துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

25.4.11

மொழியாக்கம் - கலந்துரையாடல்

மொழியாக்கத்தின் பொதுவான இயல்புகள் குறித்தும்,
தஸ்தயெவ்ஸ்கியின் இருபெரும் படைப்புக்களை (குற்றமும் தண்டனையும்,அசடன்) மொழிபெயர்ப்புச் செய்கையில் நான் பெற்ற அனுபவங்கள் மற்றும் எதிர்ப்பட நேர்ந்த சிக்கல்கள் குறித்தும் புதுதில்லியிலுள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் தமிழ்மொழிப் புலத்தில் ஆய்வு மேற்கொண்டிருக்கும் மாணவர்களோடு கலந்துரையாட வருமாறு, தமிழ் மொழிப்புலத்தின் துறைத் தலைவர் முனைவர் பேராசிரியர் கி.நாச்சிமுத்து அவர்கள் எனக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
கல்லூரிப் பணி நிறைவு பெற்றபின் மாணவ சமூகத்தோடு உறவாடக் கிடைத்த வாய்ப்பை நானும் மகிழ்வுடன் ஏற்றேன்.




மொழிபெயர்ப்புக்கு அடிப்படையாகத் தேவைப்படும் சில இயல்புகளை முன் வைத்துத் தொடங்கிய விவாதம் எம்.ஃபில்.,பி.எச்.டி மாணவர்களின் உற்சாகமான பலதரப்பட்ட கேள்விகளால் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக நீண்டு கொண்டே சென்றது உற்சாகமூட்டுவதாக இருந்தது.

சொந்த மொழியிலேயே படைக்கப்படும் ஒரு நாவல் அல்லது சிறுகதையைப் படிப்பது போன்ற சரளமான ஓட்டம் மொழிபெயர்க்கப்பட்ட படைப்புக்களைப் படிக்கையில் சாத்தியமாவதில்லையே என்ற வினாவை மாணவி ஒருவர் எழுப்பியபோது குற்றமும் தண்டனையும் நாவலிலிருந்து ஒரு பக்கத்தை அனைவர் முன்னிலையிலும் உரக்க வாசிக்குமாறு அம் மாணவியைக் கேட்டுக் கொண்டார் பேராசிரியர் நாச்சிமுத்து.
அவ்வாறான தொடர்ந்த வாசிப்பின்போது , நெருடல்கூறுகள் இல்லாமலும் கூட ஒரு மொழியாக்கப்படைப்பு இருக்கக்கூடும் என்பதையும் -
மொழியாக்கம் என்பதே ஒரு அந்நியத் தன்மை கொண்டது என்ற அணுகுமுறையும், அப்படிப்பட்ட பொதுவான அனுமானமும் எத்தனை பிழையானது என்பதையும் மாணவர்கள் புரிந்து கொள்ள வாய்ப்புக் கிடைத்தது.
பாத்திரப் பெயர், இடங்களின்பெயர், அவ்வப்போது தலை காட்டும் சில சரித்திரக் குறிப்புக்கள் - இவை தவிர மனித உணர்வுகளும் உறவுச் சிக்கல்களும் உலகனைத்துக்கும் பொதுவானவையாக-மானுடம் தழுவியதாக இருப்பதையே மொழியாக்கப் படைப்புக்கள் அனுபவப்படுத்துகின்றன என்பதை அனைவரும் ஏற்றுக் கொண்டனர்.

சொந்தப் படைப்பாக்க முயற்சிகளுக்கு மொழியாக்க முயற்சி தடையாக இருக்கிறதா என்ற விவாதமும் எழுந்தது.
மொழியாக்கத்தின் மொழி , பொது மொழியாக இருத்தலே சாத்தியம்.
தனிப்படைப்பு என்பதோ வட்டாரக் கூறுகளையும் ,மண் சார்ந்த பண்பாடுகளையும் உள்ளடக்கியது.
படைப்பைத் தவமாகக் கொண்டு செயல்படும் படைப்பாளிக்குச் சொந்தப் படைப்பை உருவாக்கும் தருணத்தில் இடம்,பொருள்,ஏவலுக்கேற்றபடி மொழி,மற்றும் பின்புலங்களை அமைத்துக் கொள்வதில் எந்தச் சிக்கலும் நேர வழியில்லை என்பதையும் ,அவ்வாறு கூடுவிட்டுக் கூடு பாய்கிறவனே சிறந்த ஆக்கங்களை முயல முடியும் என்றும் சுட்டிக்காட்டிய நான்,மொழியாக்கத்தில் ஈடுபடுவதென்பது அதற்கு எந்த வகையிலும் தடையாக இருப்பதில்லை என்பதையும், இன்னும் சொல்லப்போனால்..,உலகப் பேரிலக்கியங்களை நெருக்கமாக அணுகிச் சென்று மொழியாக்கும்போது பெறும் வாழ்க்கையின் தரிசனமும் ,
கதைத் தொழில்நுட்ப உத்தி அறிவின் சித்திப்பும் சொந்தப் படைப்பாக்கத்தை மேன்மேலும் செழுமைப்படுத்தவே உதவுகின்றன என்பதையும் சொந்த அனுபவங்களின் வழி எடுத்துக் காட்டி விளக்கமளித்தேன்.

பேராசிரியர் நாச்சிமுத்து,மற்றும் பேராசிரியர் சந்திரசேகர் ஆகியோர் விவாதங்களைச் சிறப்பாக நெறிப்படுத்தி உதவினர்.
ஜே.என்.யூ பல்கலைக்கழக நூலகத்துக்கு என் ‘குற்றமும் தண்டனையும்’ மொழியாக்க நூலின் பிரதி ஒன்றைப் பேராசிரியர் முனைவர் நாச்சிமுத்து அவர்களிடம் அளித்தேன்.

அந்த நூலின் பிரதி ஏற்கனவே பேராசிரியர்களிடமும், தில்லி தமிழ்ச்சங்க நூலகத்திலும் இருந்தபோதும் விவாதத்தில் கலந்து கொண்ட மாணவர்கள் எவருமே நூலைப் படித்திருக்கவில்லை என்பது மனதுக்குச் சற்று வேதனையளித்தது.
அது நிகழ்ந்திருந்தால் , கலந்துரை இன்னும் சிறப்பான முறையில் அமைந்திருக்கக் கூடும்.
நூலைப் படித்தபிறகு மீண்டும் ஒரு காரசாரமான கலந்துரையாடலில் பங்கு பெறுவதாகக் கூறி அங்கிருந்து விடை பெற்றேன்.


7 கருத்துகள் :

பெயரில்லா சொன்னது…

நல்ல விவாதம். //கூடுவிட்டுக் கூடு பாய்கிறவனே சிறந்த ஆக்கங்களை முயல முடியும்// அருமையான விளக்கம்.
//,உலகப் பேரிலக்கியங்களை நெருக்கமாக அணுகிச் சென்று மொழியாக்கும்போது பெறும் வாழ்க்கையின் தரிசனமும் ,
கதைத் தொழில்நுட்ப உத்தி அறிவின் சித்திப்பும் சொந்தப் படைப்பாக்கத்தை மேன்மேலும் செழுமைப்படுத்தவே உதவுகின்றன என்பதையும் சொந்த அனுபவங்களின் வழி எடுத்துக் காட்டி விளக்கமளித்தேன்.// சிறந்த கருத்து.
அந்த மாணவி உங்கள் மொழியாக்க நூலை முன்பே படித்திருந்தால் இந்த விவாதத்திற்கு வாய்ப்பே வந்திருக்காது என்று நினைக்கிறேன்.

இந்த பதிவை எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி.

suneel krishnan சொன்னது…

அம்மா உங்கள் படைப்பு அனைவரையும் கவர்ந்து வெற்றிபெற வாழ்த்துக்கள் .

Unknown சொன்னது…

சொந்த மொழியிலேயே படைக்கப்படும் ஒரு நாவல் அல்லது சிறுகதையைப் படிப்பது போன்ற சரளமான ஓட்டம் மொழிபெயர்க்கப்பட்ட படைப்புக்களைப் படிக்கையில் சாத்தியமாவதில்லையே என்ற வினா குற்றமும் தண்டனையும் நாவலை வாசிக்கும் போது எனக்கு ஏற்படவில்லை ஏனெனில் தெளிவான மொழிபெயர்ப்பில் எந்தவித நெருடல்கள் இன்றி வாசிக்க முடிந்தது.

இந்த கலந்தாய்வில் நானும் கலந்து கொண்டிருந்தால் பல அரிய விசயங்களை ஆலோசித்திருக்கலாம் என எண்ணத் தோன்றுகிறது.

அப்பாதுரை சொன்னது…

தமிழாக்கம் என்றவுடன் மொழிபெயர்ப்புச் சிக்கல்களையும் சோதனைகளையும் (தமிழ் கலாசாரத்துக்கு ஏற்குமா?) பற்றி விவாதம் நடத்துக்கிறோம் - பெரும்பாலான உலக இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டவையே என்ற உண்மையை மறந்து மொழிபெயர்ப்பானாலும் அப்படியே ஏற்கிறோம். (படிக்கும் சிலருக்கு மூல நூலின் எந்தப் பகுதியை வெட்டினார்கள் என்ற சந்தேகமும் வரும் :)

எனினும், இது போன்ற தீவிர இலக்கிய நூல்களை மொழிபெயர்த்து தமிழில் சேர்த்திருப்பது அசத்தலான சாதனை - சோதனைகளைப் புரிந்து கொள்ள முயற்சிப்பதை விட சாதனையைப் பாராட்டி ஏற்பது மேல் என்று தோன்றுகிறது.

எம்.ஏ.சுசீலா சொன்னது…

கோபி ராமமூர்த்தி அனுப்பிய கடிதம்..
எம்.ஏ.சுசீலாவால் உள்ளிடப்பட்டது.
அன்புள்ள சுசீலா மேடம் அவர்களுக்கு
ஒரு ஆவலில் கரமசாவ் சகோதரர்கள் நாவலிலிருந்து ஒரே ஒரு பத்தியை இருதினங்களுக்கு முன் நான் மொழிபெயர்த்துப் பார்த்தேன். ஐந்தாறு முறை அந்தப் பத்தியைப் படிக்கும்படி ஆயிற்று. எவ்வளவோ மெனக்கேட்டும் சரிவர மொழியாக்க முடியவில்லை. குறிப்பாகச் சில ஆங்கில வார்த்தைகளுக்குப் பொருத்தமான தமிழ் வார்த்தைகள் எனக்குத் தெரியவில்லை (impulse, vices).

முழு நாவலையும் மொழிபெயர்க்கும் மொழிபெயர்ப்பாளர்கள் பிரமிப்பை வரவழைக்கிறார்கள். இருமொழியிலும் வல்லவராக இருக்கக் கூடியவர்கள் மட்டுமே செய்யக்கூடிய வித்தை இது என்று சொல்லத் தோன்றுகிறது. ஒருவிதத்தில் இவர்கள் பொறாமையை வரவழைக்கின்றனர். மொழியாக்கம் சிறப்பாக வரவேண்டுமென்பதால் எப்படியும் இரண்டு \ மூன்று முறை ஆங்கில வடிவத்தைப் படித்திருப்பார்கள் என்று எண்ணத் தோன்றுகிறது. தஸ்தயெவ்ஸ்கி போன்ற படைப்பாளிகளின் படைப்புகளை ஒன்றுக்கு மேற்பட்ட முறை படிக்கும் வாய்ப்புள்ளவர்கள் நிச்சயமாகப் பெரும் பேறுபெற்றவர்கள்.

இந்த நேரத்தில் கண்ணீரைப் பின்தொடர்தல் நூலில் (முன்னுரையில் என்று நினைக்கிறேன்) ஜெமோ குறிப்பிடும் ஒரு விஷயம் நினைவிற்கு வருகிறது. மொழியாக்கம் செய்பவர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதில்லை என்பதுதான் அது. அது இந்தியாவின் பிற மொழி நூல்களைத் தமிழாக்கம் செய்பவர்களுக்கு மட்டுமா அல்லது உலகப் பேரிலக்கியங்களை மொழியாக்கம் செய்பவர்களுக்கும் அதே நிலைதானா?
அன்புடன்
கோபி ராமமூர்த்தி

அப்பாதுரை சொன்னது…

உங்கள் வருத்தம் புரிந்து கொள்ளக் கூடியதே. இருப்பினும் இந்தப் புத்தகங்கள் சற்றே தீவிர வாசகரைத் தவிர பிறரைக் கவருவதில்லை - அதுவே காரணம். அப்படியே செறிவானக் கலந்துரையாடலுக்காகப் படிக்கச் சொன்னாலும் புரட்டி விட்டு வருவார்களே ஒழிய படித்துவிட்டு வருவார்களா என்பது சந்தேகமே. (பொழுது போகப் படிப்பவர்கள் தான் அதிகம் என்பது என் எண்ணம். இலக்கிய தாகம்/ஆர்வம் கொண்டு படிப்பது மிகக்குறுகிய வாசகர் வட்டம்.)

இராஜராஜேஸ்வரி சொன்னது…

பொதுவாகவே மாண்வர்களுக்கு வாசிக்கும் ஆர்வம் குறைந்து வருவது வருந்தத் தக்க விஷயம்.
கலந்திரையடலுக்கு வரும் மாணவர்கள் அந்தத் தயாரிப்பு இல்லாமல் வருவது கண்டிக்கத்தக்கது.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....