’’இதை விடவும் உன்னதமான உக்கிரமான வாசிப்பின் தருணங்களைத் தரும் ஜெயமோகனின் கதைகள் பல இருப்பது உண்மைதான் என்றாலும் குறிப்பிட்ட இந்தக் கதை நம்முள் நிகழ்த்தும் மாயமும் , என்றென்றும் நிலையான மானுட அறத்தின் சன்னதமேறிய வெளிப்பாடும் நம் உள் நரம்புகளுக்குள் ஒருகண அதிர்வையாவது ஏற்படுத்தாமல் நழுவிச் சென்று விடுவதில்லை’’
தங்கள் புலமைத் திறனும் எழுத்தின் வீச்சும் ஒருவரை வாழ்விக்கவும்,தாழ்விக்கவும் வல்லது என்ற புலமைச் செருக்கு அல்லது
தங்களது படைப்பின் மீது கொண்ட அசாத்தியமான நம்பிக்கை அகத் தூண்டுதலளிக்க ,அதன் வழிகாட்டுதலுடன் தங்கள் அறச் சீற்றத்தைப் பாடல்களில் பதிவு செய்த புலவர்களும் ,அந்தச் சீற்றத்தின் வெம்மையால் தாக்குண்ட அரசர்களும் வாழ்ந்திருந்த வரலாறுகள் நம்மிடையே உண்டு.
இரண்டாம் நந்தி வர்ம பல்லவன் தன் தாய்வழி உறவுகளை ஒழித்தபோது அதில் வாரிசாக இருந்த ஒரு கவிஞன், நந்தியைப்பற்றி அறம்பாட அவ்வாறு எழுந்த நூலே நந்திக்கலம்பகம்.
நந்திக் கலம்பகப் பாடல்கள் முழுவதுமே அறம் வைத்துப் பாடப்பட்டவை என்ற உண்மையை நன்கு தெரிந்திருந்தும் , தமிழைக் கேட்க வேண்டும் என்பதற்காகவே நந்திவர்மன்,தன் அரண்மனையிலிருந்து மயானம் வரை ஒவ்வொரு பாட்டுக்கும் ஒரு பந்தல் போடச் சொல்லிகேட்டுக் கொண்டே மயானம் வரை சென்றான் என்றும், ஒவ்வொரு பந்தலை விட்டு அவன் நகரும்போதும் அது எரிந்தது என்றும் கடைசிப்பாடலை அவன் சிதை மீது அமர்ந்து கேட்டான் என்றும் இலக்கியக் குறிப்புக்கள் கிடைக்கின்றன...
30 ஆண்டுகளுக்கு முன்பு, ’80 களில் - கண்ணதாசனின் பாடல்(அல்லது-கவிதை) குமுதத்தில்
வாரம் ஒன்றாகத் தொடர்ந்து வெளி வந்து கொண்டிருந்தபோது அவரது சுற்றத்தில் ஒரு குழந்தை பிறந்திருந்தது.அதை வைத்து
''அவனை எழுப்பாதீர் அப்படியே தூங்கட்டும்
கண்ணை விழித்திந்தக் காசினியைக் காணுகையில்
என்னென்ன இடர் வருமோ எங்கே துயர் வருமோ
மோதல் வருமோ முறைகெடுவார் துயர் வருமோ''
என்றெல்லாம் வரிசையாக அடுக்கிக் கொண்டே போய்ப் பாடலாக்கி வெளியிட்ட்டார் அவர்.
ஒரு சில வாரங்களிலேயே அந்தக் குழந்தை தற்செயலாக இறந்துவிட..
''அவனை எழுப்பாதீர் அப்படியே தூங்கட்டும்
என்று நான் எழுதியதன் ஈரம் புலருமுன்
அந்த மகன் தூங்கி விட்டான்
அறம் பாடி விட்டேனோ அறியேன்..''
என்று பதறிய வண்ணம் அடுத்த கவிதையை எழுதி அது அக்குழந்தையின் புகைப்படத்தோடு குமுதம் இதழில் பிரசுரமானதும் கூட நினைவிருக்கிறது.
குழந்தையின் மரணம் ஒரு தற்செயல் நிகழ்வாகத்தான் இருக்க முடியும் என்றாலும், அதை அவரது மனம் அறம் பாடும் மரபோடு முடிச்சுப்போட்டுப் பார்த்திருக்கிறது
அறம்பாடுதல் என்ற பழ மரபின் வேர் பற்றியிழுத்து இன்றைய நவீனச் சிறுகதைக்கண்ணியில் தொடுத்து அறம் சார்ந்த பல கேள்விகளை முன் வைக்கிறது,அண்மையில் தனது இணையத்தில் எழுத்தாளர் ஜெயமோகன் வெளியிட்டிருக்கும் ‘அறம்’ சிறுகதை.
ஆழ்ந்த வாசிப்புக்கு மட்டுமே அர்த்தமாகிறவை ஜெயமோகனின் படைப்புக்கள் என்ற பொதுவான வாசகக் கருத்தாக்கத்தைத் தகர்த்தெறிந்து,புதிதாகப் பிரவேசிக்கும் வாசகர்கள் கூட எளிதாக மனங்கொள்ளத் தக்க வகையிலான பல நேரடிப்புனைவுகளை நடப்பியலின் எளிய வாழ்க்கைச் சித்திரங்களாய் அவ்வப்போது உருவாக்கி வருபவர் அவர்.
இது அப்படிப்பட்ட கதைகள் அவரிடமிருந்து உதிரும் காலம்..
அவரது படைப்புக்களுக்குள் பிரவேசிக்கவிரும்புபவர்கள்,இந்தக் கணத்தைப் பிடித்துக் கொண்டு, ‘அற’த்தைப் பற்றியபடி மேலேறிப் பயணப்படலாம்..
வறுமையில் வாடிய சமகாலப் படைப்பாளி ஒருவரை நம் மனக் கண்முன் நிழலாட விட்டபடி, அவர் யாரென்று கண்டுபிடிக்கும் ஆர்வத்தூண்டலைக் கதையின் முற்பகுதி ஏற்படுத்தினாலும், அதை விடவும் உக்கிரமான தருணங்கள் அடுத்தடுத்து நேர்ந்து கொண்டே போக...,முன்னதைக் கை விட்டு விட்டு ,மனித குலத்தின் சாஸ்வதமான கேள்வியாகிய எது அறம் என்ற தேடலுக்குள் நம்மை மூழ்கடித்து விடுகிறது சிறுகதை.
அறம் பாடும் புலவன்,அறமாகவே வாழ்ந்த ஆச்சி என்று அந்தக் கதை விரிக்கும் பாத்திரச்சித்திரங்கள்,
இரு அறங்களும் ஒன்றோடொன்று மோதி முரணுதல்,.
இறுதியில் புலவனின் அறம் கூற்றாகி விடாமல் ஆச்சியின் அறம் அரண் செய்து காத்தல், 4 அணாவுக்கும்,8 அணாவுக்கும் நம் முன்னோடிக் கலைஞர்கள் , போகாத வாசலுக்கெல்லாம் போக நேர்ந்த கொடுமைகள், .
படைப்பாளியின் கொடிய வறுமை அப்போதைக்கு அவன் படைப்பைச் சாய்த்தாலும் அவன்அறம் பாடும் வேளையில் புற்றிலிருந்து சிலிர்த்தெழும் நாகம் போல அது முன்னைக் காட்டிலும் பன்மடங்கு வீரியம் கொண்டு - தன்னைத்தானே உசுப்பிக் கொண்டு சிலிர்த்தெழுதல்,
கதையின் காட்சிப்படுத்தல், உரையாடல், தஞ் சை மண்ணின் - படைப்பாளிகளின் பின்புலம்
என இக் கதியின் வாசிப்பனுபவம்... ஒரு பரவசப் பேரானந்தம்.
.
இதை விடவும் உன்னதமான உக்கிரமான வாசிப்பின் தருணங்களைத் தரும் ஜெயமோகனின் கதைகள் பல இருக்கலாம் ; என்றாலும் குறிப்பிட்ட இந்தக் கதை நம்முள் நிகழ்த்தும் மாயமும் , என்றென்றும் நிலையான மானுட அறத்தின் சன்னதமேறிய வெளிப்பாடும் நம் உள் நரம்புகளுக்குள் ஒருகண அதிர்வையாவது ஏற்படுத்தாமல் நழுவிச் சென்று விடுவதில்லை.
‘அறம்’ பிரபஞ்ச வாழ்வின் ஒரு சிறு துளி
வாழ்க்கையின் சத்தியத்தைப் பேசும் துளி...
அன்று அறம் பாடிப் பற்ற வைத்த நெருப்பு , இங்கும் பற்றிக் கொள்ளத்தான் செய்கிறது...
நம் உள்மனங்களில் ..!
இச் சிறுகதை ஏற்றி வைக்கும் அறிவின்சுடராய்,மெய்யறத்தின்துலக்கமாய்!
23 கருத்துகள் :
A very good review and intro for new readers also . Thanks madam
கண்ணதாசனின் 'அவனை எழுப்பாதீர்கள்' நினைவிருக்கிறது. தொடர்ந்து நிகழ்ந்த மரணம் பற்றி இதுவரைத் தெரியாது. திடுக்கிட வைத்தது.
ஜெயமோகனின் கதையைப் படிக்கப் போகிறேன். இதற்கு முன் சிலமுறை அவருடைய இணையதளத்திற்குச் சென்றிருக்கிறேன் - உங்கள் தளத்திலிருந்து. ஒன்றுமே புரியவில்லை அவர் எழுத்தில்.
இப்போ படிச்சுட்டு நேரே இங்கே வந்தேன். நீங்க எழுதியிருப்பது போல எனக்கு வரவில்லை. நடந்து போனவன் கண்ணுக்குத் தெரியாத சுவர்ல முட்டி நெத்தியில கட்டினது மாதிரி ஒரு உணர்ச்சி அவர் கதையைப் படிச்சதும். அறிமுகத்துக்கு நன்றி.
'நந்திகலம்பகம்' நீண்ட வருடங்களுக்கு பின் உங்கள் பதிவை படித்ததில் நினைவு கூர்ந்தேன். நன்றி!
கண்ணதாசன் பற்றி நீங்கள் எழுதி இருப்பது நான் கேட்டறியாத ஒன்று. நீங்கள் குறிப்பிட்டுள்ள ஜெயமோகனின் 'அறம்' நிச்சயம் படிக்கிறேன். இதுவரை அவர் கதைகளை படித்ததில்லை. நீங்கள் எழுதி இருப்பது போல் 'அறத்தை' பற்றி கொண்டு மேலேறி பயணப் பட வாய்ப்பு ஏற்படுத்தி கொள்ள நினைக்கிறேன்.
ஜெயமோகனின் படைப்புக்களைப் பரவலாகப் பல வாசகர்களிடமும்
கொண்டு போய்ச் சேர்க்க வேண்டும்
என்று நீங்கள் சொன்னபோது ..
ஜெ.எம்மைப் போய் நாம் கொண்டு சேர்ப்பதா என்று.நான் கூட நினைத்தேன்..அரங்கசாமி..!
ஆனால்...அவரது எழுத்து புரியாது என்ற முன் அனுமானத்துடன் அவரது புனைவுகளிலிருந்து விலகியிருப்பவர்களுக்கு இப்படிப்பட்ட நேரடியான கதைகள் பற்றிய எளிதான அறிமுகங்களைத் தருவது அவர்கள் ஜெ.எம்மின் எழுத்துக்குள் வர உதவியாக இருக்கிறது என்பதை இப்போது புரிந்து கொண்டேன்.தாங்கள் இழந்திருப்பது,எவ்வாறான வாசிப்பு அனுபவங்களை என்பதைப் புரிந்து கொண்டு மீண்டும் மீண்டும் அவற்றை நாடி அவர்கள் வரக்கூடுமல்லவா?
திரு அப்பாதுரை,மீனாஷி,
வருகைக்கு நன்றி..
புரியவில்லை என்றே எண்ணியபடி ஜெயமோகனின் எழுத்துக்களிலிருந்து விலகிச்சென்று விடாதீர்கள்.வாழ்க்கை பற்றிய பல தரிசனங்களை அவரை வாசிக்கும் அனுபவம் நமக்குச் சாத்தியமாக்கும்.தொடக்க நிலையில் ஆழ்ந்த வாசிப்புக்குப் பழக்கப்படாத நிலையில் சற்றுக் கடினமாகத் தோன்றினாலும் போகப்போக அந்த எழுத்தின் வீச்சு நம்மைத் தானாகவே ஆட்கொண்டு விடும்.
மிக்க நன்றி. இப்பொழுதான் 'அறம்' சிறுகதையை படித்தேன். நான் படித்த ஜெயமோகனின் முதல் கதை இதுதான். நீங்கள் சொல்வது உண்மைதான், ஆழ்ந்த வாசிப்பில்தான் அவரது எழுத்து வீச்சை உணர முடிந்தது. அந்த உணர்விலிருந்து வெளிவர சிறிது நேரம் பிடித்தது. ஒரு அருமையான சிறு கதையை படித்த நிறைவு மனதில். நன்றி!
நல்லது மீனாஷி,அடுத்ததாக சோற்றுக்கணக்கு என்ற ஒரு கதையும் வந்துவிட்டது.உடன் படியுங்கள்.உலுக்கியெடுத்துவிடும்..
அறம், சோற்றுக் கணக்கு இரு கதைகளையும் படித்து விட்டேன். இரண்டு கதைகளுமே, மனிதன் உண்மையுடன், நல்லவனாக இருப்பதை வலியுறுத்துவது போல இருக்கிறது அல்லவா ?
’வலியுறுத்துவது’என்பதை விடவும், அப்படி உண்மையாகவும்,நேர்மையாகவும் இருக்கிறோம் என்று பிரகடனப்படுத்திக் கொள்ளாமல் - அப்படிப்பட்ட தன்னுணர்வு கூட இல்லாமல் அவற்றை மிக இயல்பாக ஏற்று வாழ்வதே அறம் என்ற சாரமே அக்கதைகளில் பொதிந்திருப்பதாக எனக்குத் தோன்றுகிறது.
செறிவான சிறுகதை.
அந்த எழுத்தாளர் எம் வி வெங்கட்ராம் என்பது என் யூகம்.
கும்பகோணம் என் சொந்த ஊர் என்பதாலும் எம் வி வெங்கட்ராமின் படைப்புகளைப் படித்திருப்பதாலும் எனக்கு இவ்வாறு தோன்றுகிறது.
தவிரவும் கரிச்சான் குஞ்சு, தி ஜா, நெசவுத் தொழில் குறித்த குறிப்புகள், காது கேளாதது பற்றிய செய்தி இவை யாவும் அவரையே ஞாபகப்படுத்துகின்றன.
அறச்சீற்றம் எழுத்தாளருக்கு மட்டும் உரியது இல்லை. எந்தத் தொழில் புரிவோருக்கும் இது உண்டு. நான் இது போல நிறையப் பார்த்திருக்கிறேன். எங்கள் ஊர்ப்பக்கம் சிறு தொழில் நிறுவனங்களை நடத்துவோர் (பித்தளை பட்டறை, ஸ்டெயின்லெஸ் பட்டறை வைத்து நடத்துவோர்) அவர்களுடைய தொழிலாளர்களுக்குச் சம்பளத் தேதியன்று வேண்டுமென்றே காலத்தை நீட்டித்து சம்பளம் கொடுப்பார்கள். தீபாவளித் திருநாளின் போது இன்னும் கொடுமையாக இருக்கும். இந்தக் கதையில் வருவது போலவே அந்த நிறுவனத்தை நடத்துபவரின் மனைவி கணவரின் மேல் எரிந்து விழுந்து தொழிலாளர்களுக்குப் பணம் பட்டுவாடா விரைவில் நடக்க ஏற்பாடு செய்வார்.
மொத்தமாக நமக்குக் கீழே வேலை செய்பவர்களுக்குப் பணம் தர மனம் வராததன் காரணம் என்ன? இது நம் மனத்தின் சிறுமையின் அளவையே காட்டுகிறது:-(
எனக்கென்னவோ ஜெமோவின் எல்லாக் கதைகளுக்கும் இதுபோல ஒரு கோனார் உரை (?!) அவசியம் என்றே எண்ணத் தோன்றுகிறது:-) அந்தக் கதையைப் படிக்கும்போது நிச்சயம் நந்திக் கலம்பகம், கண்ணதாசன் கவிதை போன்ற விஷயங்கள் பொதுவாக யாருக்கும் ஞாபகம் வராது. இதற்குத்தான் ஒரு பேராசிரியை தேவை என்று எனக்குப் படுகிறது:-)
ஜெமோ இதைத்தாண்டி சிறப்பான பல சிறுகதைகளை எழுதியிருக்கலாம்.
ஆனால் இது அச்சு அசலான அனுபவம். அந்த வகையில் என்னளவில் இந்தக் கதை ஒரு விசேஷ அந்தஸ்தைப் பெறுகிறது.
தவிரவும், இந்தக் கதையை எந்தவொரு தொழிலாளியின், அலுவலரின் வாழ்க்கைக்கும் பொருத்திப் பார்க்க முடியும் (universal application). அந்த வகையிலும் இது ஒரு செறிவான கதை.
மேலும் இது போல நிறைய பதிவுகளை இடுங்கள். மிக்க நன்றி.
அடுத்தடுத்த இரு கருத்துரைகளுக்குநன்றி கோபி!
சிறுகதையில் இடம்பெறும் எழுத்தாளர் குறித்த உங்கள் ஊகம் சரியானதுதான்.
பிழைப்புக்காக வெவ்வேறுசிறு நூல்களை அவர் எழுத நேர்ந்ததல்லவா..அந்தப் பட்டியலை இந்தப்பக்கத்தில் நீங்கள் பார்க்க முடியும்.
http://www.viruba.com/atotalbooks.aspx?id=780
எந்தத் தொழில் செய்வோரும் பாதிக்கப்படுகையில் அறச்சீற்றம் கொள்வது இயற்கைதான்.ஆனால் சரஸ்வதி கடாட்சம் பெற்றவர்களின் வாக்கு பலித்து விடுமோ என்றே பரிதவிக்கிறாள் ஆச்சி.
கோனார் நோட்ஸ் என்பதெல்லாம் கொஞ்சம் மிகை கோபி..சற்று முயன்று உள்ளே போனால் ஜெ.மோவை வாசித்துவிடுவது சுலபம்தான்.
அறம் கதை உண்மைச் சம்பவத்தை ஒட்டியதா? 'அதனால் தான் படிக்க முடிந்ததோ?' என்ற எண்ணம் உடனே தோன்றினாலும் ஜெயமோகனின் எழுத்து உள்ளத்தைத் தோண்டியது என்பதும் உண்மை.
விவரத்துக்கு நன்றி கோபி; எம்.வி.வெங்கட்ராமும் நான் படித்ததில்லை. கும்பகோணம் என்பதால் கொஞ்சம் கூடுதலாக வலிக்கிறது!
அருமையான கேள்வி கேட்டீர்கள். செய்த வேலைக்குப் பேசின கூலியைத் தராமல் ஏமாற்றுவது ஏன்? மனித நேயத்தை நாடி பிடித்துப் பார்க்கும் கேள்வி.
மற்ற கருத்தும் சரியே. எங்கள் வீட்டில், வீடு கட்டும் பொழுது சித்தாள் ஒருத்திக்குப் பேசிய கூலியைத் தரவில்லை என்று மேஸ்திரியிடம் சண்டை போட்டு, பிறகு மேஸ்திரிக்கு வக்காலத்து வாங்கிய என் தாத்தாவிடமும் சண்டை போட்டு - மண்ணை வாறித் தூவி சாபம் போட்டுப் போனாள், மறக்கவில்லை. பாருங்கள், அந்த வீட்டில் பதினைந்து வருடங்கள் போல் இருந்தோம்.. சித்தாள் வேலை செய்த ஹால் தரை விரிந்து உடைந்து கொண்டே இருக்கும்.. வருடத்துக்கு ஒருமுறையாவது தரையை திரும்பப் போட்டிருப்போம். உடையும் என்றால் பொலபொல என்று மண் போல் உதிரும் - மொசைக் போட்டும் பயனில்லை! வேறு அடிப்படை காரணம் உண்டு என்று நினைத்தாலும் அந்த சித்தாளுக்கு ஐந்து ரூபாயைக் கொடுத்திருக்கலாமோ மேஸ்திரியும் தாத்தாவும் என்ற் பலமுறை விவாதித்திருக்கிறோம்.
அறம் எங்கே?
//‘ஆமா அறம்தான். ஆனா அது அவகிட்ட இல்ல இருந்தது…’ என்றார்//
நன்றாக இருந்தன கதையும் உங்கள் முன்னோட்டமும்.
நீங்கள் சொன்னது முற்றிலும் உண்மை. கலங்க வைத்தது இரு கதைகளும்.
The following is my view.
Story 'aram' reveals a candid day to day livelihood of a a person who is able to compose poem. 'The Poet' seems neither 'the poet the great' or 'the writer par excellence' as per the portrayal by the Writer J. Her belief that all poets is superficial. I can draw a parallel with worshiping rich persons by ordinary folks. In the story the poet seems not to be a man great order but of great words and he compose a poem out of selfishness and anger. Even he too regrets for the whole stuff later which not distinguishes him from normal people. So, he is not a great soul and the persons like " aachi " are great in number even today. These people are same like the masses who likes MGR, Rajini. Hysteric and fanatic. They seems not looking into truth, rather believing what is apparent.
In spite of all these, I like the way J has written and it gives simplest reading pleasure only than the sample of deep human values and virtues.
In aram the lady's aram seems foolishness and the poet seems to be a ordinary person who is more self serving than otherwise.
The story should read as " ( Mooda)Nambikkai" than "Aram".
I like The Kethel shahib in the Other Story of J. Because he is selfless and serves all.
In Aram the lady may fulfill the poet's demand because of her ignorance and she will do the same even if the poet's claim is false. Because she simply believes that Aram song will spoil my Sect. There is selfishness and foolishness in her. She may not feed the right person who needs food, knowledge and livelihood. In day to day life even though all of us are like that I do not think the lady in the story needs to be credited with keeping " Aram". Most of the readers writing reveal that they thing the lady is the special Kannagi.
K.Muthukumar
அன்புள்ள நண்பருக்கு,
‘அறம்’கதை குறித்த உங்கள் அடிப்படைப் புரிதலே பிழையானதாகவும்,முன் அனுமானங்களுடன் கூடியதாகவும் தோன்றுகிறது.
கதையில் வரும் எழுத்தாளர்,ஆச்சி இருவரின் அற உணர்வுகளையுமே கேலிக் கூத்தாக்கிப் பரிகசித்திருக்கிறீர்கள்.
வாழ்வில் ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு தர்மம் உண்டு;
எழுத்தால் வாழ்வதே அந்தப் படைப்பாளியின் தர்மம்;
அதற்கு உரிய சன்மானம் ஏமாற்றப்படுகையில் அவனிடம் குமுறிக் கொண்டு வருவது’அறச் சீற்றம்’...!
ஒரு தொழிலாளியை வயிற்றில் அடித்தால்,மௌனமாக அதை உடன்பட்டபடி,விலகிப்போய் விட வேண்டும் என்று சொல்வதைப்போலிருக்கிறது உங்கள் வாதம்.
உண்மையில் கதையில் இடம் பெறும் படைப்பாளி, தமிழின் மிகச் சிறந்த படைப்பாளிகளில் ஒருவர்;புதுமைப்பித்தன் தொடங்கிச் சமகால இலக்கியத்தைக் கவனமாக வாசித்துக் கொண்டிருந்தால் அவர் யாரென்னும் இழை உங்களுக்கு ஓரளவாவது பிடிபட்டிருக்கும்.
காசு பணம் இல்லாமல் ஒரு படைப்பாளியை வாட விட்டு
//Even he too regrets for the whole stuff later which not distinguishes him from normal people.//என்று நீங்கள் எழுதிய நூல்களை வயிற்றுக்காக எழுத வைத்தது இந்தச் சமூக அமைப்பின் குறையேயன்றி இதில் அவர் குறை என்ன கண்டீர்கள்..புரியவில்லை.மேலும் அவர் அப்படி ஒன்றும் மட்டரகமான மலிவுரசனை நூல்களையும் எழுதிவிடவில்லையே.
அறம் வைத்துப் பாட வேண்டும் என்ற முன் திட்டத்துடன் அந்த வீட்டு முற்றத்தில் அவர் காலடி வைக்கவுமில்லை.அடக்கி வைத்திருக்கும் உணர்வுகள் அந்தக்கட்டத்தில் அப்படி ஒரு வெண்பாவாக அவரிடமிருந்து வெடிக்கின்றன.
அது தங்கள் குடும்பத்தைத் தாக்கி விடுமோ என அஞ்சுகிறாள் ஆச்சி.
அதிலும்பிழையில்லை.(தொடரும்)
ஆச்சி,அதிகப் படிப்பறிவு இல்லாதவள்;வீடே அவள் எல்லை;
‘அறம்’பாடும்வித்தையைப் பற்றியெல்லாம்கூட அவளுக்குத் தெரிய நியாயமில்லை.
படித்தவன் வாக்கு பலிக்கும் என்ற எளிய வழிவழி வந்த நம்பிக்கை மட்டுமே அவளுடையது.
எந்த வயிற்றெரிச்சலும் ,சாபமும் தன் வம்சத்தின் வாழ்வைக்குலைத்து விடக் கூடாது என்றே அவள் தவிக்கிறாள்.
குறிப்பிட்ட அந்தக் காலகட்டத்தில் வீடே உலகமாக வாழநேர்ந்த அவள் வரித்துக் கொண்டிருக்கும் தர்மம் குடும்பநன்மையை முன்னெடுத்துச் சென்று அதற்குக் குந்தகம் வராமல் காப்பது மட்டுமே.அதையே அவள்,தன் அறமாக ஆற்றுகிறாள்...
அவளுக்கு ஒதுக்கப்பட்ட தர்மத்தை அவள் செய்வதை உங்கள் ’பகுத்தறிவு’ selfishness and foolishness என மதிப்பிடுகிறது.
கண்ணகி செய்ததுமே இதைத்தானே...! தன் கணவன் மீது ஒரு பழிச் சொல் பற்றிக் கொள்ளக்கூடாது என்றுதானே அவள் பரிதவிக்கிறாள் ..?
அந்தக் கால மதிப்பீடுகள்..நம்பிக்கைகள் அவ்வாறானவை.அவற்றைக் கடந்து..அவற்றை மறு ஆய்வு செய்தபடியேதான் நாம் முன் நகர்ந்து கொண்டிருக்கிறோம்.அதற்காக அவற்றைஏற்றிருந்தவர்களின் வாழ்வு நிலை,அறிவு நிலை ஆகியவற்றைப்புரிந்து கொள்ளாமல் அவர்களை ஒற்றைப்படையாய் ஒரு சிமிழுக்குள் அடைத்து இவர்கள் இப்படித்தான்..எனக் கருத்துச் சொல்வது சரியில்லைஎன்றேநான் நினைக்கிறேன்.
//In Aram the lady may fulfill the poet's demand because of her ignorance and she will do the same even if the poet's claim is false//
என்றும் கருத்துத் தெரிவித்திருக்கிறீர்கள். குறிப்பிட்ட அந்தப் பாத்திரம்...குறிப்பிட்ட மன நிலையில் எவ்வாறு நடந்து கொள்ளும் எனக் கருத்துச் சொல்ல நாம் யார்?அது படைப்பாளியின் எழுதுகோல் நகரும்திசைசார்ந்ததுமட்டுமே.
அவளது நுண் உணர்வுகள் அவனது முறையீடு சரியானதே எனத் தரம் பிரித்துப் பார்க்கும் உள் வழிகாட்டலை அவளறியாமலே அவளுக்கு வழங்கியும் இருக்கலாம்.(தொடரும்)
//I like The Kethel shahib in the Other Story of J. Because he is selfless and serves all//
என்றும் ஆச்சிக்கு அவ்வாறான பொதுநல நோக்கு இருக்காது என்று நிங்களே முடிவுகட்டிக்கொண்டபடி,
//She may not feed the right person who needs food, knowledge and livelihood//என்றும் வேறு சொல்லிக் கொண்டு போகிறீர்கள்.
.ஒவ்வொரு சிறுகதையின் இயல்பும் அதிலிடம்பெறும் பாத்திரங்களும் வெவ்வேறுவகையான குண சித்திரங்கள்.கெத்தேல்சாகிபின் அறம் பொது அறம்;ஆச்சி கொண்டது வீட்டறம்.ஒன்று போல இன்னொன்று இல்லை என்பதுதான் படைப்பின் அழகியலே.இரண்டையும் முடிச்சுப் போடாமல்- முன் முடிவுகள்,முன் அனுமானங்கள் ஏதுமின்றி, அந்தந்தப் படைப்பை..அந்தந்தப் பாத்திரங்களின் இடம்,பொருள்,ஏவலுக்கேற்பச் சுவைக்கப்பழகுங்கள்.
கதைகளின் மெய்யான சாரம் சித்தியாவது அப்போதுதான் வாய்க்கும்
K.Muthukumar,
நீங்க எழுதினதைப் படிச்சதும் ஏதோ ஒரு இங்கிலிபீஸ்காரர் தமிழ்க்கதைக்கு, தமிழில் எழுதப்பட்ட ஒரு பதிவுக்கு ஆங்கிலத்தில் ஏதோ ஒரு ஆய்வு எழுதிட்டாருன்னு நினச்சேன். பிறகு பார்த்தா எழுதினது முத்துக்குமார்னு (தமிழ் தெரிஞ்ச) ஒருத்தர்தான்!
:)
முத்துகுமாரின் அனுமானம் பற்றி நீங்கள் சொல்லியிருப்பது சரியே. முத்துகுமார் ஒருவேளை கதையில் தன்னையும் புகுத்திக் கொண்டுவிட்டாரோ லயித்துப் போய்? மூடநம்பிக்கைக்கும் கொள்கைப்பிடிப்புக்கும் வித்தியாசம் தெரியாமல் எழுதியிருக்கிறாரோ என்று அஞ்சுகிறேன்.
ஆச்சியின் செயலுக்கான உந்துதல், புலவரின் அறம் தன் இனத்துக்கு கேடு சேர்க்கும் என்ற மூட நம்பிக்கையினால் அல்ல; ஆச்சியின் இனத்தில் ஏமாற்றுவோர் இல்லை என்ற கொள்கைப் பிடிப்பினால். இதை ஜெ அழகாகச் சொல்லியிருக்கிறார் என்றே தோன்றியது.
சில இடங்களில் எழுத்தாளரின் கற்பனைச் சுதந்திரம் மிகுந்து காணப்படுகிறது - இல்லாவிட்டால் கதையாகாதே? உதாரணமாக, தெருவில் உட்கார்ந்து தார்ணா உடல்வருத்தம் எல்லாம் எழுத்தாளரின் கற்பனைச் சுதந்திரம் - effectக்காக எழுதப்பட்டது என்றே எடுத்துக் கொள்ள வேண்டும். கண்ணகி சிலம்பிலிருந்து உதிர்ந்த முத்து (முத்து தானே?) மன்னனின் நெற்றியில் பட்டுத் தெறித்தது என்பதை physicalஆகவும் எடுத்துக் கொள்ளலாம்; அல்லது நெற்றியில் பட்டுத் தெறித்தது மன்னனின் முட்டாள்தன/குற்ற உணர்வு என்றும் எடுத்துக் கொள்ளலாம். தெருவில் உட்கார்ந்து உடல் வருந்தினாள் என்பதற்காக ஆச்சிக்கு அறிவில்லை என்று சொல்வதா? புலவரின் சொல்லுக்கு அஞ்சியதால் ஆச்சிக்கு மூடநம்பிக்கை என்று சொல்வதா? முத்துகுமார் ரொம்ப இமோசனலா? :) அல்லது ஜெ இலக்கியத்துக்கு தொடக்க ரசிகரா? :) (நான் படித்த முதல் கதையும் இது தான்)
அருமையான பதில்: "அவர்களை ஒற்றைப்படையாய் ஒரு சிமிழுக்குள் அடைத்து இவர்கள் இப்படித்தான்." ஒருவேளை நானும் முத்துகுமாரை இப்படி அடைத்தேன் என்று தோன்றுகிறது (மன்னியுங்கள், முத்துகுமார்)
போகட்டும்.
எனக்கென்னவோ அறம் உண்மைச்சம்பவத்தை ஒட்டி எழுதப்பட்டது என்று தெரியாமலே படித்ததால் அதிகமாகப் பாதித்தது போல் தோன்றியது.
கெத்தேல் சாகிப் அப்படி ஒன்றும் பொதுநலவாதியாகத் தோன்றவில்லை. நாயகன் கதை முழுக்க எதை எதிர்பார்க்கிறான்? கெத்தேல் சாகிபின் பார்வை, கவனிப்பு.. இல்லையா? சாப்பாடு போடுவதைத் தவிர கெசா வேறெதையும் கவனிப்பதில்லை என்று எழுதிவிட்டு ஒரு இடத்தில் ஒரே ஒரு இடத்தில்... இரண்டாவது பணப்பெட்டி வேண்டும் என்று நாயகன் கேட்ட போது கெசா சொன்ன பதிலை வைத்துப் பார்க்கையில்.. கெசா பணத்தையும் கவனித்தார் என்றே தோன்றுகிறது. ஒருவேளை ஜெ தவறிவிட்டாரோ?
இலக்கிய எழுத்தாளர்கள் கூடத் தேவையில்லாமல் பாலியல் வன்முறை புகுத்துகிறார்கள் என்பது இக்கதையில் தெரிந்து கொண்டேன்:) தமிழ்ப்பெண் பற்றிய சம்பவம் எதற்கு? அதனால் கெசா வலுவானவர் என்று சொல்ல வந்தாரா? கருணை உள்ளவர் என்று சொல்லவந்தாரா? கதை கொஞ்சம் இழுவை.
மகாபாரதத்தில் குந்தி-கர்ணன்-துரியோதனன்-க்ருஷணன் தர்மசங்கடங்களை நினைவு படுத்திய கதை. சுவையான கதை என்றாலும் சாதாரண கதை என்பது என் கருத்து. அறம் இன்னும் இருபது வருடங்கள் கழித்துப் படித்தாலும் நெருடும். சோற்றுக்கணக்கை அப்படிச் சொல்லமுடியவில்லை. (கெத்தேல் சாகிபும் உண்மைச் சம்பவம் தானா? ஒருவேளை உண்மைச்சம்பவம் என்று நினைத்துப் படித்ததால் சுவை குன்றியதோ என்னவோ!:)
திரு கோபி அனுப்பிய கடிதம்
அன்புள்ள சுசீலா மேடம்,
எம்விவி சாரின் புதல்வர் (சரவணன்) எனக்கு சீனியர். அவர் தொழில் பயின்ற அதே அலுவலகத்தில் நானும் தொழில் பயின்றேன் (பட்டயக் கணக்கியல்).
அவருடைய மகள் வயிற்றுப் பேரன் (பாஸ்கர்) எனக்கு ஜூனியர். பாஸ்கரும் ஒரு பட்டயக் கணக்காளர். நானும் அவனும் ஒரே பள்ளிக்கூடம். ஒன்றாகக் கூடி கிரிக்கெட் எல்லாம் விளையாடி இருக்கிறோம். மூன்று வருடங்களாக நான் இவர்களுடன் தொடர்பில் இல்லை.
பணி நிமித்தம் காரணமாக வேறு வேறு ஊர்கள், மாறும் கைபேசி எண்கள் என்று தொடர்பு விட்டுப் போய்விட்டது. அறம் சிறுகதை குறித்த உங்கள் பதிவைப் பார்த்த நொடிமுதல் இவர்கள் இருவரையும் தொடர்பு கொண்டு பேசவேண்டும் என்ற சங்கல்பம் செய்துகொண்டேன். இன்று பாஸ்கரோடு நெடுநேரம் பேசினேன். அவரை அறம் சிறுகதையைப் படிக்கச் சொல்லி இருக்கிறேன்.
கிட்டத்தட்ட பட்டுப்போய்விட்ட ஒரு நட்பை உங்கள் பதிவு மீட்டுக் கொடுத்திருக்கிறது. மிக்க நன்றி. மூல காரணமான ஜெமொ சாருக்கும் நன்றி.
அன்புடன்
கோபி ராமமூர்த்தி
பெங்களூர்
(எம்.ஏ.சுசீலாவால் உள்ளிடப்பட்டது)
கருத்துரையிடுக