துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

7.11.17

முகமும் வாயும்...

ண்மையில் முகம் தெரியாத ஒரு நபரிடமிருந்து குறுஞ்செய்தி ஒன்று வந்தது [எண் மட்டுமே இருந்தது....குறிக்கத் தவறியது நானாகவும்இருக்கலாம்]

’முகம் என்ற சொல்லுக்கு வேறு மாற்றுச்சொல் தமிழில் இருந்தால் சொல்லுங்கள்’ என்றது அந்தச்செய்தி. 
உண்மையில் அப்படி ஒரு செய்தி வரும் வரை அதைப்பற்றி நான் நினைத்துப்பார்த்தது கூட இல்லை...

வகுப்பறையில் உவமை என்ற ஒன்றைப்பற்றிப்பேசத் தொடங்கினாலே ’முகம் போன்ற மதி’ என்று தொடங்கி விடுகிறோம்; 
உருவகம் என்றால் அதையே மாற்றிப்போட்டு ’முக மதி’ என்று கற்பிக்கிறோம்..

அதெப்படி முகத்துக்கு வேறு சொல் இல்லாமல் போகும் என்ற எண்ணத்தோடுதான் முதலில் யோசிக்க ஆரம்பித்தேன். 

சொல்லுதல் என்ற ஒன்றைக் கம்பன்தான் எப்படியெல்லாம் கையாண்டிருக்கிறான்..? நவிலுதல்,புகலுதல்,கூறுதல்,கழறுதல்,உரைத்தல்,சொல்லுதல் என்று நாம் பேசும் முறைக்குத்தான் தமிழில் எத்தனை விதமான மாற்றுச் சொற்கள் ? முகத்துக்குக் கிடைக்காதா என்று தேடிப்பார்த்ததில் ஏமாற்றமே எஞ்சியது..முகத்தைக்குறிக்கும் வதனம் என்ற சொல் சமஸ்கிருதம் என்பது ஏற்கனவே தெரியும்; குறுஞ்செய்தியும் அதைக்குறிப்பிடத் தவறியிருக்கவில்லை. ’68 இல் தமிழ் இலக்கியத்துக்குள் அடியெடுத்து வைத்தது முதல்இன்று வரை கிட்டத்தட்ட 50 ஆண்டுக்காலம் என் நினைவுச்சேகரிப்பாக இருந்த சொல் அகராதிக்குள் குடைந்து குடைந்து ஒருமணி நேரம் போராடியதில் தோல்வியே எஞ்சியது...
[பேச்சுத் தமிழில் மூஞ்சி, மொகரை என்று சில சொற்கள் சஞ்சரித்தாலும் அவற்றின் வேர்ச்சொல் முகம்தானே]
.
இறுதியாக இலக்கியப் பயிற்சியோடும் தேடலோடும்  இருக்கும் ஆங்கிலப்பேராசிரியையான என் தோழி ஒருவரிடம் இதைப்பகிர்ந்து  கொள்ள,  ஆங்கிலத்தோடு கூடவே தமிழ், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளிலும் ,அவற்றின் இலக்கியங்களிலும் தேர்ச்சி கொண்டவரும், இருமொழி எழுத்தாளரும்,மொழிபெயர்ப்பாளருமான  அவர் சிரித்தபடி ’’முகம் என்பதே சமஸ்கிருதச்சொல்தானே’’ என்றார்...அதற்குப்பின்புதான் அதுவும் எனக்கு உறைத்தது...

தமிழில் முகத்துக்கு சொல் இல்லாதது போல சமஸ்கிருதத்தில் வாய் என்பதைக்குறிப்பதற்குச் சொல் இல்லை. சமஸ்கிருதத்தில் அதரம்- [’அதரம் மதுரம் ’இதழ்] உண்டு.மூக்கு,நாக்கு எல்லாம் உண்டு..ஆனால் வாய் மட்டும் இல்லை..’’தமிழுக்கு முகம் இல்லை,சமஸ்கிருதத்துக்கு வாய் இல்லை’’ என்பது வேடிக்கையான ஒரு சொலவடை - பழமொழி என்று அவர் சொல்லிக்கொண்டே போக ’’அறிதொறும் அறியாமை கண்டற்றால் ’’என்பதுதான் எவ்வளவு மெய்யானது என்ற சிந்தனை என்னை சூழ்ந்து கொண்டது..

’தமிழுக்கு முகம் இல்லை...’ என்று சொல்லளவில் சொல்வதாலேயே    தமிழை நேசிப்பதில்லை என்றாகி விடாது..

’’தமிழ் எனக்கும் மூச்சு அதைப்பிறர் மேல் விட மாட்டேன்’’ என்கிறது
ஞானக்கூத்தன் கவிதை 

சில மொழிகளில் சிலவற்றுக்கு சொற்கள் இருப்பதில்லை..மொழி என்பது கருத்துப்பரிமாற்றத்துக்குக்கைக்கொள்ளும் கருவி.என்பதால் கொள்ளல் கொடுத்தல் மூலமாக இல்லாத சொற்களை இருக்கும் மொழியிலிருந்து பெற்றுக்கொள்கிறோம்.,காலந்தோறும் வெவ்வேறு மொழியிலுள்ள  இலக்கியங்கள்  செழுமைப்பட்டு வளர்ந்து வந்திருப்பதும் கூட இத்தகைய பரிமாற்றங்களினால் மட்டுமே என்பதை நடுநிலையோடு சிந்திக்கும் மொழியியல், இலக்கிய அறிஞர்களும், ஆய்வாளர்களும் அவ்வப்போது சுட்டிக்காட்டத்தவறுதில்லை..அதிலும்குறிப்பாகத்  தமிழுக்கும் சமஸ்கிருதத்துக்குமான உறவு தொன்மையானது. இரண்டும்  நீண்ட இலக்கியப் பாரம்பரியமுடைய இந்திய மொழிகள்.இந்தியாவில் செம்மொழிகள் என்னும் தகுதியைப் பெற்றிருப்பவை. தமிழில் வடமொழிக்கலப்பைப்போல, சமஸ்கிருத மொழியிலும்  தமிழ்ச் சொற்கள் பல  கலந்து பிணைந்திருக்கின்றன. அது குறித்து  டாக்டர் குண்டர்ட், கிட்டல், டாக்டர் கால்டுவெல் போன்ற பலரும் ஆய்வு செய்திருக்கின்றனர்.

எங்கெங்கோ உருவான மனித இனங்கள் பல வேறுபாடுகளுக்கிடையே  பின்னிப்பிணைந்திருப்பதைப்போலத்தான் மொழிகளுக்கிடையிலான பிணைப்பும்...வேற்றுமையும் என்று நினைத்தால்  எல்லா மொழிகளையும்  நேசிக்கத்தான் முடியுமே தவிர காழ்ப்புணர்வு கொள்ள முடியாது..

அண்மையில் இது தொடர்பாக படித்த, பார்த்த இரு செய்திகளை இங்கே பகிர்ந்து கொள்வது பொருத்தமாக இருக்கும்..

ஒன்று..
தினமணி ஆசிரியர் திரு வைத்தியநாதன் அவர்கள் கலாரசிகன் என்ற பெயரில் எழுதி வரும் தொடரில் இந்த வாரம் எழுதியிருக்கும் கீழ்க்காணும் குறிப்பு .
//முன்னாளில் வாழ்ந்த தமிழறிஞர்கள் அனைவரும் சமஸ்கிருதத்திலும்தேர்ச்சி உடையவர்களாக இருந்திருக்கிறார்கள் . இறையனாரின் [சிவபெருமானின்] உடுக்கையின்ஒரு புறத்திலிருந்து தமிழும் மறுபுறத்திலிருந்து சமஸ்கிருதமும் பிறந்தன என்பது சைவர்களின்கூற்று. இதிலிருந்து அது பிறந்ததா., அதிலிருந்து இது பிறந்ததா..- அது மூத்ததா, இது மூத்ததா, - அது சிறந்ததா, இது சிறந்ததா என்றெல்லாம் தேவையற்ற சர்ச்சைகளில் நாம் ஈடுபடத் தேவையில்லை. தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக இருந்த முனைவர் வ.அய்.சுப்பிரமணியன் பேராசிரியர் எஸ் வையாபுரிப்பிள்ளையிடம் திருவனந்தபுரம் பல்கலைக்கழகத்தில் தமிழ் கற்கச்சென்றபோதுஅவர் கூறிய அறிவுரை ‘சமஸ்கிருதமும் படி’ என்பதுதான்.// 

மற்றொன்று...
சென்னையில் நீண்ட காலமாக இயங்கி வரும் குப்புசாமி சாஸ்திரி சமஸ்கிருத ஆய்வு மையம் [THE KUPPUSWAMI SASTRI RESEARCH INSTITUTE (KSRI)  பற்றிய காணொளி. இந்தியாவில் மட்டுமன்றி உலக அளவில் முதலாவதாகக்கருதப்படும் இந்த சமஸ்கிருத ஆய்வு மையம் பற்றிய விரிவான அறிமுகத்தில் பழந்தமிழ் இலக்கண நூல்கள் தொடங்கி ஓலைச்சுவடிகளைப் பாதுகாத்துப்பதிப்பித்த தமிழ்த்தாத்தா உ வே சா வரை -ஒப்பீட்டு முறையில் - இரு மொழிகள் பற்றிய உண்மையான பெருமிதத்துடனும், இரண்டிலும் தோய்ந்து தெளிந்த பயிற்சி தந்த திடத்துடனும் ஆற்றொழுக்குப் போன்ற அநாயாச நடையில் சொல்லிக்கொண்டே போகிறார் இயக்குநர் முனைவர் காமேஸ்வரி அவர்கள். இங்கே சேகரம் செய்யப்பட்டிருக்கும் 60000 நூல்களிலும்,ஓலைச்சுவடிகளிலும் தமிழ் நூல்களுக்கும் அவற்றின் மொழியாக்கங்களுக்கும் இடம் இருக்கிறது.  

பிரதேச எல்லைகளால் மனதைக்குறுக்கிக்கொண்டு விடாமல் பல மொழிகளிலிருந்தும் வந்து சேரும் அறிவுச் சேமிப்பை மட்டுமே கொண்டாட வேண்டும் என்பதற்குப் பாடம் சொல்கிறது இந்தக்காணொளி 



Head of India's Top Sanskrit Research Center in Conversation with Rajiv Malhotra





கருத்துகள் இல்லை :

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....