வளர் இளமைப்பருவம் தொட்டு என் நேசத்துக்குரியது அபிநயசரஸ்வதி..கன்னடத்துப்பைங்கிளி பி சரோஜா தேவியின் நடிப்பு; இன்று படிப்பும் எழுத்தும் சிந்தனையும் [வயதும் கூடத்தான்.!..] கூடிப்போனநிலையிலும் அதில் பெரிய மாற்றம் ஏதும் இல்லை
இளமையில் நம்மை ஈர்த்துக்கட்டிப்போட்டு விடும் ஒரு சில ரசனைகள் [அறிவின் பாற்பட்டதாக அல்லாமல் கலைகளின் வயப்பட்டதாக இருந்தால்] அந்த ரசனைக்கு எந்த வயதிலும் தடை இல்லைதானே!.
என் நினைவு மலரத் தொடங்கியபோது என் நெஞ்சில் பதிந்த முதல் படம் .கல்யாணப்பரிசு என்பதாலோ என்னவோ, அதில்... மாடியிலிருக்கும் ஜெமினிக்கு ஒரு சங்கேதமாய் ’’அம்மா போயிட்டு வரேன்’’என்று கல்லூரிக்குக்கிளம்பும்போது குரல் கொடுத்தபடி குறும்புக்காரச் சுட்டிப்பெண்ணாய்,,வலம் வந்த சரோஜா தேவி இன்றுவரை நான் பார்க்கும் தொலைக்காட்சிப்பாடல்களில் எப்போதும் முதலிடத்தைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொண்டே இருக்கிறார்.
எம் ஜி ஆர் படங்கள் பலவற்றில் வணிகக் காரணங்களுக்காக அவரது நடிப்புத் திறன் வீணடிக்கப்பட்டு விட்ட போதும் அவற்றிலும் கூட வாய்ப்புக்கிடைத்தபோதெல்லாம் அவரது நடிப்புத் திறமை கீற்றுக்களாகவேனும் தெறிக்காமல் போனதில்ல, உ- ம்,அரச கட்டளை, நாடோடி., தொட்டால் பூ மலரும் பாடலில் மின்னும் போட்டிபோட்டுக்குறும்பு காட்டும் முக பாவனைகள்..,!!
//அன்பே வா, எங்க வீட்டுப் பிள்ளை போன்ற சில படங்கள் எம்.ஜி.ஆருக்காக மட்டுமின்றி சரோஜா தேவிக்காகவும் பார்க்கப்பட்டவை..
பணத்தோட்டம் படத்தில் வரும்,’’ஒரு நாள் இரவில் கண் உறக்கம் பிடிக்கவில்லை’’ என்ற பாடல் காட்சியில் அவர் மட்டுமே நடித்திருப்பார். எத்தனை பாவங்கள். அருமையாக இருக்கும்.//
என்று எழுத்தாளர் தமிழ்மகன் தனிப்பட்ட உரையாடலொன்றில் சரோஜா தேவியின் நடிப்பைப்பற்றி என்னுடன்பகிர்ந்து கொண்டதுண்டு...
அபிநயசரஸ்வதியின் அபார நடிப்புத் திறமையை வெளிக்கொணர்ந்தவை பெரும்பாலும் சிவாஜியுடன் அவர் பங்கேற்ற கறுப்பு வெள்ளைப்படங்களே.
குறிப்பாக பாலும் பழமும், ஆலயமணி, இருவர் உள்ளம் என்று அடுக்கிக்கொண்டே போகலாம்.
‘’கொஞ்சம் அசந்தா இந்த சரோஜா நம்மளத் தூக்கி சாப்பிட்டிறுவா’’ என்று சிவாஜியே ’பாலும் பழமும்’ வேளையில் ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார்.தன் கணவன் என்று வெளிப்படையாகக் காட்டிக்கொள்ள முடியாமல் மருத்துவத் தாதியாக வேலைசெய்து அங்கிருந்தும் வெளியேற்றப்பட்ட நிலையில்... தான் ஏற்றியாகவேண்டிய இஞ்செக்ஷன் ஊசியை வாயில் கவ்விப் பிடித்தபடி கொட்டும் மழையில் வீட்டின் பின்புறச்சுவரில் அவர் ஏறும் அந்தக்காட்சி கூட ஒருவேளை சிவாஜியை அப்படிசொல்ல வைத்திருக்கலாம்.
காமரா கோணங்களில் ,மிகவும் நெருக்கமாக முகங்கள் மட்டுமே காட்டப்படும்போது [in tight close up] நொடிக்கு நொடி மாறும் பாவனைகளுக்கு அவரிடம் பாடம் பயில வேண்டும்... ’காதல் சிறகை’ பாடலின் காணொளியில் அதை மிகத் தெளிவாகப்பார்க்கலாம். வினாடிக்கு வினாடி பாடல் தொடரத் தொடர மாறிக்கொண்டே போகும் கோணங்களில்.... தவிப்பு , ஏக்கம், எதிர்பார்ப்பு, காதல், விரக தாபம், பாசம் , ஆற்றாமை என அந்த முகத்தில் மாறி மாறி மின்னலடிக்கும்பாவ பேதங்கள்தான் எத்தனை எத்தனை?
பொதுவாக இருவர் மட்டுமே நடிக்கும் காட்சியில், உடன் நடிப்பவரின் நடிப்புக்கு ஏற்றபடி ஈடு கொடுத்து வெளிப்படுத்தியாக வேண்டிய எதிர்வினை நடிப்புக்கும் கூட,[reaction] அதே அளவு முக்கியத்துவமும் வல்லமையும் உண்டு. நடிப்பில் திறமைசாலிகளும் கூடத் தோற்றுப்போவது இதிலேதான்....! ஆனால் அந்தக்கலையும் கூட சரோஜா தேவிக்கு வசப்பட்டிருப்பதைக்காட்டும் காணொளி , ஆலயமணியில் இடம் பெற்றிருக்கும் ’பொன்னை விரும்பும் பூமியிலே’ பாடல்..
விபத்தில் கால் முடங்கிப்போன கதாநாயகனைச் சக்கர நாற்காலியில் தள்ளியபடி,தோட்டம் சுற்றி நடந்தாக வேண்டும்...அவருடைய வேலை அது மட்டும்தான்...பாடல் பாடுவதும் அதற்கேற்ப முகபாவம் காட்டுவதும் கதாநாயகனின் வேலை மட்டுமே என்று எடுத்துக்கொண்டு எளிதாக ஒதுங்கி விட முடியும்..! இப்போதெல்லாம் பலரும் செய்வது அதை மட்டும்தான்.
ஆனால் வண்டியை நகர்த்திச்செல்லும் அந்தப்பேதைப்பெண் தரும் அற்புதமான அந்த REACTIONS...!!
சொல்லுக்கெட்டாத பரவசம் கிளர்த்துபவை அவை....!
வறுமையில் தொலைந்து போன தன் முன்னாள் காதலுக்கான வருத்தத்தை உள்ளே அடக்கிக்கொண்டு... அதை வலிந்து துடைத்தெறியும் முயற்சி,
புத்தம் புதிதாய் இப்போது வர்ஷிக்கும் பாசப்பெருக்கை ஏற்கத் தன்னை ஆயத்தப்படுத்திக் கொள்ளுதல், அதற்குமே கூட விபத்தின் காரணமாக நேர்ந்து விட்ட எதிர்பாராத சோகத்தை அளவற்ற கருணையுடன் எதிர்கொள்ளல் ,நாயகனை இரக்கமும் அன்புமாய்நோக்கியபடி அவனை அந்தத் துன்பவேளையில் மீட்டெடுத்தல் என்று அடுக்கடுக்காகத் தொடர்ந்து கொட்டும் அந்த எதிர்வினைகள் ..., .REACTIONS.உணர்த்தும் செய்திகள்தான் எத்தனை எத்தனை....? SIMPLY SUBLIME!!
வண்ணப்படங்கள் வந்தபின்பு அவரை ரசித்ததை விட என் மனம் அவரது பழைய கறுப்பு வெள்ளைப்படங்களில்மட்டுமே லயித்துக்கிடக்கிறது...
ஒரே ஒரு விதி விலக்காகப்..’புதிய பறவை’.
ஓர் இளம் கல்லூரி மாணவியாய்க் கவலைகள் ஏதுமற்ற கட்டற்ற சுதந்திரத்துடன் நான் சிறகடித்துக்கொண்டிருந்த ‘60களின் பின்பகுதியில் என் ’புதிய பறவை’ விவரிப்புக்களை..., குறிப்பாய் சரோஜா தேவியின் ஒவ்வொரு அசைவையும் நான் விஸ்தாரமாய் விவரிப்பதைக்கேட்பதற்கென்றே சக தோழியர் பலரும் எனக்கே ரசிகர் பட்டாளமாகித்தொடர்ந்து துரத்தி வந்த அந்தநாட்களின் இனிமைகளை நினவுத் தளத்தின் மேலடுக்கில் கொண்டு வந்து என்னுள் களிக்கிறேன்.
இயக்குநர் படங்களாகவே உருவான ‘குலவிளக்கு’- [கே எஸ் கோபால கிருஷ்ணன்] , ‘தாமரை நெஞ்சம்’ -[கே பாலச்சந்தர்].. இவையெல்லாம் சரோஜா தேவியின் நடிப்புத் திறனைப்புரிந்து,கொண்டதால் அவரின் குணசித்திர நடிப்பை வெளிக்கொணர்வதற்கென்றே பிரத்தியேகமாக உருவானவை...
ஆனாலும் கூட ‘60களில் என்னைக்கட்டிப்போட்ட, அந்தச்சுட்டிப்பெண் சரோஜா தேவியின் பிம்பம் மட்டுமே காதுகளில் ரீங்கரிக்கும் ’’நான் பேசநினைப்பதெல்லாம்’’ பாடலோடும் ‘காதல் சிறகோ’டும் என்றென்றும் என்னை வசீகரித்தபடி இருக்கிறது.
.
‘
1 கருத்து :
ரசனையான பகிர்வு அம்மா...
கருத்துரையிடுக