துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

13.1.10

யாருக்கும் வெட்கமில்லை!


ஊழல் குற்றச்சாட்டுக்களில் சிக்கிப் போலீசாரின் கூண்டு வண்டியில் செல்லும் அரசியல்வாதிகள் பல்லெல்லாம் பரக்கக் காட்டும் வெட்கங்கெட்ட சிரிப்பு.....

பணங்கொழுத்த அண்ணாச்சிகள் பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு ஏதுமறியாத பாப்பாவைப் போலப் பாவனை காட்டியபடி உதட்டில் தவழவிடுகிற ரெடிமேட் புன்னகை.......

போலி வேஷதாரிப் பிரேமானந்தாக்களின் முற்றும் துறந்தது போன்ற ஞானச்(?!)சிரிப்பு....

இவையெல்லாம் நாம் அன்றாடம் பார்த்துப் பழகி.....மரத்தும்...மறந்தும் போய் விட்டவைதான்.

இப்பொழுது சில நாட்களாக ஒரு ’அதிகாரியின் ஆணவச் சிரிப்பை' (நன்றி;கலைவாணர் என்.எஸ்.கே.) அன்றாடம் தரிசிக்கும் அரும்பெரும் பேறு ...நாளிதழ்களாலும்,பிற ஊடகங்களாலும் நமக்கு வாய்த்துக் கொண்டிருக்கிறது.

மிருகத்தை விடக் கீழான அந்த மனிதர் எப்படி வேண்டுமானாலும் ...எதற்காக வேண்டுமானாலும் சிரித்துத் தொலைத்துவிட்டுப் போகட்டும்.அதைப் பற்றி நமக்குக் கவலையில்லை.

1.ஒரு வேளை தன் தரப்பு வாதங்களைத் தன் சார்பாக எடுத்து வைக்கிற வக்கீலாகத் தன் மனைவியே வாய்த்திருப்பதில்(கல்லானாலும் கணவன் என்பது இப்படியா நிரூபணமாக வேண்டும்!?)ஏற்பட்ட எக்களிப்பாக அது இருக்கலாம்.
2.ருச்சிகா என்ற இளம் தளிர் ஒன்றை அரும்பிலேயே கசக்கிப்போட்ட பிறகும் குறைந்த பட்ச தண்டனையோடு தான் தப்பிக்க முடிந்ததில் விளைந்த கொக்கரிப்பாகவும் அது இருக்கலாம்.
(காண்க;இரண்டு பெண்கள் என்ற என் பதிவு)

இவற்றுள் காரணம் எதுவாக இருந்தாலும்,
இவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்ட காரணங்கள் அந்தச் சிரிப்புக்குள் புதைந்து கிடந்தாலும் நமக்கு அக்கறையில்லை.ஆனால் இன்றைய செய்தித் தாளில்....THE TIMES OF INDIA வின் முதல் பக்கத்தில்
''I learnt from the greatest son of India Jawaharlal Nehru to smile when you are in adversity''
என்று அவர் திருவாய் மலர்ந்தருளியிருப்பதுதான் நம்மை மிகவும் கலவரப்படுத்துகிறது.
அடிப்படை அறம் சார்ந்த விஷயங்களை இவ்வளவு இலகுவாக எடுத்துக் கொண்டதுமல்லாமல் தனது நாணமற்ற சிரிப்புக்கு நேருவைத் துணைக்கழைக்கும் இவது நேர்மையின்மை கண்டனத்துக்குரியது;இந்தியக் குடியரசின் உருவாக்கத்தில் அச்சாணியாக விளங்கிய பெருமகனைத் தன் சிறுமதியால் விளைந்த கேவலத்தோடு ஒப்பிடும் அவரது வார்த்தைகள் இந்திய நாட்டின் இறையாண்மையையே எள்ளி நகையாடிக் கொண்டிருக்கின்றன.

அரசியல் பொருளாதாரக் காரணங்களுக்காக நேருவின் மீதும் கூட விமரிசனங்கள் வைக்கப்படாமலில்லை;ஆனாலும் மழலைப் பிஞ்சுகளின் மீது....எதிர்காலத்தை உருவாக்கப் போகும் சிற்பிகளாகிய சிறுவர்களின் மீது அவர் கொண்டிருந்த ஆத்மார்த்த நேசம் உன்னதமானது; சொல்லில் அடங்காதது.
வளர வேண்டிய இளம் மொட்டான ருச்சிகாவின் வருங்காலமே மண் மூடிப் போகுமாறு செய்த மனித மிருகம் சொல்கிறது....சிக்கலில் சிரிக்கும் பண்பை....நேருவிடமிருந்து கற்றேன் என்று!!இதை விடச் சிறந்த நகை முரண் irony வேறு என்னவாகத்தான் இருந்துவிட முடியும்?

ஒருக்கால் அந்த நபருக்குத் தமிழும்,வள்ளுவரும் தெரிந்திருந்தால்
‘’இடுக்கண் வருங்கால் நகுக’’வை வள்ளுவரிடமிருந்து கற்றுக் கொண்டேன் என்று கூடச் சொல்லியிருக்கலாம்!
தமிழும் வள்ளுவரும் நல்ல காலமாய்த் தப்பியாயிற்று!


வெட்கமில்லை...வெட்கமில்லை...இங்கே யாருக்கும் வெட்கமில்லை!

அடிக் குறிப்பு;
பாலியல் தாக்குதல்களும்,பருத்தி வீரன்களும் என்ற என் போன இடுகையில் அதனுடன் தொடர்பு கொண்ட வீடியோ பதிவையும் சேர்த்திருக்கிறேன்.
ஆர்வமுடையோர் காண்க.
இரண்டு பெண்கள்,இப் பதிவுடன் தொடர்புடையது. அதையும் காணலாம்.

12 கருத்துகள் :

அண்ணாமலையான் சொன்னது…

நல்ல பதிவு... என்ன செய்வது?

ராஜசேகர் சொன்னது…

பொறிந்து தள்ளி விட்டீர்கள் அம்மா. நன்று. நாம் என்ன தான் சொன்னாலும் இந்த வெட்கம் கெட்டவர்களுக்கு உறைப்பதில்லை.

Pandian R சொன்னது…

மானம்கெட்ட இந்த சாக்கடைப் பிராணிகளின் துணைவியாரைத்தான் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. இழுத்துப் பிடிக்க வேண்டிய அவர்களே தவறை மறைக்கையில் நான் ஏற்கனவே சொன்ன படி தன் வாழ்வு செழித்தால் போதும் என்று செல்லும் ஈனப்பிறவிகள்தான் நினைவுக்கு வருகிறார்கள்.
ஏன் அம்மா, ஒரு பெண்ணின் கண்ணீருக்குப் பின்னால் பெண்ணும் இருப்பார்களோ?

பெயரில்லா சொன்னது…

சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்று சொல்வதோடு சரி. அரசியல்வாதிகளும் பணகரர்களும் இந்தியாவில் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். இதற்கு சட்டம் துணை போகிறது. so we form a one big team & kill that idiots.

எம்.ஏ.சுசீலா சொன்னது…

அன்பு நண்பரே,
பெண்,பெண்ணுக்கு எதிரி என்று அர்த்தப்படுத்திக் கொள்ளாமல் வேறு கோணத்தில் இதை மதிப்பிட வேண்டும்.
படித்து,உயர்பதவி வகித்துப் பொருளியல் ரீதியான சுதந்திரம் பெற்றாலும் காலம் காலமாக மூளைச் சலவை செய்யப்பட்ட ஆணாதிக்கக்கருத்தியல்களிலிருந்து விடுபடாமல் இருக்கும் ஒரு பெண்,மன ரீதியான...சமூக ரீதியான பாதுகாப்பை ஓர் ஆண்தான் தனக்கு வழங்க முடியும் என்று கற்பிதம் செய்து கொண்டு விடுகிறாள்.அதன் பொருட்டாகவே அவனைச் சார்ந்தே வாழ்ந்து பழகி விடுகிறாள்.
அதனாலேயே விரும்பியோ,விரும்பாமலோ அவனது கேவலங்களுக்கும் பங்களியாகிவிட வேண்டிய துர்ப் பாக்கியம் அவளுக்கு நேர்ந்து விடுகிறது.
நான் அந்தப் பெண்ணின் செயலை உறுதியாக...சற்றும் நியாயப் படுத்தவில்லை.
அதன் பின்னணியில் உள்ள உளவியல்,சமூகவியல் காரணங்களை மட்டுமே முன் வைத்தேன்.
யார் செய்தாலும் குற்றம் குற்றம்தான்;குற்றத்துக்கு உடந்தையாக இருந்து அதை மூடி மறைக்க முயல்வது,குற்றத்தை விடவும் இழிவானது என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தில்லை.

‘என்ன செய்வது’என வினா எழுப்பிய நண்பருக்கு....
இவ்வாறான இழி செயல்கள் குறித்த விழிப்புணர்வை நம்மால் முடிந்த வரையறைகளுக்குள் விதைத்துக் கொண்டே இருப்பதுதான் நாம் செய்யக் கூடியது.
சங்கு முழங்கியபடியே இருந்தால் என்றாவது ஓர் நாள் போர் நிறுத்தம் வந்துதானே தீர வேண்டும்?

nerkuppai thumbi சொன்னது…

உங்கள் பதிவில் ராதொட் போன்ற சமூக வன்முறையாளர்கள் பால் உள்ள நேர்மையான கோபம் காழ்ப்பு , அதே சமயம் சமூகத்தின் ஆற்றாமையும் ஒருங்கே வெளிப்படுகிறது. வன்முறை இன்றி இதைப் போன்ற நிகழ்வுகளுக்கு தீர்வே இல்லையோ? என சாமானியன் எண்ணும் வண்ணம் சமூகத்தின் நிலைமை!

எம்.ஏ.சுசீலா சொன்னது…

வன்முறை எதற்கு நண்பரே!
நாட்டின் விடுதலையையே வன்முறையின்றித்தானே பெற்றிருக்கிறோம்.
மன மாற்றத்துக்கான கருத்தாக்கங்களை முடிந்த தளங்களிலெல்லாம் கொண்டுபோய்ச் சேர்த்துக் கொண்டே இருப்போம்.
நல்ல எண்ண அலைகளைச் சமூகத்தில் தவழ விடுவோம்.சகல ஜீவன்களுக்கும் அந்த நேரிய அலைகள் போய்ச் சேர்ந்து மன மாற்றம் விளைய இறையருளை வேண்டுவோம்.

minupramod சொன்னது…

what really impressed me here is your writing style brings in india's sovereign prestige pulled into the dirty show of incompatible misfitting incredible annoying comparison. you firework reaches its blast in that line . minu

Thenammai Lakshmanan சொன்னது…

மிக அருமையாக எழுதி இருக்கிறீர்கள் அம்மா எல்லாப் பக்கமும் ஆழ்ந்து யோசித்து எழுதும் உங்கள் தன்மை என்னை இன்னும் ஈர்க்கிறது அம்மா

ஷாஜஹான் சொன்னது…

வணக்கம்.
முதலில் இரண்டு பெண்கள் என்ற பதிவைப் படித்தேன். அப்போது அதில் ராதோர் என்ற ரவுடி சிரிப்பு பற்றி உதிர்த்த பொன்மொழி குறிப்பிடப்படாமல் போய் விட்டதே என்று எண்ணிய நேரம் இந்தப் பதிவு அதை பதிவு செய்தது கண்டேன்.
இந்த விவகாரம் ஊடகங்களில் வெடித்துக் கொண்டிருந்தபோது எனக்கு ஏற்பட்ட ஆத்திரம் உங்கள் எழுத்தில் தெறிக்கும் கோபத்தைவிடக் கடுமையானது. இங்கே பதிய முடியாத கெட்ட வார்த்தைகளில் திட்டித்தீர்த்து ஆத்திரத்தைத் தீர்த்துக்கொண்டேன்.
ஆனால்... ராதோர்களும் கில்களும் திருவாசகங்களும் நழுவிக்கொண்டுதான் இருக்கிறார்கள். நீதித்துறையில் நாம் பயணிக்க வேண்டிய தூரம் மிக அதிகம்தான். உண்மையிலேயே நெஞ்சைத்தொட்டுச் சொல்லுங்கள் - வன்முறை எதற்கு என்ற கேள்வி உள்ளத்திலிருந்து வெளிவந்ததா? அல்லது வன்முறை மறுப்பு என்ற மனப்பதிவுகளுக்கு ஆளாகி விட்டதால் வெளிவந்ததா?
செய்வதையும் செய்துவிட்டு இத்தனை காலமும் உயர்பதவிகளை அனுபவித்துவிட்டு, அகங்காரமாக சிரித்துக்கொண்டிருப்பது எப்படி? ருசிகாவின் ஆதரவாளர்கள் மீது பொய்வழக்குகள் போட்டு இப்போதும் அந்த வழக்குகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன என்ற செய்தியையும் படித்த பிறகு... இவனையெல்லாம் நடுத்தெருவுல நிறுத்தி வெட்ட்ட்ட்ட்ட்டிக் கொல்லணும் என்று தோன்றவில்லை?

cheena (சீனா) சொன்னது…

அன்பின் சுசீலா - கோபம் புரிகிறது - இந்திய சட்டங்கள் இவ்வளவு தான் செய்ய இயலும். நேருவினைத் துணைக்கு அழைக்கும் இவர்களை எல்லாம் என்ன செய்வது ? - நல்லவேளை குறள் பிழைத்தது. நல்லதொரு பதிவு சுசீலா = நட்புடன் சீனா

எம்.ஏ.சுசீலா சொன்னது…

இது அறக்கோபம்.அதுதானே நம்மாலும்,நம் எழுத்தாலும் முடிவது.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....