துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

13.1.12

மூன்றாம் கோணத்தில்.....

இணைய நண்பர்களுக்கு இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்...
‘’ஏரி குளம் கிணறு ஆறு எல்லாம் நிரம்பி வழிய 
மாரி அளவாய்ப் பொழிக..மக்கள் வளமாய் வாழ்க’
-வேதாத்திரி மகரிஷி

மூன்றாம் கோணம் இணைய இதழின் பொங்கல் மலரில் என் நேர்காணல் வெளிவந்திருக்கிறது. நேர்காணலுக்குரிய வினாக்களை சிறப்பாக அமைத்து அதைத் தொகுத்தளித்திருக்கும் சகோதரி ஷஹி அவர்களுக்கு என் நன்றி..
நேர்காணலிலிருந்து ஒரு சில பகுதிகள் மட்டும்......


தஸ்தயெவ்ஸ்கி...மொழியாக்கங்கள் தொடர்பாய்....
’’முழுமையான தீமை என்று ஒன்றுமில்லை..முழுக்க முழுக்க தீயவர்கள் என்று யாருமில்லை ’’என்பது தஸ்தயெவ்ஸ்கியின் படைப்புக்களில் நான் கண்டடைந்த வாசகம்.ஆனால்...அதற்கு முன்பே அதற்கு நிகரான பாத்திரங்களைத் தமிழ் இலக்கியங்களில்-குறிப்பாகக் காப்பியங்களில் தரிசித்து நெகிழ்ந்திருக்கிறேன்.

கம்பனில் இராவணன்,சிலம்பில் கோவலன் இவர்களையெல்லாமும் கூட அந்த சிருஷ்டிகர்த்தாக்கள் அப்படித்தானே படைத்திருக்கிறார்கள்?
மனித வாழ்விலும் பெருங்குற்றவாளிகள் என்று உறுதி செய்யப்பட்டு மரணத்தை எதிர்நோக்கிக் கொண்டிருக்கும் கொடியவர்களிடமும் கூட நாம் அறியாத நல்ல பண்புகள் ஒளிந்திருக்க நிச்சயம் வாய்ப்பிருக்கிறது;அது போல நாம் மகான்களாக எண்ணிப் போற்றுபவர்களிடம் நம் கவனத்துக்கு வந்திராத எத்தனையோ பலவீனங்கள்,குற்றத் தூண்டல்கள் மறைந்து கிடக்கலாம்.எந்த மாதிரியான வாய்ப்பு, எவரை , எதை நோக்கி இட்டுச் செல்கிறதோ அதை ஒட்டியே ஒருவரிடம் உறைந்து கிடக்கும் நல்லதும்,கெட்டதும் தூண்டப்பட்டு வெளிப்பாடு கொள்கிறது;அந்தப் புற வெளிப்பாட்டின் அடிப்படையிலேயே நல்லவர்-தீயவர் என்ற இருமைகளுக்குள் அவர்களை அடக்க நாமும் முயற்சிக்கிறோம்...ஆனால்,அது ஒரு மாயக் கற்பிதம் மட்டுமே;அதை நாம் அறிந்திருப்பதில்லை என்பதே வாழ்வின் விசித்திரம்.

நான்கு பாகங்களைக் கொண்டிருக்கும் பிரம்மாண்டமான படைப்பு அசடன். அந்தப் பிரம்மாண்டத்தின் முன் - தஸ்தயெவ்ஸ்கியின் அபாரமான விவரிப்பின் முன் நான் கையற்று நின்று மலைத்த தருணங்கள் உண்டு.மனக் கிளர்ச்சியும்,பரவசமும் அடைந்து சிலிர்த்த கணங்களும் உண்டு.எவருக்குமே கேடு எண்ணாத- எவர் தனக்குச் செய்யும் கேட்டையும் பொருட்படுத்திப் பாராட்டாத அற்புதமான தூய ஆத்மாவாக மிஷ்கின் உருவாகியிருப்பது கண்டு தன்னையறியாது கண்ணில் நீர்வழிய அது என் எழுத்துக்களை அவ்வப்போது நனைத்து ஈரப்படுத்தியதும் உண்டு. பேரிலக்கிய மேதையான தஸ்தயெவ்ஸ்கியின் அசடனை மொழியாக்கம் செய்யாமல்,வெறுமே அதை வாசித்து விட்டு மட்டும் போயிருந்தால் இத்தனை அணுக்கமாக அவரது படைப்புக்குள் ஒரு ஆழ்ந்த பயணத்தை என்னால் மேற்கொண்டிருக்க முடியுமா என்பதும் இப்படிப்பட்ட பேரனுபவம் ஒன்று எனக்கு வாய்த்திருக்குமா என்பதும் ஐயம்தான்..

தேவந்தி சிறுகதை பற்றி...
இளங்கோவின் சிலம்பில் தேவந்தி பேசியதை விட - அவளை நான் பேச வைத்ததுதான் மிகுதி; சிலப்பதிகாரக் காப்பியத்தில்அவள் மிகச் சிறிய ஒரு துணைப்பாத்திரமாக மட்டுமே படைக்கப்பட்டிருக்கிறாள்.முதல் காண்டத்தில் ஒரு காட்சியிலும் கண்ணகிக்குக் கோயில் அமைந்த பின் இறுதிக் காண்டத்தில் ஒரு காட்சியிலும் மட்டுமே உண்மையில் அவள் தலை காட்டுகிறாள்.எனினும் அவளது கணவனான பாசண்டச் சாத்தன் குறித்து இளங்கோ சொல்லியிருக்கும் விரிவான கிளைக் கதை அவள் வாழ்வை வேறொரு கோணத்தில் யோசித்துப் பார்க்கும் உந்துதலை  எனக்கு அளித்தது. தேவந்தி என்று மட்டும் இல்லை;பொதுவாகவே நமது தொன்மை இலக்கியங்கள்-காப்பியங்கள்... பெண்ணைப் பேச வைப்பதை விடவும் அவளது மௌனத்தையே பெரிதும் முன் வைத்திருக்கின்றன;காரணம் அந்தப் படைப்புக்களின் எழுதுகோல் ஆண்களின் வசம் இருந்ததுதான்... ! அறிந்தோ அறியாமலோ அவர்கள் கண்டு கொள்ளாமல் விட்ட அந்த மௌன இடைவெளிகளை இனம் காண்பதும் புனைவின் வலிமையால் அவற்றின் சமூகத் தாக்கத்தைப் பொது வெளிக்குக் கொணர்வதும் பெண்படைப்பாளிகளாலேயே பெரிதும் இயலக் கூடியது.
என் கதைகள் மற்றும் பாத்திரங்கள் குறித்து...
என் பாத்திரங்கள் இந்த மண்ணில் காலூன்றி இதன் அழுக்குகளோடும், அழகுகளோடும் -சிறுமைகளோடும்,மேன்மைகளோடும் வாழ்ந்து கொண்டிருப்பவர்களே.அவர்களைக் கண்டைவதற்கான கூரிய பார்வை மட்டும் எனக்கு வாய்த்தாக வேண்டும்,அவ்வளவுதான்...
நம்மைக் கடந்து செல்லும் - நாம் கடந்து செல்லும் ஒவ்வொருவரிடமுமே ஏதோ ஒரு மாயக் கதை மறைந்துதானிருக்கிறது.அந்தக் கதை சற்று உருமாற்றத்துடன் தரப்படும்போது - ஒரு வெற்று வம்பாகவோ,சுவாரசியமான ஒரு நிகழ்வாகவோ மட்டும் அல்லாது,சமூகத்துக்கு அதனால் ஏதேனும் பயன் இருந்தால் மட்டுமே அதைச் சொல்ல முயல்வது என் பாணி
.
பெண்மொழி பற்றி....

இன்றும் பாலியல் வன்முறைகளாலும்,குடும்ப வன்முறைகளாலும் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் பெண்கள் இருக்கவே செய்கிறார்கள்.இன்று பெண் எழுத்துக்கள் என்று முன் வைக்கப்படு ம் பலவற்றில் அந்தக் குரல்கள் ஒலிப்பதே இல்லை;அவற்றின் தேவை முடிந்து விட்டது போன்றஒரு மாயை உருவாகப்பட்டுச் சிக்கல்கள் அகமுகமாகத் திசை திருப்பப்பட்டு விட்டதோ என்றே தோன்றுகிறது.பெண் என்பவள்,எந்த மதம்/சாதி/வர்க்கம்/நாடு/மொழி சார்ந்தவளாக இருப்பினும் அவள் எப்போதும் ஒரு விளிம்பு நிலை ஜந்துவாக மட்டுமே இருக்கிறாள்; இன்றைய பெண் எழுத்துக்களில் அது வீரியத்துடன் ஒலிக்காதது போன்ற ஆதங்கம் எனக்கு நிரம்பவே உண்டு...


நேர்காணலை முழுமையாகப் படிக்க....



3 கருத்துகள் :

Unknown சொன்னது…

சுசீலா அம்மாவின் சிறுகதைகள் , மொழிபெயர்ப்பு நாவல்கள் என வாசித்த அனுபவங்கள் இன்னும் ஆழ் மனதில் பசுமையாய் படிந்துள்ளது , பணியிலிருந்து ஓய்வு பெற்றாலும், இன்னும் ஊக்கமாக செயல்படும் அவரது செயல்பாடுகளை இளைய தலை முறை கவனித்தும் , வாசித்தும் , விவாதித்தும் வருகிறது .

பொருள் மிகுந்த கேள்விகளை கேட்ட ஷஹி அவர்களுக்கும் , பதில்களால் பல கற்பிதங்களை கொடுத்த சுசீலா அம்மா அவர்களுக்கும் பல நன்றிகள்
வாசகன்
தேவராஜ் விட்டலன்

சித்திரவீதிக்காரன் சொன்னது…

தங்கள் நேர்காணல் மிகவும் அருமையாக இருந்தது. முழுவதும் வாசித்தேன். ஜெயமோகனின் கொற்றவை சிலப்பதிகாரத்தை புதிய நடையில் விளக்கியது. தங்கள் தேவந்தியும் சிலப்பதிகாரம் குறித்த நூல் எனும்போது வாசிக்கத்தூண்டுகிறது. வண்ணநிலவன், வண்ணதாசன், ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன் குறித்த தங்களது பகிர்வு அருமை. பகிர்விற்கு நன்றி.

பெயரில்லா சொன்னது…

//’’முழுமையான தீமை என்று ஒன்றுமில்லை..முழுக்க முழுக்க தீயவர்கள் என்று யாருமில்லை ’’என்பது தஸ்தயெவ்ஸ்கியின் படைப்புக்களில் நான் கண்டடைந்த வாசகம்.//

நல்ல தகவல்கள் மேடம்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....