18.9.09
காணாமல் போன மோனோலிஸா
லியனார்டோடாவின்ஸி என்ற மாபெரும் கலைஞனின்
மிகச் சிறப்பான நுணுக்கமான ஓவியங்கள் பல இருந்தபோதும் அவருக்குப் பரவலான ஜனரஞ்சகப் புகழைத் தேடித் தந்த ஓவியம் மோனோலிஸா.
இத்தாலியின் மிலான் நகரிலுள்ள டாவின்சியின் சிலை
(கட்டுரையாளர் எடுத்த புகைப்படம்)
பரிமாண ஓவியமாகவும்(diamensional painting),புருவங்கள் அற்ற முகத்துடனும் அந்த ஓவியத்தை உருவாக்கினார் டாவின்ஸி. எந்தத் திசையிலிருந்து பார்த்தாலும் அதிலுள்ள முகம் நம்மையே பார்த்துக் கொண்டிருப்பதைப்போன்ற மனக் காட்சியை ஊட்டக்கூடியது மோனோலிஸா ஓவியம்.
தற்பொழுது பிரான்ஸ் நாட்டில்,பாரீஸ்நகரிலுள்ள உலகப்புகழ்மிக்கதும்-உலகின் ஆகப்பெரிய அருங்காட்சியகங்களில் ஒன்றுமான லூவர் (பிரெஞ்சு மொழியில் லூவ் என்று மட்டுமே குறிப்பிடுகிறார்கள்)அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள இந்த ஓவியத்தைப்பற்றிய சுவாரசியமான கதை ஒன்றை,எனது ஐரோப்பியப்பயணத்தில் கேள்விப்பட நேர்ந்தது.
லூவர் அருங்காட்சியகம்
லூவர் அருங்காட்சியகத்துக்கு முன்பாகக் கட்டுரையாளர்
லூவர் அருங்காட்சியகம்,கலைகளின் பெட்டகம்.அதன் ஒவ்வொரு கூடத்திலும்(ஹால்),சிலைகளாகவும் சித்திரங்களாகவும் மேற்கூரை (விதான)வேலைப்பாடுகளாகவும் கொட்டிக்கிடக்கும்
லூவரின் மேற்கூரைக்காட்சி
நுண்கலை வேலைப்பாடுகளை வியந்து ரசிக்க..,கண்கொண்டவரை அந்த அழகுகளை அள்ளிப் பருக..,அவற்றின் பின்னணியிலுள்ள வரலாற்றுச் சம்பவங்களை அசைபோட ஒரு ஆயுள் போதாது.அங்குள்ள ஒவ்வொரு சிலைக்கு முன்பும் ,ஓவியத்திற்கு முன்னாலும் பலமணி நேரங்களைச் செலவழித்தால் மட்டுமே அவற்றை உள்ளபடி புரிந்து கொள்வதென்பது ஓரளவுக்காவது சாத்தியம் என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.
ஆனால் அந்த அருங்காட்சியகம் முழுவதையும் பார்க்க எங்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த மொத்த நேரமே இரண்டு மணிநேரம்தான்.
அதற்குள் மோனோலிஸாவைப் பார்க்க எல்லோரும் ஓட....நான் ,முதற்கூடத்திலுள்ள சிற்பங்களையும்...சிதைந்த கல் வடிவங்களையும்,பிற ஓவியங்களையும் சற்று நேரம் பார்த்துவிட்டு நிதானமாக மோனோலிஸாவிடம் போய்ச் சேர்ந்தேன்.அதிகம் பேசப்படுவதனாலேயே ஒன்றின் மீது ஈர்ப்பு ஏற்படுவதைப்போல - எதிர்பார்ப்புக் கூடுதலாவதாவதாலேயே ஏமாற்றமும் சலிப்பும் கூட ஏற்பட்டுவிடுகிறது.தாஜ்மஹாலை முதன்முறை பார்த்தபோது எனக்கு ஏற்பட்ட அவ்வாறான உணர்வுதான்,மோனோலிஸா விஷயத்திலும் நேர்ந்தது.
மிகப் பெரிய-விஸ்தாரமான ஒரு அறையில் ஒரு சுவர் நடுவே தனியாகக் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் மோனோலிஸா ஓவியம், பிரேமுக்குள் வைக்கப்பட்டிருக்கும் மிகச் சிறிய படம் போலத்தான் இருந்தது.அந்தச் சித்திரத்தை அடிக்கடி புத்தகங்களில் பார்த்துப் பழகிய கண்களுக்குப் புதிதாக உறைக்கும்படியான தனித்ததொரு புதுமை எனக் குறிப்பிட்டுச் சொல்ல எதுவுமில்லை.அப்படி எதுவும் இருந்தாலும் கூட-அதை அணுகிப் பார்க்க இயலாதபடி- அதன் முன்னால் நெருக்கமாக எவரும் செல்ல முடியாதபடி-அதனுடன் நெருங்கிப் புகைப்படம் எடுத்துக் கொள்ள முடியாதபடி , ஐம்பதடி தூரத்தில் கயிற்று வேலி கட்டப்பட்டு அதற்கு அப்பாலிருந்துதான் அதைப் பார்க்க முடியும் என்ற வகையில் பாதுகாப்பு செய்யப்பட்டிருந்தது.
காட்சியகக்கூடங்களில் இருந்த இன்னும் பல உன்னதமான படைப்புக்களுக்குக் கூட இல்லாத பாதுகாப்பு அதற்கு மட்டும் ஏன் என்ற புதிருக்கான விடை...அந்தக் காட்சியகத்தைச் சுற்றிப்பார்த்துவிட்டுப்பேருந்துக்குள் ஏறிய பிறகே எங்களுக்குக் கிடைத்தது.
பேருந்தில் ஏறி அமர்ந்ததும்,
’’என்ன மோனோலிஸாவைப் பார்த்து முடித்து விட்டீர்களா?’’
என்று ஏதோ ஜன்ம சாபல்யம் பெற்றுவிட்டீர்களா என்பதைப் போலக் கேட்டார் எங்கள் ஐரோப்பிய வழிகாட்டி.ஆனாலும் கூட அவர் முகத்திலிருந்த குறும்புச் சிரிப்பு , வேறு ஏதோ ஒன்றை உணர்த்த முயல்வதைப் புரிந்து கொள்ள முடிந்தது.
‘’மோனோலிஸா ஓவியத்தை ஒருவன் திருடிவிட்டான் தெரியுமா?’’
என்று அடுத்தாற்போல நிதானமாக ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார் அவர்.
‘’இத்தனை ஆர்வத்துடன் நீங்கள் போய்க் கொண்டிருக்கும்போது அதைப் பற்றி முதலிலேயே சொல்லி உங்கள் ஆர்வத்தைக் கெடுக்க நான் விரும்பவில்லை’’
என்ற பீடிகையோடு தன் கதையைத் தொடங்கினார் அவர்.
இத்தாலி நாட்டிலுள்ள பிளாரன்ஸ் நகரத்தைச் சேர்ந்தவர் லியனார்டோடாவின்ஸி.அதே நகரத்தைச் சேர்ந்த ஒருமனிதன், லூவர் அருங்காட்சியகத்தில் பாதுகாவலனாகப் பணி புரிந்து வந்தான்.மோனோலிஸா ஓவியத்தைத் திருடிக் கொண்டுபோகத் திட்டமிட்ட அவன், அங்கே வேலை செய்யும் இன்னொரு மின் பணியாளையும் தனக்குத் துணையாகக் கூட்டுச் சேர்த்துக் கொண்டான்.மியூசியத்தை இறுதியாக அடைத்துவிட்டுப் போக வேண்டிய பொறுப்பிலிருந்த அந்தப் பாதுகாவலன்,அதை அடைப்பதற்கு முன்பாக மோனோலிஸா ஓவியத்தைத் தன் கூட்டாளியிடம் கொடுத்து அங்கிருந்த கழிவறை ஒன்ற்றில் அவனை ஓவியத்துடன் பதுங்கிக்கொள்ளச் செய்துவிட்டு ‘எல்லோரும் வெளியே போய் விட்டார்கள்’என்று அறிவித்து விட்டுக் கதவை மூடி விட்டான்.
தன் மேலங்கிக்குள் ஓவியத்தைப் பதுக்கிக் கொண்ட கூட்டாளி, மறு நாள் காட்சியகம் திறக்கப்பட்டபோது மக்களோடு மக்களாகக் கலந்து ஓவியத்தோடு வெளியேறி விட்டான்.
பிற்கு மோனோலிஸாவை நான்கு பிரதிகள் எடுத்த பாதுகாவலன்(ஒளியச்சு போன்றவை இல்லாத காலகட்டத்தில் அவன் அவற்றைப் பிரதி எடுத்திருப்பது ஆச்சரியமானதுதான்), மோனோலிஸா ஓவியம் தங்களிடம் இருக்கிறதென்பதையே ஒரு பெரிய பெருமையாக- தங்கள் செல்வாக்கிற்கும்,அந்தஸ்திற்கும் அறிகுறியாகக் கருதும் மிகப்பெரும் பணக்காரர்களிடம் விற்று இரண்டாண்டுக் காலத்துக்குள் பெருந்தொகை ஈட்டிக் கொண்டான்.
இதற்கிடையே லூவரிலிருந்து மோனோலிஸா காணாமல் போனது பற்றிய அறிவிப்பு தொடர்ந்து கொண்டே இருந்தது.
பாதுகாவலன், மோனோலிஸாவின் பிரதிகளை விற்றுக் கணிசமான பணத்தைச் சம்பாதித்துவிட்டபோதும் அசல் மோனோலிஸா அவன் வசம்தான் இருந்தாள்.
ஒரு கட்டத்தில் அவனுக்குள் உறங்கிக் கொண்டிருந்த தேசப் பற்று விழித்துக் கொண்டுவிட ..,இத்தாலி நாட்டவரான...அதுவும் பிளாரன்ஸ் நகரைச் சேர்ந்தவரான டாவின்ஸியின் ஓவியம் , குறிப்பிட்ட அந்த நகரத்தின் அருங்காட்சியகத்திலேதான் இருக்க வேண்டும் என்று தீர்மானம் செய்து கொண்ட அவன், அதற்குப் பொறுப்பானவர்களிடம் மோனோலிஸாவின் அசலான ஓவியம் தன்னிடமே இருப்பதாகவும் அதை பிளாரன்ஸ் அருங்காட்சியத்திற்கு இலவசமாகவே வழங்குவதற்குத் தான் முன் வந்திருப்பதாகவும் அறிவித்தான்.
பிளாரன்ஸ் காட்சியகம் அந்த ஓவியத்தை அடைய வேண்டுமென்று ஆசைப்பட்டாலும்....சட்டத்திற்குப் புறம்பான முறையில் செல்லத் துணியாத நிர்வாகம்,இரகசியமாக லூவர் நிர்வாகத்திடம் அதைத் தெரிவித்துச் சரியான நேரத்தைக் குறித்து அந்தப் பாதுகாவலனையும்,மோனோலிஸாவின் உண்மைப் பிரதியையும் லூவரிலேயே ஒப்படைத்தது.
இரண்டாண்டுக் காலச் சிறை வாசத்துக்குப் பின்பு -”அதீதமான” நாட்டுப் பற்றால் மட்டுமே அந்தக் குற்றத்தைச் செய்தவன் என்ற காரணத்தைக் காட்டி விடுவிக்கப்பட்டான் அந்தப் பாது காவலன்.
கதை அந்த இடத்தோடு முடிந்து விடவில்லை.பாதுகாவலன் எடுத்த நகல்கள் மொத்தம் ஐந்து என்றும் அந்த ஐந்தாவது பிரதியே லூவரை வந்தடைந்திருக்கிறது என்றும், உண்மையில் அசலான ஓவியம் அவனுடைய கூட்டாளியின் வசம்தான் இருப்பதாக...இருந்ததாகச் சொல்லப்படுகிறது என்றும் , அந்தப் புதிர் இன்னும் கூட எவராலும் சரிவர அவிழ்க்கப்படவில்லை என்றும் சொல்லி முடித்தார் எங்கள் வழிகாட்டி.
மோனோலிஸாவைக் கண்டுவிட்டதான பெருமிதத்தில் இருந்த பயணிகளின் முகங்கள் காற்றுப் போன பலூன்களாக சுருங்கிப்போக இன்னுமொரு கொசுறுச் செய்தியையும் முன் வைத்தார் அவர்.
கலைகளின் மீது - குறிப்பாக ஓவியங்களின் மீது தீராக் காதல்கொண்டிருந்த நெப்போலியன் எப்போதும் தன் தலையணைக்கடியிலே மோனோலிஸா ஓவியத்தை வைத்தபடிதான் உறங்குவானாம்.அதனால்,அவனுக்கும் அவன் மனைவிக்கும் ஊடல் ஏற்படக் கூட மோனோலிஸா காரணமாகியிருந்திருக்கிறாள்.
தூய்மையான ஒரு கலைப் படைப்பின் பின்னணியிலேதான் எத்தனை எத்தனை மாயச் சுழல்கள்.....?
பணத்தாசை....,தனக்கு மட்டுமே உடைமையாக்கிக் கொள்ளும்ஆசை....,போலியான நாட்டுப் பற்று என்று மனிதனின் குதர்க்க மூளை இந்த ஓவியத்தோடு எப்படியெல்லாம் விளையாடி இருக்கிறது....?
இந்தக் கதை உண்மையோ..பொய்யோ...,அதன் வழி பெற முடிந்திருக்கிற செய்திகள் மோனோலிஸாவின் ஓவியத்தை விடவும் சுவையானவை.
அவையும் கூட மோனோலிஸா புரியும் மர்மப் புன்னகையைப் போலவே விடுவிக்க முடியாத புதிர்கள்தான்....
பி.கு:லூவர் அருங்காட்சியகத்தில் மோனோலிஸா மட்டுமில்லை.சிலை வடிவில் அங்கே ஒரு கருத்தம்மாவும் கூட இருந்தாள்.கருத்தம்மாக்களைக் காட்டிலும் மோனோலிஸாக்கள் முன்னுரிமை பெற்று விடுவதுதானே நாளும் காண முடியும் யதார்த்தம் ?
லூவரில் ஒரு கருத்தம்மா
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு
(
Atom
)
4 கருத்துகள் :
It gives the feeling of standing in the leuver museum and viewing the picture of monalisa --amma
its a nice one for sharing with us amma
thanks
நன்றாக உள்ளது
வணக்கம் அம்மா.......
நல்ல பல தகவல்களைத் தெரிந்து கொண்டேன்.தேர்ந்த புகைப்படக்கலைஞர் எடுத்த படங்கள் போல் எடுத்துள்ளீர்கள்.படங்கள் செய்கள் அனைத்தும் அருமை அம்மா...நன்றி...
அன்புநிறை மிஸ்
வேர்ப்பலா புகைப்படத்தால் மேலும் இனித்தது
எளிய மனிதனிடம் இனிய சூழல் உணர்வு
எடுத்து சொன்னதில் தங்கள் சமூக உணர்வும் புரிந்தது
மோனோலிசா ஓவியம் மட்டும் அல்ல . அது குறித்த செய்திகளும்
மனதை மயக்கியது.
அனு.
கருத்துரையிடுக