துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

15.6.16

ஜாமீன் சாஹேப்




ஜாமீன் சாஹேப்

[தொகுப்பு நூல் ;வேங்கை சவாரி-வம்சி புக்ஸ்]

[கன்னட மூலம்;விவேக் ஷன்பேக்
ஆங்கில மொழியாக்கம்;என்.மனு சக்ரவர்த்தி,ஷரத் அனந்தமூர்த்தி,
ஆங்கில வழி தமிழாக்கம்;எம்.ஏ.சுசீலா]

1
தயானந்தா முதன்முதலாக அளித்த ஜாமீன் அவனுடைய தந்தைக்குத்தான்! அப்போது அவனுக்கு வயது இருபத்திரண்டு. பி.ஏ.,பரீட்சையில் முதல் இரண்டு முயற்சிகளில் தோற்றுப் போனபிறகு,எப்படியாவது அதை முடித்து விட வேண்டும் என்று அவன் போராடிக் கொண்டிருந்த நேரம் அது.

தங்களது விடுமுறை நாட்களில் ஒன்றுகூடும் அவனது பட்டதாரி நண்பர்கள்,தங்களது ஊதிய விகிதம்,கடன் வாங்கும் தகுதி,தங்களுக்குரிய விடுப்புக் காலம்,வீட்டிலிருந்து தள்ளி இருக்கும்போது ஏற்படும் சாப்பாட்டுப் பிரச்சினைகள் ஆகியவற்றைப் பற்றியெல்லாம் பேசிக் கொண்டிருப்பதைப் பார்க்கும்போது,தானும் ஒரு வேலையைத் தேடிக் கொள்ள வேண்டும் என்று தயானந்தாவுக்கும் தோன்றும்.ஒரு சில சிபாரிசுகள்,அறிமுகங்களின் மூலம் வேலை தேடிக் கொள்ளலாம் என்று அவன் செய்த முயற்சிகளுக்கு-அவன் ஒரு பட்டதாரியாக மட்டும் ஆகி விட்டால் நிச்சயமாக உதவி செய்கிறோம் என்ற இனிப்பான வாக்குறுதிகளே பதிலாகக் கிடைத்து வந்தன.

தயானந்தாவின் தந்தை கமலாகர்,ஒரு காலத்தில் கார்வார் முழுவதும் பிரபலமாக இருந்த ஒரு ஜவுளிக் கடையின் உரிமையாளர்.துறைமுகத்துக்குச் செல்லும் வழியில்,பஸ் நிறுத்தத்தை ஒட்டினாற்போல அந்தக் கடை இருந்தது.அருகிலுள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பலரும் திருமணத்துக்கான துணிமணிகள் எடுக்க எப்போதும் கமலாகரின் கடைக்கே வந்து குவிந்து கொண்டிருந்தார்கள்.வருடத்துக்கு இரண்டு தடவை ,கமலாகரே பம்பாய் சென்று,தேவையான ஜவுளிகளைத் தேர்ந்தெடுத்து வாங்கி வருவார்;அவற்றுக்கான விலையையும் நிர்ணயம் செய்வார்.மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பே வெவ்வேறு வண்ணக் குடைகள் அங்கே விற்பனைக்கு வந்து விடும்.அந்தக் குடைகள் அங்கே வந்து சேர்ந்ததுமே அவற்றின் உட்புறங்களில் வெள்ளிஜரிகையால் பெயர் பொறிக்கும் தன் வியாபாரத்தைத் தொடங்கி விடுவார் அடுத்த கடைக்காரரான பொற்கொல்லர் மோகன்.

நல்ல முறையில் செழித்து வளர்ந்தபடி,எப்போதும் வாடிக்கையாளர்களைக் கொண்டிருந்த அந்தக்கடை,கமலாகரின் கண்களுக்கு முன்பாகவே வீழ்ச்சியடையத் தொடங்கியது.காமத் வாத்தியாருடனும் அவரது கூட்டாளிகளுடனும் சேர்ந்து கொண்டு,பணம் வைத்துச் சீட்டாடும் பழக்கத்திற்குக் கமலாகர் ஆட்பட்டுப் போன பிறகு,அந்தக் கடையின் தலையெழுத்தே மாறிப் போக ஆரம்பித்தது.தன் பொறுப்புக்களையெல்லாம் தன் இளைய சகோதரர்களிடம் தள்ளிவிட்ட கமலாகர்,பம்பாய் சென்று துணி வாங்கும் வேலை,கடையின் கணக்கு வழக்குப் பார்ப்பது என்று சகலத்தையும் அவர்களிடமே ஒப்படைத்து விட்டார்.

நிலைமையை இன்னும் மோசமாக்கும் வகையில்-பழைய இடத்தின் பற்றாக் குறையைக் காரணம் காட்டிப் பிற ஊர்களிலிருந்து கார்வாருக்கு வந்து சேரும் பேருந்துகள் நிற்க வசதியாக-முன்பிருந்த பஸ் நிறுத்தமும் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டு விட்டது.அந்தக் கடைத் தெருவின் உயிர்நாடியே பேருந்து நிலையம்தான் என்பது போலப் புதிய பேருந்து நிலையம் இருந்த இடத்துக்குப் பக்கத்தில் கடைத்தெரு வளர்ச்சியடையத் தொடங்கியது.புதிய கடைகளின் ஜொலிஜொலிக்கும் விளக்குகள்,பழைய கடைகளுக்குச் செல்லும் வாடிக்கையாளர்களைத் தானாகவே அங்கு கொண்டு வந்து சேர்த்தன.குடைகளும் கூட அங்குள்ள எல்லா இடங்களிலுமே கிடைக்க ஆரம்பித்து விட்டன.அந்த ஆண்டின் மழைக் காலத்தில்,கமலாகரின் கடையில் அறுபது குடைகள் விற்பனையாகாமல் தேங்கிப் போயிருந்தன;நாற்பது குடைகள் மட்டுமே எப்படியோ விற்றுப் போயின. அதே போன்ற குடைகள்,பிற கடைகளில் .மூன்று ரூபாய் குறைவாகவே கிடைத்தன.

தன்னைச் சுற்றி என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பது உணர்வில் உறைப்பதற்கு முன்னமே கமலாகர் திவாலாகி விட்டிருந்தார்.தான் செலுத்தியாக வேண்டிய தொகை, தனக்கு வர வேண்டிய தொகை என எதற்குமே சரியான கணக்கு வழக்குகள் அவரிடம் இல்லை.புதிதாக ஜவுளிக் கொள்முதல் செய்ய வேண்டிய தேவையே இல்லாதபடி,கடந்த சில ஆண்டுகளாகத் தேங்கிப் போயிருந்த சரக்குகளையே மிகுந்த சிரமத்தோடுதான் அவர் தள்ளி விட வேண்டி இருந்தது.
வண்ண மயமான துணிகளை விளம்பரப்படுத்தி வெளிக்காட்டிக் கொண்டிருந்த கடையின் வெளிப்புற ஜன்னல்களெல்லாம் இப்போது வெறிச்சோடிக் கிடந்தன.காலி அலமாரிகளும்,பல கஜ நீளம் கொண்ட துணிகளைச் சுற்றி வைக்க ஒரு காலத்தில் பயன்பட்டுக் கொண்டிருந்த மரக் கழிகளும் கடையின் ஒரு மூலையில் போட்டு வைக்கப்பட்டன.

ஜவுளி வியாபாரத்தைக் கை விட்டு விட்டுத் தன் கடையின் ஒரு பக்கத்திலேயே தேங்காய் வியாபாரம் செய்ய வேண்டிய நிலைக்குத் தாழ்ந்து போய்விட்டார் கமலாகர்.அவரது தம்பிகள் இருவரும் இதற்காக அவரைப் பழித்ததோடு மட்டுமல்லாமல்,தங்கள் பங்குச் சொத்தைப் பிரித்துத் தரும்படியும் அவரை வற்புறுத்தத் தொடங்கியிருந்தனர்.தன்னிடம் எஞ்சியிருந்த கொஞ்சநஞ்சப் பொருளையும் பங்கு போட்டு இழந்து விட மனம் வராத கமலாகர்,அவர்களது கோரிக்கைக்குப் பணிந்து கொடுக்க மறுத்து விட்டார்.காவல்துறையோடு ஏதோ இரகசிய ஒப்பந்தம் செய்தபடி,பொய் சாட்சிகளை உருவாக்கிக் கொண்ட அவரது சகோதரர்கள் சொத்துத் தகராறு காரணமாக அவர் தங்களை அடித்து விட்டதாக ஒரு பொய்ப் புகாரை அளித்தனர்.அதன் அடிப்படையில் போலீசர்ர் ஒரு நாள் இரவு முழுவதும் கமலாகரை லாக்கப்பில் அடைத்து வைத்தனர்.நிலைமை இந்த எல்லை வரை செல்லக் கூடும் என்பதைக் கொஞ்சமும் எதிர்பார்த்திராத தயானந்தாவும்,அவனது தாயும் அந்த இரவுப் பொழுதை மிகுந்த கவலையோடு கழிக்க நேர்ந்தது.
மறுநாள் காலையில் வழக்கறிஞர் நாயக்கின் வீட்டை நோக்கி விரைந்த அவர்களைக் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்ற அவர்,தயானந்தா மூலம் ஜாமீன் வாங்கித் தந்து கமலாகர் விடுவிக்கப்படுவதற்கான ஏற்பாடுகளையும் செய்தார்.


சகோதரர்களுக்கு இடையிலான சச்சரவில் இப்பொழுது சிக்கிக் கொண்டான் தயானந்தா.
அந்த நகரத்திலிருந்த பெரிய மனிதர்கள் பலரும் சமாதானமாகப் போகுமாறு கமலாகரின் தம்பிகளுக்கு ஆலோசனையளித்தனர்.
‘’எது சரி..எது தப்புன்னு கோர்ட்டே முடிவு பண்ணிக்கட்டும்’’
என்று கூறிய அந்தச் சகோரர்கள் அந்த அறிவுரைகளைப் புறந்தள்ளி விட்டனர்.அவர்களது கொடூரமான மனப்போக்கைப் பார்த்து ஆவேசமடைந்தான் தயானந்தா.
‘’உங்களை நாங்க அடிச்சதாப் புகார் கொடுத்தீங்களே...உண்மையிலே அப்படியா நடந்தது..சொல்லுங்க!’’
என்று உரக்கச் சத்தமிட்டபடி,ஒரு விறகுக் கட்டையைக் கையில் எடுத்துக் கொண்டு தன் மாமா ஒருவரின் மீது பாய்வதற்குக் கூடத் துணிந்து விட்டான் அவன்.
நிலைமை கை மீறிப் போய்க் கொண்டிருப்பதை உணர்ந்ததாலும்,காவல்துறையோடு போராடி அலுத்துப் போய்விட்டதாலும் நொந்து போய்க் கிடந்த கமலாகர் வேறு வழியின்றி, மூன்று பகுதிகளாகத் தன் சொத்தைப் பிரித்துக் கொடுக்கச் சம்மதித்து விட்டார்.
’கமலாகர் குல்கர்னி இல்லம்’என்ற அஞ்சல் முகவரியோடு இது வரை இருந்த அந்த இல்லம்.,இப்போது’குல்கர்னி காம்பவுண்ட்’என்பதாக மாறிப் போயிற்று.

வீட்டைத் தனக்குரியதாக வைத்துக் கொண்டு,அதைச் சுற்றியிருந்த திறந்த வெளியைத் தன் சகோதரர்களுக்குக் கொடுத்து விட்டார்கமலாகர் .அந்த இடத்தில் அவர்கள் சிறியதாக வீடுகளைக் கட்டிக் கொண்டனர்.அதற்கான பணம் அவர்களுக்கு எங்கிருந்து கிடைத்தது என்பதைப் பற்றி அறிந்து கொள்வதில் கூடக் கமலாகர் ஆர்வம் காட்டவில்லை;அந்த அளவுக்கு முழுமையாக உடைந்து நொறுங்கிப் போயிருந்தார் அவர்.

தனது தேங்காய் வியாபாரத்தைத் தொடர்ந்து செய்து வந்த கமலாகரை விட்டேற்றியான ஒரு மனோபாவம் ஆட்கொள்ளத் தொடங்கியிருந்தது.இவ்வாறு எல்லாக் காரணங்களும் ஒன்றாகச் சேர்ந்து போனதால் அவரது ஒரே மகனான தயானந்தாவே குடும்ப பாரத்தைச் சுமக்க வேண்டியதாயிற்று.

-2-
பி.ஏ.,தேர்வில் தோல்வியடைந்து விட்டானே தவிர , தயானந்தா அப்படி ஒன்றும் எதற்கும் உபயோகமற்றவனாக ஆகி விடவில்லை.தேங்காய் வியாபாரத்தால் மட்டுமே தங்கள் குடும்ப நிலைமை உயர்ந்து விட்ப்போவதில்லை என்பது, தனது தந்தைக்கு முன்பாகவே அவனுக்குப் புரிந்து விட்டிருந்தது.;அதனாலேயே வருவாயைப் பெருக்கும் ஒரு உப தொழிலாகப் பதநீர் விற்பனையையும் அவன் தொடங்கியிருந்தான்.ஒரு பானை நிறையப் பதநீரை நிரப்பிக் கொள்வதற்காகப் பதநீர் இறக்கும் இடத்திற்குப் பொழுது விடிவதற்கு முன்பாகவே தன் சைக்கிளில் போய்விடுவான் தயானந்தா.பானையைத் தன் சைக்கிள் கேரியரில் வைத்துக் கட்டிக் கொண்டு,அதை விற்பனை செய்வதற்காக நெடுஞ்சாலைக்கு அருகே செல்வான்.பதநீர் விற்பனை என்பது,அத்தனை கௌரவமான ஒரு வேலையாகக் கருதப்படாததால் காலை ஏழு மணிக்குள் அதை முடித்துவிடுவது அவனுக்கு வசதியாக இருந்தது.
‘இங்கே பதநீர் விற்கப்படும்’என்ற பெயர்ப்பலகையோடு தன் வாடிக்கையாளர்களுக்காக ஒரு மரத்தடியில் காத்துக் கொண்டிருப்பான் அவன்.அவனிடமிருந்த சரக்கு முழுவதும் விற்பனையாவதற்கு,அந்த வழியாக ஐந்து,ஆறு கார்கள் போனாலே போதுமானதாக இருந்தது.சில நேரங்களில் தன் வாடிக்கையாளர்களின் முகங்களை நோட்டம் விட்டபடி,விலையைக் கொஞ்சம் கூட்டிச் சொல்லிச் சற்றுக் கூடுதான பணத்தைக் கூட அவனால் சம்பாதிக்க முடிந்தது.

ஒரு நாள் அதிகாலை வேளையில் பதநீரை விற்றுவிட்டு தயானந்தா வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது,கார்வாரிலிருந்து வந்து கொண்டிருந்த கார் மூலம் ஒரு விபத்து ஏற்பட்டு விட்டது.தனது சைக்கிளில் இளநீர்க் காய்களைக் கட்டி வைத்தபடி வந்து கொண்டிருந்த ஒரு நபரின் மீது கார் மோதி அவன் கீழே விழுந்து விட்டான்;அவனது பின்புறமாக வந்து கொண்டிருந்த கார் சற்றுத் திரும்பும்போது அவன் மீது மோதியிருந்தது.
காருக்கடியில் அகப்பட்டு அவன் நசுங்கிப் போய்விடவில்லை என்றபோதும் அவனுக்குக் காயம் பட்டு விட்டது.
அவனுக்கு உடனடியாக உதவி செய்ய விரைந்தான் தயானந்தா.அந்தக் காரில் இருந்த வயதான தம்பதிகள்,கோலாப்பூரைச் சேர்ந்தவர்கள்;தங்கள் மகனுடனும்,மருமகளுடனும் அவர்கள் கோவாவிலிருந்து மங்களூருக்குச் சென்று கொண்டிருந்தார்கள .தரையில் சிதறிக் கிடந்த தேங்காய்களைத் தயானந்தாவின் உதவியுடன் ஒன்றுதிரட்டிச் சேகரித்தத அவர்கள்,அடிபட்ட மனிதனுக்குச் சிகிச்சையளிப்பதற்காக அரசு மருத்துவ மனைக்கு விரைந்தனர்.அது ஒரு விபத்தாகப் போய்விட்டதால்,மருத்துவ மனை நிர்வாகிகள் போலீசில் புகார் கொடுக்க,அவர்களும் அதை ஒரு வழக்காகப் பதிவு செய்தனர்.தன்னுடைய சைக்கிளைத் திரும்ப எடுத்துக் கொள்வதற்காகத் தான் பதநீர் விற்றுக் கொண்டிருந்த இடத்துக்கு வந்து,தயானந்தா வீடு திரும்பும்போது உச்சிப் பொழுதாகி விட்டது.

அன்று மாலையே வேறொரு வேலைக்காக தயானந்தா அந்த மருத்துவ மனைக்கு மீண்டும் செல்ல வேண்டியிருந்தது.ஏதோ ஒரு ஆர்வத்தால் உந்தப்பட்டவனாக,அந்த இளநீர்க்காரன் எப்படி இருக்கிறான் என்று பார்ப்பதற்குப் போனான் அவன்;ஒரு சில காயங்களால் சிறிது இரத்தசேதம் ஏற்பட்டிருந்ததைத் தவிர - மற்றபடி நன்றாகவே இருந்தான் அவன்.வேண்டுமென்றே ஒரு பதட்டத்தையும்,பயத்தையும் ஏற்படுத்துவதற்காக அவன் மருத்துவ மனையின் கண்காணிப்பில் இருந்தாக வேண்டும் என்று மருத்துவர் சொல்லியிருந்தார்.

அந்த வயதான தம்பதியரும் அவர்களது மருமகளும் - அன்று பகல் முழுவதும் போலீஸ் கெடுபிடிகளைத் தாங்கிக் கொண்டு,ஒன்றும் சாப்பிடாமல் கூட அங்கே இருந்த கோலத்தைப் பார்த்துத் தயானந்தாவுக்குப் பரிதாபமாக இருந்தது.காரை ஓட்டியது அவர்களது மகன் என்பதால் காவலர்கள் அவனைப் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றிருந்தனர்.அந்த மனிதர்களுக்கு மராத்தியைத் தவிர வேறு எந்த மொழியையும் சரியாகப் பேசத் தெரியவில்லை.தாங்கள் கோலாப்பூருக்குத் திரும்பிச் சென்ற பிறகு,காயம்பட்ட அந்த மனிதனுக்குத் தேவையான பணத்தை அனுப்பி வைப்பதோடு-அவசியம் ஏற்பட்டால் நல்லதொரு மருத்துவ மனைக்கு அவனை மாற்றித் தகுந்த சிகிச்சையளிப்பதாகவும் வாக்களித்தபடி,தங்கள் மகனை விடுதலை செய்யுமாறு அவர்கள் மன்றாடிக் கொண்டிருந்தார்கள்.அவர்களின் நிலையைப் பார்த்து இரக்கம் கொண்ட தயானந்தா,வழக்கறிஞர் நாயக்கின் வீட்டுக்குச் சென்று,அவரையும் அழைத்துக் கொண்டு காவல் நிலையத்துக்குச் சென்றான்.வக்கீலின் ஆலோசனைப்படி அந்த இளைஞனுக்கு ஜாமீன் தந்து அவன் விடுவிக்கப்படவும் உதவினான்.போலீசார் எழுப்பிய கேள்விகளுக்கெல்லாம்..எளிதில் புரிந்து கொள்ள முடியாத சட்ட நுணுக்கங்கள் தொடர்பான கடினமான பல சொற்களைப் பயன்படுத்திக் கச்சிதமாக விடையளித்தார் வழக்கறிஞர்.குறிப்பிட்ட இந்த வழக்கில் நிறையப் பணம் கறந்து விடலாமென்று திட்டமிட்டுக் கொண்டிருந்த போலீசாருக்கு இது மிகவும் ஆத்திரமூட்டியது.
‘’ஜாமீன் கொடுக்கிறதுன்னா என்னன்னு உனக்குத் தெரிஞ்சிருக்கும்னு நெனைக்கிறேன்..அவன் மட்டும் தலை மறைவாப் போனான்னு வச்சுக்கோ..அப்புறம் உன்னை ஜெயிலிலே போட்டு அடைச்சிடுவேன்..’’
என்று அந்த இளைஞனை விடுதலை செய்யும்போது தயானந்தாவிடம் எச்சரிக்கை செய்தார் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்.
ஏதோ ஒரு கணம் ஏற்பட்ட அசட்டுத் தைரியத்தில் அந்த விபத்தின் பாரம் முழுவதையும் தன் தலையில் தூக்கிப் போட்டுக் கொண்டு விட்டோமோ என்று அப்போது சற்று யோசித்தான் தயானந்தா.
தங்கள் மகனைப் பார்த்த சந்தோஷத்தில் இருந்த அந்த முதிய தம்பதியர் நன்றிக் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தனர்.

தாங்கள் வாக்களித்தபடியே - இரண்டே நாட்களில்,மேலும் மூன்று பேரையும்,ஒரு வக்கீலையும் அழைத்துக் கொண்டு அவர்கள் திரும்பி வந்து விட்டனர்.அந்த இளநீர்க்காரனும் நன்கு தேறிக் கொண்டிருந்தான்.அவனுக்கு ஒரு கணிசமான தொகையை அவர்கள் வழங்கினர்.போலீசுக்கும் கூட அவர்கள் ஏதாவது கையூட்டு தந்திருக்கக் கூடும்.எப்படியோ அந்த வழக்கு சிக்கலின்றி நல்லபடியாக முடிவடைந்து விட்டது.அங்கிருந்து கிளம்புவதற்கு முன்பு தயானந்தாவின் கடைக்கு வந்த அந்த மனிதர்கள்,அவனிடம் ஒரு ‘கவ’ரைக் கொடுத்தனர்.அதில் பணம் இருக்கலாம் என்பதை ஊகித்து விட்ட தயானந்தா அதைப் பெற்றுக் கொள்ள மறுத்தான்.
‘’அந்த சாமியே நேரிலே வந்தாப்பிலே நீங்க வந்து தலையிட்டு எங்க மானத்தைக் காப்பாத்தினீங்க..’’
என்றபடி அதை அவன் கட்டாயம் பெற்றுக் கொண்டே ஆக வேண்டும் என அவர்கள் தொடர்ந்து அவனை வற்புறுத்தினர்.
வீடு திரும்பி அந்தக் கவரைப் பிரித்துப் பார்த்த தயானந்தா அதற்குள் ஆயிரம் ரூபாய் நோட்டு ஒன்று இருப்பதைக் கண்டான்;வேறு எவரிடமும் அதைப் பற்றி ஒரு வார்த்தை கூடத் தெரிவிக்காமல் தானே அதை வைத்துக் கொண்டான் அவன்.

தானாக முன் வந்து செய்த ஒரு உதவி,இவ்வாறு பணத்தால் அளக்கப்படுவது அவனுக்கு இலேசான மனத் தாங்கலை  அளித்தாலும்,அப்போது அவன் இருந்த மிக மோசமான பொருளாதாரச் சூழ்நிலை காரணமாகவும்,பணத்தைச் சம்பாதிப்பதற்குப் பலவகையான வழிமுறைகளைத் தேடிக் கண்டுபிடித்தாக வேண்டிய போராட்டத்தில் தான் இருந்ததாலும் அந்த அன்பளிப்பை வாங்கிக் கொண்டதில் தவறில்லை என்று தனக்குள் சமரசம் செய்து கொண்டான் அவன்.எதிர்பாராமல் அவனுக்குக் கிடைத்த அந்தப் பரிசுத் தொகை,அவனது தேங்காய்க் கடையின் கொள்முதலை அதிகரித்துக் கொள்வதற்குப் பயன்பட்டது.ஆனாலும் கூட இப்படிப்பட்ட சின்னச் சின்ன வரும்படிகளால் தயானந்தாவின் வருமானம் பெருமளவில் அதிகரித்து விடவில்லை;அதனால் அவன் இன்னும் கூடப் பதநீர் விற்றுக் கொண்டுதான் இருந்தான்.

அந்தச் சம்பவம் நடந்து சில நாட்கள் சென்ற பிறகு,முன்பு தயானந்தாவுடன் ஒன்றாகப் படித்திருந்த பள்ளித் தோழனான உமேஷ்,காவல்துறைப் பணியில் சேர்ந்தான்.தயானந்தாவுக்கு இது பற்றித் தெரிய வந்தபோது முந்தைய ஞாபகம் ஒன்று அவனது மனதுக்குள் மீண்டு வந்தது.பதநீர் வியாபாரத்தால் அதிகம் சம்பாதிப்பது என்பது தயானந்தாவால் முடியக்கூடிய காரியமாக இல்லை.மிகுந்த யோசனைக்குப் பிறகு உமேஷை நாடிச் சென்ற தயானந்தா,தன் உள்ளத்திலிருப்பதையெல்லாம் திறந்து காட்டினான்.உமேஷ் அனுபவமில்லாத ஒரு போலீஸ்காரன் என்பதால் ஒரு ‘வாடிக்கையாள’ரைக் கூட்டிக் கொண்டு வர அவனுக்கு ஆறு மாதம் பிடித்தது.விபசார விடுதி ஒன்றில் நடந்த காவல் துறை ‘ரெய்’டின்போது அதில் மாட்டிக் கொண்ட வங்கி அலுவலரான அந்த நபர்,கும்தாவைச் சேர்ந்தவர்.உமேஷுடன் காவல் நிலையத்திற்குச் சென்ற தயானந்தா இருநூறு ரூபாய் ஜாமீன் தந்து அந்த ஆளை மீட்டுக் கொண்டு வந்தான்.அந்தத் தொகையில் ஐம்பது ரூபாய் உமேஷுக்கும்,மற்றொரு ஐம்பது ரூபாய் சப் இன்ஸ்பெக்டருக்கும் போய்ச் சேர்ந்தது.வழக்குகளில் சிக்கிக் கொள்ளும் மனிதர்களுக்கு ஜாமீன் அளிக்கும் லாபகரமான ஒரு வியாபாரத்தைத் தயானந்தா தொடங்கியது இப்படித்தான்.

-3-

அந்த வியாபாரத்தின் ஆரம்பக் கட்டத்தில் அறிமுகமில்லாதவர்களுக்கு ஜாமீன் தருவதற்கு தயானந்தா மிகவும் பயந்து கொண்டிருந்தான்;ஆனால் அவனுக்குத் தெரிந்த மனிதர்களுக்கோ ஜாமீன் தேவையாக இல்லை.கார்வார் நகரும் அதன் சுற்றுப் புறங்களும் எவ்வளவு பெரியதாய் இருந்தனவோ அதே அளவுக்கு அங்கே நடக்கும் குற்றங்களும் பெரிதாகவே இருந்தன.முதலில் தன் பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொண்ட பிறகே பிற மனிதர்களுக்கு ஜாமீன் அளிக்க முன் வந்து கொண்டிருந்தான் தயானந்தா.தொடக்க காலங்களில்,குறிப்பிட்ட அந்தக் குற்றத்தைத் தானே செய்வது போன்ற உணர்வே அவனைப் பீடித்திருந்தது.கோலாப்பூரிலிருந்து வந்த மனிதர்களுக்கு அவன் ஜாமீன் தர முன் வந்த நேரத்தில் ‘’அவன் மட்டும் தலை மறைவாப் போனான்னு வச்சுக்கோ..அப்புறம் உன்னை ஜெயிலிலே போட்டு அடைச்சிடுவேன்..’’என்று அந்த சப் இன்ஸ்பெக்டர் செய்திருந்த எச்சரிக்கை அவனது உள்ளத்தில் ஆழமாகப்பதிவாகியிருந்தது.ஆனாலும் தான் ஒன்றும் எந்த வகையான சட்ட மீறலையும் செய்து விடவில்லை என்று தன்னைத்தானே சமாதானம் செய்து கொண்டான் அவன்.

இந்த பேரத்தில் அவனுக்கு மிகவும் தேவையாக இருந்தது போலீசாருடனான நட்பு;அதன் மூலம் அவன் பலதரப்பட்ட குற்றங்களைப்பற்றி நேரடியாக அறிந்து கொள்ள முடிந்தது.சொந்த சகோதரர்களையே கழுத்தறுத்தவர்கள், மனைவிகளைக் கிணற்றுக்குள் தள்ளிவிட்ட கணவர்கள்,வீட்டு வேலைக்காரிகளைக் கர்ப்பவதிகளாக்கிய எஜமானர்கள்,விபசார விடுதிகளில் நடந்த சோதனைகளில்பிடிபட்டவர்கள்,வீடுகளுக்குள் அதிரடியாக நுழைந்து திருட்டில் ஈடுபட்டவர்கள் என்று பல்வேறு வகையான மனிதர்களுக்கு அவன் ஜாமீன் அளித்து வந்தான்.தனது தொழில் மூலம் பெற்ற தொடர்புகளால் வெவ்வேறு வகையான குற்றங்களையும்,குற்றவாளிகளையும் அவன் எதிர்ப்பட நேர்ந்தது.முதன் முறையாகக் குற்றம் செய்பவர்களுக்கு அதைத் தொடர்ந்து ஏற்படும் விளைவுகள் - அதனுடன் சம்பந்தப்பட்ட நீதிமன்ற நடவடிக்கைகள்,ஜாமீன் தருவது போன்ற எதைப் பற்றியும் தெரிந்திருப்பதில்லை என்பதை அவன் கண்டுகொண்டான்.அவன் மட்டும் நினைத்திருந்தால் அவ்வாறான நபர்களைத் தன்னால் முடிந்த அளவு ஏமாற்றிப் பணம் பறித்திருக்க முடியும்தான்;ஆனால் தன்னாலும் கூட இப்படிப்பட்ட தவறுகளைச் செய்ய முடியும் என அவனது மனதுக்குள் இருந்த மெல்லிய கீற்றுப் போன்ற ஒரு எண்ணம்,அவர்களது நிராதரவான நிலைமையைத் தனக்குச் சாதகமாக்கிக் கொள்ள முடியாதபடி அவனைத் தடுத்து விட்டது.நாளாக ஆக,இந்த விளையாட்டில் கரை கண்டவனாக மாறிவிட்ட தயானந்தா,தான் ஜாமீன் தரும் நபர்களில் சட்டத்துக்குப் புறம்பாக நடந்து கொண்டவர்கள் குறித்த எல்லா விவரங்களையும் தோண்டித் துருவிப் பார்க்கும் பொறுமையைக் கூட இழந்தவனாக ஆகிப் போனான்.

போலீசாருடன் நட்புக் கொண்டிருப்பது மட்டுமே போதாது என்பதை உணர்ந்து கொண்ட பிறகு,வக்கீல் நாயக்குடனும் நல்ல பழக்கம் வைத்துக் கொள்ளத் தொடங்கிய தயானந்தா,பெரும்பாலான தனது நேரத்தைக் கோர்ட்டிலும்,போலீஸ் ஸ்டேஷனிலும் மட்டுமே செலவழித்து வந்தான்.கடையில் இருக்க வேண்டியதும் தவிர்க்க முடியாதது என்பதால் மாலை வேளைகளில் கொஞ்ச நேரம் மட்டுமே அங்கே இருப்பான் அவன்.எந்த வழக்கிலும் தான் மாட்டிக் கொண்டுவிடக் கூடாது என்ற அவனது விருப்பம், சட்ட நுணுக்கங்கள் அனைத்தையும் தெளிவாகப் புரிந்து கொள்ளுமாறு அவனைத் தூண்டியது.இதனால் அவனும்,வழக்கறிஞர் நாயக்கும் மிகவும் நெருக்கமானவர்களாக ஆகி விட்டிருந்தனர்.ஜாமீனளிக்கும் வியாபாரம் மிகவும் லாபகரமான ஒரு தொழிலாக மாறிப் போய்விட்டதால்,வக்கீலுக்கும் அதில் ஒரு பங்கு ஒதுக்கப்பட்டது.வக்கீல்,போலீஸ்-இவர்களுடனேயே தொடர்ச்சியாகப் பழக நேர்ந்ததால் சட்டம் தொடபான அனைத்து விஷயங்களும் அவனுக்கு அத்துப்படியாகிவிட்டிருந்தன.

தான் எடுத்துக் கொள்ளும் வழக்கின் முடிவு வரை அதைத் தொடர்ந்து அவதானிப்பவன் தயானந்தா.அது,அவனுக்கு ஒரு பழக்கமாக-சுவாரசியமான ஒரு விளையாட்டாகவே ஆகிப் போயிற்று. ஒரு குற்றம் சார்ந்த தகவல்களைப் பார்த்த மாத்திரத்திலேயே அதற்கான தீர்ப்பு என்னவாக இருக்கும் என்பதை அவனால் முன்கூட்டியே சொல்லி விட முடியும்.ஆனால்,கடத்தல்காரர்களுக்கு ஜாமீன் தர முற்பட வேண்டாம் என்று வக்கீல் நாயக் கூறியிருந்த ஆலோசனையை மட்டும் அவன் ஒருபோதும் மீறியதே இல்லை.எல்லா விஷங்களையும் சட்டத்தின் கண்ணோட்டத்தில் மதிப்பீடு செய்து பார்ப்பதிலேயே அவனது கவனம் முழுவதும் குவிந்திருந்தது.குறிப்பிட்ட சில வழக்குகளைப் பொறுத்தவரை,மறைவான சில சந்துபொந்துகளை,எவருக்கும் தெரியாத குறுக்கு வழிகளைக் கண்டு பிடித்து இரகசியமாகத் தப்பித்துச் செல்லும் முறைகளைப் பற்றிக் கூட அவன் தொடர்ச்சியாக யோசித்துக் கொண்டிருந்தான்.இவ்வாறு சட்டம் பற்றிய யோசனைகளே அவனது மனதை முழுமையாக ஆக்கிரமித்துக் கொண்டிருந்ததால்,குற்றம் சார்ந்த பிற தகவல்கள் பற்றிய பயமும்,கவலைகளும் இப்போது அவனை விட்டுப் போய் விட்டிருந்தன.தன்னிடம் வருபவர்களின் குற்றங்களுக்கும்,கொடூரச் செயல்களுக்கும் எப்படிப்பட்ட தண்டனைகள் கிடைக்கக் கூடும் என்பதைக் கூட வரையறுத்துச் சொல்லத் தொடங்கியிருந்தான் அவன்.
குறிப்பிட்ட ஒரு குற்றத்தைச் சட்டத்தின் பிடியில் மாட்டிக் கொள்ளாமல் செய்திருக்க முடியுமே என்று ஆச்சரியப்படும் எல்லை வரைக்கும் கூட அவன் சென்று விட்டிருந்தான்.அவ்வாறான சந்தர்ப்பங்களில் ஜாமீன் தரும்போது
‘’என் கிட்டே நீ ஏன் இதைப் பத்திக் கேக்கலை? நீ மட்டும் அந்த மாதிரி நடந்திருந்தா இந்த உலகத்திலே இருக்கிற எந்தச் சட்டத்தாலேயும் உன்னை வளைச்சுப் பிடிச்சிருக்க முடியாது.’’என்பான் அவன்.
சரி எது,தவறு எது என்ற முடிவுகள்,குறிப்பிட்ட வழக்குகளோடு பொருத்திப் பார்த்து மறுவரையறைகளுக்கு  உட்படுத்தப்பட வேண்டியவை என்பதால் அவ்வப்போது சட்டங்களில் ஏற்பட்டு வரும் மாற்றங்களைப் பற்றியும் அவன் தெளிவாகத் தெரிந்து வைத்திருந்தான்.
’’நீ சட்டப் பரீட்சை மட்டும் எழுதிப் பாஸாகலை..அவ்வளவுதான்.மத்தபடி எந்த வக்கீலுக்கும் சளைச்சவன் இல்லைப்பா நீ’’என்று வழக்கறிஞர் நாயக் அவனிடம் எப்போதும் சொல்லிக் கொண்டிருப்பார்.

மாதத்தில் ஐந்து,ஆறு பேருக்கு ஜாமீன் தந்தாலும் கூட தயானந்தாவுக்கு நல்ல வருமானம் கிடைத்து வந்தது.அந்த ஊரிலிருந்தவர்கள் தனக்கு ‘ஜாமீன் சாஹேப்’என்று பெயர் சூட்டியிருப்பதும் அவனுக்குத் தெரிந்துதான் இருந்தது;அதைத் தன்னால் எந்த வகையிலும் மறுத்துப் பேச முடியாமலிருந்தது அவனுக்கு வருத்தமளித்தது.அவனுக்கு அந்தப் பெயர் எப்படி வந்தது என்பதும் கூட சுவாரசியமான ஒரு கதைதான்.தயானந்தா ஜாமீன் தர ஆரம்பித்திருந்த புதிதில்-அந்தத் தொடக்க காலகட்டத்தில்,ரானே என்ற சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் இருந்தார்.ஒரு நாள் சாயங்கால வேளையில்,தன் கால்களை விரித்து நீட்டிக் கொண்டு,போண்டாவை மென்றபடி தேநீரை உறிஞ்சிக் கொண்டு-வேலையில் புதிதாகச் சேர்ந்திருந்த கான்ஸ்டபிள் ஒருவனக் கொடுமைப்படித்தியபடி,தன்னுடைய உலகத்திற்குள் மூழ்கிப் போயிருந்தார் அவர்;சரியாக அதே நேரத்தில் போலீஸ் ஸ்டேஷனுக்குள் நுழைந்தான் தயானந்தா.ஸ்டேஷனுக்குள் யாரோ வருவதைப் பார்த்த ரானே,அது யாரென்று கான்ஸ்டபிளிடம் கேட்டார்.தயானந்தாவை முதல் நாள்தான் பார்த்திருந்தபோதும் அவனது பெயர் நினைவுக்கு வராமல் தடுமாறினான் அந்த கான்ஸ்டபிள்.உற்சாகமான ஒரு மனநிலையில் இருந்த அந்த சப் இன்ஸ்பெக்டர்,
‘’எதுக்காக இப்படித் தட்டுத் தடுமாறிக்கிட்டிருக்கே நீ?அது நம்ம சாஹேப்தானே..?உள்ளே வரச் சொல்லு அவரை’’
என்று அவனிடம் ஜோக்கடித்தார்.அதைக் கேட்டுக் கொண்டே உள்ளே வந்தான் தயானந்தா.அவனைப் பார்த்ததும்,
‘’அடேடே வாங்க ‘ஜாமீன் சாஹேப்’..வாங்க வாங்க..’’
என்று உரக்கக் குரல் கொடுத்தார் அவர். தன்னுடைய ஜோக்கைத் தானே ரசித்து மகிழ்ந்து கொண்டிருப்பவரைப்போலக் காணப்பட்ட அவரைத் திருப்திப்படுத்தும் பாவனையில் மெல்லிதாகப் புன்னகை செய்தான் தயானந்தா.‘ஜாமீன் சாஹேப்’என்ற பெயரைத் தொடர்ந்து முணுமுணுத்துக் கொண்டே இருந்தார் ரானே;அப்படி ஒரு பெயரைத் தான் கண்டு பிடித்து விட்டோமென்பதில் தன்னைத்தானே தட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தார் அவர்.அதற்குப் பிறகு எப்போதும் தயானந்தாவை அந்தப் பெயரை வைத்தே கூப்பிடத் தொடங்கி விட்டார் அவர்.நகரம் முழுவதும் அந்தப் பெயர் பரவ வெகு நாளாகவில்லை.

தயானந்தாவின் குடும்பத்திலிருந்த எவரும் ஒருபோதும் இந்த விஷயத்தைப் பற்றிப் பேசுவதில்லை.அவனது மனைவி சுனந்தாவுக்குக் கூடத் திருமணத்துக்கு முன்பே இது பற்றித் தெரிந்திருந்தது.அவளுக்கு இதில் விருப்பமில்லாதபோதும் இந்தப் பிரச்சினையை எழுப்பிக் கணவனோடு சண்டை போடும் துணிச்சல் அவளிடம் இல்லை.போலீஸ்காரர்களுடன் கொண்ட நட்பும்,வக்கீல்களோடான தொடர்பும் தயானந்தாவைச் சுற்றி வித்தியாசமான ஒரு ஒளிவட்டத்தை உண்டாக்கி விட்டிருந்தன.அதனுடன் கூடவே அவனிடம் பணமும் படிப்படியாகச் சேர ஆரம்பித்திருந்தது.குடும்ப கௌரவம்,மரியாதை என்று அவன் தந்தை சிலவேளைகளில் ஏதாவது முணுமுணுப்பார்;ஆனால் மற்றவர்கள் அதைக் காதிலேயே போட்டுக் கொள்ளாமல் இருந்து விடுவார்கள்.ஆரம்ப காலத்தில் தொந்தரவு செய்து கொண்டிருந்த மாமாக்களும் கூட,தயானந்தாவின் ‘சாதனைக’ளைப் பார்த்த பிறகு மென்மையானவர்களாக மாறிப் போய்விட்டார்கள்.பொதுவாகவே - சமூகத்தை எதிர்கொள்வதென்பது,தன் குடும்ப உறுப்பினர்களுக்குத் தர்மசங்கடம் அளிப்பதாக இருப்பதைக் கண்டு - அது குறித்த மன உளைச்சல் தனக்கு ஏற்படும்போதெல்லாம்,தனது சட்டஞானமும்,போலீசுடனான நெருக்கமும் தன்னைச் சக்தியும்,அதிகாரமும் மிகுந்தவனாக ஆக்கி வைத்திருப்பதை நினைத்தபடி தன்னைச் சமாதானம் செய்து கொள்வான் அவன்.வாய்ப்புக் கிடைத்தால்-தனக்குரிய வரம்புகளையெல்லாம் மீறிக்கூடத் தன் சக்தியை வெளிப்படுத்தி அதை நிரூபித்து விட வேண்டுமென்று அவனுக்குள் குடியிருந்த அதிகார போதை அவனை ஆட்டிப் படைத்துக் கொண்டிருப்பதைப் போலத் தோன்றியது.உலகத்தின் பார்வையில் தன் அதிகார பலத்தை எப்படியாவது காட்டியே ஆக வேண்டும் என்ற முனைப்புடன் இயங்கிக் கொண்டிருந்தான் அவன்.

-4-

தனது உறவினரின் மகள் திருமணத்துக்காக ஒருமுறை தயானந்தா சாகர் வரை செல்ல வேண்டியிருந்தது.அந்த சமயத்தில் மீனாட்சி என்ற பெண் அளித்த புகாரின் அடிப்படையில் போலீஸ் அவள் கணவனைக் கைது செய்திருந்தது.மீனாட்சியின் தாய்,தயானந்தாவின் அம்மாவுக்கு தூரத்து உறவினள்;அதை விட அவர்கள் முன்பு அண்டை வீட்டுக்காரர்களாக இருந்தவர்கள் என்பது,இன்னும் கூட முக்கியமானது.அந்தக் குடும்பத்திலிருந்த நான்கு பெண்களில் மீனாட்சியே இளையவள்.அவளுடைய தந்தை வாசுதேவ்,ஒரு மளிகைக்கடை வைத்திருந்தார்.முதல் மூன்று பெண்களைத் திருமணம் செய்து கொடுத்த பயங்கரமான அனுபவத்திற்குப் பிறகும்,மெட்ரிக் தேர்வை எழுதி முடிக்கும் வரை மீனாட்சியை அவர் விட்டு வைத்திருந்ததே பெரும் சாதனைதான்.அதற்குப் பிறகு மீனாட்சி,ஷீனாவுக்கு வாழ்க்கைப்பட நேர்ந்தது.

ஷீனாவின் குடும்பம் விற்கு விற்பனை செய்யும் தொழிலைப் பிரதானமாகக் கொண்டிருந்தது.ஊரறிந்த பல வினோதமான பழக்க வழக்கங்களைக் கொண்டிருந்த அந்தக் குடும்பத்தின் பரம்பரைப் பண்புகளை அப்படியே சுவீகரித்துக் கொண்டிருந்ததோடு அதையெல்லாம் விடக்கூட மோசமானவனாக இருந்தான் ஷீனா.தீய குணங்களின் மொத்த உருவமாகவே இருந்த ஷீனாவிடம் சுய கௌரவம் என்பது கொஞ்சமும் இல்லை.யாராவது தனக்குச் சாபம் விட்டால் கூட அதை அவன் சங்கீதமாகத்தான் எடுத்துக் கொள்வான்.இப்படிப்பட்ட ஒரு மனிதனைத் திருமணம் செய்து கொள்வதை விட இறந்து போய்விடுவது எவ்வளவோ மேலானது என்றுதான் நினைத்தாள் மீனாட்சி.ஆனால் தன்னுடைய பிறந்த வீட்டுக்குத் தான் ஒரு சுமையாகி விடக் கூடாது என்ற எண்ணம் அவளுக்குள் அழுத்தமாக ஊறிப் போயிருந்தது.;தன் தந்தையின் நிராதரவான நிலை அவளுக்குக் கண்கூடாகத் தெரிந்தது.மீனாட்சியின் ஜாதகத்தைப் பையில் வைத்தபடி அவர் வெளியே கிளம்பும்போதெல்லாம் தனது கையாலாகத நிலை குறித்து அவர் புலம்புவதைப் போலவே அவளுக்குத் தோன்றும்.ஷீனாவின் குடும்பத்திலிருந்து அவளைப் பெண் கேட்டு வந்தபோது அதை மறுத்துப் பேசும் நிலையில் அவள் இல்லாததற்குக் காரணம் அதுதான்.
‘’ஜனங்க அப்படித்தான்...நூறையும் சொல்லுவாங்க! நீதான் தைரியமா இருக்கணும்!ஊரார் பேசறதையெல்லாம் காதிலே போட்டுக்காமெ ஒதுக்கித் தள்ளிடணும்! எல்லா பாரத்தையும் சாமி மேல போடு. எது நிஜம்கிறது அவருக்குத்தான் தெரியும்’’
என்று கண்ணீர் மல்கிய கண்களோடு அவளது குடும்பம் அவளைச் சமாதானப்படுத்த முயற்சித்தது.ஷீனாவைப் போன்ற ஒரு ஆளைக் கல்யாணம் செய்து கொள்ள யார்தான் வரப் போகிறார்களோ என்று அதுநாள் வரை பேசி வந்த ஊர்,இப்போது அவனுக்கு வாய்த்திருக்கும் அதிருஷ்டத்தைப் பற்றியும்,மீனாட்சிக்கு ஏற்பட்டுப் போன துர்ப்பாக்கியம் குறித்தும் பேசத் தொடங்கியிருந்தது.

ஷீனா,தன் மனைவியை எப்படியெல்லாம் சித்திரவதை செய்தான் என்பதைக் கற்பனை செய்து கூடப் பார்க்க முடியாது.ஒரு சில நாட்கள் அவன் தன் மனைவிக்கு விசுவாசமாக-அவளுடன் ஒட்டிக் கொண்டிருந்தான்.அதற்குப் பிறகு அவள் எதைச் செய்தாலும் அது பொறுத்துக் கொள்ள முடியாத ஒரு குற்றமாகவே அவனுக்குத் தோன்ற ஆரம்பித்து விட்டது.ஒரு நாள் அவள் வைத்திருந்த குழம்பு மிகவும் காரமாக இருந்ததால்,கொல்லைப்பக்கம் முழுக்க அவளைத் துரத்தித் துரத்தி விரட்டியபடி அதை அவள் தலையில் அப்படியே ஊற்றிவிடக் கூட அவன் முயன்றிருக்கிறான்.அவளை மிக மோசமாகப் போட்டு அடிப்பான் அவன்;அதில் அவள் உடல் முழுவதும் கடுமையான இரத்தக் காயங்கள் ஏற்பட்டிருந்தன.இரவு நேரங்களில் அவன் மிகவும் தாமதமாகவே வீடு திரும்புவான்;சில சமயங்களில் வராமலும் கூட இருந்து விடுவான்.மிகவும் கொச்சையான வார்த்தைகளால் அவளை ஆபாசமாகத் திட்டுவான்.

ஒரு நாள் அவளைக் கொன்றுவிடப்போவதாக அவன் மிரட்டியபோது பயந்து போன மீனாட்சி,ஒரு அறைக்குள் சென்று அதைப் பூட்டிக் கொண்டாள்.அவள் மட்டும் வெளியே வரவில்லையென்றால் குழந்தைகளின் கழுத்தை நெரித்து விடப் போவதாகப் பயமுறுத்தினான் அவன்.குடி போதையில் இருக்கும்போது எப்படிப்பட்ட கொடூரமான செயலுக்கும் அவன் துணிந்து விடக் கூடும் என்று பயந்து போன மீனாட்சி,அறையை விட்டு வெளியே வர,விறகுக் கட்டை ஒன்றால் அவளைக் கடுமையாகத் தாக்கி விட்டான் ஷீனா.இரத்தம் வழிந்து கொண்டிருந்த நிலையிலேயே தன் குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு நேரே போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்ற மீனாட்சி,தன் கணவன் மீது அங்கே ஒரு புகாரைப் பதிவு செய்தாள்.இரவு நேரத்தில்,அப்படிப்பட்ட ஒரு கோலத்தில் குழந்தைகளுடன் வந்து நின்ற அவளது நிலையைக் கண்ட போலீஸ் சப் இன்ஸ்பெக்டரின் உள்ளம் இரக்கத்தால் கசிந்தது.ரமாநாயக் என்ற கான்ஸ்டபிளை அழைத்து ஷீனாவின் முந்தைய குற்றப் பின்னணிகள் குறித்து விசாரித்தார் அவர்.ஷீனாவின் கேவலமான கடந்த கால நடவடிக்கைகளைப் பற்றி நாயக் விவரிக்கத் தொடங்கியதுமே அவன் மீது உடனடியாகப் புகாரைப் பதிவு செய்த சப் இன்ஸ்பெக்டர்,ஷீனாவின் வீட்டுக்கு விரைந்து சென்று ,அங்கே குறட்டை விட்டபடி தூங்கிக் கொண்டிருந்த அவனைப் போலீஸ் ஸ்டேஷனுக்கு இழுத்துக் கொண்டு வந்தார்.அங்கே கிடைத்த அடி,உதை இவற்றால் அவனுள் ஏறியிருந்த குடிபோதை முற்றிலுமாய்த் தெளிந்து போய் விட்டது.ஷீனா லாக்-அப்பில் அடைக்கப்பட்டான்.கலக்கமடைந்தவளாய் நிலை குலைந்து போயிருந்த மீனாட்சி நேராகத் தன் தந்தை வீட்டுக்குச் சென்றாள்.அங்கேயும் தனக்கு இடமில்லாமல் போனால்,குழந்தைகளோடு கிணற்றில் குதித்துவிடப் போவதாக அறிவித்தாள் அவள். நிலைமையின் தீவிரத்தைப் புரிந்து கொண்ட வாசுதேவா, தன் மகள் அந்த வீட்டில் தங்கியிருப்பதற்கு ஒத்துக் கொண்டார்.

ஷீனா கைது செய்யப்பட்ட தகவல்,மறுநாளே ஊர் முழுவதும் பரவி விட்டது.ஆனாலும் அவனை விடுவிக்க யாரும் முன் வரவில்லை.ஜாமீன் சாஹேபும் கூட அந்த சமயம் ஊரில் இல்லை.மதியம் வரை எதுவுமே சாப்பிடாமல் சமாளித்துக் கொண்டிருந்த ஷீனா, பிறகு பசி தாங்காமல் தனக்கு ஏதாவது சாப்பிடத் தருமாறு போலீஸ் எஸ் ஐயிடம் கேட்டான்;அவரோ அவன் மீது வசை மாரி பொழிந்தபடி அடி வெளுக்கத் தொடங்கி விட்டார்;நரக வேதனை இன்னதென்பதை அப்போது உணர்ந்தான் ஷீனா.போலீஸ் எஸ் ஐ வெளியே கிளம்பிச் செல்லும் வரை காத்திருந்த ஷீனா,பிறகு ஒரு கான்ஸ்டபிளை அழைத்து எப்படியாவது ஜாமீன் சாஹேபை அழைத்துக் கொண்டு வருமாறு கேட்டுக் கொண்டான்.கான்ஸ்டபிளிடம் அவன் ஒரு நூறு ரூபாய் நோட்டையும் நீட்டிவிட்டதால்,அதற்கு ஆசைப்பட்டுக் கொண்டு ஷீனாவத் தேடிச் சென்றான் அந்தப் போலீஸ்காரன்.சாகருக்குப் போய்விட்டு அப்போதுதான் திரும்பிவந்து கொண்டிருந்த தயானந்தா,தன் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தான்;வழியிலேயே அவனைப் பார்த்து விட்ட கான்ஸ்டபிள்,நடந்த எல்லாவற்றையும் அவனிடம் விவரித்தான்.இந்த வழக்கைப் பொறுத்த வரை,போலீஸ் எஸ் ஐ இதில் தீவிரமான  அக்கறை காட்டி வருவதையும்,மீனாட்சியின் உடல்நிலை பற்றிய மருத்துவ அறிக்கையைக் கூட அவர் வாங்கி வைத்திருப்பதையும் தெரிவித்தான் அவன்.ஷீனாவின் மிருகத்தனமான நடவடிக்கைகளைப் பற்றிச் சொல்லிக்கொண்டு போகும்போது- மீனாட்சியின் மீது எதிர்பாராமல் ஏற்பட்டு விட்ட இரக்க உணர்வால் கொஞ்சம் மிகையாகவே அவற்றை வருணித்து விட்டான் அவன்.இந்த வழக்கு சற்று சிக்கலானதுதான் என்று தனக்குள் நினைத்துக் கொண்டாலும்,அதனுடன் கூடவே எஸ் ஐ கொண்டிருக்கும் இரக்கத்தை எப்படி அகற்றலாம் என்பதற்கான வழிமுறைகள் பலவற்றையும் யோசிக்கத் தொடங்கி விட்டிருந்தான் தயானந்தா.நேரே போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்ற அவன்,தன் அறிவுக் கூர்மையின் ஒவ்வொரு அங்குலத்தையும்,மேலும் பல கபடமான தந்திர உத்திகளையும் கையாண்டு ஷீனாவை விடுவித்து விட்டான்.அவனுக்கு ஷீனாவோடு மூவாயிரம் ரூபாய்க்கான பேரம் படிந்திருந்தது.

சற்றும் எதிர்பாராதபடி தன் பக்கம் வீசிய அதிருஷ்டக் காற்றால் பூரித்துப் போனவனாய் வீட்டுக்குள் நுழைந்த தயானந்தாவை மீனாட்சியின் நிலை குறித்த ஆவேசக் குமுறலோடு முதலில் எதிர்கொண்டாள் அவனது தாய்.
‘’அப்படிப்பட்ட மோசமான ஒரு ஆளை விடுதலை செய்யற காரியத்திலே உன்னாலே கூடத் துணிஞ்சு இறங்க முடியாது’’
என்பதையும் தன் பேச்சில் கூடவே சேர்த்துக் கொண்டாள் அவள்.
மிகப் பெரும் வெற்றியடைந்தவனைப் போலத் தன் கைகளைத் தட்டி ஆரவாரித்த தயானந்தா,
‘’அவனைத்தான் நான் ஏற்கனவே வெளியே கொண்டு வந்தாச்சே?இந்த தயானந்தாவைத் தவிர அவனை விடுவிக்கிற துணிச்சல் ஊரிலே வேற எவனுக்கு இருக்கு?’’
என்று அவளுக்கு பதிலளித்தான்.
அதைக் கேட்டதும் -இதுநாள்வரை  அவன் அவளிடம் கண்டிராத கட்டுக்கடங்காத ஆக்ரோஷத்தோடும்,கோபத்தோடும் சீறிப் பாய்ந்தாள் அவள்.
‘’அப்படீன்னா அதைத்தான் மொதல் வேலையாச் செஞ்சுட்டு வந்திருக்கியா நீ? போயும் போயும் அந்தக் கேடு கெட்ட மிருகத்தை...அந்தக் குடும்பத்துக்கே ஒரு சாபமா இருக்கிற அவனையா நீ விடுவிச்சிட்டு வந்திருக்கே?இந்த ஊரிலே இருக்கிற ஜனங்க எல்லாம் பணத்துக்கு மயங்கிடாதவங்க;நியாயத்துக்குக் கட்டுப்பட்டவங்க...அதனாலேதான் ஷீனாவை விடுதலை செய்யறதுக்கு யாருமே முயற்சி எடுக்கலை..உன்னோட அதிகாரபலத்தைக் காட்டிக்கணும்னா அதுக்கு இதுதான் முதலிலே கெடைச்சதா ஒனக்கு?பணத்துக்காகப் பீயை நக்கறதுக்கும் இதுக்கும் என்ன வித்தியாசம்?எல்லாத்தையும் கோர்ட்டே முடிவு பண்ணிக்கட்டும்னு நீ விட்டிருக்கணும்..அந்தப் பாவப்பட்ட மீனாட்சி இருக்காளே...அவளைப் பத்தி நெனச்சுப் பாக்கணும்னு கொஞ்சமாவது ஒனக்குத் தோணிச்சா?’’

’’சும்மாக் கன்னா பின்னான்னு எதையாவது கத்தாதேம்மா! நான் ஒண்ணும் அப்படி எந்தக் குத்தத்தையும் செஞ்சிடலை. எல்லாத்தையும் சட்டத்துக்குக் கட்டுப்பட்டுத்தான் செஞ்சிருக்கேன்..’’என்று சற்றுக் குரலை உயர்த்தினான் தயானந்தா.அதைக் கேட்டதும் அவனது அம்மாவின் ஆத்திரம் இன்னும் அதிகமாகி விட,...அவளும் பதிலுக்குக் கத்தினாள்.
‘’நாறப் பயலே..வெக்கமா இல்லே ஒனக்கு?இவ்வளவுத்தையும் செஞ்சதுமில்லாமே-பண்ணினதெல்லாம் சரின்னு வேற இன்னும் நம்பிக்கிட்டிருக்கே!...ஒருவேளை சட்டப்படி எல்லாம் சரியா இருந்ததுன்னா ஒரு ஆளைக் கொலை பண்ணக் கூடத் தயங்க மாட்டே போலே இருக்கு..! இந்தமாதிரி அருவருப்பான காரியங்களைச் செஞ்சு பொழைக்கறதை விடத் தெருவிலே போய்ப் பிச்சை எடுக்கறது எவ்வளவோ கௌரவமா இருக்கும்..!’’
தனது தாயின் மூர்க்கமான ஆவேசம்,இதுவரை அவன் பார்க்காத ஒன்றாக இருப்பதைக் கண்டு,திகைத்துப் போய் நின்றான் தயானந்தா.இன்னும் கொஞ்ச நேரம் வீட்டில் இருந்தால் தொடர்ந்து அவள் தன்னைக் குதறி எடுத்து விடுவாள் என்று அஞ்சியவனாய் அங்கிருந்து வெளியேற முற்பட்டான்.
அவனுடைய மனைவி ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை.அவன் அங்கிருந்து போவதைப் பார்த்த அவன் அம்மா அவனை நோக்கியபடி கத்தினாள்..
‘’இப்ப எங்கே போறே நீ ?அந்தப் போலீஸ்காரனோட குண்டியை நக்கறதுக்கா?....இதுக்குள்ளே ஷீனா அந்த மீனாட்சியை அறுத்துக் கூறு போட்டிருப்பான்..’’
படிகளில் இறங்கிச் செல்லும்போது அந்த வீட்டிலுள்ள ஒவ்வொருவரும் தன் கழுத்தைப் பிடித்துத் தள்ளுவதைப் போலிருந்தது தயானந்தாவுக்கு.

-5-
உண்மையில் சொல்லப்போனால் மீனாட்சியைப் பற்றிய ஒரு சின்ன எண்ணம் கூட தயானந்தாவுக்கு ஏற்பட்டிருக்கவில்லை.ஷீனாவைக் குற்றமற்றவனாகக் காட்டுவது எப்படி என்பதிலேயே அவன் தனது கவனம் முழுவதையும் செலுத்தியிருந்தான்.இப்படிப்பட்ட நுட்பமான சிக்கல்கள் வரும்போது-இவ்வாறான வேலைகளில் ஈடுபடும் சமயங்களில், சில கேள்விகளையும்,பிரச்சினைகளையும் எழுப்பியபடி மனச்சாட்சி போடும் தடைகளை  ஒரு பக்கமாக ஒதுக்கித் தள்ளிவிட்டுப் போய்க் கொண்டே இருக்க வேண்டியதுதான்.சிக்கல்கள் நிறைந்த- வழி தெரியாத ஒரு பாதையில் வளைந்து நெளிந்து சாமர்த்தியமாகச் சென்றுகொண்டிருக்கும்போது,ஒரு கணம் தயங்கி நின்றாலும் கூடத் தடையாகி விடுவதைப் போன்றதுதான் இதுவும்.வெற்றியை நோக்கிச் சென்று கொண்டிருக்கும்போது- உயரங்களை எட்டுவதற்கான அந்த விளையாட்டின்போது- தனக்குப் பின்னோக்கிப் பார்ப்பதை-அவ்வாறு சிந்திப்பதைக் கூட ஒருவன் விட்டுவிட வேண்டும்;இல்லையென்றால் அவை அவனைக் களைப்படைய வைத்து விடும்.ஒருக்கால் ஷீனாவுக்குப் பதிலாக மீனாட்சிக்கு ஜாமீன் தர வேண்டிய நிலை தயானந்தாவுக்கு ஏற்பட்டிருந்தாலும் கூட - பாலியப் பருவத்தின் ஞாபகங்கள்,சின்னக் குழந்தையாக இருந்தபோது அவளோடு தான் பகிர்ந்து கொண்ட இனிமையான விஷயங்கள் ஆகிய எதுவும் அவனது இதயத்தைத் தொட்டிருக்க வாய்ப்பே இல்லை.

தயானந்தாவும் ,மீனாட்சியும் அண்டை வீட்டுக்காரர்களாக இருந்தபோது ஏழாம் வகுப்பு வரை ஒரே பள்ளியில்தான் படித்தார்கள்;பிறகு,அவள் பெண்கள் பள்ளிக்குப் போய் விட்டாள்.இருவரும் ஒன்றாகச் சேர்ந்துதான் பள்ளிக்கூடம் போய் வருவார்கள்.ஸ்கூலுக்குக் கிளம்புவதில் எப்போதுமே சற்றுத் தாமதம் செய்பவன் தயானந்தா.ஆனால் மீனாட்சியோ எப்போதுமே சரியான நேரத்துக்கு வந்து விடுவாள்;தலையில் எண்ணெய் தடவி நன்றாகச் சீவிப் பின்னல் போட்டு ஒரு ரிப்பனால் முடிச்சுப் போட்டபடி வரும் அவள்,வீட்டுக்கு வெளியிலுள்ள நடைபாதையில் அவனுக்காகக் காத்துக் கொண்டிருப்பாள்.அப்போதுதான் தன் புத்தகங்களையெல்லாம் அவசர அவசரமாக ஒழுங்குபடுத்தி அடுக்குவான் தயானந்தா.தன் சிலேட்டுப் பலகையைச் சுத்தமாகத் துடைப்பதற்காக - ஈரமான ஒரு உறியும் பஞ்சை எப்போதும் தன்னுடன் வைத்திருப்பாள் மீனாட்சி.அந்தப் பஞ்சின் மீது தயானந்தாவுக்கு எப்போதுமே ஒரு கண் இருந்தபோதும்,அவளிடம் அதைக் கேட்டுப் பெற முடியாதபடி அவனது அகங்காரம் தடுத்து விடும்.அந்தப் பஞ்சை அவன் பயன்படுத்திக் கொள்ள அவள் அனுமதித்தாலும்,மறக்காமல் அதைத் திரும்ப வாங்கிக் கொண்டு விடுவாள் அவள்.அதை எப்படியாவது திருடி விட வேண்டும் என்ற தூண்டுதல் அவனிடம் இருந்தாலும்,அதைப் பள்ளிக்கூடத்தில் வைத்துப் பயன்படுத்த முடியாது என்ற எண்ணம் அப்படிச் செய்ய முடியாதபடி அவனைத் தடுத்து விட்டது.
அவனுடைய அம்மா, தங்களிடம் மீதமாகிப் போகும் சாப்பாட்டை மீனாட்சி வீட்டுக்கு அவனிடம்தான் கொடுத்தனுப்புவாள் அவ்வாறான சந்தர்ப்பங்களில் அந்தப் பஞ்சை அவளிடம் எப்படியாவது கேட்டு வாங்கி விட வேண்டுமென்ற ஆசை அவனுக்குள் இருந்தாலும்,அவன் அதைக் கட்டுப்படுத்திக் கொண்டு விடுவான்.

மாலை நேரங்களில் ஆலமரத்தடியிலிருந்த மேடையில் ஊர்ப்பெண்களெல்லாம் ஒன்று கூடிப் பேசிக் கொண்டிருப்பார்கள். மேடையின் உடைசல்களாகக் கீழே கிடக்கும் விரிசல் விட்ட கல்துண்டுகளை வைத்துக் கொண்டு குழந்தைகளெல்லாம் வீடு கட்டி விளையாடிக் கொண்டிருப்பார்கள்.தயானந்தாவும்,மீனாட்சியும் தினமும் அதே இடத்தில் ஒன்றாக விளையாடுவார்கள்.ஆனால் கொஞ்சம் வளர்ந்த பிறகு,தயானந்தா கோலிக் குண்டு விளையாட்டுக்கு மாறி விட்டான்.கோலிக்குண்டு விளையாட்டின் நெளிவு சுளிவுகளை அறிந்த பெரிய பையன்கள்- ஆரம்பத்தில் தயானந்தாவைத் தங்களோடு விளையாடச் சேர்த்துக் கொள்வதில் தயக்கம் காட்டி வந்தார்கள்.நடுவிரலை வில்லைப் போல் வளைத்து வைத்தபடி, கோலிக்குண்டை அடிக்கும் பிற பையன்களின் திறமையால் கவரப்பட்ட தயானந்தா,அவர்கள் செய்வதை ஆர்வத்தோடு கவனித்துக் கொண்டிருப்பான்.அவர்கள் அடிக்கும் கோலிக்குண்டு,தரைக்குப் போய்..அங்கேயிருக்கும் இன்னொரு குண்டை அடித்து மேலே தூக்குவதைப் பார்த்து ஆச்சரியப்பட்டுக் கொண்டிருப்பான் அவன்.அந்த விளையாட்டில் மிகுந்த ஈடுபாட்டோடு-ஒரே மனதாய்க் கருத்துச் செலுத்திய அவன்,வெகு சீக்கிரத்திலேயே அதில் கை தேர்ந்தவனாக ஆகி விட்டான்.கோலிக் குண்டு விளையாட்டின் மீதான மோகம் வடிந்து போன பிறகு,கில்லி தாண்டும் விளையாட்டை நோக்கி நகர்ந்துவிட்ட தயானந்தாவுக்கு அது ஆர்வமூட்டும் ஒரு புது வரவாயிற்று.அதன் பிறகு,லகோரி,கபடி என்று தொடர்ந்து வேறு பல விளையாட்டுக்களை நோக்கி நகர்ந்து கொண்டே இருந்தான் அவன்.விளையாட்டுக்கள் மாற மாறப் பழைய நண்பர்கள் ஒரு சிலரே அவனுடன் இருப்பார்கள்.ஒவ்வொரு புது விளையாட்டும் புதிய நண்பர்களைக் கொண்டு வந்து சேர்க்கும்போது பழைய நண்பர்கள் மெள்ள மெள்ளப் பின்னுக்குப் போய் விடுவார்கள்.

கோலி விளையாடத் தொடங்கியதுமே ஆல மரத்தடி மேடைக்குப் போவதை நிறுத்திக் கொண்டு விட்டான் அவன்;ஆனால் மீனாட்சி தொடர்ந்து அங்கேதான் விளையாடிக் கொண்டிருந்தாள். ஒரு முறை தன்னோடு விளையாட வேறு யாரும் அகப்படாததால் தயானந்தாவைத் தன்னோடு விளையாட அழைத்தாள் அவள்.தயானந்தா அதை மறுத்து விட்டதால் அவள் ஏமாற்றமடைந்தாள்.அவளது ஏமாற்றத்தையும்,தனித்து விடப்பட்டது போன்ற உணர்வோடு அவள் திரும்பிச் செல்வதையும் பார்த்து விட்டு அவளோடு விளையாட ஒத்துக் கொண்டான் தயானந்தா.தான் முதலில் அழைத்தபோது அவன் வராததால் இப்போது அவனோடு விளையாட அவளுக்கு விருப்பமில்லை;ஆனாலும் எப்படியோ அவளைச் சமாதானப்படுத்திவிட்டான் தயானந்தா.இருவரும் அமைதியாக விளையாடிக் கொண்டிருந்தனர்.ஆனால்,குச்சிகளைப் பொறுக்கிக் கொண்டு வந்து வீடு கட்டும் அந்த விளையாட்டு,கொஞ்ச நேரத்திலேயே அவனுக்குச் சலித்துப் போய்விட்டது.

இரத்தத்தைச் சுவை பார்த்துப் பழகிப் போன புலியைப் போலக் கோலி விளையாட்டின் இறுதி இலக்கை எப்படி எட்டுவது என்பது பற்றிய சிந்தனையிலேயே நிலை கொள்ளாமல் அலைபாய்ந்து கொண்டிருந்தான் தயானந்தா.



//20/8/2011
அன்புள்ள சுசீலா,

மொழியாக்கம் மிகச்சிறப்பாக உள்ளது. சரளமாக படைப்பூக்கம் கொண்டதாக. மிகுந்த நன்றி.
ஜெயமோகன்//


12.6.16

’’ஒரு கணம் ஒரு யுகமாக.’’.{கணையாழி-ஜூன் 2016}

கணையாழி-ஜூன் 2016 இதழில் வெளியாகி இருக்கும் என் சிறுகதை..
[நன்றி;கணையாழி இதழுக்கு..]

’’ஒரு கணம் ஒரு யுகமாக.’’
வலுவனைத்தையும் செலுத்தி விலக்க விலக்கப் பிடிவாதத்தோடு  படர்தலைத் தொடர்கிற பழங்குளத்து நீர்ப்பாசியாகக் குறிப்பிட்ட அந்தக்கணத்திலிருந்து தன்னைத் துண்டித்துக்கொள்ள சுலோ முயல்கிற ஒவ்வொரு முறையும் அது முன்னை விட வீரியத்தோடு முண்டியடித்துக்கொண்டபடி தன்னை அவளுக்குள் உட்புகுத்திக் கொண்டிருந்தது. அது ஒன்றும் அவள் வாழ்க்கையில்  அப்படி முக்கியமானதும் உன்னதமானதுமான ஒருகணம்அல்ல ; சொல்லப்போனால்   அப்படிப்பட்ட அசம்பாவிதமான ஒரு கணம் தன் வாழ்நாளில் சம்பவித்திருக்கவே கூடாதென்றும்அதை மட்டும் தன்னால் நீக்கி விட முடியுமென்றால் இதுவரை இருந்த நிம்மதியை மீட்டெடுத்துக்கொண்டு விடலாமே என்றும் அவளை நினைக்க வைக்கிற கணம்தான் அது. ஆனாலும்....ஏதோ ஒரு வகையான சுயபரிசோதனையின் நிமித்தம் அது அவளுக்குத் தேவைப்படுவது போலவும் இருந்தது.  

உயரமான அந்தக்கட்டிடத்தின் முகப்புவாயில் மேற்படியில் அவள் காலை  வைத்தபோதுதான் அது நிகழ்ந்தது. அவளுடன் வந்த உதவியாளர் ஒருவர் , கீழே ஒரு கார் வந்து நிற்பதைப் பார்த்து விட்டுக் கூட்டத்துக்கு அழைத்திருக்கும் முக்கியமான நபர்களில் அது யாராக இருக்கக்கூடும் என்ற கேள்வியோடு திரும்பியபோது அவளும் அனிச்சையாகத் திரும்பிப் பார்த்த மிகச்சரியான அந்தக்கணத்திலேதான் அது  நிகழ்ந்தது. இயந்திரத்தனமான முதல் பார்வையுடன் முகத்தைத் திருப்பிக்கொண்ட அடுத்த நொடியில் அதிர்வுக்கீற்று ஒன்று நெஞ்சில் எழ .... தன் சந்தேகத்தை உறுதி செய்தி கொள்வதற்காக  அவள் மீண்டும் திரும்பிப்பார்த்தாள். ஆமாம்! காருக்குள்ளிருந்து இறங்க முயற்சித்துக்கொண்டிருந்தது அந்த மனிதன்தான்.கூடவே நண்பர் ஒருவரும்....!

சுலோசனா உடைந்து சிதறியதும் தன்னை இப்போது அதிலிருந்து மீட்டுக்கொள்ள எண்ணுவதுமான கணம் அதுதான்! ஆபத்தில்லாத இடம் என்று எண்ணியபடி அநாயாசமாய்க் கடக்க முற்படும் தெருவில் திடீரென்று ஆயிரம் வாலா பட்டாசுச்சரம் தொடர்ந்து வெடித்தால் ஏற்படும் திடுக்கிடல் போன்றதொரு சின்ன பூகம்பம் அவளுக்குள் நிகழ்ந்து விட்டிருந்ததில் கால் கை தலை உடல் என எல்லாமே தனித்தனியாக பிய்ந்து போய் ஒவ்வொரு அங்கமும் ஒவ்வொரு சபிக்கப்பட்ட கணத்தின் பிடியில்!

அன்பை மட்டுமே யாசிப்பது போன்ற அப்பாவித்தனமான முகமூடிகளில்-கலியாணம் முடிந்த இரண்டே மாதங்களில் விழுந்து விட்ட கோரமான பொத்தல்கள் மிரட்சியூட்டசமூகசாத்திரக் கோடுகளுக்குள் பொருந்தவோ தாண்டவோ முடியாத வயதின் பக்குவமின்மையோடு சிறகை மடக்கிக்கொண்டு கூண்டுக்குள் சிறையிருந்த  கணம்....

அடர்த்தியான இரவொன்றில் - வயிற்றில் தாங்கிய குழந்தையோடு கொல்லைக்கிணற்றடியின் துவைக்கிற கல்லில் உட்கார்ந்தபடி தொலைதூரத்துக்கோயில் விளக்கின் உச்சிப்புள்ளியை மட்டுமே வெறித்தபடி ‘இது எனக்கான வாழ்க்கையில்லை..., என் பிறவி நேர்ந்தது இதற்காக இல்லைஎன்று திரும்பத் திரும்ப உச்சரித்தபடி இருந்த அந்தக்கணம்....

வாதங்களும் விவாதங்களும் மட்டுமே வாழ்க்கையாகி விட்ட அசட்டுக்கூச்சல்களுக்கு நடுவே வருங்காலக் குருத்தை வாடவிடாமல் வளர்த்தெடுப்பது எப்படி என்ற கவலைக்குள் மூழ்கடித்துக்கொண்ட கணம்...

இன்னொருத்தியை உள்புகுத்தி குடும்ப வாழ்வையே ஒரு கூட்டுப்பகிர்தல் பேரமாக ஆக்கத் துணிந்த அந்தக்கடைசிப் புள்ளியில் ஒட்டுமொத்தமாகத் தன்னை அந்த பந்தத்திலிருந்து விடுவித்துக்கொண்டபோது - சமூகத்தின் பார்வையில் தெரிந்த போலிக்கழிவிரக்கத்தில் புண்பட்டதை விடத் தான் பெற்ற விடுதலையின் நிம்மதி தந்த ஆசுவாசமே மேலோங்கி நின்ற அந்தக்கணம்...

கணங்களுக்குள் புகுந்து கரைந்து கொண்டிருந்த சுலோசனாவை எங்கோ ஆழத்திலிருந்து ஒரு குரல் அழைத்தது.
‘’வாங்க வாங்க சுலோசனா மேடம்.எல்லாரும் உங்களைத்தான் எதிர்பார்த்துக்கிட்டிருக்காங்க, என்ன இங்கேயே நின்னுட்டீங்க’’
பேராசிரியர் சந்திரமோகனின் உற்சாகமான அந்தக்குரல் எங்கோ பாதாளத்தில் இருந்த அவளை மேலே இழுத்துக்கொண்டு வந்தது.

சூழலியல் சார்ந்த விழிப்புணர்வை வெவ்வேறு ஊடகங்கள்,புனைவுகள்,கல்வி நிறுவனங்கள் இவற்றின் வழியாக மக்கள் மன்றத்துக்குப் பரவலாக்கும் செயல்பாடுகளுக்காக அந்தத் தனியார்பல்கலைக்கழகம்ஆய்வு மையம் ஒன்றை முன்னெடுத்துக்கொண்டிருந்ததுஅதன் ஆயத்தப்பணிகளுக்கான சிறப்பு விருந்தினராக அவள் அங்கே அழைக்கப்பட்டிருந்தாள்.கடந்த ஏழெட்டு ஆண்டுகளாக  சுலோசனா பங்கு பெறாத சூழலியல் கருத்தரங்குகளோ மாநாடுகளோ இல்லையென்று சொல்லும் அளவுக்கு அந்தத் துறையின் கல்வியாளராக சர்வதேச அளவில் அவளுக்கு அங்கீகாரங்கள் குவிந்தபடி இருந்தன. அடுத்த மாதம் கூட ஆஸ்திரேலியா அளிக்கும் விருதைப்பெற அவள் மெல்பர்ன் செல்ல இருந்தாள்.
‘’என்ன மேடம் இவ்வளவு நேரம் காக்க வச்சுட்டீங்களே...உங்களைத்தான் எல்லாரும் எதிர்பார்த்துக்கிட்டிருக்கோம்''
''வாங்க வாங்க....மொதல்லே உங்க விருதுக்கு வாழ்த்துக்கள்’’
என்றபடி வரவேற்புக்கூடத்தில் உட்கார்ந்திருந்த பலரும் எழுந்து அவளுடன் கை குலுக்கவும் கை கூப்பவும் முற்படசுலோசனா  இப்போது இரண்டாகப் பிளவுண்டு போயிருந்தாள்.  எதிர்பாராத எதையுமே எதிர்கொள்ளாத பாவனையில் - வழக்கமான கலகலப்போடும் புன்னைகையோடும் தன்னை எதிர்ப்படுவோரின் வணக்கங்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் ஒரு சுலோசனா எதிர்வினையாற்றிக்கொண்டிருக்க , மற்றொரு சுலோவோ.....ஊர்ந்து நெளிந்தபடி தன்னை நெருங்கிக்கொண்டிருந்த புழுவை மட்டுமே பின் தொடர்ந்து கொண்டிருந்தாள்.

சற்றும் எதிர்பாராததாய்  இந்த வருகை இங்கே எப்படி நேர்ந்தது ? நேற்று அவளுக்கு வந்த மின் அஞ்சலில் குறித்திருந்த வல்லுநர் குழுவில் கூட அந்தப் பெயர் இல்லை.ஆனால் குறிப்பிடத்தகுந்த சில சூழலியல் நூல்களை எழுதியிருந்ததால் உடன் வந்த அந்த நண்பரின் பெயர்பட்டியலில் இடம் பெற்றிருந்ததை அவள் கவலையோடு கவனிக்கவே செய்தாள்எந்த இடத்தில் இண்டு இடுக்கு தென்பட்டாலும் அதில் ஓடிப்போய்த் தன்னைப்பொருத்திக்கொண்டு விடுகிற அந்த மனிதனின் சாதுரியம் சுலோ அறிந்ததுதானென்றாலும் அழைக்கப்பட்டவர்கள் மட்டுமே கலந்து கொள்ளக்கூடிய ஒரு கூட்டத்துக்கு இன்னொருவரைத் தொற்றிக்கொண்டு அப்படி எவரும் எளிதில் உள்ளே நுழைந்து விடுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லையென்றே அவள் முடிவு கட்டி  வைத்திருந்தாள். அநுமானங்கள் பொய்த்துப்போய் யதார்த்தம் மட்டுமே முகத்தில் அறைந்து கொண்டிருந்த அந்த வேளையில்.... உடலின் அணுக்களெல்லாம் மரத்துப்போய்,உணர்வுகள் உறைநிலைக்குப்போய் விட...தன் இருப்பு என்ற ஒன்றையே இல்லாமலாக்கி விட முடியாதா என்று முயன்று கொண்டிருந்தாள் அவள்.

கிட்டத்தட்ட முப்பத்தைந்து  நீண்ட ஆண்டுகளுக்குப் பின்னான இந்த ‘என்கவுண்டர்’-  இந்த ’நேருக்கு நேர்’ மட்டும் தன் வாழ்வின் இறுதிக்கணம் வரை எந்தச்சூழலிலும் ஒருபோதும் நிகழ்ந்து விடலாகாது என்று திட்டவட்டமாகத் தீர்மானம் செய்து வைத்திருந்தாள் அவள். உறுதியான ஒரு கல்லுக்கு மேல் அதையும் விட உரமான மற்றொரு கல்லடுக்கி  பீரங்கி துளைத்தாலும் பிளந்து நெக்கு விட்டு விடாத திட்பமான முரட்டுக் கற்சுவரைப்போல அவளுக்குள் காலம் அதை உருவேற்றி இறுக்கி வைத்திருந்தது. இப்படி ஒரு கண்ணாடிக்குவளையின் சிதறலை விட இலகுவாக  ஒரு  கணப்பொழுதில்  அது சிதறிப்போகக்கூடுமென்ற ஒரு தற்செயல் எண்ணம் கூட அவளுக்குள் உதித்ததில்லை.

அந்த உறவு என்றென்றைக்குமாய்த் துண்டிக்கப்பட்டுப்போன அந்த நொடியிலிருந்து இப்படி ஒரு  சந்திப்பு  நிகழாமல் உள்ளுணர்வின் எச்சரிக்கையோடு ஒரு விரதத்தைப்போல கவனம் காத்து வந்திருக்கிறாள் அவள்.  நீதி மன்றத்தில் சட்டரீதியான மண விலக்குப் பெற்றுக்கொள்வதையும் கூட அடுத்த யோசனைக்கே இடமில்லாதபடி அவள் நிராகரித்ததன் முதற்காரணம் அந்த முகத்தை மீண்டும் பார்ப்பதென்பது தன் வாழ்வின் எந்த நொடியிலும் எந்த நிலையிலும் நிகழ்ந்து விடக்கூடாது என்பதற்காகத்தான்.. இன்னொருத்தியோடு வந்து அறைக் கதவை அவள் முகத்துக்கு நேரே அடைத்த கணத்தில் அவள் மனதில் கடைசியாகப் பதிந்து போயிருந்த அவனது அந்த முகத்தை – வன்மமும் ஏளனமும் காமமும் கபடமுமான ’பாவம் தேங்கியிருந்த அந்த முகத்தை - இனியொரு முறை ஏறெடுத்து நோக்குவதும் கூடத் தனக்கு இழிவு என்றே அவள் அதை அருவருத்தும் வெறுத்தும் புறந்தள்ளி வந்தாள்.

ஆனால்.... எல்லா விதமான கூச்சங்களையும் முற்றாகத் துறந்திருந்த அந்த அற்பப்புழுவோ காலைச்சுற்றும் கடும்பாம்பாக மாறிவிட்டிருந்ததுஅவள் மீது பழி சொல்வது தன் தரப்புக்கு எந்த அளவு நியாயம் சேர்க்கும் என்ற யோசனைகள் கொஞ்சமும் அற்றதாய் அவள் சஞ்சரிக்கும் ....பணிபுரியும் இடங்களிலெல்லாம் அவள் தலை கவிழ்ந்து நிற்கச்செய்யும் முயற்சிகளில் முனைப்பாக இறங்கியபடி அவள் போகும் பாதைகளிலெல்லாம் தன்  சுவடுகளைப்பதித்தபடியே இருந்தது.... தான் பொழிந்த  அன்பையெல்லாம்  அவள்   நிர்த்தாட்சண்யமாக நிராகரித்ததாலேயே தன் மறுமணம் அதற்கு எதிர்வினையானது போலவும்....இன்னும் இன்னும் இன்னும்..... கூசாமல் உதிர்ந்த புதுப்புதுப் பொய்கள்.... !!
அவர் பாவம் நல்லவர்தான்..இவ மேலே உயிரையே வச்சிருந்தார்....இவ கிட்டதான் ஏதோ சரியில்லைஎன்று மிக நெருங்கியவர்களைக்கூட எண்ண வைத்துப் புழங்கும் இடமெங்கும் அவளை ஒரு விநோதப்பிராணியாய்ப்பார்க்க வைத்த பாசாங்குகள்....
 ’உனக்கென்று ஒரு வாழ்க்கை அமைந்த பின்னும், இன்னும் கூட என் மீது  படர்த்துவதற்கான எந்த விஷம் எஞ்சியிருக்கிறதென்று என் காலைச்சுற்றி வளைக்கிறாய் நச்சுநாகமே........’.
வேண்டுமென்றே செய்யும்போது நேரே கேட்க விருப்பமில்லை;அதில் பயனும் இல்லை. 

ஆய்வின் நிமித்தம் சுலோ விண்ணப்பித்திருந்த இரண்டாண்டுக்கால விடுமுறை சரியாக அப்போது கிடைத்து விட ,அவள் வெளியுலகத் தொடர்புகளையே முற்றாகத் துண்டித்துக்கொண்டாள்குழந்தைப்பராமரிப்பில் கழித்த வேளைகள் போக ஆய்வும் ஆய்வு சார்ந்ததுமே வாழ்க்கையென ஆகிப்போக அதில் அவள் காட்டிய தீவிரமும் வெளியிட்ட ஆய்வுக்கட்டுரைகளும் நூல்களும் ஆய்வு முடிவதற்கு முன்பே   சர்வதேச அரங்கில் குறிப்பிடத்தக்க நபராக அவளை முன்னிறுத்தவாழ்த்துச்சொல்ல முதல் ஆளாக வேடமிட்டபடி வந்தவனை வெளி வாசலில் பார்த்ததுமே வீட்டுக்கதவை இறுக அடைத்துக்கொண்டாள்..

ஆய்விடத்திலும் கூட அமைதியில்லாதபடி தொடர்ந்து  அவளை ஊரத் தொடங்கியது புழு. கலந்துரைக்காக அவள் செல்லும் பேராசிரியர்களிடமெல்லாம் அவளைப்பற்றிய ஏதாவது ஒரு செய்தியையாவது விட்டுச்செல்வது வழக்கமாகிப்போனபின் தன் வழிகாட்டியைத் தவிரப் பிறரோடான குறைந்தபட்சக் கருத்துப்பரிமாற்றங்களிலிருந்தும் அவள் தன்னை  விலக்கிக்கொண்டாள்.
தான்  ஒரு தந்தையைப் போன்ற மரியாதை வைத்திருக்கும் ஆய்வு நெறிகாட்டியான டாக்டர் கே எஸ் மூர்த்தியின்  மேசையிலும் கூட   - அந்த மனிதன் எழுதிய கட்டுரைப்பிரதி ஒன்று இருந்ததை ஒரு நாள் பார்க்க நேர்ந்தபோதுதான் அவள் அதிர்ந்து போனாள்தேவைக்கு மேல் ஒரு வார்த்தை கூடப் பேசும் வழக்கமில்லாத அவள், அன்றும் கூட எதுவும் சொல்லவில்லை என்றாலும் பேராசிரியர் புரிந்து கொண்டார்..
‘’என்ன சுலோ....? அவன் என் கிட்டே வந்து ஏதாவது சொன்னானான்னு பாக்கிறியா.....? ஆமாம். வந்தான்....சொன்னான்...ஆனா...நான் என்ன சொன்னேங்கிறது  உனக்குத் தெரியுமா ? இதோ பாருப்பா....உனக்குத் தெரியறதுக்கு முன்னாடியே ஒரு இளம் மாணவி நிலையிலேயிருந்து சுலோசனாவைப்பத்தி முழுசா எல்லாமே எனக்குத் தெரியும். நீ இப்ப சொல்லிக்கிட்டு இருக்கறது, இனிமே சொல்லப்போறது எதுவுமே இந்த மனசுக்குள்ளே எறங்கப் போறதில்லை. அப்பறம் எதுக்கு அநாவசியமா உன்னோட எனர்ஜியை வேஸ்ட் ஆக்கிட்டிருக்கேன்னேன் ..அப்படியே எழுந்து போயிட்டான். இன்னொரு தரம் என் கிட்ட நெருங்கிப் பாக்கற தைரியம் அவனுக்கு நிச்சயமா இருக்காது’’ என்றவர்,
‘’இதோ பாரும்மா.....இதெல்லாம் சும்மா ’பெட்டி திங்ஸ்’ ! நீ வாழ்க்கையிலே குறிப்பிட்ட ஒரு இலக்கை அடையறதுக்காகப் பொறந்தவ. சுலோசனாவோட பிறப்புக்குக் கடவுள் போட்டு வச்சிருக்கிற அர்த்தம் அதுதான். அதை செயலுக்குக்கொண்டு வர்றது உன் கையிலேதான் இருக்கு. அது ஒண்ணு மட்டுமே ஒரு சுலோகம் போல எப்பவும் உனக்குள்ளே ஒலிச்சுக்கிட்டிருக்கணும். கடலைத்  தாண்டின அனுமாரா ஒரு பெரிய ஜம்பை நீ நிகழ்த்தப்போற நாளுக்காக நான் காத்துக்கிட்டிருப்பேன். இப்படிப் போற இடத்திலேயும் வேலை பாக்கற இடத்திலேயும் அவன் கண்டதையும் விதைச்சுக்கிட்டே போறதைப்பாத்து நீ கலங்கினாலோ, இந்த ஓட்டத்திலே ஒரு கணம் தயங்கி நின்னுட்டாலோ அதுவே  அவனுக்குக்கெடைக்கிற  வெற்றியாயிடும். அவனோட எதிர்பார்ப்பு,  தேவை எல்லாமே அது ஒண்ணுதான்....சுலோ...அவனோட தூஷணைப் பேச்சிலெல்லாம் எந்த ’டெப்த்’தும் இல்லே....அதைக் கேக்கறவங்களுக்குக்கூட அது அந்த நேரத்து சுவாரசியம் மட்டும்தான்....அதுக்கு அப்பறம் அதை யாருமே நெனச்சுக்கிட்டிருக்கப்போறதில்லை. எல்லாமே வெறும் ’பாஸிங் க்ளவுட்ஸ்’ மட்டும்தான்...அதையெல்லாம் கடந்து போறதுக்கு ஒரே ஒரு வழி உன்னை நீ ,  நீயா மட்டுமே நிறுவிக்காட்டறது ஒண்ணுதான். இந்த ’ஸ்டிக்மா’ எல்லாம் அப்ப ஒண்ணுமே பெறாத ஒரு தூசாகிப்போயிடும்...’’

அதன் பின் அவள் நாட்டமெல்லாம் அவன் தூவி விட்டுப்போகும் நச்சை முறிப்பதில் இல்லாமல் நஞ்சு தீண்டாதவளாகத் தன்னைச் சமைத்துக்கொள்வதில் மட்டுமே லயித்தது.கூட்டுப்புழுவாகத் தன்னைச் சுருக்கியபடி சில ஆண்டுகளைக் கழித்துவிட்டு வண்ணச்சிறகுகளோடு அவள் வெளிவந்தபோது வானம் மட்டுமே அவள் எல்லையாகி இருந்தது.
வரவேற்புக்கூடத்தின் ஒரு புறமாக சுலோசனாவைத் தனியே அழைத்துச்சென்ற சந்திரமோகன்  , ’’மேடம்...மீட்டிங் ஆரம்பிக்கறதுக்கு முன்னாலே மூர்த்தி சாரை மொதல்லே பார்த்துட்டு வந்திடுவோம் வாங்க’’என்றார் 
‘’மூர்த்தி சாரா...இங்கேயா?’’
‘’ஆமாம்...அவர் இங்கே இருக்கறது எல்லாருக்கும் தெரிஞ்சா அப்பறம் தொந்தரவாப்போயிடும்னு யாருக்கும் சொல்லலை. இப்படி ஒரு மையம் ஆரம்பிக்கவே அவர்தான் எங்களுக்குத் தூண்டுதல். முதல் கட்ட வேலை முடியற வரைக்கும் இங்கேயே தங்கவும் மருத்துவம் பார்த்துக்கவும் அவருக்கு நிர்வாகம் வசதி செஞ்சு கொடுத்திருக்கு.உங்களை மட்டும் பார்க்கறேன்னிருக்காரு.வாங்க’’
சுலோவின் ஆய்வு வழிகாட்டியான மூர்த்தி இப்போது பார்க்கின்ஸன் நோயின் வீரியமான பிடியில். அவரைச்சென்று பார்ப்பது கூட அவருக்குத் துன்பமாகி விடுமோ  என்பதற்காகவே பலமுறை விரும்பியும் அவள் அதைக் கட்டாயமாகத் தவிர்த்து வந்தாள்..
சந்திரமோகன் அழைத்துச் சென்ற அறை இருட்டாய் இருந்தது. மிக இலேசான வெளிச்சத்துக்குக் கண்கள் பழகும் வரை அங்கே எவரும் இருக்கக்கூடும் என்பதைக்கூட அனுமானிக்க முடியவில்லை.
‘’அவருக்குக்கண்ணும் கூட பாதிச்சிருக்கு மேடம்...கொஞ்சம் கூடுதலான வெளிச்சத்தைக்கூட அவராலே பார்க்க முடியறதில்லை. நர்ஸிங் பண்றவங்களைத் தவிர நாங்க ஒண்ணு ரெண்டு பேர் மட்டும்தான் பக்கத்திலே போவோம்...நாங்க கேக்க நெனக்கிற சந்தேகங்களை முதல்லே எழுதிக்கொடுத்திடுவோம். அவராக்கூப்பிட்டு அனுப்பறப்ப போய் அவர் சொல்லறதையெல்லாம் அப்படியே  டேப் பண்ணிக்குவோம்.’’
எலும்புக்கூடாய் இருந்த மூர்த்தி சாரின் கண்களில் அவளைக்கண்டதும் ஒரு ஒளிக்கீற்று...! அருகில் அழைத்து அவள் கரங்களை ஒரு விநாடி பற்றிக்கொண்டவர்,’’சுலோ...! ஜாஸ்தி பேச முடியறதில்லேம்மா!..இந்தா இதை அப்பறம் படிச்சுப்பாரு’’என்றபடி தன் தலையணைக்கு அடியிலிருந்து ஒரு கடித உறையை அவளிடம் தந்துவிட்டுக்கண்களை மூடிக்கொண்டார்.
‘’போகலாம் மேடம்’’என்றபடி சந்திரமோகன் அவளை வழிநடத்திச் சென்றார்.

கருத்தரங்க அறைநிகழ்ச்சி தொடங்குவதற்கான ஆயத்தங்களுடன் இருக்க பெரும்பாலோர் அவரவர் இருக்கைகளில் அமர்ந்து விட்டிருந்தனர். சற்றுநேரம் மறந்திருந்த நினைவு மீண்டும் வந்து கவிந்து கொள்ளதன் இருக்கை அமைந்திருக்கும் இடத்தை  நோட்டமிட்டாள் சுலோசனா. ’யூ’ வடிவத்திலிருந்த மேசையின் மையப்பகுதி , நிகழ்ச்சி அமைப்பாளர்களுக்கு விடப்பட்டிருக்க,மற்ற இரு புறமும் பங்கேற்பாளர்கள்ஒரு பக்கத்திலிருந்த மேசையின் நடுப்பகுதியில் சுலோவின் இருக்கை; அதற்கு நேர் எதிரிலுள்ள மேசையின் ஓரமாக சுவர்க்கோடியில் ‘அவ’னது இடம். நிகழ்ச்சி முடியும் வரை - முழுநேரமும் அந்தக் கம்பளிப்பூச்சியின் ஊறலை உணர்ந்து கொண்டே கூட்டத்தில்  இயல்பாக இருப்பது தனக்கு எப்படி சாத்தியமாகப்போகிறது என்று அவள் யோசித்துக்கொண்டிருந்தபோது...., கூட்டம் தொடங்கி விட்டிருந்தது. 

விருதுகளோடும் பட்டங்களோடும் நூல் வெளியீடுகளோடும் எல்லோரும் குறிப்பிடப்பட்ட அந்த அறிமுகத்தில் எப்போதோ பணி புரிந்த ஒரு நிறுவனத்தின்  முன்னொட்டு மட்டுமே ’அவ’னுக்கான அறிமுகமாயிற்று;அதோடு கூடவே இப்போது குறிப்பிட்ட ஒரு செல்வந்தரின் கைத்தடியாக அவன் இருப்பதும் அவைக்கே உரிய நாசூக்கான வார்த்தைகளில் தவறாமல் சொல்லப்பட்டது. அந்தப்  பணக்காரர் நடத்திக்கொண்டிருக்கும்  சூழலியல் இதழின் ஆலோசகர் என்ற போர்வையில் பிரத்தியேக அழைப்பாளராக அங்கே தன்னை இலகுவாகப் பொருத்திக்கொள்ள முடிந்திருப்பது அதனாலேதான்  என்பதும் அவளுக்கு அப்போதுதான் விளக்கமாயிற்று..

எதிர் ஓரத்தில் பார்வையையே திருப்பாமல் மற்ற பகுதிகளில் மட்டுமே பார்வையைப் பதித்தும் உரையாடல்களில் கவனம் திருப்பியும் தன்னை சமநிலைக்குக்கொண்டு சுலோசனா முயற்சித்துக்கொண்டிருந்தாலும் எதிலுமே முழுமையான கருத்துச்செலுத்த இயலாதபடி -  மனம் ஒவ்வாத ஒரு  பார்வை எல்லைக்குள் தான் இருப்பதை அசௌகரியமாக உணர்ந்து கொண்டிருந்தாள் அவள்முப்பத்தைந்து ஆண்டுகள் கடந்து போன பின்பும் அது அவளுக்கு ஒரு  துச்சாதனப்பார்வையாக மட்டுமே இருந்தது. 
கூட்டத்தில் கலந்து கொள்ள மறுத்து ஏதாவது சொல்லிக் கழன்று கொள்ள முடியாத ஒரு இக்கட்டான ஒரு தருணத்தில் அந்தச்சந்திப்பை நிகழ்த்தியபடி தன்னை வீழ்த்துவதற்கான காய் நகர்த்தப்பட்டிருந்த அந்தக்கணத்தில் - அங்கே பேசப்போவது எதையும் கோவையாகத் தொகுத்துக்கொள்ள முடியாத மனக்குழப்பத்துடன்  இன்னும் இருவர் மட்டுமே பேசுவதற்கு எஞ்சியிருந்த அந்தக்கணத்தில் அவள் ஒரு நொடி கண்களை இறுக மூடிக்கொண்டாள்

இது ....,அவளை அவளாக மட்டுமே அங்கீகரித்திருக்கும் கணம். இங்கே ஒடுங்கிச்சுருண்டு தனக்கெனத் தனி முகவரி அற்று அமர்ந்திருக்கும் ஒருவனின் மனைவியாக அவள் எவராலும் பார்க்கப்படவில்லை;  அவள் அழைக்கப்பட்டதும் அதற்காக இல்லை. அங்குள்ள பலரும் அறிந்திருப்பது .சூழலியல் சுலோசனாவை மட்டுமே... இது...அக்கினிக்கணமாக ஆக நேர்ந்ததது விதியின் குரூரமான ஒரு நகைமுரண்!.. ஆனால் இப்போது கோழைத்தனமாய்ப் புறங்கொடுத்தலென்பது எந்த வகையில் நிகழ்ந்தாலும் அழுகி நாற்றமடிக்கும் அவளது பழைய அடையாளம் அவளாலேயே மீட்டெடுக்கப்பட்டு விடும். எப்போது நிகழப்போகிறது என்று அந்தப்புழு ஒவ்வொரு கணமும் எதிர்நோக்கிக்கொண்டிருப்பதும் அவ்வாறான ஒரு தருணத்தை மட்டும்தான். அவள் முன் இப்போது நிற்கும் ஒரே கேள்விஇதை அவள் தன்னுடைய கணமாக ஆக்கிக்கொள்ளப்போகிறாளா...., அவனுக்கு விட்டுத் தந்து விடப்போகிறாளா என்பது மட்டும்தான்

மேடம் சுலோசனா!’ என்ற அழைப்பு மைக்கில் ஒலித்ததும் ,  தனது உயிரணு ஒவ்வொன்றையும்  தனக்கு மிகவும் பிடித்தமான பேசு பொருள் ஒன்று மட்டுமே ஆட்கொண்டு ஆட்டி வைக்க..., அவள் தன்னை மறந்தாள்அதற்கே தலைப்பட்டாள்....! பேச்சை முடித்து அவள் அமர்ந்தபோது கருத்தரங்க மரபுகளையும் மீறி எழுந்த தொடர் கைதட்டல் அறையை நிறைத்திருந்தது.   தன்னையும் அறியாமல் அரங்கம் முழுவதும் கண்களை ஓட்டிய சுலோசனா தன்னால்  ’அந்த’ப் பார்வையை  நேருக்கு நேர் பார்த்தபடியே புறந்தள்ள  இப்போது  முடிவதை மகிழ்வோடு அவதானித்தாள். 

தொடர்ந்து தேநீர் இடைவேளையின்போதும்கூட்டம் முடிந்து உணவுக்காக எல்லோரும் கலைந்தபோதும் - நின்றும் நடந்தும் உரையாடிக்கொண்டிருந்தவர்களின் அடர்த்தி அவளைச்சுற்றிக் குறையும்போதெல்லாம் விடாமல் அவன் தன்னைப்பின் தொடர்வதைக்  கவனித்தாலும் அதனால் சற்றும் பாதிக்கப்படாதவளாய் அந்த இடத்திலிருந்து இயல்பாக விலகிச்சென்றபடி முகமே தெரியாத எவரெவருடனோ வேண்டுமென்றே தன் உரையாடலைக் கலகலப்பாக அமைத்துக்கொண்டாள் அவள்மீண்டும் வரவேற்புக்கூடம்....விடை பெறும் சடங்கு.....இப்போதும் அவன் அவளையே குறி வைத்தபடி முன்னேறி வர....அதற்குள் அமைப்பாளரை நெருங்கியிருந்த சுலோ தனக்கு ஒரு அவசர வேலை இருப்பதாய் விடை பெற்றுக்கொண்டாள்.

காரில் ஏறி....அது வேகம் பிடித்ததும்....சில்லென்றடித்த குளிர்காற்றில் மூன்றுமணிநேரப் பதற்றங்களும் காணாமல் போய் விடதிடீரென்று நினைவு வரப்பெற்றவளாய் மூர்த்தி தந்த காகித உறையைப் பிரித்தபோது ‘’உன் விருதுகளில் மகிழ்வதை விட உன் வாழ்க்கையை நீ வெற்றியாக்கிக்கொண்டதில் மகிழ்கிறேன்’’என்று தன் நடுங்கும் விரல்களால் அதில் எழுதிக்கொடுத்திருந்தார் மூர்த்தி.
‘’ஒரு இளநீர் குடிச்சிட்டுப் போகலாம் கொஞ்சம் நிறுத்துங்க’’
என்றபடி சுலோ காரை விட்டு இறங்கியபோது ஏதோ ஒரு சுழற்காற்றின் வேகம்.
‘’அம்மா..! புழுதிப்புயல் வரும் போல இருக்கே’’ என்றார் ஓட்டுநர்..
‘’வரட்டுமே ..அதனாலே என்ன’’ என்றபடி இளநீரைக்குடித்து முடித்து அவள் நிமிர்ந்த அந்தக்கணத்தில் சுழலாக உருக்கொண்டு ஓங்கி அறைந்த காற்று சாலையோரத்துக் குப்பை கூளங்களையெல்லாம் அவள் முகத்தில் விசிறி அடித்தது.  சற்றும் சட்டை செய்யாமல் சாவதானமாக அதையெல்லாம் தட்டி விட்டுக்கொண்டு நிமிர்ந்தபோது அவள் கையில் இன்னும் கூட விடாப்பிடியாக ஒட்டிக்கொண்டிருந்தது ஒரு துரும்பு.  துரும்பைக்கிள்ளிப்போட்டபடி இராவணனோடு  சீதை உரையாடிய காட்சியை மனதுக்குள் ஓட்டியபடி ஒரு கணம் அதை  உற்று நோக்கிய அவள்....உதட்டைக் குவித்து ஊதியபடி அதைப்பறக்க விட்டாள்காற்றின் அசைவோடு அது விலகிச்செல்லும் காட்சியை சில நொடிகள் ரசித்தபடி நின்றிருந்தபோது அந்தக்கொடுமையான கணமும் கூட அவளிடமிருந்து விலகிப் போயிருந்தது..


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....