துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

18.2.10

நேர்காணல் - பகுதி 2 (பெண்ணியம்)

(வடக்குவாசல் இதழில் வெளியான நேர்காணலின் தொடர்ச்சி)

பெண்ணியக் கோட்பாடுகளின் ஆக்கபூர்வமான தன்மையாக எதைக் கருதுகிறீர்கள்?

பெண்ணின் வாழ்க்கைத் தரம் - கல்வி, வேலைவாய்ப்பு ஆகிய பலதுறைகளிலும் இன்று மேம்பட்டிருக்கலாம். பெண் குறித்த சமூக நிலைகளிலும் சில வரவேற்கத் தக்க மாற்றங்கள் நேர்ந்திருக்கலாம். ஆனால் ஆணுக்கு நிகரான கல்வி, பொருளாதாரத் தற்சார்பு முதலியவற்றைப் பெற்ற பிறகும் கூடப் பெண்ணை இரண்டாந்தரமாகவே கருதும் மனப்போக்கு இன்றளவும் கூட நமது சமூக அமைப்பில் நிலவி வருகிறது என்பதைப் பாசாங்குகள் இன்றி - திறந்த மனதுடன் நேர்மையாக யோசிக்கும் எவராலும் புரிந்து கொண்டுவிட முடியும்.
பெண்ணாக இருப்பதனாலேயே உணரும் மனத்தடைகள், இறுக்கங்கள், மரபுவழிக் கடமைகள் ஆகியவை இன்னமும் கூட அவளைத் தளைப்படுத்திக் கொண்டுதான் இருக்கின்றன.
ஆயிரம் சட்டங்கள் வகுக்கப்பட்டாலும் அவற்றால் பயன் கொள்ள முடியாத பெண்கள், அடிப்படை உரிமைகளுக்குக் கூட அல்லலுறும் பெண்கள் சாதி, இனம், மொழி, வர்க்கம் ஆகிய எல்லைக் கோடுகளையெல்லாம் கடந்து எல்லா மட்டங்களிலும் இன்றும் கூட இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

மேற்குறித்தவற்றைப் பொறுப்பு உணர்வோடு சிந்தித்துப் பெண்ணுக்கு அந்நிலையிலிருந்து மீட்சி அளிக்கக்கூடிய வழிமுறைகளைக் காண்பதும், மனித சமத்துவம் மலினப்படாத - பால் பேதமற்ற சமூகத்தை உருவாக்க முயல்வதும், பெண் என்பவள் ஒரு தனிப்பட்ட மனித உயிர் என்ற கருத்தை இரு பாலாரின் நெஞ்சிலும் ஆழமாகப் பதியச் செய்வதும் இச் செயல்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதற்கான நகர்வுகளுமே ஆக்க பூர்வமான பெண்ணிய நிலைப்பாடாக இருக்க முடியும் என்பது என் திடமான கருத்து.
என் சிறுகதைகள் பலவும் பெண் சிக்கலை மையப்படுத்தியவையே.

பெண்மொழி உருவாக்கம் என்ற புதிய சொல்லாடல் தற்போது படைப்புலகில் அதிகமான பயன்பாட்டில் உள்ளது. பெண் அல்லது ஆண் பாலுறுப்புக்கள் குறித்த சொற் பிரயோகங்களைத் தங்கள் படைப்புக்களில் சில பெண் படைப்பாளிகள் கலகத்தின் குரலாக வெளிப்படுத்துவதாகச் சொல்வது குறித்து உங்கள் கருத்து என்ன?

இயற்கையான உடற்கூற்று வேறுபாட்டையும், பாலின வேறுபாட்டையும் புரிந்து கொள்ளத் தவறியதனாலேயே உடல் சார்ந்த ஒடுக்குதல்களுக்கும், வன்முறைகளுக்கும் பெண் ஆளாக நேர்ந்திருக்கிறது.

பெண்ணை,

உடல் சார்ந்தே பார்க்கும் பார்வை,

உடலாக மட்டுமே பார்க்கும் பார்வை,

உடலை வைத்தே அவளை மதிப்பீடு செய்யும் பார்வை

இவையெல்லாம் அறிவுத் தெளிவும் சிந்தனை உரமும் பெற்றுவிட்ட ஒரு கட்டத்தில் பெண்ணுக்கு அலுப்பூட்டுவதாக - மனக் கொதிப்பை ஏற்படுத்துவதாக - அவளால் பொறுத்துக் கொள்ள இயலாததாகப் போனதன் விளைவாகவே பின் நவீனக் காலத்தின் எதிர் வினையாகப் பெண்மொழி பீறிட்டெழுந்திருக்கிறது.

பொதுவாக மொழியைக் கையாளும் அதிகாரம் எவர் வசத்தில் உள்ளதோ அதை ஒட்டியே மொழியும் வடிவமைக்கப்படுவது இயல்பு;
ஆணாதிக்க சமூகத்தில் ஆண் வயப்பட்டதாக இருந்த மொழியைப் பெண் தன் வசப்படுத்த மேற்கொள்ளும் முயற்சியே பெண்மொழி.
அது, ஆணாதிக்க சிந்தனைகளுக்கு எதிரான ஒரு மாற்று அரசியல்.
தானனுபவித்துள்ள துன்பங்களைச் சொல்லத் தன் மொழியைத் தானே தேர்ந்தெடுக்கும் தலித் படைப்புக்களைப் போலப் பெண்ணும் தன் தளைகளை, வேதனைகளை, அவலங்களை, ஆற்றாமைகளைச் சொல்ல ஒரு தனிப்பட்ட மொழியை உருவாக்க வேண்டும் என்பதே பெண்மொழி குறித்த நேர்மையான புரிதலாக இருக்க முடியும்.
 "பெண் இருப்பைப் பற்றியும், பெண் உடலைப் பற்றியும் சமூக, குடும்ப, நிறுவன வெளிகளில் உருவாக்கப்பட்டுள்ள அவளுக்கெதிரான கருத்தாக்கங்களையும், மதிப்பீடுகளையும் சிதைப்பதும் - அவற்றின் வன்முறைக்கு எதிராகக் குரல் எழுப்புவதும் தான் மாற்று அரசியல்'' என்று குறிப்பிட்டுள்ள முன்னணிப் பெண் கவிஞராகிய மாலதி மைத்ரி மற்றுமோரிடத்தில் "பெண் பாலுறுப்புக்களைக் குறிக்கும் வார்த்தைகளைப் பயன்படுத்தினால் பெண்மொழி உருவாகி விடாது'' என்று கூறியிருப்பதையும் இன்றைய நவீன, பின் நவீனப் பெண்ணியப் படைப்பாளிகள் கருத்தில் கொள்ள வேண்டும் என்பதே நான் வைக்க விழையும் பணிவான ஒரு வேண்டுகோள்.

பெண் அரசியல், பெண்மறுப்பு அரசியல் பற்றி உங்கள் கருத்துக்கள் என்ன?

வரதட்சிணை, பெண் மீதான குடும்ப வன்முறை, பாலியல் வன்முறை, தனித்த இருப்பு மறுக்கப்படுவதன் மீதான கழிவிரக்கம் ஆகிய கருப்பொருள்களைத் தாங்கி வந்த கவிதைகளையும், சிறுகதைகளையும் பெண்ணின் அந்தரங்க டயரிக் குறிப்புக்களாகவும், சோகப் புலம்பல்களாகவும் புறந்தள்ளி வந்த அறிவுஜீவி ஆண்கள் கூட்டம் இப்படிப்பட்ட பெண் கவிதைகளை மட்டும் உயர்த்திப் பிடிப்பதன் பின்னணியிலுள்ள நுட்பமான அரசியலைப் பெண் எழுத்தாளர்கள் காலம் தாழ்த்தாமல் புரிந்து கொண்டாக வேண்டும்.

பெண்ணின் சுயத்தைப் பொறுத்துக் கொள்ள முடியாத ஆண் மனோபாவம் பெண் எழுத்தைப் பல வகைகளில் கேலியும் கிண்டலும் செய்யவே முனைகிறது என்பதைப் பெண் படைப்பாளிகள் நினைவில் கொண்டாக வேண்டும்.

பெண் பற்றிய சமூகக் கருத்து ஆக்கங்களுக்கு எதிராகப் பெண்மொழி கட்டமைக்கப்பட வேண்டுமென்பதே பெண்ணிய நடுநிலையாளர்களின் எதிர்பார்ப்பாகும்.

வாராது போல் வந்த மாமணியாய் வாய்த்துக் கொண்டிருக்கும் பெண்ணியப் புரிதல்கள் பலவற்றையும் உடைத்துப் போடுவதைப் போல, அவற்றுக்கு நேர் எதிரான போக்கிலேயே இன்றைய பெண் கவிதைகள் பலவும் இயங்கிக் கொண்டிருப்பதை என்னால் அவதானிக்க முடிகிறது.

படைப்பின் தேவைக்கும், சமூகத்தின் தேவைக்கும் அப்பாற்பட்ட வகையில் பாலியல் வெளிப்பாடுகள் மிகுதியாகக் கையாளப் படுகையில், பெண்ணியக் கோட்பாட்டின் அடிப்படையான ஆத்மார்த்தமான நோக்கம் நீர்த்துப் போய்விடுவதுடன் கவிதையில் இடம் பெறும் பிறசெய்திகள் மட்டுமே மலிவான ரசனையுடன் எதிர்கொள்ளப்படுகின்றன.

இன்னும் கூட வெளிப்படையாகச் சொல்லப் போனால் இத்தனை நாள், தான் எழுதி வெளிச்சப்படுத்திய பெண்ணுடலை, வேட்கையை அவளே வெளிச்சப்படுத்த முன்வருகையில் அவனுக்கு அது இன்னுமல்லவா தீனி போடுவதாக ஆகி விடுகிறது?

அதிர்ச்சி மதிப்பிற்காகவும், பிரமிப்பை ஏற்படுத்துவதற்காகவும் மட்டுமே கையாளப்படும் பாலியல் படிமங்கள் இலக்கிய வளர்ச்சி, பெண்ணிய முன்னேற்றம் இரண்டுக்குமே ஊறு விளைக்கும் நச்சுத் தன்மை கொண்டவை.

மதுரையில் பணியாற்றிய போது பெண்ணிய அமைப்புக்கள், பேரணிகள் போன்றவற்றில் தீவிர ஈடுபாடு கொண்டு இயங்கி இருக்கிறீர்கள். எழுதுவது, பேசுவது என்கிற விஷயங்களை விட களங்களில் பெறும் அனுபவங்கள் நேரடித்தன்மை கொண்டவை. அப்படிப்பட்ட குறிப்பிடத் தகுந்த அனுபவங்கள் எதையாவது எங்களுடன் பகிர்ந்து கொள்ள முடியுமா?

பெண்கள் கல்லூரியில் பேராசிரியராகப் பணி ஆற்றியதால், பெரும்பாலான நேரங்களில் பாடங்களோடு ஒருங்கிணைத்துப் பெண்ணியக் கோட்பாடுகளைச் சரியான புரிதலுடன் முன் வைப்பதற்கு ஏற்ற களமாக என் வகுப்பறையே எனக்கு அமைந்து போனது;
அவற்றைச் சரியான கோணத்தில் உள் வாங்கிக் கொண்டு பல பெண்ணியச் சிந்தனையாளர்களும், படைப்பாளிகளும், இயக்கப் போராளிகளும் கூட என் மாணவிகளிலிலிருந்து உருவாகி இருக்கிறார்கள் என்பதைப் பெண்ணியம் சார்ந்த என் முக்கியமான பங்களிப்பாக நான் எண்ணுகிறேன்.

திரைப்படங்களும், திரைப்பாடல்களும் புனைகதைகளும் தரும் பெண் பிம்பம் என்பது எவ்வளவு பொய்யானது, மாயையானது என்பது அவர்களுக்குப் புரியத் தொடங்கியதும் அவர்களே எனக்கும் ஒரு படி மேலே சென்று அவற்றை மறுதலிக்கத் தொடங்கினார்கள்,
ஒரு முறை நகைச்சுவை என்ற போர்வையில் பெண்ணைக் கொச்சைப்படுத்தத் தொடங்கிய பேச்சாளர் ஒருவரைத் துரத்தித் துரத்திக் கேள்விகள் கேட்டு மடக்கி "இனி இந்தக் கல்லூரிப் பக்கமே நான் காலடி வைக்க மாட்டேன்' என்று சொல்லும் நிலைக்கு என்னுடைய மாணவிகள் அவரை இட்டுச் சென்றார்கள் - சுற்றிச் சூழ்ந்த பல விமரிசனக் கணைகளுக்கு அஞ்சாமல் (சக பேராசிரியர்கள் கூட மாணவிகளை நான் பாழடிப்பதாகக் குற்றம் சாட்டி, "உங்கள் பெண்ணியம்' என்று என்னிடம் கேலி பேசியதுண்டு) என் பணியைத் தொடர்ந்தேன்.

வகுப்பறை தவிர, மதுரையில் இயங்கி வந்த சில தன்னார்வப் பெண் அமைப்புக்களிலும் நான் ஆலோசகராகவும், இயக்கவாதியாகவும் பங்காற்றியிருக்கிறேன்.

குறிப்பிட்ட ஒரு சூழலில் - மிக நெருங்கிய வட்டத்தில் பாதிப்புக்காளாகி இறந்து போன ஒரு பெண்ணுக்காக நியாயம் கோரிப் புற நெருக்குதல்கள், அபாயங்கள் ஆகியவற்றையும் பொருட்படுத்தாமல் நானும் என் நண்பர்கள் சிலரும் மாவட்ட ஆட்சியர், காவல்துறை ஆணையர் வரை கூடச் செல்ல நேர்ந்திருக்கிறது; மதுரைத் தெருக்களில் துண்டுப் பிரசுரங்களை வினியோகித்தபடி, அப்பெண்ணுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை முன் வைத்த அந்தக் கணங்கள் வாழ் நாளில் மறக்க முடியாதவை; அத்தனை கடுமையான முயற்சிகளுக்குப் பின்னர் அந்தப் பெண்ணின் பெற்றோரே பயந்து போய் வழக்கை வாபஸ் வாங்கிக் கொண்டு விட்டது எதிர்பாராத ஒரு திருப்பம் தான் என்றாலும் தொடர்ந்து சோர்வு இல்லாமல் முடிந்தவரை பெண் மீதான வன்முறைகளுக்கு எதிராக என்னால் முடிந்ததை எழுத்தால் மட்டுமன்றிச் செயலாலும் செய்திருக்கிறேன் என்ற ஆன்ம நிறைவு இருக்கிறது.

காண்க;
நேர்காணல் - பகுதி - 1

2 கருத்துகள் :

முத்துலெட்சுமி/muthuletchumi சொன்னது…

நல்ல பேட்டி. வடக்குவாசலிலேயே படித்திருந்தாலும் இங்கே இதை பகிர்ந்ததற்கு நன்றி..

பெயரில்லா சொன்னது…

//அந்தப் பெண்ணின் பெற்றோரே பயந்து போய் வழக்கை வாபஸ் வாங்கிக் கொண்டு விட்டது எதிர்பாராத ஒரு திருப்பம் தான்//

கடவுள் ஏன் கல்லானான்! மனம் கல்லாய் போன மனிதர்களாலே!

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....