துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

24.3.15

தீதும் நன்றும்……

[பயணம் இதழ்-கட்டுரைத்தொடர்,சங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம்]

புறநானூற்றுப்பாடல்களின் அற்புதமான வரிகள் சில,திரும்பத்திரும்ப எடுத்தாளப்படுவதனாலேயே,அவற்றின் அர்த்தச்செறிவை இழந்து நீர்த்துப்போய் விடுகின்றன.வரிகளை மேலோட்டமாக மேற்கோள் காட்டுவதிலுள்ள ஆர்வம்,அவற்றுள் பொதிந்து கிடக்கும் ஆழமான உட்பொருளை நாடிச்சென்று கண்டடையும் தேட்டத்தை மட்டுப்படுத்தி விடுகிறது. அடிக்கடி பயன்படுத்துவதால்,சொற்கள் பழகிப்போயிருந்தாலும்கூடப் பொருள் புதிதாய்..., எந்தக்காலத்திற்கும் உரித்தான கருத்தாக்கம் ஒன்றனை உள்ளடக்கி இலங்குவது, சங்கப்பரப்பில் ஒரே ஒரு பாடலை மட்டும் எழுதி இறவாப்புகழ் படைத்த கணியன் பூங்குன்றனாரின் கீழ்க்காணும் பாடல்.

‘’யாதும் ஊரே ; யாவரும் கேளிர் ;
தீதும் நன்றும் பிறர்தர வாரா ;
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன ;
சாதலும் புதுவது அன்றே ; வாழ்தல்
இனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின்,
இன்னா தென்றலும் இலமே; ‘மின்னொடு
வானம் தண்துளி தலைஇ, ஆனாது
கல்பொருது இரங்கும் மல்லற் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல, ஆருயிர்
முறைவழிப் படூஉம்என்பது திறவோர்
காட்சியின் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே;
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே’’.-

புறநானூறு 192


எளிய நடையில் – மிகக் குறைவானசொற்களில் ஒற்றை வரியிலும் இரட்டை வரிகளிலுமாக ஆழமான வாழ்வியல் உண்மைகளை விதைத்துக்கொண்டே போகும் இந்தப்பாடல் கூடத் திருக்குறளை மிகச்சுருக்கமாக எழுதுவதற்கு ஒரு தூண்டுகோலாக இருந்திருக்குமோ என்ற ஐயம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.
தாங்கள் வாழ்ந்த நிலப்பரப்பைத் தவிரப்பிற இடங்களில் அதிகம் சஞ்சரித்திராத ஒரு காலகட்டத்தில் எல்லா ஊர்களையும் சொந்தமாக்கி சாதி மத மொழி இன எல்லைக்கோடுகளைத் தாண்டி எல்லா மக்களையும் சுற்றமாக்கிக்கொள்வதை ’யாதும் ஊரே யாவரும் கேளிர்’  என்னும் முதல் வரியே கற்பித்துத் தந்து விடுகிறது.
அவரவர் வாழும் வாழ்க்கை , அவரவர் செய்யும் நன்மை தீமைகளின் அடித்தளத்தில் கட்டமைக்கப்பட்டதேபட்டதேயன்றிப் புறக்காரணிகளை அதற்குச் சான்றாய்க்காட்டுதல் பெரும்பிழை என்பதைக் கோடிட்டுக்காட்டும்  ’தீதும் நன்றும் பிறர்தர வாரா’ என்னும் வாசகம் உலகில் இதுவரை கூறப்பட்ட அனைத்துத்  தத்துவங்களின் பிழிவாகவே அமைந்திருக்கிறது. நம் சினம், நம் சோம்பல்,நாம் செய்த தவறு எனப்பலவற்றாலும் வாழ்வில் பலவற்றைத் தவற விட்டு விட்டு அதற்கான பழியை மிக எளிதாகப்பிறர் மீது சுமத்த முயலும் மனித மனப்போக்கை இந்த வரிகள் வெளிச்சமிடுகின்றன.
பிறப்பும் இறப்பும் அன்றாடம் ஒவ்வொருமனிதனுக்கும் காட்சியாகிக்கொண்டே இருக்கும் நிதரிசனங்கள்; அவ்வாறு சாவிலும் வாழ்விலும் எந்தப்புதுமையும் இல்லை என்றிருக்கும்போது வாழ்வு இனிது எனக்கொண்டாடுவதும்,துன்பகரமானது என துக்கம் அனுசரித்தபடி மூலையில் முடங்குவதும் பொருளற்றவை என்ற தருக்க பூர்வமான அறிவியல் உண்மையை
‘’ சாதலும் புதுவது அன்றே ; வாழ்தல்
இனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின்,
இன்னா தென்றலும் இலமே ’’
என 2000 ஆண்டுகளுக்கு முன்பே நம் தமிழ்க்கவி சொல்லிச்சென்றிருப்பது கண்டு நாம் விம்மிதம் கொள்கிறோம்.

அதுபோலவே,பெருமை,சிறுமை என்ற அளவுகோல்களும் கூட மனிதன்,தானாக ஏற்படுத்திக்கொள்பவை மட்டுமே."நீர் வழிப்படூஉம் புணை போல"-நீரோட்டத்தின் வழியே அடித்துச்செல்லப்படுகிற மரக்கட்டைகளைப்போல, உயிர்களும் கூட இயற்கையின் விதிப்படி இயங்குவது மட்டுமே உண்மை.இதை உணர்ந்து கொண்டால் வரும் தெளிவே "பெரியோரை வியத்தலும் இலமே ,சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே"
என்று பாடலின் முத்தாய்ப்பாகச் சொல்லப்படும் அரியஉண்மை.

மனிதப்பண்புகளில்,வியப்புக்கு ஒரு தனி இடம் உண்டு.எண் வகைச்சுவைகளில் ஒன்றாக-"'மருட்கை''என்ற பெயரில் வியப்பைக் குறிப்பிடுகிறது,மலர்ச்செடியில் அப்போதுதான் அரும்பியிருக்கும் ஒரு புது மொட்டு,பிரபஞ்ச பிரமாண்டத்தை உள்ளடக்கி ஆர்ப்பரிக்கும் அலைகடல்,நுணுக்கமான சிற்ப சித்திர வேலைப்பாடு,நேற்று வரை பொட்டல் காடாய் இருந்த பூமியில் இன்று முளைத்திருக்கும் விண் முட்டும் கட்டிடங்கள் என இவற்றைஎல்லாம் காண நேர்கையில் எவருக்கும் வியப்புத்தோன்றுவது இயற்கை. இத்தகையவியப்புக்கள்,இயல்பானவை;ஆரோக்கியமானவை;தனிமனித ஆளுமைக்குக் குந்தகம் ஏற்படுத்தாதவை;அவர்களது அழகியல் ரசனைகளை மெருகேற்றி,அவர்களைச்செப்பனிடுபவை..அதனாலேயே அவற்றை விடுத்து,சக மனிதர்கள் மீது சில நேரங்களில் விளையும் பிரமிப்பை..,ஆச்சரியத்தை..,அதிசயத்தை மட்டுமே விமரிசனம் செய்கிறது புறநானூறு.

தான் அடைய விரும்பியதும்,தன்னிடம் இல்லாமல் போனதுமான ஆற்றல்கள்,அழகுகள் ஆகியவற்றை அடுத்தவரிடம் காணும்போது வியப்பு மேலிடுவது இயல்புதான். ஆனால் அதே வியப்பு, வழிபாடாகப்பரிணமித்து விடும்போது மனிதனின் ஆககத்திறனுக்குச் சேதாரம் விளைவித்து,அவனது தனிமனித மேம்பாட்டை,வளர்ச்சியை முடக்கிப்போட்டு விடுகிறது.தான் வியக்கும் ஒருவனுக்குப்பூப்போடுவதிலேயே அவனது காலம் முழுவதும் கழிந்து போய் விடுகிறது.தான்வழிபட்டுவந்த ஒருவரைச்சற்று அண்மையில் நெருங்கிப்பார்க்கும் வாய்ப்பு எதிர்பாராமல் கிட்டுகையில்-. அவரது குரூரமான மற்றொரு பக்கத்தை ஒளிவு மறைவுகள் இன்றி நிதரிசனமாக எதிர்கொள்ள வேண்டியதாகி விடுகிறது. தான் இத்தனை காலமும் வழிபட்டு வந்த பிம்பம் சிதைவுண்டு போனதும் ,கசப்பான உண்மைகளின் கோரத்தாக்குதலுக்கு ஆட்பட்டுத்தத்தளித்துப்போகிறான் அவன்;வியப்புக்கு நேர்மாறான வெறுப்புணர்ச்சி அப்பொழுது அவனை ஆட்கொள்ளத்துவங்க அவன்,சமநிலை இழந்தவனாகிறான். அதற்கு மாறாக 'அகலாது,அணுகாது தீக்காய்பவர்'போல நம் வியப்புக்குரியவர்களை சற்றே விலகி நின்று அலசிப்பார்த்து,ஒவ்வொருவரிடமும் நாம் வியக்கும் பண்புகளை மட்டும் பட்டியலிட்டு,.அவற்றுள் நம்மால் இயலக்கூடிய நல்லவற்றை மட்டும் சுவீகரித்தபடி,நம்மை நாமே உருவாக்கிக்கொள்ளலாம்;ஒரு குறிப்பிட்ட ஆளுமையின் புகைப்பட நகலாக மட்டும் அல்லாமல்,பலரின் சிறப்பியல்புகளை உள்வாங்கிக்கொண்டு-அதே நேரத்தில் தன்னுடைய சுயத்தை,தனித்தன்மையை இழந்து விடாத-ஒரு
மனிதனை அப்போது நம்மிலிருந்து பிறப்பித்துவிட முடியும்.

மனித முயற்சிகள் தேங்கிப்போய் விடாமல் தடுப்பதற்கும்,இவ்வுலகில்நிறை மனிதன் என எவருமே இல்லை என்பதைப்புரிய வைப்பதற்கும்
"
பெரியோரை வியத்தலும் இலமே"
என்று சொல்லி வைத்த புறநானூற்றுப்புலவன்,
"
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே"
என்று கூடவே இன்னொரு வரியையும் இணைத்துக்கொள்கிறான்.

வயதில்,வாழ்க்கை நிலையில்,அறிவில்,அனுபவத்தில் சிறியவர்கள் என நாம் அற்பமாக எண்ணும் எத்தனையோபேரிடம் நாம் கண்டடைவதற்கானபல செய்திகள்,கருவூலமாகச்செறிந்து கிடக்கின்றன.
மணிக்கொடி முன்னோடிகளில்குறிப்பிடத்தக்கவரான பி.எஸ்.ராமையாவின் 'நட்சத்திரக்குழந்தைகள்' ,புகழ் பெற்ற ஒரு சிறுகதை.அப்படைப்பில் இடம்பெறும்ஒரு சிறுமி -'நட்சத்திரம் எப்படிப்பிறக்கிறது?'என்று கேட்க அவளது வினாவுக்கு,"ஒவ்வொரு தடவை உண்மை பேசும்போதும் ஒரு நட்சத்திரம் பிறக்கிறது"என்று பதிலளிக்கிறார் அவள் தந்தை.ஒரு நாள் இரவு வானத்தை நோக்கியிருக்கும் அவள் கண்களுக்கு ஒரு நட்சத்திரம்(அல்லது,எரிகல்)வீழ்வது,கண்ணில் பட ''யாரோ பொய் சொல்லி விட்டதால்தான் நட்சத்திரம் விழுந்து விட்டது"என்று விளக்கமளிப்பதன்வழி,தன் தந்தையையே திகைக்கவும்,வியக்கவும் செய்து விடுகிறாள் அந்தக்குட்டிப்பெண்.

பெரியோர் என வியக்கும்போதும் சிறியோர் என இகழும்போதும் எதிர்பாராத ஏமாற்றங்கள் விளைவதைத் தவிர்ப்பதற்காகவே 'வியத்தலும்,இகழ்தலும் தவிர்க்க' என்ற அற்புதமான செய்தியை முன் வைக்கிறது சங்கஇலக்கியம்.

1 கருத்து :

Vijay Rajmohan சொன்னது…

Wonderful madam, please continue. Thanks for writing this.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....