துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

11.9.09

பாரதியின் ’சந்திரிகையின் கதை’


பாரதி நினைவு நாளில்.....

நாட்டு விடுதலையோடும்,சமூக விடுதலையோடும் தன்னை இறுகப் பிணைத்துக் கொண்டிருந்த பாரதி,எந்தத் தெளிவுரையும், விளக்க உரையும் தேவைப்படாத வகையில் - தமிழ்மொழியை அதன் பழமையான பண்பாட்டு மரபுகளிலிருந்து சிறைவீடு செய்து ‘சொல் புதிது...பொருள்புதிது’என எளிமைப்படுத்தினான்.

பண்பாட்டு மாற்றம் வேண்டுகிற கவிஞனாகச் சில கவிதைகளில் கட்டளையிடும் தொனியிலும்....இன்னும் சில படைப்புக்களில் மன்றாட்டாகவும் குரல் கொடுத்தான்.

தனதுகட்டுரைகளின் வழியே மாற்றுப் பண்பாட்டின் தேவையைப் பிரசாரமாக முன்வைத்த பாரதி தனது நாவலொன்றில் அதை நடைமுறைச் சாத்தியமானதாகவே காட்டிப் பண்பாட்டுப் புரட்சியை நடத்திக் காட்டியிருக்கிறான்.

தனது முற்றுப் பெறாத சிறு நாவலாகிய ‘சந்திரிகையின் கதை’(1925)வழியாக அவன் ஏற்படுத்திய அதிர்ச்சி...குறிப்பிட்ட அந்தக் காலகட்டத்தில் பூமி அதிர்ச்சிக்கே நிகரானது.

வேளாண்குடி என்னும் சிற்றூரில் நிகழும் பூகம்பத்தில் ஒரு அக்கிரகாரம் முழுவதுமே அழிந்து போகிறது.சிதைந்தாக வேண்டிய சில பண்பாட்டு மரபுகளின் குறியீடாகவே அந்த அழிவை அமைக்கிறான் பாரதி.ஒரு பச்சிளம் பெண்குழந்தையும்,கன்னிப்பருவத்தில் விதவையான பெண் ஒருத்தியுமே அந்தப் பேரழிவிலிருந்து தப்பிப்பிழைக்கிறார்கள்.
மரணத் தருவாயில் இருக்கும் அந்தக் குழந்தையின் தாய்,கன்னிவிதவையான தன் கணவனின் சகோதரியைத் தன் அருகிலழைத்துப் பேசுகிறாள்;


’’விசாலாட்சி!...நீ ..விவாகம் செய்துகொள்...விதவா விவாகம் செய்யத் தக்கது....ஆண்களுக்குப் பெண்கள் அடிமைகளாய்...ஜீவனுள்ளவரை வருந்தி வருந்தி மடிய வேண்டிய அவசியமில்லை.ஆதலால் நீ ஆண்மக்கள் எழுதி வைத்திருக்கும் நீசத்தனமான சுயநல சாஸ்திரத்தைக் கிழித்துக் கரியடுப்பில் போட்டுவிட்டு
தைரியத்துடன் சென்னப் பட்டணத்துக்குப் போய் அங்கு கைம்பெண் விவாகத்துக்கு உதவி செய்யும் சபையாரைக் கண்டுபிடித்து அவர்கள் மூலமாக நல்ல மாப்பிள்ளையைத் தேடி வாழ்க்கைப்படு’’

விசாலாட்சியும் அவள் கூறியபடியே சென்னை சென்று பல சிக்கல்களை அடுக்கடுக்காய் எதிர்ப்பட்டு இறுதியில் ‘பிரம்ம சமாஜ’முறைப்படி திருமணம் செய்து கொள்கிறாள்.தன் அண்ணியின் குழந்தை சந்திரிகையையும் கணவனின் துணையோடு வளர்க்கிறாள்.
குறிப்பிட்ட அந்தக் காலகட்டத்தில் அவ்வாறான முயற்சிகளுக்கு ஆதரவளித்து வந்த சுதேசமித்திரன் ஆசிரியர் ஜி.சுப்பிரமணிய ஐயர், வீரேசலிங்கம்பந்துலு போன்ற தேச பக்தர்களையும் கூடக் கதை மாந்தர்களாக உலவவிட்டு நாவலுக்கு நம்பகத்தன்மை சேர்க்கிறான் பாரதி.

ஓர் அமைப்பே அடிமட்டமாகத் தகர்ந்து போகும் நிலையில் ஆதரவற்ற இரு பெண்களை மட்டும் உயிர் பிழைக்க வைத்துப் பெண் சார்ந்த தன் உறுதியான நிலைப்பாட்டைப் பாரதி தன் நாவலில் தெளிவாக்கியுள்ளபோதும்...
இப் படைப்பின் சோகம்,அவன் சொல்ல நினைத்த பச்சைக் குழந்தை சந்திரிகையின் கதை என்னவென்பது அவனது வாசகர்களுக்குக் கடைசிவரை தெரியாமல் அது முற்றுப்பெறாமலே போய்விட்டதென்பதுதான்.

விதவைப் பெண்ணுக்குத் திருமணம் வேண்டும் என்ற அவன் கனவு ,அவன் கதையில் மட்டுமன்றி ...ஓரளவு நாட்டு நடப்பிலும் நிறைவேறிவிட்டது உண்மைதான்;
ஆனால் அவன் சொல்லாமல் விட்ட சந்திரிகையின் கதைக்குள் முற்றுப்பெறாத ஆயிரம் ஆயிரம் பெண்களின் கோரிக்கைகள் முடங்கிக் கிடக்கிறதோ..?
இந்தக் கேள்விக்குப் பாரதியைத் தவிர வேறு யாரால் விடை சொல்ல இயலும்?

4 கருத்துகள் :

thenammailakshmanan சொன்னது…

நான் மிகச் சிறு வயதில் படித்த பாரதியார் கவிதைகள் மற்றும் கட்டுரைகள் கொண்ட பதிப்பில் இந்த சந்திரிகையின் கதையைப் படித்து இருக்கின்றேன் அம்மா. விசாலாட்சிக்கு வாழ்வாதாரமாக அவள் படைக்கப்பட்டு இருப்பதாக நினைத்திருந்தேன் . உங்கள் கட்டுரையைப் படித்ததும் அவள் என்னவாகி இருக்கக் கூடும் என யோசிக்கின்றேன். பாரதியின் கதையைப் பகிர்ந்து கொண்டதற்கு மிக நன்றிகள் அம்மா

எம்.ஏ.சுசீலா சொன்னது…

விசாலாட்சியின் வாழ்வாதாரமாகச் சந்திரிகை முதலில் இருந்திருக்கலாம்.அது மிக நல்ல கருத்துத்தான் தேனம்மை.என்றாலும் வேறு கோணத்தில் பார்த்தால் சந்திரிகையின் தனிப்பட்ட இருப்பு......அவள் வாழ்வின் போக்கு இவையெல்லாம் விடுபடாத புதிர்கள்தானே நம் நாட்டுப்பெண்கள் பலரின் வாழ்வைப்போல....

எம்.ஏ.சுசீலா சொன்னது…

விசாலாட்சியின் வாழ்வாதாரமாகச் சந்திரிகை முதலில் இருந்திருக்கலாம்.அது மிக நல்ல கருத்துத்தான் தேனம்மை.என்றாலும் வேறு கோணத்தில் பார்த்தால் சந்திரிகையின் தனிப்பட்ட இருப்பு......அவள் வாழ்வின் போக்கு இவையெல்லாம் விடுபடாத புதிர்கள்தானே நம் நாட்டுப்பெண்கள் பலரின் வாழ்வைப்போல....

கிருஷ்ண மூர்த்தி S சொன்னது…

பாரதியின் அன்றைய எழுத்து, இருளைக் கிழித்துப் புறப்பட்ட மின்னல் என்று வேண்டுமானால் சொல்லலாம்!

மற்றப்படி, விடுபடாத புதிர்கள்..விடை என்னவாக இருக்கும் என்ற கேள்விகளுக்கெல்லாம் ஒரே பதில் காலம். ஆம், காலம் எல்லாவற்றையும் புரட்டிப்போடும் வலிமை உடையது.

எந்த ஒரு உண்மையும் அது வெளிப்படுவதற்கான தருணத்தை எதிர்நோக்கியிருக்கிறது என்பதும் கூட, விடுகதைகளுக்கான விடை எங்கே என்பதற்கு விடை சொல்லுவது தான்!

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....