
தில்லித் தமிழ்ச் சங்கத்தின் தொப்பியில் மேலும் ஒரு இறகு...'
கடையனுக்கும் கடைத்தேற்றம்’ என்று காந்தியடிகள் அடிக்கடி குறிப்பிடும் வாசகம்,சமூக,பொருளாதார,வாழ்வியல் முன்னேற்றம் சார்ந்தது மட்டுமல்ல;
ஆன்மீக முன்னேற்றத்தையும் கூட உள்ளடக்கியதாகத்தான் அந்தத் தொடர் அமைந்திருக்கிறது.
ஆன்மீகம் எனப்படும் மெய்ஞ்ஞானம்,காட்டில் சென்று கடுந்தவம் புரிபவர்களுக்கும்,வேத உபநிடதங்களையும்,அவற்றின் சாரங்களையும் கற்றுக் கரை தேர்ந்த பண்டித விற்பன்னர்களுக்கு மட்டுமே சொந்தமானது...,அது அவர்களுக்கு மட்டுமே தேவைப்படுவது..., அல்லது அது அவர்களால் மட்டுமே சாத்தியமாகக் கூடியது ஆகிய மாயைகளெல்லாம் தகர்ந்து கொண்டிருக்கும் யுகம்,இன்றைய காலகட்டம்.
தன்னை அறிவதும்,தன்னில் இறைநிலை உணர்வதும்..படிப்பறிவில்லாத சாமானியன் முதல் லௌகீக வாழ்க்கைப் போராட்டங்களில் நாளும் சிக்கித் தவிக்கும் நடுத்தர..உயர் வர்க்க மனிதன் வரை அனைவருக்குமே இன்று தேவையாக இருப்பவைதான்!
இந்த மகத்தான உண்மையை ஐயமற உணர்ந்திருந்த காரணத்தினாலேதான்,எதிர்ப்புச் சக்திகள் பல இடைமறித்தபோதும் தான் கண்டுகொண்ட மெய்ப்பொருளின் சாரம் சகலருக்கும் போய்ச் சேரவேண்டும் என்று, திருக்கோஷ்டியூர்க் கோயிலின் கூரை மீது நின்று கூவி அழைத்தார் இராமானுஜர்.
’’தாமின்புறுவது உலகு இன்புறக் கண்டு’’ மகிழும் அத்தகைய சான்றோர்கள் எல்லாக் காலங்களிலும் இருந்து கொண்டேதான் இருக்கிறார்கள் என்பதற்குக் கண் கூடான சான்றாக - மிக அண்மைக் காலத்தில் நம்மிடையே வாழ்ந்து மறைந்தவர் , அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்கள்.
வறுமையானதொரு குடும்பப் பின்னணியில்,ஏழை நெசவாளர் குடும்பத்தில் வாழ்வைத் தொடங்கி, ஏட்டுக் கல்வியில் மூன்றாம் வகுப்பையே எட்டிய அவர்,மெய்ஞ்ஞான அனுபவ சித்தியில் பல சிகரங்களைத் தொட்டவர். அந்தச் சிகரங்களை நோக்கிய பாதையில் அனைவரும் பயணிப்பதற்காகவே
‘எளிய முறைக் குண்டலினி யோகம்’(Simplified kundalini yoga- SKY ),மற்றும் உயிருக்கு உரமூட்டும் ’காயகல்பயோகம் ’ ஆகியவற்றை உள்ளடக்கி இருக்கும்
’மனவளக் கலை’ என்னும் அரிய கலையை மிக மிக எளிய வழிமுறைகளால் இலகுவாக்கி உலகுக்குத் தனது அருங்கொடையாக நல்கிச் சென்றிருக்கும் மகான் அவர்.
‘ஒரு நாமம் ஓருருவம் இல்லாத’ கடவுளுக்கு ஆயிரம் கோயில்கள் சமைக்கும் இந்த மண்ணில் , ‘அறிவுத் திருக் கோயில்’என்ற பெயரில் அறிவுக்கென்றே ஒரு கோயிலை ஆழியாற்றில் அமைத்து , அதன் சேவைகள் தனிமனித அகமுக நோக்குடன் முடங்கிப் போய்விடக்கூடாது என்பதற்காகவே ,தான் நிறுவிய அமைப்புக்கு ‘உலக சமுதாய சேவா சங்கம்’ என்ற பரந்த தளத்திலான அடையாளத்தை அளித்தவர்; எல்லாத் தரப்பினரையும் எளிதாகச் சென்று சேர்வதற்காக ’வாழ்க வையகம் வாழ்க வளமுடன்’என்ற எளிதான தாரக மந்திரத்தை வழங்கியிருப்பவர்.
தானுரைத்த செய்திகள் தில்லி வாழ் மக்களுக்கும் சென்று சேர வேண்டும் என்பதில் மிகவும் ஆர்வம் காட்டிய மகரிஷி அவர்கள், தனது வாழ்க்கையின் இறுதிக் கட்டத்தில் அடியெடுத்துக் கொடுத்துத் தொடங்கி வைத்த புது தில்லி மண்டல உலக சமுதாய சேவா சங்கம், பல மனவளக் கலை மன்றக் கிளைகளோடு வளர்ச்சி பெற்று 2004 ஆம் ஆண்டு முதல் இந்தியத் தலைநகரில் சிறப்பாகச் செயலாற்றி வருகிறது.
இம் மன்றத்தின் செயல்பாட்டுக்கு ஊக்கமும் ஆக்கமும் சேர்க்கும் வகையில்,புது தில்லி தமிழ்ச் சங்கம் அண்மையில்-நவ.8ஆம் தேதி ஞாயிறு மாலையில் - மிகச் சிறப்பான ஒரு நிகழ்ச்சியை வெகு விமரிசையாக நடத்தி, அனைவரின் நெஞ்சையும் நெகிழச் செய்து விட்டது.
மகரிஷியின் அணுக்கத் தொண்டராக விளங்கியவரும், கொங்கு மண்டலத்தின் சிறந்த தொழிலதிபர்களில் ஒருவரும்,
மகரிஷிக்குப் பிறகு அவரது பணியைத் தொடர்ந்து ஆற்றி, உலக சமுதாய சேவா சங்கத்தின் தலைவராக விளங்குபவருமான திரு எஸ்.கே.எம்.மயிலானந்தன் அவர்களின் சிறப்புச் சொற்பொழிவு,
‘அறிவுத் திருக்கோயில்’, மற்றும் ‘தியானம்’ முதலியவை குறித்த ஆவணப் படங்களின் திரையிடல் ஆகியவற்றை அற்புதமாக நடத்திக் காட்டியதன் வழி, மகரிஷி அவர்கள் அருளிய ’மன வளக்கலை’ க்குத் தில்லியில் வலுவானதொரு அடித்தளத்தைத் தமிழ்ச்சங்கம் அமைத்துத் தந்து விட்டதென்றே கூறலாம்.
அதற்கு உறுதுணையாக விளங்கிய தில்லித் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்களும்,பொதுச் செயலாளர் திரு.பெருமாள் அவர்களும் பெரிதும் பாராட்டுக்குரியவர்கள்.
இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு தலைமை உரை ஆற்றிய மையப் புலனாய்வுத் துறையின் முன்னாள் இயக்குநர் திரு.டி.ஆர்.கார்த்திகேயன் அவர்கள்,உலகளாவிய ஆன்மீக இயக்கங்கள் பலவற்றிலும் தொடர்பு கொண்டிருப்பவர் ; அவற்றிலெல்லாம் காணக் கிடைக்காத எளிமையும்,நேரடித்தன்மையும், பகைவனையும் நெஞ்சில் நிறுத்திப் பாசத்தோடு வாழ்த்துரைக்கும் பண்பும் வேதாத்திரி மகரிஷிகள் அருளிய யோகக் கலையில் செறிந்திருப்பதை உணர்ந்து தெளிந்து, மகரிஷி வாழ்ந்த காலம் முதலாகவே அறிவுத் திருக்கோயிலோடு நெருக்கமான உறவைப் பேணி வருபவர்.
தனது தலைமை உரையில் மகரிஷியின் பாடல்கள் சிலவற்றின் வழி அவரது மேன்மையைக் கோடிட்டுக் காட்டிய திரு கார்த்திகேயன்,காமம்,குரோதம் ஆகிய அறுகுணங்களையும் சீரமைக்கும் அற்புத மருந்தை அறிவியல் அடிப்படைகளோடு நல்கியிருக்கும் ‘மன வளக் கலை’இன்னும் விரிந்த தளத்தில் உலகெங்கும் பரவலாக எடுத்துச் செல்லப்பட வேண்டுமென்ற தனது ஆதங்கத்தை வெளியிட்டார்.
திரு கார்த்திகேயனின் தலைமை உரைக்குப் பின்பு சிறப்புச் சொற்பொழிவாற்றிய உலக சமுதாய சேவா சங்கத்தின் தலைவர் திரு எஸ்.கே.எம்.மயிலானந்தன் அவர்கள்,
‘’வாழ்வில் வளமை,சிந்தையில் இனிமை’’என்ற பொருளில் மகரிஷியின் கோட்பாடுகளை அடிநாதமாகக் கொண்டு அற்புதமாக உரையாற்றினார். மரபார்ந்த சொற்பொழிவாக அடுக்கு மொழியிலோ,அலங்கார நடையிலோ பேசாமல்,நெஞ்சுக்கு நெருக்கமான எளிமையான நடையில்,மிகவும் யதார்த்தமான பாணியில்,அன்றாட உலகியல் நடப்பை ஒட்டிய செய்திகளை நகைச்சுவையோடு கலந்து அவர் சொல்லிக் கொண்டு போன பாணி,ஆழ்ந்த ஆன்மீக விசாரங்கள் பாமரனையும் சென்று சேர வேண்டும் என்று மகரிஷி கொண்டிருந்த பேரவாவைப் பெருமளவில் நிறைவு செய்தது; தமிழ்ச்சங்கத்தின் திருவள்ளுவர் கலையரங்கம் முழுவதும் திரண்டிருந்த மக்கள் கூட்டம் ,கொஞ்சமும் கலைந்து போகாமல் - குன்றாத ஆர்வத்துடன் அவரது உரையைக் கேட்டு ரசித்துக் கொண்டிருந்த ஒன்றே அதற்குச் சிறந்த அத்தாட்சி.
‘வடக்கு வாசல்’ ஆசிரியர் திரு பென்னேஸ்வரன்,பிறகு மேடையில் குறிப்பிட்டதைப் போல நமக்கு நெருக்கமான நண்பர் ஒருவர் நம் பக்கத்திலிருந்து பேசிக் கொண்டிருந்ததைப் போன்ற மனம் திறந்த ஒரு பேச்சாகக் கபடற்ற எளிமையுடன் -அதே வேளையில் தலைப்பை விட்டு விலகிப் போகாமல் அமைந்திருந்தது திரு மயிலானந்தன் அவர்களின் உரை.
தில்லியில் மண்டலக் கிளை தொடங்கும் ஆர்வத்தை மகரிஷியிடம் தோற்றுவித்தது திரு டி.ஆர்.கார்த்திகேயன் அவர்கள் அளித்த உந்துதலேஎன்பதைக் குறிப்பிட்ட திரு மயிலானந்தன், தொடர்ந்து உலகின் பல பகுதிகளில் கிளை பரப்பி விரியவும்,தமிழகப் பள்ளி,மற்றும் பல்கலைக்கழகப் பாடத் திட்டங்களில் மனவளக்கலை இடம் பிடிக்கவும் ,தான் மேற்கொண்ட முயற்சிகள் பலவற்றுக்கும் திரு கார்த்திகேயன் அளித்த வழிகாட்டுதல்களே உறுதுணையாக விளங்கியதென்பதை மறவாமல் குறிப்பிட்டார்.
இன்று பாரதியார் பல்கலைக் கழகத்துடன் இணைந்து ’யோகமும் மனித மாண்பும்’ என்ற பெயருடன் பட்டயப்படிப்பில் தொடங்கிப் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு,முதுநிலை,மற்றும் முனைவர் பட்ட ஆய்வு வரை மகரிஷியின் கருத்துக்கள்,கல்வி நிலையங்களின் வழி கொண்டு செல்லப்படுவதைப் பெருமிதத்துடன் குறிப்பிட்ட அவர், தில்லி வாழ் மக்கள் இந்த யோகக் கலையால் மேலும் பயனுற வேண்டும் என்ற நோக்குடன் - ஆர்.கே.புரம் பகுதியில் விரைவில் அதற்கான அறக்கட்டளை ஒன்று தொடங்கப்படவிருக்கும் நற்செய்தியினையும் மகிழ்ச்சியோடு அறிவித்தார்.
நிகழ்ச்சியின் தொடக்கத்தில் கூட்டத்தினர் அனைவரையும் சிறு தியானம் ஒன்றில் ஈடுபடச் செய்து அதை வழிப்படுத்தி நடத்தியவர்,தில்லி மண்டல மனவளக்கலை அமைப்பின் பொறுப்பாளர் அருள்நிதி திரு பாலச்சந்திரன் அவர்கள்.
தில்லித் தமிழர்கள் மட்டுமன்றி உலகத் தமிழர் அனைவரும் தம் கருத்துக்களைப் பதிவு செய்யத் தமது ‘வடக்கு வாசல்’இதழ் வழியாக வாயில் அமைத்துத் தந்திருக்கும் வடக்குவாசல் இதழின் ஆசிரியர் திரு பென்னேஸ்வரன் அவர்கள்,பார்வையாளர்களின் சார்பில் கருத்துப் பகிர்வு செய்யவருமாறு அழைக்கப்பட்டார்; மகரிஷியின் யோகக் கலையில் பெரும் ஈடுபாடு கொண்டு,தான் உட்படப் பலரையும் அதன்பால் ஈர்த்தவரும்,அண்மையில் காலம் சென்றவருமான திருமதி கலா கார்த்திகேயனை (திரு டி.ஆர்.கார்த்திகேயன் அவர்களது மனைவி) நினைவு கூர்ந்து,மேடையிலும்,அவையிலும் இருந்தோரைக் கண நேரம் மனம் நெகிழ்ந்து போகுமாறு செய்து விட்டார் திரு பென்னேஸ்வரன்.
மதம்,சாதி,இனம்,மொழி ஆகிய எல்லைக் கோடுகள் கடந்து மனதுக்கு நெருக்கமாக இதம் தரும் இது போன்றதொரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தமைக்காகத் தில்லித் தமிழ்ச்சங்கத்தார்க்குப் பாராட்டுத் தெரிவித்த அவர், இம்மாதிரியான நல்ல நிகழ்ச்சிகளுக்குச் சங்கம் அடிக்கடி ஏற்பாடு செய்து தரவேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.
தில்லித் தமிழர்கள் ‘கோடையிலே இளைப்பாறிக் கொள்ளும்’ வகையில் வாய்த்த குளிர் விருட்சம் தில்லித் தமிழ்ச்சங்கம். முத்திரை பதிக்கும் தமிழர்களையும், தமிழ்க் கலைகளையும் என்றென்றும் வாழ்த்தி வரவேற்றுச் சிறப்புச் செய்து பாராட்டி மகிழும் தமிழ்ச் சங்கம் , அண்மையில் தனது புறத் தோற்றத்திலும் புதுப் பொலிவு பெற்றுள்ளது;பழைய கட்டிடங்களும்,நூலகமும் சீரமைக்கப் பெற்றுத் தமிழ் ஆர்வலர்களுக்குப் பல்சுவை விருந்து படைத்துக் கொண்டிருக்கின்றன.
தன்னை முன்னிறுத்தாமல்.. தன் செயல்களை மட்டுமே முன்னிறுத்தும் எளிமையான உள்ளம் படைத்த திரு பெருமாள் அவர்களைப் பொதுச் செயலாளராகவும்,பல்லாண்டுக் காலமாகத் தமிழ்ச்சங்கப் பணியே தன் மூச்செனக் கொண்டு வாழ்ந்து வரும் திரு கிருஷ்ணமூர்த்தி அவர்களைத் தலைவராகவும் பெற்றிருக்கும் தில்லித்தமிழ்சங்கத்திற்கு
அந்த வேண்டுகோளை நிறைவேற்றுவதில் எந்தத் தடையுமிருக்காது என்பதோடு...
இன்னும் பல உயரங்களையும் கூட அது எட்டும் காலம் வெகு தொலைவில் இல்லையென்றே தோன்றுகிறது.
நன்றி;
கட்டுரையை வெளிட்ட ‘கலைமகள்’(டிச.’09)இதழுக்குஇணைப்புக்கள்;
'வாழ்க வளமுடன்..!'
ஆழியாறு தந்த அமுதம்