துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

17.5.12

இமயத்தின் மடியில்-2

பயணம் தொடர்கிறது...


மலைக்க வைக்கும் மலைப்பாதை..
’’யானைக் கயிற்றுப் புறத்தன்ன கல் மிசைச் சிறு நெறி’’,’’மலைமுதல் சிறு நெறி’’ என்றெல்லாம் உள்ளத்தில் உறைந்துபோய்க்கிடக்கும் இலக்கிய வரிகளை மலைப்பாதைப்பயணத்தில் நேரடிக்காட்சிகளாய்க் காணும் அனுபவம் அபாரமானது.


நெடிதுயர்ந்த மலையடுக்குகள் ஒருபுறம் இருக்க....,
ஆழ்ந்த பள்ளத்தாக்குகளில் சலசலத்து ஓடும் நீரோட்டம் இடையிருக்க..
மற்றொரு புறத்தில் விண்முட்டும் பிரம்மாண்டத்தில் இன்னுமொரு மலைத் தொடர் எழுந்து நிற்க…,பக்க வேலிகள் இல்லாமல் ஒரு வாகனம் மட்டுமே செல்லக் கூடிய குறுகலான மலைப் பாதையில் செல்லும் பயணம் உண்மையிலேயே ஒரு சாகச அனுபவம்தான்! ஆனால்அந்தச் சாகசத்தை நிகழ்த்திக் காட்டும் ஓட்டுநருக்கே அந்தப்பெருமை உரியது. ஆழம் காண முடியாத பள்ளத்தாக்குகளும் அவற்றில் பொங்கிப் பெருகி ஓடும் ஆறுகளும் இடையே குறுக்கிட்டபடி இருக்கஎந்த நேரமும் சரிந்து விழக்கூடிய கற்பாறைகளையும் சிறிய பெரிய கற்குவியல்களையும் கொண்டிருக்கும் செங்குத்தான மலைத் தொடர்களுக்கு நடுவில் கிடைக்கும் குறுகிய பாதையில் வண்டியை ஓட்டிச்  செல்வதென்பது உண்மையிலேயே அசாத்தியமான ஓர் அற்புதம்தான்! [சில இடங்களில் நிலச் சரிவுக்குரிய இடம் (landslide zone), பாறைகள் வீழும் இடம் (rock-fall zone) ஆகிய பெயர்ப்பலகைகள் கூட வைக்கப்பட்டிருந்ததை ஆங்காங்கே காண முடிந்தது]. 
சரிந்து கிடக்கும் பாறைகள்.கற்குவியல்கள்......

பாதை சீரமைப்பு...
அந்த வாகனத்தில் பயணம் செய்வதையே ஒரு பெருமை போலப் பேசிக் கொள்ளும் தகுதி நமக்குக் கொஞ்சமும் இல்லை என்றே அந்தக் கணத்தில் எனக்குத் தோன்றியது. அபாயகரமான அந்த மலைப் பாதைகளுக்குள் நாம் பயணம் செய்ய நடுக்கும் குளிரிலும்,சுட்டெரிக்கும் வெயிலிலும் எத்தனை பேரின் எத்தனை நாள் உழைப்பு செலவழிந்திருக்கும் என்பதை நினைத்துப் பார்த்தபோது முகம் தெரியாத அந்த மனிதர்களை மானசீகமாகக் கை கூப்பத் தோன்றியது.

ரிஷிகேஷைத் தாண்டி பியாஸி என்னும் சிற்றூரில் காலைச் சிற்றுண்டியை முடித்துக் கொண்டோம்.

பிரயாகைகள்..
நாங்கள் சென்று கொண்டிருந்த மலைப்பகுதிகள் ஷிவாலிக் மலைத் தொடர்களைச் சார்ந்தவை. தெஹ்ரிகர்வால் என்னும் ஊரைக் கடந்தபோது அதன் அண்மையிலேதான் தெஹ்ரி அணை இருக்கிறதென்பதை நினைவுபடுத்திக் கொண்டோம்.
அன்றைய நாள் முழுவதும் வெறும் பயணம் மட்டும்தான் என்றபோதும் வழியில் எதிர்ப்பட்ட நதிகளும் அவற்றின் சங்கமக் காட்சிகளும் மனக் கிளர்ச்சியை அளித்தபடி..தொடர் பயணத்தின் அலுப்பை ஆற்றுவித்துக் கொண்டிருந்தன.
நதிகள் சங்கமிக்கும் இடங்களான பிரயாகைகள் புனிதமாகக் கருதப்படுவதால் நம் முன்னோர்களை எண்ணி அங்கே நீராடுவதும் பலிப் பொருட்கள் அளிப்பதும் மரபாகக் கருதப்பட்டு வருகிறது. உத்தர்கண்ட் மாநிலத்தின் கட்வால் பகுதியிலுள்ள பஞ்சப் பிரயாகைகளான (5) தேவப்பிரயாகை, ருத்ரப்பிரயாகை, கர்ணப்பிரயாகை, நந்தப்பிரயாகை, விஷ்ணுப்பிரயாகை ஆகிய அனைத்தையும் எங்கள் பாதையில் காணும் பேறு எங்களுக்கு வாய்த்தது.
முதலில் எதிர்ப்பட்டது தேவப்பிரயாகை..
தேவப்பிரயாகை...
காலையில் பயணம் தொடங்கியது முதல் கங்கையை மட்டுமே தொடர்ந்து கண்டு வந்த நாங்கள் இங்கிருந்து அலக்நந்தா ஆற்றைக் காணத் தொடங்கினோம். தேவப்பிரயாகையிலேயே அலக்நந்தாவும் பாகீரதி நதியும் சங்கமித்து கங்கையாகக் கீழிறங்கி வருகின்றன. வைணவத் திருப்பதிகளில் ஒன்றான தேவப்பிரயாகையைப் பத்ரிநாத் சென்று திரும்பும் வழியிலேயே காணுமாறு பயணத் திட்டம் வகுக்கப்பட்டிருந்ததால் அப்போதைக்கு அலக்நந்தாவின் அழகை மட்டுமே அள்ளிப் பருகியபடி அதைக் கடந்து சென்றோம்.

தொடர்ந்து அலக்நந்தாவும் மந்தாகினியும் ஒன்றுகூடும் (நாரத முனி பல்லாண்டுக் காலம் தவம் செய்ததாகக் கருதப்படும்) ருத்ரப்பிரயாகை, 
அலக்நந்தாவும் பிண்டார் ஆறும் சங்கமிக்கும் கர்ணப்பிரயாகை,

 நந்தாதேவி சிகரத்திலிருந்து வரும் நந்தாகினி ஆற்றுடன் அலக்நந்தா ஒன்று கலக்கும் நந்தப்பிரயாகை 
ஆகிய நான்கு பிரயாகைகள் அன்றைய பயணத்தில் எங்களுக்கு வாய்த்தவை.
நிதிபள்ளத்தாக்கிலிருந்து உற்பத்தியாகும் தௌலிகங்கா நதியுடன் அலக்நந்தா சங்கமிக்கும் விஷ்ணுப்பிரயாகையை மறுநாள் பயணத்தில்-பத்ரிநாத்தை நெருங்குகையில் கண்டோம்.

பொதுவாக மலை ஏறத் தொடங்கியதுமே நம்மைத் தழுவிக் கொள்ளும் குளிர்காற்றின் சாயல் கூட இல்லாமல்- கடும் வெயிலின் ஊடேதான் அன்று எங்கள் பயணம் தொடர்ந்திருந்தது. மலைப்பாதை என்பதால் சிற்றுந்துகளும் குளிரூட்டப்பட்டவையாக இல்லை. சுட்டெரிக்கும் வெயிலின் வெம்மையில் காலை 5 மணி முதல் மாலை 6 மணி வரை தொடர்ந்து வண்டியில் அமர்ந்தபடி பயணம் செய்து வந்த எங்களை சமோலிமாவட்டத்திலுள்ள பீப்பில்கோட்டி என்னும் சிற்றூர் இதமான குளுமையுடன் அரவணைத்துக் கொண்டது.
மலைத் தொடர்மடிப்புக்களுக்கு நடுவில்…பசுமையான பள்ளத்தாக்கு ஒன்றில் அமைந்திருக்கும் பீப்பில்கோட்டி 
பத்ரிநாத் பயணம் மேற்கொள்வோர் இரவில் தங்கிச் செல்ல வசதியான தர்மசாலாக்களும் தங்கும் விடுதிகளும் கொண்டது.அன்றைய பயணத்தை அத்துடன் நிறைவு செய்தபடி பீப்பில்கோட்டியின் தங்கும் விடுதி ஒன்றின் அறைகளில் முடங்கிக் கொண்டோம்.மறுநாள் காலை 3 மணிக்குக் கிளம்பினால்தான் ஜோஷிமட்டில் தரிசனம் முடித்து பத்ரிநாத்தில் 9-10 மணி தரிசனம் காண முடியுமென்பதால் கைபேசியின் எழுப்பியை 2 மணிக்கு அடிக்குமாறு வைத்து விட்டுக் காலையில் வெந்நீர்க்குளியலுக்கான முன்னேற்பாடுகளைச் செய்து விட்டு இரவு 10 மணியளவில் உறங்கச் சென்றோம்.

வயிற்றுக்கும் சிறிது….
குறிப்பிட்ட இந்தப் பயணத்தின் ஏற்பாட்டாளர்கள் அன்றாட உணவுக்காகச் செய்திருந்த வசதிகள் பற்றி இங்கே குறிப்பிட்டே ஆக வேண்டும். பெரும்பாலான நெடும்பயணங்கள் ஒவ்வொரு வேளைக்கான உணவு விடுதிகளைத் தேடும் அலைச்சலிலேயே ஓய்ந்து போய்விடுகின்றன; மேலும் அந்த உணவைப் பொறுத்துக் கொள்ளும் சக்தி நம் வயிற்றுக்கும் இருந்தாக வேண்டும்.;சைவ உணவுக்காரர்களுக்கு இன்னும் திண்டாட்டம்.. இப்படிப்பட்ட சோற்றுக் கவலைகளெல்லாம் இல்லாமல்… பயணத்தின் ஒரு துளியைக் கூடத் தப்ப விடாதபடி பூரணமாக அதில் மட்டுமே தோய முடிந்ததென்றால் அதற்கு உணவு சார்ந்த கச்சிதமான ஏற்பாடுகளே காரணம்.
இரண்டு சிற்றுந்துகளிலும் பயணம் செய்து கொண்டிருந்த நாற்பது பேருக்கும் சமைத்துப் போடுவதற்கான மளிகை மற்றும் சமையல் சாதனங்களுடன் மூன்று சமையல் கலைஞர்களும் இந்தப் பயணத்தில் எங்களுடன் கூடவே வந்திருந்தார்கள். அதிகாலை மூன்று மணிக்குப் புறப்பட்டாக வேண்டுமென்றாலும் கூட இரண்டரை மணிக்கே பெரிய எவர்சில்வர் தூக்கு வாளிகளுடன் வந்து சூடான காப்பியை ஊற்றித் தந்தபடி அவர்கள்  நம்மைத் துயிலெழுப்பி விட்டு, அன்றைய பயணத்துக்கான சிற்றுண்டி மற்றும் மதிய உணவையும் தயாரித்து வண்டிகளில் ஏற்றி விடுவார்கள். ஒவ்வொரு நாள் மாலையும் அலுத்துக் களைத்து அன்றைய இரவு நாம் தங்க வேண்டிய ஊர் போய்ச் சேர்ந்ததும் அவர்களின் பணி சுறுசுறுப்பாய்த் துவங்கி விடும். நாம் சற்று இளைப்பாறுவதற்குள் சுடச்சுடச் சோறு ரசம் கூட்டு அப்பளம் சாம்பார் பொரியல் எனத் தயார் செய்து பம்பரமாய்ச் சுழன்று பரிமாறியபடி நம்மை அசத்தி விடுவார்கள். தமிழ்நாட்டிலிருந்து வந்திருந்தவர்களுக்கு வேண்டுமானால் அந்த உணவின் அருமை தெரியாமலிருக்கலாம்…ஆனால்…வடநாட்டில் தனிப்பட்ட முறையில் பயணம் செய்யும்போது தெருவோர ‘தாபா’க்களை மட்டுமே சார்ந்தபடி அங்கு கிடைக்கும் வறட்டு ரொட்டிகளையே சாப்பிட்டு அலுத்துப் போயிருந்த எனக்கு இமயமலைப் பயணத்தின்போது கிடைத்த ரவா உப்புமாவும் வெண்பொங்கலும் கூடத் தேவாமிருதமாகத் தோன்றியதில் வியப்பில்லை.
[மேலும் அடுத்த தொடர்ப் பதிவில்..]
புகைப்படங்கள்;பதிவர்
காண்க..
இமயத்தின் மடியில்-1..

கருத்துகள் இல்லை :

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....