துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

21.3.12

கிறிஸ்துமஸ் மரமும் ஒரு திருமணமும்-1

மார்ச் மாத உயிரெழுத்து இதழில் வெளியான
என் மொழியாக்கச் சிறுகதை
[மூலம்;ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கி-ஆங்கில வழி தமிழாக்கம்]


முன்பொரு நாள் நான் ஒரு திருமணத்தைப் பார்த்தேன்…! இல்லையில்லை..அது வேண்டாம்..முதலில் உங்களுக்கு அந்தக் கிறிஸ்துமஸ் மரத்தைப் பற்றிச் சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும்! திருமணம் என்னவோ நன்றாகத்தான் இருந்தது. எனக்கு அது பிடித்தும் இருந்தது.ஆனாலும் அந்த இன்னொரு விவகாரம்..! அது..இன்னும் கூட நன்றாக இருந்தது.திருமணத்தைப் பார்த்துக் கொண்டிருந்த வேளையில் அந்த கிறிஸ்துமஸ் மரத்தைப் பற்றிய நினைவு என்னுள் ஏன் எழுந்தது என்பது எனக்கே விளங்கவில்லை.
நடந்த கதை இதுதான்! சரியாக ஐந்து வருடங்களுக்கு முன்னால்..புத்தாண்டு பிறப்பதற்கு முதல்நாள் மாலை…! அன்று குழந்தைகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு விருந்திற்கு என்னையும் அழைத்திருந்தார்கள்.எனக்கு அழைப்பு விடுத்திருந்த மனிதர்,பரவலாக எல்லோருக்கும் அறிமுகமாகியிருந்த ஒரு தொழிலதிபர்; நிறையப் பேரிடம் பழக்கம் உள்ளவர். செல்வாக்கான பல தொடர்புகளும் அவருக்கு இருந்தன.எந்த இடத்தில்,எதைக் கறந்தால் எதைச் சாதிக்க முடியும் என்ற கலையில் கை தேர்ந்த வித்தகர் அவர். 
குழந்தைகளுக்காகவென்றே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த விருந்தும் கூட அப்படிப்பட்ட காரணங்களை உள்ளடக்கிய ஒரு பொய்ச்சாக்காகத்தான் இருக்க வேண்டும். எந்த உள்நோக்கமும் இல்லாததைப் போலவும்,எதையுமே முன்கூட்டித் திட்டமிடாததைப் போலவும் எதுவுமே தெரியாத அப்பாவித்தனத்துடன் மிக மிக இயல்பாகச் செய்வதைப் போலவும் குழந்தைகளை ஒன்று திரட்டி,அவர்களின் பெற்றோரை வரவழைத்து,அவர்களுடன் வேறு முக்கியமான-சுவாரசியமான தகவல்களைப் பரிமாறிக் கொள்வதற்குரிய ஒரு கருவியாகத்தான் அந்த விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருக்க வேண்டும்.
அந்த இடத்தில் நான் ஒரு அந்நியனைப் போல விலகியிருந்தேன்.அவர்களிடம் பரிமாறிக் கொள்ளக் கூடிய அளவு சுவாரசியமான தகவல் எதுவும் என்னிடமில்லை.அதனால் அந்த மாலைப் பொழுதை என் மனம் போன போக்கில் – என் விருப்பத்திற்கேற்றபடி நான் கழித்துக் கொண்டிருந்தேன்.குடும்ப விழாவின் குதூகலமான சூழ்நிலை நிலவிய அந்த இடத்தில் என்னைப் போலவே இன்னொரு மனிதரும் இருந்தார்.அந்தக் கூட்டத்தில் அவருக்கும் நண்பரோ உறவினரோ யாருமில்லை என்பது வெளிப்படையாகத் தெரிந்தது.உயரமாக,மெலிவாக இருந்த அந்த மனிதர் மிகவும் தீவிர முக பாவனையுடன் காணப்பட்டார்.நாகரிகமும்,கண்ணியமும் வாய்ந்த ஆடைகளை அவர் அணிந்திருந்தார்.என் கண்ணில் பட்ட முதல் ஆள் அவர்தான்…! அப்படிப்பட்ட மகிழ்ச்சியான குடும்ப விழாக்களில் கலந்து கொள்வதற்கும் அங்கே நடக்கும் வேடிக்கை வினோதங்களில் பங்கேற்பதற்குமான மனநிலையில் அப்போது அவர் இல்லை என்பது அப்பட்டமாகப் புலப்பட்டுக் கொண்டிருந்தது. கூட யாருமில்லாமல் ஏதாவது ஒரு மூலையில் தனித்து விடப்பட்டதும் – அந்தக் கணத்திலேயே -அதுவரையிலும் அவர் முகத்தில் இருந்த புன்னகை காணாமல் போய்விடும்.’கறுகறு’வென்றிருக்கும் அவரது அடர்த்தியான புருவங்கள் முடிச்சிட்டுக் கொள்ள ஆரம்பித்து விடும். எங்களை விருந்துக்கு அழைத்திருந்த மனிதரைத் தவிர அங்கே வந்திருந்த வேறு ஒரு ஜீவனைக் கூட அவருக்குத் தெரிந்திருக்கவில்லை என்பதும்,அங்கே பொழுது போக்குவது அவருக்கு மிகவும் சிரமமாக இருந்தது என்பதும் நன்றாகத் தெரிந்தது. ஆனாலும் கூடத் தன் எரிச்சலை மன உறுதியோடு கட்டுப்படுத்திக் கொண்டபடி – அந்த நேரத்தை உண்மையாகவே உல்லாசமாகக் கழித்துக் கொண்டிருப்பவர் போல் காட்டிக் கொள்ள அவர் முயற்சித்துக் கொண்டிருந்தார்.
மிக முக்கியமான,சிக்கலான வேலை ஒன்றை முடிப்பதற்காக,ஏதோ வேறொரு மாகாணத்திலிருந்து இந்த நகரத்திற்கு அவர் வந்திருக்கிறார் என்பதைப் பிறகுதான் நான் அறிந்து கொண்டேன்.விருந்தை ஏற்பாடு செய்திருந்தவருக்கு அறிமுகக் கடிதம் ஒன்றை அவர் கொண்டு வந்திருந்தார்.அதனால் விருந்தை நடத்துபவரும்-தன் பிரியத்தைக் காட்டிக் கொள்வது போலத் தன் பங்குக்கு மரியாதை நிமித்தமாக அவருக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்…அவ்வளவுதான்..!

அங்கே சீட்டு விளையாட்டு எதுவும் நடந்து கொண்டிருக்கவில்லை.அந்த மனிதர் புகை பிடிக்க ஒரு ‘சிகார்’ தருவதற்குக் கூட எவரும் முன் வரவில்லை.அவருடன் பேசுவதற்கும் யாருமில்லை. ஒருவேளை…அவர் ஒரு வேண்டாத விருந்தாளி என்பதைச் சற்றுத் தொலைவிலிருந்தே அங்கிருந்தவர்கள் அனுமானித்திருக்கக் கூடும்.இவ்வாறான காரணங்களால் – பொழுதை எப்படி ஓட்டுவது என்றும் தன் கையை வைத்துக் கொண்டு என்ன செய்வதென்றும் விளங்காத அந்தப் பாவப்பட்ட மனிதர்,வெறுமே தன் மீசையை வருடிக் கொடுத்தபடி அந்த மாலைப் பொழுதைக் கழித்துக் கொண்டிருக்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆட்பட்டுப் போயிருந்தார்.அவருடைய மீசை- பார்ப்பதற்கு என்னவோ மிக மிக அழகாகத்தான் இருந்தது.ஆனால்…இந்த உலகத்தில் அவர் பிறப்பெடுப்பதற்கு முன்பே அந்த மீசை ஜனித்து விட்டது போலவும்....அதை அப்படி நீவித் தருவதற்காகவே அதோடு அவர் ஒட்ட வைக்கப்பட்டிருக்கிறாரோ என்று நினைக்கத் தூண்டும் வகையிலும் அதை உற்சாகத்தோடு தடவிக் கொண்டிருந்த அவரது பாவனை இருந்தது

எங்களுக்கு விருந்தளித்துக் கொண்டிருந்தவர், ஐந்து சிறுவர்களின் பெருமைக்குரிய தந்தை. அவர் குடும்பத்து விழாவில் நிகழ்ந்து கொண்டிருந்த கேளிக்கைகளுக்கு நடுவே இப்படி வித்தியாசமான முறையில் நடந்து கொண்டிருந்த அந்த வினோதமான மனிதரைத் தவிர,என் சுவாரசியத்தைத் தூண்டி விட்ட இன்னொரு மனிதனும் கூட அந்த அறையில் இருந்தான்.ஆனால்…அவன் முழுக்க முழுக்க வேறு மாதிரியானவன்.பலன்களைக் கணக்கு போட்டே காய்களை நகர்த்தும் அவன் பெயர் ஜூலியன் மேஸ்டகோவிச். விருந்தை ஏற்பாடு செய்தவருக்கும் –மீசையை நீவிக் கொண்டிருந்தவருக்கும் இருந்த தொடர்புக்கும், இந்தக் குறிப்பிட்ட மனிதனுக்கும் அவருக்கும் உள்ள தொடர்புக்கும் பெரிய வேறுபாடு இருப்பது எடுத்த எடுப்பிலேயே புலப்பட்டு விட்டது. விருந்தளிப்பவரும் அவரது மனைவியும் அவனைப் பாராட்டு மழையில் நீராட்டிக் கொண்டிருந்தனர்.அவன் மீது சிறப்பான கவனம் செலுத்தியபடி பலவகையான பானங்களைக் கொண்டுவந்து கொடுத்து அவனை உபசரித்தனர். அங்கே வந்திருந்த மற்ற எல்லா விருந்தாளிகளையும் அவனிடம் அழைத்துச் சென்று அறிமுகமும் செய்து வைத்தனர். ஆனால் அவனை எவரிடமும் கூட்டிச் சென்று அறிமுகப்படுத்த அவர்கள் முற்படவில்லை.
ஜூலியன் மேஸ்டகோவிச் அந்த விருந்தைப்பற்றி மிகவும் பாராட்டிப் பேசினான்; இது வரையில் தான் இவ்வளவு மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழித்ததே இல்லை என்றும் அவன் குறிப்பிட்டான்; அப்பொழுது அந்த விருந்து கொடுத்துக் கொண்டிருந்தவரின் கண்களில் உணர்ச்சிகரமான ஒரு கண்ணீர்த் துளி அரும்பி நின்றதைக் கூட என்னால் காண முடிந்தது. இந்த அளவுக்கு முக்கியமான ஒரு நபரின் அருகில் இருப்பது என்னைச் சற்று பயமுறுத்தக் கூடச் செய்தது.அது ஏனென்பது எனக்கே விளங்கவில்லை. நான் அங்கே கூடியிருந்த குழந்தைகளை ரசித்தபடி அருகிலிருந்த வரவேற்பறைக்குச் சென்று அங்கே செய்யப்பட்டிருந்த மலர் அலங்காரத்துக்குக் கீழே அமர்ந்து கொண்டேன். வெறிச்சோடிக் கிடந்த அந்த அறையில்…பாதிக்கு மேற்பட்ட பகுதி, மலர்க்கொடிகளால் பந்தலிடப்பட்டுக் கொடிவீடு போல அழகுபடுத்தப்பட்டிருந்தது. விருந்தளிப்பவரின் மனைவி அதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தாள்.
நம்பவே முடியாத வகையில்- அங்கிருந்த எல்லாக் குழந்தைகளுமே-மிகவும் இனிமையானவர்களாக இருந்தார்கள்.அந்த இடத்தில் அவர்கள் பெரியவர்களைப் போல நடந்து கொள்ள வேண்டும் என்று அந்தக் குழந்தைகளின் அன்பான அம்மாக்களும்,ஆயாக்களும் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொடுத்து அவர்களை அழைத்துக் கொண்டு வந்திருந்தார்கள். ஆனால் குழந்தைகளோ அவர்களின் புத்திமதிகளையெல்லாம் தூக்கிப் போட்டு விட்டு ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தார்கள். பெரியவர்களைப்போல நடந்து கொள்ளவே கூடாது என்று உறுதியாகத் தீர்மானம் செய்து விட்டவர்களைப் போல அவர்கள் செயல்பட்டுக் கொண்டிருந்தார்கள்.அந்தக் கிறிஸ்துமஸ் மரத்தில் பாக்கியிருந்த கடைசிப் பரிசுப் பொருள் வரை எல்லாவற்றையும் அவர்கள் உரித்து எடுத்துக் காலியாக்கி விட்டிருந்தனர். எந்தப் பொம்மையை எப்படி இயக்குவது என்பது புரிவதற்கு முன்பே பாதிக்கு மேற்பட்ட பொம்மைகளை அவர்கள் உடைத்தெறிந்து விட்டிருந்தார்கள். 
சுருட்டை முடியும்,கரு நிறக் கண்களும் கொண்ட ஒரு சிறுவன் அவனது மரத் துப்பாக்கியைக் கையில் பிடித்தபடி என்னைச் சுடுவதற்கு முயற்சி செய்து கொண்டிருந்தான்.ஆனால்- அவனையும், அந்த விருந்துக்கு வந்திருந்த பிற குழந்தைகளையும் விட என் கவனத்தை அதிகமாகக் கவர்ந்தது அவனது சகோதரி மட்டும்தான். 
பதினோரு வயது நிரம்பிய அந்தச் சிறுமி ஒரு சித்திரப் பாவையைப்போலக் காட்சியளித்தாள்.அமைதியும்,சாந்தமும் நிரம்பிய அவள் கண்கள் ஏதோ கனவில் ஆழ்ந்திருப்பதைப் போலவோ,ஒரு யோசனையில் மூழ்கியிருப்பதைப் போலவோ காணப்பட்டன. அந்தக் கண்களில் குறிப்பாகச் சொல்லக் கூடிய ஏதோ ஒரு சிறப்பான அம்சம் பொதிந்திருந்தது. அங்கே இருந்த குழந்தைகள் செய்த ஏதோ ஒரு செயல் அவளைப் புண்படுத்தியிருக்க வேண்டும்; அதனாலேயே அவர்களிடமிருந்து விலகி வந்து நான் அமர்ந்திருந்த அந்த வரவேற்பறையின் மூலையில் தன் பொம்மையோடு தனியாக அமர்ந்திருந்தாள் அவள்.
அரசாங்கக் குத்தகைக்காரரான அவளது பணக்காரத் தந்தையை மரியாதையோடு சுட்டிக் காட்டியபடி,அங்கிருந்த விருந்தாளிகள் அவரைப் பற்றித் தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்தார்கள். அந்தச் சிறுமியின் திருமணத்தின்போது அவளுக்குத் தர வேண்டிய சீர்வரிசைப் பணமாக முன்னூறாயிரம் ரூபிள்களை அவர் எப்போதோ ஒதுக்கி வைத்து விட்டார் என்று கிசுகிசுப்பான குரலில் யாரோ சொல்லிக் கொண்டிருப்பதை என்னால் கேட்க முடிந்தது. இப்படி ஒரு சூழலில், இந்த மாதிரிப் பேச்சையெல்லாம் இவ்வளவு ஆர்வத்தோடு கேட்பது யாரென்று தெரிந்து கொள்வதற்காக நான் திரும்பிப் பார்த்தபோது ஜூலியன் மேஸ்டகோவிச் என் கண்களில் பட்டான். முதுகுக்குப் பின்னால் கைகளைக் கட்டிக் கொண்டு,தலையை ஒருக்களித்துச் சாய்த்தபடி- அங்கிருந்த மனிதர்கள் பொழுது போகாமல் அரட்டையடித்துக் கொண்டிருந்ததையெல்லாம் அவன் மிகவும் கவனத்துடன் கேட்டுக் கொண்டிருந்ததைப் போலத் தோன்றியது.

பிறகு..அந்த விருந்தை ஏற்பாடு செய்தவர்கள் அங்கே கூடியிருந்த குழந்தைகளுக்குப் பரிசுகளை விநியோகம் செய்தார்கள்.அப்போது அவர்கள் காட்டிய புத்தி சாதுரியம் என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தியது. ஏற்கனவே முன்னூறு ரூபிள்களுக்கு உடைமைக்காரியாக ஆகி விட்டிருந்த அந்தக் குட்டிப் பெண்ணுக்குத்தான் அங்கே இருந்ததிலேயே மிக மிக விலை உயர்ந்த பொம்மை பரிசாகக் கிடைத்தது.அங்கே சந்தோஷமாக விளையாடிக் கொண்டிருந்த பிற குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட பரிசுப் பொருளின் மதிப்பு,அவரவர் பெற்றோரின் சமூக அந்தஸ்திற்கேற்றபடி குறைந்து கொண்டே வந்தது. இறுதியாகப் பரிசை வாங்கிக் கொண்ட சிறுவனுக்குப் பத்து வயது இருக்கக் கூடும்.மெலிந்து போய் வற்றலாய்க் காணப்பட்ட அவனுடைய முடி செம்பட்டையாக இருந்தது.அவனுக்கு ஒரு கதைப் புத்தகத்தைத் தவிர வேறெதுவுமே கிடைக்கவில்லை. அழுகை வரவழைக்கக் கூடிய உணர்ச்சிகரமான வருணனைகளும்,இயற்கையைப் பற்றிய விரிவான விளக்கங்களும் அடங்கிய அந்தப் புத்தகத்தில் ஒரு படம் கூட இல்லை...;புத்தகத்தோடு இணைத்துத் தரப்படும் கவர்ச்சிகரமான பரிசுப் பொருள் எதுவும் அதோடு ஒட்டிக் கொண்டிருக்கவுமில்லை..
அந்த விருந்தை ஏற்பாடு செய்திருந்தவரின் குழந்தைகளைக் கவனித்துக் கொள்ளும் ஆயாவும்,ஏழை விதவையுமான ஒருத்தியின் மகன்தான் அந்தச் சிறுவன். மிகவும் சாதுவாகவும், பயந்த சுபாவத்துடனும் இருந்த அந்தப் பையன் - மட்டமான, மலிவான துணியில் தைக்கப்பட்டிருந்த உடுப்புக்களை அணிந்திருந்தான். புத்தகப் பரிசைப் பெற்ற பிறகும் கூட அங்கிருந்த மற்ற பொம்மைகளையெல்லாம் பார்த்தபடி அங்கேயே சுற்றிக் கொண்டிருந்தான் அவன்.அங்கே விளையாடிக் கொண்டிருந்த மற்ற குழந்தைகளோடு தானும் சேர்ந்து விளையாட வேண்டுமென்ற ஆசை அவனிடம் நிறையவே இருந்தது; ஆனாலும் அவன் அதற்குத் துணியவில்லை. தன்னுடைய சமூக நிலையைப் பற்றி அவன் உணர்வு பூர்வமாகப் புரிந்து வைத்திருக்கிறான் என்பதைத் தெளிவாக விளங்கிக் கொள்ள முடிந்தது.
குழந்தைகளை ஆழ்ந்து கவனிப்பதென்பது...பொதுவாகவே எனக்கு மிகவும் பிடித்தமான ஒரு விஷயம்...அதிலும் யாருடைய துணையும் இல்லாமல்- முதன்முதலாக...அவர்களே தன்னிச்சையாகச் செயல்படத் தொடங்குவதைப் பார்ப்பதென்பது மிகவும் அற்புதமான ஒன்றென்பதை நான் உணர்ந்திருக்கிறேன்..பிற குழந்தைகள் வைத்திருந்த பொம்மைகள் அந்தச் செம்பட்டை முடிச் சிறுவனைச் சபலப்படுத்திக் கொண்டிருப்பதை என்னால் உணர முடிந்தது.மேலும் அந்தக் குழந்தைகள் ஆடிப்பாடிக் கொண்டிருந்த அந்த அரங்கமும் கூட அவனது ஆசையைத் தூண்டி விட்டுக் கொண்டிருந்தது. அதில் தானும் ஒரு சிறிய பங்கையாவது பெற்றுவிட வேண்டுமென்று ஆசைப்பட்ட அவன் அதற்காகத் தன்னைத் தாழ்த்திக் கொள்ளக்கூடத் தயங்கவில்லை. ஒரு புன்னகையோடு அங்கே சென்று, அங்கிருந்த பிற குழந்தைகளுக்கு வலுவில் பல வகையான உதவிகளைச் செய்யும் பாவனையில் - அந்தக் கேளிக்கைகளில் அவர்களோடு தானும் பங்கெடுக்க முற்பட்டான்..
கிரீமும் வெண்ணெயும் அப்பிய முகத்தோடு- ஏற்கனவே எக்கச்சக்கமான பரிசுப் பொருட்களைத் தன் கைக் குட்டையில் கட்டி வைத்துக் கொண்டிருந்த ஒரு பையனுக்குத் தன்னிடமிருந்த ஆப்பிளைத் தருவதற்கும் கூட அவன் முன் வந்தான். அந்த அரங்கத்திலிருந்து தன்னை யாரும் விரட்டிவிடக் கூடாது என்பதற்காக, அங்கிருந்த மற்றொரு சிறுவனைத் தன் முதுகில் சவாரி ஏற்றி விளையாட்டுக் காட்டுவதற்கும் கூட அவன் தயாராக இருந்தான்.அவனுள் இருந்த ஆசை வேகம்...அந்த எல்லை வரை அவனைக் கொண்டு போய் விட்டிருந்தது. ஆனால்...உண்மையாகவே யாரோ ஒரு குறும்புப் பையன் - ஒரே ஒரு நிமிடத்திற்குள் அவனைப் பலமாக உதைத்துத் தள்ளி விட்டான்; அதற்காக அழுவதற்கான துணிச்சல் கூட அவனிடம் இல்லை. அதற்குள் அங்கே ஆயாவாக வேலை பார்த்து வந்த அவன் தாய் வேகமாகக் குறுக்கே நுழைந்தாள்; அங்கே உள்ள பிற குழந்தைகளின் விளையாட்டுக்களிலெல்லாம் அவன் அப்படிச் சேர்ந்து கொள்ளக் கூடாது என்பதை அவள் அவனிடம் எடுத்துச் சொன்னாள்.அதனால் தன் பொம்மையோடு தனியாக விளையாடிக் கொண்டிருந்த அந்தச் சிறுமி இருந்த அதே வரவேற்பறைக்கு அந்தச் சிறுவனும் வந்து சேர்ந்தான்; அவள் அவனோடு நட்புடன் பழகத் தொடங்கி விட்டதால்,அவளிடமிருந்த அந்த விலை உயர்ந்த பொம்மையை அழகுபடுத்துவதில் இருவரும் மும்முரமாக ஈடுபட ஆரம்பித்து விட்டார்கள்.

அந்த அறையில்,பூங்கொடிகள் வேய்ந்திருந்த அந்த மலர்ப்பந்தலுக்குக் கீழே நான் கிட்டத்தட்ட அரை மணி நேரம் உட்கார்ந்திருந்தேன்.முன்னூறாயிரம் ரூபிள்களுக்குச் சொந்தக்காரியான அந்தக் குட்டிப்பெண்ணும்,செம்பட்டை முடி கொண்ட சிறுவனும் தங்களுக்குள் கலகலப்பாகப் பேசி அரட்டையடித்தபடி பொம்மையோடு விளையாடிக் கொண்டிருந்தார்கள். அதைப் பார்த்தபடியே நான் அரைத் தூக்கம் போட்டுக் கொண்டிருந்தபோது திடீரென்று ஜூலியன் மேஸ்டகோவிச் அந்த அறைக்குள் வந்தான். பல வேடிக்கை விளையாட்டுக்கள் நடந்து கொண்டிருந்த நடன அரங்கத்தில் குழந்தைகளுக்கிடையே ஏதோ ஒரு அற்பப் பூசல் ஏற்பட்டு விட்டது.அந்த நேரத்தைத் தனக்குச் சாதகமாக்கிக் கொண்டு அங்கே இருந்து நழுவி இங்கே வந்திருந்தான் அவன். வருங்காலப் பணக்காரியும்...பெரும் சொத்துக்கு வாரிசுமான அந்தச் சிறுமியின் தந்தையோடு ஒரு நிமிடம் முன்புதான் அவன் ஆர்வத்தோடு உரையாடிக் கொண்டிருந்ததை நான் கவனித்திருந்தேன்.அவருக்கு அப்போதுதான் அவன் அறிமுகம் செய்து வைக்கப்பட்டிருந்தான். பொதுத் துறைகளைப் பொறுத்த வரை ஒன்று இன்னொன்றை விட எவ்வாறு சிறந்தது என்பது குறித்து அவன் அவருடன் காரசாரமாக விவாதித்து விளக்கிக் கொண்டிருந்தான். இப்பொழுது...ஏதோ ஆழ்ந்த சிந்தனையில் இருப்பவனைப் போலக் காணப்பட்ட அவன் தன் கை விரல்களால் ஏதோ கணக்குப் போட்டுக் கொண்டிருந்தது போல எனக்குத் தோன்றியது.
‘’முன்னூறு..முன்னூறு..’’என்று முணுமுணுத்துக் கொண்டிருந்த அவன் தொடர்ந்து ‘’பதினொன்று..பன்னிரண்டு..பதின்மூன்று’’என்று எண்ணிக் கொண்டே போனான். ‘’இன்னும் ஐந்து வருடங்கள் போனால் அவளுக்குப் பதினாறு வயதாகும் ! அந்தப் பணத்தை நாலு சதவிகித வட்டியில் முதலீடு செய்திருந்தால்...பன்னிரண்டு....அப்புறம்..பன்னிரண்டை ஐந்தால் பெருக்கினால் அறுபது...!.  அப்படியென்றால் இந்த ஐந்து வருடங்களுக்குள் அந்தப் பணம் நானூறாயிரமாக ஆகி விடும். ம்..சரிதான்...! ஆனால்...அடக் கடவுளே...! போயும் போயும் அவன் நாலு சதவிகித வட்டியிலா அதைப் போட்டு வைத்திருப்பான்..? அந்த ராஸ்கல் நிச்சயம் அப்படிச் செய்திருக்கவே மாட்டான்..பெரும்பாலும் எட்டு அல்லது பத்து சதவிகித வட்டிக்குத்தான் அதைப் போட்டு வைத்திருப்பான்......அப்படியென்றால்...ஐந்நூறு....ஆமாம்..குறைந்த பட்சம் ஐந்நூறாயிரமாவது உறுதியாகக் கிடைக்கும். அதோடு கூடுதலாக அவளுக்குத் தரும் ஆடை ஆபரணங்கள் இவையெல்லாமும் கூட நிச்சயம் கிடைக்கும்’’தன்னுடய தீவிரமான சிந்தனையைச் சற்றே நிறுத்தி விட்டு மூக்கை உறிஞ்சிக் கொண்டான் அவன். அந்த அறையை விட்டு வெளியேற முயன்ற அந்தக் கணத்தில் அவன் பார்வை அந்தச் சிறுமியின் மீது படிந்தது; உடனே ஒரு நிமிடம் நிலைகுத்திப் போனவனைப் போலத் திகைத்துப் போய் நின்றான் அவன்.அங்கே இருந்த பூந்தொட்டிகள் மறைத்துக் கொண்டிருந்ததால் அவனால் என்னைப் பார்க்க முடியவில்லை.மிகப் பெரிய மனப் பதட்டம் ஒன்றுக்கு ஆளாகி இருப்பவன் போல அவன் எனக்குத் தென்பட்டான்.கைகளைப் பிசைந்தபடி அவன் நிலை கொள்ளாமல் தவித்துக் கொண்டிருந்ததற்கு அவன் தன்னுள் போட்டுக் கொண்டிருந்த மனக் கணக்கின் தூண்டுதலால் விளைந்த கற்பனை காரணமா அல்லது அதற்கு வேறேதும் காரணம் உண்டா என்பதையெல்லாம் என்னால் சரிவரச் சொல்ல முடியவில்லை. ஆனால்...அவனால்..ஒரு இடத்தில் கூட நிலையாக நிற்க முடியவில்லை என்பது மட்டும் உண்மை....சிறிது நேரம் அங்கே நின்றபடி...எதிர்காலத்தில் மிகப் பெரும் சொத்துக்கு வாரிசாகப் போகும் அந்தப் பெண்ணின் மீது தீர்மானமான ஒரு பார்வையை ஓட விட்டான் அவன் ; அதன் பின்பு அவனது மனக் கிளர்ச்சி மேன்மேலும் உச்சத்துக்குப் போகத் தொடங்கியது. அவளருகே மெள்ள நகர்ந்து செல்லத் தொடங்கிய அவன்...அதற்கு முன்பு அந்த அறையைச் சுற்றுமுற்றும் திருட்டுத்தனமாக-இரகசியமாக ஒரு முறை பார்த்துக் கொண்டான்.பிறகு பூனையைப் போல நுனிக் காலால் நடந்தபடி அந்தக் குழந்தைப் பெண்ணை அவன் அணுகிய முறை- ஏதோ ஒரு குற்ற உணர்வின் பிடியில் அவன் சிக்கியிருப்பதைக் காட்டியது. ஒரு புன்னகையோடு அவளிடம் நெருங்கிய அவன்,அவள் தலையில் முத்தமிட்டான். சற்றும் எதிர்பாராத இந்தத் தாக்குதலால் அரண்டு போன அந்தச் சிறுமி பயந்துபோய்க் கத்தினாள்.
[தொடர்ச்சி அடுத்த பதிவில்]

1 கருத்து :

கீதமஞ்சரி சொன்னது…

வணக்கம் அம்மா.
இன்றைய வலைச்சரத்தில் தங்கள் பதிவு அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.
பார்க்க http://blogintamil.blogspot.com.au/2014/09/blog-post_20.html
நன்றி.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....