துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

7.9.09

தமிழ்த் திரைக்குக் ‘காஞ்சிப்பட்டு’
’காஞ்சீவரம்’ தமிழ்த் திரைப்படத்துக்கும்,அதில் முதன்மைப் பாத்திரத்தில் நடித்த பிரகாஷ் ராஜுக்கும் தேசீய விருது கிட்டியிருக்கும் நற்செய்தி காதில் தேன் பாய்ச்சியிருக்கிறது.

தமிழ்ப்படங்களின் தரத்தை உயர்த்தும் படங்களுக்கான பட்டியலில் ‘காஞ்சீவர’த்துக்கு உறுதியான ஓரிடம் உண்டு என்பது அதைப் பார்த்தவர்கள் அனைவருக்குமே உணர்வாகியிருக்கும் ஓர் உண்மைதான்.
திரையரங்குச் சந்தையில் விலை போகாமல் உலகப் படவிழாக்களில் அதிகம் பேசப்பட்ட இந்தப் படம் , இந்திய அளவிலும் மேன்மையான அங்கீகாரம் பெற்றிருப்பது,உண்மையிலேலேயே பாராட்டப்பட வேண்டிய மகத்தான விஷயம்தான்.

’காலகட்டப்படங்களை’(Period films)உருவாக்குவதில் கைதேர்ந்த பிரியதர்ஷனின் இயக்கத்தில் உருவான இந்தப் படம், இந்திய விடுதலைக்கு முன்னுள்ள காலகட்டத்துப் பட்டு நெசவாளர் வாழ்க்கை நிலையை- பட்டு நெசவுத் தொழில் மேலோங்கியிருக்கும் காஞ்சீபுர நகரத்தின் பின்புலத்தில் முன் வைக்கிறது.

விவசாயிக்கு அவன் விளைக்கும் அரிசியில் உரிமையில்லை....கட்டிடத்தொழிலாளிக்கு அவன் சமைக்கும் மாடமாளிகைகளில் இடமில்லை என்பதுபோலத் தினந்தோறும் விதவிதமான பட்டுத் துணிகளை வித்தியாசமான பாணிகளில் நெய்யும் நெசவுக் கலைஞனின் குடும்பத்துப் பெண்களுக்கு அந்தப் பட்டைத் தரிக்கும் பாத்தியதை இல்லை என்ற சின்ன ...மெல்லிய இழைதான் ‘காஞ்சீவர’த்துக்கதை என்றபோதும் அந்தச் சிறிய இழையைத் தன் சீரிய கதைப்பின்னலால்...நெகிழவைக்கும் சம்பவங்களால்....கதைக் களனுக்கேற்ற காட்சி அமைப்புக்களால் காஞ்சிப் பட்டாக ஜொலிக்க வைத்திருக்கிறார் பிரியதர்ஷன்;
பிரகாஷ் ராஜ் பட்டுநெசவாளராகவே வாழ்ந்து காட்டி நெஞ்சை நெகிழ வைத்திருக்கிறார்.
ஆனாலும் கூட இது சற்று எளிமையான பட்டு....ஆரவாரமோ பகட்டோ இல்லாதபட்டு என்பதால்தான் வணிகத் திரைச் சந்தை இதை ஒதுக்கி விட்டது போலிருக்கிறது.

தன் திருமணத்திலேயே தன் மணமகளுக்குப் பட்டுடுத்திப் பார்க்க நினைத்த வேங்கடம் என்ற தறி நெசவாளி,தன் மணமகளின் திருமணத்திலாவது அதைச் செயல்படுத்தியே ஆக வேண்டுமென்று வெறியோடு உழைக்கிறார்;ஆனாலும் வாழ்க்கைப் போராட்டத்தில் ஆயிரம் தடைக் கற்கள் குறுக்கிட....தான் நெசவு செய்யும் இடத்திலிருந்து தினமும் ஒரு கொத்து பட்டு நூலை எவருக்கும் தெரியாமல் வாயில் அடக்கி வந்து ,மனைவி,மகள் ஆகியோர் கூட அறியாமல் ரகசியமாய் அதைச் சேமித்து வைத்து, நள்ளிரவில் தனித் தறியில் பட்டுப்புடவையையும்....அதனுடன் இணைந்த தன் கனவையும் படிப்படியாக வளர்க்கிறார்.இறுதியில் அத்தனை கனவுகளும் தரைமட்டமாய்த் தவிடுபொடியாகிவிட....பாலூட்டி வளர்த்த மகளை நஞ்சூட்டிக் கொன்றுவிட்டுத் தான் அரைகுறையாக நெய்து வைத்த பட்டாடையை அவளது சவத்துக்கு அரைகுறையாக அணிவிக்கிறார்.அவருக்குச் சாத்தியமானது அது மட்டும்தான் என்ற அழுத்தமான உண்மையை நெஞ்சில் கனமாக இறக்கி வைத்துவிட்டு முடிகிறது படம்.

இந்தப் படத்தைப் பார்த்தபோது , பலநாள் முன்பு நான் படித்த திரு ம.ந.ராமசாமியின் ’ஆகுதிக்கு மந்திரம் இல்லை’என்ற சிறுகதை ஒன்று என் நெஞ்சில் நிழலாடிக் கொண்டே இருந்தது.அதுவும் பட்டு நெசவாளி பற்றியதுதான்.கோயில் திருவிழாவுக்குப் பட்டுப் புடவை நெய்து தரும் ஒரு நெசவாளி , தன் கலைப்படைப்பு அந்த விழாவில் எவ்வாறு பயன்படுத்தப்படப் போகிறது என்பதைக் காண்பதற்காக ஆவலோடு போகிறான். அங்கே நடக்கும் வேள்வியின் நெருப்பில், அது ஆகுதியாகிவிடுவதைப் பார்க்கப் பொறாமல், தானும் அதே நெருப்பில் பாய்ந்து உயிரை விட்டு விடுகிறான் அந்த மகா கலைஞன்.
ஒரு சிற்பியின் பெருமை, தன் கலை வழிபடப் படுவதைவிடவும்,பலராலும் ரசிக்கப்படுவதிலேதான் அடங்கியிருக்கிறது என்று ‘சிற்பியின் நரகம்’ சிறுகதையில் எடுத்துக் காட்டிய புதுமைப்பித்தனின் படைப்பை ஒட்டியதுதான் இதுவும்.

தமிழ் எழுத்துலகம் , ஆங்காங்கே கையாண்டுள்ளபோதும் -
( எம்.வி.வெங்கட்ராம் எழுதிய நாவலாகிய ‘வேள்வித் தீ’நெசவாளர் வாழ்வியலைச் சித்தரிப்பது)
தமிழ்த் திரை உலகம் பரவலாகக் கையாளாத ஒரு கருப் பொருளை - களனைக் ‘காஞ்சீவரம்’திரைப்படத்தில் துணிவாகக் கையாண்டு தமிழ்த் திரைப்படம் ஒன்றுக்குத் தேசீய அளவிலான அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்திருக்கும் கேரளீயரான(உண்மைக் கலைஞனுக்குமொழி,இன பேதங்கள் இல்லை என்பது இதன் வழி மீண்டும் நிரூபணமாகியிருக்கிறது)பிரியதர்ஷனுக்கும்,அவரது குழுவினருக்கும் இத் திரைப்படத்தின் வழி தேசீய விருது பெறும் பிரகாஷ்ராஜுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

3 கருத்துகள் :

முனைவர் சே.கல்பனா சொன்னது…

விமர்சனம் அருமையாகவுள்ளது அம்மா.....

எம்.ஏ.சுசீலா சொன்னது…

நன்றி கல்பனா.படத்தை மிக ரசித்துப் பார்த்தேன். அதனால் தேசிய விருது கிடைத்ததும் பதிவு செய்ய ஆசை கொண்டேன்.கருத்துக்கு நன்றி.

thenammailakshmanan சொன்னது…

கபீர் முதல் ஆழியாறு தந்த அமுதம் வரை நெசவாளர் குடும்பத்தில் பிறந்தவர்கள்தானே அம்மா
நல்ல குரல் வளம் கொண்ட ப்ரகாஷ்ராஜின் நடிப்பு அற்புதம்
மிகச் சிறந்த விமர்சனம் அம்மா

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....