துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

21.10.10

புதுமைப்பித்தன் முன்மொழியும் ‘கற்பு’

’’கண்ணகி உருவில் வீர வணக்கம் செய்யப்பட்ட கற்பை மணிக்கொடி எழுத்தாளர்கள் கேள்விக்கு உட்படுத்தினர்’’
என்று மார்க்சீய விமரிசகரான திரு கேசவன் குறிப்பிடும் கருத்து , அக் காலகட்ட எழுத்தாளர்கள் வேறெவரையும் விட - தமிழ்ச் சிறுகதையின் பிதாமகராகப் போற்றப்பட்ட புதுமைப்பித்தனுக்கு மிகவும் பொருத்தமானதாக அமைந்திருக்கிறது.

‘அமுக்கப்பட்ட மக்களின் குர’லாகவே சிறுகதை என்ற இலக்கிய ஊடகத்தைக் கையாண்ட புதுமைப் பித்தன் , கற்பு என்ற வாழ்க்கை மதிப்பால் பலவகை அழுத்தங்களுக்கு ஆளாக்கப்பட்ட பெண்ணின் குரலைத் தன் படைப்புக்கள் பலவற்றிலும் ஒலிக்க விட்டிருப்பதோடு அக் கருத்தாக்கத்தின் அனைத்துப் பரிமாணங்களையும், அது சிக்கலாக்கும் வாழ்க்கைக் களங்கள் பலவற்றையும் தன் படைப்புக்களில் விரிவும்,ஆழமுமாக விமரிசித்திருக்கும் போக்கு , தனித்துவம் மிக்கது. இவ் வகையில் அவரது சமகாலப் படைப்பாளிகளிடம் மட்டுமன்றி அவருக்குப் பின்வந்த படைப்பாளிகளிடம் கூடக் காண இயலாத வேறுபட்ட நோக்குநிலை கொண்டவராகவே புதுமைப் பித்தனைக் காண முடிகிறது.

’’என்னமோ கற்பு,கற்பு என்று கதைக்கிறீர்களே !
இதுதான் ஐயா பொன்னகரம் !’’
என்று உரத்த பிரகடனம் செய்யும் ‘பொன்னகரம்’,
 இதிகாச மீட்டுருவாக்கம் செய்து அகலிகையை மீண்டும் கல்லாக்கும் ‘சாப விமோசனம்’ முதலிய - பரவலாக அறியப்பட்ட புதுமைப்பித்தனின் கதைகளில் மட்டுமன்றிப் பொதுவான வாசிப்புக் கவனத்தை அதிகம் பெற்றிராத அவரது பல சிறுகதைகளிலும் கூடக் ’கற்பு கற்பு என்று கதைப்பவர்’களின் கதையை ..அவ்வாறு அவர்கள் கதைப்பதிலுள்ள முரண்பாடுகளை எவ்வித சமரசமுமின்றி வெளிச்சத்துக்குக் கொணர்ந்திருக்கிறார் புதுமைப் பித்தன்.

’இந்தக் கற்பு , காதல் என்று பேத்திக் கொண்டு இருக்கிறார்களே ...அதெல்லாம் சுத்த ஹம்பக்...சுத்தப் பொய். மனிதன் எல்லாவற்றையும் தனது என்று ஆக்கிக் கொள்ள ஆசைப்படுகிறானே அதில் பிறந்தவை. தன் சொத்து,தான் சம்பாதித்தது,கஷ்டப்பட்டுச் சம்பாதித்தது தனக்கேஇருக்க வேண்டுமென்ற ஆசை........தனக்கில்லாவிட்டால் , தனது என்று தெரிந்த , தனது இரத்தத்தில் உதித்த குழந்தைகளுக்குக் கொடுக்க ஆசைப்படுகிறான்.பெண்கள் தங்கள் இஷ்டப்படி இருந்தால் அது எப்படி முடியும் ? அதற்குத்தான் கல்யாணம் என்ற ஒன்றை வைத்தான்.பிறகு தனக்குத் தெரியாமல் ஒன்றும் நடந்துவிடக் கூடாது என்பதற்குக் கற்பு என்பது பெருமை என்று சொல்லி வேலி கட்டினான்’’
-கற்புக் கோட்பாட்டின் தோற்றுவாயைப் பற்றித் தான் உள்வாங்கிக் கொண்டிருக்கும் சமூகவியல் கருத்தைத் தனது ‘இரண்டு உலகங்கள் ‘என்ற  சிறுகதையில் இவ்வாறு மிக எளிமையாகவும் ,அங்கதப் போக்குடனும் முன்வைக்கிறார் புதுமைப் பித்தன்.

ஆண்மை’ என்ற அவரது படைப்பில் நான்கு வயது சீமாச்சுவுக்கும், இரண்டு வயது ருக்மணிக்கும் பொம்மைக் கல்யாணம் நிகழ்கிறது.மணமக்கள் சேர்ந்து வாழ்வதற்குரிய வயது வரும் முன்பே இரு குடும்பத்துக்கும் பகை ஏற்பட்டுவிட, ’வயதுக்கு வந்து விடும்’ ருக்மணி , சீமாச்சுவுடன் இணைய முடியாத நிலை ஏற்படுகிறது.பெற்றோர் அறியாமல் ஒருநாள் இருவர் சந்திப்பும் நிகழ்ந்துவிட , ருக்மணி கருவுறுகிறாள்.அதுநாள் வரை வாழாவெட்டியாகத் தூற்றப்பட்ட அவள் இப்போது கற்புத் தவறியவளாகப் பழிக்கப்படுகிறாள்.கணவன் அதற்குப் பொறுப்பேற்றுக் கொள்ளத் துணியாத நிலையில் அந்தப் பெண் சித்தப் பிரமை பிடித்தவளாகிறாள்.
கருவுக்குக் கணவனே காரணமான நிலையிலும் கற்புத் தவறியவளாய்ப் பெண் சித்தரிக்கப்படும் விசித்திரப் போக்கை இதன் வழி காட்சிப்படுத்துகிறார் புதுமைப் பித்தன்.

இளமை மணமும்,அதன் உடனிகழ்வான விதவைக் கொடுமையும் பல்கிப் பெருகியிருந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர் புதுமைப் பித்தன்.இளம் விதவையின் இயல்பான உணர்ச்சிகளும்,தேவைகளும் கற்பின் பெயரால் மறுக்கப்பட்டு அவள் கழுவேற்றப்படும் கொடுமைகளை ‘வாடா மல்லிகை’ , ‘வழி’ ஆகிய அவரது சிறுகதைகள் அழுத்தமாகப் பதிவு செய்திருக்கின்றன.
‘’சதிக்கொடுமை பெண்ணுடலை ஒரேயடியாக எரிக்கிறது; விதவைக் கொடுமையோ நாளும் நாளும் அவளைச் சித்திரவதைக்கு ஆளாக்குகிறது’’ என்று குறிப்பிடும் மார்கரெட் கோர்மெக் என்ற சமூகவியலறிஞரின் கருத்தையே அலமி என்னும் தனது பாத்திரத்தின் நினைவோட்டமாகப் பின்வருமாறு வெளியிடுகிறார் புதுமைப் பித்தன்.
‘’இந்த வெள்ளைக்காரன் ஒரு முட்டாள். சதியை நிறுத்திவிட்டதாகப் பெருமையடித்துக் கொள்கிறான்.அதை இந்த முட்டாள் ஜனங்கள் படித்துவிட்டுப் பேத்துகிறார்கள்.முதலில் கொஞ்சம் துடிக்க வேண்டியிருக்கும்.பிறகு...?ஆனால் வெள்ளைக்காரன் புண்ணியத்தால் வாழ்க்கை முழுவதும் சதியை ...நெருப்பின் தகிப்பை அநுபவிக்க வேண்டியிருக்கிறதே! வைதவ்யம் என்றால் என்ன என்று அவனுக்குத் தெரியுமா ?ஒவ்வொரு நிமிஷமும் நெருப்பாகத் தகிக்கும் சதியல்லவா வைதவ்யம்..?’’

சாத்திர சம்பிரதாயங்களின் பெயரால் விதவைப் பெண்ணின் இயல்பான பாலியல் விருப்பங்கள் பலியிடப்படுவதையும்,அவளுக்குத் தியாகி என்ற பட்டம் சூட்டுவதற்கே அவை பயன்படுவதையும் தனது சிறுகதைகளில் கடுமையான விமரிசனத்துக்கு உட்படுத்துகிறார் புதுமைப்பித்தன்.

 விதவையான தன்னை மறுமணம் புரிந்துகொள்ள ஓர் ஆடவன் முன்வந்தபோதும் அவனோடு தன்னைப் பிணைத்துக் கொள்ள மறுத்துவிட்டு ‘இயற்கையின் தேவை’க்காக மட்டுமே அவனது உறவை நாடுகிறாள் ’வாடாமல்லிகை’சிறுகதையின் சரசு.
பொருந்தா மணச் சிறையில் அகப்பட்டுக் கொண்டு ஒரு கிழவனிடம் தன் இளமையைப் பறி கொடுத்த கலியாணி(’கலியாணி’),தன்னை ஏற்க முன் வரும் ஒருவனோடு பிறரறியாமல் பழகுவதில் ஆர்வம் காட்டுகிறாளேயன்றி மரபுகளை மீறி அவனுடன் ஓடிப் போவதில் தயக்கம் காட்டி மறுத்து விடுகிறாள்.
‘மூடுண்ட ஒரு சமூக அமைப்பில் இத்தகைய பெண்கள் தம் பாலியல் தேவைகளை வெளிப்படையான - அங்கீகரிக்கப்பட்ட ஒரு சமூக உறவின் மூலம் நிறைவேற்றுகின்ற உரிமையைக் கோரிப் பெறுகின்ற அளவுக்கு பலமாக இல்லை’என்பதால் ‘இயற்கையின் தேவையைக் கூட மறுக்கும் இலட்சியவாதத்தை இவர் பெண்கள் முன் வைக்கவில்லை’என்று புதுமைப்பித்தனைப் பற்றித் திறனாய்வாளர்கள் குறிப்பிடுவது பொருத்தமானதே.

‘கற்பு’ , ‘தியாகம்’ என்ற மதிப்பீடுகளை எச் சூழலிலும் கைவிடாதவர்களாக இல்லாமல்..உயிரும்,உணர்ச்சிகளும்,பலவீனங்களும் கொண்ட இயல்பான மனிதர்களாக மட்டுமே பெண்களைக் காட்டும் யதார்த்த வாதப் போக்கே புதுமைப்பித்தனுடையது.
‘’இந்த இரத்ததை அந்தப் பிரம்மாவின் மூஞ்சியில் பூசிடுங்கோ’’என்று கூறியபடி உயிர் துறக்கும் விதவை அலமியும்(’வழி’),
‘’நான் பரத்தையன்று பெண்! இயற்கையின் தேவையை நாடுகிறேன்’’ என்று கூறிக் கிணற்றில் விழுந்து உயிரை மாய்க்கும் சரசுவும்(’வாடாமல்லிகை’)
கற்பின் பெயரால் பெண்ணின் வாழ்வுரிமையை மறுக்கும் சமூகப் பொதுப் புத்தியின் மீது சாட்டையடிகளை வீசியெறிந்திருப்பதை எவராலும் மறுக்க இயலாது.

கற்புக் குறித்த சமூக அளவுகோல் பால்பேதமுடையதாக இருப்பதையும் அவர் எடுத்துக் காட்டத் தவறவில்லை.
ஒப்பந்தம்’என்னும் அவரது சிறுகதை ஒன்றில் நன்கு படித்து நல்ல வேலையில் அமர்ந்துவிட்ட பார்வதிநாதனுக்குப் பெருந்தொகையுடனும்,நகையுடனும் கூடிய வரதட்சிணையுடன் திருமணம் முடிவாகிறது.திருமணம் நிச்சயமான களிப்பில் - புதுவகை உணர்வும்,’இயற்கையின் தேவை’யும் தூண்ட ‘இரண்டு மணி நேரத்துக்கு ஐந்து ரூபாய்’ என்ற பேரத்துடன் ஒரு பெண்ணிடம் தன் பொழுதைச் செலவிடுகிறான் அவன்.
இயல்பான மண உறவுக்கு வரதட்சிணை பெறும் ஆடவன்,முறையற்ற உறவுக்குத் தன் கைப் பொருளைச் செலவிடும் முரண்பாட்டை..
‘’அந்த சிங்கி குளத்துப் பெண் மூவாயிரம் ரூபாயைப் பணயமாக வைத்து அவனுடன் வாழ்க்கையைப் பிணைத்துக் கொள்ளச் சம்மதிக்கும்பொழுது,ஐந்து ரூபாய்க்கு இரண்டு மணி நேரம் சரிதானே’’(’ஒப்பந்தம்’)என்று தனது வழக்கமான அங்கதப்போக்கில் எள்ளலாக்குகிறார் புதுமைப்பித்தன்.

பெண்ணின் வாழ்வில் கற்புக் கோட்பாடு ஒரு சுமையாக..சிலுவையாக மாறிவிடுவதைத்தான் புதுமைப் பித்தன் எதிர்க்கிறாரேயன்றி அது ஒரு தனி மனித ஒழுக்க நெறி என்பதில் அவருக்கு மாற்றுக் கருத்தில்லை.
‘’கற்பு நிலை என்னவென்பது எனக்குத் தெரியும்.பிறர் புகுத்திக் கற்புநிலை ஓங்குவது அனுபவ சாத்தியமான காரியமன்று’’
என்று கற்புநிலை குறித்த தனது உறுதியான சிந்தனையைச்’சிறை காக்கும் காப்பு எவன் செய்யும்’எனப் பதிவு செய்கிறாள் சாவித்திரி என்னும் அவரது ஒரு பாத்திரம்(’இந்தப்பாவி’)

ஆண் - பெண் ஆகிய இரு பாலார்க்கும் ‘கற்பு’ என்பது மனம் சார்ந்த ஓர் அறம் மட்டுமே என்பதிலும் அதனை எவ்வாறு நடைமுறைப்படுத்துவதென்பது அவரவரின் தனிப்பட்ட உரிமை என்பதிலும் புதுமைப்பித்தன் கொண்டிருந்த தெளிவே மேற்காணும் வரிகளில் வெளிப்படுகிறது.

பெண்ணின் தனிமனித வாழ்வுரிமையை மறுக்கும் மரபுவழிச் சிந்தனைகளை மறு விவாதத்துக்கு உட்படுத்திய புதுமைப்பித்தன் அவற்றுக்கு இதுதான் மாற்று என்பதை எங்கும் குறிப்பிடவில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
வாசகர்களின் சிந்தனையைப் புதுமையான முற்போக்குத் தளத்தின்பால் நகர்த்துவது மட்டுமே அவரது நோக்கமாக இருந்திருக்கிறது.இதுவே புதுமைப் பித்தன் என்ற கலைஞனின் வெற்றியுமாகிறது


5 கருத்துகள் :

அப்பாதுரை சொன்னது…

அருமை. பொன்னகரம் மறந்தே விட்டது! நினைவூட்டியதற்கு நன்றி.
மற்றபடி, strange coincidence.
உங்கள் இடுகைக்கான சுட்டியை என்னுடைய பதிவின் ஒரு பின்னூட்டத்தில் அளிக்க அனுமதி வேண்டுகிறேன்.

சாய்ராம் கோபாலன் சொன்னது…

வாவ். எவ்வளவு தெளிந்த எண்ணங்கள் அவருக்கு அப்போதே.

நன்றி அப்பாதுரை, உங்கள் ப்ளோகில் போட்டாதல் இந்த ப்ளாக் அறிந்தேன்

RVS சொன்னது…

அப்பாதுரை சாருக்கு ஒரு நன்றி. புதுமை பித்தனின் கற்பு பற்றிய பதிவு கரண்டு மாதிரி இருக்கு. நன்றி சுசீலா மேடம்.

நண்பர்கள் உலகம் சொன்னது…

அருமையான கருத்துக்கள்.இன்னும் ஆழமாக எழுதியிருக்கலாமோ?

எம்.ஏ.சுசீலா சொன்னது…

திரு சேகர், பலவகை வாசிப்புத் தளங்களிலுள்ளவர்களுக்கும் சென்று சேர்வதற்காகவே அவ்வாறு எழுதினேன்.இது பெரிய ஆய்வு ஒன்றுமல்ல.புதுமைப்பித்தனின் கற்பு சார்ந்த நிலைப்பாட்டை விளக்கும் எளிய கட்டுரை மட்டுமே.

வருகை புரிந்தோர்க்கு நன்றி

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....