துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

31.10.10

வலைப்பூ என்னும் வரம்....

*இணையத்தில் எழுத்துக்களைப் பதிக்கத் தொடங்கி மிகச் சரியாக இரண்டு ஆண்டுகள் நிறைவுற்று (வலைப்பூ தொடங்கியது நவ.2008இல்) மூன்றாம்ஆண்டில் அடி வைக்கும் தருணத்தில் இவ்வார நட்சத்திரப்பதிவராகத்  தமிழ்மணம்  என்னைத் தேர்வு செய்திருப்பதை இந்த வலைத் தளத்துக்குக் கிடைத்த சிறந்த அங்கீகாரங்களில் ஒன்றாகக் கருதுகிறேன்.
தமிழ் மணம் ஆசிரியர் குழுவினருக்கும்,அதன் நிருவாக அமைப்பினருக்கும் உளமார்ந்த நன்றிகளை இதன் வழி உரித்தாக்குகிறேன்.

*கணினியைத் திறப்பதும் படிப்பதுமே 2007 வரை எனக்குத்
   தொலைதூரக் கனவுகளாகத்தான் இருந்து கொண்டிருந்தன;இலக்கிய ஆர்வத்தால்,தமிழின் சிறந்த எழுத்தாளர்களின் வலைப் பதிவுகளைத் தவற விடாமல் உடனுக்குடன் வாசிக்க வேண்டுமென்பதற்காகவே வலை மேயும் கலையை(browsing) ஓரளவு அறிமுகப்படுத்திக் கொண்டாலும் தமிழில் எழுதுவதென்பது , தட்டச்சுப் பொறியைத் தொட்டுக்கூடப் பார்த்திராத எனக்கு மிகப் பெரும் சவாலாகவே இருந்தது.அதையெல்லாம் கடந்து இணைய வாயிலுக்குள் நான் நுழைவதற்கு அடித்தளம் வகுத்து,எனக்குத் தூண்டுதல் அளித்த அனைவரைப் பற்றியும்
(குறிப்பாகக் கணினியை என் கைக்கு வசப்பட வைத்த ஆசிரியர்களான மகள்,மருமகன் ...இப்போது,பேரக்குழந்தைகளும் கூடத்தான்)
என் முதல்பதிவான நுழைவாயிலில் குறிப்பிட்டிருக்கிறேன்;இந்தக்கணத்தில் மீண்டும் ஒரு முறை அவர்களை நன்றியோடு நினைவு படுத்திக்கொள்கிறேன்.

*வலைத் தள/ வலைப்பூ தொழில் நுட்பம் பற்றி எதுவுமே தெரியாமல் வலையைத் தொடங்கி விட்ட நான் ,வலை உதவிப் பக்கங்களின் வழியாகவும்,பிற பதிவர்களின் தளங்களுக்குச் சென்று அவர்களின் வடிவமைப்புக்களை ஊன்றிப் பார்த்தும், உறக்கம் தொலைத்த தனிமையான புதுதில்லிக் குளிர் இரவுகளில்....பல தகவல்களைக் கற்றுக் கொண்டேன்.அவ் வகையில் இணையம் எனக்கொரு போதி மரமும் கூடத்தான்.

வலைப்பூ எழுத வேண்டும் என்ற பொறியை என்னுள் பொதித்து அதற்கு முதல் அடியெடுத்துக் கொடுத்தவர்கள், என் மதிப்பிற்கும் நேசத்திற்கும் உரிய எழுத்தாளர்கள் திரு ஜெயமோகன், திரு எஸ்.ராமகிருஷ்ணன் ஆகிய இருவரும்.. தங்களது பரபரப்பான எழுத்துப் பணிகளுக்கிடையே எனக்காகத் தங்கள் நேரத்தை இவர்களால் எப்படி ஒதுக்க முடிந்தது என்பதை நினைக்கும்போதெல்லாம் என்னால் வியக்காமல் இருக்க முடிவதில்லை.
அவர்களுக்கும் , என் வலைப்பூவுக்கு முதல்வாழ்த்துக்கூறி ஆர்வத்துடன் வரவேற்ற வடக்குவாசல் இலக்கிய இதழின் ஆசிரியர் திரு பென்னேஸ்வரன் அவர்களுக்கும் என் நன்றிகளைப் பதிவு செய்கிறேன்.
வலையின் வடிவமைப்புத் தொடர்பாகவும்,தமிழ் எழுதிகள் தொடர்பாகவும் எனக்கு ஏற்படும் ஐயங்களைத் தீர்த்துக்கொள்ள உதவி நாடியபோது
திரு ஹரன்பிரசன்னா(நிழல்கள்),
திரு குணசீலன்(வேர்களைத்தேடி...),
வசந்தகுமார் (உங்க உறவுக்காரன்பா)என இவர்களோடு ....முகமோ முகவரியோ தெரியாத இன்னும் பலரும் எனக்கு உதவிக் கரம் நீட்ட ஆர்வத்தோடு முன் வந்தனர்.
வந்தேமாதரம்.என்ற வலைப்பூ வழியாகவும் வலையை மேம்படுத்துவதற்கான  பல நெறிமுறைகளை நான் அறிந்து கொள்ள முடிந்தது.
வலையுலகில் நான் நுழைந்திருந்த புதிதில் என் பதிவுகளை வரவேற்றுத் தான் வடிவமைத்திருந்த தேடிவரும் தேன் சிட்டு என்ற வலைசுற்றியில் என்னையும் இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்தார் திரு கபீரன்பன்.
எனினும்,வலை துவங்கிக் கிட்டத்தட்ட ஓராண்டுக்கும் மேலாகத் திரட்டிகளில் -குறிப்பாகத்  தமிழ்மணம் ,தமிழிஷ்(இப்போதைய இண்ட்லி),தமிழ்வெளி போன்ற முதன்மையான தொகுப்புக்களில் என் பதிவைச் சமர்ப்பித்தால் மட்டுமே வாசக எண்ணிக்கை அதிகரிக்கும் வாய்ப்பிருக்கிறது என்பதை உண்மையாகவே நான் அறிந்திருக்கவில்லை.மற்றவர்களின் தளங்களைப் பார்த்துத் தமிழ்மணம் பதிவுப்பட்டையை இணைக்க முயன்றபோது நான் அப்போது வைத்திருந்த அடைப்பலகை (டெம்ப்லேட்)அதை ஏற்க மறுத்து முரண்டு பிடித்தது;தமிழ்மணம் நிர்வாகிகளிடம் கேட்டபோது அடைப்பலகை மாற்றுவதைத் தவிர வழியில்லை என்றனர்.நானும் சளைக்காமல் கடந்த ஓராண்டுக் காலமாக என் பதிவுகளைத் தொடர்ந்து மேற்குறித்த தளங்களில் தனியே சமர்ப்பிக்கத் தொடங்கினேன்.அவற்றால்,வாசக எண்ணிக்கை பல மடங்கு பெருகியது எனக்கு மகிழ்ச்சியும்,உற்சாகமும் அளித்தது.
இப் புத்தாண்டின் தொடக்கத்தில் -அடைப்பலகைமாற்றம் இல்லாமலேயே- தமிழ்மணம் பதிவுப்பட்டை தானாகவே என் தளத்தில் இயங்கத் தொடங்கி இன்ப அதிர்வுகளைத் தந்தது.இப்போது அதே தமிழ்மணம் என்னை நட்சத்திரப்பதிவராக்கி மற்றொரு இனிய அதிர்ச்சியைத் தந்திருக்கிறது

* இளமைக்காலம் முதலே இதழியல் துறைக்குச் செல்ல வேண்டும் என்று என்னுள் கனன்று கொண்டிருந்த தணியாத ஆர்வத்திற்கு வலைப்பூவை ஒரு வடிகாலாக்கிக் கொண்ட நான் , இந்த வலைப்பூவைத் தொடங்கும்போதே அதன் உள்ளடக்கம் பற்றிய தெளிவான சில நோக்கங்களை வலைப்பூவின் இலக்கு என வகுத்துக்கொண்டேன்.கவிதை,கட்டுரை,சிறுகதை,நூல் மதிப்புரை எனத் தமிழ் வார மாத இதழ்கள் பலவற்றிலும் என் ஆக்கங்கள் வெளிவந்திருந்தாலும்,குறிப்பிட்ட சில துறைகளில்மட்டுமன்றிப் பரவலான பல தளங்களிலும் கருத்து வெளியிடும் சுதந்திரத்தைப் பிறரின் பரிசீலனைக்குக் காத்துக் கொண்டிருக்காமல் வாசகப் பார்வைக்கு வைக்கும் வாய்ப்பை இணையம் எனக்கு வழங்கியது;அச்சு ஊடகத்தின் அடுத்த வளர்ச்சி நிலையாகிய இணைய எழுத்தில் பங்களிப்புச் செய்து உடனுக்குடன் வாசக வருகையையும்,அவர்களின் எதிர்வினை/மற்றும் மறுமொழிகளையும் அறிந்து கொள்ளும் வசதி மேலும்மேலும் எழுத எனக்கு ஊக்கமும் உத்வேகமும் அளித்தது.
சமூகத்தின் மேன்மைகளையும்,சிறுமைகளையும் என் கண்ணோட்டத்தில் வழங்கவும்,நான் ரசிக்கும் இலக்கியப் படைப்புக்களை விமரிசனப் பார்வையுடன் விவரிக்கவும்,இதழ்களில் வெளியான எனது சிறுகதை,கட்டுரைப் படைப்புக்களை இணையத்தில் சேமித்து- அதே வேளையில் வாசகர்களின் பார்வைக்கு முன் வைக்கவும்,நான் மேற்கொள்ளும்பயண அனுபவங்களை நானே எடுக்கும்புகைப்படங்களோடு பகிர்ந்து கொள்ளவும்,திரைப்பட ரசனை மற்றும் விமரிசனங்களை வெளியிடவும்,இவ் வலைப் பூவைப் பயன்படுத்திக் கொண்டேன்.வெறும் பொழுதுபோக்காக மட்டுமல்லாமல் சற்றுக் கனமான விஷயங்களைக் கொடுத்தாலும் நல்ல வாசகர்கள் அதை ஏற்பார்கள் என்பதை அவர்களின் வருகையும்,கருத்துரைகளும்,இப்போது தமிழ்மணம் தந்திருக்கும்  அங்கீகாரமும் எனக்கு உறுதிப்படுத்தி இருக்கின்றன.
*வலைப்பூவால் எனக்கு வாய்த்த மற்றுமொரு நன்மை ,ஒத்த அலைவரிசையில் இயங்கும் பல நல்ல நண்பர்களை இனம் காணும்பேறு.
 குரலோ முகமோ பழக்கமில்லையென்றாலும்கூடப் பதிவைப் பார்த்துவிட்டுப் பல நாடுகளிலிருந்து கருத்துப் பகிர்வு செய்தும்...,சில வேளைகளில் உரிமையோடு கடிந்து கொண்டும்...வயது வேறுபாடு பாராட்டாமல் அக்கா,அம்மா,சேச்சி,ஜீ என்று பற்பல விளிச் சொற்களில் தங்கள் தோழமையை விதம் விதமாகப் பதிவு செய்து ....வாய்ப்புக் கிடைத்தால் நேரிலும் கூட வந்து பார்த்துத் தங்கள் அன்பை மழையென வர்ஷிக்கும் இனிய நட்புக்களை  உருவாக்கித் தந்த இணையச் சாளரமான வலைப்பூ என்னைப் பொறுத்தவரை ஒரு வரம்தான்.
*வலைத் தொழில் நுட்பம் பற்றி மட்டுமல்லாமல்,மிகத் தேர்ந்த பல இலக்கிய,தத்துவ,வரலாற்று விமரிசன தரிசனங்களையெல்லாம் தமிழில் படிப்பதை இணைய வாசிப்பு, எனக்குச் சாத்தியமாக்கியுள்ளது.
எந்தெந்தத் திசைகளிலிருந்தெல்லாம் எவ்வாறான பயனுள்ள ஞானங்கள் வந்து சேர்கின்றனவோ...அவை அனைத்துக்கும் இவ் வேளையில் என் வந்தனங்கள்..
 ...

பி.கு:
ஊடறு,சொல்வனம் முதலிய இணைய இதழ்கள் என்னிடமிருந்து கட்டுரை பெற்று வெளியிட்டிருக்கின்றன.பதிவுகள் என் கட்டுரைகள் சிலவற்றை மீள்பதிவு செய்திருக்கிறது.
 திரு ஜெயமோகனின் ஒரு பதிவில் இத் தளம் குறித்த அறிமுகம் இடம் பெற்றிருக்கிறது.
தினமணி நாளிதழில் (1.1.2010)-திரு மணிகண்டன் அவர்கள் எழுதியுள்ள 
என்னும் கட்டுரையில் இந்த வலைத் தளம் பற்றிய குறிப்பும் இடம் பெற்றிருக்கிறது.
லேடீஸ் ஸ்பெஷல்,தில்லிதமிழ்ச்சங்க வெளியீடாகிய சங்கச் சுடர் ஆகியவற்றில் இத் தளம் பற்றிய குறிப்பு இடம் பெற்றிருக்கிறது.

இருந்தபோதும் இன்னும் கடக்க வேண்டிய தொலைவுகளும் எட்ட வேண்டிய இலக்குகளும் எஞ்சியிருக்கவே செய்கின்றன....
அதை நோக்கிய பாதையில் என் பயணம் நீள்கிறது.......




44 கருத்துகள் :

முத்துலெட்சுமி/muthuletchumi சொன்னது…

மூன்றாம் வருடத்தொடக்கத்திற்கு வாழ்த்துக்கள்.
நட்சத்திரவாழ்த்துகளும்..சுசீலாம்மா :)

முத்துலெட்சுமி/muthuletchumi சொன்னது…

வேர்ட் வெரிஃபிகேசன் எடுத்துடுங்க.. பின்னூட்டம் போட சிரமாச்சே எல்லாருக்கும்..

சந்தனமுல்லை சொன்னது…

நட்சத்திர வாழ்த்துகள் :-)

எம்.ஏ.சுசீலா சொன்னது…

எடுத்து விடுகிறேன் முத்து.உங்கள் வாழ்த்துக்கு நன்றி.உங்களைப் போன்ற இளம் நண்பர்களை வலைதான் எனக்குப் பெற்றுத் தந்தது.அத்னால் எப்போதும் இளமையாக உணரவும்,உற்சாமாகச் செயல்படவும் முடிகிறது.நன்றி...

ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

நட்சத்திர வாழ்த்துக்கள் சுசீலா மேடம்!

மங்குனி அமைச்சர் சொன்னது…

vaalththukkal medam

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

நட்சத்திர வாழ்த்துக்கள் பேராசிரியரே..

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

நட்சத்திர வார வாய்ப்பு தங்களுக்குக் கிடைத்தது கல்விப்புலம் சார்ந்த தமிழாய்வாளர்களுக்குகக் கிடைத்த பெரும் ஊக்கமாகும்.

தொடர்ந்து பலருக்கு தங்கள் வழிகாட்டியாக பல ஆக்கங்கள் படைக்க வாழ்த்துக்கள்

எம்.ஏ.சுசீலா சொன்னது…

நன்றி திரு குணசீலன்.தங்கள் தளத்தை முன்னோடியாகக் கொண்டுதான் பல வலைத்தொழில் நுட்பங்களை-குறிப்பாக என் எச் எம் எழுதி போன்றவை-
நான் கற்றுக் கொண்டேன்.பல அரிய ஆலோசனைகளையும் வழங்கியிருக்கிறீர்கள்.அதையும் பதிவில் குறிப்பிட்டிருக்கிறேன்.உங்கள் வாழ்த்துக்கு நன்றி.
அதிருக்கட்டும்..புது மணவாழ்வு எவ்வாறு உள்ளது?துணைவியார் நலம்தானா.

என்னது நானு யாரா? சொன்னது…

பெண்கள் விடுதலைப் பற்றி நீங்கள் சொல்லும் தகவல்கள் மிக மிக அருமை. அதற்காகவும் இன்னும் பலப் பதிவுகளாலும் நீங்கள் தமிழ்மண நட்சத்திரப் பதிவராகத் தேர்ந்து எடுக்கப்பட்டீர்கள் என அறிந்துக்கொள்ளும் போது மனசில் குதூகலம் பிறக்கிறது. வாழ்த்துக்கள் அக்கா! உங்கள் வள்ர்ச்சி எல்லோருக்கும் பயனாக இருக்கிறது. தொடருங்கள். நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்.

எம்.ஏ.சுசீலா சொன்னது…

வாழ்த்துக் கூறிய நேச நெஞ்சங்களுக்கு நெகிழ்வோடான என் நன்றிகள்.....

பாச மலர் / Paasa Malar சொன்னது…

பாத்திமா கல்லூரியில் நான் ஆங்கில இலக்கியம் நான் பயின்ற காலத்தில், தமிழ்த்துறையில் பேராசிரியாகப் பணியாற்றிய உங்களிடம் தமிழ் பயிலும் வாய்ப்பு கிடைக்கவில்லையே என்று நானும் என் தோழிகளும் வருந்திய காலம் உன்டு. தமிழ்மணத்தின் வாயிலாக, நட்சத்திரமாய் உங்களைக் கண்டதில் மிக்க மகிழ்ச்சி...வாழ்த்துகளும் வணக்கங்களும்...

இது போன்ற தொடர்பினை ஏற்படுத்திக் கொடுக்கும் வலைப்பூ உண்மையிலேயே ஒரு வரம்தான்...

Ahamed irshad சொன்னது…

நட்சத்திர வாழ்த்துக்கள்...

எம்.ஏ.சுசீலா சொன்னது…

மிக்கநன்றி..பாசமலர்...இணையம் வழி நம் கல்லூரி முன்னாள் மாணவிகளைச்சந்திக்க முடிவது எனக்கும் கிளர்ச்சியூட்டும் அனுபவம்தான்.உங்களைச் சந்திக்க நேர்ந்ததில் நான் கொண்ட ஆனந்தத்துக்கு அளவில்லை..முடிந்தால் என் மின் அஞ்சலுக்கு susila27@gmail.com உங்களைப் பற்றிய விவரத்தைத் தனியே எழுதுங்கள்.காத்திருக்கிறேன்.

சென்ஷி சொன்னது…

நட்சத்திர வாழ்த்துகள்!

வெங்கட் நாகராஜ் சொன்னது…

அம்மா, தமிழ்மணம் உங்களை நட்சத்திர பதிவராக தேர்ந்தெடுத்தற்கும், உங்கள் வலைப்பூ மூன்றாம் ஆண்டில் இருப்பதற்கும் வாழ்த்துக்கள். உங்கள் போன்றவர்களின் எழுத்துக்கள் எங்களுக்கு ஊக்கமளித்துக் கொண்டு இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.

வெங்கட் நாகராஜ்

Starjan (ஸ்டார்ஜன்) சொன்னது…

வாழ்த்துகள் சுசீலாம்மா.. தமிழ்மணம் நட்சத்திரமாக ஜொலிக்க வாழ்த்துகள்.

SUMAZLA/சுமஜ்லா சொன்னது…

அம்மா,

வாழ்த்துவதற்கு எனக்கு வயதில்லை..... பெருமிதப்படுகிறேன்.
பதிவுலகில் ஒரு மைல்கல்லைத் தொட்டிருக்கிறீர்கள்.....
சோர்வுற்ற போது சோதரியாய், தாங்கள் எனக்கு அளித்த ஆறுதலும், தேறுதலும் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாது. தங்கள் தைரியம் வாழ்க! தங்கள் பணி ஓங்குக!!
மாசு மறுவில்லாத பனிமலைத் தொடரைப்(டெம்ப்ளேட்) போல உங்கள் பயணம் என்றும் தொடர்ந்திட வேண்டும்! நீல மலைத் தொடரின் நித்தியத்தைப் போல தங்கள் புகழ் நிரந்தரமாக வேண்டும்!!

பொன் மாலை பொழுது சொன்னது…

இதுபோன்ற அங்கீகாரங்கள் தங்களைப்போன்ற துறைசார் வல்லுனர்களுக்கு கிடைப்பதில் மிக்க மகிழ்ச்சி. தரமான , மேன்மைக்கு தேவையான வழிமுறைகள் உங்களிபோன்ற கற்ற சான்றோர்களிடமிருந்து நம் இளந்தலை முறைகளுக்கு கிடைக்கவேண்டும் என்பதில் ஆர்வம் உள்ளவன். வெறும் வேடிக்கையும் ,கேளிக்கையும் நிரம்பி வழியும் இதுபோன்ற தளங்களில் தங்களின் ஆக்கங்களும் நிறைய இடம் பெறவேண்டும். மூன்று ஆண்டுகள் நிறைந்து, இவ்வார நட்சத்திர பதிவராக தாங்கள் தேர்வாகியுள்ளது அறிந்து மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

நட்சத்திர வாழ்த்துக்கள் அம்மா.

பெயரில்லா சொன்னது…

வாழ்த்துக்கள் அம்மா.
நட்புடன்,
ஜிஜி
http://vaarthaichithirangal.blogspot.com/

வாழ்த்துக்கள் அம்மா
Lavanya Sundararajan

பாரதி மணி சொன்னது…

என உளங்கனிந்த வாழ்த்துகள், சுசீலாம்மா!

அன்புடன்,
பாரதி மணி

suneel krishnan சொன்னது…

அம்மா
மிக்க மகிழ்ச்சி .தமிழ் மனம் உங்களை அங்கீகரித்ததில் மெத்த மகிழ்ச்சி அடைகிறேன் .
தொடர்ந்து நீங்கள் என்றும் இன்றைப்போல் உற்சாகமாக எழுத வேண்டும் ,நீங்கள் எனது ஊரை சேர்ந்தவர் என்பதில் சற்றே கூடுதல் பெருமையும் அடைகிறேன் .

ராமலக்ஷ்மி சொன்னது…

நட்சத்திர வாழ்த்துக்கள்!

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

வாழ்த்துக்கள் அம்மா .

எம்.ஏ.சுசீலா சொன்னது…

நண்பர்களுக்கு நன்றி,திரு கக்கு-மாணிக்கம் குறிப்பிட்டிருப்பது போல இதை எனக்குக் கிடைத்த அங்கீகாரமாகக் கருதுவதை விட..சற்றுப் பயனுள்ள உள்ளடக்கங்களுக்குக் கிடைத்த சான்றிதழாகவே எண்ணுகிறேன்.அந்த வழியில் நான் தொடர்ந்து பயணிக்க நீங்கள் அனைவரும் எனக்குத் தோன்றாத் துணையாய் உடன் நிற்கிறீர்கள்.

எம்.ஏ.சுசீலா சொன்னது…

வாழ்த்துக்கள்!
சினிமா விரும்பி
http://cinemavirumbi.blogspot.com/
எம்.ஏ.சுசீலாவால் உள்ளிடப் பெற்றது.

Jackiesekar சொன்னது…

வாழ்த்துக்கள்...

Jerry Eshananda சொன்னது…

அம்மா ..ஏற்கெனவே ஜொலித்து க்கொண்டு தான் இருக்கிறீர்கள்...இப்போ..தமிழ்மண நட்சத்திரம் வேறு........கலக்குங்கள்.

மோகன்ஜி சொன்னது…

பேராசிரியை அவர்களுக்கு.. முதலில் என் வாழ்த்துக்கள்.. இத்தகு அங்கீகாரங்களுக்கு நீங்கள்
முற்றிலும் தகுதியானவர்.
நான் சகோதரர் ஜெயமோகன் வலைப்பூவின் வாசகன். அங்கு உங்கள் பின்னூட்டங்களைக் கண்டு உங்களையும் படித்து வருகிறேன்..
பல துறைகளிலும் இயல்பாக எழுதும் உங்கள் "ஆசிரிய நடை " என்னைக் கவர்ந்தது. மேலும் மேலும் எழுதுங்கள்.. தமிழை எழுதுதற்கான பாக்கியத்தை விட வாழ்க்கையில் நமக்கு வேறு பெரிய அங்கீகாரம் உண்டா சகோதரி? மீண்டும் தமிழ் வாழ்த்துக்கள்.

ஷஹி சொன்னது…

மிக்க மகிழ்ச்சி அம்மா...வாழ்த்துக்கள்..

cheena (சீனா) சொன்னது…

அன்பின் மூத்த சகோதரி சுசீலா

ஆசிரியப் பணியே அறப்பணி - அதற்கே உனை அர்ப்பணி என - கடமையே கண்ணாக 36 ஆண்டுகள் தமிழ்ப் பணியாற்றி - பணி நிறைவு செய்தமை பாராட்டத் தக்கது. நான் நேற்றைய தினம் தான் 36 ஆண்டுகட்குப் பிறகு பணி நிறைவு செய்தேன். எங்கள் பகுதியில் உள்ள பள்ளத்தூர் - காரைக்குடியில் பயின்றவர் நீங்கள். மூன்றாம் ஆண்டு துவங்கும் வலைப்பூவில் நடசத்திரப் பதிவரகாத் தேர்ந்தெடுத்த தமிழ் மணத்திற்கு நன்றி. நல்வாழ்த்துகள் சகோதரி சுசீலா . நட்புடன் சீனா

அண்ணாமலையான் சொன்னது…

வாழ்த்துக்கள்...

Mahi_Granny சொன்னது…

வாழ்த்துக்கள்

Unknown சொன்னது…

வாழ்த்துக்கள் அம்மா.

மதுரை சரவணன் சொன்னது…

நல்லதொரு அறிமுகத்துடன் ஆரம்பம்.. நல்ல நினைவலைகளுடன் எங்களுக்கும் உங்கள் எழுத்து ஒரு ஆர்வத்தையும் , ஊக்கத்தையும் தருகிறது.. வாழ்த்துக்கள்.

Balachandran சொன்னது…

எனது உளம் கனிந்த வாழ்த்துக்கள். உங்களுடைய வலைப்பூவைப் படித்து நானும் தமிழில் கணினியில் எழுத வேண்டும் என்ற தூண்டப்பட்டு NHM Writer download பல மாதங்கள் முன்பே செய்திருந்தாலும் இன்று முதல் தடவையாக எழுத ஆரம்பித்து அது உங்களுக்கு வாழ்த்து சொல்லும் வாய்ப்பாக அமைந்திருப்பது எனது பெரும் பாக்கியமாகக்கருதுகிறேன். எல்லாம் வல்ல இறையாற்றல் உங்கள் உன்னதமான கருத்துக்களை உலகெங்கும் பரப்பி மனித வாழ்க்கையில் அன்பும் கருணையும் மலர வழி செய்யட்டும்.வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! வளர்க உங்கள் சமுதாயப்பணி!!

அ.வெற்றிவேல் சொன்னது…

மதிப்பிற்குரிய அம்மா.. தங்களின் தளம் நான் மிகவும் விரும்பிப் படிக்கும் தளங்களில் ஒன்று..
முன்னரே நன்கு அறிமுகமான தளம். இப்பொழுது தமிழ்மணம் நட்சத்திரமாக.. இன்னும் பலரைச் சென்றடைய வாய்ப்புகள் அதிகம்...வாழ்த்துகள் அம்மா..

எம்.ஏ.சுசீலா சொன்னது…

வலைக்குள் வந்து கருத்துப் பதித்தவர்கள் தவிர...ஃபேஸ்புக்,அரட்டைப்பெட்டி(சாட்)எனப் பலவற்றிலும் வந்து வாழ்த்துச் சொன்ன அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றி.
பாலா ஐயா இணையத்தில் தமிழ் எழுதத் தொடங்கி விட்டதற்கு நானும் ஒரு சிறு காரணம் என்பதில்மகிழ்ச்சி.

கோமதி அரசு சொன்னது…

நட்சத்திர வாழ்த்துக்கள்!

மூன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைப்பதற்கு வாழ்த்துக்கள்!

துளசி கோபால் சொன்னது…

அடடே...... நீங்களா!!!! வாங்க வாங்க. இனிய நட்சத்திர வாழ்த்து(க்)கள்.

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

நட்சத்திர வாழ்த்துகள்.

தருமி சொன்னது…

மதுரையிலிருந்து -- நட்சத்திரத்திற்கு ஒரு வாழ்த்து

சித்திரவீதிக்காரன் சொன்னது…

தங்களைப் போன்ற தமிழாசிரியர்கள் வலைஉலகத்திற்குள் வரும்போதுதான் தமிழினி மெல்ல வளரும். தாங்கள் மதுரை என்பதால் இன்னும் பெருமிதம் கொள்கிறோம். நன்றி.
www.maduraivaasagan.wordpress.com

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....