துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

13.2.11

காதல்...கசப்பதுண்டு !


’’காதலோ...பொருளோ...வேலையோ..பதவியோ எதுவானாலும் அடைந்து முடிந்தபின் அவற்றின் கவர்ச்சி குன்றித்தான் போய்விடுகிறது....’’
பனிச்சுனைத் தெண்ணீர்...
காதல் வயப்படும்போது உள்ள ஆர்வம்...முனைப்பு....காதலியின் சின்னச்சின்ன அசைவுகள் மற்றும் பொருட்படுத்தவே தேவையில்லாத அற்பச் செயல்கள் ஆகியவற்றில் காட்டும் ஈடுபாடு, அந்தக் காதல் கை கூடியதும் சற்று வேகமடங்கி நிறம் மங்கித்தான் போகிறது.
இது ஓர் உலகப் பொது இயல்பு.

காதலுக்கு மட்டும் என்றில்லாமல் குறிப்பிட்ட ஒரு இலக்கை எட்டும்போது உள்ள வெறியும் வேகமும் அது கை கூடியதும் காணாமல் போய்விடுகின்றன; கைக்குக் கிட்டி விட்டதாலேயே அதன் கவர்ச்சியும்,புதுமையும் குறைந்து போய்விட மனிதமனம் அதை இயல்பானதாக ஏற்கத் தொடங்கி விடுவதோடு இத்தனை நாள் கண்ணுக்கு மறைவாக இருந்த அதன் குறைகளும் கூட இப்போது விசுவரூபமெடுத்துப் புலப்படத் தொடங்கி விடுகின்றன.

குறிப்பிட்ட இந்த உளவியலை உள் வாங்கியபடி வாழ்வியலை முன்வைக்கிறது மிளைக்கந்தனாரின் சங்கக் குறுந்தொகைப்பாடல்.
தலைவனும் தலைவியும் ஊனும் உயிரும் உருகி நெகிழ்ந்து முன்பு காதலித்த காட்சியையும்,அந்தத் தருணத்தின்போது நேர்ந்த போராட்டங்களையும் அருகிலிருந்து கண்ட தோழியே இப்போது அவர்களுக்குள் நேரும் பிணக்குகளுக்கும் சாட்சியாகிறாள்.

‘மாசறு பொன்னே வலம்புரி முத்தே’ என அவன் காதலில்கரைந்ததும் அவளுக்குத் தெரியும்;தற்போது தலைவி செய்யும் ஒவ்வொரு செயலிலும் குறை கண்டபடி,பாரா முகம் காட்டி அவன் அவளைப் புறக்கணித்து வருவதையும் அவள் அறிவாள்.அதையே தன் கூற்றாக்கி அவன் முன் வைக்கிறாள் அவள்.

காதலித்த காலகட்டத்தில் என் தோழி வேப்பங்காயையே தந்தாலும் அதை வெல்லக்கட்டியாகக் கருதியபடி விழுங்கிக் கொண்டிருந்தவன்..நீ ! இப்போதோ பாரியின் பறம்பு மலையில் இருக்கும் இனிய சுனைநீரைஅதிலும் தைமாதத்தின் குளிர் ஏறிய சில்லிப்பான நீரையே அவள் தந்தாலும் ,அது வெம்மையாக இருகிறது..கசப்பாக இருக்கிறது என்று கூசாமல் பேசுகிறாய்...!
இங்கே மாற்றமடைந்திருப்பது நீரின் தண்மையோ...அதன் இனிமையோ அல்ல ! அன்பு வற்றிப் போய்விட்ட உன்மனம்தான்!அவளிடம் கொண்டிருந்த நெருக்கமும் அன்பும் குறையத் தொடங்கி விட்டதாலேயே நீ அவ்வாறு பிறழ்ச்சியாக உணரத் தொடங்கியிருக்கிறாய் ’’
என்பதை அந்தப் பாடல் வழி எடுத்துக்காட்டி அவனை இடித்துரைக்கிறாள் தோழி.
வேம்பின் பைங்காய் என் தோழி தரினே
தேம்பூங்கட்டி என்றனிர் இனியே
பாரி பறம்பிற் பனிச்சுனைத் தெண்ணீர்
தைஇத் திங்கள் தண்ணிய தரினும்
வெய்ய உவர்க்கும் என்றனிர்
ஐய அற்றால் அன்பின் பாலே’’(கு.தொகை-196,மிளைக்கந்தனார்)
(தேம்பூங்கட்டி-இனிப்பான வெல்லக்கட்டி
தெண்ணீர்-தெளிந்த சுனைநீர்
சுனை நீர் இயல்பாகவே குளுமை கொண்ட்து; அதிலும் முன்பனிக்காலமான தை மாதம் அதன் குளிர்ச்சியை மேலும் கூடுதலாக்கி விட்டிருக்கிறது.
ஏழு குறுநில மன்னர்களில் ஒருவனான பாரியின் பறம்பு மலையில் உள்ள சுனைகள் அவற்றின் சுவையான நீர் வளத்துக்காகச் சங்கப் பாடல்களில் பெரிதும் பேசப்பட்டவை-சுவைக்குக் காரணம்,மலையின் மூலிகைகள்-புதுக்கோட்டைக்கு அருகிலுள்ள இன்றைய பிரான் மலையே பறம்பு மலையாக இருந்திருக்கக் கூடும் என்று சொல்லப்படுகிறது)

குறிப்பிட்ட இந்தப்பாடல் மருதத்திணை சார்ந்ததாக – பரத்தையிடம் சென்று மீளும் தலைவன், தலைவி கொண்ட ஊடலைத் தீர்க்க அவளிடம் சமரசம் செய்து வைக்குமாறு தோழியைக் கேட்டுக் கொண்டபோது –அந்தத் தருணத்தில் அவள் அவனுடன் நிகழ்த்தும் உரையாடலாக உரையாசிரியர்களால் வகைப்படுத்தப்பட்டிருந்தபோதும்,பிற கணவன்–மனைவி,காதலன்-காதலி சூழல்களுக்கும் கூட இது பொருத்தமானதாகவே தோன்றுகிறது.

அவள் கிடைப்பதற்கு அரியவளாக..எட்டாக்கனியாக இருந்தபோது அவன் நெருக்கமாக உணர்கிறான்..
அவள் கைக்கெட்டும் தொலைவில் வந்த பின் அவன் விலகிப் போகிறான்;அப்போது அவள் பேச்சும் அவள் தரும் உணவுகளும் கூட அவனுக்கு எட்டிக் கனியாகவே படுகின்றன.

திருமணத்துக்கு முன்வரை... காதல் என்பது,ஆணின் உயிராக இருக்கிறது.
திருமணத்துக்குப் பின்பு, தான் செய்யும் தொழிலாகிய வினை மட்டுமே அவன் உயிராகி விட..,
 மனை உறை மகளிர்க்கோ ஆடவர் உயிராகி விடுகின்றனர்.

காதலோ...பொருளோ...வேலையோ..பதவியோ எதுவானாலும் அடைந்து முடிந்தபின் அவற்றின் கவர்ச்சி குன்றித்தான் போய்விடுகிறது...என்னும் சாசுவதமான உலகியல் உண்மையை எடுத்துக் காட்டும் அற்புதமான சங்கப் பாடல் இது...

காதல் வசப்படுவதில் தவறில்லை...
ஆனால்..அந்தக் காதலை முதல் சந்திப்பின்போது கொண்ட அதே ஆர்வத்துடன்,அதே உயிரோட்டத்துடன் தக்க வைத்துக் கொள்வதே முக்கியமானது...
நடப்பியலில் அப்படிப்பட்ட காதல் அரிதாகத்தான் காணக் கிடைக்கிறது.அதனால்தான் உக்கிரமான காதல்கதைகளைச் சொல்லும் இலக்கியங்களும் புனைகதைகளும் ஒன்று...அவர்களை இணைத்து வைக்காமல் பிரித்து விடுகின்றன;இல்லையென்றால் சாகடித்து விடுகின்றன போலிருக்கிறது!

பி.கு;
திரைப்படங்களில் இந்த மனநிலை மாற்றத்தைச் சற்றே முன் வைத்திருப்பவை, ‘பம்பாயும் அலை பாயுதேயும்.
தன் மணிக்கட்டைக் கீறி ரத்தம் பெருக்கிக் கொள்ளும் அளவு வெறி பிடித்துக் காதலிக்கும் நாயகன்(பம்பாய்), தான் கருவுற்ற செய்தியை அவனிடம் ஆர்வத்துடன் பகிர்ந்து கொள்வதற்காக மனைவியாகிவிட்ட அவள் தன்னை நாடிவருகையில் (அது எந்தச் செய்தி என்பது தெரியாது என்றாலும் கூட அவள் பேச்சில் ஆர்வம் காட்டாமல்) ஒரு காதல் கணவனாக இல்லாமல் செய்தியாளனாகத் தட்டச்சு செய்வதிலேயே தீவிரமாக முனைந்திருக்கிறான்.
மின் ரயில்களை விரட்டிக்கொண்டு ஓடிவதும், பிறகு கேரளம் வரை துரத்திக்கொண்டு பயணமாவதுமாக இருக்கும் அலைபாயுதே நாயகன்,திருமணம் முடிந்த அடுத்த நாளே அவளது ஆர்வத்தை ஒரு பொருட்டாக எண்ணாமல் செய்தித் தாளில் மூழ்கிப் போகிறான்.

அன்றாட நடப்பியல்தானே இலக்கியமாக...புனைகதையாக..திரைப்படமாகப் பதிவாகிக் கொண்டிருக்கிறது?
6 கருத்துகள் :

பெயரில்லா சொன்னது…

நல்ல பதிவு. பொறுப்புகள் எதுவும் அவ்வளவாக இல்லாத இளமை பருவத்தில் ஒருவர் மேல் ஒருவர் காட்டும் காதலை, அக்கறையை, திருமணமான பின் பொறுப்புகள் சூழும் அந்த காலத்திலும், ஒருவர் மேல் ஒருவர் அதே அளவு அக்கறையையும், நேரத்தை ஏற்படுத்தி கொண்டு காதலையும் பகிர்ந்து கொண்டால் என்றுமே காதல் இனிக்கும். கணவன், மனைவி இருவரும் சமுதாயத்தில் எல்லா நிலையிலும் உயரவேண்டும் என்று எண்ணுவது போல் கூடவே காதலிலும் உயரவேண்டும் என்று எண்ணம் வேண்டும்.

இளங்கோ சொன்னது…

Nalla pakirvu..

BD சொன்னது…

அகத்தில் தான் என்றில்லை, புறத்திலும் இதே உவமை உண்டு! ஓய்மான் நல்லியக் கோடனை புறத்திணை நன்னாகனார் பாடிய பாடல்..... புறம் 176!

ஓரை ஆயத்து ஒண்தொடி மகளிர்
கேழல் உழுத இருஞ்சேறு கிளைப்பின்
யாமை ஈன்ற புலவுநாறு முட்டையைத்
தேன்நாறு ஆம்பல் கிழங்கொடு பெறூஉம் இழுமென ஒலிக்கும் புனலம் புதவின் பெருமா விலங்கைத் தலைவன் சீறியாழ் இல்லோர் சொன்மலை நல்லியக் கோடனை உடையை வாழியெற் புணர்ந்த பாலே!
பாரி பறம்பிற் பனிச்சுனைத் தெண்ணீர்
ஓரூர் உண்மையின் இகழ்ந்தோர் போலக் காணாது கழிந்த வைகல் காணா வழிநாட்கு இரங்குமென் நெஞ்சமவன் கழிமென் சாயல் காண்தொறும் நினைந்தே!

BD சொன்னது…

ஒரு ஆணின் கருத்து:

இப்போக்கு அலக்ஷ்யம் என பெண்கள் நினைப்பரோ அறியேன். தலை வலி வாராதிருப்பின் தலை இருப்பது தெரிவதில்லையே....... ஆடவர் போக்கு இது.
திருமணம் ஆன பின் மனைவி தன்னில் ஒரு பாதி, அங்கம் போல என்றாகிய பின், 'தனியாக' அவளை கவனிப்பது நின்று விடுகிறது......... இதெல்லாம் கவிதை, காவியம் கட்டுரைக்குத்தான் லாயக்கு, இங்கே வந்து அளக்காதே, என்றால் உளவியல் ரீதியாகவே சொல்கிறேன்.

ஒரு ஆண், அன்பினையும், காதலையும், ஒரு துணை தனக்குத் தேவை என்ற நேரத்தில் மட்டுமே உணர்கிறான்; பெண்ணுக்கோ, அவ்வுணர்வு, தான் மதிக்கப்படும் போதும், பாராட்டிச்சீராட்டப்படும் போதும், பாதுகாக்கப்படும் போதும் உணரப்படுகிறது. ஆக, ஆணுக்கு தன் நிலைப் பற்றிய புரிதல், பெண்ணிடம் கிடைத்தாலே பெரும் திருப்தி கிடைத்து விடுகிறது. பெண்ணுக்கு, தன்னை பற்றிய உயர்ந்த எண்ணமும், பாரட்டுதலும், ஆண் தன்னிடம் அன்பாகவும், காதலுடடையவனாகவும், இருக்கும் போதே கிடைத்து விடுகிறது.

ஆணின் தேவை, அன்னியோன்யமாக இருக்கும் போதே பூர்த்தி ஆகிவிடுகிறது அந்த அன்னியோன்ய சூழலில் இருந்து விடு பட்டவுடனே, ஆண், மிடுக்கும் பீடு நடையும், சார்தலில்லிருந்து (dependence) விடுபட்டவனாகவும் ஆகின்றான். மீளவும் அவனுக்கு அன்னியோன்ய சூழல் தேவைப்படும் போது மட்டுமே, அவன் பெண்ணை சார்ந்திருக்க முடிகிறது.அவன் தேவை பூர்த்தி ஆனதும், அவனுக்கு சார்ந்திருத்தல், தேவையில்லததாக ஆகிறது. இது இயற்கையாகவே அவனுள் நடக்கும் மாற்றம்.

பெண்ணோ இநநி்லைக்கு எதிர்மறை.

"நீலக்கடலலையே உனது நெஞ்சில் அலைகளடி" என பாரதி பாடியதற்கேற்ப, அலைகள் போல, அவளின் உணர்வுகள் எழுந்து விழும். சார்தலையே அவளின் தன்மைகள் பிரதிபலிக்கின்றன. தன் சுய மரியாதை வெகுவாக தூண்டப்படும் போது, அவள் மிகுந்த அன்பை ஆணுக்கு வாரி வழங்கி, அன்னியோன்யமாக இருக்க ஆரம்பிக்கிறாள். சுய மரியாதை சற்று குறைவாக இருக்கும் போதும், அவளால், ஆணுடன் , அன்னியோன்யமாக உணர முடிவதில்லை.

பெண்ணுக்கு, அக்கறை, புரிதல்,மரியாதை, பக்தி, மதிப்பீடு, உறுதிப்படுத்தல் ஆகியன தன் உணர்வுகளை சுலபமாக காட்டவும், கிரகித்துக் கொள்ளும், உணர்வுத் தேவைகளாக உள்ளன. ஆணுக்கு, நம்பிக்கை,ஏற்றுக் கொள்ளல், பாராட்டுக்கள்,ஈடுபாடு, சான்றுரைத்தல், உற்சாகப்படுத்தல் ஆகியன உணர்வுத் தேவைகளாக உள்ளன. இவ்விரண்டு நிலைகளையும் சரிவர உணர்ந்து, புரிந்து, செயல் படும் ஆணும், பெண்ணும் நல்ல பொருத்தம், தமக்குள் இருப்பதாகவே உணரப்படுவர். இல்லாவிடில் ஏழாம் பொருத்தம் தான்......

தத்தம் ,துணையின் உணர்வுகளையும், இயல்புகளையும் ஏற்றுக் கொண்டாலே, ஒருவருக்கொருவர் பொருத்தமான உணர்வை இருவரும் பெற்று விடலாம். பெண்ணைப் போல் ஆண், எப்போதும் காதல் வயப்பட்டவனாகவும், பாசம் மிக்கவனாகவும் இருக்க இயல்வதில்லை. வாழ்ககையின் பல சவால்களை அவன் சந்திக்க நேரிடும் போது அவனுள் இருக்கும் காதலானது, மேகம் மறைத்த சூரியன் போல மறைந்து, அவன் கடமையும், அவனின் குறிக்கோளுமே அவன் மனதில் உணர்வுகளாக இருக்கிறது. அது அவன் குற்றம் அல்ல. அது அவன் இயல்பு.

ஒரு கற்புடைய பெண்ணோ, சதா உணர்ச்சிப்பிழம்பாகவும், கணவன் பால் காதல் வயப்பட்டவளாகவுமே இருக்கிறாள். எவ்வித சவால் நிறைந்த சூழலும், அவளின் இத்தன்மையை மாற்றுவதிற்க்கில்லை. சவால்களுக்கிடையிலும் தன காதலை வெளிப்படுத்துவதில் அவள் சுகம் காண்கிறாள்.... அதை ஒரு மாண்பாகவும் தனக்குள் போற்றுவாள்.....அது அவளின் இயற்கையாகிப் போகிறது, இவ்விருவரின் நிலையை புரிந்து நடந்தாலே, வீணாக உண்டாகும் விவாதங்களை தவிர்த்து விடலாம்.

ஆணை - அவன் ஒரு ஆண், அவனின் இயல்பு இன்னது தான் என்று முழுதும் தெரிந்து புரிந்து, நடத்துவதாலேயும், பெண்ணை, அவள் தன்மை இது தான் என்ற புரிதலோடு கையாள்வதாலேயும், சுலபமாக ஆண், பெண் பொருத்தத்திற்கு தீர்வு காணலாம். இயற்கைப் படைத்த ஆணும், பெண்ணும், உடல் அளவில், மிகப் பொருத்தம் உடையவரே, என்றாலும், உணர்வு பூர்வமான பந்தம் என்ற நிலையில் பார்த்தால், நாகரீகம் கருதி, ஒருவரின் நிலையை, மற்றொருவர், தெரிந்து, புரிந்து, ஏற்று நடந்தாலே, மனப் பொருத்தமும் அமைந்துவிடும்.

அப்பாதுரை சொன்னது…

'தேம்பூங்கட்டி' ரசித்து மாளவில்லை, எத்தனை அருமையான சொல்!
காதல் மிகையா? காதலும் கடவுளும் ஒன்று என்றும் படித்திருக்கிறேன் :)
காதல் பற்றி நண்பர் ஜவஹரின் பதிவையும் பாருங்கள்.

அப்பாதுரை சொன்னது…

இரண்டு பின்னூட்டங்களும் அருமை Bhuvaneshwar. பலமுறை படித்து ரசித்தேன். காதலை தேவையின் போது உணர்வது காதலாகுமா? தேவைகள் காதலில்லாமலே வரும் போகுமே?

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....