துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

15.3.12

அம்பையுடன் ஒரு மாலை-2

’’சந்திக்கும்போது மகிழ்வைத் தருவதாகவும்…பிரியும்போது அதையே எண்ணி அசை போட வைப்பதாகவுமே சில சந்திப்புக்கள் அமைந்து விடுகின்றன.அம்பையுடனான சந்திப்பும் அப்படித்தான் எனக்குள் சுழன்று கொண்டே இருக்கிறது...’’
அம்பையுடன் ஒரு மாலை--1..இன் தொடர்ச்சி.
கல்லூரிப் படிப்பு முடிந்ததும் கடலூர் அருகிலிருந்த ஒரு சிற்றூரில் தான் ஆசிரியப்பணி ஆற்றியபோது நிர்வாகத்தின் தவறான போக்குகளோடு சமரசம் செய்து கொள்ள உடன்படாததால் தனக்கு நேர்ந்த சில அனுபவங்களையும்,அவற்றின் விளைவாக அந்தப் பணியிலிருந்து விலகி உயர்கல்வியைத் தொடரத் தான் சென்றதையும் தன் உரையில் தொடர்ந்து விவரித்தார் அம்பை.
அதிகம் எழுதிக் குவித்தாக வேண்டும் என்னும் எண்ணம் தனக்கு எப்போதுமே இருந்ததில்லை என்ற அம்பை , அவ்வப்போது ஏற்படும் மன உந்துதல்களே தன் கதைகளுக்குக் காரணமாவதால், சில வேளைகளில் தன் கதைகள் வெளிவருவதில் அவ்வப்போது தவிர்க்க முடியாமல் இடைவெளிகள் நேர்ந்து விடுகின்றன என்றார்.
அத்தகைய இடைவெளிகளில் கதை மொழிபும், கதை மொழியும் கூட மாறிக் கொண்டே செல்வது இயற்கையானதே என்பதையும் அவர் ஏற்றுக் கொண்டார்.

'அந்தி மாலை’க்குப் பின் அவர் எழுதிய ‘சிறகுகள் முறியும்’  நீண்ட நாட்கள் எதிலும் பிரசுரத்துக்கு ஏற்கப்படாமல் கிடந்ததையும் உயர்படிப்பின் நிமித்தம் தான் தில்லி வந்தபோது தற்செயலாக விமரிசகர் வெங்கட் சாமிநாதனின் கண்ணில் பட்டு அது கணையாழி இதழில் பிரசுரமான செய்தியையும்அவர் நினைவுகூர்ந்தார்.அதற்குப் பின் ஒரு சில ஆண்டு இடைவெளிக்குப் பின் அவரது ’வீட்டின் மூலையில் ஒரு சமையலறை’ தொகுப்பு; 
இன்னும் சற்று இடைவெளிக்குப் பிறகு அடுத்த தொகுப்பான ’காட்டில் ஒரு மான்’. 
இப்போதைக்கு இறுதியாக ’வற்றும் ஏரியின் மீன்கள்’
 [அம்பை சிறுகதைககளின் முழுத் தொகுப்பையும்-வற்றும் ஏரியின் மீன்கள்’ நீங்கலாக- காலச் சுவடு வெளியிட்டிருக்கிறது]


‘வீட்டின் மூலையில் ஒரு சமையலறை’ தொகுப்பு வெளிவந்தபோது அதன் பின்னட்டையில் அதிலுள்ள பல கதைகள் பெண்கள் சார்ந்தவை என்றும் பிறகதைகள் சோதனைக் கதைகள் என்றும் குறிப்பிடப்பட்டிருந்ததைத் தான் வன்மையாக எதிர்த்ததாகவும் அதனைத் தன்னால் சற்றும் ஏற்க முடியவில்லை என்றும் குறிப்பிட்டார் அம்பை. ஆண்கள் எழுதுவது மட்டும் பொதுவான வாழ்க்கை பற்றியதாகவும் பெண்கள் எழுதினால் அது குடும்பம் அல்லது பெண் சார்ந்ததாகவும் மட்டுமே பொதுப்புத்தியில் படிந்து போயிருக்கும் மதிப்பீட்டை எப்போதுமே சாடி வரும் அம்பை இந்த அரங்கிலும் அதை அழுத்தமாக வலியுறுத்தினார். குடும்பம்,பெண் ஆகியவை இல்லாத சமூக வாழ்வு சாத்தியமற்றது என்பதை எண்ணிப்பார்த்தால் இத்தகைய மதிப்பீட்டின் அபத்தத்தை எளிதாக உணர முடியும்.

சில எழுத்தாளர்களின் படைப்புக்களைப் படிக்கும்போது அவர்கள் குறித்துத் தனக்குள் ஏற்பட்டிருந்த பிம்பங்கள்,நெருங்கிச் செல்லுகையில் சில வேளைகளில் கலைந்து விடுவதைப் பார்க்கும்போது’எழுத்தோடு மட்டுமே நின்றிருக்கலாமே..’என்ற உணர்வு தன்னுள் ஏற்பட்டிருக்கிறது என்றார் அவர்.

பல்கலைக் கழக மாணவர்களோடு நிகழ்த்திய கலந்துரையாடல் என்பதால் அம்பையின் பேச்சு கல்விப்புலங்களில் நிகழும் சமகால இலக்கிய ஆய்வுகள் பற்றியும் சற்றுத் திரும்பியது.
தனது ‘காட்டில் ஒரு மான்’ தொகுப்பை ஆய்வுக்கு எடுத்த மாணவர் ஒருவர் அதன் தலைப்புப் பொருத்தம் பற்றித் தன்னிடமே வினவியதையும் ‘அதை நீங்களல்லவா கண்டறிய வேண்டும்’ என்று தான் பதில் அளித்ததையும் கூறிய அம்பை, ஆய்வு சார்ந்த இன்னொரு சம்பவத்தையும் சுவைபடப்பகிர்ந்து கொண்டார். தன் கதைகளை ஆய்வுப் பொருளாகக் கொண்ட இன்னொரு மாணவர் அவை எதுவுமே தனக்குப் புரியவில்லை என்றும் ’’ஒவ்வொரு கதையையும் நீங்களே எனக்கு விளக்கி விடுங்களேன்’’ என்று தன்னிடமே கேட்டுக் கொண்டதையும் ‘உங்களுக்கு எளிதாகப் புரியக் கூடிய ஒரு படைப்பாளியின் படைப்பை எடுத்திருந்தால் நீங்கள் இவ்வளவு துன்பப்பட்டிருக்க வேண்டியதில்லையே’’என்று தான் விடை தந்ததையும் அரங்கில் அவர் முன் வைத்தபோது தற்காலத் தமிழ் ஆய்வுகள் சிலவற்றின் போக்குக் குறித்த கவலையே மேலோங்கியது.

அம்பை என்னும் சி.எஸ்.லட்சுமி, ஒரு கதைசொல்லி மட்டுமில்லை,நேரடியாகக் களத்திலிறங்கி மறைக்கப்பட்ட பெண்களின் பலதரப்பட்ட முகங்களை –எழுத்தை..ஓவியத்தை,இசையை,நாட்டியத்தை வேறு பல கலைநுட்பங்களை வெளிச்சத்துக்குக் கொண்டுவரும் செயல்பாட்டாளரும்-activist-கூட.அவர் பங்கு கொண்டிருக்கும் SPARROW [SOUND AND PICTURE ARCHIVES FOR RESEARCH ON WOMEN] என்னும் அமைப்பின் மூலம் அதையே அவர் சாத்தியப்படுத்தி வருகிறார். மறைக்கப்பட்ட பெண்கள் குறித்த அவ்வாறான நூல்களைத் தான் வெளியிட்டபோது தன் நகைகளை அடகு வைத்துத் தன்னைச் சென்னைக்கு அனுப்பிவைத்ததோடு- ரயில் கிளம்பும் நேரத்தில் ‘லட்சுமியோட கனவெல்லாம் நனவாகப் போகிறது’ என்று காதுக்குள் மெள்ளச் சொன்ன தன் தாய்க்கே அவற்றை அவர் அர்ப்பணம் செய்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அம்பை சி எஸ் லட்சுமியாக எழுதிய THE FACE BEHIND THE MASK என்னும் ஆங்கில நூல் மிகச் சிறப்பானது .தமிழகப் பெண் எழுத்துக்கள்-தமிழ்ப்பெண் எழுத்தாளர்கள் பற்றிய விரிவான ஆராய்ச்சியாலும் களப்பணியாலும் முகிழ்த்த அந்த நூல், நான் முனைவர் பட்ட ஆராய்ச்சி மேற்கொண்டிருந்த காலகட்டத்தில் எனக்குப் பல அரிய தகவல்களைத் தந்து உதவி இருக்கிறது.

கல்லூரிப் பணியில் இளம் ஆசிரியையாக நான் சேர்ந்திருந்த காலகட்டத்தில் எங்கள் கல்லூரியில் [என் பெருமதிப்பிற்கும் அன்பிற்கும் உரிய எங்கள் துறைத்தலைவரும்,அம்பையின் மிக நெருங்கிய தோழியுமான -காலம் சென்ற செண்பகம் ராமசாமியின் முயற்சியால் நிகழ்ந்த கூட்டத்தில்]  ‘இலக்கிய மௌனம்’பற்றி அம்பை ஆற்றிய உரை இன்றும் கூட எனக்கு ஒரு தூண்டுதலாக…பெரியபுராணம்,கம்பராமாயணம்,சிலம்பு முதலிய புராண இதிகாச,காப்பியங்களை மீட்டுருவாக்கம் செய்து ’தேவந்தி’ போன்ற சிறுகதைகளை எழுத உந்துதலாக இருந்து வருகிறது.அதற்காக அம்பைக்கு என் நன்றிக்கடப்பாடு என்றும் உரியது.

கலந்துரையாடல் மாலையோடு அம்பையிடம் விடை பெற்றுப் 
பிரிய மனமில்லாத்தால் மீண்டும் சனிக்கிழமை[10/3/2] பிற்பகல் அவர் தங்கியிருந்த விருந்தினர் விடுதிக்குச் சென்று தனிப்பட்ட முறையில் நெடுநேரம் அவருடன் மனம் விட்டு உரையாடிக் கொண்டிருந்தேன்…அம்பையைக் காண அங்கே வந்திருந்த வலைப்பதிவர் சிறுமுயற்சி முத்துலட்சுமியும் எங்களோடு அந்த உரையாடலில் கலந்து கொண்டார். விருந்தினர் விடுதியிலேயே அம்பையுடன் மதிய உணவை முடித்துக் கொண்டு விடைபெற்றபோது கைகுலுக்கவந்த என்னைத் தடுத்துக் ’’கையெல்லாம் குலுக்குவாங்களா என்ன..’’என்றபடி என்னையும் முத்துலட்சுமியையும் அன்போடு மார்புறத் தழுவி வழி கூட்டி அனுப்பி வைத்தார் அம்பை. 
காலம் அவரது புறத் தோற்றத்திலும் குரலிலும் சில சுவடுகளைப் பதித்திருந்தாலும் அம்பைக்கே உரிய அந்த வேகமான நடை-எழுத்தில் மட்டுமில்லாமல் நடப்பதிலும் கூட இருக்கத்தான் செய்கிறது என எண்ணிக் கொண்டேன்.

‘’உவப்பத் தலைக் கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில்’’
என்கிறது குறள். 
சந்திக்கும்போது மகிழ்வைத் தருவதாகவும்…பிரியும்போது அதையே எண்ணி அசை போட வைப்பதாகவுமே சில சந்திப்புக்கள் அமைந்து விடுகின்றன.அம்பையுடனான சந்திப்பும் அப்படித்தான் எனக்குள் சுழன்று கொண்டே இருக்கிறது….

8 கருத்துகள் :

முத்துலெட்சுமி/muthuletchumi சொன்னது…

ஓ அன்றைய தினத்தை மறக்கமுடியாது சுசீலாம்மா.. மிக்க மகிழ்ச்சியான தினம். அம்பை மற்றும் உங்களுடனும் இந்த அன்பும் நட்பும் தரும் ஊக்கத்தை என்னவென்று சொல்வது..

அப்பாதுரை சொன்னது…

தெரியாத பெயர், அறியாத எழுத்து. அறிமுகத்துக்கு மிகவும் நன்றி.

NARAYAN சொன்னது…

உங்களுடைய உள்ளார்ந்த நட்பின் ஆழம் நன்றாக புரிகிறது.
ஓவியம் நன்றாக உள்ளது.
முந்திய பதிவில் உள்ள புகைப்படமும் ( தேனீர் கோப்பையுடன் உள்ள படம்) அருமை. அது ஓவியமா, புகைப்படமா என்று கண்டு பிடிக்க முடியவில்லை. அந்தப் படமே பல கதைகளை சொல்கிறது.

பெயரில்லா சொன்னது…

// சில எழுத்தாளர்களின் படைப்புக்களைப் படிக்கும்போது அவர்கள் குறித்துத் தனக்குள் ஏற்பட்டிருந்த பிம்பங்கள்,நெருங்கிச் செல்லுகையில் சில வேளைகளில் கலைந்து விடுவதைப் பார்க்கும்போது’எழுத்தோடு மட்டுமே நின்றிருக்கலாமே..’என்ற உணர்வு தன்னுள் ஏற்பட்டிருக்கிறது என்றார் அவர்//

இது பற்றி மேலும் விளக்கமாக எழுத முடியுமா மேடம் ? நல்ல அனுபவமாக படுதே.

//‘’உவப்பத் தலைக் கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில்’’//

கடைசியில் தமிழுடன் கலந்து ஒன்றாகி விட்டீர்கள்.

எம்.ஏ.சுசீலா சொன்னது…

ஏன்...உங்களுக்கு அப்படி ஒரு அனுபவம் ஏற்பட்டதில்லையா சரவணகுமார்?அம்பை இங்கே தன் அனுபவத்தைச் சொல்லியிருக்கிறார்கள்;நானும் இதே போன்ற அனுபவத்தைச் சில படைப்பாளிகளிடமிருந்து பெற்றதுண்டு.எழுத்து ஒரு வகையாகவும்,அதற்கு நேர்மாறாக அவர்களின் வாழ்க்கைப் போக்கும் இருப்பது கண்டு அதிர்ச்சி ஏற்படுவது இயல்புதான்.ஆனாலும் எல்லோரையும் அப்படிச் சொல்லி விடவும் முடியாது.தேர்ந்து பழகினால் தொல்லை இல்லையல்லவா?

பெயரில்லா சொன்னது…

உடனடியாக பதில் தந்ததற்கு நன்றி மேடம்.எழுத்தாளர்களை நான் நெருங்கியது இல்லை.
எஸ்.ராமகிருஷ்ணனும் இதே போல் சொன்னதாக ஞாபகம்.துல்லியமாக அறிந்து கொள்ளும் ஆவலில் கேட்டேன் அவவளவே.

//எழுத்து ஒரு வகையாகவும்,அதற்கு நேர்மாறாக அவர்களின் வாழ்க்கைப் போக்கும் இருப்பது கண்டு அதிர்ச்சி ஏற்படுவது இயல்புதான்//

இது எழுத்தாளர்களின் சொல்,செயல், சிந்தனை மற்றும் நேர்மை பற்றியது தானே மேடம்?

Dr. சாசலின் சொன்னது…

வணக்கம் அம்மா. உங்களை வலைபதிவு வழி பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி.

எம்.ஏ.சுசீலா சொன்னது…

ஜேஸ்லின்
என் அன்பு மாணவியான உன்னை இங்கு சந்தித்ததில் பெரு மகிழ்ச்சி...விரைவில் தனி மின் அஞ்சலில் உன் மடலை எதிர்பார்க்கிறேன்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....