கொல்கத்தா கிருஷ்ணமூர்த்தி என்று இலக்கிய வட்டாரங்களில் பரவலாக அறியப்பட்டுள்ள திரு கிருஷ்ணமூர்த்தி அவர்கள்,வங்க இலக்கியத்தின் குறிப்பிடத்தக்க பல படைப்புக்களை- குறிப்பாக மஹாசுவேதாதேவி,ஆஷா பூர்ணாதேவி ஆகியோரின் படைப்புக்களைத் தமிழாக்கம் செய்திருப்பதன் வழி ,வங்க இலக்கியத்தைத் தமிழுக்குக் கொண்டு வந்து சேர்த்திருப்பவர்;அரசுப் பணியில் இருந்து கொண்டு...தீராத உடற்குறையுடனும் போராடியபடி,36 நூல்களை வங்க மொழியிலிருந்து மொழியாக்கம் செய்திருப்பதோடு,ஆங்கிலம் ,இந்தி மொழிகளிலிருந்தும் பல மொழிபெயர்ப்புக்களைச் செய்திருப்பவர்.மொழியாக்கத் துறையோடு நின்றுவிடாமல் பல அருமையான சிறுகதைகளையும்,வாழ்க்கை வரலாற்று நூல்களையும் தந்திருப்பவர்.
1084இன் அம்மாஎன்னும் அற்புதமான நாவலையும்(மஹாசுவேதாதேவி),
கருப்பு சூரியன் என்ற ஆஷா பூர்ணாதேவியின் சிறுகதைத் தொகுப்பையும்(அந்தத் தொகுப்பிலிருந்து ஒரு சிறுகதை பற்றி என் வலையில் ஒரு பதிவு எழுதியிருந்தேன் - ரீபில் தீர்ந்து போன பால்பேனா)
அவரது மொழியாக்கம் மட்டும் இல்லையென்றால்,வங்காள மொழி அறியாத இலக்கிய ஆர்வலர்கள் நீலகண்டப்பறவையைத் தேடிபோன்ற சிறந்த நூல்களைப் படித்திருக்க முடியாது.
பாரதி பாடல்கள் , திருக்குறள்,சிலப்பதிகாரம் முதலியவற்றை வங்க மொழியில் பெயர்த்திருக்கும் சிறப்பும் அவருக்கு உண்டு. [தன் இறுதி நாட்களிலும் கூடக்குறுந்தொகையை வங்கத்துக்குக்கொண்டு செல்லும் முயற்சியில் இருந்தார் அவர்.]
வயதின் தளர்ச்சி தன் இலக்கிய ஆர்வத்துக்கும் உழைப்புக்கும் தடையில்லை என்பதைத் தன் வாழ்வின் ஒவ்வொரு கணமும் மெய்ப்பித்துக்கொண்டே இருந்த திரு சு கிருஷ்ணமூர்த்தி அவர்கள் நேற்று சென்னையில் காலமான செய்தி ஆழ்ந்த வருத்தத்தை அளித்தது.
அவரது இறுதிக்காலத்தில் அவரோடு அறிமுகம் கொண்டு பழகவும் கருத்துப்பரிமாற்றம் செய்து கொள்ளவும் எனக்கு வாய்ப்புக்கிடைத்ததைப்பெரும்பேறாக எண்ணுகிறேன்.தில்லியில் இருந்தபோது அவரது சகோதரியின் இல்லத்தில் இருமுறையும் ஜே என் யூ பல்கலை வளாகத்தில் சில தடவைகளும் அவரை சந்திக்கவும் உரையாடவும் எனக்கு வாய்த்தது.அந்தச் சில தருணங்களில் நெடுநாள் பழகியவரைப்போன்ற அன்பை என்மீது பொழிந்த திரு கிருஷ்ணமூர்த்தி அவர்கள் என் சிறுகதை ஒன்றை வங்கத்தில் மொழிபெயர்த்து இரு மாதங்களுக்கு முன் எனக்கு அனுப்பி வைத்திருந்தார்;அது எனக்குக் கிடைத்த பாக்கியங்களில் ஒன்று.
இலக்கிய,மொழியாக்கத் தளங்களில் தொடர்ந்து இயங்கிக்கொண்டே இருந்த திரு சு கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முறையில் அவரது வாழ்க்கை வரலாற்று நூலான ‘நான் கடந்து வந்த பாதை’ குறித்து ‘வடக்கு வாசல்’இதழில் வெளியான என் கட்டுரையை இங்கே மீள் பிரசுரம் செய்கிறேன்.தன் வாழ்க்கையைப் பொருளுடையதாக ஆக்கிக் கொள்ள சற்றும் அயராது உழைத்து...அவ்வாறான உழைப்புக்கு முன்னோடியாக விளங்கிய ஒரு மனித ஜீவியின் அற்புதமான வரலாறு அது...
அன்னாருக்கு என் சிரம் தாழ்ந்தஅஞ்சலி.
மதிப்புரை
மனிதப் பிறவியின் மகத்துவத்தை உணர்ந்து, அதை அர்த்தச் செறிவுள்ளதாக ஆக்கிக் கொண்டிருக்கும் சான்றோர்களின் "தன் வரலாறு'’களே வாசிப்பதற்கேற்ற தகுதி படைத்தவை; படிப்பவர் உள்ளங்களில் புதிய உள்ளொளிகளைப் பாய்ச்சவும், ஆக்க பூர்வமான மன எழுச்சிகள் பலவற்றைக் கிளர்த்தி விடவும் வல்லமை பெற்றவை அவை. அத்தகையதொரு படைப்பாக அண்மையில் வெளிவந்திருக்கிறது, பன்மொழி எழுத்தாளரும், மொழி பெயர்ப்பாளருமான கொல்கத்தா திரு.சு.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் "நான் கடந்து வந்த பாதை’' என்னும் தன் வரலாற்று நூல்.
தமிழிலும், ஆங்கிலத்திலும் பல சிறுகதைகளையும், கட்டுரைகளையும், வாழ்க்கை வரலாற்று நூல்களையும் படைத்துள்ள போதும், திரு.சு.கிருஷ்ணமூர்த்தி அவர்களது அழுத்தமான சிறப்பான முத்திரை பதிந்திருப்பது, மொழிபெயர்ப்புத் துறையின் மீதுதான்!
"இயன்ற அளவு பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்களைத் தமிழில் பெயர்ந்துள்ளேன்.... தமிழிலக்கியத்தையும் பிறமொழிகளுக்குக் கொண்டு சென்றுள்ளேன்.''
என்று நூலின் நிறைவுரையில் அவரே குறிப்பிடுவது போலத் தமிழ் இலக்கிய உலகில், இறவாப் புகழோடு அவரை என்றென்றும் நினைவு கூரச் செய்பவை, இந்தி, ஆங்கிலம், வங்க மொழிகளிலிருந்து தமிழுக்கும், தமிழிலிருந்து ஆங்கிலம், வங்கம் ஆகிய மொழிகளுக்குமாக அவர் மொழி பெயர்ப்புச் செய்து வழங்கியிருக்கும் பெருங் கொடைகளான அரிய பல நூல்களே!
சிலப்பதிகாரத்தை ஆங்கிலத்திலும், குறளை வங்காளத்திலும் மொழி பெயர்த்து - இந்திரா பார்த்தசாரதியின் "குருதிப் புனல்' நாவலை வங்கத்தில் கொண்டு சென்றமைக்காக சாகித்திய அகாதமி விருதையும் வென்றிருக்கும் திரு. சு.கிருஷ்ணமூர்த்தியின் மொத்த நூலாக்கங்களையும், அவற்றுக்காக ’இலக்கியச் சிந்தனை' முதலிய அமைப்புக்கள் பலவற்றிலிருந்து அவர் பெற்றுள்ள அங்கீகாரப் பரிசுகளையும் நூலின் பின்னிணைப்பில் பார்வையிடும்போது மனதிற்குள் ஒரு பிரமிப்பு ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை.
"எங்கள் வாழ்க்கையில் சராசரி நடுத்தரக் குடும்பத்தில் நேர்வதைவிட அதிகத் துன்பங்கள் நேர்ந்தன. இளம் பிராயத்தில் பணத் தட்டுப்பாடு, நடு வயதில் குழந்தைகளின் உடல் நிலையை, அதன் பிறகு மகளின் குடும்ப வாழ்வில் பிரச்சினைகள்...'' என்றும்,
"அலுவலகப் பணிகளை, குடும்பத் தேவைகளைக் கவனித்துக் கொண்டு தொடர்ந்து படிப்பதற்கும், எழுதுவதற்கும் ஒரு கழைக் கூத்தாடியின் திறன் தேவைப்பட்டது''
என்றும் தான் எதிர்ப்பட நேர்ந்த வாழ்க்கை நெருக்கடிகளைத் தனது வரலாற்றில் ஆங்காங்கே பதிவு செய்து கொண்டு போகிறார் கிருஷ்ணமூர்த்தி; ஆனாலும் கூட இவற்றையெல்லாம் மீறிக் கொண்டு முன் குறிப்பிட்ட வெற்றி இலக்குகளை அவரால் எவ்வாறு எட்ட முடிந்தது என்பதற்கான விடையையும் தன்னுள் பொதிந்து வைத்திருக்கிறது. அவரது நூல்.
மிக இளம் வயதிலேயே தன்னுள் பதிந்து, ஊறி, உட்கலந்து விட்ட இலக்கிய வாசிப்பையும், தொடர்ந்ததொரு சாதகமாக எழுத்தைப் பயிலும் முயற்சியையும் வாழ்வின் எல்லாக் கட்டங்களிலும் - நெருக்குதலான சூழல்களுக்கு நடுவிலும் - ஒரு போதும் கைவிடாமல், ஏதாவது ஒரு வகையில் அவர் தொடர்ந்து கொண்டே வந்திருக்கிறார் என்பதே அவரது தன் வரலாற்றிலிருந்து நாம் பெறும் மையச் செய்தி.
தான் வசிப்பது அன்னவாசலோ..., புதுக்கோட்டையோ..., விஜய வாடாவோ..., கொல்கத்தாவோ - அது எதுவாக இருந்தாலும் அங்குள்ள பள்ளி நூலகத்தையோ, பஞ்சாயத்து நூலகத்தையோ, தேசிய நூலகத்தையோ தேடிப் போய்க் கொண்டே இருக்கிறார் கிருஷ்ணமூர்த்தி. அச்சகத்தில் வேலைபார்க்கும் சகோதரன், சுடச்சுடக் கொண்டு வரும் மெய்ப்புப் பிரதிகளாலும் கூடத் தன் அறிவுப்பசியை ஆற்றிக் கொள்கிறார் அவர்.
"இயற்கையாகவே மொழி களிலும், இலக்கியத்திலும் ஆர்வம்'' கொண்டவராக - அவற்றின் "தீராக் காதல'னாகவே வாழ்ந்த திரு.கிருஷ்ணமூர்த்தி, இளமையில் பயின்ற இந்தியோடும், சமஸ்கிருதத்தோடும் நின்று விடாமல் - வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் தனது பன்மொழி பயிலும் ஆர்வத்தை நிறைவு செய்து கொண்டிருக்கிறார். பணி நிமித்தம் கொல்கத்தாவில் வாழும் சூழலில் வங்கமொழியைத் தீவிரமான நாட்டத்துடன் கற்றுத் தேர்ச்சி பெற்றதனாலேயே வங்கமொழி சார்ந்த இலக்கிய மொழிபெயர்ப்புப் பங்களிப்பில் அவரால் தனித்ததொரு இடத்தைப் பெறமுடிந்திருக்கிறது. ஜெர்மன், தெலுங்கு ஆகிய மொழிகளைக் கற்கும் முயற்சியிலும் கூட அவர் ஈடுபட்டதை அவரது தன் வரலாறு முன்வைக்கிறது.
கிருஷ்ணமூர்த்தி அவர்கள் உருவாக்கிய நூல்களின் எண்ணிக்கை ஒருபுறமிருக்க - அவை ஒவ்வொன்றையும் இழைத்து, இழைத்து உருவாக்கவும், அவற்றை வெளியிடவும் அவர் மேற்கொண்ட கடுமையான முயற்சிகளும், ஆத்மார்த்தமான அர்ப்பணிப்போடு கூடிய முனைப்பும் நம்மை மலைப்பில் ஆழ்த்துகின்றன.
வங்காளப் போராளிகளின் - வங்கப் போராட்டங்களின் வரலாறுகளை எழுதும் போது - தனக்குக் கிடைத்த நூல்களிலிருந்து திரட்டிய செய்திகளை மட்டும் வைத்துக் கொண்டு மேலோட்டமாக அவற்றை எழுதுவது அவருக்கு உகப்பானதாக இல்லை. பனை ஓலைகளைத் தேடிப் பயணப்பட்ட உ.வே.சா.வைப் போல இவரும், அந்தச் செய்திகளின் மூலவேர்களை இனம் காண்பதற்காக அந்தப் போராளிகளின் நண்பர்களை..., உறவுகளை.... வாரிசுகளைத் தேடிப் பயணப்படுகிறார்.
"மொழி பெயர்ப்பைப் படிக்கும் வாசகன், மூலப் படைப்பைப் பற்றி, அதன் படைப்பாளியைப் பற்றித் தவறாக எண்ணிக் கொள்ள வாய்ப்பு''த் தராதபடி - மஹாசுவேதா தேவியைத் தமிழில் தரமுற்படும் வேளையில், அவரையே நேரில் சென்று பார்த்துப் பல இடங்களைத் தெளிவுபடுத்திக் கொள்கிறார்;
"குறுகத் தரித்த குற'ளை, அதன் சீர்மை குலையாமல் அதே போன்ற கவித்துவத்துடன் வங்காளத்தில் அளிக்க - வங்கமொழி மோனையைத் துணைக்குச் சேர்த்துக் கொண்டு கடுமையாக உழைக்கிறார்.
தான் மேற்கொண்டிருக்கும் இலக்கியப் பணியை நுனிப்புல் மேய்ந்து, நீர்த்துப் போக விட்டு விடாதபடி - உண்மையான தீவிரத்துடன் எடுத்துக் கொள்ளும் திரு. கிருஷ்ணமூர்த்தியின் வாழ்க்கையை இன்றைய இலக்கியவாதிகள் ஒரு பாடமாகக் கொண்டால் தமிழிலக்கிய வளர்ச்சியின் முன்னகர்வுகள் மேலும் கூடுதலாக வழி பிறக்கும்.
எழுத்தாளனின் கடின உழைப்பு விரயமாவதையும், பத்திரிகைகளாலும், பதிப்பகங்களாலும் அது சுரண்டப்படுவதையும் திரு.கிருஷ்ணமூர்த்தி, தனது வாழ்நாள் முழுவதும் எதிர்த்து வந்திருப்பதையும் அவரது நூலின் பல பகுதிகள் எடுத்துக் காட்டுகின்றன.
தனது படைப்பு பிரசுரமாகாத போது எழுத்தாளனுக்கு ஏற்பட்டு விடும் கடுமையான மனச்சோர்வுக்கு மாற்றாக - அதைத் தவிர்க்கும் முன்னெச்சரிக்கை உணர்வுடன் - ஒரு நூலைத் தொடங்குவதற்கு முன்பே - அதை வெளியிடக் கூடிய பதிப்பாளர்களை உறுதி செய்து கொண்ட பிறகே அந்த முயற்சியில் இறங்குகிறார் இவர்; சில வேளைகளில் அதையும் மீறிச் சில குறிப்பிட்ட நூல்களை வெளியிட்டே ஆக வேண்டும் என்ற மன எழுச்சி மேலோங்குகையில் தானே செலவழித்து அவற்றை வெளியிட்டு விடவும் செய்கிறார்.
தனது சிறுகதைகளுக்கான சன்மானத்தை நினைவுப்படுத்தப்போய், அதன் பிறகு அந்த இதழில் பிரசுரிப்புக்கான வாய்ப்பையே முற்றாக இழந்ததையும், அனைத்திந்தியத் தொகுப்பு ஒன்றில் தன் சிறுகதையைச் சேர்த்து விட்டு, அது குறித்த விவரத்தைக் கூட அறிவிக்காமல் - புத்தகப் பிரதிகளோ, சன்மானமோ எதுவும் அளிக்காமல் விட்டு விட்ட பதிப்பகத்தை எதிர்த்துப் போர்க்கொடி உயர்த்தியதால் தொகுப்பாளரின் நட்பையே இழக்க நேர்ந்த சம்பவத்தையும் நூலில் குறிப்பிட்டிருக்கிறார் கிருஷ்ணமூர்த்தி. ஆனால் இவற்றாலெல்லாம் "நேர்படப்' பேசும் தனது இயல்பை அவர் ஒருபோதும் மாற்றிக் கொள்ளவே இல்லை.
பிரசுரிக்கப்படாத தனது கட்டுரையைத் திரும்பத் தராததற்காகத் தான் பெருமதிப்பு வைத்திருக்கும் திரு. கி.வா.ஜ. அவர்களுக்குக் கூடக் கடுமையாகக் கடிதம் எழுதியிருக்கிறார் இவர்.
பாரதியின் படைப்புக்களில் தோய்ந்து கலந்தவராயினும் - தாகூரை அரைகுறையாக அறிந்த சிலர், பாரதிக்கு ஏற்றம் தருவதான எண்ணத்துடன் தாகூரைக் குறைத்துப் பேச முற்படுகையில் அதை எதிர்த்து "ரவீந்திரரின் படைப்பில் வீச்சு அதிகம்'’ என்று பேட்டி அளிக்கிறார்; அதற்குக் கண்டனக் கணைகள் எழும் போது "பாரதியும் ரவீந்திரரும்' என்று நீண்ட கட்டுரை எழுதி விளக்கமளிக்கிறார்.
குறுகிய மொழி, இனச் சார்புகளிலும் சிக்கி உண்மையை மழுப்புவதிலும், அறிவுக் கலப்படம் செய்வதிலும் சம்மதம் இல்லாதவராய் - எந்த நிலையிலும் - எதற்காகவும் சமரசம் செய்து கொள்ளாத திண்மை கொண்டவராக விளங்கியிருக்கும் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் - தன் "சிறுசெந்நாபொய் கூறாது' என்று நெஞ்சு நிமிர்த்திக் கூறிய சங்கப் புலவனின் இன்றைய பதிப்பாகவே காட்சியளிக்கிறார்.
பரந்த வாசிப்பும், பழுத்த வாழ்க்கை அனுபவமும் - தன்னைத் தானே ஒரு புறநிலைப் பார்வையாளனாக விலகி நின்று பார்க்கும் பார்வையைத் திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்களிடம் ஏற்படுத்தி விட்டிருப்பதை அவரது நூலின் பல இடங்களில் காண முடிகிறது.
மூன்று வயதில் பெரியம்மை நோய் தாக்க, மரணப் படுக்கையில் கிடக்கிறார் கிருஷ்ணமூர்த்தி. அவர் இறந்து போவது நிச்சயம் என்று உறுதிப்படுத்திக் கொண்டு விட்ட - ஆசாரத்தில் ஊறிய அவரது தந்தை வழிப்பாட்டி, குழந்தைக்கு மேலே உலர்ந்து கொண்டிருக்கும் துணிகளில் சாவுத் தீட்டுப்பட்டு விடாமல் அவற்றை எடுக்கச் சொல்கிறாள்; அதைக் கேட்டு எரிச்சலடைந்து கத்துகிறார் கிருஷ்ணமூர்த்தியின் தந்தை.
"நல்ல வேளை துணிகள் தீட்டுப்படவில்லை; நான் பிழைத்து விட்டேன்''என்று, தான் உயிர் தப்பிய நிகழ்வை, வெகு இயல்பாக - வியாக்கியான மற்ற எளிமையுடன் "சட்'டென்று முடித்து விடுகிறார் கிருஷ்ணமூர்த்தி. "நீர்வழிப்படடூஉம் புணை' போல, மனிதர்களையும், வாழ்க்கையையும் உள்ளபடி ஏற்றுக் கொள்ள மனதைப் படிக்கப் பழக்கப்படுத்தி விட்டதாலோ என்னவோ..., சொந்த வாழ்வின் நெருக்கடியான தருணங்களைக் கூட அதிக உணர்வுக் கலப்பின்றிச் சொல்லிக் கொண்டு போவது அவருக்குச் சாத்தியமாகியிருக்கிறது.
வார்த்தை சாகசங்கள் அற்றமிக எளிமையான நேரடியான நடையில், செட்டான சொற்களோடும், சிறு சிறு வாக்கிய அமைப்புக்களோடும் தனது வரலாற்றைப் படிப்பதற்கு எளிதாக்கி விறுவிறுப்பாகக் கொண்டு சென்றிருக்கிறார் கிருஷ்ணமூர்த்தி.
கதைகளையும், பிற படைப்புக் களையும் உருவாக்குவது கூட ஒரு வகையில் எளிதானது தான். ஆனால், தன்னிடமிருந்து ஜனித்த ஒவ்வொரு படைப்பிற்கான பொறியும் எங்கிருந்து கிடைத்ததென்ற விரிவான விளக்கங்கள்..., அவற்றுக்கான எதிர்வினைகள், பல மொழி இலக்கியவாதிகளுடனும், பத்திரிகையாளர்களுடனும் தான் கொண்டிருந்த தொடர்புக்கும், நட்புக்கும் சான்றாகப் பல கடிதங்கள் என அளவற்ற பல ஆவணங்களைத் தன் ஆயுள் முழுவதும் பொன்போலப் பாதுகாத்து, இந்தத் தன் வரலாற்றில் அவர் பயன்படுத்தியுள்ள முறை அசாதாரணமானது; சராசரி மனித முயற்சிகள் எட்டக்கூடிய உயரங்களை விடப் பல மடங்கு மேலானது.
திரு.கிருஷ்ணமூர்த்தி தன் வரலாறு, வெறும் டைரிக் குறிப்புக்களால் மட்டும் நிரம்பியதாக இல்லை. ஒரு கர்மயோகியைப் போன்ற சலியாத உழைப்பு, இலக்கியத் துறையின் மீது குன்றாத ஆர்வம், அர்ப்பணிப்பு ஆகியவற்றால் கட்டமைக்கப்பட்ட அவரது வாழ்வை, அவர் "கடந்து வந்த பாதை'யின் மூலம் அறிந்து கொள்வது, இலக்கியத்தை மட்டுமே சுவாசித்து... அதில் மட்டுமே ஜீவித்திருக்கும் அற்புதமான ஓர் ஆத்மாவின் தேடலை அறிந்து கொள்ளும் பரவசப் பேரானந்தத்தையே கிளர்த்துகிறது.
நன்றி:
மதிப்புரையை வெளியிட்டு இணையத்திலும் ஏற்றியவடக்கு வாசல் இதழுக்கும் ஆசியர் பென்னேஸ்வரன் அவர்களுக்கும்.
http://www.vadakkuvaasal.com/
'நான் கடந்து வந்த பாதை'
சு.கிருஷ்ணமூர்த்தி
வெளியீடு:
பாரதி புத்தகாலயம்
421, அண்ணாசாலை
தேனாம்பேட்டை, சென்னை-600 018.
போன்: 044-24332424
விலை ரூ.100/-

கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக