2.9.09
ஒரு எதிர்வினை
முனைவர் பட்ட ஆய்வேடு குறித்த மதிப்பீடுகளில் -( குறிப்பாகத் தமிழ் இலக்கியம் சார்ந்தவை)-காணப்படும் தரம் தாழ்ந்த நிலைப்பாடுகள் குறித்த என் மனக் கொதிப்பைக் ’கல்வித் தரத்தில் அக்கறை கொண்டோரின் மேலான கவனத்திற்கு....’ என்ற தலைப்பில் அண்மையில் கட்டுரையாக்கியிருந்தேன்.புது தில்லியிலிருந்து வெளிவரும் இலக்கிய மாத இதழான ‘வடக்கு வாச’லிலும்(ஆக.09)அது வெளியாகி இருந்தது; பிறகு என் வலையிலும் அதை வெளியிட்டிருந்தேன்.
http://masusila.blogspot.com/2009/08/blog-post_03.html
தற்பொழுது ‘வடக்கு வாசல்’ ஆசிரியர் திரு பென்னேஸ்வரன் அவர்கள் ,அக் கட்டுரைக்கு நிறைய தொலைபேசி அழைப்புக்கள் வந்ததாக எனக்கு மின் அஞ்சல் அனுப்பி இருக்கிறார்.
''அன்புள்ள சுசீலா அம்மையார் அவர்களுக்கு
வணக்கம்.
உங்கள் கட்டுரைக்கு நிறைய தொலைபேசிகள் வந்தன எனக்கு.
எல்லாப் புகழும் உங்களுக்கே.
அன்னை பராசக்தியும் சத்குருநாதனும் என்றும் உங்களுக்குத் துணை இருக்கட்டும்,.
அன்புடன்
பென்னேஸ்வரன்''
அக் கட்டுரையை வடக்கு வாசல் இணைய தளத்திலும் வெளியிட்டிருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறார்.http://vadakkuvaasal.com/article.php?id=376&issue=61&category=10 ''
வலை வாசகர்கள் அத் தளத்திற்குச் சென்றும் அக் கட்டுரையைப் படிக்கலாம். வடக்கு வாசலின் பிற பகுதிகளையும் சுவைக்கலாம்.
(உண்மையில் சொல்லப் போனால் அந்த இதழ் அச்சேறும் கடைசித் தருணத்தில் ஒரு ஆவேச வெறியுடன் அதை நான் மின் அஞ்சலில் அனுப்ப அடுத்த 10 நிமிடங்களிலேயே அதைப் பிரசுரத்துக்கு ஏற்ற பெருந்தன்மையாளர் , இதழ் ஆசிரியர் திரு பென்னேஸ்வரன் அவர்கள்).
ஒரு படைப்பாளி என்ற வகையில் ஆசிரியரின் இப் பாராட்டு எனக்கு மகிழ்வும் ஊக்கமும் ஊட்டியபோதும் - ஒரு கல்வியாளர் என்ற நிலையில் அது என்னைக் கவலையும் கரிசனமுமே கொள்ள வைக்கிறது.இக் கட்டுரைக் கருத்துக்களோடு ஒத்துப் போகும் மனம் கொண்டோர் பலர் இருந்தும் நிதரிசன நிஜங்களை இம்மியும் அசைக்க முடியவில்லையே?ஆனாலும் முழக்கும் சங்கின் நாதத்தை ஓய விடாமல் ஒலித்துக் கொண்டே இருந்தால் என்றேனும் ஒரு நாள் பொழுது புலராமலா போய்விடப் போகிறது.....?
அந்த நம்பிக்கை இருக்கும் வரை சிறுமை கண்டு சீறும் எழுதுகோல்கள் இயங்கிக் கொண்டேதான் இருக்கும்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு
(
Atom
)
1 கருத்து :
முனைவர் பட்டத்திற்கு ஆய்வேட்டைச் சமர்ப்பிப்பதில் உள்ள சீர்கேடுகளை சொல்லியிருந்ததைப் படித்து பார்த்தேன். தமிழ்க் கல்வியில் மட்டும் என்றில்லை, ஒட்டு மொத்தமான கல்வி அமைப்பிலும், ஆய்விலும் கூட, கல்வித் துறை, ஆசிரியர்கள் உட்பட, "ஈரல் அழுகிப் போன நிலையில்" இருப்பதை வேதனையோடு தான் கவனிக்க வேண்டியிருக்கிறது.
ஆய்வுப் பட்டத்திற்கு முனைவர்களுக்கு வழிகாட்டியாக இருப்பவர்கள் மட்டும் அல்ல, ஆரம்பப் பள்ளியில் ஆசிரியர்களாக வழிகாட்ட வேண்டியவர்களுடைய தரமுமே கூட, எல்லா வகையிலும் பின்தங்கி இருக்கிறது என்பதைக் கண்கூடாகவே காண முடிகிறது.
கற்பிப்பவன் தொடர்ந்து கற்றாக வேண்டும் என்பது இங்கே எவருக்குமே அவசியமாகத் தெரியவில்லை. கற்றல் என்பது வாழ்வின் எல்லாத் தருணங்களிலும் நிகழ்ந்து கொண்டே இருப்பது, புதுப்பித்துக் கொண்டே இருப்பது என்பதைத் தேங்கிப் போன ஒரு அமைப்பு எப்படிப் புரிந்து கொள்ள முடியும்?
கடக்க வேண்டிய தூரம் அதிகம்!கரிசனங்கள் மட்டுமே போதாது!
கருத்துரையிடுக