அன்புள்ள வலை வாசகர்களுக்கு
வணக்கம்.ஐரோப்பியப் பயணத்தால் ஏற்பட்ட நீண்ட நாள் இடைவெளிக்குப்பின் இணைய அன்பர்களை எழுத்து வழி சந்திப்பதில் மகிழ்கிறேன்.
18நாட்கள் பயணம் முடித்து 25.08.09 புதுதில்லி திரும்பினேன்.பிறகு கடந்த ஒரு வாரமாக இணைய இணைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாகக் கணினியைத் தொட முடியாத நிலை!
இன்று முதல்...ஆராத ஆர்வமுடன் வலையை மீண்டும் தொடர்கிறேன்.
இதுவரையிலும் ......
வரலாறுகளிலும்....இலக்கியங்களிலும் -நூல்கள் வழியாக மட்டுமே எனக்கு அறிமுகமாகியிருந்த இடங்களை-
என் கற்பனையில் மட்டுமே நான் கண்டு வந்த இடங்களை-
ரோமிலும் பாரீசிலும் சிதைவுண்ட எச்சங்களாகவும் ,நிலைபெற்ற கட்டிடங்களாகவும் விரவிக் கிடக்கும் வரலாற்றுச் சின்னங்களை,
பனி கொட்டிக் கிடக்கும் சுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸ் மலைச் சிகரங்களை,
மிதக்கும் வெனிஸ் நகரத்தை,
பைசாவின் சாய்ந்த கோபுரத்தை,
இரும்பின் உரத்தோடு மட்டுமே உயர்ந்து நிற்கும் ஈபில் கோபுரத்தை,
ஹாலந்தின் காற்றாலைகளை...
மார்பிள் படிமங்கள் உறைந்து கிடக்கும் இத்தாலி மலைகளை
எழில் கொஞ்சும் மைக்கேல் ஏஞ்சலோவின் சிற்பங்களை...,
லியனோர் டாடாவின்சியின் சித்திரநுணுக்கங்களை,
மிகச் சின்னதொரு பூமியை வைத்துக் கொண்டு நம்மை ஆட்டிப் படைத்த பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தின் தலைநகர் லண்டனை
நிஜமாய்...நனவின் நிகழ்வாய்க் காணக் கிடைத்த வாய்ப்பு ....,எனக்கு நானே தேடிக் கொண்டதுதான் என்றபோதும் வாழ்வில் எனக்குக் கிடைத்த பெறற்கரிய பெரும்பேறு.
பயணத் துளிகளைப் பகிரத் தொடங்குமுன்
இந்தப் பயணம் வெறுமே ஒரு பொழுதுபோக்குச் சுற்றுலாவாகப் போய்விடாமல் - நான் கற்ற பலவற்றை நினைவு கூரும் வகையிலும்,பல புதிய விஷயங்களை எனக்குப் படிப்பித்துத் தரும் முறையிலும் அமைந்ததற்கு முதன்மையான காரணமாக - இறை அருளால் எனக்கு வாய்த்த ‘ஷாலோம் டூர்ஸ் ‘ என்ற மிகச் சிறப்பான பயண அமைப்புக்கு நான் நன்றி கூறியாக வேண்டும்.
இது வெறும் முகத்துதிக்காகக் கூறப்படும் நன்றி அறிவிப்பு அல்ல.இதைப் படிப்பவரில் சிலராவது இதனால் பயன் பெற வேண்டும் என்ற நோக்கத்துடன்’யான் பெற்ற இன்ப’த்தைப் பகிரும் சிறு முயற்சியே இது.
இன்றைய நவீன யுகத்தில் - வணிக நோக்குடன் புற்றீசல் போல மலிந்து கிடக்கும் பல சுற்றுலா நிறுவனங்களிலிருந்து இந்த நிறுவனம் பெரிதும் மாறுபட்டிருப்பதைக் கடந்த பல நாட்களில் நான் அனுபவ பூர்வமாக உணர்ந்து கொண்டேன்.
மிகக் கச்சிதமாக வடிவமைக்கப்பட்ட பயணத்திட்டம்(18 நாட்களுக்கும்)-
அதில் கொஞ்சம் கூடப் பிசிறு இல்லாத வகையில்-ஒரு சின்ன இடத்தைக் கூடத் தவறவிட்டு விடாமல்(சொல்லப் போனால் இன்னும் கூடுதலான இடங்களையும் கூட)காட்டும் முனைப்பு-
செல்லும் இடங்களைப் பற்றிய விவரங்களனைத்தையும்(சரித்திர,பூகோள,அரசியல் மற்றும் பிற சிறப்புக்கள்) ஆங்கிலத்திலும் தமிழிலும் மாறி மாறி மிக அருமையாக விளக்கும் பாங்கு-
(நாம் ஏற்கனவே நிறையத் தயாரித்துக் குறிப்பு எடுத்துக் கொண்டு போனாலும் கூட நமக்குத் தெரியாத ஏதாவது ஒரு விஷயம் அங்கே- அவர்களின் விளக்கத்தில் ஒளிந்து கொண்டுதான் இருந்தது)-
உணவுக்காக அலைமோதி அலைக்கழிவதில்(குறிப்பாக சைவ உணவை மட்டுமே மிக உறுதியாகக் கடைப் பிடிக்கும் என் போன்றவர்களுக்கு இது மிகவும் முக்கியம்) நேரத்தைத் தொலைத்துவிட்டு இடங்களைத் தவற விட்டுவிடாதபடி -
(அப்படிப்பட்ட குழுக்கள் சிலவற்றையும் நாங்கள் எதிர்பட நேர்ந்ததால் எங்கள் குழுவின் சிறப்பு மிகத் தெளிவாகப் புரிந்தது)
குறிப்பிட்ட இடத்திற்கு நாம் சென்று சேரும்பொழுதே சுடச்சுடப் பரிமாறப்படும் இந்திய உணவுகள்(ஐரோப்பாவில் நாங்கள் சென்ற சொகுசுப்பேருந்தைத் தொடர்ந்து சமையலறை கொண்ட வாகனம் ஒன்றும் எங்களுடனே பயணித்தது)-
அனைத்துக்கும் மேலாக அத்தனை பயணிகளின் (25 பேர் எங்கள் குழுவில் இருந்தோம்)
நலனிலும் தனிப்பட்ட அக்கறை காட்டிக் குன்றாத ஆர்வத்துடனும் இன் முகத்துடனும் - அதே வேளையில் கட்டுப்பாட்டுடனும் எங்களை வழிநடத்திய ஜான் செல்வின் என்ற அற்புதமான மனிதர்(நிறுவன மேலாளர்)-பல முறை பல குழுக்களோடு சென்றவர்தான் என்றாலும் ஏதோ அப்போதுதான் முதல் முறையாக அந்த இடத்தைப் பார்ப்பவர் போன்ற ஆர்வத்தை ஆத்மார்த்தமாக வெளிப்படுத்திப் பயணத்தை உற்சாகமாக..விறுவிறுப்பாக ஆக்கியவரும் ,அதன் வழி பயண ஆர்வம் துளிக் கூடக் குறைந்து போய்விடாமல் பார்த்துக் கொண்டவரும் அவரே.
என் பலநாள் கனவைப் பயனுள்ள வகையில் மெய்ப்படச் செய்து.....
அந்தப் பதினெட்டு நாட்களை... என் வாழ் நாளில் என்றென்றும் மறக்க முடியாத கல்வெட்டு நாட்களாக்கிய ’ஷாலோ’முக்கு ஒரு சலாம் !
என் பயணம் குறித்து வலை வழி அறிந்து எனக்கு வாழ்த்துக் கூறி வழியனுப்பிய அன்பர்கள் அனைவருக்கும் என் நன்றியை உரித்தாக்குகிறேன்.
விரைவில் ஐரோப்பா அனுபவங்கள் சிறிது சிறிதாக வலையில் மலரும்.
பி.கு:நான் சென்ற பயண நிறுவனத்தைத் தொடர்பு கொள்ள விரும்புபவர்களுக்கு உதவியாக இருக்கும் வகையில் அதன் முகவரியை இங்கே குறிப்பிட்டிருக்கிறேன்.
Mr.John Selwin,
Shalom Tours and Travels,91,Arunachalam Street,Chindadripet,
Chennai-600002
ph:044-28453655,044-28453764,04428457671
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு
(
Atom
)
1 கருத்து :
Great! Greetings from Norway!
http://worldtamiltravellersforum.blogspot.com
கருத்துரையிடுக