நெல்லைமண்ணின் எழுத்தாளர்களாகியவண்ணதாசன்(கல்யாண்ஜி),வண்ணநிலவன் ஆகிய இருவரும் இவ்வாண்டுக்கான சாரல் விருதைப் பெறத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள்.
இருவரின் மொழிபும்,முன் வைக்கும் கோணமும்,பார்வைகளும் வெவ்வேறானவை என்றபோதும் இதயத்தை மயிற்பீலி கொண்டு சுகமாய் வருடிச் செல்லும் எழுத்துக்களுக்கு-குற்றாலத்து மென்துளிச் சாரலாய் மோதும் சொற்களுக்கு இருவருமே சொந்தக்காரர்கள்.
![]() |
வண்ணதாசன் |
கல்யாண்ஜியாகக் கவிஞராகவும் கூடு பாயும் அவரது கவிதைகளில் ‘நிலாப் பார்த்தல்’என்னும் கீழ்க்காணும் கவிதை-அதைப் படித்த நாள் முதல்- நிலாப் பார்க்க நேரும் தருணங்களிலெல்லாம் ’நிலாப் பார்க்க என்று நிலாப் பார்த்து நாளாயிற்றே’என்று ஒரு கனத்த குற்ற உணர்வை ஏற்படுத்தியபடியே எப்போதும் என்னைக் கடந்து செல்லும்.
![]() |
வண்ணநிலவன் |
ஒரு பணி நிமித்தம் நெல்லை மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலை சென்றிருந்த சமயம், நெல்லை வீதிகள் வழி பேரா.தொ.பரமசிவன் அவர்களுடன் நான் பயணித்துக் கொண்டிருந்தபோது ’இதுதான் வண்ணநிலவன் சித்தரித்திருக்கும் அந்தக் ’கம்பாநதி’, இதுதான் அவர் படைப்பில் இடம் பெற்றிருக்கும் அந்த ’ரெயினீஸ் ஐயர் வீதி’என்று வழி நெடுக அவர் எனக்குச் சுட்டிக் காட்டிச் சொல்லிக் கொண்டே வந்தார்; உண்மையின் வீரியமுள்ள எழுத்துக்கள் அடங்கிய குரலில் சொல்லப்பட்டிருந்தாலும் அவற்றில் இடம் பெறும் வீதிகளும்,வாய்க்கால் வரப்புக்களும் கூட நல்ல வாசகர்களுக்குப் புண்ணியத் தலங்களாகவே ஆகி விடுகின்றன.[கல்கியின் சிவகாமியின் சபதம் மாமல்லபுரத்தின் மீது பித்துப் பிடிக்க வைத்தது போல்]
தமிழ்ப் படைப்பிலக்கியம் வெகுஜனப் படைப்புக்களின் பரவலால் நீர்த்துப் போய் விடக் கூடுமோ என்ற அச்சம் நிலவிய குறிப்பிட்ட ஒரு காலகட்டத்தில் செயற்கையான மிகை தவிர்த்த தங்கள் இயல்பான படைப்புக்களால் தமிழின் ஆழத்தைத் தக்க வைத்துக் கொடுத்தவர்கள் வண்ணதாசனும்,வண்ணநிலவனும் என்பது காலம் கடந்தும் நிலைக்கும் ஓர் உண்மை.
இயக்குநர்கள் ஜேடி-ஜெர்ரி ,தாங்கள் அமைத்துள்ள ராபர்ட் ஆரோக்கியம் அறக்கட்டளையின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் வழங்கி வரும் ‘சாரல் விரு’தை இவ்வாண்டு [7/1/2012-சனிக்கிழமை மாலை]பெறவிருக்கும் அவர்கள் இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்தும் பாராட்டும்..
பி.கு;
2009ஆம் ஆண்டுக்கான சாரல் விருது-திலீப்குமார்
2010ஆம் ஆண்டுக்கான சாரல் விருது-ஞானக்கூத்தன்
2011ஆம் ஆண்டுக்கான சாரல் விருது-அசோகமித்திரன்
1 கருத்து :
இப்பொழுது தான் இன்னொரு பதிவில் வண்ணநிலவனின் 'கடல்புரத்தில்' பற்றிப் படித்துவிட்டு வந்தேன்..:)
விஷ்ணுபுரம் சாரல் போன்ற அமைப்புகள் இருப்பதே உங்கள் தயவால் தான் தெரிந்துகொண்டேன் - நன்றி. இந்தியாவில் இன்று தமிழில் மட்டுமே தரமான இலக்கியப் படைப்புகள் வருகின்றன என்று இன்னொரு பதிவில் (காஸ்யபன் என்று நினைக்கிறேன்) படித்தேன். சாரல் போன்ற அமைப்புகளும் காரணமாக இருக்கலாம். 'வெகுஜன எழுத்தின் பரவலுக்கு இடையே படைப்பிலக்கியம் நீர்த்துவிடுமோ' என்ற உங்கள் கருத்து மனதை அரிக்கிறது. இத்தகைய அமைப்புகள் சிறக்க வேண்டும்.
கருத்துரையிடுக