துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

26.2.10

பயணத் துணையாய்ச் சில மின்னல்கள்...

’’மனிதனுக்கு ஆனந்தத்தை நேரடியாக அனுபவிப்பதைவிட முன்னம் அனுபவித்ததை மீண்டும் நினைத்துப் பார்ப்பது இன்னும் ருசிகரமாக இருக்கிறது’’
என்று ‘அமிர்தம்’ நாவலில் தி.ஜானகிராமன் குறிப்பிடுவது போலப் பழைய கணங்களை,அவை தந்த படிப்பினைகளை - இனிமைகளை - ரசனைகளை-பரவசத்தை -குறிப்பிட்ட அந்த நேரத்தில் கிளர்ந்த  மன அசைவுகளை அசை போடுவது ஓர் ஆனந்தம்தான்.

இலக்கியத்தில் உட்கலந்து போவதிலுள்ள ஒரு நன்மை அல்லது விசித்திரம் என்னவென்றால்,வாழ்வின் எந்தத் தருணத்திலும் - அது மிக மிக நெருக்கடியானதாக இருக்கும்போதும் கூட - நம்மை அறியாமலே அந்த இலக்கிய வரிகள் நம் மூளைக்குள் மின்னலடிப்பதுதான்.
சில வேளைகளில் வாய்தவறி அவை வெளிப்படவும் செய்யும்போது பிறரால் நகைப்பிற்காளாகும் நிலை கூட நேர்வதுண்டு.
ஆனாலும் பழகிய வாய்க்கும்,யோசிக்கும் மனதிற்கும் பூட்டுப் போட முடிவதில்லை.
துணையே இல்லாத வேளைகளில் அதுவே அருந்துணையாகவும் கூட ஆகி விடுவதுண்டு.


என் பயணத்தில் துணை வந்த சில இலக்கிய (நவீன சமகால இலக்கியம் உட்பட) வரிகள் இப் பதிவில்....

’தீதும் நன்றும் பிறர் தர வாரா’’ -புறநானூறு.


‘’எத் திசைச் செலினும் அத் திசைச் சோறே’’-புறநானூறு


‘’நாம் ஆர்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்’’-அப்பர்


‘’போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும்’’-ஆண்டாள்

’’வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன்பால்
  மாளாத காதல் நோயாளன் போல..’’-குலசேகர ஆழ்வார்


‘’யாரொடும் பகை கொள்ளலன் என்றபின் போர் ஒடுங்கும் புகழ் ஒடுங்காது’’-கம்பன்

’’ஆழும் நெஞ்சகத்து ஆசை இன்றுள்ளதேல்
  அதனுடைப் பொருள் நாளை விளைந்திடும்’’-பாரதி


‘’செங்கதிர் மாணிக்கத்துச் செழும்பழம் முழுகும் மாலை’’ -பாரதிதாசன்

’சூரியன் மறைந்து விட்டதே என்று அழாதே..
  நிலவானது உன் வாழ்விலும் ஒளிரும்..
 நிலவும் மறைந்து விடுமே என்று கலங்காதே
 அங்கே..
  நட்சத்திரங்களாவது மின்னிக் கொண்டிருக்கும்’’ -தாகூர்(மொழிபெயர்ப்பு)

’’சிறைகள் பூட்டப்படுவதற்கு மட்டுமல்ல;அவை திறக்கப்படவும்   வேண்டும்.  
இல்லையென்றால் அவை தகர்க்கப்படும் - ஜெயகாந்தன்

’கொஞ்சமாகத் தெரிந்து கொண்டிருக்கும்போது தெரிந்து கொண்டுவிட்டோம் என்றும்,அதிகமாகத் தெரிந்து கொள்ள முற்படும்போது தெரிந்து கொள்ளவில்லை என்ற எண்ணமும் ஏற்படுகிறது.
ஒரு கதவு திறக்கும்போது திறக்காத பல கதவுகள் தெரியும் விசித்திரக்கோட்டை இது.அவற்றையும் திறக்கும்போது மேலும் பல கதவுகள் மூடிக் கிடப்பதைப் பார்க்கிறோம்.அப்படியானால் இதற்கு முடிவு என்ன.
திறப்பதே திறக்காத கதவுகளைப் பார்க்கத்தானா?’’
                                                       -’ஜெ.ஜெ.சில குறிப்புக்களில் சுந்தரராமசாமி

‘’நாலு நாட்களுக்கு ஒரு முறை ஸ்டவ் திரியை இழுத்துவிட வேண்டும்;மண்ணெண்ணெய் கிடைக்கும்போது வாங்க வேண்டும்;மழைக்காலத்தின் கவலை அரிசி;...மாங்காய்க் காலத்தில் ஊறுகாய்;வெயில் காலத்தில் அப்பளம்;பழங்கள் வரும் காலத்தை ஒட்டி ஷர்பத்,ஜூஸ்,ஜாம்......
மண்டையெல்லாம் பூச்சி,ஊறுகாய்,சுண்ணாம்பு என்று அடைத்திருக்காவிட்டால்...
மூளையின் இழுப்பறைகளை இவற்றை எல்லாம் போட்டு அடைத்திருக்காவிட்டால்...
ஒரு வேளை நீங்கள் அந்த ஆப்பிள் விழுவதைப் பார்த்திருக்கலாம்.
தண்ணீர் கெட்டிலின் மூக்கு நுனி ஆவியைப் பார்த்திருக்கலாம்.
புதுக் கண்டங்களைக் கண்டுபிடித்திருக்கலாம்.
கைலாச பர்வதத்தில் அமர்ந்து காவியம் எழுதியிருக்கலாம்.
குகைகளுக்குள் ஓவியம் தீட்டி இருக்கலாம்.
.....போர்கள்,சிறைகள்,தூக்குமரங்கள்,ரசாயனயுத்தங்கள் இல்லாத உலகத்தை உண்டாக்கி இருக்கலாம்.
நீங்கள் எங்கே போய்விட்டீர்கள்....
சரியான அளவில் எல்லாம் இடப்பட்ட சமையலில்...
காதிலும்,கழுத்திலும்,நுதலிலும் உறுத்திய நகையில்
பலம் என்று எப்படி நினைத்துக் கொண்டீர்கள்.
முங்குங்கள் இன்னும் ஆழமாக.
அடியை எட்டியதும் உலகளந்த நீரைத் தொடுவீர்கள்.
சுற்றியுள்ள உலகுடன் தொடர்பு கொள்வீர்கள்.

உங்கள் யோனியும்,ஸ்தனங்களும்,கருப்பையும் கழன்று விழும்.
சமையல் மணம் தூரப் போய்விடும்.

பால் தன்மை அற்ற நீங்கள்...

அதில் சிக்காத நீங்கள்,

அதில் குறுகாத நீங்கள்,

அதனினின்றும் விடுபட்ட நீங்கள்

அதைத் தொடுங்கள்.
தொட்டு எழுங்கள்
அதுதான் பலம் ; அதனின்றுதான் அதிகாரம்’’                                  
-வீட்டின் மூலையில் ஒரு  சமையலறை 
நெடுங்கதையில்  ’அம்பை’

’வாழ்கையில் பாசம்,தியாகம்,உறவுகள் என்பதற்கெல்லாம் என்ன பொருள்?
 அதை நம்பி வாழும் வாழ்க்கை முழுமை கொண்டதாகுமா?
 ஆகாது என்றே நம் மரபு நமக்குச் சொல்லியுள்ளது.
 உறவுகள் மாயை என்றும்,அதில் ஈடுபடுகையிலேயே அது மாயை என்ற உணர்வு தேவை என்றும் அது மீள மீளக் கூறுகிறது.
அதற்கு அப்பால் செல்லும் தேடலும்,பிடிப்பும் மனிதனுக்குத் தேவை.
உறவுகளைப் பற்றுதல் போலவே விடுதலும் முக்கியமானது என்று நம் மரபு ஆணை இடுகிறது.
விடாதவனுக்கு வீடுபேறு இல்லை என்று அது சொல்கிறது.
ஒற்றை இலக்கையே வாழ்வின் சாரமாகக் கொண்டு உழைக்கும் மனிதர்கள் அந்த இலக்கு எய்தப்பட்டு ‘உரிய வெற்றிக் கொண்டாட்டம்’முடிந்ததும் ஆழமான வெறுமையைச் சென்றடைகிறார்கள்.
அது லௌகீகமான இலக்காக இருக்கும்போது வெறுமை மேலும் மேலும் பெரிதாகிறது.
இது ஒரு முக்கியமான மானுட அவலம்.  - ஜெயமோகன்(ஒரு கட்டுரையில்)

இத்தனையும் சொல்லிக் குறள் சொல்லாமலா?

‘’யாதெனின் யாதெனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்’’


.

7 கருத்துகள் :

புலவன் புலிகேசி சொன்னது…

இப்படிப் பட்ட ஆசிரிய அன்னையை வாழ்த்த எனக்கு வயதில்லை...வணங்குகிறேன்.

ஸ்ரீராம். சொன்னது…

வணக்கம் அம்மா,
தேனம்மைலக்ஷ்மணனின் பக்கம் படித்து இங்கு வந்தோம். முன்னம் ஒரு முறை consent to be nothing பக்கம் பார்த்தும் வந்ததுண்டு. ஃபாத்திமா கல்லூரியில் பணி புரிந்தீர்கள் என்று பார்த்ததும் என் மனைவி அந்தக் கல்லூரியின் பழைய மாணவி என்பதால் அவளிடம் உங்கள் படத்தைக் காட்டியதும் அவள் நீங்கள் அவளுக்கு பாடம் எடுத்த நாட்களை நினைவு கூர்ந்தாள்.அறுபது அகவை பூர்த்திக்கு எங்கள் வாழ்த்துக்களும், வணக்கங்களும்.
இந்த இடுகையில் உள்ள தெரிவு செய்யப் பட்ட வரிகளைப் படித்தும் மகிழ்ந்தோம்.

ISR Selvakumar சொன்னது…

//பழைய கணங்களை,அவை தந்த படிப்பினைகளை - இனிமைகளை - ரசனைகளை-பரவசத்தை //
தான் அனுபவிப்பது மட்டுமல்லாமல், மற்றவர்களுக்கும் பகிரும்போது அந்த அனுபவம் இரட்டிப்பாகிறது.

‘’தீதும் நன்றும் பிறர் தர வாரா’’

இசைஞானி இளையராஜா திருவாசகம் சிம்பொனி இசைத்தொகுப்பை வெளிவிட்டபோது ‘’தீதும் நன்றும் பிறர் தர வாரா’’ என்ற வரிகளை பயன்படுத்தினார். பாடப்புத்தகத்தில் படித்தபோது மனதில் தங்காத வரிகள் அன்று அவர் உச்சரித்ததும் மனதில் தேங்கிப்போனது.

நான் இயக்கிக் கொண்டிருக்கும் அவர் என்ற திரைப்படத்திற்கு குறிப்பிட்ட ஒரு பாடலுக்கு வரிகளை தேடிக்கொண்டிருந்தோம். சட்டென ‘’தீதும் நன்றும் பிறர் தர வாரா’’ வந்து அமர்ந்து கொண்டது.

அதே போல இன்று நீங்கள் குறிப்பிட்டுள்ள காலத்தால் அழிக்க முடியாத சில வரிகள், மற்றவர்களின் வாழ்வில் சில கணங்களில் சட்டென நினைவில் வந்து நிற்கும்.

தேனம்மை லட்சுமணன் உங்கள் மாணவி என்பதை அவருடைய வலைப்பூவில் பெருமையோடு குறிப்பிட்டு இருந்தார்கள். அதனால் நானும் உங்கள் தமிழ் படிக்க இங்கு வந்தேன்.

முத்துலெட்சுமி/muthuletchumi சொன்னது…

அருமையான பயனுள்ள வரிகளை பகிர்ந்து கொண்டிருக்கிறீர்கள்.. நன்றி

'பரிவை' சே.குமார் சொன்னது…

நல்லாயிருக்கும்மா.

Thenammai Lakshmanan சொன்னது…

படித்ததில் பிடித்தது நல்ல பகிர்வு அம்மா

என் அன்பிற்குரிய அம்மாவை வாழ்த்தியதற்கு நன்றி .புலிகேசி.,ஸ்ரீராம் .,செல்வகுமார் .,முத்துலெட்சுமி மற்றும் சே. குமார்

க.நா.சாந்தி லெட்சுமணன். சொன்னது…

அம்மா!அறுபது அகவை பூர்த்திக்கு எங்கள் வாழ்த்துக்களும், வணக்கங்களும்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....