துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

3.9.09

’’கல்லை மட்டும் கண்டால்...’’''மரத்தில் மறைந்தது மாமத யானை...மரத்தை மறைத்தது மாமத யானை ‘’என்பது , திருமூலரின் திருவாக்கு.இவ்வாக்கில் பொதிந்துள்ள ஆன்மீக உட்பொருள் ஒருபுறமிருக்க.. , மரத்தில் மறைந்திருக்கும் மாமத யானையை...மரத்தை மறைத்திருக்கும் மாமத யானையை உள்ளொளி படைத்தவர்கள் மட்டுமே இனம் கண்டு கொள்கிறார்கள் என்பது ,இதில் வெளிப்படையாகத் துலங்கும் பேருண்மை.இந்த உண்மையின் நிதரிசனமான சாட்சிகளில் ஒன்று...,உலகப்புகழ் பெற்ற மைக்கேல் ஏஞ்சலோ என்னும் மகா கலைஞர் வடித்த பியட்டா என்னும் இந்தப் பளிங்குச் சிற்பம்.

சிலுவையில் மரித்தவுடன் அகற்றப்பட்ட இயேசுவின் உடலை அன்னை மரியாள் தன் கரங்களில் தாங்கிப் பிடித்திருப்பது போல வடிவமைக்கப்பட்டுள்ள இந்தச் சிற்பத்தின் பின்னணியில் சுவையான கதை ஒன்று உண்டு.

மைக்கேல் ஏஞ்சலோ, இத்தாலி நாட்டைச் சேர்ந்தவர்.‘மார்பிள்’எனப்படும் பளிங்குக் கற்களுக்குப் பிரசித்திபெற்றது இத்தாலி.இத்தாலியைச் சூழ்ந்துள்ள மலைகளிலும் ,குன்றுகளிலும் பனி உருகி வடிவதைப்போல வெள்ளை வெளேரென்ற பளிங்குக் கற்கள் - படிமங்களாக உறைந்து கிடப்பதைக் காண முடியும்.

இத்தாலி மலைகளில் மார்பிள்படிமங்கள் பனிப்பாறைபோல்....


‘மார்பிள்’கற்களை விற்பனை செய்யும் தொழில் அன்று முதல் இன்று வரை கொடிகட்டிப் பறந்து வருவதும் அங்குதான்.
அப்படிப்பட்ட ஒரு கடை வழியே சென்றுகொண்டிருந்த கலைஞர் மைக்கேல் ஏஞ்சலோ குறிப்பிட்ட ஒரு கடையின் முன்னால் கிடந்த ஒரு பளிங்குக்கல்லைக் கண்டு நிலைகுத்தி நின்றார்.கரடுமுரடாகப் பண்படுத்தப்படாமல் கிடந்த அந்தக் கல் அவருக்குள் சொன்ன கதை - அவரது ஆழ்மனதில் கிட்டிய தரிசனம் - அந்தக்குறிப்பிட்ட கணத்தில் அவர் மட்டுமே அறிந்த ஒரு ரகசியம்.

கடை உரிமையாளரை மிகுந்த தயக்கத்தோடு அணுகிய ஏஞ்சலோ , அந்தக் கல்லுக்கான விலையைக் கூறுமாறு கேட்டார்.உரிமையாளருக்கோ வியப்பு.காரணம் ,அவரது பாட்டனார் காலம் தொடங்கி அங்கேயே கிடக்கும் அந்தக் கோணல் மாணலான கல்லை விலைபேச இதுவரை எந்த வாடிக்கையாளருமே வந்திருக்கவில்லை.கடைக்குள் இடத்தை அடைத்துக்கிடக்க வேண்டாம் என்பதற்காகவே அதை வாசலில் போட்டு வைத்திருந்தார் அந்தக் கடைக்காரர்.

மைக்கேல் ஏஞ்சலோவை வியப்பில் ஆழ்த்தும் வண்ணம் அதை இலவச அன்பளிப்பாகவே அவருக்கு அளித்துவிட்ட அந்தக் கடைக்காரர் ஒரே ஒரு நிபந்தனையை மட்டும் அவருக்கு விதித்தார்.எல்லோராலும் புறக்கணிக்கப்பட்டு ஒதுக்கப்பட்டுவிட்ட அந்தக் கல்லை மைக்கேல் ஏஞ்சலோ எப்படிப் பயன்படுத்தினார் என்பதை மட்டும் அவருக்குக் காட்டியாக வேண்டும் - அது அவருக்குத் தெரிந்தே ஆக வேண்டும் என்பதுதான் அந்த நிபந்தனை.அதனை மகிழ்வோடு ஏற்றுக் கொண்ட ஏஞ்சலோவும் அந்தக் கல்லைக் கண்ட மாத்திரத்தில் தன்னுள் கருத் தரித்த ‘பியட்டா’சிற்பத்தை எழிலுற உருவாக்கி அவரை மட்டுமன்றி உலகையே தன் கை வன்மையால் கலைத் திறமையால் திகைப்புறச் செய்தார்.

மாமல்லபுரத்தில் கிடந்த கற்பாறைக்குள் யானை வடிவத்தைக் கண்ட நரசிம்ம பல்லவனைப் போலப் பண்படாத பளிங்குக் கல்லுக்குள் உயிர் நீத்த மைந்தனையும், தாயையும் ஒருங்கே..ஒன்றாகக் கண்டார் மைக்கேல் ஏஞ்சலோ.

உதவாத வெறும் கல்லுக்குள்ளும் கூட உயிர்த் துடிப்புள்ள கலைப்படைப்பைக்காண்பவை படைப்பாளியின் கண்கள் என்பதற்குச் சாட்சியாக அமைந்த இச் சிற்பம்,உலகின் மிகச் சிறிய நாடாகக் கருதப்படும் வாடிகனிலுள்ள செயிண்ட் பீட்டர் தேவாலயத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கிறது.மிக அரிதான இந்தப் பளிங்குச் சிற்பத்தை முன்பொருமுறை மனநிலை சரியில்லாத ஒருவன் தாக்கித் தகர்க்க முயன்று விட்டதால்,இப்பொழுது இது கண்ணாடிப்பெட்டிக்குள் வைத்துப் பராமரிக்கப்பட்டு வருகிறது.

எத்தனை மணி நேரம் பார்த்துக் கொண்டே இருந்தாலும் பார்க்கப் பார்க்கத் திகட்டாத அபூர்வக் கலைப்பொக்கிஷமான இந்தச் சிற்பத்துக்குப் பின்னால் மற்றொரு சோகமும் உண்டு.

குறிப்பிட்ட இந்தச் சிற்பத்தில் இயேசுவைத் தாங்கியுள்ள அன்னை மரியாள் அவரை விடவும் இளமையாகக் காட்சி தருவதைக் காண முடிகிறது.அந்தத் தாயை வடிவமைக்கையில் தனது பச்சிளம் பருவத்தில் - தனது நான்காம் வயதில் பறிகொடுத்த தனது சொந்த அன்னையின் முகமும் வடிவமுமே மைக்கேல் ஏஞ்சலோவின் உள்ளத்தில் மேலோங்கி நின்றதன் விளைவே சிற்பத்தில் நேர்ந்த அவ்வாறான கட்டமைப்பிற்கு அனிச்சையான காரணமாக ஆகிப் போயிருக்கிறது.மலரினும் மெல்லிதல்லவா கலை உள்ளம்?

பியட்டா சிற்பத்தின் முன்பு கட்டுரையாளர்

1 கருத்து :

goma சொன்னது…

நீங்கள் பயணித்து வந்து எங்களையும் உடன் பயணிக்க வைக்கிறீர்கள் நன்றி.
-----------------------------------------
பாஸ் போர்ட் வேண்டாம்
விசா வேண்டாம்
பெட்டி வேண்டாம்
படுக்கை வேண்டாம்
எம்.ஏ.சுசீலா பிளாக் போதும்.
வாருங்கள் உலகைச் சுற்றி வரலாம்

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....