ரஷ்யப் பயணத்தின் முழுமையான சாரத்தையும் உள்ளடக்கியிருப்பதைப் போன்ற சிலிர்ப்பையும்மன எழுச்சியையும் மாஸ்கோவின் அந்தக்குறிப்பிட்ட நிலத்தில் உணர்ந்தது போல் வேறெங்கும்உணரக்கூடவில்லை.
தினமணி.காமில்
நான் எழுதி வரும் ரஷ்யப்பயணக்கட்டுரைத் தொடரின் இரண்டாவது பகுதி
தஸ்தயெவ்ஸ்கியின் மண்ணில்-2
கால வளர்ச்சி
1924 ஜனரி 27ஆம் நாளன்று…அவரது உடல் முதன்முதலாக மாஸ்கோ செஞ்சதுக்கத்தில் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது.இன்று வரை உலகின் பல திசைகளிலிருந்தும் திரண்டு வந்து அந்த மாமனிதருக்கு அஞ்சலி செலுத்தி வரும் மக்கள் கூட்டத்தின் காட்சியை நாங்களும் நெகிழ்வுடன் கண்டோம். எங்களுக்கும் அங்கே சென்று லெனினின் உடலைப்பார்க்கும் ஆவல் இருந்தபோதும்….கூட்டம் மிகுதியாலும் அன்றையநாளில் முடிக்கவேண்டியபல இடங்கள் மீதம் இருந்ததாலும் வெளியில் இருந்து பார்ப்பதோடு எங்களைத் திருப்தி செய்து கொண்டோம்…
செஞ்சதுக்கம் |
தினமணி.காமில்
நான் எழுதி வரும் ரஷ்யப்பயணக்கட்டுரைத் தொடரின் இரண்டாவது பகுதி
தஸ்தயெவ்ஸ்கியின் மண்ணில்-2
அந்தி வானத்தின் அழகு, காலந்தோறும் கவிஞர்களின் புதுப் புதுக் கற்பனைகளால் அழகூட்டப்பட்டும் மெருகூட்டப்பட்டும் வந்திருக்கிறது.
’’பாரடீ இந்த வானத்திற் புதுமையெல்லாம் .....
உவகையுற நவ நவமாத் தோன்றும் காட்சி
யாரடி இங்கிவை போலப் புவியின் மீதே
எண்ணரிய பொருள் கொடுத்தும் இயற்ற வல்லார்
கணந்தோறும் வியப்புக்கள் புதிய தோன்றும்
கணந்தோறும் வெவ்வேறு கனவு தோன்றும்
கணந்தோறும் நவ நவமாம் களிப்புத் தோன்றும்
கருதிடவும் சொல்லிடவும் எளிதோ’’
-இது,பாரதியின் பாஞ்சாலி சபதம்.
'’தங்கத்தை உருக்கி விட்ட
வானோடை தன்னிலே
செங்கதிர் மாணிக்கத்துச்
செழும்பழம் முழுகும் மாலை’’
என்பது அழகின் சிரிப்பைச் சொல்லும் பாரதி தாசனின் கற்பனை.
ரஷ்யப்பயணத்தின் முதல்நாள் மாலையில் மாஸ்க்வாஆற்றில் நாங்கள் பார்த்துக்களித்திருந்த மாஸ்கோ வானத்தின் அந்திப்பொழுதையும் கவிஞர்கள் பாடாமல் இல்லை..
’’மேலைத் திசையில் ஓய்வெடுக்க சூரியன் செல்லும் அந்த மாலைப்பொழுதிலேதான் நகரம் எத்தனை அழகான ஜொலிப்புடன்.....!
ஒரு புறம்....ஆதவனின் தங்க வண்ண ரேகைகளால் மெருகூட்டப்பட்டுப் பொன்னிறமாய்ப்பொலியும் மாஸ்க்வா நதியின் மேனி !
மாஸ்கோ நகரத்து சுவர்களிலும் சதுக்கங்களிலும் உச்சிக்கூம்புகளிலும் கோபுரக்கலசங்களிலும் அந்தியின் நிழல்,மென்மையாக...மிக இலேசாகப் படர்ந்து படிந்து சற்று உறைந்து நிற்கும்போது ஏதோ தவம் செய்யும் ஞானியர் போன்ற காட்சியல்லவா காணக்கிடைக்கிறது...!.
அந்த மயக்கும் மாலைப்பொழுதில் , நள்ளிரவுச் சில்லென்ற காற்று நம்மைத் தீண்டும் வரை...நம்மைக் கடந்து செல்லும் ஜனத் திரளைப்பார்த்தபடியே கனவுகளோடும்,பழங்கதைகளோடும் காலம் கழிக்க இரகசிய வாயிலை நோக்கி வா...’’. என்ற பொருள்படத் தொடர்ந்து நீளும் அற்புதமான கவிதை ஒன்றை,’மாஸ்கோவின் மாலை’[Sunset in Moscow]என்ற தலைப்பில் எழுதியிருக்கிறார் எட்னா டீன் ப்ராக்டர் [Edna
Dean Proctor (1829–1923)] என்ற கவிஞர்.
உறக்கத்தின் கனவோடு நேற்றைய செக்கர் வானத்தின் அரிய நினைவுகளில் அமிழ்ந்தபடி, அந்தக்கவிதைகளும் ஒரு புறம் மிதந்து கொண்டிருக்க , ஆழ் துயிலின் வசப்படும் நேரம் பார்த்து விடுதி அறையின் மிகப்பெரிய ஜன்னல் வழியே எட்டிப்பார்த்தது சூரியக்கதிர் ஒன்று....சட்டென்று தூக்கத்தின் பிடியிலிருந்து விடுவித்துக்கொண்டு நேரத்தைப்பார்த்தால் காலை மணி நான்கைக்கூடத் தொட்டிருக்கவில்லை. பனியோடும் குளிரோடும் மட்டுமே வாழ்ந்து பழகிப்போன ரஷ்ய மக்கள் கொண்டாடும் இந்தக்கோடை காலத்தின் இரவுகள் மிகவும்குறுகியவை என்பதை மீண்டும் நினைவுபடுத்திக்கொண்டேன்...
அதற்கு மேல் படுக்கையில் புரள மனம் வராமல் வெயிலை வேடிக்கை பார்த்தால் ஐந்து மணிச் சூரியன் ஏழுமணி முகம் காட்டிக்கொண்டிருந்தது....
விடுதியில் கணினித் தொடர்புக்கான இலவசவசதி செய்யப்பட்டிருந்ததால் அதன் உதவியுடன் சுற்றம் நட்பு ஆகியோருடன் மின் அஞ்சல் ,கட்செவி அஞ்சல் போன்றவற்றில் தொடர்பு கொண்டு செய்திகளையும் புகைப்படங்களையும் பரிமாறிக்கொள்ள அந்தக் காலை உதவிசெய்தது.
விடுதி அறையிலேயே இருந்த மின்கலத்தின் உதவியோடு சூடாகக்காப்பி தயாரித்து என் அறைத் தோழிக்கும் தந்து நானும அருந்தினேன்...
வெளிநாடுகளின் தங்கும் விடுதிகளில் தரப்படும் காலை உணவுகள்,விஸ்தாரமானவை. காலை உணவை அரசனைப்போல உண்ண வேண்டும் என்னும் வழக்கு அவர்களுக்கே பொருத்தமானது.உறுதியான.சைவ உணவுப்பழக்கம் மட்டுமே கொண்டிருக்கும் நான், பழ ஜாமுடன் கூடிய இரண்டு ரொட்டித் துண்டுகள், ஓட்ஸ் கஞ்சி,பழரசம், யோகர்ட் எனப்படும் மணமூட்டப்பட்ட தயிர் இவற்றோடு சிற்ற்ண்டியை முடித்துக்கொண்டு மிக விரைவில் ஆயத்தமாகி விடுவேன். காரணம்…சுற்றுலா நேரங்களில் நெடுந்தூரம் நடப்பதற்கும் ஏற்றது..இலகுவான உணவு மட்டுமே.
மாஸ்கோவில் எங்களுக்கு வழிகாட்டியான டேன்யா, சிற்றுந்தோடு வந்து சேர்ந்த பிறகு காலை 10 மணி அளவில் எங்கள் அன்றைய ஊர்சுற்றல் தொடங்கியது.
அகன்ற மாஸ்கோ வீதிகளின் இரு மருங்கும் வானுயர்ந்த கட்டிடங்கள்..குடியிருப்புக்களைக் காணும் ஒவ்வொரு நிமிடமும் நாவலாசிரியர் தஸ்தயெவ்ஸ்கியின் நாவல்களில் விவரிக்கப்படும் கட்டிடம் , இவற்றுள் எதுவாக இருந்திருக்கும்,,,.,.இந்தக்கட்டிடத்தின் கீழ்த் தளத்தின் ஒரு மூலையிலேதான் அவரது நாவலின் நாயகன் குடி இருந்திருப்பானோ ….அவனது சித்தம் இங்கேதான் அலைக்கழிவுக்கு ஆளாகி இருக்குமோ போன்ற பிரமைகள் என்னை ஆட்டிப்படைக்கத் தொடங்கி விடும்... அந்தக்கற்பனை உலகிலிருந்து நான் சற்று யதார்த்தத்துக்கு இறங்கி வந்தபோது மாஸ்கோவின் அடையாளமான செஞ்சதுக்கத்துக்கு வந்து சேர்ந்திருந்தோம்...
ரஷ்யப் பயணத்தின் முழுமையான சாரத்தையும் உள்ளடக்கியிருப்பதைப் போன்ற சிலிர்ப்பையும் மன எழுச்சியையும் மாஸ்கோவின் அந்தக்குறிப்பிட்ட நிலத்தில் உணர்ந்தது போல் வேறெங்கும் உணரக்கூடவில்லை.
எழுச்சி மிக்க பல வரலாற்றுத் திருப்பங்கள்....,.பிரகடனங்கள்.., புரட்சிக்கோட்பாடுகளால் நாட்டின் போக்கையே திசை திருப்பிய மகத்தான பல தலைவர்களின் வீரியமான..உத்வேகமூட்டும் சொற்பெருக்குகள்..பேரணிகள்..போராட்டங்கள் இவற்றால் இன்னமும் கூட நிரம்பித் தளும்பிக் கொண்டிருந்ததைப்போல எனக்குப்பட்ட அந்தப் பொதுவுடைமை பூமி , அன்றைய கடும் வெயில் வேளையில் சூடாகத் தகித்தாலும் அந்தத் தகிப்புக்களும் கூட மகத்தான ரஷ்யப்புரட்சியின் செங்கனல்களாகவே என்னுள் சூடேற்றின....
செஞ்சதுக்கம் என்பது மாஸ்கோவின் மையச்சதுக்கம் மட்டுமல்ல; கருத்தியல் ரீதியாக முழு ரஷ்யாவுக்கும் சொந்தமான மையச் சதுக்கம் அது.
தொடக்கத்தில் மாஸ்கோவின் முக்கியமானதொரு சந்தைப் பகுதியாக இவான் என்பவரால்
வடிவமைக்கப்பட்ட அந்தச்சதுக்கம், பல்வேறு பொது விழாக்கள் நடைபெறும் இடமாகவும், கொள்கைப் பிரகடனங்கள் செய்யப்படும் இடமாகவும் பயன்பட்டது,
சிலவேளைகளில் ஜார் மன்னர்களின் முடிசூட்டு விழாக்களும் இங்கு நிகழ்ந்ததுண்டு..
கால வளர்ச்சி
மற்றும்மாற்றங்களுக்கேற்பப் படிப்படியாக வளர்ச்சி பெற்ற இச் சதுக்கம் பின்னர் எல்லா அரசாங்கங்களாலும் உரிமை கொண்டாடப்படும்
இடமாக மாற்றமடைந்து அரசவிழாக்களுக்கான இடமாக விளங்கி வருகிறது.
13 ஆம் நூற்றாண்டில் இருந்து ரஷ்ய நாட்டின் வரலாற்றோடு இணை பிரியாதிருக்கும் இந்தச் சதுக்கமும் கிரெம்லினும், 1990 ஆம் ஆண்டில் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னங்களாகவும் அறிவிக்கப்பட்டிருக்கின்றன..
பொதுவுடைமைக்கொள்கையின் தொட்டிலாக செஞ்சதுக்கம் இருந்தபோதும்...
சிவப்பு நிறம் அதன் குறியீடு என்றபோதும் அந்தக்காரணங்களாலோ இதனைச்சுற்றிச்சூழ்ந்திருக்கும் சிவப்பு நிறசெங்கற் கட்டிடங்களினாலோ இச்சதுக்கம் அந்தப்பெயரைப்பெற்றிருக்கவில்லை என்பது ஒரு சுவாரசியப்படுத்தும் தகவல்.
“எரிந்துபோன இடம்” என்னும் பொருள்படும் “போசார்” என்னும்பெயராலேயே
அழைக்கப்பட்டு வந்த இந்தச் சதுக்கத்திற்கு செஞ்சதுக்கம் என்னும் பெயர் ஏற்பட்டது,1 7 ஆம் நூற்றாண்டிலேதான்.
’’கிராஸ்னாயா” என்னும் ரஷ்யச் சொல்லுக்கு “சிவப்பு” மற்றும் “அழகு” என்னும் இரு பொருள்கள் உண்டு. இச்சதுக்கத்துக்கு அருகில் அமைந்துள்ள புனித பசில் பேராலயத்தைக் குறிக்க "அழகு" என்னும் பொருளில் "கிராஸ்னாயா’’ என்னும் பெயர் வழங்கப்பட்டுப் பிறகு அருகில் உள்ள சதுக்கத்தைக் குறிக்கும் பொதுப்பெயராக
அது வழக்கில் இடம் பெறத் தொடங்கியது.செஞ்சதுக்கத்தின் வரலாற்றை
மிகச்சிறப்பாகவெளிப்படுத்துபவை, வசிலி சுரிக்கோவ், கான்சுட்டன்டின் யுவோன் போன்ற பல ஓவியர்களின் ஓவியங்கள்.
புனித பசில் தேவாலயம், கிரெம்லின் சுவர், அலெக்சாந்தர் பூங்கா, கிரெம்லின் கோபுரம், தேவாலயங்கள், அரண்மனைகள் ஆகியவையும், ரஷ்ய நாட்டின் தலைவரின் அதிகாரபூர்வ இல்லமும் இங்குதான் உள்ளன.. அரசின் மிக
முதன்மையான அலுவலங்களான தேசிய பாதுகாப்புப்படைத்துறைத் தலைமையகம், பன்னாட்டுத் தூதரகம் ஆகியனவும்
இங்கு உள்ளன.
தெற்கே மாஸ்க்வா ஆறும், கிழக்கே புனித பசில் தேவாலயமும் செஞ்சதுக்கமும் மேற்கே அலெக்சாண்டர் பூங்காவும் புடைசூழ
அமைந்திருக்கும் க்ரெம்லின்
கோட்டைச்சுவர் பிரம்மாண்டத்தின்...அடையாளம்
மட்டுமல்ல;புரட்சியின்
குறியீடும் கூடத்தான்
என்பதால் அதைக்காணும்
அனுபவமே மெய்
சிலிர்க்கச் செய்வதாக
இருந்தது.
கிரெம்லின் சுவர்கள் சூழ்ந்துள்ள இந்தக்
கோட்டைக்கு உள்ளேதான் ரஷ்யப்புரட்சியைத் தலைமையேற்று
நடத்தி, உலகிலேயே முதன் முதலாக உழைக்கும் மக்களின் அரசை ஏற்படுத்திய தலைவர் விளாடிமிர் லெனின் அவர்களின்
உடல் பாதுகாக்கப் பட்டு
வருகிறது.
1924 ஜனரி 27ஆம் நாளன்று…அவரது உடல் முதன்முதலாக மாஸ்கோ செஞ்சதுக்கத்தில் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது.இன்று வரை உலகின் பல திசைகளிலிருந்தும் திரண்டு வந்து அந்த மாமனிதருக்கு அஞ்சலி செலுத்தி வரும் மக்கள் கூட்டத்தின் காட்சியை நாங்களும் நெகிழ்வுடன் கண்டோம். எங்களுக்கும் அங்கே சென்று லெனினின் உடலைப்பார்க்கும் ஆவல் இருந்தபோதும்….கூட்டம் மிகுதியாலும் அன்றையநாளில் முடிக்கவேண்டியபல இடங்கள் மீதம் இருந்ததாலும் வெளியில் இருந்து பார்ப்பதோடு எங்களைத் திருப்தி செய்து கொண்டோம்…
கிரெம்லின் (Kremlin)என்னும் ரஷ்யச்சொல் , கோட்டை … கொத்தளத்தைக் குறிக்க வழங்குவது. அதனால்
அவற்றுக்கே உரிய ஆயுத தளவாடங்களும் அங்கே இருந்திருத்தல் கூடும். ரஷ்ய நாடாளுமன்றம் அமைந்துள்ள மாஸ்கோ கிரெம்லின், பல நேரங்களில் கிரெம்லின் என்றே குறிப்பிடப்படுகிறது இதனுள் நான்கு அரண்மனைகளும் நான்கு தேவாலயங்களும் உள்ளன.
கிரெம்லின் சுவர்கள் சூழ்ந்துள்ள இந்தக் கோட்டையில் உள்ள கோபுரங்கள் , கிரெம்லின் கோபுரங்கள் என அழைக்கப்படுகின்றன. ஒரு காலத்தில் ஜார் மன்னர்களின் அரண்மனையாக இருந்த கம்பீரமான கிரெம்லின் மாளிகையே இன்று ரஷிய அதிபரின் அதிகார பூர்வ
மாளிகையாக விளங்கி வருகிறது.
அமெரிக்க அரசினைக் குறிப்பிடப் பயன்படும்சொல்லான வெள்ளைமாளிகையைப்போல்…கிரெம்லின் என்னும் சொல்லும் சோவியத் ஒன்றியத்தின் அரசியலைக் குறிக்கும் சொல்லாக (1922–1991) விளங்கி வந்திருக்கிறது…
செஞ்சதுக்கத்தையும் க்ரெம்லின் கோட்டையையும் என்றேனும் காணக்கூடும் எனக்கனவு
கூடக்கண்டிராத நான்…., செஞ்சதுக்க வளாகத்தின்
சுட்டெரிக்கும் வெயிலையும் கூடப் பொருட்டாக எண்ணாமல் சுற்றி அலைந்தபடி செய்திகளை உள்வாங்கிக்கொண்டும்…அவற்றுக்குள்
ஆழ்ந்து தோய்ந்து மனதை அலையவிட்டபடியும், வாய்ப்பு
நேரும்போதெல்லாம் புகைப்படங்கள் எடுத்தபடியும் கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் எங்கள் குழுவினரோடு சுற்றித்திரிந்தபடி களைப்பின் சுவடு
கூட இல்லாமல் இருந்தேன்… வீட்டின் நிழலில் ஒதுங்கி இருக்கும்போது கூட வெயில் கொடுமை
என முணு முணுத்துக் குறை சொல்லும் நாம் வேனலின் வெம்மை தாங்கிக் காட்சியின் கததப்புக்குள்ளும்
ஐக்கியமாகி விட முடிகிறதென்றால் அதுவே பயணங்கள் தரும் உன்னதமான கிளர்ச்சி….
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக