துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

21.3.12

கிறிஸ்துமஸ் மரமும் ஒரு திருமணமும்-2

[மார்ச் மாத உயிரெழுத்து இதழில் வெளியான
என் மொழியாக்கச் சிறுகதை
[மூலம்;ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கி-ஆங்கில வழி தமிழாக்கம்
கிறிஸ்துமஸ் மரமும் ஒரு திருமணமும்--1 இன் தொடர்ச்சி..].
’’இங்கே என்ன செய்துக்கிட்டிருக்கே செல்லம்...’’என்று கிசுகிசுப்பான குரலில் கேட்ட அவன் மீண்டும் ஒரு முறை தன்னைச் சுற்ற்றித் திருட்டுப் பார்வை பார்த்து விட்டுப் பிறகு அந்தப் பெண்ணின் கன்னத்தில் தட்டிக் கொடுத்தான்.
‘’நாங்க விளையாடிக்கிட்டிருக்கோம்..’’
‘’ஓ..இவனோடவா...?’’என்றபடிஅந்தச் சிறுவனைக் கொஞ்சம் சந்தேகத்துடன் பார்த்தான் ஜூலியன் மேஸ்டகோவிச். 


பிறகு அவனைப் பார்த்து...
‘’போ பையா...அங்கே எல்லாரும் விளையாடிக்கிட்டிருக்காங்களே அந்த ‘பால்ரூ’முக்குப் போ..அங்கே ஓடு...அங்கே உன்னோட விளையாட ஒரு நல்ல பையன் இருக்கான்’’என்றான்.
அந்தச் சிறுவன் அவனை உற்றுப் பார்த்தானே தவிர எந்த பதிலும் சொல்லவில்லை.மறுபடியும் ஒரு தடவை ரகசியமாகச் சுற்றிலும் பார்த்துக் கொண்ட பிறகு அந்தச் சிறுமியின் பக்கத்தில் மண்டியிட்டு அமர்ந்து கொண்டான் ஜூலியன் மேஸ்டகோவிச்.
‘’அங்கே என்ன வச்சிருக்கே கண்ணு..பொம்மையா..?’’என்று அவளிடம் கேட்டான்.
‘’ஆமாம்..பொம்மைதான் வச்சிருக்கேன்’’என்று தன் முகத்தைச் சுளித்தபடி சற்று பயத்தோடு பதில் சொன்னாள் அந்தப் பெண்.
‘’பொம்மையா....சரி கண்ணு...! ஆமாம்..எதை வச்சு பொம்மை செய்யறாங்கன்னு உனக்குத் தெரியுமா ?’’
‘’இல்லை சார்..எனக்கு அது தெரியாது..’’ என்று முணுமுணுப்பான குரலில் சொல்லிவிட்டுத் தன் தலையைத் தொங்க விட்டுக் கொண்டாள் அந்தச் சின்னப்பெண்.
‘’அப்படியா..அது உனக்குத் தெரியாதா....? பழைய துணியையெல்லாம் வச்சுத்தான் அதைச் செய்யறாங்க கண்ணு ‘’ என்று அவளிடம் சொல்லிக் கொண்டே வந்த ஜூலியன் மேஸ்டகோவிச், அந்தச் சிறுவனை முறைத்துப் பார்த்தபடி விரட்டினான்.
‘’ஏ..பையா...அங்கே போ...’பால் ரூ’முக்குப் போய் உன்னை மாதிரி இருக்கிற மத்த பசங்களோட சேர்ந்து விளையாடு..போ..’’
அந்தச் சிறுவனும் சிறுமியும் அவனைக் கோபத்தோடு பார்த்தபடி ஒருவரை ஒருவர் இறுகப் பற்றிக் கொண்டனர். அவன் சொன்னபடி பிரிந்து செல்ல அவர்களுக்கு விருப்பமில்லை.
‘’அந்த பொம்மையை உனக்கு ஏன் கொடுத்திருக்காங்கன்னு தெரியுமா..?’’ என்று கேட்ட ஜூலியன் மேஸ்டகோவிச், தன் குரலை இன்னும் கூடச் சற்றுத் தாழ்த்திக் கொண்டான்.
‘’தெரியாது சார்..’’
‘’அது எதுக்குத் தெரியுமா....நீ..வாரம் முழுக்க ஒரு சமர்த்துப் பெண்ணா..நல்ல பெண்ணா இருந்திருக்கே பார்த்தியா ..அதனாலேதான்..’’
உணர்ச்சி வேகத்தில் தத்தளித்துக் கொண்டிருந்த ஜூலியன் மேஸ்டகோவிச் ,அறையைச் சுற்றிலும் கவனமாக ஒரு தடவை நோட்டம் விட்டுவிட்டுத் தன் குரலை இன்னும் கூட மெல்லிதாக ஆக்கிக் கொண்டான்..யார் காதுக்கும் கேட்காத கிசுகிசுப்பான குரலில் அதை அவளிடம் முணுமுணுத்தபோது...உணர்ச்சி மேலீட்டாலும்..அதற்கு மேலும் அதைப் பொறுத்துக் கொள்ள முடியாததாலும் அவன் குரல் உடைந்து போயிருந்தது.
‘’உன்னோட அம்மா அப்பாவைப் பார்க்க நான் வருவேன்...அப்ப என்னைப் பிடிச்சிருக்குன்னு அவங்க கிட்டச் சொல்றியா...அப்படிச் சொல்லுவேன்னு என் கிட்டே சத்தியம் பண்றியா கண்ணு..?’’
-இவ்வாறு சொன்னபடியே தன் ‘செல்ல’த்தை முத்தமிட முயன்றான் ஜூலியன் மேஸ்டகோவிச். அந்தப் பாப்பாவுக்கு அடக்க முடியாதபடி அழுகை குமுறிக் கொண்டு வந்தது; அதைப் பார்த்த அந்தச் செம்பட்டை முடிச் சிறுவன்,அவள் கையைப் பிடித்துக் கொண்டு அவள் மீதான தன் இரக்கத்தைக் காட்டும் வகையில் தானும் தேம்பத் தொடங்கினான்.இந்தக் கட்டத்தில் ஜூலியன் மேஸ்டகோவிச்சுக்கு நிஜமாகவே கடுமையான கோபம் வந்து விட்டிருந்தது.
’’இப்ப இங்கே இருந்து போகப் போறியா இல்லையா….? உடனே ஓடிப் போயிடு இங்கேயிருந்து..’’என்று அந்தப் பையனிடம் கத்தினான் அவன். ‘’உன்னை மாதிரிப் பசங்க எல்லாம் அந்த ‘பால் ரூ’மிலே இருக்காங்க பாரு..அவங்க கிட்டே போ..’’
‘’இல்லை…வேண்டாம்…’’என்று சொன்னபடி அந்தப் பெண் அழுதாள்.
‘’நீங்க இங்கே இருந்து போங்க ..அவனை விட்டுடுங்க…! இப்ப அவனை விடப் போறீங்களா இல்லையா…’’என்றபடி கண்ணீர் விட்டுக் கதறினாள் அவள்.
கதவருகே யாரோ உரக்கப் பேசும் சத்தம் கேட்டடதும் திடுக்கிட்டுப் பயந்து போன ஜூலியன் மேஸ்டகோவிச், மண்டி போட்டுக் குனிந்த நிலையிலிருந்து எழுந்து கொண்டு பழையபடி கம்பீரமாகத் தோற்றம் தர முயன்றான்.ஆனால் அந்தச் செம்பட்டை முடிச் சிறுவனோ ஜூலியன் மேஸ்டகோவிச்சை விடவும் அதிகமாகப் பயந்து போயிருந்தான்.அந்தப் பெண்ணை அங்கேயே விட்டுவிட்டுத் தான் மட்டும் சுவரோடு ஒட்டி உரசி நகர்ந்த வண்ணம் வரவேற்பறையிலிருந்து நழுவிச் சாப்பாட்டறைக்குள் சென்றான் அவன். 
அப்போது ஜூலியன் மேஸ்டகோவிச் ஒரு நண்டைப் போலச் சிவந்து போயிருந்தான். அந்த நேரத்தில் முகம் பார்க்கும் கண்ணாடியில் அவன் தன்னைப் பார்க்க நேர்ந்தால்….அவனைப் பற்றி அவனுக்கே கூச்சம் எற்பட்டு விடக் கூடும் என்று தோன்றியதுதான் அதற்குக் காரணம் என்றும், அந்த அளவுக்குப் பொறுமையில்லாமல் உணர்ச்சிவசப்பட்டுவிட்டதை எண்ணி அவனே வருத்தப்பட்டிருக்க வேண்டும் என்றும் எனக்குத் தோன்றியது.
கை விரல்களை வைத்துக் கொண்டு, தான் கணக்குப் போட்டபோது தான் கண்டுபிடித்த அதிக[பட்சமான அந்தத் தொகை-எடுத்த எடுப்பில் அவனுக்கு மிகவும் பிரமிப்பூட்டுவதாக இருந்திருக்கலாம்; அதனால் ஏற்பட்ட சபலமும்,மன எழுச்சியும் – சமூகத்தில் தான் எந்த அளவுக்குக் கௌரவமானவன்,செல்வாக்கானவன் என்பதைக் கூட மறக்கும் அளவுக்கு அவனைத் தூண்டியிருக்கலாம்;இளமை வேகத்தில் ஆவேசமாகச் செலுத்தப்படும் ஒரு வாலிபனைப் போலப் புயல்வேகத்தில் தன் விருப்பத்தை நிறைவேற்றிக் கொண்டுவிட வேண்டும் என்ற உந்துதலை அதுவே அவனுக்கு அளித்திருக்க வேண்டும்; அவனுடைய விருப்பங்கள் எந்த இலக்கை நோக்கிக் குவிந்திருக்கிறதோ…அந்த இலக்கை அவன் உடனடியாக ஒன்றும் எட்டி விட முடியாது என்பதும் குறைந்த பட்சம் இன்னும் ஐந்து ஆண்டுகளாவது அதற்காக அவன் காத்திருக்க வேண்டும் என்பதும் அப்போது அவன் அறிவுக்கு எட்டாமல் போயிருக்கலாம்…அப்படித்தான் ஏதோ நடந்திருக்க வேண்டும் என்று எனக்குத் தோன்றியது.
அவனைப் பின் தொடர்ந்து சாப்பாட்டு அறைக்குள் போனபோது வேறொரு விநோதமான காட்சியைப் பார்க்கும் வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது.எரிச்சலும் கோபமும் கொண்டு முகம் சிவந்து காணப்பட்ட ஜூலியன் மேஸ்டகோவிச் அந்தச் செம்பட்டை முடிப் பையனை மிகக் கடுமையாகத் திட்டியபடி அங்கிருந்து விரட்டியடித்துக் கொண்டிருந்தான்.அந்தச் சிறுவனும் அவனிடமிருந்து விலகி விலகிப் போய்க் கொண்டிருந்தானே தவிர..அவனுக்கிருந்த பயத்தில் எங்கே போய் ஓடி ஒளிந்து கொள்வது என்று அவனுக்குத் தெரியவில்லை.
‘’ஏ பிச்சைக்காரப் பயலே….முதல்லே போ இங்கேயிருந்து…! ஓடிப் போ முதல்லே…...இங்கே என்ன செய்யறே? பழத்தைத் திருடிக்கிட்டிருக்கே அப்படித்தானே….ஏ போக்கிரிப் பயலே பழத்தைத் திருடறியா நீ…...ஓடிப் போ இங்கே இருந்து…ஏய் மூக்கொழுகி முட்டாள் பயலே…இப்பப் போகப் போறியா இல்லையா…போ…அங்கே விளையாடிக்கிட்டிருக்கிற உன்னை மாதிரி பசங்களோட போய் சேந்துக்கோ போ…’’
அரண்டுபோய் நடுநடுங்கிக் கொண்டிருந்த அந்தச் சிறுவன்,தன்னை விரட்டிக் கொண்டு வரும் அவனிடமிருந்து தப்பித்துக் கொள்ள மூர்க்கமாக முயற்சித்தபடி…மேஜைக்கு அடியில் ஒளிந்து கொண்டு ஊர்ந்து செல்லத் தொடங்கினான்.கோபத்தில் கொந்தளித்துக் கொண்டிருந்த ஜூலியன் மேஸ்டகோவிச், தன்னிடமிருந்த மிகப் பெரிய கைக் குட்டை ஒன்றை அந்தச் சிறுவனின் மீது ஆவேசமாக விசிறியடித்தபடி,அங்கிருந்து அவனைத் துரத்த முயற்சித்துக் கொண்டிருந்தான்.ஆனால்..அந்தப் பையனோ மேஜைக்கடியில் ஒரு எலியைப் போல மிக அமைதியாகப் பதுங்கிக்கொண்டு வெளியே வராமல் போக்குக் காட்டிக் கொண்டிருந்தான்.
ஜூலியன் மேஸ்டகோவிச் கொஞ்சம் பருமனான உடல்வாகு கொண்டவன் என்பதை இங்கே கட்டாயம் குறிப்பிட்டாக வேண்டும்.பணத்தின் செழுமையால் பளபளப்போடு காணப்பட்ட அவனது கன்னங்கள் இரத்தம் போலச் சிவந்திருந்தன. கட்டுமஸ்தான உடல்,சற்றே பிதுங்கிக் கொண்டிருந்த தொந்தி,பருத்த தொடைகள் ஆகியவற்றோடு இருந்த அவன்- சுருக்கமாகச் சொல்லப் போனால்- ஒரு கொழுத்த குதிரையைப் போன்ற வலிமையுடன் இருந்தான்.வியர்வை வெள்ளம் பெருகி ஓட,நெடுமூச்சு வாங்கியபடி அந்தச் சிறுவனை விரட்டிக் கொண்டிருந்த அவனது முகம்..கணத்துக்குக் கணம் மேலும் மேலும் சிவப்பாகிக் கொண்டே வந்தது.கடைசியாக ஒரு கட்டத்தில்…அவன் பைத்தியம் பிடித்தவனைப் போலவே ஆகி விட்டிருந்தான்.அந்தச் சிறுவன் மீது அவனுக்கு ஏற்பட்டிருந்த வெறுப்புணர்ச்சி அவனை அந்த அளவுக்கு ஆட்டி வைத்துக் கொண்டிருந்தது. யார் கண்டது..? ஒரு வேளை அது பொறாமையாகவும் கூட இருக்கலாம்…அதற்கு மேலும் சிரிப்பை அடக்கிக் கொள்ள என்னால் முடியவில்லை. ஜூலியன் மேஸ்டகோவிச் மெதுவாகத் திரும்பிப் பார்த்தான். தான் எப்படிப்பட்ட செல்வாக்கான ஒரு நபர் என்பதையெல்லாம் கூட மறந்து போனவனாய்ப் பயங்கரமான குழப்பத்தின் பிடியில் ஆட்பட்டிருந்தான் அவன். சரியாக அதே நேரத்தில் எங்களை விருந்துக்கு அழைத்திருந்த மனிதர் எதிர்ப்புறக் கதவின் வழியாக உள்ளே நுழைந்தார்.அந்தச் சிறுவன் மெள்ள ஊர்ந்து மேஜைக்கு அடியிலிருந்து வெளிப்பட்டபடி தன் முழங்கைகளையும் கால்களையும் துடைத்துக் கொண்டான். அவனை விரட்டுவதற்காகக் கைக் குட்டையின் ஒரு நுனியைத் தன் விரல்களால் பிடித்துக்கொண்டிருந்த ஜூலியன் மேஸ்டகோவிச், அவசர அவசரமாக அதைத் தன் மூக்கருகே கொண்டுசென்றான்.
விருந்துக்கு அழைத்தவர் எங்கள் மூவரையும் சற்றே புதிரான பாவனையுடன் பார்த்தார்.ஆனால்…அவர் கொஞ்சம் அனுபவசாலி…வாழ்க்கையைத் தீவிரமாக எடுத்துக் கொள்ளும் கண்ணோட்டம் உடையவர். வந்திருந்த விருந்தாளியை வைத்துத் தன் காரியத்தை முடிக்க வாய்த்த ஒரு சந்தர்ப்பமாக அதை அவர் எடுத்துக் கொண்டார்.
அந்தச் செம்பட்டைமுடிச்சிறுவனை ஜூலியன் மேஸ்டகோவிச்சிடம் சுட்டிக் காட்டியபடி ‘’நான் உங்களிடம் முன்னால் சொல்லி வைத்திருந்தேனல்லவா….இவன்தான் அந்தப் பையன்..’’
‘’என்ன என்ன? திரும்ப ஒரு முறை சொல்லுங்கள்…நான் சரியாகக் கவனிக்கவில்லை’’என்றான் ஜூலியன் மேஸ்டகோவிச். இன்னும் கூடத் தனது இயல்பு நிலைக்கு அவன் முழுமையாக மீண்டிருக்கவில்லை.
‘’இந்தப் பையனின் அம்மாதான் என் குழந்தைகளைக் கவனித்துக் கொள்கிறாள் சார்…’’என்றபடி மேலும் பேச்சைத் தொடர்ந்தார் விருந்தளிப்பவர். அவனிடம் ஏதோ ஒரு உதவி கோரும் தொனியில் அவர் பேசிக் கொண்டிருந்தார்.
‘’அந்தப் பெண் மிகவும் பரிதாபமான சூழ்நிலையில் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறாள் சார்…மிகவும் நேர்மையாக வேலை பார்த்த அரசாங்க ஊழியரின் விதவை அவள். அதனால்…இந்த விஷயத்தில் உங்களால் ஏதாவது செய்ய முடியுமோ என்று நான் நினைத்தேன்..’’
‘’இல்லையில்லை….அது சாத்தியமில்லை….அது…முடியவே முடியாது..’’என்று உடனடியாகக் கத்தினான் ஜூலியன் மேஸ்டகோவிச். ’’தயவு செய்து என்னை மன்னித்துக் கொள்ளுங்கள் சார்......! இனிமேல் அதைப் பற்றிக் கேட்பதற்குக் கூட வழியில்லை. நான் நன்றாக விசாரித்து விட்டேன்….அங்கே இப்போது இடம் காலியில்லை. அப்படியே ஏதாவது காலியிடம் இருந்தாலும் அதற்கு இவனை விடப் பொருத்தமாக இன்னும் பன்னிரண்டு பேர் காத்துக் கொண்டிருக்கிறார்கள்…என்னை மன்னித்து விடுங்கள்…தயவு செய்து என்னை மன்னித்து விடுங்கள்..’’
‘’பாவம் இந்தப் பையன்’’ என்றார் விருந்தளிப்பவர். ’’இவன் ரொம்ப அமைதியான சுபாவம் கொண்டவன்…குற்றம் குறை சொல்ல முடியாத சிறுவன் இவன்’’
‘’ஆனால்…நான் பார்த்தவரைக்கும் இவன் குறும்புக்காரப் பயனைப் போலத்தானே தெரிகிறான்…’’என்று தன் உதடுகளைச் சுளித்துக் கொண்டு பதிலளித்த ஜூலியன் மேஸ்டகோவிச் ‘’போ பையா..இங்கே எதுக்குக் காத்துக்கிட்டிருக்கே…அங்கே போய் வேற பையன்களோட சேர்ந்து விளையாடு போ..’’என்று அந்தச் சிறுவனைப் பார்த்துச் சொன்னான்.
இந்தக் குறிப்பிட்ட கட்டத்தில் என்னை ஓரக்கண்ணால் பார்ப்பதை அதற்கு மேலும் அவனால் தவிர்க்க முடியாமல் போய் விட்டது போல எனக்குத் தோன்றியது.அதற்கு மேல் என்னாலும் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.அவன் முகத்துக்கு நேராகவே நான் சிரித்து விட்டேன்.’சட்’டென்று முகத்தைத் திருப்பிக் கொண்டுவிட்ட ஜூலியன் மேஸ்டகோவிச் என் காதில் விழ வேண்டுமென்பதற்காகவே ‘’யார் இந்த வித்தியாசமான இளைஞன்..’’என்று விருந்தளிப்பவரிடம் என்னைப் பற்றி விசாரித்தான்.அவர்கள் இருவரும் கிசுகிசுப்பான குரலில் அந்தரங்கமாக உரையாடியபடியே அறையை விட்டுச் சென்றனர். என்னைப் பற்றி அவர் சொன்னதைக் கொஞ்சமும் நம்ப முடியாமல் ஜூலியன் மேஸ்டகோவிச் அப்போது தலையாட்டிக் கொண்டிருந்ததை நான் பார்த்தேன்…
சிறிது நேரம் மனம் விட்டுச் சிரித்துத் தீர்த்து விட்டு அந்த விழா நடைபெறும் அரங்கத்திற்கு நான் திரும்பிச் சென்றேன்.எங்களுக்கு விருந்தளித்த கணவன் - மனைவி உட்பட அங்கிருந்த செல்வாக்கான மனிதர்கள் அத்தனை பேரும் ’அந்த’ப் பெரிய மனிதனைச் சுற்றிக் கூடியிருந்தார்கள்.அப்பொழுதுதான் அறிமுகம் செய்து வைக்கப்பட்டிருந்த ஒரு பெண்மணியிடம் பேசிக் கொண்டிருந்த அவன்,குறிப்பாக ஏதோ ஒரு விஷயத்தை மட்டுமே பிடித்துக் கொண்டு அதைப்பற்றியே திரும்பத் திரும்ப அவளிடம் பெருமையடித்துக் கொண்டிருந்தான்.
பத்து நிமிடங்களுக்கு முன்பு அந்த வரவேற்பறையில் வைத்து எந்தக் குட்டிப் பெண்ணை ஜூலியன் மேஸ்டகோவிச் சீண்டிக் கொண்டிருந்தானோ…அதே சிறுமியின் கைகளைப் பிடித்தபடி அந்தப் பெண்மணி நின்று கொண்டிருந்தாள்.அந்தக் குட்டிப் பெண்ணின் அழகு,திறமை,நளினமான நடத்தை ஆகியவை குறித்தும், மிக நல்ல முறையில் அவள் வளர்க்கப்பட்டிருப்பதைப் பற்றியும்…..இப்ப்டிப் பலவற்றையும் போற்றிப் புகழ் பாடிப் பரவச வெள்ளத்தில் எல்லாரையும் ஆழ்த்திக் கொண்டிருந்தான் ஜூலியன் மேஸ்டகோவிச். குறிப்பாக – அந்தச் சிறுமியின் தாயிடம் அவன் சற்று மிகையாகவே தாழ்ந்து போய்க் குழைந்து குழைந்து பேசிக் கொண்டிருந்தது அப்பட்டமாகப் புலப்பட்டது.அவளும் தன் கண்களில் நீர் மல்க…ஆனந்த பரவசத்தோடு அவன் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தாள். அந்தச் சிறுமியின் தந்தையும் புன்னகை செய்தபடி இருந்தார்.இவ்வாறு எல்லோரும் குதூகலத்துடன் இருந்ததைக் கண்டு விருந்தை ஏற்பாடு செய்தவரும் மகிழ்ச்சியடைந்தார்.அங்கே கூடியிருந்த எல்லா விருந்தாளிகளுமே அந்தப் பேச்சில் ஆர்வம் காட்டத் தொடங்கி விட்டிருந்தனர்.அந்த உரையாடலுக்கு எந்த வகையான இடைஞ்சலும் இருக்கக் கூடாது என்பதற்காகவே அவர்கள் அங்கே விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளிடமும் கூடத் தங்கள் விளையாட்டுக்களை நிறுத்துமாறு சொல்லி விட்டனர்.
ஜூலியன் மேஸ்டகோவிச்சின் பேச்சு தன் நெஞ்சின் ஆழத்தையே தொட்டு விட்டதால் அவன் தன் மேன்மையான வருகையால் தங்கள் வீட்டை கௌரவப்படுத்த வேண்டும் என்று அந்தச் சிறுமியின் தாய் அவனிடம் எப்படி மிகுந்த அன்போடு கேட்டுக் கொண்டாள் என்பதையும்,அவனும் கள்ளம் கபடமே இல்லாதவனைப் போன்ற பாவனையுடன் அந்த அழைப்பை எவ்வாறு ஏற்றுக் கொண்டான் என்பதையும்,அங்கே வந்திருந்த பிற விருந்தாளிகளெல்லாம் அவரவர் சமூகத் தகுதிக்கு ஏற்ற வகையில் அந்தக் குத்தகைக்காரருக்கும்,அவரது மனைவிக்கும்,அந்தச் சிறுமிக்கும்….எல்லாவற்றுக்கும் மேலாக ஜூலியன் மேஸ்டகோவிச்சுக்கும் பாராட்டுச் சொல்ல எப்படியெல்லாம் முண்டியடித்தார்கள் என்பது பற்றியும் நான் பிற்பாடு கேள்விப்பட்டேன்.
‘’ ‘அந்த’ப் பெரிய மனிதனுக்குக் கல்யாணமாகி விட்டதா..’’என்று ஜூலியன் மேஸ்டகோவிச்சுக்குக்க் மிக அருகில்நின்று கொண்டிருந்த எனக்குத் தெரிந்த ஒரு நபரிடம் நான் சற்று உரத்த குரலில் கேட்டேன்.உடனே ஜூலியன் மேஸ்டகோவிச் என்னத் திரும்பிப் பார்த்து சந்தேகத்தோடும்,வன்மத்தோடும் கூடிய பார்வை ஒன்றை என் மீது படர விட்டான்.
‘’இல்லை..இன்னும் திருமணமாகவில்லை’’என்று என் கேள்விக்குப்பதிலளித்தார் நண்பர். அப்படிப்பட்ட பேச்சினால்  நாகரிகமான நடத்தை நெறிகளை நான் உடைத்துப் போட்டதில் அவர் சற்று அதிர்ச்சி அடைந்திருந்ததைப் போலத் தோன்றியது. ஆனால்….அதைப் பற்றித் தெரிந்தே…வேண்டுமென்றேதான் நான் அப்படிச் செய்திருந்தேன்.

சமீபத்தில் சில நாட்களுக்கு முன் நான் ஒரு தேவாலயத்தைத் தாண்டிச் சென்றபோது அங்கே இருந்த பெரிய கூட்டத்தையும், ஆலயத்தின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த நிறைய வண்டிகளையும் கண்டு வியப்படைந்தேன்.என்னைச் சுற்றியிருந்த எல்லோரும் ஏதோ ஒரு திருமணத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள்.
அந்த நாள் மேகமூட்டத்துடன் கூடியதாக இருந்தது. இலேசான தூறல் தொடங்கி விட்டதால் நானும் கூட்டத்தைப் பின் தொடர்ந்து ஆலயத்துக்குள் சென்றேன்.அங்கே அந்த மணமகனையும் பார்த்தேன்.கட்டை உட்டையாகக் குள்ள வடிவம் கொண்ட-மொழுமொழுப்பான அந்த மனிதன் சற்றே பிதுங்கிக் கொண்டிருந்த தொந்தியுடன் இருந்தான். அளவுக்கு அதிகமான ஒப்பனைகளுடனும் அலங்காரத்துடனும் காணப்பட்ட அவன், ஒரு நிமிடம் கூட உட்காராமல் கோயிலுக்குள் அங்குமிங்கும் ஓடியபடி எல்லா ஏற்பாடுகளையும் கவனித்துக் கொண்டு உத்தரவு பிறப்பித்துக் கொண்டிருந்தான்.
கடைசியாக…..மணமகள் வந்து விட்டாள் என்ற தகவல் கூட்டத்தில் பரவ….நானும் அந்த ஜனக் கூட்டத்திற்குள் முண்டியடித்துக் கொண்டு அபூர்வமான அழகு படைத்த அந்தப் பெண்ணைப் பார்த்தேன்.
தனது வாழ்வின் வசந்தகாலம் தொடங்கவிருந்த அந்தத் தருணத்தில் அழகான அந்தப் பெண் தன் முகமெல்லாம் வெளிறிப் போய்…வருத்தத்தோடு காணப்பட்டாள். தன்னைச் சுற்றிலும் நடந்து கொண்டிருப்பதை எந்த ஆர்வமும் இல்லாமல்-வெற்றுப் பார்வையுடன் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் அவள். சற்று முன்பு அவள் அழுதிருக்க வேண்டும் என்றும்,அவளது கண்கள் சிவந்திருப்பதற்கு அதுவே காரணம் என்றும் எனக்குத் தோன்றியது.அவளது முகத்தில் படிந்திருந்த தீவிரமான பாவனை,அவளது அழகுக்கு மேலும் புனிதத்தையும் கண்ணியத்தையும் சேர்த்துக் கொண்டிருந்தது.அந்தத் தீவிரமான பாவனை…கௌரவமான தோற்றம்….துயரமான பார்வை..இவைகளுக்கு இடையிலும் கூடக் குழந்தைப் பருவத்தின் அப்பாவித்தனமான சாயல் இன்னும் கூட ஒரு மின்னல் கீற்றாக அவளிடம் பளிச்சிட்டுக் கொண்டிருந்ததை என்னால் பார்க்க முடிந்தது. நம்ப முடியாத அளவு பரிசுத்தமான ஒரு குழந்தையைப் போலவும்…, திருமணப் பருவத்தை இன்னும் எட்டியிருக்காத இளமையும்,மென்மையும் கொண்டவளாகவும் அவள் என் கண்ணுக்குத் தென்பட்டாள். மேலும்,கள்ளம் கபடற்ற அந்தப் பிஞ்சுப் பெண்ணின் கண்கள்...தனக்குக் கருணை காட்டுமாறு வார்த்தைகளின்றி மௌனமாக- மென்மையாக யாசித்துக் கொண்டிருப்பதைப் போலவும் எனக்குத் தோன்றியது.
அவளுக்குப் பதினாறு வயதுதான் முடிந்திருக்கிறது என்று அங்கே கூடியிருந்த மக்கள் பேசிக் கொண்டார்கள். மணமகனைச் சற்று கவனமாகப் பார்த்தபோதுதான் அது ஜூலியன் மேஸ்டகோவிச் என்பதை நான் இனம் கண்டுகொண்டேன்;முன்பு பார்த்ததற்குப் பிறகு கடந்த ஐந்து வருடங்களில் அவனை நான் பார்க்கவே இல்லை. பிறகு…அந்தப் பெண்ணையும் பார்த்தேன்….ஐயோ..கடவுளே..!
கூட்டத்திற்குள் நகர்ந்து போக வழியை ஏற்படுத்திக் கொண்ட நான்...கதவை நோக்கி வேகமாக நடந்து செல்ல ஆரம்பித்தேன்.அந்த மணமகள் பெரும் சொத்துக்கு வாரிசு என்றும் அவளுக்குச் சீர்வரிசையாகத் தரப்பட்ட தொகையின் மதிப்பு ஐநூறாயிரம் ரூபிள்கள் என்றும் – அதற்கு மேல் அவளது ஆடை,ஆபரணங்களுக்காக எவ்வளவு பணம் செலவழிக்கப்பட்டிருக்கும் என்பதைச் சொல்ல வேண்டிய தேவையே இல்லை என்றும் அந்தக் கூட்டத்தில் இருந்தவர்கள் பேசிக் கொண்டார்கள்.
‘’அவன்....மிகவும் துல்லியமாகத்தான் கணக்குப் போட்டிருக்கிறான்’’ என்று எண்ணியபடியே வீதியில் இறங்கி நடக்க ஆரம்பித்தேன் நான்.


நன்றி:உயிரெழுத்து மார்ச் இதழ்

கருத்துகள் இல்லை :

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....