துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

29.9.16

ரஷ்யப்பயணம்- தஸ்யெவ்ஸ்கியின் மண்ணில் - 3

தினமணி.காமில்

 நான் எழுதி வரும் ரஷ்யப்பயணக்கட்டுரைத் தொடரின் மூன்றாவது பகுதி

தஸ்யெவ்ஸ்கியின் மண்ணில் - 3பொதுவுடைமைக் கொள்கை செல்வாக்குப்பெற்ற பிறகு ரஷ்ய நாட்டின் பெருவாரியான பகுதிகளில் கடவுள் மறுப்பு வாதமே பெரும்பான்மையாக நிலைபெற்றபோதும் தொன்மைக்காலத்தின் எச்சங்களாக ரஷ்யா நெடுகிலும் பல தேவாலயங்களும் கூட நீக்கமற நிறைந்து கிடக்கின்றன. குறிப்பாக ரஷ்ய நாட்டில் நாங்கள் சென்ற மாஸ்கோ, செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் ஆகிய இரண்டு நகரங்களிலுமே வித்தியாசமான அமைப்புடன் கூடிய பல தேவாலயங்களைக் காணமுடிந்தது. பழமையின் சின்னங்களாக இன்றும் அவை பாதுகாக்கப்பட்டு வருகின்றன. ஒரு சிலவற்றில் மட்டுமே பூசைகள் நடைபெற்றுவர, மற்றவை தொன்மையின் அடையாளங்களாக மட்டுமே பராமரிக்கப்பட்டு வருகின்றன.
உருசிய மரபுவழித் திருச்சபை என்பது,. , உலகின் வேறு பல பகுதிகளில்   நிலவும் பொதுவான கத்தோலிக்க கிறித்தவத் திருச்சபை மரபுகளிலிருந்து மாறுபட்டது. கிரேக்க ஆசார அடிப்படையிலான திருச்சபை [GREEK ORTHODOX CHURCH]  என்று அழைக்கப்படும் இந்தக் கிறித்தவ சமயத்தின் பிரிவு, கருங்கடலின் வடக்குக் கரையை ஒட்டிய கிரேக்ககுடியேற்றங்களுக்கும்,  சீத்தியா  ஆகிய பகுதிகளுக்கும் சென்றிருக்கும் திருத்தூதர் அந்திரேயா என்பவரால்  நிறுவப்பட்டதாகச் சொல்லப்படுகிறது..
அந்த மரபைச் சார்ந்ததாக…. வியக்கத்தக்க கட்டிடக்கலையுடன் செஞ்சதுக்கத்தை ஒட்டி அகழியின் மீது அமைந்திருப்பது புனித பசில்  தேவாலயம் . 

Cathedral of the Protection of Most Holy Theotokos on the Moat அல்லது போக்ரோவ்ஸ்கி முதன்மைப்பேராலயம் என்றும் அழைக்கப்படும் 
இந்த ஆலயம் 1552 இல்,மங்கோலியப்படைகளிடமிருந்து  கஸான் பகுதியைக் கைப்பற்றியதன் நினைவாக  இவான் என்பவரால்உருவாக்கப்பட்டதுவரலாற்று ரீதியாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள இந்தத் தகவலைத் தவிர இதைச் சார்ந்து வழங்கும் பல வகையான தொன்மக்கதைகளுக்குத் தகுந்த ஆதாரங்கள் ஏதும் இல்லை.

இந்த ஆலயத்தில் காணப்படும் வெங்காய வடிவிலான மேற்கூரை அமைப்புக்கள், ரஷிய நாட்டுத் தேவாலயங்களுக்கே உரிய தனிப்பட்ட அடையாளங்கள்.
சோவியத் யூனியன் உருப்பெற்றபிறகு,  செஞ்சதுக்கத்தில் மிகப் பிரம்மாண்டமான பேரணிகளைநடத்துவதற்கு புனித பசில்  தேவாலயம்  இடையூறாக இருப்பதாக எண்ணிய ரஷ்ய நாட்டுத் தலைவர் ஸ்டாலின் இதை இடிக்க முயன்றபோது கட்டிடக் கலைஞராகிய ப்யோதர்பேரனொவ்ஸ்கி [architect Pyotr Baranovsky ] எழுப்பிய எதிர்ப்புக்குரல் அவருக்கு ஐந்தாண்டுச்சிறை வாசத்தைப் பெற்றுத் தந்தது…ஆனாலும் கூட அவர் மேற்கொண்ட அயராதமுயற்சியால் – அற்புதமான கட்டிடக்கலைக்கு ஓர் உதாரணமாகத் திகழும் இந்த தேவாலயம் எப்படியோ தப்பிப் பிழைத்து விட்டது..வருடத்துக்கு ஒரு முறை மட்டுமே பூசை நடக்கும் இந்த ஆலயம் .தற்போது அருங்காட்சியகமாக ஆக்கப்பட்டிருக்கிறது.. இதனுள் இருக்கும் அரிய பல ஓவியங்களையும் மர வேலைப்பாடுகளையும் சற்று நேரம் கண்டு களித்தோம்.

தேவாலயங்களின் சதுக்கம் என்றே அழைக்கப்படும் ஒரு பகுதியும் கூட  செஞ்சதுக்க வளாகத்திற்குள் அமைந்திருக்கிறது. அவற்றில் முக்கியமானவை, ஆர்க் ஏஞ்சல் ஆலயம், அனன்சியேஷன் ஆலயம், மற்றும் அஸ்ஸம்ப்ஷன் ஆலயம் [ஜார் மன்னர்களில் பலரும் முடி சூட்டிக்கொண்டது இங்கேதான்] ஆகியன.


பெல்ஜியம் கண்ணாடி  வேலைப்பாடுகளுடனும் மேற்கூரைகளில் இயேசு கிறித்து மற்றும் புனிதர்களின் அரிய பல ஓவியங்கள் தீட்டப்பட்டும் இருக்கும் அவையெல்லாம் இப்போது பெரும்பாலும் காட்சியகங்களாக மட்டுமே இருந்து கொண்டிருக்கின்றன. அவற்றைப் பார்த்து முடித்தபிறகு அங்கிருந்த பழங்காலக்கட்டிடம் ஒன்றைக்காண்பதற்கு எங்களுக்கு இருபது நிமிடங்கள் ஒதுக்கப்பட்டன. பழமையின் அடையாளமாக அது இருந்தபோதும்  .தற்காலத்திலுள்ள பேரங்காடிகளைப்போன்ற கடைகளே அங்கேயும் நிறைந்திருப்பதாக எங்கள் வழிகாட்டி கூறிவிட.. நான் மட்டும்  உள்ளே  செல்வதைத் தவிர்த்து விட்டு செஞ்சதுக்கத்தின் சூழலை மேலும் அனுபவித்து ரசிப்பதற்காக அதன் முன்னிருந்த கல்மேடை ஒன்றின் மேல்  தனித்த சிந்தனைகளோடு அமர்ந்திருந்தேன்...செஞ்சதுக்கம் குறித்த பழைய வரலாறுகளை மனதுக்குள் ஓட்டிக்கொண்டும், நேர் எதிரே தெரிந்த லெனின் சமாதிக்குச் செல்லக் காத்திருந்த  பன்னாட்டுப்பயணிகளை வேடிக்கை பார்த்துக்கொண்டும், விற்பனைக்கூடத்தின்  முகப்பில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த பழங்கால  பீரங்கிகளின் மூலம் இதுவரை  எத்தனை உயிர்கள் பறிபோயிருக்கக்கூடும் என்று எண்ணியபடியும் பொழுது போவதே தெரியாதபடி என்னுள் அமிழ்ந்து கிடந்தேன்..சுற்றியிருந்த தேவாலயங்கள் கண்ணில் படும்போதெல்லாம்  நாவலாசிரியர் தஸ்தயெவ்ஸ்கி, ரஷ்யத் திருச்சபைகளைப்பற்றித் தனது அசடன் நாவலில் இளவரசன் மிஷ்கின் மூலம் வைத்திருக்கும் பொருள் பொதிந்த பல விவாதங்கள் நிறைந்த அத்தியாயத்தை என் உள்ளம் அசை போட்டபடி இருந்தது..

உள்ளே சென்ற குழுவினர் திரும்பி வந்தபிறகு ரஷ்ய நாட்டின் கொடுங்கோல் மன்னர்கள்களாக அறியப்பட்ட  ஜார் மன்னர்கள் பயன்படுத்திய பீரங்கிகளையும் ,


அவர்களால் உருவாக்கப்பட்ட மிகப்பெரிய  மணியையும்  காண்பதற்காகச் சென்றோம்.

ஆங்கிலத்தில் ராயல் பெல் என்றும்,  ரஷ்ய மொழியில்  ஜார் கொலொகூல் (Tsar-Kolokol)என்றும் சொல்லப்படும்  இந்த மணி தற்போது   உடைந்த துண்டுடன்
ஒரு பெரியமேடையின்மீது வைக்கப்பட்டிருக்கிறதுராணி அன்னா  ஈவானோவ்னாவால் (1735) நிறுவப்பட்ட இந்த மணியின்  வடிவமைப்பாளர் ஐவான் மெட்டோரின் மற்றும் அவர் மகன்மிகேயில் ஆகியோர் என்று கூறப்படுகிறது.

உலகின்  மிகப்பெரிய மணி என்று கருதப்படும்  இந்தக் காண்டாமணி வெண்கலத்தால்(Bronze) ஆனது. இதைப்  பற்றி வழங்கும் சுவையான  கதைகள் ஏராளம்... 202 டன் எடையும் 20அடி குறுக்குவிட்டமும், ,22அடி உயரமும் 24 அங்குல தடிமனும் கொண்ட இந்த மணி, அதைத்தூக்கி மாட்டிக் கட்டும்போதே அதன் எடை  தாங்காமல்  உடைந்துவிட்டது என்றும் , இது வரைஒரு முறை கூட இது ஒலித்ததே இல்லை என்றும்  எங்கள் வழிகாட்டியான  டேன்யா சொன்னபோதும் அது குறித்த வேறு பல சுவாரசியமான  தகவல்களும் கிடைக்காமல் இல்லை..  

மாவீரன் நெப்போலியன் போனபார்ட் , தன்  வெற்றியின் சின்னமாக (1812) , இதை பிரான்ஸ்நாட்டுக்குக்கொண்டு செல்ல முயன்றதாகவும் ஆனால் இதன் பெரிய உருவம் மற்றும் அதிகஎடை காரணமாக அந்த  முடிவைக் கைவிட்டதாகவும் ஒரு கதை....

இன்னொன்று…  இளவரசன்  ஐவான் பற்றியது. ஒரு முறை கிரெம்ளின் கோட்டைக்கு அவன் வருகை புரிந்தபோது,அவனது வருகையை சிறப்பிக்க விரும்பிய மதகுரு ஒருவர், இந்தமணியை அடித்துப் பேரொலி எழுப்பினார்,,அந்தக் கடுமையான சத்தத்தைத் தாங்க மாட்டாமல் அவன்   பயந்து நடுங்கி மயங்கி விழுந்துவிட்ட செய்தி அரசனின் காதுக்கு எட்டகடுங்கோபம்கொண்ட மன்னன்மதகுருவின் தலையைத் துண்டிக்கச் செய்ததோடு …இந்த மணியையும்உடைக்கச் சொன்னான் என்பது இந்த மணி சார்ந்து வழங்கும் மற்றுமொரு கதை.
இவற்றையெல்லாம் உண்மையென நிறுவுவதற்குப் போதுமான ஆதார ஆவணங்கள் ஏதும் இல்லை என்றபோதும்மனித மனங்களில் தேங்கி உறைந்து போய்க்கிடக்கும்  ஆணவத்தையும்  கொடுங்கோன்மையையும் எடுத்துக்காட்டும்  நிரந்தரமான ஒரு  சாட்சியாகஅங்கே இருந்தபடி அத்தகைய தீய பண்புகளைத் தவிர்க்குமாறு அந்த மாபெரும்   உடைந்தமணி,  மனிதகுலத்திடம் வேண்டுகோள் விடுத்துக் கொண்டிருப்பதைப்போலத் தோன்றியது எனக்கு.


ஐரோப்பிய நாடுகளில் வாழும் மக்களைப்போலவே ரஷ்யநாட்டு மக்களும் மலர்களை நேசிப்பவர்கள். ஜன சந்தடி மிகுந்த தெருக்களில் இருக்கும் அடுக்குமாடி வீடுகளின் வெளிப்புற வராந்தாக்களும் கூட வண்ணவண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருப்பதைப் பார்க்கமுடியும். எழுச்சியூட்டும் மக்கள் பேரணிகளும் அணிவகுப்புக்களும் நடந்தேறியிருக்கும் செஞ்சதுக்கத்திலும் கூட நாங்கள் நடந்து செல்லும் வழி நெடுகிலும் விதம் விதமான மலர்களின் அணிவகுப்புக்கள் எதிர்ப்பட்ட வண்ணம் இருந்தன.

செவ்வண்ணத்திலும், மஞ்சள் மற்றும் வெண்மை நிறங்களிலும்  பலரக மலர்கள் வெவ்வேறு வடிவங்களில்  அடுக்கடுக்காகக் கொல்லென்று பூத்திருக்கும் காட்சியைக் காண்பது மனக்கிளர்ச்சியூட்டும் ஓர் அழகிய அனுபவம்..


கொடுமைகளும்  வன்முறைகளும்  மலிந்த.மன்னராட்சிக்காலத்திலிருந்து….புரட்சிப்பூக்கள் மலர்ந்த பொதுவுடைமைக்காலம் வரை- ஏன்…அதன் பிறகு இன்று வரையிலும் கூடத் தங்கள் அழகுணர்ச்சிகளையும் மெல்லுணர்வுகளையும் அந்நாட்டு மக்கள் தக்க வைத்துக்கொண்டிருப்பது எனக்கு அரிதானதாகவும்….- மனிதத்தின் மென்மையான பக்கங்கள் எந்நாளும் எந்நிலையிலும் மாய்ந்து போய்விடுவதில்லை என்பதைத் திறந்து காட்டும் சாட்சியமாகவும் பட்டது.

செஞ்சதுக்கத்தில் தவற விடாமல் கண்டாக வேண்டிய மற்றுமொருஇடம், உலகப்போர்கள் உட்படப் பல்வேறு கால கட்டங்களிலும் அந்நாட்டில் நிகழ்ந்திருக்கும் அனைத்துப் போர்களிலும் உயிர் நீத்த வீரர்களுக்காக நிறுவப்பட்டிருக்கும் நினைவுச்சின்னம். புதுதில்லியின் இந்தியா கேட் பகுதியில் அணையாமல் எரிந்து கொண்டிருக்கும்  வீரர்களுக்கான ஜோதியைப்போலவே இங்கும் நீள்சதுர வடிவிலான ஓர் அமைப்புக்குள் உயிர்த்தியாகம் செய்த மாவீரர்களை நினைவு கூரும் வகையில் இருபத்து நான்கு மணி நேரமும் அணையாத நெருப்பு ஒன்று கனன்று கொண்டே இருக்கிறது. அதன் இரு புறமும் அதைப்பாதுகாக்க இராணுவ உடை தரித்த இரு காவலர்கள் மாறி மாறிப் பணிசெய்து கொண்டிருக்கும் காட்சியையும் காண முடிந்தது.


கொடும் வெயிலில் காலை பத்து மணி தொடங்கிப் பல கிலோ மீட்டர்  தொலைவுகளை நடந்தே கடந்தபடி சுற்றியதில் பசியும் களைப்பும் ஒரு புறம் வாட்டினாலும் மதிய உணவுக்கு முன்பு நாங்கள் பார்த்தேஆக வேண்டிய மற்றொரு இடமும் அருகாமையிலேயே இருந்ததால் அதையும் பார்த்து முடித்த பின்பு  அங்கிருந்து கிளம்ப முடிவுசெய்தார் எங்கள் வழிகாட்டி. அதுதான் ஜார் மன்னர்களின் ஆயுதக்கிடங்கு என்ற பெயரில் [The Armoury Chamber]அமைக்கப்பட்டிருக்கும் ஓர் அருங்காட்சியகம்..
மாஸ்கோ க்ரெம்லினின் இந்த அருங்காட்சியகம் ’ஆயுதக்கிடங்கு’ என்னும் பெயரில் அழைக்கப்பட்டாலும் மன்னராட்சிக்காலத்தின் இராணுவ தளவாடங்கள்,போர்க்கருவிகள் ஆகியவற்றின் தொகுதியாக மட்டுமன்றி வழி வழியாக இந்நாட்டை ஆண்ட அரசர்களின் சேமிப்பில் இருந்தவையும்,  போர்களின்போது அவர்கள் கவர்ந்து குவித்தவையுமான எண்ணற்ற செல்வங்களின் கருவூலமாகவும் இருந்து வருகிறது. பல நூற்றாண்டுகளாகப் படிப்படியாகச் சேமிக்கப்பட்டு வந்திருக்கும் எண்ணற்ற,அரிய பொருட்களின் பெட்டகமாகக் கருதப்படும் இந்தக்காட்சியகம் ரஷ்யாவின் மிகப்பழமை வாய்ந்த அருங்காட்சியகங்களில் ஒன்று. ஜார் அரசர்களின் கருவூலத்திலிருந்த செல்வங்களும்  பரம்பரை பரம்பரையாகத் திரட்டப்பட்ட பல பொக்கிஷங்களும் அங்கே காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. அவற்றுள் பல,க்ரெம்லினில் உள்ள தொழிற்கூடங்களில் உருவாக்கப்பட்டவை வெளிநாடுகளிலிருந்து பரிசுப்பொருட்களாகப் பெறப்பட்டவைகளும் அங்கே உண்டு.
மன்னர்கள் பூண்டிருந்த தங்க வெள்ளி அணிகலன்கள், கவசங்கள், அவர்கள் தரித்திருந்த விலையுயர்ந்த வைரம் மற்றும் மாணிக்கக் கற்கள் பதிக்கப்பட்ட  ஆடம்பரமான கிரீடங்கள், அவர்கள் பயணித்த விதம் விதமான வடிவமைப்புக்களுடன் கூடிய கோச்சு வண்டிகள்…தங்கவெள்ளிப்பாத்திரங்கள், அவர்கள் பெற்ற உயரிய விருதுகளுக்கான அடையாளப் பதக்கங்கள், அரச விழாக்களில் அவர்கள் அணியும் டாம்பீகமான ஆடைகள்…மத்தியகால ரஷ்யாவின் அடையாளங்களான எம்ராய்டரி வேலைப்பாடுகள், தங்கத்தாலேயே இழைக்கப்பட்ட மணிமுடிகள், தந்தவேலைப்பாடு கொண்ட சிம்மாசனங்கள் இவற்றோடு ரஷ்ய நாட்டுக்கே உரித்தான நுண்மையான வேலைப்பாடுகள் நிறைந்த முட்டை வடிவப்பளிங்கு வடிவங்கள் ஆகியவற்றால் நிறைந்து கிடந்தது அந்த அருங்காட்சியகம்..

காட்சியகத்துக்குள் நாம் நுழையும்போதே  நம்மிடம் ஒரு ஒலிவாங்கி  தரப்பட்டு முன் பதிவு செய்யப்பட்ட  விளக்கமும் அதன் வழியே தரப்பட்டு விடுவதால் [இந்தியாவிலும் கூட ஜெய்ப்பூர் அருங்காட்சியகம் போன்றவற்றில் இந்த வசதியைக்காண முடியும்] அதைச்சுற்றிப்பார்ப்பதற்கு உள்ளூர் வழிகாட்டியின் துணை தேவைப்படவில்லை. வரிசை முறைப்படி எல்லாக்காட்சிக்கூடங்களுக்கும் தொடர்ந்து சென்றபடி  அந்த விளக்கங்களையும் உள்வாங்கிக்கொண்டிருந்தாலே அவற்றைக்குறித்த புரிதல் முழுமையாகக்கிடைத்து விடும்.
காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த பொருட்கள் ஒரு புறம் மலைப்பையும் பிரமிப்பையும் ஏற்படுத்தினாலும் கூட ஏனோ என் மனம் அவற்றில் ஒட்டாமலேயே அலைந்து கொண்டிருந்தது. மிதமிஞ்சியதும் அளவு கடந்ததுமான  செல்வத்தின் பகட்டான செருக்கைக்காணும்போது எழும் ஒவ்வாமை உணர்வு ஒரு புறம்! மறு புறம்…., போரையே வாழ்வின் ஒற்றை இலக்காகக்கொண்டு அந்த வெறியோடு கூடிய வெற்றிக்களிப்புடன் கவர்ந்து வரப்பட்ட பொருட்களின் பின்னணியில் மறைந்திருக்கும் சில தீராத சோகங்கள்,அவலங்கள்  குறித்த மன உளைச்சல்கள்.!
எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் என்ற தத்துவம்,…அத்து மீறிய இந்தத் தனியுடைமைப்பொக்கிஷங்கள் ஏற்படுத்தியிருக்கக்கூடிய கடுமையான சினத்தின் அடிப்படையிலேயே இந்த மண்ணில் வேர் கொண்டிருக்கக்கூடுமென அப்போது நினைத்துக்கொண்டேன்.

இந்த உணர்வுகளோடு கூடவே - காலை முதல் கடும் வேனலில் பல இடங்களில் வெட்ட வெளிகளில் சுற்றி அலைந்த களைப்பு...இவையும் இணைந்து கொள்ள… என்னால் அங்கே மிகுதியாக ஒன்ற முடியவில்லை. வேகமாக ஒரு சுற்று முடித்து விட்டுத் திரும்பினேன்… அந்தக் காட்சியகத்தைக்காண ஆர்வம் காட்டிய குழுவினர் சிலரும் கூடப் பசி வேகத்தில் விரைவாக வந்து சேர்ந்து விட, மதிய உணவுக்குக் கிளம்பிச்சென்றோம்…அங்கே எங்களுக்காக ஒரு வியப்பு காத்திருந்தது..

1 கருத்து :

Nat Chander சொன்னது…

ji had your extensive tour had occured in U S A you would have received atleast fifty comments
tamil nadu people keep a distance with russia....always

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....