்னது…

//இதற்கு முன் 'கால்களின் ஆல்பம்' என்ற மனுஷ்ய புத்திரனின் கவிதையும் கூட - சற்றும் மாறாமல் குறும்படமாக ஆகியிருக்கிறது.//

நல்லத் தகவல் மற்றும் பதிவில் அழகாக விவரித்து உள்ளீர்கள் சுசீலாம்மா.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....