துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

12.6.16

’’ஒரு கணம் ஒரு யுகமாக.’’.{கணையாழி-ஜூன் 2016}

கணையாழி-ஜூன் 2016 இதழில் வெளியாகி இருக்கும் என் சிறுகதை..
[நன்றி;கணையாழி இதழுக்கு..]

’’ஒரு கணம் ஒரு யுகமாக.’’
வலுவனைத்தையும் செலுத்தி விலக்க விலக்கப் பிடிவாதத்தோடு  படர்தலைத் தொடர்கிற பழங்குளத்து நீர்ப்பாசியாகக் குறிப்பிட்ட அந்தக்கணத்திலிருந்து தன்னைத் துண்டித்துக்கொள்ள சுலோ முயல்கிற ஒவ்வொரு முறையும் அது முன்னை விட வீரியத்தோடு முண்டியடித்துக்கொண்டபடி தன்னை அவளுக்குள் உட்புகுத்திக் கொண்டிருந்தது. அது ஒன்றும் அவள் வாழ்க்கையில்  அப்படி முக்கியமானதும் உன்னதமானதுமான ஒருகணம்அல்ல ; சொல்லப்போனால்   அப்படிப்பட்ட அசம்பாவிதமான ஒரு கணம் தன் வாழ்நாளில் சம்பவித்திருக்கவே கூடாதென்றும்அதை மட்டும் தன்னால் நீக்கி விட முடியுமென்றால் இதுவரை இருந்த நிம்மதியை மீட்டெடுத்துக்கொண்டு விடலாமே என்றும் அவளை நினைக்க வைக்கிற கணம்தான் அது. ஆனாலும்....ஏதோ ஒரு வகையான சுயபரிசோதனையின் நிமித்தம் அது அவளுக்குத் தேவைப்படுவது போலவும் இருந்தது.  

உயரமான அந்தக்கட்டிடத்தின் முகப்புவாயில் மேற்படியில் அவள் காலை  வைத்தபோதுதான் அது நிகழ்ந்தது. அவளுடன் வந்த உதவியாளர் ஒருவர் , கீழே ஒரு கார் வந்து நிற்பதைப் பார்த்து விட்டுக் கூட்டத்துக்கு அழைத்திருக்கும் முக்கியமான நபர்களில் அது யாராக இருக்கக்கூடும் என்ற கேள்வியோடு திரும்பியபோது அவளும் அனிச்சையாகத் திரும்பிப் பார்த்த மிகச்சரியான அந்தக்கணத்திலேதான் அது  நிகழ்ந்தது. இயந்திரத்தனமான முதல் பார்வையுடன் முகத்தைத் திருப்பிக்கொண்ட அடுத்த நொடியில் அதிர்வுக்கீற்று ஒன்று நெஞ்சில் எழ .... தன் சந்தேகத்தை உறுதி செய்தி கொள்வதற்காக  அவள் மீண்டும் திரும்பிப்பார்த்தாள். ஆமாம்! காருக்குள்ளிருந்து இறங்க முயற்சித்துக்கொண்டிருந்தது அந்த மனிதன்தான்.கூடவே நண்பர் ஒருவரும்....!

சுலோசனா உடைந்து சிதறியதும் தன்னை இப்போது அதிலிருந்து மீட்டுக்கொள்ள எண்ணுவதுமான கணம் அதுதான்! ஆபத்தில்லாத இடம் என்று எண்ணியபடி அநாயாசமாய்க் கடக்க முற்படும் தெருவில் திடீரென்று ஆயிரம் வாலா பட்டாசுச்சரம் தொடர்ந்து வெடித்தால் ஏற்படும் திடுக்கிடல் போன்றதொரு சின்ன பூகம்பம் அவளுக்குள் நிகழ்ந்து விட்டிருந்ததில் கால் கை தலை உடல் என எல்லாமே தனித்தனியாக பிய்ந்து போய் ஒவ்வொரு அங்கமும் ஒவ்வொரு சபிக்கப்பட்ட கணத்தின் பிடியில்!

அன்பை மட்டுமே யாசிப்பது போன்ற அப்பாவித்தனமான முகமூடிகளில்-கலியாணம் முடிந்த இரண்டே மாதங்களில் விழுந்து விட்ட கோரமான பொத்தல்கள் மிரட்சியூட்டசமூகசாத்திரக் கோடுகளுக்குள் பொருந்தவோ தாண்டவோ முடியாத வயதின் பக்குவமின்மையோடு சிறகை மடக்கிக்கொண்டு கூண்டுக்குள் சிறையிருந்த  கணம்....

அடர்த்தியான இரவொன்றில் - வயிற்றில் தாங்கிய குழந்தையோடு கொல்லைக்கிணற்றடியின் துவைக்கிற கல்லில் உட்கார்ந்தபடி தொலைதூரத்துக்கோயில் விளக்கின் உச்சிப்புள்ளியை மட்டுமே வெறித்தபடி ‘இது எனக்கான வாழ்க்கையில்லை..., என் பிறவி நேர்ந்தது இதற்காக இல்லைஎன்று திரும்பத் திரும்ப உச்சரித்தபடி இருந்த அந்தக்கணம்....

வாதங்களும் விவாதங்களும் மட்டுமே வாழ்க்கையாகி விட்ட அசட்டுக்கூச்சல்களுக்கு நடுவே வருங்காலக் குருத்தை வாடவிடாமல் வளர்த்தெடுப்பது எப்படி என்ற கவலைக்குள் மூழ்கடித்துக்கொண்ட கணம்...

இன்னொருத்தியை உள்புகுத்தி குடும்ப வாழ்வையே ஒரு கூட்டுப்பகிர்தல் பேரமாக ஆக்கத் துணிந்த அந்தக்கடைசிப் புள்ளியில் ஒட்டுமொத்தமாகத் தன்னை அந்த பந்தத்திலிருந்து விடுவித்துக்கொண்டபோது - சமூகத்தின் பார்வையில் தெரிந்த போலிக்கழிவிரக்கத்தில் புண்பட்டதை விடத் தான் பெற்ற விடுதலையின் நிம்மதி தந்த ஆசுவாசமே மேலோங்கி நின்ற அந்தக்கணம்...

கணங்களுக்குள் புகுந்து கரைந்து கொண்டிருந்த சுலோசனாவை எங்கோ ஆழத்திலிருந்து ஒரு குரல் அழைத்தது.
‘’வாங்க வாங்க சுலோசனா மேடம்.எல்லாரும் உங்களைத்தான் எதிர்பார்த்துக்கிட்டிருக்காங்க, என்ன இங்கேயே நின்னுட்டீங்க’’
பேராசிரியர் சந்திரமோகனின் உற்சாகமான அந்தக்குரல் எங்கோ பாதாளத்தில் இருந்த அவளை மேலே இழுத்துக்கொண்டு வந்தது.

சூழலியல் சார்ந்த விழிப்புணர்வை வெவ்வேறு ஊடகங்கள்,புனைவுகள்,கல்வி நிறுவனங்கள் இவற்றின் வழியாக மக்கள் மன்றத்துக்குப் பரவலாக்கும் செயல்பாடுகளுக்காக அந்தத் தனியார்பல்கலைக்கழகம்ஆய்வு மையம் ஒன்றை முன்னெடுத்துக்கொண்டிருந்ததுஅதன் ஆயத்தப்பணிகளுக்கான சிறப்பு விருந்தினராக அவள் அங்கே அழைக்கப்பட்டிருந்தாள்.கடந்த ஏழெட்டு ஆண்டுகளாக  சுலோசனா பங்கு பெறாத சூழலியல் கருத்தரங்குகளோ மாநாடுகளோ இல்லையென்று சொல்லும் அளவுக்கு அந்தத் துறையின் கல்வியாளராக சர்வதேச அளவில் அவளுக்கு அங்கீகாரங்கள் குவிந்தபடி இருந்தன. அடுத்த மாதம் கூட ஆஸ்திரேலியா அளிக்கும் விருதைப்பெற அவள் மெல்பர்ன் செல்ல இருந்தாள்.
‘’என்ன மேடம் இவ்வளவு நேரம் காக்க வச்சுட்டீங்களே...உங்களைத்தான் எல்லாரும் எதிர்பார்த்துக்கிட்டிருக்கோம்''
''வாங்க வாங்க....மொதல்லே உங்க விருதுக்கு வாழ்த்துக்கள்’’
என்றபடி வரவேற்புக்கூடத்தில் உட்கார்ந்திருந்த பலரும் எழுந்து அவளுடன் கை குலுக்கவும் கை கூப்பவும் முற்படசுலோசனா  இப்போது இரண்டாகப் பிளவுண்டு போயிருந்தாள்.  எதிர்பாராத எதையுமே எதிர்கொள்ளாத பாவனையில் - வழக்கமான கலகலப்போடும் புன்னைகையோடும் தன்னை எதிர்ப்படுவோரின் வணக்கங்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் ஒரு சுலோசனா எதிர்வினையாற்றிக்கொண்டிருக்க , மற்றொரு சுலோவோ.....ஊர்ந்து நெளிந்தபடி தன்னை நெருங்கிக்கொண்டிருந்த புழுவை மட்டுமே பின் தொடர்ந்து கொண்டிருந்தாள்.

சற்றும் எதிர்பாராததாய்  இந்த வருகை இங்கே எப்படி நேர்ந்தது ? நேற்று அவளுக்கு வந்த மின் அஞ்சலில் குறித்திருந்த வல்லுநர் குழுவில் கூட அந்தப் பெயர் இல்லை.ஆனால் குறிப்பிடத்தகுந்த சில சூழலியல் நூல்களை எழுதியிருந்ததால் உடன் வந்த அந்த நண்பரின் பெயர்பட்டியலில் இடம் பெற்றிருந்ததை அவள் கவலையோடு கவனிக்கவே செய்தாள்எந்த இடத்தில் இண்டு இடுக்கு தென்பட்டாலும் அதில் ஓடிப்போய்த் தன்னைப்பொருத்திக்கொண்டு விடுகிற அந்த மனிதனின் சாதுரியம் சுலோ அறிந்ததுதானென்றாலும் அழைக்கப்பட்டவர்கள் மட்டுமே கலந்து கொள்ளக்கூடிய ஒரு கூட்டத்துக்கு இன்னொருவரைத் தொற்றிக்கொண்டு அப்படி எவரும் எளிதில் உள்ளே நுழைந்து விடுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லையென்றே அவள் முடிவு கட்டி  வைத்திருந்தாள். அநுமானங்கள் பொய்த்துப்போய் யதார்த்தம் மட்டுமே முகத்தில் அறைந்து கொண்டிருந்த அந்த வேளையில்.... உடலின் அணுக்களெல்லாம் மரத்துப்போய்,உணர்வுகள் உறைநிலைக்குப்போய் விட...தன் இருப்பு என்ற ஒன்றையே இல்லாமலாக்கி விட முடியாதா என்று முயன்று கொண்டிருந்தாள் அவள்.

கிட்டத்தட்ட முப்பத்தைந்து  நீண்ட ஆண்டுகளுக்குப் பின்னான இந்த ‘என்கவுண்டர்’-  இந்த ’நேருக்கு நேர்’ மட்டும் தன் வாழ்வின் இறுதிக்கணம் வரை எந்தச்சூழலிலும் ஒருபோதும் நிகழ்ந்து விடலாகாது என்று திட்டவட்டமாகத் தீர்மானம் செய்து வைத்திருந்தாள் அவள். உறுதியான ஒரு கல்லுக்கு மேல் அதையும் விட உரமான மற்றொரு கல்லடுக்கி  பீரங்கி துளைத்தாலும் பிளந்து நெக்கு விட்டு விடாத திட்பமான முரட்டுக் கற்சுவரைப்போல அவளுக்குள் காலம் அதை உருவேற்றி இறுக்கி வைத்திருந்தது. இப்படி ஒரு கண்ணாடிக்குவளையின் சிதறலை விட இலகுவாக  ஒரு  கணப்பொழுதில்  அது சிதறிப்போகக்கூடுமென்ற ஒரு தற்செயல் எண்ணம் கூட அவளுக்குள் உதித்ததில்லை.

அந்த உறவு என்றென்றைக்குமாய்த் துண்டிக்கப்பட்டுப்போன அந்த நொடியிலிருந்து இப்படி ஒரு  சந்திப்பு  நிகழாமல் உள்ளுணர்வின் எச்சரிக்கையோடு ஒரு விரதத்தைப்போல கவனம் காத்து வந்திருக்கிறாள் அவள்.  நீதி மன்றத்தில் சட்டரீதியான மண விலக்குப் பெற்றுக்கொள்வதையும் கூட அடுத்த யோசனைக்கே இடமில்லாதபடி அவள் நிராகரித்ததன் முதற்காரணம் அந்த முகத்தை மீண்டும் பார்ப்பதென்பது தன் வாழ்வின் எந்த நொடியிலும் எந்த நிலையிலும் நிகழ்ந்து விடக்கூடாது என்பதற்காகத்தான்.. இன்னொருத்தியோடு வந்து அறைக் கதவை அவள் முகத்துக்கு நேரே அடைத்த கணத்தில் அவள் மனதில் கடைசியாகப் பதிந்து போயிருந்த அவனது அந்த முகத்தை – வன்மமும் ஏளனமும் காமமும் கபடமுமான ’பாவம் தேங்கியிருந்த அந்த முகத்தை - இனியொரு முறை ஏறெடுத்து நோக்குவதும் கூடத் தனக்கு இழிவு என்றே அவள் அதை அருவருத்தும் வெறுத்தும் புறந்தள்ளி வந்தாள்.

ஆனால்.... எல்லா விதமான கூச்சங்களையும் முற்றாகத் துறந்திருந்த அந்த அற்பப்புழுவோ காலைச்சுற்றும் கடும்பாம்பாக மாறிவிட்டிருந்ததுஅவள் மீது பழி சொல்வது தன் தரப்புக்கு எந்த அளவு நியாயம் சேர்க்கும் என்ற யோசனைகள் கொஞ்சமும் அற்றதாய் அவள் சஞ்சரிக்கும் ....பணிபுரியும் இடங்களிலெல்லாம் அவள் தலை கவிழ்ந்து நிற்கச்செய்யும் முயற்சிகளில் முனைப்பாக இறங்கியபடி அவள் போகும் பாதைகளிலெல்லாம் தன்  சுவடுகளைப்பதித்தபடியே இருந்தது.... தான் பொழிந்த  அன்பையெல்லாம்  அவள்   நிர்த்தாட்சண்யமாக நிராகரித்ததாலேயே தன் மறுமணம் அதற்கு எதிர்வினையானது போலவும்....இன்னும் இன்னும் இன்னும்..... கூசாமல் உதிர்ந்த புதுப்புதுப் பொய்கள்.... !!
அவர் பாவம் நல்லவர்தான்..இவ மேலே உயிரையே வச்சிருந்தார்....இவ கிட்டதான் ஏதோ சரியில்லைஎன்று மிக நெருங்கியவர்களைக்கூட எண்ண வைத்துப் புழங்கும் இடமெங்கும் அவளை ஒரு விநோதப்பிராணியாய்ப்பார்க்க வைத்த பாசாங்குகள்....
 ’உனக்கென்று ஒரு வாழ்க்கை அமைந்த பின்னும், இன்னும் கூட என் மீது  படர்த்துவதற்கான எந்த விஷம் எஞ்சியிருக்கிறதென்று என் காலைச்சுற்றி வளைக்கிறாய் நச்சுநாகமே........’.
வேண்டுமென்றே செய்யும்போது நேரே கேட்க விருப்பமில்லை;அதில் பயனும் இல்லை. 

ஆய்வின் நிமித்தம் சுலோ விண்ணப்பித்திருந்த இரண்டாண்டுக்கால விடுமுறை சரியாக அப்போது கிடைத்து விட ,அவள் வெளியுலகத் தொடர்புகளையே முற்றாகத் துண்டித்துக்கொண்டாள்குழந்தைப்பராமரிப்பில் கழித்த வேளைகள் போக ஆய்வும் ஆய்வு சார்ந்ததுமே வாழ்க்கையென ஆகிப்போக அதில் அவள் காட்டிய தீவிரமும் வெளியிட்ட ஆய்வுக்கட்டுரைகளும் நூல்களும் ஆய்வு முடிவதற்கு முன்பே   சர்வதேச அரங்கில் குறிப்பிடத்தக்க நபராக அவளை முன்னிறுத்தவாழ்த்துச்சொல்ல முதல் ஆளாக வேடமிட்டபடி வந்தவனை வெளி வாசலில் பார்த்ததுமே வீட்டுக்கதவை இறுக அடைத்துக்கொண்டாள்..

ஆய்விடத்திலும் கூட அமைதியில்லாதபடி தொடர்ந்து  அவளை ஊரத் தொடங்கியது புழு. கலந்துரைக்காக அவள் செல்லும் பேராசிரியர்களிடமெல்லாம் அவளைப்பற்றிய ஏதாவது ஒரு செய்தியையாவது விட்டுச்செல்வது வழக்கமாகிப்போனபின் தன் வழிகாட்டியைத் தவிரப் பிறரோடான குறைந்தபட்சக் கருத்துப்பரிமாற்றங்களிலிருந்தும் அவள் தன்னை  விலக்கிக்கொண்டாள்.
தான்  ஒரு தந்தையைப் போன்ற மரியாதை வைத்திருக்கும் ஆய்வு நெறிகாட்டியான டாக்டர் கே எஸ் மூர்த்தியின்  மேசையிலும் கூட   - அந்த மனிதன் எழுதிய கட்டுரைப்பிரதி ஒன்று இருந்ததை ஒரு நாள் பார்க்க நேர்ந்தபோதுதான் அவள் அதிர்ந்து போனாள்தேவைக்கு மேல் ஒரு வார்த்தை கூடப் பேசும் வழக்கமில்லாத அவள், அன்றும் கூட எதுவும் சொல்லவில்லை என்றாலும் பேராசிரியர் புரிந்து கொண்டார்..
‘’என்ன சுலோ....? அவன் என் கிட்டே வந்து ஏதாவது சொன்னானான்னு பாக்கிறியா.....? ஆமாம். வந்தான்....சொன்னான்...ஆனா...நான் என்ன சொன்னேங்கிறது  உனக்குத் தெரியுமா ? இதோ பாருப்பா....உனக்குத் தெரியறதுக்கு முன்னாடியே ஒரு இளம் மாணவி நிலையிலேயிருந்து சுலோசனாவைப்பத்தி முழுசா எல்லாமே எனக்குத் தெரியும். நீ இப்ப சொல்லிக்கிட்டு இருக்கறது, இனிமே சொல்லப்போறது எதுவுமே இந்த மனசுக்குள்ளே எறங்கப் போறதில்லை. அப்பறம் எதுக்கு அநாவசியமா உன்னோட எனர்ஜியை வேஸ்ட் ஆக்கிட்டிருக்கேன்னேன் ..அப்படியே எழுந்து போயிட்டான். இன்னொரு தரம் என் கிட்ட நெருங்கிப் பாக்கற தைரியம் அவனுக்கு நிச்சயமா இருக்காது’’ என்றவர்,
‘’இதோ பாரும்மா.....இதெல்லாம் சும்மா ’பெட்டி திங்ஸ்’ ! நீ வாழ்க்கையிலே குறிப்பிட்ட ஒரு இலக்கை அடையறதுக்காகப் பொறந்தவ. சுலோசனாவோட பிறப்புக்குக் கடவுள் போட்டு வச்சிருக்கிற அர்த்தம் அதுதான். அதை செயலுக்குக்கொண்டு வர்றது உன் கையிலேதான் இருக்கு. அது ஒண்ணு மட்டுமே ஒரு சுலோகம் போல எப்பவும் உனக்குள்ளே ஒலிச்சுக்கிட்டிருக்கணும். கடலைத்  தாண்டின அனுமாரா ஒரு பெரிய ஜம்பை நீ நிகழ்த்தப்போற நாளுக்காக நான் காத்துக்கிட்டிருப்பேன். இப்படிப் போற இடத்திலேயும் வேலை பாக்கற இடத்திலேயும் அவன் கண்டதையும் விதைச்சுக்கிட்டே போறதைப்பாத்து நீ கலங்கினாலோ, இந்த ஓட்டத்திலே ஒரு கணம் தயங்கி நின்னுட்டாலோ அதுவே  அவனுக்குக்கெடைக்கிற  வெற்றியாயிடும். அவனோட எதிர்பார்ப்பு,  தேவை எல்லாமே அது ஒண்ணுதான்....சுலோ...அவனோட தூஷணைப் பேச்சிலெல்லாம் எந்த ’டெப்த்’தும் இல்லே....அதைக் கேக்கறவங்களுக்குக்கூட அது அந்த நேரத்து சுவாரசியம் மட்டும்தான்....அதுக்கு அப்பறம் அதை யாருமே நெனச்சுக்கிட்டிருக்கப்போறதில்லை. எல்லாமே வெறும் ’பாஸிங் க்ளவுட்ஸ்’ மட்டும்தான்...அதையெல்லாம் கடந்து போறதுக்கு ஒரே ஒரு வழி உன்னை நீ ,  நீயா மட்டுமே நிறுவிக்காட்டறது ஒண்ணுதான். இந்த ’ஸ்டிக்மா’ எல்லாம் அப்ப ஒண்ணுமே பெறாத ஒரு தூசாகிப்போயிடும்...’’

அதன் பின் அவள் நாட்டமெல்லாம் அவன் தூவி விட்டுப்போகும் நச்சை முறிப்பதில் இல்லாமல் நஞ்சு தீண்டாதவளாகத் தன்னைச் சமைத்துக்கொள்வதில் மட்டுமே லயித்தது.கூட்டுப்புழுவாகத் தன்னைச் சுருக்கியபடி சில ஆண்டுகளைக் கழித்துவிட்டு வண்ணச்சிறகுகளோடு அவள் வெளிவந்தபோது வானம் மட்டுமே அவள் எல்லையாகி இருந்தது.
வரவேற்புக்கூடத்தின் ஒரு புறமாக சுலோசனாவைத் தனியே அழைத்துச்சென்ற சந்திரமோகன்  , ’’மேடம்...மீட்டிங் ஆரம்பிக்கறதுக்கு முன்னாலே மூர்த்தி சாரை மொதல்லே பார்த்துட்டு வந்திடுவோம் வாங்க’’என்றார் 
‘’மூர்த்தி சாரா...இங்கேயா?’’
‘’ஆமாம்...அவர் இங்கே இருக்கறது எல்லாருக்கும் தெரிஞ்சா அப்பறம் தொந்தரவாப்போயிடும்னு யாருக்கும் சொல்லலை. இப்படி ஒரு மையம் ஆரம்பிக்கவே அவர்தான் எங்களுக்குத் தூண்டுதல். முதல் கட்ட வேலை முடியற வரைக்கும் இங்கேயே தங்கவும் மருத்துவம் பார்த்துக்கவும் அவருக்கு நிர்வாகம் வசதி செஞ்சு கொடுத்திருக்கு.உங்களை மட்டும் பார்க்கறேன்னிருக்காரு.வாங்க’’
சுலோவின் ஆய்வு வழிகாட்டியான மூர்த்தி இப்போது பார்க்கின்ஸன் நோயின் வீரியமான பிடியில். அவரைச்சென்று பார்ப்பது கூட அவருக்குத் துன்பமாகி விடுமோ  என்பதற்காகவே பலமுறை விரும்பியும் அவள் அதைக் கட்டாயமாகத் தவிர்த்து வந்தாள்..
சந்திரமோகன் அழைத்துச் சென்ற அறை இருட்டாய் இருந்தது. மிக இலேசான வெளிச்சத்துக்குக் கண்கள் பழகும் வரை அங்கே எவரும் இருக்கக்கூடும் என்பதைக்கூட அனுமானிக்க முடியவில்லை.
‘’அவருக்குக்கண்ணும் கூட பாதிச்சிருக்கு மேடம்...கொஞ்சம் கூடுதலான வெளிச்சத்தைக்கூட அவராலே பார்க்க முடியறதில்லை. நர்ஸிங் பண்றவங்களைத் தவிர நாங்க ஒண்ணு ரெண்டு பேர் மட்டும்தான் பக்கத்திலே போவோம்...நாங்க கேக்க நெனக்கிற சந்தேகங்களை முதல்லே எழுதிக்கொடுத்திடுவோம். அவராக்கூப்பிட்டு அனுப்பறப்ப போய் அவர் சொல்லறதையெல்லாம் அப்படியே  டேப் பண்ணிக்குவோம்.’’
எலும்புக்கூடாய் இருந்த மூர்த்தி சாரின் கண்களில் அவளைக்கண்டதும் ஒரு ஒளிக்கீற்று...! அருகில் அழைத்து அவள் கரங்களை ஒரு விநாடி பற்றிக்கொண்டவர்,’’சுலோ...! ஜாஸ்தி பேச முடியறதில்லேம்மா!..இந்தா இதை அப்பறம் படிச்சுப்பாரு’’என்றபடி தன் தலையணைக்கு அடியிலிருந்து ஒரு கடித உறையை அவளிடம் தந்துவிட்டுக்கண்களை மூடிக்கொண்டார்.
‘’போகலாம் மேடம்’’என்றபடி சந்திரமோகன் அவளை வழிநடத்திச் சென்றார்.

கருத்தரங்க அறைநிகழ்ச்சி தொடங்குவதற்கான ஆயத்தங்களுடன் இருக்க பெரும்பாலோர் அவரவர் இருக்கைகளில் அமர்ந்து விட்டிருந்தனர். சற்றுநேரம் மறந்திருந்த நினைவு மீண்டும் வந்து கவிந்து கொள்ளதன் இருக்கை அமைந்திருக்கும் இடத்தை  நோட்டமிட்டாள் சுலோசனா. ’யூ’ வடிவத்திலிருந்த மேசையின் மையப்பகுதி , நிகழ்ச்சி அமைப்பாளர்களுக்கு விடப்பட்டிருக்க,மற்ற இரு புறமும் பங்கேற்பாளர்கள்ஒரு பக்கத்திலிருந்த மேசையின் நடுப்பகுதியில் சுலோவின் இருக்கை; அதற்கு நேர் எதிரிலுள்ள மேசையின் ஓரமாக சுவர்க்கோடியில் ‘அவ’னது இடம். நிகழ்ச்சி முடியும் வரை - முழுநேரமும் அந்தக் கம்பளிப்பூச்சியின் ஊறலை உணர்ந்து கொண்டே கூட்டத்தில்  இயல்பாக இருப்பது தனக்கு எப்படி சாத்தியமாகப்போகிறது என்று அவள் யோசித்துக்கொண்டிருந்தபோது...., கூட்டம் தொடங்கி விட்டிருந்தது. 

விருதுகளோடும் பட்டங்களோடும் நூல் வெளியீடுகளோடும் எல்லோரும் குறிப்பிடப்பட்ட அந்த அறிமுகத்தில் எப்போதோ பணி புரிந்த ஒரு நிறுவனத்தின்  முன்னொட்டு மட்டுமே ’அவ’னுக்கான அறிமுகமாயிற்று;அதோடு கூடவே இப்போது குறிப்பிட்ட ஒரு செல்வந்தரின் கைத்தடியாக அவன் இருப்பதும் அவைக்கே உரிய நாசூக்கான வார்த்தைகளில் தவறாமல் சொல்லப்பட்டது. அந்தப்  பணக்காரர் நடத்திக்கொண்டிருக்கும்  சூழலியல் இதழின் ஆலோசகர் என்ற போர்வையில் பிரத்தியேக அழைப்பாளராக அங்கே தன்னை இலகுவாகப் பொருத்திக்கொள்ள முடிந்திருப்பது அதனாலேதான்  என்பதும் அவளுக்கு அப்போதுதான் விளக்கமாயிற்று..

எதிர் ஓரத்தில் பார்வையையே திருப்பாமல் மற்ற பகுதிகளில் மட்டுமே பார்வையைப் பதித்தும் உரையாடல்களில் கவனம் திருப்பியும் தன்னை சமநிலைக்குக்கொண்டு சுலோசனா முயற்சித்துக்கொண்டிருந்தாலும் எதிலுமே முழுமையான கருத்துச்செலுத்த இயலாதபடி -  மனம் ஒவ்வாத ஒரு  பார்வை எல்லைக்குள் தான் இருப்பதை அசௌகரியமாக உணர்ந்து கொண்டிருந்தாள் அவள்முப்பத்தைந்து ஆண்டுகள் கடந்து போன பின்பும் அது அவளுக்கு ஒரு  துச்சாதனப்பார்வையாக மட்டுமே இருந்தது. 
கூட்டத்தில் கலந்து கொள்ள மறுத்து ஏதாவது சொல்லிக் கழன்று கொள்ள முடியாத ஒரு இக்கட்டான ஒரு தருணத்தில் அந்தச்சந்திப்பை நிகழ்த்தியபடி தன்னை வீழ்த்துவதற்கான காய் நகர்த்தப்பட்டிருந்த அந்தக்கணத்தில் - அங்கே பேசப்போவது எதையும் கோவையாகத் தொகுத்துக்கொள்ள முடியாத மனக்குழப்பத்துடன்  இன்னும் இருவர் மட்டுமே பேசுவதற்கு எஞ்சியிருந்த அந்தக்கணத்தில் அவள் ஒரு நொடி கண்களை இறுக மூடிக்கொண்டாள்

இது ....,அவளை அவளாக மட்டுமே அங்கீகரித்திருக்கும் கணம். இங்கே ஒடுங்கிச்சுருண்டு தனக்கெனத் தனி முகவரி அற்று அமர்ந்திருக்கும் ஒருவனின் மனைவியாக அவள் எவராலும் பார்க்கப்படவில்லை;  அவள் அழைக்கப்பட்டதும் அதற்காக இல்லை. அங்குள்ள பலரும் அறிந்திருப்பது .சூழலியல் சுலோசனாவை மட்டுமே... இது...அக்கினிக்கணமாக ஆக நேர்ந்ததது விதியின் குரூரமான ஒரு நகைமுரண்!.. ஆனால் இப்போது கோழைத்தனமாய்ப் புறங்கொடுத்தலென்பது எந்த வகையில் நிகழ்ந்தாலும் அழுகி நாற்றமடிக்கும் அவளது பழைய அடையாளம் அவளாலேயே மீட்டெடுக்கப்பட்டு விடும். எப்போது நிகழப்போகிறது என்று அந்தப்புழு ஒவ்வொரு கணமும் எதிர்நோக்கிக்கொண்டிருப்பதும் அவ்வாறான ஒரு தருணத்தை மட்டும்தான். அவள் முன் இப்போது நிற்கும் ஒரே கேள்விஇதை அவள் தன்னுடைய கணமாக ஆக்கிக்கொள்ளப்போகிறாளா...., அவனுக்கு விட்டுத் தந்து விடப்போகிறாளா என்பது மட்டும்தான்

மேடம் சுலோசனா!’ என்ற அழைப்பு மைக்கில் ஒலித்ததும் ,  தனது உயிரணு ஒவ்வொன்றையும்  தனக்கு மிகவும் பிடித்தமான பேசு பொருள் ஒன்று மட்டுமே ஆட்கொண்டு ஆட்டி வைக்க..., அவள் தன்னை மறந்தாள்அதற்கே தலைப்பட்டாள்....! பேச்சை முடித்து அவள் அமர்ந்தபோது கருத்தரங்க மரபுகளையும் மீறி எழுந்த தொடர் கைதட்டல் அறையை நிறைத்திருந்தது.   தன்னையும் அறியாமல் அரங்கம் முழுவதும் கண்களை ஓட்டிய சுலோசனா தன்னால்  ’அந்த’ப் பார்வையை  நேருக்கு நேர் பார்த்தபடியே புறந்தள்ள  இப்போது  முடிவதை மகிழ்வோடு அவதானித்தாள். 

தொடர்ந்து தேநீர் இடைவேளையின்போதும்கூட்டம் முடிந்து உணவுக்காக எல்லோரும் கலைந்தபோதும் - நின்றும் நடந்தும் உரையாடிக்கொண்டிருந்தவர்களின் அடர்த்தி அவளைச்சுற்றிக் குறையும்போதெல்லாம் விடாமல் அவன் தன்னைப்பின் தொடர்வதைக்  கவனித்தாலும் அதனால் சற்றும் பாதிக்கப்படாதவளாய் அந்த இடத்திலிருந்து இயல்பாக விலகிச்சென்றபடி முகமே தெரியாத எவரெவருடனோ வேண்டுமென்றே தன் உரையாடலைக் கலகலப்பாக அமைத்துக்கொண்டாள் அவள்மீண்டும் வரவேற்புக்கூடம்....விடை பெறும் சடங்கு.....இப்போதும் அவன் அவளையே குறி வைத்தபடி முன்னேறி வர....அதற்குள் அமைப்பாளரை நெருங்கியிருந்த சுலோ தனக்கு ஒரு அவசர வேலை இருப்பதாய் விடை பெற்றுக்கொண்டாள்.

காரில் ஏறி....அது வேகம் பிடித்ததும்....சில்லென்றடித்த குளிர்காற்றில் மூன்றுமணிநேரப் பதற்றங்களும் காணாமல் போய் விடதிடீரென்று நினைவு வரப்பெற்றவளாய் மூர்த்தி தந்த காகித உறையைப் பிரித்தபோது ‘’உன் விருதுகளில் மகிழ்வதை விட உன் வாழ்க்கையை நீ வெற்றியாக்கிக்கொண்டதில் மகிழ்கிறேன்’’என்று தன் நடுங்கும் விரல்களால் அதில் எழுதிக்கொடுத்திருந்தார் மூர்த்தி.
‘’ஒரு இளநீர் குடிச்சிட்டுப் போகலாம் கொஞ்சம் நிறுத்துங்க’’
என்றபடி சுலோ காரை விட்டு இறங்கியபோது ஏதோ ஒரு சுழற்காற்றின் வேகம்.
‘’அம்மா..! புழுதிப்புயல் வரும் போல இருக்கே’’ என்றார் ஓட்டுநர்..
‘’வரட்டுமே ..அதனாலே என்ன’’ என்றபடி இளநீரைக்குடித்து முடித்து அவள் நிமிர்ந்த அந்தக்கணத்தில் சுழலாக உருக்கொண்டு ஓங்கி அறைந்த காற்று சாலையோரத்துக் குப்பை கூளங்களையெல்லாம் அவள் முகத்தில் விசிறி அடித்தது.  சற்றும் சட்டை செய்யாமல் சாவதானமாக அதையெல்லாம் தட்டி விட்டுக்கொண்டு நிமிர்ந்தபோது அவள் கையில் இன்னும் கூட விடாப்பிடியாக ஒட்டிக்கொண்டிருந்தது ஒரு துரும்பு.  துரும்பைக்கிள்ளிப்போட்டபடி இராவணனோடு  சீதை உரையாடிய காட்சியை மனதுக்குள் ஓட்டியபடி ஒரு கணம் அதை  உற்று நோக்கிய அவள்....உதட்டைக் குவித்து ஊதியபடி அதைப்பறக்க விட்டாள்காற்றின் அசைவோடு அது விலகிச்செல்லும் காட்சியை சில நொடிகள் ரசித்தபடி நின்றிருந்தபோது அந்தக்கொடுமையான கணமும் கூட அவளிடமிருந்து விலகிப் போயிருந்தது..


1 கருத்து :

devarajvittalanbooks சொன்னது…

//‘’வரட்டுமே ..அதனாலே என்ன’’ என்றபடி இளநீரைக்குடித்து முடித்து அவள் நிமிர்ந்த அந்தக்கணத்தில் சுழலாக உருக்கொண்டு ஓங்கி அறைந்த காற்று சாலையோரத்துக் குப்பை கூளங்களையெல்லாம் அவள் முகத்தில் விசிறி அடித்தது. சற்றும் சட்டை செய்யாமல் சாவதானமாக அதையெல்லாம் தட்டி விட்டுக்கொண்டு நிமிர்ந்தபோது அவள் கையில் இன்னும் கூட விடாப்பிடியாக ஒட்டிக்கொண்டிருந்தது ஒரு துரும்பு. துரும்பைக்கிள்ளிப்போட்டபடி இராவணனோடு சீதை உரையாடிய காட்சியை மனதுக்குள் ஓட்டியபடி ஒரு கணம் அதை உற்று நோக்கிய அவள்....உதட்டைக் குவித்து ஊதியபடி அதைப்பறக்க விட்டாள்; காற்றின் அசைவோடு அது விலகிச்செல்லும் காட்சியை சில நொடிகள் ரசித்தபடி நின்றிருந்தபோது அந்தக்கொடுமையான கணமும் கூட அவளிடமிருந்து விலகிப் போயிருந்தது..\\ அம்மா நீண்ட நாட்களுக்குப் பின் இந்த அதிகாலையில் இன்றுதான் இயல்பாய் என்னால் படிக்க முடிந்தது.
உங்கள் சிறுகதையை படித்தேன் , // வாழ்வில் பெரும் துன்பம் தன்னை ஆட்கொண்டாலும், அவற்றிலிருந்து தன்னம்பிக்கையால் நற்சிந்தனையாலும் , உழைப்பாலும் தன்னை அர்த்தமுள்ளவளாக , (தான் வாழ்வை அர்த்தமுள்ளதாக மாற்றி வாழ்பவள் சுலோ // இந்த கதாபாத்திரத்தின் வாயிலாக இன்னும் பல விதமான இன்னல்களுக்கு ஆட்பட்டு வாழ்வில் சிக்கி சின்னாபின்னமாக ஆகும் பல பெண்களுக்கும் , ஆண்களுக்கும் என அனைவருக்கும் ஒரு தன்னம்பிக்கையை கொடுக்கிறது இந்த கதை .

"கதையின் இறுதியில் வரும் உருவகம் தங்கள் மொழி அறிவை காட்டுகிறது" தொடர்ந்து கணையாழியில் தங்கள் கதை வெளிவர வேண்டும் என வேண்டுகிறேன்

வாசகன்
தேவராஜ் விட்டலன்

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....