’’செல்லி! அந்த ஷெல்ஃபிலே இருக்கிற புஸ்தகத்தையெல்லாம் எடுத்துத் தூசிதட்டி ஒழுங்கா அடுக்கி வை!நானும் பப்பியும் கடைத் தெரு வரைக்கும் போயிட்டு வந்திடறோம்’’
கதவைத் தாளிட்டு விட்டுப் புத்தக அடுக்குகளைப் பிரித்துத் துடைக்க ஆரம்பிக்கிறாள் செல்லி.அவளுக்குப் புஸ்தகமென்றால் கொள்ளை ஆசை.பளபளப்பான வண்ணங்களில் வழுக்கிக் கொண்டு போகும் அட்டைகளை அணிந்திருக்கும் அந்தப் புத்தகங்களை ...ஒவ்வொன்றாக எடுத்து ஆசை தீரத் தழுவி,அவற்றின் வாசனையை முகர்ந்து நெஞ்சு கொள்ளாமல் நிரப்பிக் கொள்கிறாள் . அவள் இங்கே வந்து சேர்ந்த இத்தனை நாட்களில் ஒரு பொழுது கூட இந்த வீட்டிலிருப்பவர்கள் இவற்றையெல்லாம் பிரித்துப் பார்த்ததாய் அவளுக்கு ஞாபகமில்லை.கண்ணாடி அலமாரிக்குள் அடுக்கப்பட்டிருக்கிற அலங்கார அழகுப் பொருட்களைப் போல இந்தப் புத்தகங்களும் கூடப் பணம் படைத்தவர்களின் அந்தஸ்தைக் கட்டியம் கூறும் அடையாளச் சின்னங்கள் மட்டுமே என்ற உண்மை புரியாதவளாய் அவற்றை வெற்றுப் பார்வையோடு வெறித்துப் பார்க்கிறாள்.அவளுக்கிருந்த அரைகுறைஞானத்தில் அந்தப் புத்தகங்களில் பரவிப் படர்ந்திருக்கிற ஆங்கில எழுத்துக்களை எழுத்தளவில் இனம் காண முடிகிறதே ஒழிய எழுத்துக் கூட்டிச் சொல்லவோ,உச்சரிக்கவோ முடியாத குறை,உள்ளுக்குள்ளிருந்து முட்டிக்கொண்டு வருகிறது.கண்ணைக்கூடச் சரியாக விழித்துப் பார்க்கத் தெரியாத கோழிக் குஞ்சை எங்கிருந்தோ பறந்து வந்த பருந்து,தூக்கிக்கொண்டு போவதைப் போல விதி அவளை ஒரே தூக்காய்த் தூக்கி இங்கே கொண்டுவந்து போட்டுவிட்டது!
’’எல்லாரும் ஒரு தடவை சத்தமாய்க் கை தட்டுங்க!இந்த மாசமும் நம்ம செல்லிதான் முதல் ராங்க் வாங்கியிருக்கா.செல்லி! வா..வந்து ராங்க் கார்டை வாங்கிக்க...’’
