துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

17.8.11

இரு பாடல்கள் ....



கம்பனின் அயோத்தியா காண்டத்தில் ஒரு உணர்ச்சிகரமான கட்டம்.
வனம் செல்லும் இராமனோடு இலக்குவனும் கிளம்பத் தயாராகிறான்.
இருவரும் இலக்குவனின் அன்னை சுமித்திரையிடம் விடை பெறச் செல்லுகையில் அவள் கூற்றாக வரும் இரு பாடல்கள் எப்போது படித்தாலும் உன்னதமான மனச் சிலிர்ப்பை ஏற்படுத்துபவை.

''  'ஆகாதது அன்றால் உனக்கு அவ் வனம் இவ்வயோத்தி,
  மாகாதல் இராமன் நம் மன்னவன்,வையம் ஈந்தும்
  போகா உயிர்த்தாயர் நம் பூங்குழல் சீதை,
  ஏகாய் ! இனி இவ்வயின் நிற்றலும் ஏதம் 'என்றாள்.’’

(இராமன் செல்லும் அந்தக் காடு உனக்கும் ஏற்றதே; அதுவே இனி உன் அயோத்தி;
இராமனே உன் அரசன்; 
தசரதன் வையக ஆட்சியை வேறொருவனுக்கு அளித்த பிறகும் கூட அதைத் தாங்கியபடி உயிர் துறக்காமல் இருக்கும் கொடிய உள்ளம் படைத்த நாங்கள் இனி உன் தாயர் அல்ல; 
இனிமேல், சீதையே உன் தாய்..
உடனே செல்! இனி ஒரு நொடி நேரம் நீ இங்கு நிற்பதும் தவறு)

இதனை அடுத்து வரும் பாடல் இன்னும் கூடப் பரவசம் ஏற்படுத்துவது.

‘’பின்னும் பகர்வாள் ‘மகனே இவன்பின் செல்; தம்பி
  என்னும்படியன்று; அடியாரின் ஏவல் செய்தி
  மன்னும் நகர்க்கே இவன் வந்திடில் வா அன்றேல்
  முன்னம் முடி’என்றாள் வார் விழி சோர நின்றாள்’’

(மகனே,இராமனைத் தொடர்ந்து செல்கையில் உன்னை ஒரு அரசகுமாரன் என்று நினைத்துக் கொண்டு செல்லாதே..;ஒரு அடியவனைப் போலக் குற்றேவல் செய்; இந்த அயோத்தி நகருக்கு அவனால் திரும்பி வர முடிந்தால் நீயும் வா..இல்லையென்றால் அவனுக்கு முன்பு நீ இறந்து போய் உன்னை முடித்துக் கொள்’’)

ஒரு தாய் இப்படிச் சொல்ல நேர்ந்து விட்டதே என்ற தவிப்பு,அதைத் தாங்கும் மன உரம்,தியாகம்,அதே வேளையில் தாய்மைப் பாசத்தால் தானாய்ப் பெருகும் கண்ணீர் என இந்த இரண்டு பாடல்களிலேயே நம் உள்ளத்துக்குள் சிம்மாசனம் போட்டு அமர்ந்து விடுகிறாள் சுமித்திரை.

கம்பனில் நிறையப் பாட பேதங்கள் இருப்பது அனைவரும் அறிந்ததுதான்
இதிலுள்ள் இரண்டாவது பாடலிலும் ஒரு சுவையான பாட பேதம் உண்டு.
வார் விழி சோர நின்றாள்’என்ற தொடருக்குப் பதிலாகச் சில பதிப்புக்களில்
‘’பால்முலை சோர நின்றாள்’’
என்ற தொடர் இடம் பெற்றிருக்கும்.

 பெற்றுப் பல ஆண்டுக் காலமாகியும் மகனைப் பிரிய நேருகையில் பதட்டமும் பரிதவிப்பும் மேலிடப் பால்சுரக்கும் தாய் எனக் கூறும் 
அந்தத் தொடர்,தாய்மையின் தவிப்பை இன்னும் கூட அடுத்த தளத்துக்கு எடுத்துச் சென்று விடுகிறது.




5 கருத்துகள் :

அப்பாதுரை சொன்னது…

மிகவும் ரசித்துப் படித்தேன். 'பால் முலை சோர நின்றாள்' கொஞ்சம் சிலிர்க்க வைத்தது.

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

மனச் சிலிர்ப்பைத் தரும் பாடல் அறிமுகம் நன்று!!

D.Martin சொன்னது…

உங்களுக்கு ஏற்பட்ட அதே சிலிர்ப்பு எனக்கும் ஏற்பட்டது. நன்றி.

இராஜராஜேஸ்வரி சொன்னது…

எப்போது படித்தாலும் உன்னதமான மனச் சிலிர்ப்பை ஏற்படுத்தும் அருமையான ஆக்கம்..

அனைவருக்கும் அன்பு  சொன்னது…

அருமையான பதிவு வரலாற்று சுவடுகள் ............

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....