துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

2.2.10

தலைநகரின் தமிழ்ப் பதிவர்களுடன்....

                                                                                   
தில்லியில் வசிக்கத் தொடங்கி மூன்று ஆண்டுகளானபோதும், இந்த நகரம் எனக்கு இன்னும் கூடப் புதியதாகவும்....சில விஷயங்களில் மிரட்சியும்,தயக்கமும் ஊட்டுவதுமாகத்தான் இருந்து கொண்டிருக்கிறது.
என் அலைவரிசையில் எனக்குக் கிடைத்த அறிமுகங்களும் இங்கே குறைவுதான்.

தில்லி தமிழ்ச்சங்கம்,வடக்குவாசல் இதழ்,மனவளக்கலை மன்றங்கள் ஆகியவற்றால் வாய்த்த தொடர்புகளும்,நட்புக்களுமே தமிழ்நாட்டிலிருந்து நெடுந்தூரம் விலகியிருக்கும் தாகத்தை,ஏக்கத்தை அவ்வப்போது தீர்த்து வைத்துக்கொண்டிருக்கின்றன.

இந்த வரிசையில் இப்போது புதிதாகச் சேர்ந்திருப்பது ,
தில்லி வலைப் பதிவர் வட்டம்.

வடக்குவாசல் இணைய தளத்தையும்,
முன்பு சனிமூலை என்ற பெயரில் வடக்குவாசல் ஆசிரியர் திரு பென்னேஸ்வரன் எழுதிக் கொண்டிருந்த வலைப்பூவையும் தவிர,(அது,இப்பொழுது ராகவன் தம்பி பக்கங்களாக வடக்குவாசல் இணையத்துடனேயே இடம் பெற்று வருகிறது)
வேறு தமிழ்ப்பதிவர்கள் எவரையும் தில்லியில் நான் அறிந்ததில்லை.

முத்துலட்சுமி என்ற வலைப் பதிவரிடமிருந்து எதிர்பாராத ஒரு தருணத்தில் வந்த மின் அஞ்சல் வழியாகத்தான் பல தமிழ்ப்பதிவர்கள் தில்லியில் இருப்பதை நான் அறிந்து கொண்டேன்.(நம்மை அறிந்தவர்களை நாம் அறியாமல் இருந்திருப்பது கொஞ்சம் கூச்சமாகக்கூட இருந்தது.)
மிகவும் சுறுசுறுப்பாகவும்,ஆர்வத்துடனும் செயல்பட்ட முத்துலட்சுமி, பத்தே நாட்களுக்குள் தில்லித் தமிழ்ப்பதிவர்கள் பலரை ஓரிடத்தில் ஒன்றுகூடச் செய்து விட்டது,உண்மையிலேயே ஒரு சாதனைதான்.அதற்காக,அவருக்கு முதலில் நன்றி சொல்லியாக வேண்டும்.

சந்திப்புக்கான களமாகத் தனது ‘வடக்குவாசல்’இதழ் அலுவலகத்தைப் பெருந்தன்மையோடு அமைத்துத் தந்ததோடு சிற்றுண்டி,தேநீர் முதலிய ஏற்பாடுகளைச் செய்து தந்து, இறுதியில்,இதழ்கள்,நூல்கள் என அன்புப் பரிசுகளையும் கொடுத்து நெகிழ்த்திய ஆசிரியர் பென்னேஸ்வரன்,இச் சந்திப்பின் தொடக்கமாகத் தனது இதழியல்,வலை அனுபவங்களை வந்திருந்த நண்பர்களோடு பகிர்ந்து கொண்டார்.

தரமான பதிவுகளின் தேவை குறித்துத் திரு பென்னேஸ்வரனும்,நானும் எங்கள் கருத்துக்களை முன் வைத்தோம்.
எழுதப் பயிலும் ஆரம்பக் களமாக வலையை வைத்துக் கொள்ளாமல்...ஓரளவாவது வாசிப்பை விரிவுபடுத்திக் கொண்டு பிறகு எழுதுவதே உகந்ததாக இருக்கும்,அதுவே ஒட்டுமொத்தத் தமிழ் வலைகளின் தரத்தை மேம்படுத்தும் என்பது எங்களின் எண்ணமாக இருந்தது.

இணையம் தரும் கட்டற்ற சுதந்திரம், தனிமனித வசை பாடுவதிலும்,துதி பாடுவதிலும் மட்டுமே வீணாகிவிடக் கூடாது என்ற நியாயமான கவலையும் எங்கள் உரையாடலின்போது வெளிப்பட்டது.

வலைகளில் இடம் பெறும் பின்னூட்டங்கள் பற்றிய அவரவர் அனுபவப் பகிர்வுகள் சந்திப்பைச் சுவாரசியமானதாக ஆக்க உதவின.

சந்தித்துக் கொண்ட பதிவர்களை உண்மையிலேயே விரல் விட்டு எண்ணிவிடலாம்(ஒருகைவிரல்!!).ஆனாலும் குறைவானவர்கள் இருந்ததால் ஒரு வசதி.... மனம் விட்டு அவரவர் கருத்துக்களைச் சொல்ல,அறிமுகம் கொள்ள,தங்களின் வலைகளை அங்கிருந்த கணினியில் காட்ட நிறைய நேரம் வாய்த்தது.

சிறுமுயற்சி
என்ற வலைப்பூவில் பல்வேறுபட்ட தன் சிந்தனைகளைப் பகிரும்
முத்துலட்சுமி,(http://click1click.blogspot.com// என்பதும் இவரது வலையே).

கவிதையும்,கவிதை சார்ந்தும்
உயிரோடை யாய்ப் பொழியும் லாவண்யா சுந்தரராஜன்,(அகநாழிகை,உயிரெழுத்து,உயிரோசை போன்ற இலக்கிய,மற்றும் இணைய இதழ்களில் எழுதி வருபவர் இவர்)

சந்தித்ததும்,சிந்தித்ததும் குறித்த தனது கருத்துப் பகிர்வுகளை முன் வைக்கும் வெங்கட் நாகராஜ்,

குறிப்பிட்ட துறைசார் பதிவாக நவீன பாணி ஆடை அலங்காரக்கலை குறித்துத் தன் வலையில் கருத்துச் செலுத்திவரும் விக்னேஷ்வரி

பெரும்பாலும் புகைப்படங்களால் மட்டுமே தன் வலையை அணி செய்யும் மோகன்குமார்,

ஆகியோர்(நானும்,திரு பென்னேஸ்வரனும் நீங்கலாக)அன்றைய சந்திப்பில் கலந்து கொண்ட பதிவர்கள்.
(தில்லியில் இன்னும் கூடச் சில தமிழ்ப் பதிவர்கள் இருப்பதையும் அன்று அறிந்து கொள்ள முடிந்தது)

இளம் தலைமுறைக்கே உரிய உற்சாகத் துடிப்போடு கூடிய மேற்குறித்த பதிவர்களை  நேரில் கண்டு அளவளாவியதும்,அவர்களின் தளங்களைப் பற்றி அறிந்து கொள்ள முடிந்ததும் அன்றைய பொன் மாலையின் பயன்கள்.
தொடர்ந்து அடுத்தடுத்த சந்திப்புக்களுக்கான வாய்ப்பு நேர்கையில் ஆக்க பூர்வமான,கூடுதல் பரிமாற்றங்களுக்கான சாத்தியங்கள் நிகழுமென்ற நம்பிக்கையோடு அந்தச் சந்திப்பை இனிமையாக நிறைவு செய்து கொண்டோம்.

21 கருத்துகள் :

jothi சொன்னது…

தில்லி தமிழ் சங்கம் புகழ் வாய்ந்தது. அதைப் போலவே பதிவர் சங்கமும் உயர வாழ்த்துக்கள்

உயிரோடை சொன்னது…

சுசீலா அம்மா, உங்க‌ளையும் ம‌ற்ற‌ அனைத்து ப‌திவ‌ர்க‌ளையும் ச‌ந்தித்த‌தில் ம‌கிழ்ச்சி, தீவிர‌ இல‌க்கிய‌த்தில் இய‌ங்கும் தாங்க‌ள் ம‌ற்றும் பென்னேஸ்வ‌ர‌ன் போன்றோர் இருந்த‌ அதே இட‌த்தில் நானும் இருந்த‌து பெரும் ம‌க‌ழ்ச்சியை த‌ருகின்ற‌து

முத்துலெட்சுமி/muthuletchumi சொன்னது…

உங்களைப்போன்றவர்களின் வழிநடத்துதலும் கருத்து பரிமாற்றங்களும் எங்களுக்கும் நன்மை பயக்கட்டும் ..:)

☀நான் ஆதவன்☀ சொன்னது…

நல்ல பகிர்வு. நன்றி

☀நான் ஆதவன்☀ சொன்னது…

நல்ல பகிர்வு. நன்றி

துளசி கோபால் சொன்னது…

உங்களை இங்கே 'சந்தித்ததில்' மகிழ்ச்சி.

முத்துவின் இடுகையில் உங்களைச் சும்மாக் கலாய்ச்சதை நீங்க தப்பா எடுத்துக்கமாட்டீங்கன்னு நினைக்கிறேன்.

உங்கள் அறிமுகமும் பதிவர் சந்திப்பு விவரங்களுக்கும் அழகாத் தொகுத்து இருக்கீங்க.

தமிழ்ப்பிரியன் சொன்னது…

நல்ல முயற்சி ! அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

விக்னேஷ்வரி சொன்னது…

எழுதப் பயிலும் ஆரம்பக் களமாக வலையை வைத்துக் கொள்ளாமல்...ஓரளவாவது வாசிப்பை விரிவுபடுத்திக் கொண்டு பிறகு எழுதுவதே உகந்ததாக இருக்கும் //
ஒத்துக் கொள்கிறேன்.

சந்தித்துக் கொண்ட பதிவர்களை உண்மையிலேயே விரல் விட்டு எண்ணிவிடலாம்(ஒருகைவிரல்!!). //
ஹாஹாஹா... சூப்பர்.

துறை சார் பதிவு தவிர அனுபவங்களும் எழுதிருக்கேன்ங்க. ஆனா, என் அனுபவங்கள் கத்துக் குட்டித் தனமானவை. :)

நல்ல தொகுப்பு மேடம். உங்களை விரைவிலேயே மீண்டும் சந்திக்க ஆசை. சந்திப்போம்.

எம்.ஏ.சுசீலா சொன்னது…

பதிவர் சந்திப்புக்கு வாழ்த்துக் கூறிய அனைவருக்கும் நன்றி.

கோமா சொன்னது…

நான் தலை நகரில் இல்லையே என்று வருந்திக் கொண்டிருக்கிறேன்.

எம்.ஏ.சுசீலா சொன்னது…

வந்து விட வேண்டியதுதானே.
கருத்துக்கு நன்றி கோமதி.

நாணல் சொன்னது…

//ஓரளவாவது வாசிப்பை விரிவுபடுத்திக் கொண்டு பிறகு எழுதுவதே உகந்ததாக இருக்கும்,அதுவே ஒட்டுமொத்தத் தமிழ் வலைகளின் தரத்தை மேம்படுத்தும் என்பது எங்களின் எண்ணமாக இருந்தது//

இது ஒரு நல்லெண்ணம்தான். ஆயினும் இதிலும் ஒரு சங்கடம் உண்டு.

நீங்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்னும்போது, உங்கள் வலைப்பதிவர் வட்டத்திற்கு ஒரு வரையறை வந்து விடுகிறது. அதற்குள் தங்களை உட்படுத்தாதோர், உட்படுத்த முடியாதோர், தில்லிவாழ் பதிவராயிருப்பினும் கூட, உங்கள் வட்டத்தில் வரமுடியாது.

அவர்கள் யார்? மெத்தப்படிக்காதோர்; பலநூலகள் அறியாதோர்; வாழ்க்கையில் தான் அன்றாடம் காணும் காட்சிகளையும் அதில் உள்ள நகைச்சுவை, சோகம் இவற்றைப் பிறருடன் பகிர்ந்து கொள்ள விழைவோர்.
இவர்கள் நீக்கப்படுவார்கள். அல்லது உங்களிடம் வந்து சேரமாட்டார்கள். இறுதியில், உங்கள் தில்லிப்பதிவர் வட்டம் வயதானவர்களின் மருத்துமனையாகி விடும்.

எம்.ஏ.சுசீலா சொன்னது…

அன்பு நண்பருக்கு,
எங்கள் வலைப் பதிவர் வட்டம் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற இறுக்கமான விதிகள் எதையும் அன்று நாங்கள் முன் மொழியவில்லை;அதில் அடங்காதவர்கள் விலக்கப்பட வேண்டியவர்கள் என்ற பொருளிலும் நாங்கள் பேசவில்லை.
பரவலான வாசிப்பும்,எழுத்துப் பயிற்சியும் வலைத்தரத்தை மேம்படுத்த உதவும் என்பது ஒரு ஆலோசனையாக,ஒரு அனுபவ வார்த்தையாக மட்டுமே சொல்லப்பட்டது. (உங்களுக்கு வேண்டுமானால் அது முதுமையின் உபதேசமாகப் பட்டிருக்கலாம்)
படிக்காத பாமரனுக்குக் கூடத் தன் ரசனையை,எந்தத் தளத்திலிருந்து வேண்டுமானாலும் பகிரும் உரிமை நிச்சயமாக உண்டு.அதை யாருமே மறுக்கவில்லை;விலக்கவில்லை.
இலக்கியம்,மொழி ஆளுகை குறித்த சில பயிற்சிகள் எழுத்தை மேலும் கூர்மைப்படுத்தும் என்பதே அன்று முன் வைக்கப்பட்ட கருத்து.

சிந்தனையின் இளமைக்கு வயது ஒரு தடையில்லை;
வயதை முன் வைத்து நீங்கள் கூறியுள்ள வார்த்தைகள் தவிர்க்கப்பட வேண்டியவை என்பதை மட்டும் கனிவோடு சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன்.

முத்துலெட்சுமி/muthuletchumi சொன்னது…

@நாணல் ,மேலே அலைவரிசை என்று அவர்கள் எழுதியதை வைத்துக்கொண்டு பின்னூட்டமிட்டுவிட்டீர்கள் என்று நினைக்கிறேன். :)

மற்றபடி சுசீலா அவர்கள் வரையறைகளை வகுத்துக் கொண்டவர்களாக இல்லை. வெறும் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் எங்களிடம் பழகுதற்கு எளியவராகவும் இளையவர்களின் திறனை வெளிப்படையாகப் பாராட்டி ஊக்குவிப்பவர்களாக எங்கள் அலைவரிசைக்கே வந்து பழகியவர்களாகவும் இருந்தார்கள். என் பதிவில் நான் அதனை குறிப்பிட்டிருக்கிறேன்.இங்கேயும் ஒருவொரு பதிவர் பற்றிய குறிப்பிலும் சந்திப்பு பற்றிய இவர்களது மகிழ்ச்சியிலும் அது உங்களூக்குத் தெரிந்திருக்குமே..

சந்தித்த நாங்களெல்லாரும் அவர்களை விட வயதில் மிகச்சிறியவர்கள் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த பதில் உங்களுக்கு எதுவும் தவறாகப்படாது என்று நினைக்கிறேன்.

எம்.ஏ.சுசீலா சொன்னது…

நன்றி முத்துலட்சுமி.
உண்மையில் அன்று உங்களைப் போன்ற இளைய தலைமுறையுடன் உறவாடியபோது நானும் இளமையாகவே உணர்ந்தேன்.
உங்கள் அலைவரிசைக்கு வந்து பேசியது,அதனாலேயே சாத்தியமாயிற்று.36 ஆண்டு ஆசிரியப் பணியில் இளம் மாணவிகளோடு பழகியபோதெல்லாம் அவ்வாறே நான் உணர்ந்துமிருக்கிறேன்.
‘நாணலுக்கு அதை மேலும் தெளிவுபடுத்தியமைக்கு நன்றி.

உயிரோடை சொன்னது…

அன்பின் நாண‌லுக்கு

ந‌ல‌ம் தானே. த‌ர‌மான‌ விச‌யங்க‌ளை வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் ம‌ட்டுமே த‌ர‌ இய‌லுமென்றால் நாங்க‌ள் அனைவ‌ரும் வ‌ய‌தான‌வ‌ர் கூட்ட‌த்தில் இருக்க‌வே பிரிய‌ப்ப‌டுகின்றோம். ந‌ன்கு எழுத‌ நினைக்கும் அனைவ‌ர்க்கும் வாசிப்பை அதிக‌ப்ப‌டுத்திக் கொள்ள‌ வேண்டும் என்ற‌ பொதுவான‌ க‌ருத்தொன்றே ப‌கிர‌ப்ப‌ட்ட‌து.அவ‌ர‌வ‌ர் ர‌ச‌னை சார்ந்து அந்த‌ வாசிப்பினை அவ‌ர்க‌ள் செய்ய‌லாம். இது ஒரு ஆலோச‌னையே. இதில் மெத்த‌ ப‌டித்த‌வ‌ர்க்கு ம‌ட்டுமே இட‌மென்று எங்குமே குறிப்பிட‌ப‌ட‌வில்லை.அப்ப‌டிப்பார்த்தால் வ‌ந்த‌தில் யாருமே மெத்த‌ ப‌டிக்க‌வில்லை என்றே நினைக்கின்றேன்.

எங்க‌ளை பொருத்த‌ம‌ட்டில் சுசீலா அம்மாவும் வ‌ய‌தில் குறைந்த‌வ‌ரே. வ‌ய‌துக்கும் ம‌ன‌திற்கும் என்றும் ச‌ம்ம‌ந்த‌மில்லை என்று உங்க‌ளுக்கு நாங்க‌ள் சொல்ல‌வேண்டுமா என்ன‌?

பெயரில்லா சொன்னது…

சரியான பதிலடி.

Easwaran சொன்னது…

//சந்தித்துக் கொண்ட பதிவர்களை உண்மையிலேயே விரல் விட்டு எண்ணிவிடலாம்(ஒருகைவிரல்!!).//

மகிழ்ச்சிக்குரிய விஷயம்.

இருக்க இடம் இன்றி அரங்கு நிறைந்து தில்லித் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற "மதுரை சின்னபொண்ணு கூத்து" "எஸ். வி. சேகர் நாடக கூத்து" இவற்றை விட சமீபத்தில் நாங்கள் முப்பது பேர் கண்டு களித்த அற்புதமான "வீணை இசை" (இசை கலைஞர் பெயர் தற்சமயம் நினைவுக்கு வரவில்லை. மன்னிக்கவும்)ஆயிரம் மடங்கு உயர்ந்தது.

எனவே, குறைந்த கூட்டமே கோடி இன்பம்.

எம்.ஏ.சுசீலா சொன்னது…

அது உண்மைதான்.குறைவானவர்கள் மட்டுமே கலந்து கொண்டதால் கிடைத்த நன்மையையும் பதிவில் குறிப்பிட்டிருக்கிறேன்.

manjoorraja சொன்னது…

ஆர்வமுள்ளவர்கள் குறைவாக இருந்தாலே நிறை.

நன்றாக பதிந்துள்ளீர்கள்.

லாவண்யா இதைப்பற்றி சொல்லவேயில்லெயே....!

அன்புடன் அருணா சொன்னது…

அட! சந்திக்கும் போது எனக்கும் தகவலனுப்புங்க....முடிந்தால் தில்லியில் வந்து சந்திக்க முயற்சிக்கிறேன்!

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....