துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

21.11.17

செப்பிடு வித்தைகளும் செவிட்டில் அறையும் நிஜங்களும்

''மாயாஜால கிராஃபிக்ஸ் வழி செப்பிடு வித்தை காட்டும் பாகுபலிகளா?
கொஞ்சம் பிரச்சார நெடி வீசினாலும் செவிட்டில் அறைவது போலக் கசப்பான நிஜத்தைப்பேசும் அறம் போன்ற படங்களா.?
நாம் முடிவு செய்ய வேண்டிய நேரம் இது''. 


ஆழ்துளைக்கிணறுகளும் அவற்றில் தவறி விழுந்து மீட்க முடியாமல், மீட்கப்படாமல் உயிர் நீத்த சிறார்களின் எண்ணிக்கையும் அன்றாடசெய்தித்தாள்களின் அங்கமாகவே ஆகிக்கொண்டு வரும் நிலையில் அப்படிப்பட்ட சம்பவம் ஒன்றை மட்டுமே மையமாக வைத்துக்கொண்டு, மீட்புக்காக நிகழும் 24 மணி நேரப் போராட்டத்தையும்,தவிப்பையும் - - களத்தில் நாமும் கூடவே நின்றுகொண்டிருப்பது போன்ற அதே பதட்டத்தோடு பார்வையாளர்களுக்குக் கடத்துகிறது அறம். நொடிக்கு நொடி அதிகரித்துக்கொண்டே போகும் பரபரப்போடு அந்தச்செய்தி முன்னிலைப்படுத்தப்பட்டாலும் அதை மட்டுமே சந்தைப்படுத்திக்கொண்டு வியாபாரமாக்கிக்கொள்ள இந்தப்படம் முனையவில்லை என்பதுதான் மற்ற வணிகப்படங்களிலிருந்து அறத்தை வேறுபடுத்தும் அம்சம். 

நடுப்பாதையில் பழுதாகிப் பாதியில் நிற்கும் தீயணைப்பு வண்டியைப்போல செயற்று நிற்கும் அரசு இயந்திரம், அதல பாதாளத்தில் தரம் தாழ்ந்து கிடக்கும் ஜனநாயக  மதிப்பீடுகள் அரசியல்வாதிகள் என்று பலவற்றின் உருவகமாகவே ஆழ்துளைக்கிணற்றில் வீழ்ந்து கிடக்கும் சிறுமி முன்னிறுத்தப்படுகிறாள்.

விஞ்ஞானத்தின் வெற்றியைக்காட்டி, வல்லரசாக நாட்டை அடையாளப்படுத்தும் ஏவுகணை ஒரு புறம்; அது விண்ணில் உயர்ந்து செல்லும் தளத்துக்கு அருகிலேயே பஞ்சத்தின் ஆழ் மட்டத்தில் வறுமைப் பள்ளத்தில் வீழ்ந்து கிடக்கும் மக்கள் மறுபுறம்.. எதிர்எதிரான இந்த இருமைகள் படத்தின் தொடக்கம் முதல் இறுதி வரை சமூக மனச்சாட்சியை உலுக்கி எழுப்பிக் கேள்வி கேட்டுக்கொண்டே இருக்கின்றன. ராக்கெட் செலுத்தப்படுவதைத் திருவிழாப் போலக்கொண்டாடி அதற்காகப்பூசை வைத்துப்படையலிடும் மக்களுக்கு அந்த அறிவியல் தொழில்நுட்பத்தால் குறைந்தபட்ச பயன் கிடைப்பதற்கான முயற்சியைக்கூட அரசாங்கம் மேற்கொள்ளவில்லை என்ற நடப்பியல் யதார்த்தத்தை ஒவ்வொரு நிகழ்வும் விண்டு வைத்துக்கொண்டே வருகிறது. அறிவியலின் வளர்ச்சி என்பது ஒரு துறையாக அங்கீகரிக்கப்பட வேண்டிய அதே நேரத்தில்  அதன் இலக்குகள் விளிம்புநிலை மக்களுக்குப் பயன் தரக்கூடியவையாக இல்லை என்ற கசப்பான உண்மையைத் திரைப்படத்தின் இடையே வரும் தொலைக்காட்சி உரையாடலும் வெளிப்படையாகப்பேசுகிறது361 நிகழ்வுகளுக்குப்பிறகும் இப்படிப்பட்ட சம்பவங்களை  விபத்துக்களாக மட்டுமே எடுத்துக்கொண்டு சாவுக்கான ஈட்டுப்பணத்தைத் தந்து மூடி மறைக்கப் பார்க்கும் அரசியல்வாதிகள்,அவர்கள் தரும் மனரீதியான அழுத்தங்கள்,மிரட்டல்கள், நிர்வாக இயந்திரத்தின் பல்வேறு வசதிக்குறைவுகள் அத்தனைக்கும் நடுவில் கண்ணெதிரே தவித்துக்கொண்டிருக்கும் உயிரை மீட்பது ஒன்றையே மனிதாபிமானம் மிக்க சவாலாக எடுத்துக்கொண்டிருக்கும் மாவட்ட ஆட்சியர் படத்தின் மையப்புள்ளியாகிறார்.

ஆழ் கிணற்றுக்காகத் துளையிட்டு விட்டு மூடாமல் அலட்சியம் காட்டிய ஆளும் கட்சிக்கவுன்சிலரைத் துணிச்சலாய்க் கைது செய்வது, ஆம்புலன்ஸ் செல்ல வழியில்லாமல் தீயணைப்பு வண்டி பழுதாகி நிற்கும்போது அருகிலுள்ள முள்செடிகளை வெட்டி வீழ்த்தி அதை நகர்த்தி விட்டுப் பிற வாகனங்கள் தொடர்ந்து செல்ல வழியமைத்துத் தருவது, பேரிடர் மேலாண்மைக்குப்பொறுப்பான அதிகாரிகளோடு துரித முடிவெடுப்பது, மருத்துவரையும் தீயணைப்பு மேலதிகாரியையும் தொடர்ந்த முயற்சிக்குத் தூண்டுகோல் அளித்துக்கொண்டே இருப்பது, எந்த முயற்சியும் பலனளிக்காதபோது மீட்சிஉதவிக்காகக் கயிறு கட்டி இன்னொரு குழந்தையையும் உள்ளே இறக்க சொந்தப்பொறுப்பில் சம்மதம் தருவது, அத்தனை நெருக்கடிகளுக்கு நடுவிலும் உணர்ச்சி வசப்படாமல் பத்திரிகை தொலைக்காட்சி ஊடகக்காரர்களுக்கும் விளக்கம் அளிப்பது, கட்சிக்காரர்களை சமாளிப்பது என்று சகலத்தையும் எதிர்கொண்டு குழந்தையை மீட்டு விடவும் செய்கிறார் ஆட்சியர் மதிவதனி. 

மனிதநேயத்துக்கு முக்கியத்துவம் அளிக்காத மேலிடம், அவரது செயல்களை அதிகார வரம்பு மீறலாகவே எடைபோட்டு அவர் மீது நடவடிக்கை எடுக்கத் துணிந்த நிலையில் அவர் முன் நிற்கும் ஒரே வாய்ப்பு அமைச்சரை சந்தித்து விளக்கம் தருவது…கிட்டத்தட்ட ஒரு சமரசச்செய்கை போன்ற அதனைச் செய்வது, தான் மேற்கொண்ட அறத்துக்கு இழுக்கெனக்கருதும் அவர் அதை உறுதியுடன்  நிராகரித்து வேலையை விட்டு விலகி மக்கள் பணியில் இணைய முடிவெடுக்கிறார். மக்கள் பணிக்கு வருவதான ஆர்வத்துடன் ஆட்சிப்பணிக்கு வரும் நேர்மையான அதிகாரிகள் பலரும் ‘பதவியும் கூட அதிகார அரசியலின் ஓர் அங்கம்தான்’ என்ற குரூர நிஜத்தைப்புரிந்து கொள்ளும் கட்டம் இது. தமிழகத்தின் முன்னாள் ஆட்சித் தலைவர் சிவகாமியைப்போல - இன்னும் வெளிமாநிலங்களிலும் கூட இதற்கான முன்னுதாரணங்கள் நம்மிடையே இருந்தாலும் திரைப்படக்காட்சிப்படுத்தலும்
‘’இன்னிக்கு ஒரு பெண் கலெக்டராகிறது கூட சுலபமா இருக்கலாம்.ஆனா 
இத்தனை ஆம்பிளைங்களுக்கு நடுவிலே ஒரு பெண் தன்னோட சுயத்தை இழக்காம வாழறது எத்தனை கஷ்டம்னு இன்னிக்கு தெரிஞ்சுக்கிட்டேன்’’
என்பது போன்ற வசனங்களும் அந்தச்செயலுக்கு நியாயம் சேர்த்து வலுவூட்டுபவை


உயர்மட்டப்படிப்பாளிகளின் ஐ ஏ எஸ் கனவுகள் கலைந்து போவது போல. கபடிவீரனாக நீச்சல் வீரனாக உருப்பெறும் எளிய ஆசையும் கூட விளிம்புநிலை மக்களுக்குத் தொலைதூரக்கானலாகக் கரைந்து போவதையும் படம் தொடக்கத்திலேயே கோடி காட்டுகிறது.

கிரேக்க நாடகங்களின் கோரஸ் போலக் காட்டூர் கிராமவாசிகளில் ஓரிருவர் படம் நெடுக நையாண்டி விதைகளைத் தூவிக்கொண்டே வருகின்றனர்.. 

’’ஊரு தள்ளி இருக்கிறது ஓட்டு கேக்கும்போது மட்டும் தெரியாது’’
’இந்தியா வல்லரசாயிடிச்சுப்பா…என்னா மாதிரி ஒரு புதுக்கருவி கண்டு பிடிச்சிருக்காங்க பாருங்க குழந்தையை எடுக்க’’ [தாம்புக்கயிற்றைப்பார்த்துச்செய்யும் நக்கல்]
’சொட்டு மருந்து ஊத்தியே தண்ணி இல்லாத தாகத்தைத் தீத்துடுவாங்க’’

என்பது போன்ற அந்தக் குரல்கள், அரசாங்க இயந்திரத்தின் மீதும், அரசு அமைப்பின் மீதும் நம்பிக்கை இழந்து வரும் இன்றைய கிராமீய இந்தியாவின் குரல்களாக - ஆள்பவர்களுக்கு அவை அனுப்பும் எச்சரிக்கை மணிகளாகவே ஒலிக்கின்றன…

ஆட்சித் தலைவரே முன்னிருந்து காரியங்களை நடத்திக்கொண்டு போனாலும் கூடப் பல முனைகளிலும் அவர்கள் சந்திக்க நேரும் ஏமாற்றங்கள்…
’’இவங்க காப்பாத்த மாட்டாங்க ! நம்ம கொழந்தையை, நம்ம பொண்டாட்டியை நாமதான் காப்பாத்திக்கணும் ’’ என்ற அவநம்பிக்கையை ஏற்படுத்தி அமைப்பின் பிடியிலிருந்து அவர்களை விலகி ஓடச் செய்கிறது…

கிராமங்களின் இன்னொரு முகத்தையும் அறத்தில் பார்க்க முடிகிறது..
தண்ணீருக்கு பதிலாகக் குளிர் பானம் , காது டாக்டரிடம் போகக்காசில்லாத நிலையிலும் காமரா, ஒலிப்பதிவுக்கருவி வசதியுடன் ஸ்மார்ட் ஃபோன்..! இந்தியாவின் பின் தங்கிய கிராமம் கூட இன்று இப்படித்தான் இருக்கிறது…தேவையானது கிடைக்காமல் தேவையற்றவை  மலிவாய்க்குவியும் அபத்தங்கள்.. ஆழ்துளைக்கிணற்றில் விழுவோரை  மீட்க ரோபோ கண்டு பிடித்த முகம்தெரியாத மணிகண்டன் என்னும் இளைஞன் முன்னிறுத்தப்படாமலே - அவன் துணை பெறப்படாமலே படம் முடிந்து போவதும் இந்தச்செய்தியையே முன் வைக்கிறது… வாக்கு வங்கிகளாக மட்டுமே பயன்படுத்தப்படும் அவசியமற்ற மனித உயிர்களுக்குத் தேவைப்படும் அவசியமான ஆராய்ச்சிகள் என்றுமே கண்டுகொள்ளப்படுவதில்லை.

பின்னணியில் இருக்கும் காலிக்குடங்களை கவனமாய் மறைத்தபடி வறண்ட வயல்வெளியில் போலியோ சொட்டுமருந்து ஊற்றுவது  அரசுக்கு விளம்பரப்படமாகப்பயன்படுவது, துளைக்கிணற்றில் சிறுமி விழுந்த சம்பவம் தொலைக்காட்சி டி ஆர் பி ரேட்டிங்கைக் கூட்டும் பேசுபொருளாவது; …என்று படம் நெடுகிலும் பல தரப்புக்களின் மீதான விமரிசனம் வந்து கொண்டே இருக்கிறது,

ஆட்சித் தலைவரைத் தவிரப் பிற அனைவரையுமே எதிர்மறை மாதிரிகளாகக்  காட்டிக்கொண்டிருக்காமல் ’’விஷக்கிணறாக இருந்தால் கூட இறங்கி விடுவேன்’’ என்று சொல்லும் தீயணைப்பு அதிகாரியும், முழுநேரமும் இயங்கிக்கொண்டே இருக்கும் மருத்துவக்குழுவினரும் ஆறுதல் அளிப்பவர்கள்.

சந்திர மண்டலத்து இயல் கண்டு தெளிவோம் என்ற பாரதி, சந்தி தெருப்பெருக்கும் சாத்திரத்தையும் ஒதுக்காமல் கற்க வேண்டும் என்றே சொன்னான்…ஆனால் இன்றைய அரசியல் அதிகார பொருளியல் அவலங்களோ சமூகத்தின்  ஒருபக்கத்தை  வீங்க வைத்து இன்னொரு பக்கம்  அழுகி நாற்றமடிக்குமாறு  செய்து கொண்டிருக்கின்றன. படத்தின் கதை நிகழும் காலம் [ஒரே நாள்], களம் [ஆழ்துளைக்கிணறு சார்ந்த பொட்டல் வெளி] என்ற எல்லைகள் மிக மிகக்குறுகியவை என்றாலும் கூடப் பல வகையான பரிமாணங்களோடு இவற்றைக் காட்ட முன் வந்ததற்காகவே அறத்தையும் இயக்குநர் கோபிநயினார் மற்றும் அவரது குழுவினரையும்  பாராட்டவேண்டும்.

மிகை நடிப்பாக ஆகி விடாமல் உணர்ச்சியைத் தன்வசப்படுத்தும் அதிகாரியாக வாழ்ந்திருக்கும் நயன்தாரா படத்தின் தயாரிப்பாளரும் கூட என்பது மகிழ்ச்சிக்குரிய செய்தி.. காட்டூர் கிராமத்தில் 2 மணி நேரம் உலவி வந்தது போன்ற உணர்வைத் தோற்றுவித்து விடும் நடிகர்கள், காமராக்காரர்கள் என அனைவரின் ஒருமித்த பங்களிப்பும் சேர்ந்ததாகவே அறம் உருப்பெற்றிருக்கிறது.

அண்மையில் மதுரை சென்றுகொண்டிருந்தபோது ஒரு வீடியோ கோச்சில் பாகுபலி படம் போட்டார்கள். ‘’ எத்தனை தரம் பாத்தாதான் என்ன,,அந்தப்படத்தையே  போடுங்க, போடுங்க’’ என்று அதற்கு எழுந்த ஆரவாரக் குரல்கள் என்னை மனம் சலிக்க வைத்தன.

எத்தனை நந்தி விருதுகளையும் தேசிய விருதுகளையும் அள்ளிக்குவித்தாலும் இந்தியாவின் உண்மையான முகமாக பாகுபலியை நிறுத்தி விட முடியுமா என்ன?

ஏழ்மை இந்தியாவைக்காட்டி நாட்டை ஏளனம் செய்வதான வசைகள் பதேர்பாஞ்சாலி காலத்திலிருந்து திரைமேதை சத்யஜித் ரே மீது எழுந்தவைதான்…

அறம் மீதும் அத்தகைய கணைகள் பாயக்கூடும்.

மாயாஜால கிராஃபிக்ஸ் வழி செப்பிடு வித்தை காட்டும் பாகுபலிகளா?
கொஞ்சம் பிரச்சார நெடி வீசினாலும் செவிட்டில் அறைவது போலக் கசப்பான நிஜத்தைப்பேசும் அறம் போன்ற படங்களா.?
நாம் முடிவு செய்ய வேண்டிய நேரம் இது. 
  

2 கருத்துகள் :

லோகமாதேவி சொன்னது…

அம்மா அருமையான விமர்சனம், படத்தின் சாராம்சம் தெளிவாக புரிந்த பின்னர் இன்னொரு முறை பார்க்கையில் மேலும் தெளிவு கிடைக்கும். நன்றி

devarajvittalanbooks சொன்னது…

மிக ஆழமான அழுத்தமான பதிவு .

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....