துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

23.10.10

குற்றமும் தண்டனையும்-இரு எதிர்வினைகள்

புகழ்பெற்ற ரஷிய நாவலாசிரியர் பியோதர் தஸ்தாயெவ்ஸ்கியின்
 ‘குற்றமும் தண்டனையும்’,மற்றும் ‘இடியட்’(அசடன்-அச்சில்..)ஆகிய படைப்புக்களை நான் தமிழில் மொழியாக்கம் செய்திருப்பது இவ் வலைப்பதிவைத் தொடர்ந்து வாசித்து வரும் வாசகர்கள் அறிந்ததே.
குற்றமும் தண்டனையும் நூல் சார்ந்ததாகக் கிட்டத்தட்ட ஒரே சமயத்தில் இரு வகையான எதிர்வினைகள் எனக்கு வந்து சேர்ந்தன.



முதல் எதிர்வினை , மூன்றாம் கோணம் என்னும் வலைப்பூவில் ’வாசிக்கலாம் வாங்க’பகுதிக்காக சகோதரி ஷஹிதாவால் எழுதப்பட்ட நூல் அறிமுகத்துக்கான இணைப்பு.
http://moonramkonam.blogspot.com/2010/10/blog-post_08.html
 அந்நூலை வாசித்த மனக்கிளர்ச்சி மாறியிராத நிலையில் தொடர்ந்து அவர் எனக்கு ஒரு கடிதமும் எழுதியிருந்தார்.அதன் ஒரு சிலபகுதிகள் கீழே;
’’என்னுடைய தோழி ஒருத்தியை கேட்டுக் கொண்டு சென்னையிலிருந்து ’குற்றமும்தண்டனையும் ‘புத்தகத்தை வரவழைத்து, படித்து, என்னால் இயன்றவரையில், அது குறித்து மூன்றாம் கோணத்தில், 'வாசிக்கலாம் வாங்க' பகுதியில் எழுதி உள்ளேன். தாங்கள் படித்துவிட்டுப் பின்னூட்டம் எழுதினால் மிகுந்த பெருமை அடைவேன்.
மேலும், புகழ வேண்டும் என்ற நோக்கத்தில் கூறுகிறேன் என்று எண்ண மாட்டீர்கள் என்ற நம்பிக்கையில் சொல்கிறேன்...நீங்கள் செய்திருப்பது மகத்தான சாதனை.மாதக்கணக்கில் உழைத்திருப்பீர்கள் இந்த மொழியாக்கத்திற்காக. இல்லையா?
நாயகனின் மனப் போராட்டம்.. என் உள்ளத்தில் ஏற்படுத்திய பாதிப்பைப் பார்க்கிலும், கதையை முழுமையாக உள்வாங்கி, தமிழில் எழுத வேண்டியிருந்த உங்கள் உள்ளப் பாதிப்பு பற்றி நினைக்கவே பிரமிப்பாக உள்ளது.
 தல்ஸ்தோயின் "ஆன்னா கரீனினா" எனக்கு மிக மிக விருப்பமான நாவல். என்னிடம் அதன் ஆங்கிலப் பதிப்பு தான் உள்ளது. அதைப்பற்றி கூட மூன்றாம் கோணத்தில் எழுதி உள்ளேன். மீள மீள வாசித்தாலும், அலுப்புத் தராத படைப்பு. ஆனாலும் தமிழில் வாசிப்பதைப் போல வருமா?
உங்கள் புண்ணியத்தில் உலகப் பிரசித்தி பெற்ற ஓர் உன்னதமான காவியத்தை, தமிழில் வாசித்து இன்னமும் அதன் பாதிப்பிலிருந்து மீளாமல் இருக்கிறேன்.
தமிழர் உலகத்துக்குத் தாங்கள் செய்துள்ள மகத்தான சேவை இது. "crime and punishment" ஐ பார்க்கிலும், "இடியட்" மேலும் பிரமாதமான நாவல் என்று, சென்னை விஜயா மருத்துவமனையில் மயக்கவியல் நிபுணராக உள்ள என் ஒரே தம்பி சில நாட்களுக்கு முன்பு தான் பரிந்துரைத்தான். என்னைப் போலவே அவனும் ஒரு புத்தக வெறியன்.'இடியட் '..ஐயும் தாங்கள் மொழியாக்கியுள்ளீர்கள் என்பது மிகவும் இனிப்பான செய்தி.நன்றியும், வாழ்த்துக்களும்’’...





இரண்டாவது எதிர்வினை...’பெயரில்லா’ ஒருவரால் மொழியாக்கத்துக்குச் சம்பந்தமே இல்லாத எனது வேறொரு பதிவுக்கு அனுப்பப்பட்ட பின் வரும் பின்னூட்டம்;
//உங்களுக்கு ரஷ்யன் மொழி தெரியுமா?! குற்றமும் தண்டனையும் ஆங்கில வழியாக மொழி பெயர்த்திருந்தால் ஆங்கிலம் வழி தமிழில் என்றே புத்தக அட்டையில் இருக்க வேண்டும். தவிர, மூன்றாவது மொழி வழியான மொழிபெயர்ப்புகள் தவிர்க்கப் படவே வேண்டும். ஆங்கிலம், மற்ற உலக மொழிகளில் வெளிவரும் மொழிபெயர்ப்புகள் அனைத்தும் நேரடியாக மூல மொழியிலிருந்து செய்யப்படுபவையே.//
ஒரு படைப்பு அல்லது மொழியாக்கம் பொதுவான வாசிப்புத் தளத்திற்கு வந்து விட்டாலே அது சார்ந்த பாராட்டுக்கள் மற்றும் விமரிசனங்களைச் சம நிலையில் உள் வாங்கிக் கொள்ளும் பக்குவம் ஏற்பட்டாக வேண்டும் என்பதை அறிந்து வைத்திருந்தபோதும்,குறிப்பிட்ட இப் பின்னூட்டம் வேண்டுமென்றே சீண்டிப் பார்க்கும் நோக்குடனோ அல்லது மொழிபெயர்ப்புக்கள் பற்றிய சில அடிப்படைப் புரித்ல்கள் கூட இன்றியோ எழுதப்பட்டிருப்பதாகக் கருதுவதால் இதற்கு மறுமொழி அளிப்பது சில விளக்கங்களுக்கு வாசகர்களை இட்டுச்செல்லக் கூடும் என்று கருதுகிறேன்.
’சென்றிடுவீர் எட்டுத் திக்கும்..கலைச் செல்வங்கள் யாவும்
          கொணர்ந்திங்கு சேர்ப்பீர்’
என்றும்,
‘’பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியிற் பெயர்த்தல் வேண்டும்’’
என்றும் பாரதி குறிப்பிட்டபோது அத்தகைய மொழியாக்கங்கள் மூலமொழியின் வழியாக மட்டுமே செய்யப்பட வேண்டுமென அவன் உறுதியாக எண்ணியிருக்க மாட்டான்.நடைமுறை சாத்தியமற்ற அத்தகைய வெற்றுக் கோஷங்களால் எந்தப் பயனும் விளையாது என்பதை அந்தத் தொலைநோக்கு மனம் தெளிவாக உணர்ந்திருக்கும்.
உலகின் தலை சிறந்த (நோபல் பரிசு பெற்ற நாவல்கள் உட்பட)படைப்புக்கள் பலவற்றையும் பல்வேறு மொழிகளிலிருந்து தமிழுக்குக் கொணர்ந்து தமிழ் வாசிப்பையும்,எழுத்தையும் கிணற்றுத் தவளை நிலையிலிருந்து மீட்டெடுத்த - தமிழின் தலை சிறந்த விமரிசகரும்,படைப்பாளியும்,மொழிபெயர்ப்பாளருமான க.நா.சுப்பிரமணியம் (க நா சு)அவர்கள் ஆங்கிலத்தையே அதற்குரிய வாயிலாகக் கொண்டார்.
பன்முகத் தன்மை கொண்ட இந்தியாவில் வழங்கும் அஸ்ஸாமிய,ஒரிய,மணிப்புரிக் கதைகளைத் தமிழில் மொழியாக்கம் செய்ய இந்தியே இடை மொழியாக நின்று உதவியிருக்கிறது.
சா.தேவதாஸின் இந்தியச் சிறுகதைகளை இதற்குச் சான்றாகக் கூறலாம்.
கா.ஸ்ரீ ஸ்ரீ(மராத்தி), கல்கத்தா சு.கிருஷ்ணமூர்த்தி(வங்கம்), தி.சு.சதாசிவம்,பாவண்ணன்(கன்னடம்), ஜெயமோகன்(மலையாளம்) போன்ற வெகு சிலரே-  ஒரு சிலர் பிரெஞ்சிலிருந்தும்கூட(குட்டி இளவரசன் ஸ்ரீராம்-யவனிகா) - மூல மொழியிலிருந்து நேரடியாக மொழிபெயர்ப்புச் செய்பவர்களாக இருக்கிறார்கள்
பேரா.தர்மராஜனுக்கும் கூட ஓரளவு ரஷிய மொழிப் பரிச்சயமிருந்தபோதும் ஆங்கில வழியில்தான் அன்னாகரீனாவை அவர் மொழிபெயர்த்தார் என்பதை அறிந்திருக்கிறேன்.
லத்தீன் அமெரிக்கச் சிறுகதைகளைத் தமிழில் அளித்த தொகுப்பாசிரியரும்,மொழிபெயர்ப்பாளருமான ஆர்.சிவகுமாரின் முன்னுரையில் இடம் பெற்றுள்ள வரிகள் இதோ;.//லத்தீன் அமெரிக்க இலக்கியம்,ஸ்பானிஷ் மொழியில் எழுதப்படுவது.இச் சிறுகதைகள் ஸ்பானிஷிலிருந்து ஆங்கிலம் வழியாகத் தமிழுக்கு வருகின்றன.நம் காதலியை மூன்றாம் ஆள் மூலம் காதலிப்பது எப்படிப்பட்ட இழப்போ அப்படிப்பட்டதுதான் இலக்கியப் படைப்புக்களை மொழிபெயர்ப்புக்கள் மூலம் படிப்பதும் என்று தாகூர்சொல்லியிருக்கிறார்.இரண்டு மொழிபெயர்ப்புக்களில் மூலத்தின் அழகு பாதி போயிருக்கும்.

இருந்தும் நேற்றும்,இன்றும் நமக்கிணையான கலாச்சாரமும்,சமூக வாழ்வும் கொண்ட ஒரு ஜனத்திரளின் கதைகள் இவை என்ற அளவில் இவை நமக்குத் தேவை.இது மாதிரியான முயற்சிகள் தமிழில் தொடரும்போதுதான் தமிழில் இது அதன் வகையில் முதல் நூல் என்பதால் உண்டாகும்பெருமிதத்தையும் நியாயப்படுத்த முடியும்//

 மூல மொழியிலிருந்தே நேரடியாகச் செய்யப்படும் மொழியாக்கங்கள் பாராட்டுக்குரியவைதான்.ஆனால் அதற்குரிய போதுமான வசதியும் வாய்ப்பும் ஏற்படும் வரை எதுவுமே செய்யாமல்....உலக இலக்கியத் தளத்தில் நிகழும் முயற்சிகள் எதையுமே தெரிந்து கொள்ள வழியின்றி முடங்கிப் போய் இருப்பதை விட மூலத்துக்குப் பக்கமான ஒரு மொழிபெயர்ப்பை இன்னொரு மொழி வழி முயற்சிப்பதில் என்ன பிழை இருக்க முடியும் என்று தெரியவில்லை.

இதில் மற்றொரு கோணமும் உண்டு.குறிப்பிட்ட மொழியறிவு வாய்த்திருப்பதனாலேயே படைப்பின் ஜீவனைக் கொண்டு வந்துவிட முடியும் என்ற எண்ணமும் பிழையானதே.
எனக்குத் தெரிந்த பதிப்பாளர் ஒருவர்,ரஷிய மொழி தெரிந்த ஒரு நபரிடம் ஆகச் சிறந்த உலக இலக்கியம் ஒன்றை மொழியாக்க அளித்தார்.
 கருத்துக்களைச் சரிவர உள் வாங்காமல்,கதையைக் கோவையாகத் தர முடியாத அந்த முயற்சி தற்போது அரைகுறையாகத்தான் நின்று கொண்டிருக்கிறது

மேலும் ஒரே பிறமொழிப் படைப்புக்குப் பல ஆங்கில மொழிபெயர்ப்புக்கள் இருப்பதும் உண்டு.
’குற்றமும் தண்டனையும்’மற்றும் ‘அசடன்’நாவல்களை மொழிபெயர்ப்புச் செய்தபோது ஒவ்வொன்றுக்கும் கிட்டத்தட்ட மூன்று நான்குஆங்கில மொழியாக்கங்களை ஒப்புநோக்கித் தெளிவு பெற்ற பின்பே அவற்றுக்கு இறுதி வடிவம் கொடுத்திருக்கிறேன்.

இத்தனைக்குப் பிறகும் இது தொடர்பான ஐயங்களையும்,ஆதங்கங்களையும் என் மதிப்பிற்குரிய எழுத்தாள நண்பர் திரு ஜெயமோகன் அவர்களுடன் பகிர்ந்து கொண்டபோது அவர் மிக விரிவான விளக்கங்களுடனும்,எடுத்துக் காட்டுக்களுடனும் அதை ஒரு கட்டுரையாகவே ஆக்கி
இரண்டாம் மொழிபெயர்ப்பு’என்ற தலைப்பில் தன் தளத்தில் பதிவு செய்திருக்கிறார்.
அன்புள்ள சுசீலா,
உங்களுக்கு கடிதம் எழுதியவர் யாராக இருந்தாலும் அவருக்கு சிந்தனைத்திறன் மிகவும் குறைவு என்றே நினைக்கிறேன். வாசிக்கும், தெரிந்துகொள்ளும் விஷயங்களை பொதுவிவேகத்தையும் தர்க்கத்தையும் பயன்படுத்திச் சூழலுடன் பொருத்தி யோசிப்பதே சிந்தனை என்று சொல்லப்படுகிறது. சிந்திக்காமல் சொல்லப்படும் கருத்துக்கள் எவையாயினும் அவை அறிவின்மையையே காட்டுகின்றன 

என்று தொடங்கி....

ஆங்கிலம் நம்முடைய உலகப்பலகணி. உலகத்தொடர்பு இல்லாத பழமையான நம் மொழிச்சூழல் அதன் வழியாகவே உலகத்துடன் தொடர்பு கொண்டது. ஆங்கிலம் வழியாக மொழியாக்கங்கள் செய்து நமக்கு நவீன இலக்கியங்களையும் சிந்தனைகளையும் அறிமுகம் செய்தார்கள் பாரதி மாதவையா தொடங்கி க.நா.சு வரையிலான முன்னோடிகள். இன்றுவரை நாம் அதன் வழியாகவே உலகைப்பார்க்கிறோம். அது வரலாறு நமக்களித்த வாய்ப்பு. அந்த வாய்ப்பை இன்று வெற்றிகரமாக பயன்படுத்திக்கொள்வோம்.
அந்த முயற்சியில் முக்கியமான பங்களிப்பை நீங்கள் ஆற்றுகிறீர்கள். மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளுடன் [தெரிந்துகொண்டதை வைத்து பார்த்தால் சிங்களமொழியுடன்கூட] நம்மை ஒப்பிடும்போது மிகமிகக் குறைவாகவே இங்கே மொழியாக்கங்கள் நிகழ்கின்றன. காரணம் இன்றும் மொழியாக்கம் பொருளியல் ஆதாயம் இல்லாததாக, தனிமனிதர் தன் இலட்சியவாதத்தால் மட்டுமே உந்தப்பட்டு செய்வதாக, உள்ளது. ஆகவே இன்று தங்கள் நேரத்தையும் உழைப்பையும் செலவிட்டு மொழியாக்கம் செய்யும் ஒவ்வொருவரும் போற்றக்கத்தக்கவர்களே.
நீங்கள், துளசி ஜெயராமன், சரஸ்வதி ராம்நாத், சு.கிருஷ்ணமூர்த்தி, சித்தலிங்கையா, சி ஏ பாலன், ரா.பூர்ணையா, நா.தர்மராஜன், த.நா.குமாரசாமி, த,நா.சேனாபதி, அ.கி.கோபாலன், ஆர். சண்முகசுந்தரம், சு.குப்புசாமி, சா.தேவதாஸ் போன்ற மொழிபெயர்ப்பாளர்களுக்கு நம் அறிவூச்சுழலில் ஒவ்வொருவரும் கடன்பட்டிருக்கிறோம். குறைகூறவும் ஆலோசனை சொல்லவும் பொதுவாக தமிழர்களுக்கு ஆர்வம் அதிகம்.செயலாற்ற மிகச்சிலரே இருப்பார்கள்.
என்ற முத்தாய்ப்புடன் முடியும் அந்தப் பதிவை முழுமையாக வாசித்தால் பெயரில்லாமல் (நூலையே படிக்காமலும் கூடக்) கேள்வி கேட்ட அன்பருக்கு மட்டுமன்றி மொழிபெயர்ப்புக்கள் தொடர்பாக அறிந்து கொள்ள விரும்பும் அனைவருக்குமே அது ஒரு கண்திறப்பாக அமையக் கூடும்.


11 கருத்துகள் :

மா.சரவணகுமார். சொன்னது…

// செயலாற்ற மிகச்சிலரே இருப்பார்கள்....//

ஜெயமோகன் சார் நல்லா சொல்லியிருக்கிறார்.

இனிய உதயம் மாத இதழ் [ நக்கீரன் ] எவ்வளவு மொழி பெயர்ப்பு செஞ்சியிருகாங்க...

தங்கள் நேரத்தையும் உழைப்பையும் செலவிட்டு மொழியாக்கம் செய்யும் ஒவ்வொருவரும் போற்றக்கத்தக்கவர்களே.

ஷஹிதா சொன்னது…

வணக்கம் அம்மா,
தங்கள் பதிவு கண்டு மகிழ்ச்சியும், அதிர்ச்சியும் அடைந்தேன்.திருவாளர். பெயரில்லா.. வின் எதிர்வினை பற்றி அறிந்து அதிர்ச்சி. ஏதோ இந்திய நண்டுகள் தாமும் முன்னேறாது, வேறெவரையும் மேலே செல்ல விடாது என்று ஒரு கதை சொல்வார்களே அந்தக் கதையின் நினைவு தான் வருகிறது எனக்கு.இப்படியெல்லாம் கூடப் பக்குவமில்லாமலும், காழ்ப்புணர்ச்சியின் மொத்த உருவமாகவும் மனிதர்கள் இருக்கிறார்களே? அந்தக் கடிதத்துக்கு தாங்கள் இத்தனை முக்கியத்துவம் கொடுத்திருக்கத்தான் வேண்டுமா? என்னவோ..எனக்கு ஆதங்கமாக உள்ளது

எம்.ஏ.சுசீலா சொன்னது…

அன்பின் ஷஹிதா,
ஒரு வகையில் அக் கடிதம் நன்மையே செய்திருக்கிறது.எல்லா வகை மொழியாக்கங்களைப் பற்றியும் ஒட்டுமொத்தமாகச் சிந்திக்க வைத்ததோடு திரு ஜெயமோகனிடமிருந்தும் அரியதான கட்டுரை ஒன்றைப் பெற்றுத் தந்திருக்கிறதல்லவா?
தீமையில் விளையும் நன்மை இதுதான்.
மேலும் எல்லா வகையான கருத்துப் பரிமாற்றங்களுக்கும் நாம் இடமளிக்க வேண்டுமல்லவா?

எம்.ஏ.சுசீலா சொன்னது…

குறிப்பிட்ட இப் பதிவை எழுதத் தூண்டுதலாக இருந்த முகமில்லா நபர் மீண்டும் அதே போலப்’பெயரில்லா’த கருத்து ஒன்றை உதிர்த்திருக்கிறார்.அது இந்தப் பதிவோடு தொடர்பு கொண்டதெனினும் அவர் இதில் அதைப் பதிவு செய்யாமல் வேறு பதிவில் இதை அனுப்பியிருக்கிறார்.தொடர்ச்சி கருதி அதன் ஒரு சில பகுதிகளை மட்டும்(நாகரிகத்துக்கு அப்பாற்பட்ட விஷயங்களைத் தவிர்க்கும் பொருட்டு) வெளியிட்டு அதற்குக் கீழ் என் மறுமொழியினையும் பதிவு செய்திருக்கிறேன்

பெயரில்லா சொன்னது…

அன்புள்ள சுசீலா அவர்களுக்கு,
நீங்களே வசதி செய்து தந்திருப்பதாலேயே அனானியாக வருகிறேன்.
ஜெயமோகனுக்கு நீங்கள் எழுதிய கடிதம் மற்றும் பதில்.
மொழிபெயர்ப்புகளில் ஆங்கிலத்தில் பெயர்த்தவரின் பெயரையும், ஆங்கில வழியாகச் செய்யப்பட்ட தகவலையும் குறிப்பிட வேண்டும் என அவரே சொல்லிவிட்டார். கூடவே ஆங்கில ஆக்கத்தை வெளியிட்ட பதிப்பகத்தின் பெயர், ஆண்டு ஆகிய தகவல்களோடு, ஆங்கில மொழிப்பதிப்பின் பதிப்புரிமை பெற்றவரின் முறையான ஒப்புதலோடுதான் வெளியிடப்படுகிறது என்ற குறிப்பும் அவசியம்.
மொழிபெயர்ப்பு, எடிட்டிங், புத்தகத் தயாரிப்பு, வெளியீடு போன்றவற்றில் மேலை நாட்டவரை ஆதர்சமாகக் கொள்ளவதற்குக் காரணம் அவர்களின் வெள்ளைத்தோல் அல்ல. இத்துறைகளில் அவர்கள் பலபடிகள் நமக்கு முன்னே இருக்கிறார்கள் என்பதாலேயே. தமிழ்ப் பதிப்பாளர்களில் ஓரிருவர் தவிரப் பிறருக்கு பத்தகத்தின் முதுகெலும்புப் பகுதியை எந்தத் திசையில் அச்சிட வேண்டும் என்பதே தெரிவதில்லை. 99 சதவீதப் புத்தகங்களில் இப்பகுதி தலைகீழாகவே அச்சிடப்படுகிறது! உங்கள் புத்தகத்துக்கே கூட ஐ.எஸ்.பி.என். எண் உள்ளதா என்று எனக்குத் தெரியவில்லை.
என் மறுமொழியில் மூன்றாவது மொழி வழி பெயர்ப்பதை முற்றிலும் தவிர்க்கவேண்டும் என்று சொல்லவில்லையே. “தவிர்க்கப்படவே வேண்டும்” என்பதிலுள்ள ஏகாரமே “கூடுமான வரையில்” என்ற பொருளைத் தரவில்லையா?
ஸ்வாஹிலிக்கும், மணிப்புரிக்கும் நேரடி மொழிபெயர்ப்பாளர் நம்மிடையே இல்லாமல் இருக்கலாம். ரஷ்யன் அப்படியா?
மேலும், சோவியத் பதிப்பகங்கள் வெளியிட்ட புத்தகங்களை ஒரு எடிட்டர் மூலத்தோடு ஒப்பிட்டுப் பார்ப்பார் என்று ஜெ-யே கூறுகிறாரே!
நீங்களே எனக்கு நேரடியாகப் பதில் சொல்லியிருக்கலாம். ஜெ-யிடம் சென்றதால் அவர் அநாவசியமாக என்னை -யாரென்று தெரியாமலே- மனம் போல அர்ச்சித்திருப்பதைப் பார்க்க சிரிப்பு வருகிறது.

எம்.ஏ.சுசீலா சொன்னது…

பெயர் மறைத்து எழுதுவதற்கு எந்த வகையான உள்நோக்கம் இருந்தாலும் அது நாகரிகமான பண்பாடாக இருக்க முடியாது.’நெஞ்சில் உரமும் நேர்மைத் திறனுமற்று வஞ்சனையை மட்டுமே வாழ்வாகக் கொண்டிருக்கும் வாய்ச் சொல் வீரர்கள் மட்டுமே வாடிக்கையாய்க் கடைப்பிடிக்கும் வழக்கம் அது.ஏதோ ஒரு அஞ்சல் முகவரியிலிருந்து கொண்டுதான் கருத்தைப் பதிவு செய்கிறோம்;அதைக்காட்டக்கூடத் துணிவில்லை என்றால் சொல்லப்படும் கருத்துக்கு எந்த வகையில் மரியாதை அளிக்க முடியும்? .
1.எந்த ஆங்கில மொழியாக்கத்தின் வழி,இரண்டாம் மொழிபெயர்ப்பு செய்யப்படுகிறது என்று குறிப்பிட வேண்டும் என்று கூறுவதை நானும் உடன்படுகிறேன்;ஏற்கிறேன்.அது just a slip.not a fall..அது ஒரு சிறிய தவறுதானே ஒழியப் பெருங்குற்றமில்லை.அடுத்து வெளியாக இருக்கும் நூலில் அந்தக் குறிப்பு கட்டாயம் இடம் பெறும்.
அப்படியே அது தவறென்றாலும்,..தமிழில் வந்த பல இரண்டாம் மொழிபெயர்ப்புக்களில் குறிப்பாக என் மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய எழுத்தாளர் திலகவதிஅவர்கள் மொழிபெயர்ப்புச் செய்திருக்கும் தென் கிழக்காசிய நூல்கள் பலவற்றிலும்,வேறு பல இந்திய மொழி மொழியாக்க நூல்களிலும் - ஏன்...பேரா.தர்மராஜனின் மொழிபெயர்ப்பான அன்னாகரீனினாவிலும் கூட அந்தக் குறிப்பு இல்லை..
குறிப்பு இடம் பெற வேண்டும் என நெறிசால் கண்ணோட்டத்தில் சொல்வது வேறு;அதை மட்டுமே ஊதிப் பெருக்கிக் குறை காண்பது வேறு.
2.அடுத்து
ஏகாரம் ,உறுதிப் பொருளில்-தெளிவுபடச் சொல்லவே பெரிதும் பயன்படுவது.
‘’நல்லவே எண்ணல் வேண்டும்’’என்று கூறுகையில் பாரதி கூடுமானவரையில் நல்லது செய்ய வேண்டும் என்றா நினைத்திருப்பான்?அது போன்ற பைத்தியக்காரத்தனமான வாதம் இது.“தவிர்க்கப்படவேவேண்டும்’’’என்பதும், அது போன்ற கட்டளைதானே.
3.நான் நேரடியாகப் பதில் சொல்லாமல் ஜெயமோகனிடம் சிபாரிசுக்குப் போனதாகச் சொல்லும் இவர் நான் எழுதிய இந்தப் பதிவைப் படிக்கவே இல்லை(ஜெ.யின் தளத்தில் இவர் இதைப் படித்திருக்க வேண்டும்) என்றுதான் தோன்றுகிறது.இந்தப் பதிவைப் படித்திருந்தால் என் விரிவான பதிலுக்கும் விளக்கத்துக்கும் இன்னும் கூடுதல் வலுச் சேர்க்கவே ஜெ.யின் கடிதம் பயன்பட்டது என்பதைப் புரிந்து கொண்டிருப்பார்..
4. தானும் ஒரு மொழிபெயர்ப்பாளர் எனக் கூறிக் கொள்ளும் இவர்,சக எழுத்தாளர்களை இழிவுபடுத்தவும்,காழ்ப்புணர்ச்சியுடன் அணுகவுமே முயல்கிறாரேயன்றி,நல்ல முயற்சிகளை ஊக்கப்படுத்தும் நோக்கம் இவரிடம் இல்லை.
திருவிளையாடலில் வருவதைப்போலக் ‘குறைசொல்லியே பெயர் தட்டிவிட நினைக்கிறார் போலிருக்கிறது.அதற்குக் கூடப் பெயர் இல்லை! பாவம்

எம்.ஏ.சுசீலா சொன்னது…

மேலும் சில...தமிழில் பல நாள் பலரும்முயன்று முடிக்காமல் விட்ட ஒரு முயற்சி,குற்றமும் தண்டனையும் நாவலை முழுமையாக மொழியாக்கம் செய்வது.தற்புகழ்ச்சிக்காகச் சொல்லவில்லையென்றாலும் பல மாதங்கள் மிகக் கடுமையாக உழைத்துத்தான் இதைச் சாத்தியப்படுத்த முடிந்திருக்கிறது .பதிப்பாளரும் அரும்பாடுபட்டுச் செம்மையான பதிப்பாக்கியிருக்கிறார்.
தஸ்தாயெவ்ஸ்கியில் ஊறிய பல தமிழ் விமரிசகர்களும் படைப்பாளிகளும்(சி.மோகன்,கோலாகலஸ்ரீநிவாஸ்,கோணங்கி,எஸ்.ராமகிருஷ்ணன்,ஜெயமோகன்,சின்னப்பபாரதி,புவியரசு,தேர்ந்த மொழிபெயர்ப்பாளர்திரு கொல்கத்தா கிருஷ்ணமூர்த்தி.,லக்ஷ்மி மணிவண்ணன்.).இன்னும் முகம் தெரியாமல் எங்கெங்கிருந்தோ தொலைபேசியிலும்,மின் அஞ்சலிலும்,கடிதங்கள் வாயிலாகவும் நாவலைப் பற்றிய நெகிழ்வான எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளும் அன்பர்கள் எனப் பலரும் இம்முயற்சிக்கு வாழ்த்துக் கூறி வரவேற்கவே செய்திருக்கிறார்கள்.
மாற்றுக் கருத்தை விமரிசனத்தை எதிர்கொள்ள எனக்கு எந்தத் தயக்கமோ அச்சமோ இல்லை;ஆனால் அந்த விமரிசனம் நூலின் உள்ளடக்கத்தின் மீது -மொழிபெயர்ப்பில் நேர்ந்த பிழைகள் மீது,மொழிநடை மீது வைக்கப்பட்டிருந்தால் நான் அதைத் தலை தாழ்த்தி ஏற்றிருப்பேன்.
இந்த முகமில்லா..பெயரில்லாக் கருத்து அவ்வாறானதல்ல;இதற்கு விளக்கம் கூறி நேர விரயம் செய்ய எனக்கு மனமில்லை.எனினும் இதைவெளியிட்டு விளக்கம் தராவிட்டால் என் தரப்பு அஞ்சிப் பதுங்கிவிட்டதாகத் திருவாளர் பெயரில்லா எண்ணக் கூடும் என்பதாலேயே இத்துணை விரிவாக இதை எழுத நேர்ந்தது.
போர்க் களத்தில் புறமுதுகிடாத தன் பச்சைக் குழந்தையைக் கூடப் புறப்புண்பட்டதால் அவ்வாறு ஐயுற்று அதற்குப் பாலூட்டிய மார்பை வாளால் அறுப்பேன் என ஒரு வீரப்பெண் சூளுரைத்த தமிழ் மண்ணில் பெயர் மறைத்துப் பதுங்கும் கோழைகளுக்கு இனி இவ் வலையில் இடமில்லை.அவர்களுக்கு விளக்கமளித்து என் ஆக்க சக்தியை நான் விரயமாக்கிக் கொள்வதாகவும் இல்
//நீங்களே வசதி செய்து தந்திருப்பதாலேயே அனானியாக வருகிறேன்//எனக் கூறிய பெயரில்லா மனிதரே..நேருக்கு நேர் சந்திக்க அஞ்சும் முதுகெலும்பில்லாக் கோழைகளுக்கு இனி இங்கே இடமில்லை.
இனி இத் தளத்தில் அந்த வசதி கிடைக்காது.
பெயரில்லாப் பின்னூட்டங்கள் இப்போது தடை செய்யப்பட்டு விட்டன.அதற்காக நன்றி

dondu(#11168674346665545885) சொன்னது…

தேவையின்றி அந்த மனிதர் அனானியாக வந்துள்ளார். மற்றப்படி அவர் கருத்தில் வேறு தவறு இல்லைதான்.

Ephraim Kishon ஒரு ஹங்கேரிய யூத எழுத்தாளர். இரண்டாம் உலக மகாயுத்தத்துக்கு பிறகு இஸ்ரேலுக்கு குடிபெயர்ந்தவர். மத்திய ஐரோப்பாவை சேர்ந்த அவருக்கு பல ஐரோப்பிய மொழிகள் தாய் மொழி அளவுக்கு சரளமாக வரும். இஸ்ரேலுக்கு வந்ததும் ஹீப்ரூவில் எழுத ஆரம்பித்தார். அவரது புத்தகங்கள் ஆங்கிலத்தில் முதலில் மொழிபெயர்க்கப்படும். அந்த ஆங்கில மொழிபெயர்ப்பை Friedrich Torberg ஜெர்மனில் மொழிபெயர்ப்பார். அந்த மொழியில் தானே எழுதியிருந்தால் எப்படியிருக்குமோ அதே மாதிரி தோர்பெர்க் மொழிபெயர்த்துள்ளார் என்று கிஷோன் அழுத்தம்திருத்தமாகக் கூறுவார். ஒரு மொழிபெயர்ப்புக்கு இதைவிட பெரிய பாராட்டு இருக்கவே முடியாது என்பது இன்னொரு மொழிபெயர்ப்பாளனான எனக்கு தெரியும். தோர்பெர்க் மரணத்துக்கு பிறகு கிஷோனே தனது புத்தகங்களின் ஜெர்மானிய மொழிபெயர்ப்பை செய்தார்.

இதைவிட ஒரு மொழிபெயர்ப்பாளனை யாரும் புகழ்ந்துவிட இயலாது. ஆனால் அவர் மொழிபெயர்ப்புகளில் கூட ஆங்கிலம் வழி ஜெர்மானிய மொழிபெயர்ப்பு என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது.

பரவாயில்லை, அனானி ஆப்ஷனை தூக்கினீர்கள் அல்லவா? நல்லது எப்படி வந்தால் என்ன.

அன்புடன்,
டோண்டு ராகவன்

எம்.ஏ.சுசீலா சொன்னது…

ஆங்கில வழி மொழிபெயர்த்தாலும்,தானே மொழிபெயர்த்தது போல இருந்ததாக மூலநூலாசிரியரே பாராட்டியிருப்பதாகச் சொல்லியிருக்கிறீர்களே..அதுதானே முக்கியம்!
மேலும் ஆங்கில வழி என நூலில் வெளியிடாதது..பதிப்பாளரின் தவறே அன்றி என்னுடையதல்ல.//எந்த ஆங்கில மொழியாக்கத்தின் வழி,இரண்டாம் மொழிபெயர்ப்பு செய்யப்படுகிறது என்று குறிப்பிட வேண்டும் என்று கூறுவதை நானும் உடன்படுகிறேன்;ஏற்கிறேன்.அது just a slip.not a fall..அது ஒரு சிறிய தவறுதானே ஒழியப் பெருங்குற்றமில்லை.அடுத்து வெளியாக இருக்கும் நூலில் அந்தக் குறிப்பு கட்டாயம் இடம் பெறும்//என்றுதான் நானும் சொல்லிவிட்டேனே..

dondu(#11168674346665545885) சொன்னது…

//தானே மொழிபெயர்த்தது போல இருந்ததாக மூலநூலாசிரியரே பாராட்டியிருப்பதாகச் சொல்லியிருக்கிறீர்களே..//
அதைவிட ஒரு டிகிரி மேல். அதாகப்பட்டது கிஷோனுக்கு ஜெர்மன் தாய்மொழி ரேஞ்சில் சரளமாக வரும். அவர் இந்த விஷயத்தில் என்ன சொல்கிறார் என்றால், தான் நேரடியாகவே ஜெர்மனில் எழுதியிருந்தால் எப்படி இருக்குமோ, அப்படித்தான் தோர்பெர்கின் மொழிபெயர்ப்பு இருக்கிறது என்பதே.

ஓக்கே, ஓக்கே ரிலாக்ஸ் ஆகுங்கள். பதிப்பாளரிடம் கண்டிப்பாக இச்செய்தி இடம் பெற வேண்டும் எனச்சொல்லி விடுங்களேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

எம்.ஏ.சுசீலா சொன்னது…

சொல்லிவிட்டேன்.உடன் மறுமொழிக்கு நன்றி.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....