துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

8.11.17

எளிமையின் மேலாண்மை




ளிமையான மனிதராக வாழ்ந்து அடித்தட்டு மக்களின் குரலை வலிமையாக,உண்மையாக ஒலித்தவர்களில் மேலாண்மை பொன்னுசாமி அவர்கள் மறக்க முடியாதவர்.

துரை நாட்களில் தொடங்கிய அவரோடான  அறிமுகம்  தில்லியில் சாகித்திய அகாதமி பரிசு பெற அவர் வந்தது முதல் நீண்டு சென்றிருப்பதை அவர் காலமான இத் தருணத்தில் நினைவு கூர்கிறேன்.

நான் பணிபுரிந்த பாத்திமாக் கல்லூரிக்கு எப்போது அழைத்தாலும்- அது முத்தமிழ் விழாவோ..சிறிய குழுவுக்கு இடையிலான கலந்துரையாடலோ - எதுவானபோதும் உடன் சம்மதம் அளிப்பது மட்டுமன்றி போக்குவரத்து வசதி செய்து தந்தால்தான் வருவேன் என்றெல்லாம் பிகு செய்து கொண்டிருக்காமல் பொதுப் பேருந்தில் வந்திறங்கிக் கையில் பிடித்திருக்கும் மஞ்சள் பையுடன் முகப்பு  வாயிலில் இருந்து  அவர்நடந்து வரும் காட்சி என் கண்ணுக்குள்  விரிகிறது.

பொன்னுச்சாமி அவர்களின் நாவல்களை விடவும் நறுக்குத் தெறித்தாற்போன்ற   சொற்சிக்கனத்தோடு எழுதப்பட்டிருக்கும் அவரது பல  சிறுகதைகளும், மதுரை வட்டார கிராமீய மணம் கமழும் மொழிநடையை அவற்றில் அவர் கையாண்டிருக்கும் பாணியுமே என்னை வசீகரப்படுத்தியவை.

என் எழுத்துக்கள் வெளிவரத் தொடங்கி நான் வளர்ந்து கொண்டிருந்த காலகட்டத்தில் செம்மலர் இதழின் ஆசிரியராகவும் இருந்த அவர் என் சிறுகதைகள் சிலவற்றை அதிலும் வெளியிட்டிருக்கிறார்.
புதிய பிரவேசங்கள் என்ற எனது இரண்டாவது சிறுகதைத் தொகுப்புக்கு அணிந்துரை எழுதித் தருமாறு கேட்டபோது அதைத் தனக்குத் தரப்பட்ட கௌரவம் என்றே குறிப்பிட்டு எனக்குக் கடிதம் எழுதினாலும்.. நட்பு வேறு, இலக்கிய விமரிசனம் வேறு என்று பிரித்துப்பார்க்கும் தெளிவு கொண்ட அவர், வெறும் முகத்துதியாக அமைத்து விடாமல் கறாரான விமரிசனப்பார்வையோடு கூடிய ஒரு அணிந்துரையையே எனக்கு எழுதி அளித்தார். நான் விரும்பியதும் அதுவே.

பின்னாட்களில்  பெண் எழுத்தைப்பற்றிக் கூட்டங்களில் பேசிய சில சந்தர்ப்பங்களில் அதற்கு உதாரணங்களாக என்  தடை ஓட்டங்கள்,  விட்டு விடுதலையாகி ஆகிய சிறுகதைகளை   எடுத்துக்காட்டி அவர் பேசியிருக்கிறர் என்பதை சில நண்பர்கள் வாயிலாகக் கேள்விப்பட்டபோது, அவர் நினைவில் பதியும் வகையில் என் கதைகள் சில இருந்திருப்பதை அறிந்து மகிழ்ந்தேன்.

ஜெயகாந்தனின் 60 ஆம் வயது நிறைவுக்கான மணிவிழா  மதுரையில் நடந்தபோது, மதுரை மீனாட்சி புத்தக நிலையம் ஏற்பாடு செய்த அந்த நிகழ்ச்சியில்   நாங்கள் இருவரும் ஒன்றாய்க்கலந்து கொண்டு அதில் உரையாற்றியது ., முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் முதன்மையானவராக இருந்த அவர் எங்கள் ஆசிரியர் இயக்கமான மூட்டா நிகழ்வுகளிலும் பங்கு கொண்டது என்று அவர் சார்ந்த பல நிகழ்வுகள் நினைவுக்குள் வந்து போய்க்கொண்டிருக்கின்றன.

 தன் மின்சாரப்பூ சிறுகதைத் தொகுப்புக்காக 2007ஆம் ஆண்டுக்கான  சாகித்திய அகாதமி பரிசு பெற அவர் தில்லி வந்திருந்தபோது அப்போது அங்கு வசித்து வந்த  நான், தில்லி தமிழ்ச்சங்கம் நடத்திய பாராட்டு விழாவில் கலந்து கொண்டு அந்த நூலைப்பற்றிப் பேசும் வாய்ப்பைப்பெற்றேன்...
அதுவே அவரை நான் பார்க்கும் இறுதிமுறையாக இருக்கக்கூடும் என்பதை அப்போது நான் அறிந்திருக்கவில்லை...

மதுரை மற்றும்...மதுரை சார்ந்த எளிய உழைக்கும் மக்களின் வாழ்வை எழுத்துச் சித்திரங்களாக்கியிருக்கும் எளிய பண்பாளரான திரு மேலாண்மை பொன்னுசாமி அவற்றின் வழி என்றும் வாழ்வார்.
அவருக்கு என் அஞ்சலி.

வடக்கு வாசல் இதழில் வெளிவந்த அவரது தொகுப்பு குறித்த
என்  கட்டுரை கீழே  மறு வெளியீடாக;


மேலாண்மை பொன்னுச்சாமியின் 'மின்சாரப் பூ'


உண்மையான மன எழுச்சியுடன் - தான் உணர்ந்த சத்தியமான தரிசனங்களை - சமூகத்திற்கு ஆற்றும் தார்மீகக் கடமையாக, அறச் சீற்றத்துடன் முன்வைக்கும் படைப்புக்களைக் காலம் கணக்கிலெடுத்துக் கொள்ளத் தவறுவதில்லை என்பது, மேலாண்மை பொன்னுச்சாமிக்கு அளிக்கப்பட்டுள்ள சாகித்திய அகாதமி விருதின் வழி நிரூபணமாகியிருக்கிறது.
விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த மேலாண்மறைநாடு என்னும் சிற்றூரில் வசித்தபடி, ஒரு புன்செய்க்காட்டு விவசாயியாக - சிறுகடை வியாபாரியாக வாழ்வை நகர்த்திக் கொண்டிருக்கும் திரு.பொன்னுச்சாமி, ஐந்தாம் வகுப்பிற்கு மேல் தாண்டியதில்லை என்பது, பலருக்கும் ஆச்சரியமளிக்கும் ஒரு செய்தியாக இருக்கலாம்; ஆனால், ஆத்மாவின் ஆழங்களிலிருந்து தானாய் ஊற்றெடுத்துக் காட்டாறாய்ப் பெருக்கெடுக்கும் படைப்புக்கலை, படிப்போடு தொடர்பு கொண்டதில்லை என்பது ஏற்கனவே பல படைப்பாளிகளின் விஷயத்திலும் உறுதியாக்கப்பட்டிருக்கும் ஒன்றுதான்.
தான் சார்ந்துள்ள இடதுசாரி (முற்போக்கு இலக்கிய) நிலைப்பாட்டிற்கு ஏற்றகோட்பாடுகளைத் தான் அறிந்து பழகியுள்ள எளிமையான வாழ்க்கைக் களத்தோடு பொருத்தி, சிறுகதை, நாவல் இலக்கிய வடிவங்களாக்கித் தமிழுலகிற்கு அளித்திருப்பவர் மேலாண்மை பொன்னுச்சாமி.
தான் மிக நன்றாக அறிந்து ஆழங்கால் பட்ட ஒன்றை, தனது மூச்சு முழுவதும் நிரம்பி உட்கலந்து போன ஒன்றை - ஒரு படைப்பாளி, தன் படைப்புக்களில் முன் வைக்கும்போது, அங்கே செயற்கையான - போலித்தனமான எழுத்து ஜாலங்களும், சாகசங்களும் மறைந்து, யதார்த்தமான நிஜம் மட்டுமே மேலோங்கி நிற்பதைக் காண முடியும். இவரது எழுத்துக்களில் நாம் உணர முடிவதும் அந்த யதார்த்தத்தையும், பாசாங்குகளற்ற உண்மையான வாழ்க்கையையும் மட்டும்தான்!
பொதுவாகத் தொடர்ந்த இலக்கியப் பங்களிப்பையும், இலக்கியக் களத்தில் பல்லாண்டுக் காலம் இடையறாது இயங்கி வருவதையும் விருதுகள் கருத்தில் கொண்டிருந்தாலும் கூட - ஒரு எழுத்தாளரின் குறிப்பிட்ட ஒரு படைப்பே விருதிற்குரியதாகத் தேர்வு செய்யப்படுகிறது. அவ்வகையில் இவரது விருது பெற்றபடைப்பாகிய 'மின்சாரப் பூ', ஒன்பது சிறுகதைகளையும், ஒரு குறுநாவலளவுக்கு நீண்டு செல்லும் பெரியதொரு சிறுகதையையும் உள்ளடக்கமாகக் கொண்டிருக்கிறது; அச்சிறுகதையின் தலைப்பே நூலின் தலைப்பாகவும் அமைந்திருக்கிறது.
இத்தொகுப்பிலுள்ள கதைகளில் இடம் பெறும் மையப் பாத்திரங்கள் - பெரும்பாலும் வறுமைக் கோட்டுக்குக் கீழ்ப்பட்ட நிலையில் வாழும் அடித்தட்டு மக்கள்; விவசாயிகள் அல்லது விவசாயக் கூலிகள். வறண்டு போன நிலப்பரப்பில் விவசாயம் கடினமாய்ப் போனதாலோ அல்லது, தங்கள் நிலங்களை ஆதிக்க வர்க்கத்தினரிடம் பறிகொடுத்து விட்டதாலோ மாற்றுத் தொழிலைச் செய்யுமாறு நிர்ப்பந்திக்கப்பட்ட ஒரு சிலரும் இவரது கதைகளில் உண்டு. வறுமையே வாழ்வாக அமைந்தபோதும், வாழ்வியல் அறங்களை முற்றாகத் தொலைத்து விடாதவர்கள் இவர்கள் என்பதையே பெரும்பான்மையான இவரது கதைகள் மையச் செய்தியாக முன்னிறுத்துகின்றன.
இத்தொகுப்பின் மிகப் பெரிய கதையாகிய 'மின்சாரப் பூ'வின் முதன்மைப் பாத்திரம் செந்தட்டி, சாதி அடுக்கில், தன்னை விடச் சற்று உயர்ந்த நிலையிலிருக்கும் வீரபாண்டியுடன் நெருங்கிய நட்புக் கொண்டவன். செந்தட்டியின் தந்தை மின்சாரம் தாக்கி இறந்து போகப் படிக்க வழியின்றி ஆடுமேய்க்கும் தொழிலைச் செய்துவரும் அவனுடன், ஒரு கட்டத்தில் வீரபாண்டியும் இணைந்து கொள்கிறான். வயதில் மூத்தவர்கள், சாதிப் பிரிவினைகளை அழுத்தமாக முன்வைத்தபோதும் சிறுவனான செந்தட்டிக்குள் அது அதிர்ச்சிகரமான உண்மைகளை உட்செலுத்திய போதும் - அவற்றாலெல்லாம் பாதிக்கப்படாத வகையில் அவர்களின் நட்புத் தொடர்கிறது. ஆனாலும் தன் சாதியைச் சேர்ந்த எளிய பெண்ணொருத்தியின் மீது இழைக்கப்பட்ட பாலியல் வன்முறைக்குத் தனது நண்பனே காரணமாக இருந்திருக்கக் கூடுமோ என்று அவனுள் ஏற்படும் ஐயம், நண்பனுக்காக விரிக்கப்படும் மின்சாரப் பொறி பற்றி அவனிடம் எச்சரிக்க விடாதபடி தடுத்து விடுகிறது. அவனது தந்தையைப் போலவே நண்பனும் மின்சாரப் பூவுக்கு இரையான பிறகுதான் அந்தப் பெண்ணின் வாழ்க்கைச் சீர்குலைவுக்கு நண்பன் காரணமில்லை என்பது அவனுக்குத் தெரிய வருகிறது. குற்ற உணர்வின் குமைச்சலால் மனநிலைப் பிறழ்வுக்கு ஆளாகி விடுகிறான் அவன். சாதிமுரண், வர்க்க முரண், பெண்மீதான சுரண்டல் ஆகிய அனைத்தையும் ஒருங்கிணைத்து முன்வைக்கிறது இப்படைப்பு.
புறஉலகின் பொருளாதாரச் சிக்கல்களுக்கும், உள்மனச்சாட்சியின் உறுத்தலுக்கும் இடையே சிக்கித் தவிக்கும் சாமானிய மனிதனின் போராட்டம் 'நீரில்லா மீன்' என்றகதையில் எடுத்துரைக்கப்பட்டிருக்கிறது. மண்ணைப் பொன்னாக்கி உலகத்திற்கே சோறுபோடும் ஒரு சம்சாரி (விவசாயி) - மண்ணைத் தவிர வேறு ஒரு மண்ணும் தெரியாத ஒரு சம்சாரி, ஆட்டுச் சந்தைக்கு வந்து விட்டு ஆடுகளை விற்க வழிதெரியாமல் மலைத்து நிற்கிறான். வியாபார சூட்சுமம் தெரியாமல் திகைத்து நிற்கும் அவனுக்கு - ஒரு காலத்தில் சம்சாரியாக இருந்துவிட்டுப் பிறகு மாற்றுத் தொழிலான தரகுத் தொழிலைத் தேர்ந்து கொண்டவன் உதவி செய்கிறான். அந்த உதவிக்குப் பதிலாக அவனுக்கு நானூறு ரூபாய் லாபமாகக் கிடைத்தாலும் - 'விதையில்லாமல் நடந்த அந்த விளைச்சல்', 'வலையில்லாமல் வந்தமீன்' அவன் மனதில் முள்ளாய் உறுத்துகிறது. ஆனாலும் புறஉலகின் யதார்த்த வாழ்க்கைப் போராட்டம் - மூர்க்கமான அதன் தாக்கம், அவளது உள்ளக் காயத்தைத் தழும்பாக்கி விடுவதை அற்புதமாகப் பதிவு செய்கிறார் படைப்பாளி.
நல்ல சிறுகதை என்பது, தேர்ந்த முரணை உள்ளடக்கியிருப்பது. இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள 'சிதைவுலகம்', அத்தகைய முரணான சூழலொன்றை முன்வைக்கிறது. தன் மனைவியின் சகோதரியிடம் பணத்தைக் கடனாக வாங்கிக் கொண்டு சைக்கிளில் வரும் நொடித்துப்போன ஒரு விவசாயி, சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருக்கும் போது, போதையில் தன்னிலை இழந்து கிடக்கும் ஒருவனைக் காப்பாற்றிக் கரை சேர்க்கிறான். மறுநாள் இவனைத் தேடி வரும் அந்த மனிதன், நன்றி சொல்வதற்கு மாறாகத் தன் சட்டைப் பையிலிருந்த பணத்தை அவன்தான் எடுத்திருக்கக் கூடுமென்று பழி சுமத்துகிறான். "இரக்கப்பட்டு நெருங்கியவனுக்கு, எடுத்துச் சுமந்தவனுக்கு இந்தத் தண்டனையா...'' என்று அந்தப் பாத்திரம் ஒரு கணம் நினைத்தாலும் கூட - ஆசிரியர், தன் கதைகளில் தொடர்ந்து பரிந்துரைப்பது, மனித நேயத்தையும், இரக்கத்தையும் மட்டும்தான்!
சாதி, வர்க்க பேதங்களற்ற சமூக அமைப்பும், மானுட அன்பில் தோய்ந்த வாழ்வுமே அவர் வலியுறுத்த எண்ணுபவை.
முற்போக்கு இலக்கியத்தின் முகங்களில் ஒருவராக அறியப்படும் மேலாண்மை பொன்னுச்சாமியின் எழுத்துக்கள் அவை சொல்லும் செய்திகளைச் சற்று உரத்துச் சொல்லுவதாக விமரிசிக்கப்பட்டபோதும், அவை மனிதகுலத்திற்கு அடிப்படைத் தேவைகளான அன்பையும், அறத்தையும், தனிமனித ஒழுங்கையும், சமத்துவ சமூகத்தையும் எடுத்துரைக்கும் பயனுள்ள செய்திகள். சமூக ஒழுங்கைக் குலைத்துப் போடும் நச்சு எழுத்துக்களாக அவை ஒருபோதும் இருந்ததில்லை.
"நாம பேசறபேச்சும் துணிமணி உடுத்தியிருக்கணும்டா'' என்கிறது இத்தொகுப்பின் கதையொன்றில் இடம்பெறும் பாத்திரம். அந்தக் கண்ணியம் இந்நூலிலுள்ள கதைகள் அனைத்திலும் விரவிக் கிடக்கிறது.

'மின்சாரப் பூ'
மேலாண்மை பொன்னுச்சாமி
கங்கை புத்தக நிலையம்
13, தீனதயாளு தெரு
தியாகராயநகர், சென்னை-600 017.
விலை ரூ.70/-
நன்றி: 'வடக்கு வாசல்'-மார்ச்'09


கருத்துகள் இல்லை :

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....