துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

28.6.16

’’ஒரு கணம் ஒரு யுகமாக.’’-கடிதங்கள்



கணையாழி-ஜூன் 2016 இதழில் வெளியாகி இருக்கும் என்
 ’’ஒரு கணம் ஒரு யுகமாக.’’,சிறுகதை.குறித்த பின்னூட்டங்கள்....

[முகநூல்,மற்றும் வாட்ஸ் அப்பில் வந்தவை];இப்போதெல்லாம் வலைக்கு வந்து பின்னூட்டம்,இடுவது குறைந்து விட்டது..என்னசெய்வது]

கடிதம்-1
வள்ளி
[பணிநிறைவு தமிழ்ப்பேராசிரியர்,எழுத்தாளர்]

ஒருவாழ்வின்  கொடியகணத்தின் வலியை ஸ்தம்பித்துப்பார்க்கும் பெண்ணாக நான் !!.
ஆழமாய் நெஞ்சில் அடிக்கப்பட்டு மெது மெதுவாய் உள்ளிறங்கும் கூரிய ஆணியின் பயணம் போல் வலிக்கிறது .  

ஒரு கணத்தின் கனத்தைச்  சுற்றியே கதை விலகாமல் மையம் கொள்வது சூப்பர்ப்  . எங்கோ ஒன்றை விவரிப்பதில் சற்றே விலகி விடுவார்கள் துளியேனும்   இங்கு அவ்வாறு நிகழவில்லை   நீங்கள் அறியாமல் அமைந்துவிடும் டெக்னிக்எப்போதும் போல . கதையின் வலிமையும் அழகும் அதுதான்.

ஒரு பெண்ணுக்கு நிகழ்ந்த  கொடுமையை கதவு அடைத்த கணம் உணர்த்துவது அருமை ,
குட்டிக் குட்டி விஷ அம்புகளாய் நிறைய கணங்கள் .  . ஒரு முகத்தின் நான்கு உணர்வுகள் வன்மம் ஏளனம் காமம் கபடம் என்பதன் மூலம்  ஒருகேரக்டரை கண் முன் கொண்டு வருதல் வித்தியாசம் ஷார்ட் . ஸ்வீட் க்யூட் என்பது ஒற்றை வரி விமர்சனம்.

உணரும் மனம் கொண்டவர்களால் மட்டுமே வரிகளில் நின்று ஆழம் காணமுடியும்  பிறரால் தாண்டிச் செல்லும் அபாயமும் உண்டு   அத்தனை அடர்த்தி உணர்வு சுழல்கள் ஒரு கணத்தை மேலும் மேலும் கனமாக்கும் ப்ரசண்டேஷன் சவால்கள் பலவற்றை துணிச்சலாய் தாண்டிய சுலோவின் மிக நுண்ணிய உணர்வு சித்திரிப்பை சற்றே குறைத்து இருக்கலாம்.

 எழுதி முடித்தாயிற்று . புழுவைத் தூக்கி எறிந்து விடலாம் , எழுத்திலிருந்தும் நிரந்தரமாய் எப்போதும் !
அமிர்தம் தரும் நீங்கள் தண்ணீர் தரவேண்டாம் வனம் தாருங்கள்   
அன்பு  
வள்ளி
///////////////////////////////////////////////////////////////////
கடிதம்-2

எழுத்தாளர் உஷா தீபனோடு கதை குறித்த ஓர் உரையாடல்..கீழே

வணக்கம். 

இப்படிச் சொன்னால்தான் இலக்கிய அந்தஸ்துப் பெறும் என்று  நிறையப் பேர் வலிய எழுதுகிறார்கள்....இதுதான் டெப்த் என்பதாக ஒரு முறைமையைக் கொண்டு வந்து விட்டார்கள்.  இலக்கியத்தின் ஆழம் என்று ஏன் வரித்தார்கள் என்று வியப்பாயிருக்கிறது. இன்றைய நவீன இலக்கியம் என்பது அப்படித்தான் இருக்கிறது. தி.ஜா.ரா. வு ம் கு.ப.ரா.வும், கு.அழகிரிசாமியும் சொன்னவைகள் அந்த இடத்தைப் பிடித்துத்தானே இன்றுவரை நிற்கின்றன. வலியப்பின்னிய வாக்கியங்கள் என்று ஏதேனும் அவர்களிடம் சொல்ல முடியுமா?  நவீன இலக்கியம் என்கிறபெயரில் கதைகள் ஏன் இப்படி மாறிப் போயின?  நீங்களும் அப்படிப் பாதிக்கப்பட்டுவிட்டீர்களோ என்றுதான் எனக்குத் தோன்றியது. ஒரு கணம் ஒரு யுகமாய்....கதையின் முதல் ஒரு பக்கம் என்னை அப்படித்தான் நினைக்க வைக்கிறது. ...

இன்னொன்று...

இலக்கியத்தரமாய் கதை விளங்க வேண்டும் என்று எழுதப்பட்ட பெரும்பாலான கதைகள் கணவன்  மனைவி இடையிலான பிணக்குகளை, மன மாச்சரியங்களை, மண விலக்குகளை, பிரிவினைகளை மையம் கொண்டதாகவே இருக்கின்றன. 

கதை நன்றாகவுள்ளது. இன்னும் கொஞ்சம் அவர்களின் ஊடான பிணக்குகளை விரித்திருக்கலாம என்று தோன்றியது.  மகிழ்ச்சி. உங்கள் கதையைப் படித்ததில் என் மனம் ஊக்கம் பெறுகிறது.

என் மறுமொழி

இல்லை உஷா தீபன்.
.கணையாழி கதையில் நிச்சயமாய் வலிந்து எதுவுமே நான் முயலவில்லை. உணர்வுகளின் அழுத்தம் அப்படி ஒரு தோற்றத்தை உங்களுக்குக் கொடுத்திருக்கலாம்;அல்லது என் எழுத்துப்பயணத்தின், வாசிப்புப்பயணத்தின் பரிணாம வளர்ச்சியாகக் கூட அது அமைந்து போயிருக்கலாம்.
 [ரஷ்ய நாவல்களை  மொழிபெயர்த்ததால் ஏற்பட்ட மொழி இறுக்கமாகவும் கூட..].
நாமெல்லாம் இலக்கியம் படைக்க வேண்டும் என்பதற்காகவோ அங்கீகரிப்பு புகழ் இவற்றுக்காகவோ எழுதுபவர்கள் அல்ல. உங்களைப் பற்றி எனக்கும் என்னைப்பற்றி உங்களுக்கும் இது குறித்து ஓரளவு தெரிந்திருக்கும் என்றே நினைக்கிறேன்.மெய்யான அக எழுச்சி அல்லது தூண்டுதல் ஏற்படும் வரை நான் படைப்புப் பக்கம் போவதில்லை;அதனால்தான் மொழியாக்கங்கள் வழி என் மொழியைக்கூர் தீட்டி வருகிறேன்.

அன்புடன்
சுசீலா

மீண்டும்  உஷாதீபன்

உங்கள்  மொழி பெயர்ப்பு, வாசிப்பு அனுபவம் உங்களுக்கு அந்தத் தகுதிகளை வழங்கியிருப்பதை உணர்கிறேன். ஆனாலும் எனக்கு இப்படித்தான் தோன்றுகிறது. ஒரு வேளை இதுவும் கூட ஒரு அனுபவமின்மையோ என்று சந்தேகமும் வருகிறது. மண்டையைப் பிய்த்துக் கொண்டு இப்படித்தான் எழுதியாக வேண்டுமா என்றெல்லாம் தோன்றுகிறது. என் கதைகளைப் படித்திருப்பீர்கள். எனக்கென்று ஒரு சரளமான நடை உண்டு. அது எழுதி எழுதி மேற்சென்ற பழக்கத்தில். அந்த வகையில் எழுதினால் போதுமென்று நான் நினைக்கிறேன்.   எனக்கு வந்தது அதுவே. ரஷ்ய நாவல்களை  மொழிபெயர்த்ததால் ஏற்பட்ட மொழி இறுக்க .அனுபவங்கள் எனக்குக் கிட்டாதது என் துரதிருஷ்டமே...! எப்படியாயினும் உங்கள் மீதான மதிப்பில் தலை வணங்குகிறேன். நான் உங்கள் மாணவன்.
நன்றி.
உஷாதீபன்
/////////////////////////////////////////////////
கடிதம்-3
[விமரிசகர்,மொழிபெயர்ப்பாளர்]

முழுவதும் படித்தேன். கதையை விட ஒரு அருமையான தமிழனுபவமாக எனக்கு இருந்தது!
/////////////////////////////////////////////////////////////////
கடிதம்-4

கலைச்செல்வி
[எழுத்தாளர்]
,
தங்களின் சிறுகதையைப் படித்தேன். மிக தரமான இலக்கிய நடைதான் முதலில் என்னை கவர்ந்தது. பிறகு எண்ணங்களின் தன்மையை உண்மையோடு ஒட்டி தாங்கள் செலுத்தியிருந்த விதம். மனம் இப்படிதான் சிந்திக்கும்.. குறிப்பாக பெண்ணின் மனம்.. குறியீடாக உணர்த்தியே கதை சொல்லும் பாங்கு.. நல்ல கதை அம்மா.
/////////////////////////////////////////////////////////////////////////////////////////

கடிதம்-5
தேவராஜ் விட்டலன்
[வாசகர்,எழுத்தாளர்]

அம்மா நீண்ட நாட்களுக்குப் பின் இந்த அதிகாலையில்
இன்றுதான் உங்கள் சிறுகதையை படித்தேன் ,

 வாழ்வில் பெரும் துன்பம் தன்னை
ஆட்கொண்டாலும், அவற்றிலிருந்து தன்னம்பிக்கையால் நற்சிந்தனையாலும் ,
உழைப்பாலும் தன்னை அர்த்தமுள்ளவளாக தன் வாழ்வை அர்த்தமுள்ளதாக மாற்றி
வாழ்பவள் சுலோ . இந்த கதாபாத்திரத்தின் வாயிலாக இன்னும் பல விதமான
இன்னல்களுக்கு ஆட்பட்டு வாழ்வில் சிக்கி சின்னாபின்னமாக ஆகும் பல
பெண்களுக்கும் , ஆண்களுக்கும் என அனைவருக்கும் ஒரு தன்னம்பிக்கையைக்
கொடுக்கிறது இந்த கதை .

//‘’வரட்டுமே ..அதனாலே என்ன’’ என்றபடி இளநீரைக்குடித்து முடித்து அவள்
நிமிர்ந்த அந்தக்கணத்தில் சுழலாக உருக்கொண்டு ஓங்கி அறைந்த காற்று
சாலையோரத்துக் குப்பை கூளங்களையெல்லாம் அவள் முகத்தில் விசிறி அடித்தது.
சற்றும் சட்டை செய்யாமல் சாவதானமாக அதையெல்லாம் தட்டி விட்டுக்கொண்டு
நிமிர்ந்தபோது அவள் கையில் இன்னும் கூட விடாப்பிடியாக
ஒட்டிக்கொண்டிருந்தது ஒரு துரும்பு.  துரும்பைக்கிள்ளிப்போட்டபடி
இராவணனோடு  சீதை உரையாடிய காட்சியை மனதுக்குள் ஓட்டியபடி ஒரு கணம் அதை
உற்று நோக்கிய அவள்....உதட்டைக் குவித்து ஊதியபடி அதைப்பறக்க விட்டாள்;
காற்றின் அசைவோடு அது விலகிச்செல்லும் காட்சியை சில நொடிகள் ரசித்தபடி
நின்றிருந்தபோது அந்தக்கொடுமையான கணமும் கூட அவளிடமிருந்து விலகிப்
போயிருந்தது..\\

"கதையின் இறுதியில் வரும் இந்த  உருவகம் தங்கள் மொழி அறிவை காட்டுகிறது"
தொடர்ந்து கணையாழியில் தங்கள் கதை வெளிவர வேண்டும் என வேண்டுகிறேன்


தேவராஜ் விட்டலன்





கருத்துகள் இல்லை :

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....