துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

15.5.12

இமயத்தின் மடியில்-1


’’நெளிந்தும்,வளைந்தும்,...குறுகியும்,அகன்றும்,..சீறியும்,
சுழித்தும்,.அடங்கியும்,ஆர்ப்பரித்தும்….வறண்டும்,பிரவாகமெடுத்தும்…கங்கையாக…அலக்நந்தாவாக..,பாகீரதியாக..,மந்தாகினியாக இமயத்தின் பல நதிகளும் எங்கள் பயணத்தில் எங்களோடு கைகோர்த்து எங்களுடனேயே தொடர்ந்து கொண்டிருந்தன’’

வருடக் கணக்கில் திட்டமிடும் சில பயணங்கள் சரிவர அமையாமலோ, கைநழுவியோ போவதும் உண்டு..குறுகிய காலத்தில் தற்செயல் நிகழ்வாகத் தாமாகவே நேர்ந்து விடும் எதிர்பாராத சில பயணங்கள் அற்புதமாக வாய்த்து விடுவதும் உண்டு. இமயத்தின் மடியில் தவழ்ந்து கொண்டிருக்கும் பத்ரிநாத் செல்லும் பயணம் எனக்கு வாய்த்ததும் அவ்வாறான ஒரு அதிசயம்தான்..! ஏப்ரல் 26ஆம் தேதிக்கு மேல் முடிவு செய்து மே 6 முதல் 10க்குள் இத்தனை நெடும்பயணம் மேற்கொண்டு திரும்ப முடிந்ததை எண்ண எண்ண வியப்பே மேலிடுகிறது. அவன் அருள் இருந்தால் மட்டுமே அவன் தாள் வணங்க முடியும் என்பதை ஆழமாகப் புரிந்து கொள்ள வைத்த பயணம் இது…
இமயத்தின் மடியில் பத்ரிநாத் ஆலயம்..

ஏப்ரல் மாத றுதியில் மதுரையிலுள்ள நெருங்கிய பேராசிரியத்தோழி ஒருவரோடு கைபேசியில் உரையாடிக் கொண்டிருந்தபோது சென்னையிலுள்ள ஒரு பயணக் குழுவுடன் சேர்ந்து, தான் பத்ரிநாத் செல்லவிருப்பதை அவர் ஒரு செய்தியாகச் சொல்ல..,அப்போதும் கூட அவர்களுடன் பயணத்தில் இணைந்து கொள்ளும் எண்ணம் என்னுள் உதிக்கவில்லை. மறுநாள் மதிய வேளையில் சட்டென்று பொறியாய்ப் பற்றிக் கொண்ட ஒரு எண்ணம்…’தில்லியில் அவர்களோடு இணைந்து கொண்டாலென்ன..’என்ற உந்துதலை அளிக்கத் தோழியிடம் சுற்றுலாக் குழுவினரின் தொலைபேசி எண்ணைப் பெற்றுக் கொண்டு அவர்களோடு தொடர்பு கொண்டேன். என் விருப்பத்தை ஏற்று அவர்களும் அதற்கு ஒப்புதல் அளிக்க..,மே 6 ஆம் தேதி சென்னையிலிருந்து வந்து இறங்கிய பிற பயணிகளுடன் என் பயணமும் இணைந்து கொண்டது.

தில்லி நிஜாமுதீன் புகைவண்டி நிலையத்திலிருந்து ஹரித்துவார் வரை குளிரூட்டப்பட்ட பேருந்தில் பயணம். மாலை 5 மணி அளவிலேயே ஹரித்துவாரை நெருங்கிவிட்டபோதும் தொடர் வரிசையாய் அணிவகுத்து நின்ற வாகனங்களின் நெருக்கடியால் ஊருக்குள் நுழைந்து அவரவர்க்கென ஒதுக்கப்பட்டிருந்த அறைகளில் உடைமைகளை இறக்கி வைக்கும்போது இரவு மணி எட்டுக்கு மேலாகி விட்டிருந்தது. பத்ரிநாத்திலிருந்து திரும்பியபின்புதான் ஹரித்துவார் சுற்றுலா எனத் திட்டம் வகுக்கப்பட்டிருந்ததால் அந்தத் தாமதம் பயணத்தைப் பாதிக்கவில்லை.

ஹரித்துவாரில் இரவு தங்கிய போலானந்த் சன்யாஸ் ஆசிரமம் கங்கையின் படித்துறைகளில் ஒன்றை ஒட்டி மிக நெருக்கமாக அமைந்திருந்ததால் இரவு உணவுக்குப் பிறகு அங்கே சென்று அமைதியாக ஓடிக் கொண்டிருந்த நதியின் நீரோட்டத்தில் கால்களைத் துழாவ விட்டபடி சற்று நேரம் அமர்ந்திருந்தோம். 


அன்று  மதுரையின் வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கிய சித்திரை முழுநிலா நாள் .! இரவின் மோனமும்,கங்கையை அளாவிச் சென்ற குளிர் காற்றின் மென் தீண்டலும்,கால்களை வருடிச் சென்ற சில்லென்ற நதிநீரின் சுகமும் இயற்கையின் எல்லையற்ற அருட்கொடையின் ஒரு சில துளிகளைப் பருகத் தந்தபடி,எங்கள் தொடர்ப் பயணத்துக்கு இனிய ஆரம்பமாக அமைந்தன.
போலானந்த் சன்யாஸ் ஆசிரமம்-ஹரித்துவார்

ஆசிரமத்தை ஒட்டிய டாட்டேஸ்வர் மகாதேவர் கோயிலும் கங்கைப் படித்துறையும்
7ஆம் தேதி திங்களன்று காலை 5 மணிக்குப் பேருந்தில் ஏறியாக வேண்டுமெனச் சொல்லப்பட்டிருந்ததால் கைபேசியின் எழுப்பியை-[அலாரத்தை] 4 மணிக்கு அடிக்குமாறு அமைத்து விட்டு இரவு மணி 11க்கு உறங்கச் சென்றோம்.நான் தங்கியிருந்த அறையில் நானும் என் தோழியின் சகோதரியும் மட்டுமே தங்கியிருந்ததால் அலாரத்தின் மணி ஓசை கேட்டபிறகும் சிறிது நேரம் உறக்கத்தைத் தொடர்ந்து விட்டு நாலேகாலுக்குக் கண் விழித்தோம். பல்துலக்கி முடிப்பதற்குள் சூடான காப்பி அறை வாசலுக்கே வந்து சேர..ஆனந்தமாய்ப் பருகி விட்டுக் குளிரின் சிலிர்ப்போடு கூடிய குழாய் நீரில் குளியலை முடித்துக் கொண்டோம்.

ஹரித்துவாரிலிருந்து பத்ரிநாத் சென்று திரும்பும் பயணம் மூன்றரை நாட்களுக்கு மேல் நீளும் நெடும்பயணம்;அதற்கேற்ற உடைகள் மற்றும் பிற உடைமைகளுடன் அனைவரும் விடுதியின் வாயிலுக்கு வந்து சேர நேற்றைய பெரிய பேருந்துக்குப் பதிலாக [குறுகிய மலைப்பாதைப் பயணம் என்பதால்]ஒவ்வொரு வண்டியிலும் 15 பேர் வரை ஏறக் கூடிய இரு சிற்றுந்துகள் அங்கே ஆயத்தமாக நின்று கொண்டிருந்தன. எல்லோரின் பயணப் பொதிகளும் எற்றப்பட்டபின்பு காலை ஆறு மணிஅளவில் பத்ரிநாத் நோக்கிய எங்கள் நீண்ட பயணம் தொடங்கியது.

சுற்றுலாவில் கலந்து கொண்டவர்களில் பெரும்பாலோர் வைணவத் திருத்தலங்கள் 108இல் வடநாட்டுத் தலங்களைக் காண வந்திருந்தவர்கள் என்பதால் ஆழ்வார் பாசுரங்களும் அரியின் ஆயிரம் நாமங்களும் பக்திப் பெருக்கோடு ஒலிக்க..பயணத்தின் முதல் பகுதி தொடர்ந்தது.


மதுரையிலிருந்து தில்லி வந்து சேர்ந்த கடந்த ஆறு ஆண்டுகளில் நிறைய மலைப் பயணங்களை நான் மேற்கொண்டிருக்கிறேன். கீழ் இமயம்,இடை இமயம் சார்ந்த பல பகுதிகளுக்குச் சென்றிருந்தபோதும் இமயத்தின் கொடுமுடிகளில் ஒன்றை இப்போது காணப் போகிறோம் என்ற கிளர்ச்சி…..சொல் கடந்த பரவச நிலையை உண்டாக்க..ஜன்னலோர இருக்கையில் கண்ணைப் பதித்தபடி கையில் புகைப்படக் கருவியுடன்…இயற்கையின் எழிற்கோலத்தில் வசமிழக்கத் தொடங்கினேன்.


ரிஷிகேஷ் தாண்டி [அங்கே நிறுத்தம் இல்லை] வண்டிகள் செல்ல ஆரம்பித்தபோதுதான் முன்பு நான் சென்றிருந்த மலைப்பாதைகளுக்கும் இதற்கும் உள்ள வேறுபாடு புலப்படத் துவங்கியது. அதே போன்ற மடிப்பு மடிப்பான மலை அடுக்குகள்தான்… செறிவான கற்பாறைகளாக இல்லாமல் மண் குழைந்த நெகிழ்வான மலைகள்தான்…அவற்றைப் பிளந்து கொண்டும்,குறுக்கே ஊடாடிக் கொண்டும் செல்லும் குறுகலான மலைப்பாதைகள்தான்..!
.
ஆனால்..இங்கே கூடுதல் போனஸாக நதிகள்…! 
செங்குத்தான மலைத்தொடர்களுக்கு நடுவே நெளிந்தும்,வளைந்தும்…குறுகியும்,அகன்றும்...சீறியும்,சுழித்தும்...அடங்கியும்,ஆர்ப்பரித்தும்….
வறண்டும்,பிரவாகமெடுத்தும்…
கங்கையாக…அலக்நந்தாவாக..,பாகீரதியாக..,மந்தாகினியாக இமயத்தின் பல நதிகளும் எங்கள் பயணத்தில் எங்களோடு கைகோர்த்து எங்களுடனேயே தொடர்ந்து கொண்டிருந்தன..
                   






நாங்களும் அவற்றின் போக்கிலேயே சென்று கொண்டிருந்தோம்…
[மேலும் அடுத்த தொடர்ப்பதிவில்.....]


[புகைப்படங்கள்;பதிவர்].

1 கருத்து :

Unknown சொன்னது…

அழகான புகைப்படங்கள், அருமையான விவரனைகள் வாழ்த்துக்கள் அம்மா

வாசகன் தேவராஜ் விட்டலன்

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....