துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

8.3.12

அம்பையுடன் ஒரு மாலை-1

சர்வதேச மகளிர் தினத்தின் நேற்றைய முன் மாலைப் பொழுதில்[7/3/12] நான் மதிக்கும் மிகச் சிறந்த நபர்களில் ஒருவரான எழுத்தாளர் அம்பையோடு- இனிமையான தற்செயலாக  ஒரு சந்திப்பு எனக்கு வாய்த்தது. அவர்களும் அதை அவ்வாறே குறிப்பிட்டதும்,முந்தைய நட்பின் எளிமையோடு என்னை ஆரத் தழுவி அன்பு பாராட்டியதும் என் வாழ்வின் பேறுகளில் ஒன்று. 
2010இல் அம்பை தில்லி வந்தபோது...
’80களிலேயே எனக்கு அறிமுகமாகிப் பின் பழக்கமுமான அம்பை தமிழ்ப் பெண் எழுத்துக்களில் மிகப் புதிதான பரிமாணத்தைத் தன் எழுத்துக்களால் கொணர்ந்தவர்;’80களுக்குப் பின் எழுதப்பட்ட தீவிரமான பெண்ணிய எழுத்துக்கள் பலவும் அம்பையின் தாக்கத்தில் வேர் கொண்டவையே.
.மும்பையில் பெண்கள் சார்ந்த கலை,இலக்கியம்,பிறதுறைகளுக்கான ஆவணக்காப்பகம் ஒன்றை -SPARROW என்னும் பெயரில் நிறுவி அது சார்ந்த ஆய்வுகளில் தீவிர முனைப்புடன் இயங்கி வரும் சி.எஸ்.லக்ஷ்மி-அம்பை- ஒரு கருத்தரங்கில் கலந்து கொள்வதற்காகத் தற்போது புதுதில்லி வந்திருக்கிறார்.ஜே என் யூ பல்கலைத் தமிழ்த் துறை மாணவர்களோடு ஒரு கலந்துரையாடலில் பங்கு பெற்ற அவரது எழுத்துலக அனுபவங்களின் சில தெறிப்புக்களை[ஒரு சில முன்னமே கேட்டவைதான் என்றபோதும்]அவர் வாய்மொழியாக மீண்டும் கேட்டது சுவையான ஒர் அனுபவம்.

பங்களூரில் கழித்த தன் இளமைப்பருவம், அப்போதே கதை எழுதத்தொடங்கி அன்றைய காலகட்டத்தின் குழந்தைகள் பத்திரிகையான ’கண்ணன்’ இதழில் தன் படைப்புக்கள் வெளிவந்தது ஆகிய விவரங்களோடு தொடங்கிய அம்பையின் உரை அவரது புனைபெயரில் ஆரம்பித்துச் சற்று அடுத்த கட்டத்துக்கு நகரத் தொடங்கியது.தன் பதின்பருவத்தில் வாசித்த தேவனின் ‘பார்வதியின் சங்கல்பம்’என்னும் கதை பற்றிக் குறிப்பிட்ட அம்பை அதில் வரும் பெண்பாத்திரம் தனக்குள் ஏற்படுத்திய மாற்றத்தை-தூண்டுதலை விவரித்தார்.மரபுவழி மனைவியாக இருந்து வரும் பார்வதி ஒரு கட்டத்தில் கணவனிடமிருந்து விலகி வாழ வேண்டிய நிலை நேருகையில் தன் பெயரை அம்பை என மாற்றிக் கொண்டு கதைகளை எழுதிக் குவிக்கிறாள்.கணவன் அவளை நாடிவந்து தன்னிடம் வருமாறு அழைக்கிறான்;முதல் முறை அவன் கோரிக்கையை ஏற்று அவனை ஒரு நிலைக்குக் கொணர்ந்தபின் அவள் அவன் பாதையிலிருந்து மீண்டும் விலகிச் சென்றபடி தனக்கென அமைந்து விட்ட வழியிலேயே தன் பயணத்தைத்தொடர்கிறாள்.அந்தப் பெண்ணின் மன உறுதியும் மனத் திட்பமும் தன்னைப் பெரிதும் ஈர்ப்புக்கு ஆளாக்கியதால் அவள் வைத்துக் கொண்ட அம்பை என்னும் புனைபெயரையே தானும் தனக்கு உரியதாக்கிக் கொண்டதாகச் சொன்ன அம்பை அடுத்து மகாபாரத அம்பை பற்றியும் குறிப்பிட்டார்.பாரதத்தின் அம்பை ஆணுமில்லை,பெண்ணுமில்லை;அதே வேளையில் அவள் ஆணாகவும் பெண்ணாகவும் ஒருசேர இருக்கிறாள்.ஆண்-பெண் என வேறுபடுத்துவது இயற்கையான உடற்கூறு ஒன்று  மட்டும்தான், மற்றவை செயற்கையான வேறுபாடுகளே என்பதை இயல்பாகவே  கொண்டிருந்த தனக்கு அந்தப் பெயர் பிடித்துப் போனதில் வியப்பில்லை என்றார் அவர்.

’50களின் காலகட்டத்தில்-கட்டுப்பாடான குடும்பச் சூழலில் வாழ நேர்ந்ததால், உடல் பற்றியும்..உடல் சார்ந்த எழுச்சிகள் தேடல்கள் பற்றிப் பேசுவதும்,எழுதுவதுமே ஒரு பாவச் செயல் போலக் கருதும் மனப்பான்மையே பொதுவாக மேலோங்கி இருந்ததால் அந்தக் கால கட்டத்தில் கலைமகள் நாவல் போட்டியில் பரிசு பெற்ற தன் முதல் நாவலான ‘அந்தி மாலை’என்னும் நாவலும் உடல் இச்சை கலக்காத- மனம்மட்டுமே சார்ந்த தூயகாதலை முன் வைப்பதாகவே இருந்தது என்பதை விவரித்த அம்பை பின்னாளில் அதில் சில வரிகளைப் படிக்கும்போது இவை தான் எழுதியவைதானா என்ற வியப்பைத் தனக்கே ஏற்படுத்தியதையும் பகிர்ந்து கொண்டார்.

சென்னையில் முதுகலை படிக்கச் சென்றபின் வாழ்க்கை சார்ந்த தன் கண்ணோட்டங்களில் விளைந்த மாற்றங்கள்,சூடாமணி,ராஜம் கிருஷ்ணன் முதலிய எழுத்தாளர்களோடு தான் கொண்ட தொடர்புகள் ஆகியவை தன் எழுத்தின் மொழி வேறுவகையாக வடிவம் கொள்ளக் காரணமாக இருந்ததைச் சுட்டித் தனது அடுத்த கட்டத்தின் குறிப்பிடத்தக்க படைப்பான ‘சிறகுகள் முறியும்’பற்றிய அனுபவங்களை முன் வைத்தார். தன் தோழி ஒருத்தியின் வாழ்வனுபவங்களை மையமாகக் கொண்டு அவர் எழுதியதே ’சிறகுகள் முறியும்’ என்னும் குறுநாவல். .அந்தத் தோழியும் கூட அந்தப் படைப்பைப் படித்து விட்டுத் தன்னைப் பாராட்டினாளேயன்றி உண்மையில் இது தன் வாழ்வின் அனுபவம் என்பது அவளுக்கு உறைக்கவே இல்லை என்பது தனக்கு அதிர்ச்சியும் ஆச்சரியமும் அளிப்பதாக இருந்தது என்றார் அம்பை. ஒரு நிகழ்வு ஏற்படுத்தும் தாக்கம் மனதிற்குள் இறங்கி நிலை கொள்ளும்போதே அது அனுபவமாகிறதேயன்றி அதை இயந்திரத்தனமான அன்றடச் செயல்பாடாக மட்டுமே கைக்கொண்டிருக்கும்வரை அது அனுபவப் பதிவாவதில்லை ; தன் வாழ்க்கை அனுபவம்தான் அந்தக் கதையாக உருப்பெற்றிருக்கிறது என்றுகூடத் தன் தோழிக்குத் தெரியாமல் போனதற்கு அதுவே காரணம் என்றார் அம்பை.  

பெண்கள் தங்கள் வாழ்க்கை வரலாற்றை எழுதும்போதும் கூட,அதை அவர்கள் முழுமையாக எழுதுவதில்லை என்பதையும் ஒரு சில தகவல்கள் வெளிப்படுத்தப்படாத-அல்லது வெளிப்படுத்த முடியாத அந்தரங்கங்களாக அவர்களுக்குள்ளேயே புதையுண்டு போய்விடுகின்றன என்பதையும் ஒரு சில நிகழ்ச்சிகள் வழி விரிவாக விவரித்தார் அம்பை. அவரது தாயின் கதையும் கூட அப்படித்தான் ; நூலாக வெளியிடாவிட்டாலும் கூடச் சிறு சிறு குறிபுக்களாகத் தன் வாழ்க்கையைப் பதிவு செய்து வைத்திருக்கும் அவரது தாய் தன் வாழ்வின் இன்றியமையாத ஒரு சம்பவத்தை மட்டும் கூறாமலே விட்டிருக்கிறார்..

அம்பையின் தாய் வீண வாசிப்பதில் தேர்ச்சி பெற்றவர்.அவ்வபோது வீணையை அவர் இசைக்கும் நேரங்களில் அருகிலுள்ள வீட்டிலிருந்து முதியவர் ஒருவர் அங்கு வந்து தனக்கு விருப்பமான பாடலை இசைக்கச் சொல்லிக் கேட்பது வழக்கம்;ஒரு நாள் மாலை அவர் அவ்வாறு வாசித்துக் கொண்டிருந்த வேளையில் அலுவலத்திலிருந்து அம்பையின் தந்தை வந்து விடுகிறார்.இசைத்துக் கொண்டிருந்த பாடலை முடித்து விட்டு வீணையை மூடி வைத்து விட்டு எழுந்திருக்கிறார் அவரது தாய்.சற்று நேரம் சென்று அந்தப் பக்கத்து வீட்டுக்காரரும் சென்றபின் தந்தை கேட்கிறார்..’’நீ திருமணம் செய்து கொண்டிருப்பது யாரை’’என்று..’’இதிலென்ன சந்தேகம்..உங்களைத்தான்’’ என்கிறார் தாய்.’’அப்படியானால் உன் வீணை வாசிப்பும் இனி எனக்கு மட்டும்தான்.பொதுவிலோ பிறருக்காகவோ நீ இனி வாசிக்கக் கூடாது’’என்கிறார் தந்தை. மறு நாள் பக்கத்து வீட்டு முதியவர் வந்து வாசிக்கச் சொன்னால் என்ன செய்வது என்ற எண்ணத்தில் அன்று இரவு வீணையின் தந்தியை அறுத்து விடுகிறார் தாய்.இந்தச் சம்பவத்தைத் தன்னிடம் பகிர்ந்தபோது ‘’தந்தி அறுந்தபோது என்னோட தாலியே அறுந்த மாதிரி இருந்தது’’என்று கூறிய தாயின் சொற்களை உணர்வுபூர்வமாக நினைவுகூர்ந்தார் அம்பை.

ஆனாலும் கூட அந்தச்செய்தி அவரது வாழ்க்கைக் குறிப்பில் இடம் பெறாதது குறித்து அம்பை தன் தாயிடம் கேட்டபோது’’அதெல்லாம் சொல்லக் கூடாதுடீ’’என்றிருக்கிறார் அவர். தந்தையின் அவ்வாறான நடத்தையை அந்தத் தாயுள்ளம் வேறுவகையாகவும் புரிந்து ஏற்றிருக்கிறதென்பதை அம்பை தன் பேச்சில் குறிப்பிட்டார்.அம்பையின் தாயை விடச் சற்று வசதிக் குறைவான பின்னணியில் பிறந்து வளர்ந்து தனக்கென ஒரு செருப்புக் கூட இல்லாமல் கல்வியால் உயர்ந்தவர் அந்தத் தந்தை ‘’அவருக்குன்னு இருக்கிறது நான் மட்டும்தான்...என் கிட்டே அந்த உரிமையைக் காட்டறார்’’என்று எளிதாகத் தன்னைச் சமாதானம் செய்து கொள்ள அந்தக் காலகட்டத்துத் தாயால் முடிந்து விட்டது...

பெண் எழுத்தாளர்கள் பற்றிய தன் விரிவான ஆராய்ச்சியில் உருவான Face behind the mask என்னும் தனது நூலுக்காகப் பல எழுத்தாளர்களைப் பேட்டி கண்டபோது தன்னிடம் அவர்கள் தனிப்படக் கூறிய பல செய்திகள் அவர்களது வாழ்க்கைவரலாற்றில் இடம் பெற்றிருக்கவில்லை என்பதைச் சில சான்றுகள் வழி-குறிப்பாகப் பெண்மனம்,அரக்கு மாளிகை முதலிய நாவல்களை எழுதிய பிரபல எழுத்தாளரான ‘லக்‌ஷ்மி’[டாக்டர் திரிபுரசுந்தரி]யின் வாழ்க்கைச் சம்பவங்கள் சிலவற்றின் வழி விரித்துக் கூறினார் அம்பை. சில நாதசுரப் பெண்கலைஞர்களும் கூடத் தாங்கள் தேவதாசிகளாக ஆக்கப்பட்டவர்கள் என்பதைத் தனிப்பட்ட முறையில் பகிர்ந்து கொண்டாலும் குடும்பத்தார் முன்பு அந்தச் சொல்லைப் பயன்படுத்தத் தயக்கம் கொள்வதையும் அவர்களுடனான நேர்காணல்களில் எதிர்ப்பட்டிருக்கிறார் இவர்..
[தன் எழுத்து,வாழ்க்கை,பெண்ணியம்,ஆணின் பார்வை போன்ற அம்பையின் சில கருத்துக்கள் அடுத்த தொடர்ப்பதிவில்..]



9 கருத்துகள் :

அ.பகீரதன் சொன்னது…

வாசித்தபோது கண்ணீர் முட்டி நெஞ்சு வலித்தது. நல்ல அனுபவம்.
நன்றி அம்மா, உங்கள் புத்தகங்களை வாசிக்க இன்னும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.

அ.பகீரதன்(கனடா)

பெயரில்லா சொன்னது…

//தன் தோழி ஒருத்தியின் வாழ்வனுபவங்களை மையமாகக் கொண்டு அவர் எழுதியதே ’சிறகுகள் முறியும்’ என்னும் குறுநாவல். .அந்தத் தோழியும் கூட அந்தப் படைப்பைப் படித்து விட்டுத் தன்னைப் பாராட்டினாளேயன்றி உண்மையில் இது தன் வாழ்வின் அனுபவம் என்பது அவளுக்கு உறைக்கவே இல்லை என்பது தனக்கு அதிர்ச்சியும் ஆச்சரியமும் அளிப்பதாக இருந்தது என்றார் அம்பை.//..

உண்மையிலேய்யே அதிர்ச்சிதான் மேடம் !

எம்.ஏ.சுசீலா சொன்னது…

ஆமாம்..சற்று முன்பு கூடத் தொலைபேசியில் இது பற்றி அவர்களிடம் பேசினேன்.ஒரு வேளை தன்னை வெளிப்படுத்திக் கொள்ள விரும்பாமல்தான் அவள் அப்படிச் சொல்கிறாளோ என்று கூடக் கேட்டேன்.ஆனால்,அந்தப் பெண்ணுக்கு உண்மையிலேயே அது தன் கதை என்பது தெரிந்திருக்கவில்லை என்றுதான் அம்பை சொன்னார்கள்.

Thenammai Lakshmanan சொன்னது…

அம்பையுடனான மாலை மிக அருமையான அனுபவம் அம்மா.. எல்லாப் பெண்களின் நிலையையும் அவர் கூறி விட்டார்.. ஆமாம் நினைத்ததை நடந்ததை எல்லாம் எழுத முடியாதுதான் நம்மால்.. நம்மக்கும் சில கோடுகள் முன்னே இருக்கின்றன.. அவற்றைத் தாண்டும் துணிவு நமக்கில்லை என்பதே உண்மை.

CS. Mohan Kumar சொன்னது…

அருமையான கட்டுரை. குறிப்பாக அவர் தாயார் பற்றி சொன்ன இடம் நெகிழ்வு.

அம்பை அவர்களின் சிறுகதை பல ஆண்டுகள் முன் இந்தியா டுடேயில் படித்து அசந்து போனேன். டீன் ஏஜ் காதல் குறித்த இந்த சிறுகதை தமிழின் ஒரு சிறந்த சிறுகதை என்பேன். அம்பை அவர்களிடம் என் வணக்கத்தையும் இந்த கதை குறித்து நான் சொன்னதையும் பகிர்ந்து கொள்ளவும். அவர் மெயில் முகவரி தந்தால் நானே அவருக்கு இதை தெரிவிக்கிறேன் நன்றி

பெயரில்லா சொன்னது…

பதில் அளித்ததற்கு மிக்க நன்றி மேடம்!!!

Unknown சொன்னது…

அருமையான பத்தி அம்மா..

மோகன் குமார் சொல்வதை போல எனக்கும் பத்தியை வாசித்து முடித்த போது அம்பையின் தாய்தான் மனதில் நிறைந்திருந்தார். கணவனின் அடக்கு முறையையும், அந்த தாய் தனது பரிசுத்தமான அன்பால் கடந்து வருகிறார்கள். அத்தகைய பெண்கள் எப்போதும் வணங்க தகுந்தவர்கள். மகளிர்தினத்தில் அருமையான பகிர்வு வாசித்து நேசித்தேன்.
அன்புடன்
தேவராஜ் விட்டலன்

niram சொன்னது…

அம்பை ஆணும் பெண்ணும் சேர்ந்ததல்ல. அம்பை அம்பிகை அம்பாலிகை மூவரும் காசி மன்னனின் புத்ரிகள். சால்வ மன்னனை காதலித்த அம்பையால் விசித்ரவீர்யனை ஏற்று கொள்ள முடியவில்லை. மட்டுமல்ல சிறுவனான அவனுக்கு பதிலாக பீஷ்மர் தான் இந்த மூன்று அழகிய இளவரசிகளையும் சுயம்வர பந்தலில் இருந்தும் இழுத்து அழைத்து வந்தார். காதலும் நிறைவேறாமல் தற்கொலை செய்கிறாள் அம்பை .துருபதனின் மகளாக ஷிகந்திநியாக மறு பிறவி எடுத்து சிகண்டியாக நின்று பீஷ்மனை வீழ்த்த அர்ஜுனனுக்கு உதவுகிறாள். எப்படி பார்த்தாலும் அவள் ஆண்களை போல் போர்க்களத்தில் நின்று போராடியிருக்கிறாள் என்பது தான் உண்மை என்று தெரிகிறது.

எழுத்தாளர் அம்பையை படித்திருக்கிறேன். எதிலுமே ஆழம் குறைந்த mediocrity கருத்துக்கள் தான் பார்க்க முடிந்தது. மீடியாவால் உருவாக்கப்பட்டவர் என்பதை தவிர வேறொரு சிறப்பும் அவரிடம் இல்லை.

எம்.ஏ.சுசீலா சொன்னது…

அன்பிற்குரிய ‘நிறம்’
உங்கள் கண்ணோட்டங்கள் மீதும் வாசிப்பின் மீதும் எனக்கு ஆழ்ந்த மதிப்பும் மரியாதையும் உண்டு.ஆனால் எழுத்தாளர் அம்பை பற்றிய உங்கள் கருத்தை என்னால் ஏற்க முடியவில்லை.ஒரு குறுகிய வட்டத்துக்குள் மட்டுமே சஞ்சரித்துக் கொண்டு...உறுதியான நிலைப்பாடு எடுக்கத் தயங்கியபடி இருந்த பெண்எழுத்துக்கு அம்பையின் வரவு பல புதிய வாயில்களைத் திறந்து வைத்ததென்பதை எந்த விமரிசகர்களாலும் மறுக்க முடியாது.மிகக் குறைவாகவே எழுதியபோதும் தன் முத்திரைகளை அழுத்தமாகப் பதித்திருக்கும் அம்பையை //மீடியாவால் உருவாக்கப்பட்டவர்//என்றும், //ஆழம் குறைந்த mediocrity கருத்துக்கள்//அவருடையவை என்றும் எந்த அடிப்படையில் சொல்கிறீர்களென்று உண்மையிலேயே விளங்கவில்லை.அவர் கதைகளிலிருந்து/எழுத்துக்களிலிருந்து சான்று காட்டிச் சொன்னால் இது பற்றிய விவாதத்தை முன்னெடுத்துச் செல்ல உதவியாக இருக்கும்.
இன்னுமொன்று.தாங்கள் சொல்லியிருக்கும் பாரதக் கதையில் இடம்பெறும் அம்பையின் தொடர்ந்து போராடும் வீரியமே அப்பெயர் தன்னை ஈர்க்கக் காரணம் என்றும் அவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.
//ஆணும் பெண்ணும் சேர்ந்த//தென்பது இங்கு ஒரு குறியீடு மாத்திரமே என்பது உங்களுக்குத் தெரியாதாஎன்ன?

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....